Monday, August 17, 2015

பலே கில்லாடி ஃபாக்ஸ்கான்





ஃபாக்ஸ்கான், நுகர்வோர் மின்னணுப் பொருள்களை உற்பத்தி செய்யும்உலகின் மிகப்பெரும் ஒப்பந்த உற்பத்திநிறுவனமாகும். இந்நிறுவனம் மகாராஷ்டிராவில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய்) முதலீட்டுடன் ஒரு தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறது.தைவானை தலைமையிடமாகக் கொண்டு ஹான் ஹாய் பிரிசிசன் இண்டஸ்ட்ரி கம்பெனி (Hon Hai Precision Industry Company)யின் வர்த்தகப் பெயர்தான் ஃபாக்ஸ்கான். இது ஒரு ராட்சத உற்பத்திநிறுவனமாகும்.
இந்நிறுவனம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்பிள், ஹெவ்லட் பேக்கார்ட், ஐபிஎம், சாம்சங் (Apple, Hewlett Packard, IBM, Samsung) மற்றும் பல மின்னணு நிறுவனங்களுக்குத் தங்கள் உற்பத்தி சாதனங்களை விநியோகம் செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிறுவனம் ஒன்று இந்தியாவில் வன்பொருள் உற்பத்தி வசதிகளை (hardware manufacturing facilities) அமைப்பது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றுதான். ஆனால் இந்நிறுவனம் மற்றொருவிதத்திலும் பேர்போனது. அது குறித்து அனைவரும் முன்னெச்சரிக்கையாய் அறிந்து வைத்துக்கொள்வது அவசியம். ஃபாக்ஸ்கான், உலகில் தொழிலாளர்களைச் சுரண்டுவதில் பேர்போன ஒருநிறுவனமாகும். ஃபாக்ஸ்கானின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்கள் சீனாவைச் சுற்றி அமைந்துள்ளன. இங்கே சுமார் 9 லட்சம் தொழிலாளர்கள் வேலைசெய்கிறார்கள். மிகக் குறைந்த ஊதியம்,மிக அதிக நேர வேலை, கட்டாய மிகுதிநேர வேலை மற்றும் பல்வேறு சுரண்டல் நடைமுறைகளின் காரணமாக சீனாவைச் சுற்றியுள்ள ஃபாக்ஸ்கான் ஆலைகளில் 2010க்கும் 2013க்கும் இடையே எண்ணற்ற வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் சுரண்டலின் கடுமையும், தொழிலாளர்களை அது மிகவும் கொடூரமாகக் கசக்கிப்பிழியும் அளவும் எந்த அளவிற்கு இருந்திருக்கிறது என்பதை, ஷென்சென் என்னும் நகரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் 2010ல் ஓராண்டில் மட்டும் 13 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதைப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும். ஒட்டுமொத்தத்தில் 17 தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருக்கிறார்கள். இறந்தவர்கள் அனைவரும் இளம் தொழிலாளர்கள். அதுமட்டுமல்ல, ஃபாக்ஸ்கான் மற்றுமொரு சுரண்டல் நடைமுறையிலும் பெயரெடுத்ததாகும். தொழில்நுட்பப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குப்பயிற்சிதருகிறோம் என்று கூறி அவர்களையும் நிரந்தரத் தொழிலாளர்கள் போல் வேலை வாங்குவதிலும் பலே கில்லாடியாகும்.
ஆனால் அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியமோ நிரந்தரத் தொழிலாளர்களுக்கு அளிப்பதில் பாதிதான். ஃபாக்ஸ்கான் சீனாவில் தொழிலாளர்களைச் சுரண்டி பிரதானமாக ஆப்பிள் நிறுவனத்திற்கான ஐபோன்சாதனங்களை உற்பத்தி செய்து வந்தது.இது உலகின் கவனத்தை ஈர்த்தது. சீனாவில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளிலும் இதர தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் கடைசியில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை அதிகரித்திட இட்டுச்சென்றது. ஃபாக்ஸ்கான் மகாராஷ்டிராவில் நிறுவிடும் தொழிற்சாலை இந்தியாவில் முதலாவது அல்ல.
இதற்கு முன்பே இந்நிறுவனம் சென்னையில் ஒரு தொழிற்சாலையை நிறுவி, நோக்கியா நிறுவனத்திற்கு, சாதனங்களை உற்பத்தி செய்து அளித்து வந்தது. அப்போது அங்கே 1,800 நிரந்தரத் தொழிலாளர்களையும், 6,200 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அது பணியிலமர்த்தி இருந்தது. ஃபாக்ஸ்கான் நிறுவனமும், இதர பன்னாட்டு நிறுவனங்களைப்போலவே, தொழிலாளர்களால் அமைக்கப்படும் சங்கம் எதையும் விரும்புவதில்லை. தொழிலாளர்கள் சிஐடியு-வுடன் இணைக்கப்பட்ட ஒரு சங்கத்தில் சேர்ந்தபோது, ஃபாக்ஸ்கான் நிர்வாகம் அவர்களைப் பழிவாங்கத் தொடங்கியது. அது 2010 அக்டோபரில் வேலைநிறுத்தத்திற்கு இட்டுச்சென்றது.
நிர்வாகம், சங்கத்தை அங்கீகரிக்க விடாப்பிடியாக மறுத்ததன் விளைவாக, கடைசியில் இப்பிரச்சனை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நீதிமன்றம், 2014ல் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்ற முடிவினை அளித்தது. அப்போது,ஃபாக்ஸ்கான் தன்னுடைய தொழிற்சாலையையே மூடிவிடத் தீர்மானித்தது. இதற்கு அது கூறிய காரணம், நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டதாம். ஃபாக்ஸ்கான் இப்போது மீண்டும்இந்தியாவிற்கு திரும்பி வந்துகொண்டிருக்கிறது. தன்னுடைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை முழுமையாகத் தொடரமுடியும் என்கிற எதிர்பார்ப்புடன் மகாராஷ்டிராவில் முதலீடுசெய்துகொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆட்சிபுரியும் பாஜக தலைமையிலான அரசாங்கமானது, ராஜஸ்தானிலும், மத்தியப் பிரதேசத்திலும் உள்ள பாஜக அரசாங்கங்கள் செய்துள்ளதைப்போல தங்கள் மாநிலத்திலேயும் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி, சட்டப் பேரவையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது.
உதாரணமாக, தொழில் தாவா சட்டத்தில் (Industrial Disputes Act) தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தத்தின்படி 300 அல்லது அதற்குக் குறைவாக தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் தங்கள் தொழிலாளர்களை இஷ்டம்போல் வேலையை விட்டு நீக்கலாம். எதுவும் கூறாமலேயே ஆலைமூடலையும் மேற்கொள்ளலாம். இவ்வாறு சட்டத்தைத் திருத்தி இருப்பதன்மூலம் மகாராஷ்டிராவில் உள்ள 95 சதவீத தொழில் பிரிவுகள் தொழிலாளர்களுக்கானப் பாதுகாப்பு வளையத்திற்கு அப்பால் சென்றுவிடுகின்றன. மகாராஷ்டிர பாஜக அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கை காரணமாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஊக்கம் பெற்றிருக்கலாம்.ஃபாக்ஸ்கான் நிறுவனம், தொழிலாளர் விரோத மற்றும் தொழிற் சங்கவிரோத நிலையினை மேற்கொள்ளக்கூடாது என்று முன்னதாகவே எச்சரிக்கப்பட வேண்டும். அமைப்புரீதியாகத் திரண்டு சங்கம் வைக்கும் உரிமை என்பது, இந்தியத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையாகும். மகாராஷ்டிரா அரசாங்கம் எந்தவிதத்திலும் தொழிலாளர்களின் உரிமைகளை மீறக்கூடிய விதத்தில், ஃபாக்ஸ்கானுக்கு, அதன் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு மறைமுக ஆதரவு அளித்திடக்கூடாது என்று முன்னதாகவே அறிவித்துக் கொள்கிறோம்.
(ஆகஸ்ட் 12,2015)
(தமிழில்: ச. வீரமணி)

No comments: