பிரகாஷ் காரத்
(அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதிலும், தேர்தல் செலவினத்திலும் முழுமையாகவர்க்க அம்சம் அடங்கி இருக்கிறது. அரசாங்கமோ, தேர்தல் ஆணையமோ அரசியல்கட்சிகளுக்கும்,
தேர்தல் நடைமுறைக்கும் வசதி படைத்தவர்களின் பணம் பாய்வதற்குஎதிராக எவ்விதமான கவலையும் கிடையாது. அவர்களின் ஒரே கவலை என்பது அதுசட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான். பாஜகவும் காங்கிரஸ் கட்சியும்அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி அளித்து வருவதற்கு ஆதரவாகவே இருந்து வருகின்றன. தேர்தல் சமயங்களில் செலவிடப்படுவதற்கு வரம்பு நிர்ணயித்திட அவை விரும்பவில்லை.)
மத்திய நிதி அமைச்சர் தன்னுடைய பட்ஜெட் உரையின்போது, நாட்டில் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது தொடர்பாக எவ்விதமான வெளிப்படைத் தன்மையும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். இதனைச்சரிசெய்வதற்காக, ‘இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் முறையைச் சுத்தப்படுத்திட’ சில நடவடிக்கைகளை முன்மொழிந்திருக்கிறார். இதற்காக அவர், மூன்று நடவடிக்கைகளை முன்மொழிந்திருக்கிறார்.- ஓர் அரசியல் கட்சி தனிநபர் ஒருவரிடமிருந்து அதிகபட்சம் நிதியாக இரண்டாயிரம் ரூபாய்தான் பெறலாம்.ட இதற்கு மேல் நன்கொடை பெற்றால் அது காசோலையாக அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனையாக இருந்திட வேண்டும்.
- நன்கொடையாளர்கள் தேர்தல் பத்திரங்களை காசோலைகள் அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனைமூலமாக அதிகாரம்பெற்ற வங்கிகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இவ்வாறு பயன்படுத்திக்கொள்வதற்கு காலநிர்ணயமும் உண்டு. அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கணக்கில் வராத பணத்தை கண்டுபிடிக்க உதவாது
ஒட்டுமொத்தத்தில், இந்த நடவடிக்கைகள் எதுவும், அரசியலில் பணபலம் புகுந்து விளையாடுவதைக் கட்டுப்படுத்திட உதவப்போவதில்லை. குறிப்பாக பெரிய அரசியல் கட்சிகள் தேர்தல் சமயத்தில் செலவுசெய்திடும் கறுப்புப் பணம் அல்லது சட்டவிரோதமான பணத்தை இவற்றால் எதுவும் செய்திட முடியாது. உண்மையில், இந்த முன்மொழிவுகள் அனைத்தும் படுபிற்போக்குத்தனமானவையே மற்றும் அரசியலிலும் தேர்தல்களிலும் கறுப்புப் பணம் பயன்படுத்தப்படுவதை எவ்விதத்திலும் தடுத்திடப் போவதில்லை.தற்சமயம் ஓர் அரசியல் கட்சி எவரிடமிருந்தாவது 20 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் நன்கொடை பெற்றால், அவர் தன்னுடைய பெயர், முகவரி மற்றும் வருமான வரித்துறையினர் அளித்திடும் ‘பான் எண் (PAN Number)’ அனைத்தையும் அளித்திட வேண்டும். இதனை இந்த பட்ஜெட்டில் 2 ஆயிரம் ரூபாய் என்று குறைத்திருக்கிறார்கள். கணக்கில் வராத பணத்தைக் கண்டுபிடித்திட இது எந்தவிதத்திலும் உதவப் போவதில்லை. 2000 ரூபாய்க்குக் கீழான நன்கொடைகளின் எண்ணிக்கையை அதிகம் காட்டுவதற்கே இது இட்டுச் செல்லும்.மாறாக, இப்போது 20 ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக இருந்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்று விதிகள் இருக்கிறதோ அதேபோன்று 2 ஆயிரம் ரூபாய்க்கும் மேலேஇருந்தாலும் செய்திட வேண்டும் என்று கூறுவது சிறந்ததாக இருக்கும். பட்ஜெட் உரையில் கூறப்பட்டிருக்கிற, தேர்தல் பத்திரங்கள் என்கிற கருத்தாக்கம், அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதில் வெளிப்படைத் தன்மை இருந்திட வேண்டும் என்கிற குறிக்கோளுக்கே முற்றிலும் முரணான ஒன்றாகும். ‘நன்கொடையாளர்கள் தாங்கள் காசோலைகளாகவோ அல்லது இதர வெளிப்படைத் தன்மைகள் மூலமாகவோ நன்கொடை அளிப்பதற்குத் தயங்குகிறார்கள் என்றும் அவ்வாறு வழங்குவது அடையாளத்தைக் காட்டுவதால் எதிர்காலத்தில் மோசமானவிளைவுகளுக்கு உள்ளாகலாம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துவதாக’ நிதி அமைச்சரே கூறியிருக்கிறார்.
வெளிப்படைத் தன்மைக்குப் பதில் அநாமதேயங்கள்...
கணக்கில் வராத அல்லது கறுப்புப்பணத்தை நன்கொடையாக அளித்திடும்கார்ப்பரேட்டுகளும், பெரும் வர்த்தகப்புள்ளிகளும் கூறும் காரணங்கள் இவைகளாகும்.தேர்தல் பத்திரங்கள் விநியோகிக்கப்படுவதன்மூலம் இவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுவிடுகின்றன. இதற்கேற்ற விதத்தில் வருமான வரித்துறை சட்டத்தில் திருத்தத்தை முன்மொழிந்திருக்கிறார்கள். எனவே அதன்பின்னர் ஓர் அரசியல் கட்சி தனக்கு யார் நன்கொடையாக தேர்தல் பத்திரங்களை அளித்தார் என்று கூற வேண்டிய தேவை இல்லை.எனவே 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை நன்கொடையாளர்கள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு அளித்தால் அவர்கள் வருமான வரித்துறையினருக்கு அதன் விவரங்களை அளிக்கவேண்டிய தேவையில்லை. எனவே, மோடி அரசாங்கம் என்ன செய்திருக்கிறது என்றால், அரசியல் கட்சிகள் நிதி பெறுவது சம்பந்தமாக வெளிப்படைத்தன்மையை உத்தரவாதப்படுத்துவதற்குப் பதிலாக, தேர்தல் பத்திரங்கள் மூலமாக, அநாமதேயமாக பெரிய அளவில் நன்கொடைகளை அளித்திட,வழிவகை செய்து தந்திருக்கிறது. ஒரே ஒரு விதிவிலக்கு என்னவென்றால் ஆட்சியில் உள்ளவர்கள் மட்டும் தேர்தல் பத்திரங்களை வாங்கியிருப்பவர்கள் யார் என்பதை சம்பந்தப்பட்ட வங்கிகளிடமிருந்து தெரிந்து கொள்ள முடியும்.தேர்தல் பத்திரங்கள் குறித்த சரியான விவரங்கள் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்ற போதிலும், இதனை துஷ்பிரயோகம் செய்வதற்கான அனைத்துச் சாத்தியக்கூறுகளும் நன்கு தெரிகிறது. இத்தகைய பத்திரங்கள்மூலமாக வரி ஏய்ப்பு செய்வதற்கான வழிவகைகளை எளிதாகக் கண்டறிந்துவிடுவார்கள்.
கள்ளப் பிணைப்புக்குப் பாதை
அரசியல் கட்சிகளுக்கும் வர்த்தகப் பிரமுகர்களுக்கும் இடையே கள்ளப்பிணைப்பைஏற்படுத்திக்கொள்ள இந்தப் பத்திரங்கள் மிக நன்றாகவே பாதை அமைத்துக் கொடுக்கும்.நிதிச் சட்டமுன்வடிவின் மூலமாக சம்பந்தப்பட்ட சட்டங்களுக்குத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. இவ்வாறு செய்வதன்மூலம், அரசாங்கம் இந்த மாற்றங்களை ஒரு நிதிச் சட்டமுன்வடிவின் மூலமாக மேற்கொண்டிட முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. இதன் பொருள், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் செலவினங்கள் மற்றும்அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பான சட்டமுன்வடிவினை மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பிடாமல் நிறைவேற்ற இருக்கிறார்கள் என்பதாகும்.தகவல் தொழில்நுட்ப சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும் கூடதிருத்தங்களை முன்மொழிந்து அவற்றை ‘நிதிச் சட்டமுன்வடிவு’ என்கிற வகையில்மக்களவையில் நிறைவேற்றிட முனைந்துள்ளார்கள். இவ்வாறு மாநிலங்களவையை ஓரங்கட்ட வேண்டும் என்பதற்காக நிதிச் சட்டமுன்வடிவு என்கிற கருத்தாக்கத்தையே துஷ்பிரயோகம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
வழக்கிலிருந்து தப்பவே முன்தேதியிட்டு நிதிச் சட்டமுன்வடிவு
அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கப்படுவதை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்துக்கொண்டிருப்பதாக அரசாங்கத் தரப்பில் கூறப்படுவது நம்பமுடியாததுமட்டுமல்ல, இது உள்ளொன்று வைத்துப் புறமொன்று மேற்கொண்டிடும் நடவடிக்கையுமாகும். சென்ற ஆண்டு 2016-17க்கான மத்தியபட்ஜெட்டில், அயல்நாடுகள் பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்தில் (Foreign Contribution Regulation Act) ஒரு திருத்தம், நிதிச் சட்டமுன்வடிவு மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நோக்கம், வெளிநாடுகளில் இயங்கும் நிறுவனங்களுக்கு அதன் கிளை நிறுவனங்கள் இந்தியாவில் இயங்குமானால் அவற்றுக்கு அவை அளித்திடும் நிதிகள் அனைத்தும் இந்தியாவின் பணம் என்றே கருதப்பட வேண்டும் என்பதாகும்.இவ்வாறு கொண்டுவந்த திருத்தத்தையும் மோடி அரசாங்கம் முன்தேதியிட்டு அமல்படுத்தியது. ஏன் தெரியுமா? இவ்வாறு அயல்நாடுகளிலிருந்து இந்த சட்டத்திற்குப் புறம்பாக நிதி பெற்றன என்று பாஜகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தன.அவற்றை செல்லத்தகாததாகச் செய்திட வேண்டும் என்பதற்காக, இவ்வாறு முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது. வேதாந்தா என்னும் வெளிநாட்டுக் கம்பெனிதான் இவ்வாறு நன்கொடை அளித்திருந்தது. இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது.இந்தச் சட்டத்திருத்தமும் நிதிச் சட்டமுன்வடிவு என்கிற வழியாகத்தான் கொண்டுவரப்பட்டது. இந்தத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் இந்தியாவில் உள்ள கிளை அமைப்புகள் மூலமாக, அரசியல் கட்சிகள், நிதி பெற்றால் அது சட்டப்படி குற்றமாகாது என்று ஆகிவிட்டது.
அரசியல் கட்சிகளுக்கு அந்நிய முதலீடு
இப்போது பாஜக கொண்டுவர விருக்கும் திருத்தத்தின்மூலம், இனிவருங்காலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி அளித்திடலாம். எவரும் எதுவும் கேட்க முடியாது. இவ்வாறாக மோடி அரசாங்கம் உண்மையில் அரசியல் கட்சிகளுக்கு அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துக் கொண்டிருக்கிறது.அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதிலும், தேர்தல் செலவினத்திலும் முழுமையாக வர்க்கஅம்சம் அடங்கி இருக்கிறது. அரசாங்கமோ, தேர்தல் ஆணையமோ அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல் நடைமுறைக்கும் வசதி படைத்தவர்களின் பணம் பாய்வதற்கு எதிராக எவ்விதமான கவலையும் கிடையாது. அவர்களின் ஒரே கவலை என்பது அது சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான். பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி அளித்து வருவதற்கு ஆதரவாகவே இருந்து வருகின்றன. தேர்தல் சமயங்களில் செலவிடப்படுவதற்கு வரம்புநிர்ணயித்திட அவை விரும்பவில்லை.எடுத்துக்காட்டாக, 2014இல் நடைபெற்ற மக்களவைக்கான தேர்தலின்போது, பாஜக கோடானுகோடி ரூபாய் பத்திரிகைகள் மற்றும்தொலைக்காட்சிகள் உட்பட காட்சி ஊடகங்களுக்கான விளம்பரங்களுக்கு செலவு செய்தது.இதேபோன்று, தனியே விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அமர்த்தி பயணிப்பதற்கும் ஏராளமான தொகை செலவு செய்தது.
தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டியது...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இதற்கு நேரெதிரான நிலை எடுத்திருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதை அது எதிர்க்கிறது. தேவைப்பட்டால், அவை, அத்தகு நிதியை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்து, அதன் மேற்பார்வையின்கீழ் அரசியல் கட்சிகள் அத்தொகையை தேர்தல் சமயங்களில் செலவு செய்திடலாம் என்று கூறுகிறது.நவீன தாராளமயக் கொள்கைகளின் நெறிமுறைகள் கோலோச்சும் இன்றைய சூழ்நிலையில், அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் தேர்தலில் போட்டியிட பணபலத்தையே பெரிதும் சார்ந்திருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, பணபலத்தைப் பயன்படுத்துவதை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்திட மறுத்து வருகிறது.சாமானிய மக்கள் கொடுக்கும் சிறிய நன்கொடைகளைத்தான் கட்டுப்படுத்திட அது விரும்புகிறது. தொலைக்காட்சி போன்ற காட்சி ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் அபரிமிதமாக செலவு செய்து அரசியல் கட்சிகள் விளம்பரங்கள் வெளியிடுவதையும், பிரம்மாண்டமான விளம்பரப்பலகைகள் வைத்திடுவதையும் ஊக்குவித்திடும் அதேசமயத்தில் சிறிய அளவிலான கட்சிகள் தங்களுடைய குறைந்த நிதிநிலையின் காரணமாக, தேர்தல் பிரச்சாரத்திற்காக போஸ்டர்கள், பதாகைகள் பயன்படுத்த முயன்றால், அவற்றிற்குத் தடை விதிக்கிறது.தேர்தல் சீர்திருத்தங்களுக்கான அமைப்பு(ஹளளடிஉயைவiடிn டிக னுநஅடிஉசயவiஉ சுநகடிசஅள) போன்ற அரசு சாரா அமைப்புகளும் இதேபோன்ற வர்க்க அணுகுமுறையையே கையாளுகின்றன. உண்டியல்கள், பெட்டிகள் அல்லது வாளிகள் மூலமாகவசூல் செய்வதை ‘அறிமுகமற்றவர்களிடமிருந்து’ வசூலிப்பதாகக் குறிப்பிடும் அதேசமயத்தில், அரசியல் கட்சிகள் ’நாற்காலிகளுக்குக் கீழ்’ ரகசியமாகப் பணம் பெறுவது குறித்தோ,முறையற்ற விதத்தில் நிதி பெறுவது குறித்தோ வாயே திறப்பதில்லை.
தேர்தல் செலவுக்கு வரம்பு நிர்ணயம் தேவை
அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதற்கான சீர்திருத்தங்கள் உட்பட தேர்தல் சீர்திருத்தங்கள் முழுமையாக மாற்றி அமைக்கப்பட வேண்டியது அவசரத் தேவையாகும். இதற்குக் கீழ்க்கண்டவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
- அரசியல் கட்சிகள் தேர்தலின்போது பல்வேறு தலைப்புகளின்கீழ் செலவு செய்வதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, பொதுத்தேர்தலின்போது, ஓர் அரசியல் கட்சி, விளம்பரங்களுக்கு 500 கோடி ரூபாய் வரை செலவு செய்திட முடியும். அது இன்றுள்ள நாட்டின் சட்டங்களின்படி குற்றமாகாது. அந்தக் கட்சியை நீங்கள் எதுவும் கேட்க முடியாது. தேர்தலின்போது கறுப்புப் பணத்தின் பங்கினைக் கட்டுப்படுத்திட வேண்டுமானால், தேர்தல் செலவினத்திற்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டியது அவசியம்.
- வேட்பாளர்கள் செலவிடும் தொகைக்குத்தான் தற்சமயம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் வரம்பு விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவருடைய அரசியல் கட்சி அவருக்காக எவ்வளவு செலவு செய்தாலும் அதற்குஎந்தவிதமான உச்சவரம்பும் கிடையாது.
வேட்பாளருக்கான தேர்தல் செலவினத்திற்கான வரம்புக்குள் இதனையும் கொண்டுவரக்கூடிய விதத்தில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ட அரசியல் கட்சிகளுக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கும் மேல் நன்கொடை அளிப்பவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.
கறுப்புப் பணம் பெற்றால் தண்டனை
- தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டால் அவற்றைப் பெற்றிடும் விவரங்களை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, விளம்பர சாதனங்கள், அறிக்கைகள், போக்குவரத்துக்கான எரிபொருள் முதலானவற்றை அரசாங்கமே ஏற்க வேண்டும்.
- அரசியல் கட்சிகளுக்கு கறுப்புப்பணத்தை நன்கொடையாக அளிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு கறுப்புப் பணத்தைப் பெற்றிடும் அரசியல்கட்சிகளுக்கும் தண்டனைகள் அளித்திட வேண்டும்.
தமிழில்:
ச.வீரமணி
No comments:
Post a Comment