பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்
புதிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில்
பட்ஜெட்கூட்டத்தொடரை அறிவிப்பதற்கு முன்பே, அது தன்னுடைய முதல் பட்ஜெட்டைத் தாக்கல்
செய்யக்கூடிய சமயத்தில் பொருளாதார அரங்கில் மிகவும் கவலையளிக்கக்கூடிய அளவில்
செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு செய்திகள் இருதரப்பாருக்கு பாதிப்பை
ஏற்படுத்தக்கூடிய விதத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முதலாவது தரப்பினர், இந்தியாவின்
கார்ப்பரேட்டுகள் ஆவார்கள். இரண்டாவது தரப்பினர் நாட்டின் பெரும்பான்மை
மக்களாவார்கள்.தேர்தலுக்குப் பிந்தைய நாட்கள் என்பவை பாஜக வின் தேர்தல்
பிரச்சாரத்தின்போது நரேந்திர மோடியை இந்திய கார்ப்பரேட்டுகளின் `மீட்பர்’என்று
வலுக்கட்டாயமாக சித்தரித்திட கோடிகோடியாகக் கொட்டிச் செலவு செய்த தொகையை மேற்படி
கார்ப்பரேட்டுகள் மீண்டும் எடுக்கும் காலமாகும்.
இவ்வாறு இவர்கள் செலவு செய்த தொகையில்
பெரும்பகுதியை, தேர்தல்
முடிந்த மறுநாளன்றே பங்குச்சந்தை வணிகத்தில் `சென்செக்ஸ்’ குறியீட்டு
எண்களை வீங்க வைத்து ஏற்கனவே இவர்கள் மீண்டும் எடுத்துவிட்டபோதிலும், இவர்களின்
அகோரப்பசிக்கு இது போதாது என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது பொருளாதாரத்தில்
இறங்கு முகம் தொடங்கிவிட்டது. மீண்டும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கி
இருக்கிறது. எனவே இந்தியக் கார்ப்பரேட்டுகள் மீண்டும் ஒரு புதிய பொருளாதார
சீர்திருத்தங்களுக்கான நடவடிக்கைகள், அதிலும் குறிப்பாக நிதித்துறை தாராளமயம்
விரைவில் தொடங்கும் என நம்புகின்றனர்.
இத்தகைய சீர்திருத்தங்கள்
கார்ப்பரேட்டுகளுக்கு மிகவும் எளியமுறையில் குறைந்த வட்டிவிகிதத்தில் மூலதனத்தைப்
பெருக்கிக்கொள்வதற்கான வாய்ப்பினைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் என ஆவலுடன்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும், பொருளாதார அரங்கில் வெளியாகியுள்ள
செய்திகள் அவர்களின் நம்பிக்கைகளைக் குலைத்திருக்கிறது. பணவீக்கம்திடீரென்று
மேல்நோக்கி ஏறத்தொடங்கிவிட் டது. மொத்த விலைவாசிக் குறியீட்டெண் 2014 ஏப்ரலில்
5.2 சதவீதமாக
இருந்தது, 2014 மே மாதத்தில் 6.01 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இதன்காரணமாக
நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண் வளர்ச்சி இயற்கையாகவே பன்மடங்கு அதிகரித்து
விலைவாசிஉயர்வை விண்ணை முட்ட வைத்திருக்கிறது. உணவுப் பொருள்கள் மற்றும்
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை அடிப்படையாக வைத்துத்தான் பணவீக்கத்தின்
எழுச்சி மதிப்பிடப்படுகிறது.
உணவுப் பணவீக்கம் ஏப்ரலில் 8.64 சதவீதமாக
இருந்தது மே மாதத்தில் 9.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. உருளைக்
கிழங்கு பண வீக்கம்தான் மிக அதிகம். அதாவது 31.4 சதவீதம். இதனைத் தொடர்ந்து பழங்களின்
பணவீக்கம் 19.4 சதவீதமாகவும், முட்டைகள், இறைச்சி
மற்றும் மீன் ஆகியவற்றின் பணவீக்கம் 12.47 சதவீதமாகவும் உயர்ந்திருக்கின்றன.
உற்பத்திசெய்யப்பட்ட பொருள்களின் பணவீக்கம் 3.55 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இவை
அனைத்தும், இயற்கையாகவே, ஏழை, நடுத்தர
மற்றும் உழைக்கும் மக்களின் பெரும்பகுதியினரைக் கடுமையாகப் பாதிக்கும்.இத்தகைய
நிலைமைகளில், கார்ப்பரேட்டுகள்
கனவு காண்பதுபோல நிதித்துறை சீர்திருத்தங்கள் மூலம் அவர்களுக்குத் தேவையான மூலதனம்
எளிதாக குறைந்த வட்டி விகிதத்தில் அவர்களுக்குக் கிடைப்பது சாத்தியமில்லை.
ஏனெனில், நவீன தாராளமய சித்தாந்தம் சொல்வது
என்னவெனில், வட்டி
விகிதத்தைக் குறைப்பதன் மூலம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் பண விநியோகம்
இருக்கும் ; அது
விலைவாசி உயர்வை மேலும் உயர்த்துவதற்கான நிர்ப்பந்தத்தைக் கொடுக்கும் என்பதாகும்.
விலைவாசி உயர்வால் அவதிப்படும் ஏழை மக்கள் குறித்து முதலைக்கண்ணீர் வடிக்கும் நவீன
தாராளமய சீர்திருத்த மேதாவிகள், பணவீக்கம் குறித்து உண்மையிலேயே
கவலைப்படுகிறார்கள். ஏனெனில் அது அவர்களின் கொள்ளைலாபம் ஈட்டுவதற்கான
வாய்ப்புகளுக்கு இடையூறு உண்டாக்கும். இதன்காரணமாகத்தான் பணவீக்கத்தைக்
கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.உணவு மற்றும்
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் ஏற்படக்கூடிய பணவீக்கம் மேலும் பெரிய
அளவிற்கு நிர்ப்பந்தத்தை அளிக்கும் விதத்தில் மாறக்கூடும். மத்தியஅரசு ஜூன் 18 அன்று
அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு தாக்கீது அனுப்பியிருக்கிறது.
அதில் வானிலை ஆய்வு மையம், வரவிருக்கும்
மழைக்காலம் மிகவும் வலுவின்றி இருக்கும் என்று எச்சரித்திருப்பதைச் சுட்டிக்காட்டி
வறட்சியை எதிர்கொள்ள தயாராயிருக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது.அதற்கு அடுத்த
நாளே மத்திய அரசு பணவீக்கம் கடந்த ஐந்து மாதங்களில் இருந்ததைவிட அதிகமாக இருக்கும்
விவரங்களை வெளியிட்டு, சம்பந்தப்பட்ட துறைகளின்
அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அழைத்து அவசரக்கூட்டத்தை ஏற்பாடு செய்தது.
எவராலும் நம்பமுடியாத அளவிற்கு இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன தெரியுமா? கள்ளச்சந்தைக்காரர்கள்
மீது கடும் நடவடிக்கை எடுத்திட மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பதாகும். உண்மையிலேயே
இவ்வாறு செய்யப்பட்டாலும்கூட, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட இது
போதுமான தல்ல.
மேலும் கூடுதலாக இரு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெகுகாலமாகவே
கூறி வருகிறது. முதலாவது, அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின்
மீதான அனைத்து ஊக வர்த்தகங்களுக்கும் தடை விதித்திட வேண்டியது உடனடித்தேவை.
ஆயினும் இத்தகைய ஊகவர்த்தகத்தின் மூலம்கொள்ளை லாபம் ஈட்டிவரும் பன்னாட்டு
நிறுவனங்கள் மற்றும் நம் நாட்டு வர்த்தகப்புள்ளிகள் (இவர்கள்தான் பாஜகவின் சமூகத்
தளத்தின் முக்கியமான அடிப்படை மூலக்கூறாக இருப்பவர்கள்) அரசாங்கம் இதனை மேற்கொள்ள
அனுமதித்திட மாட்டார்கள். பாஜக இந்நடவடிக்கையை மேற்கொள்ள மறுத்திருப்பதன் மூலம்
அதன் நலன்கள் எவரை சார்ந்திருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது.
எனவே இக்கூட்டம் கொள்ளை லாபம் ஈட்ட
அனுமதிப்பதன் மூலம், மக்கள் மீதான துன்ப துயரங்கள் மேலும்
அதிகரிக்கும். இரண்டாவதாக, மத்திய அரசாங்கம் மிக அதிக அளவில் உணவு
தானிய இருப்பைத் தங்கள் கிடங்குகளில் வைத்திருப்பதைத் தொடர்கிறது. பொது விநியோக
முறையில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பத்தினருக்கு, குறைந்தவிலையில்
இவற்றை விநியோகம் செய்வதற்காக, மாநில அரசுகளுக்கு விடுவித்திட அல்லது
அரசுக் கட்டுப்பாட்டில் வெளிச்சந்தையில் கட்டுப்பாட்டு விலையில் இவற்றை விற்பனை
செய்திட முன்வந்தால், அவற்றைத்தொடர்ந்து தானாகவே உணவுப்
பொருள்களின் விலைகள் குறையும். ஆயினும் இதனையும் செய்திட பாஜக அரசு மறுக்கிறது.
மாறாக, இதனை
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடவே முனைந்துள்ளது.
மக்கள் மீதான சுமைகளை மேலும் அதிகரித்து
அதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தைப் பெருக்கிடவே அது திட்டமிட்டுள்ளது. ஒரு
புது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பைஏற்றபின் குடியரசுத்தலைவர் நாடாளுமன்றத்தின் இரு
அவைகளின் கூட்டு அமர்வில் ஆற்றிடும் உரையானது அப்புதிய அரசாங்கத்தின்
நிகழ்ச்சிநிரலையும், அப்புதிய அரசு முதலாண்டில்
மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கை களையும் எடுத்தியம்பும். இவ்வாறு எவ்விதமான
விவரங்களையும், முன்னுரிமை
நடவடிக்கைகளையும் குடியரசுத் தலைவர் உரை கொண்டிருக்கவில்லை.மிகவும் தம்பட்டம்
அடிக்கப்பட்ட “குஜராத்
மாடல் வளர்ச்சி’’ என்றால் என்ன என்பதும், அரசாங்கத்தின்
உண்மையான நிகழ்ச்சிநிரல் என்ன என்பதும், நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரதமர்
ஆற்றியிருக்கும் உரையிலிருந்து வெளி வந்திருக்கிறது. ஜூன் 13 அன்றுஅவர்
ஆற்றிய உரையில் “கடினமான பொருளாதார முடிவுகள்’’ குறித்துப் பேசியிருக்கிறார். தாங்கள்
பொறுப்பேற்றபோது முந்தையஅரசாங்கம் அனைத்தையும் காலிசெய்து விட்டுப்
போய்விட்டார்கள் என்றும் எதையும்விட்டுவைக்க வில்லை என்றும் கூறியிருக்கிறார்.
எனவே, நிதி ஒழுங்கை மீட்டெடுப்பதற்காக “கடும்
நடவடிக்கைகள்’’ மூலம்
மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறி
தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி இருக்கிறார். “கடந்த பத்தாண்டு காலமாக ஒரு செயல்படும்
அரசையே மக்கள் பார்க்கமுடியவில்லை,’’ என்று அவர் தன்னுடைய சமூக இணையதளமான
ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர் மேலும், “நாட்டின்
நலன்களுக்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கும் தருணம் வந்திருக்கிறது,’’ என்றும்
குறிப்பிட்டிருக்கிறார். “பத்தாண்டுகளாக இருந்த செயல்படா அரசாங்கம்’’ என்ற
முந்தைய அரசாங்கம் எழுப்பிய முழக்கங்களுக்கும், இவர்களது கூற்றுகளுக்கும்
எந்தவிதத்திலாவது வித்தியாசம் இருக்கிறதா?முந்தைய அரசாங்கத்தின் பிரதமர் மன்மோகன்
சிங் என்ன சொன்னார்? “மக்கள் தங்கள் வயிற்றை இறுகக்
கட்டிக்கொள்ள வேண்டும்,’’ என்றார். விளைவு, தாங்கமுடியாத
அளவிற்குப் பணவீக்கம், வேலையின்மை அதிகரிப்பு, உழைக்கும்
மக்களின் பெரும்பான்மையினர் மீது சால்லொண்ணா துன்ப துயரங்கள்.
இவற்றின்மூலம் மக்கள் மத்தியில்
ஆட்சியாளர்களுக்கு எதிராக இருந்த அதிருப்தியை நன்கு அறுவடை செய்து ஆட்சிக்கு
வந்துள்ள பாஜக இப்போது மக்களைப் பார்த்து முந்தைய அரசாங்கம் அளித்துவந்த, மக்களைக்
கொஞ்சம்கொஞ்சமாகக் கொல்லும் அதே மருந்தை மேலும் கூடுதலாக எடுத்துக்கொள்ள
தயாராயிருங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. தாங்கள் எடுக்கப்போகும் “கடுமையான
நடவடிக்கைகள்’’ என்ன
என்பதை பிரதமர் இன்னும் கூறவில்லை. ஆயினும் அவர் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள்
எப்படி இருக்க வேண்டும் என இந்தியக் கார்ப்பரேட்டுகள் ஊடகங்கள் மூலம்
வெளியிட்டிருக்கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்திலிருந்து வெளிவர
வேண்டும்என்ற பெயரில் தங்களுக்கு வரிச் சலுகைகள்அளித்திட வேண்டும் என்று
தொழிலதிபர்கள் சங்கங்கள் கோரிக்கை வைப்பதில் முந்திக்கொண்டுள்ளன. சென்ற ஐமுகூ
அரசாங்கம்சென்ற பட்ஜெட்டில் சுமார் 5.73 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ’வரிச்சலுகைகள்’ அளித்ததை
சற்றே நினைவுகூர்க.
அதுமட்டுமல்ல, அதிகாரப்பூர்வ
பதிவேடுகளின்படி, வசூலிக்கப்படாத நேரடி வரி வசூல் மட்டும்
5.1 லட்சம்
கோடி ரூபாயாகும். இவ்வாறு பத்துலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான நியாயமான தொகை, அரசாங்கத்திற்கு
வரவேண்டிய தொகை, அரசாங்கத்திற்கு அளிக்கப்படாமல்
இவர்களால் மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த லட்சணத்தில்தான் இந்திய கார்ப்பரேட்டுகள்
தங்களுக்கு மேலும் வரிச் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்று கூப்பாடு
போடுகின்றனர். சென்ற பட்ஜெட் மதிப்பீட்டின்படி நிதிப் பற்றாக்குறை 5.20 லட்சம்
கோடி ரூபாயாகும். இதுவரை கார்ப்பரேட்டுகளுக்கு அளித்த வரிச் சலுகைகள் அவர்களுக்கு
இவ்வாறு அளிக்கப்படாதிருந் தாலேயே இந்த பற்றாக்குறையை இல்லாது செய்திருக்க முடியும்.
மேலும் அரசாங்கத்திடம் கணிசமான அளவிற்கு
உபரியாக தொகை மிஞ்சி இருக்கும். அவற்றின் மூலம் நாட்டிற்குத் தேவையான கட்டமைப்பு
வசதிகளை மேம்படுத்தி இருக்க முடியும். அதனைத் தொடர்ந்து நம் நாட்டின் தொழில்
வளர்ச்சியையும் அதிகரித்திருக்க முடியும். ஆயினும் இது எதுவும் நடைபெறவில்லை.பாஜக
தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி உதவி அளிப்பதில், இந்திய ஜனநாயக வரலாற்றில், முன்னெப்போதும்
இல்லாத அளவிற்கு, முன்னின்ற இந்திய கார்ப்பரேட்டுகள், இந்த
அரசாங்கத்தின் கொள்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதில் மிகவும்
நெருக்கமாக இருப்பார்கள். எனவே மக்களின் ஆசை அபிலாசைகளைப் பற்றி இவர்கள்
கவலைப்படப் போவதில்லை.
இந்திய கார்ப்பரேட்டுகள் கசியவிட்டுள்ள
செய்திகளின்படி, பிரதமர் அநேகமாக அறிவிக்க இருக்கும் 15 கடினமான
நடவடிக்கைகள் என்பனவற்றில் டீசலுக்கு அளித்துவரும் மானியத்தைப் படிப்படியாக குறைத்து
இல்லாமல் ஒழித்துக்கட்டுவது, சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்
விலைகளை மாதந்தோறும் அதிகரிப்பது, உணவுப் பாதுகாப்பை ஒழித்துக்கட்டுவது, இரசாயன
உரத்திற்கு அளித்து வரும் மானியத்தை ஒழிப்பது, நிலம் கையகப்படுத்தும் முறைகளை
எளிதாக்கக்கூடிய விதத்தில் சட்டத்திருத்தங்கள் கொண்டுவருவது, மகாத்மா
காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை உருக்குலைப்பது, தொழிலாளர்களிடம்
வேலை வாங்கியபின் அவர்களைத் துரத்தி அடிக்கக்கூடிய விதத்தில் தொழிலாளர்சட்டங்களில்
சீர்திருத்தங்கள் கொண்டுவருதல், ரயில் கட்டணம் உயர்வு, வேளாண்
பொருள்களுக்கு அளித்துவரும் குறைந்தபட்ச ஆதார விலைகளை உயர்த்துவதன் மூலம் உணவு
மானியங்களை வெட்டுதல், ஆகியவை உள்ளடங்கி இருக்கின்றன. இதில்
கடைசியாகக் கூறப்பட்டுள்ள நடவடிக்கை மூலம் விவசாய நெருக்கடி மேலும் கடினமாகும்.
மக்கள் மீது சுமைகளை ஏற்றுவதன் மூலம் கொள்ளை லாபம் ஈட்டிட எத்தகைய நடவடிக்கைகளை
இந்த அரசு எடுக்கவிருக்கிறது!அதே சமயத்தில், சர்வதேச நிதியம் ஜூன் 16 அன்று
வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் அமெரிக்காவின் பொருளாதாரம் முந்தைய மதிப்பீடான 2.8 சதவீதத்திலிருந்து
2014ல் 2 சதவீதமாக
வீழ்ச்சியடைந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டி இருக்கிறது.
இது நம் இந்திய கார்ப்பரேட்டுகளின்
வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. ஏனெனில், உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக
நம் ஏற்றுமதிகள் ஏற்கனவே கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. மேற்படி சர்வதேச
நிதியத்தின் கூற்றுப்படி இது மேலும் வீழ்ச்சியடையும். எனவே, இந்திய
கார்ப்பரேட்டுகள் தங்கள் கொள்ளை லாப வேட்டைக்கு முழுமையாக இந்திய சந்தையையே
சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். எனவேதான், பொதுத்துறை
நிறுவனங்களை முற்றிலுமாக தனியாருக்குத் தாரை வார்த்திட வேண்டும் என்று அவை அதிகமான
அளவில் குரல் எழுப்பி வருகின்றன. எந்த அளவிற்குத் தெரியுமா? பிரதமர்/நிதி
அமைச்சர் இவ்வாறு தனியாருக்குத் தாரை வார்ப்பதை கொஞ்சம் கொஞ்சமாக செய்யக்கூடாது
என்றும், இப்போது
இருக்கும் சட்டங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறாமலேயே, ஒரு
நிர்வாக உத்தரவின் மூலமே செய்திட வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறார்கள்.
மேலும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியே
யாக வேண்டும் என்ற நிலை வரும் எனில், தற்போது மாநிலங்களவையில் அதற்குப்
பெரும்பான்மை இல்லாததால், “இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக்
கூட்டி நிறைவேற்றுங்கள்’’ என்றும் இந்த அரசுக்கு அறிவுரை வழங்கி
இருக்கிறார்கள். இதைவிட வெளிப்படையாகச் சொல்ல முடியுமா? பாஜக
தேர்தல் பிரச்சாரத்தின்போது முழங்கிய முழக்கங்களின் உண்மை சொரூபங்கள் ஒவ்வொன்றாக
வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் மக்களின் துன்ப
துயரங்கள் பல்கிப்பெருக இருக்கின்றன. பெரும்திரளான மக்களைஇவர்களின் மக்கள் விரோத
நடவடிக்கைகளுக்கு எதிராக அணிதிரட்டிப் போராட வைப்பதன் மூலமே இவர்களின் இத்தகைய
நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திட முடியும். வரவிருக்கும் காலங்களில்இத்தகைய
மக்கள் போராட்டங்களை வலுப் படுத்திடுவோம்.
தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment