Sunday, March 2, 2014

மாற்றுக்கொள்கைத் திசைவழி மூலமாகத்தான் மக்களுக்கு நிவாரணத்தை அளித்திட முடியும்


பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

நடைபெறவிருக்கும் 16ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளால் வெளியிடப்பட்டுள்ள கூட்டுப் பிரகடனம், தங்கள் வாழ்வை நிர்க்கதிக்குத் தள்ளியுள்ள,   அதிகரித்துள்ள பொருளாதார சுமைகளிலிருந்து நிவாரணம் தேடி மிகவும் ஏங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கு, நிவாரணத்தைத் தருவதற்காக ஒன்றிணைந்திருக்கிறோம் என்பதைத் தெள்ளத் தெளிவான வார்த்தைகளில் வெளிப்படுத்தி இருக்கிறது. நான்கு இடதுசாரிக் கட்சிகளுடன், ஐந்து மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்கள். உத்தரப் பிரதேசம், சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், பீகார் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் முதல்வர் நிதிஷ் குமார், தமிழகத்தின் ஆளும் கட்சியாக விளஙகும்  அஇஅதிமுக-வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தம்பிதுரை, மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா, ஜார்கண்ட் முன்னாள் ஆளும் கட்சியான ஜார்கண்ட் விகாஷ் மோர்ச்சாக் கட்சித் தலைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றார்கள். இந்த ஒன்பது கட்சிகளும் தற்போது மக்களவையில் மொத்தம் உள்ள இடங்களில் 265 இடங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனஒடிசா ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளம் மற்றும் அசாம் மாநிலத்தின் முன்னாள் ஆளும் கட்சியான அசாம் கண பரிசத்தும் அன்றைய தினம் அக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. அந்த மாநிலங்களில் உள்ள இடங்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 300ஆக உயரும். இத்துடன், பஞ்சாப் மக்கள் கட்சி, மகாராஷ்ட்ராவில் உள்ள  பிரகாஷ் அம்பேத்கரின் குடியரசுக் கட்சி மற்றும் பல மாநிலக் கட்சிகளும் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்கான மதச்சார்பற்ற எதிர்க் கட்சிகளின் கூட்டணியில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கின்றன. இவ்வாறு, நாட்டின் பெரிய மாநிலங்கள் பலவற்றில் ஆளுகிற கட்சிகளாகவோ அல்லது பிரதான எதிர்க்கட்சிகளாகவோ விளங்கக் கூடிய கட்சிகள் இன்றைய தினம் மக்களின் அடிப்படைப்  பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஒன்றிணைந்திருக்கின்றன. இவை தங்கள் மாநிலங்களிலிருந்து  நாடாளுமன்ற உறுப்பினர்களை அபரிமிதமான அளவிற்கு அனுப்பி வைத்திடும்.
இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனமானது, இன்றைய தினம் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமானால் அது மாற்றுக் கொள்கைத் திசைவழி மூலமாகத்தான் முடியும் என்பதைத் தெள்ளத் தெளிவாக்கி இருக்கிறதுபொருளாதாரக் கொள்கைத் திசைவழி மற்றும் ஊழல் ஆகியவற்றைப் பொறுத்தவரை பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் இடையே அநேகமாக எந்த வித்தியாசமும் இல்லை என்பதை மக்கள் நன்கு பார்க்கிறார்கள். மேலும் கூடுதலாக, பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அரசியல் அங்கம் என்ற முறையில், தன்னுடைய அதிதீவிர இந்துத்துவா நிகழ்ச்சிநிரலைப் பின்பற்ற முயல்வதன் மூலமாக மதவெறித் தீயைக் கொழுந்துவிட்டெரியச் செய்திடும் வேலைகளிலும் இறங்கி இருக்கிறது. எனவே இவ்வாறு, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளால் மட்டுமே  மக்களுக்கான மாற்றுக் கொள்கைத் திசைவழியை கொண்டு வர முடியும்.
காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டமும் மற்றும் அவை வெளியிட்டுள்ள கூட்டுப் பிரகடனமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடை 20ஆவது அகில இந்திய மாநாட்டின்போது முடிவுசெய்த  புரிந்துணர்வின் அடிப்படையில் தான் அமைந்திருக்கிறது. அரசியல் தீர்மானம் கூறுவதாவது: “காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓர் இடதுசாரி மற்றும் ஜனநாயக மாற்றை முன்வைக்கிறது. ஓர் இடதுசாரி மற்றும் ஜனநாயக மேடையால் மட்டுமே முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு மாற்றை அளித்திட முடியும். இத்தகைய மாற்றை உருவாக்கிட, இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் ஓர் அரசியல் கூட்டணியை உருவாக்கி, அவற்றின் மூலம் இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்துவதன் மூலம் கட்டி எழுப்பப்பட வேண்டியது தேவை. இதற்கான முயற்சிகளை மேற்கொள்கையில், ஜனநாயகம், நாட்டின் இறையாண்மை, மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காகப் பங்களிப்பினைச் செய்துள்ள காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத சக்திகளை அணிதிரட்ட வேண்டியது அவசியமாகலாம். இத்தகைய கூட்டு மேடை உருவாவது இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் கூட்டணியைக் கட்டுவதற்கான நடைமுறைக்கு உதவ வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் பிரச்சனைகளின் மீது காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டு இயக்கங்கள் நடத்திட முயல வேண்டும். அப்போதுதான் அத்தகைய இயக்கங்களை விரிவுபடுத்திட முடியும்சில முக்கியமான கொள்கை விஷயங்கள் மற்றும் மக்கள் பிரச்சனைகளில் இக்கட்சிகளுடன் நாடாளுமன்றத்தில் கூட்டாகவும் செயல்பட முடியும். தேவைப்பட்டால் மற்றும் தேவைப்படும் போது, இக்கட்சிகள் சிலவற்றுடன் தேர்தல் உடன்பாடுகளும் வைத்துக்கொள்ள முடியும்.’’
இத்தகையதோர் அரசியல்  மாற்று இயற்கையாகவே இதுவரை காங்கிரஸ் தலைமையிலான அரசியல் அணி அல்லது பாஜக தலைமையிலான அரசியல் அணி என்று கூறிவந்தவர்களுக்கு இடையே கிலியை ஏற்படுத்தி இருக்கிறதுபாஜகவின் தலைமையிலோ அல்லது காங்கிரசின் தலைமையிலோ தங்களைப் பிணைத்துக் கொள்வது என்பது அனைத்த பிற்போக்கு சக்திகளுக்கும் வசதியாக இருந்தது. ஏனெனில் இவ்விரு கட்சிகளுமே பின்பற்றி வந்த கொள்கை என்பது தாங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதையோ அல்லத `சலுகைசார் முதலாளித்துவத்தைஎவ்விதத் தட்டுத் தடங்கலுமின்றி பெருக்கிக் கொள்வதிலோ குறுக்கே நின்றிடவில்லை.
கூட்டுப்பிரகடனத்தை வெளியிடு வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் கூட்டத்தின்போது ஏராளமான கேள்விகள். பலர் மாற்றுக் கொள்கையின் துல்லியமான வடிவம் மற்றும் அதன் திட்டத்தின் உள்ளடக்கம் குறித்து நேர்மையாகவே விளக்கம் கேட்ட அதே சமயத்தில், பல கேள்விகள் இவ்வாறு பாஜக அல்லது காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் தலைமைக்கு எதிராக  அணி உருவாகி இருப்பதன் காரணமாக எழுந்த கோபத்தையும், அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாத மன வேதனையையும் வெளிப்படுத்து வதாகவே இருந்தன. இவ்வாறு மாற்று அணி ஆட்சிக்கு வருமானால் யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்விக்கு, “இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கட்டமைப்பு என்பது பிரதமர் என்பவர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்’’ என்ற மிகத் தெளிவாகத் தலைவர்கள் பதில் அளித்தார்கள். மொரார்ஜி தேசாய், வி.பி. சிங், தேக கவுடா, .கே. குஜ்ரால், அடல் பீகாரி வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகிய அனைவருமே அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் என்றும் அதுதான் இந்தியாவின் வரலாறு என்றும் முலாயம் சிங் யாதவ் அவ்வாறு கேள்விகள் கேட்ட ஊடகத்தினருக்கு நினைவுபடுத்தினார். கட்சிகளுக்கு இடையில் இடங்கள் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தம் என்ன என்று கேட்கப்பட்டதற்கு, அவை அந்தந்த மாநிலங்களின் மட்டத்தில்  அங்குள்ள எதார்த்த நிலைமைகளைத் துல்லியமாகப் பரிசீலனை செய்வதன் அடிப்படையில் இறுதிப்படுத்திக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 1977 ஜனதா கட்சி அரசாங்கத்திலிருந்து அனைத்துக் கூட்டணி அரசாங்கங்களுமே தேர்தல்களுக்குப் பின்னர்தான் துல்லியமான வடித்தினையும் பெயரையும் பெற்றன என்பதும் ஊடகத்தினருக்கு நினைவுபடுத்தப்பட்டதுவாஜ்பாஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் சரி, மன்மோகன்சிங் தலைமை யிலான ஐமுகூட்டணியும் சரி அவ்வாறே அமைந்தனஎனவே, 2014ம் வித்தியாசமாக அமைந்திடப் போவதில்லை.
நாம் ஏற்கனவே இப்பகுதியில் சுட்டிக்காட்டியிருப்பதுபோல, இந்திய கார்ப்பரேட்டுகளுக்கும் அவர்களின் மூளையாகச் செயல்படும் சர்வதேச நிதி மூலதனத்திற்கும் இவ்வாறு ஓர் அணி  உருவாகி இருப்பது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்களின் தலைமையில் ஆட்சி அமைந்தால் இந்திய மக்களின் வயிற்றில் அடித்துத் தாங்கள் அடிக்கும் கொள்ளை லாபம் பறிபோய்விடுமோ என்று அவை நிலைகுலைந்து போயுள்ளன. கார்ப்பரேட் ஊடகங்கள் இதில் பின்தங்கியிருக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு (2014 பிப்ரவரி 23 அன்று) ஹர்யானா மாநிலத்தில் ஹிஸ்ஸார் நகரில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் அரசியல் மாற்றுக்காக மக்களின் மகத்தான பேரணி/பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதே நாளன்று இடதுசாரிக் கட்சிகள் அறிவித்த வெகுநாட்கள் கழித்து அதே நாளில் ஆம் ஆத்மி கட்சியானது அந்நகருக்கு அருகேயுள்ள ரோஹ்டாக் என்னுமிடத்தில்  ஒரு பேரணியை நடத்தியது. இடதுசாரிக் கட்சிகளின் பேரணியில் பல லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்த போதிலும் அவற்றை அநேகமாக கண்டு கொள்ளாத கார்ப்பரேட் ஊடகங்கள் ஏஏபி பேரணியை மட்டும் விளம்பரப்படுத்தின. இதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. முன்னதாக, அண்ணா ஹசாரேயில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் தலைநகரில் நடந்த அதே சமயத்தில், மத்தியத் தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாடாளுமன்ற வீதியில் ஊழலுக்கு எதிராகவும், விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் பெரும்திரளாகக் குவிந்திருந்தனர். இரண்டும் அருகருகேதான் நடந்தன.   அண்ணா ஹசாரே இயக்கத்தை அளவுக்குமீறி 24 மணி நேரமும் தூக்கிப்பிடித்த ஊடகங்கள் தொழிலாளர்களின் பேரணி குறித்து எதுவுமே கூறவில்லை. கார்ப்பரேட் ஊடகங்களைப் பொறுத்தவரை, எந்தவிதமான மாற்றும் அவர்கள் கொள்ளை லாபம் அடிப்பதற்குக் குறுக்கே வந்துவிடக்கூடாது. மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் மாற்றைவிட, தங்கள் கொள்ளை லாபத்தை மேலும் அதிகப்படுத்தக் கூடிய அளவிலான மாற்றே அவர்களுக்குத் தேவை.
அண்ணா ஹசாரேயைப்பற்றிப் பேசுகையில், இப்போது அவர் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவரைப் புகழ்ந்து பாராட்டுவது பலருக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது. பொது வாழ்வில் தூய்மை வேண்டும் என்று `அறநெறி நேர்மையுடன் செயல்பட்ட அண்ணா ஹசாரே போன்றவர்கள் தான் ஆட்சி செய்யும் மாநிலத்திற்கு  நாட்டின் வன்புணர்வு தலைநகரம் என்று பெயர் வாங்கித்தந்துள்ள ஒருவரைகிரிமினல் பேர்வழிகளை ஊட்டிவளர்ப்பதற்காக உயர்நீதிமன்றத்தால் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்ட ஒருவரை, ஊழல் பேர் வழிகளை ஊக்குவிக்கின்ற ஒருவரைத் தூக்கி வைத்துப் புகழ்வதைப் பார்க்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஊழல்களைப் பட்டியலிட்டு சிம்லா மாநகராட்சி மேயரும், துணை மேயரும் அண்ணா ஹசாரேக்கு திறந்த கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்கள்.
இதனை நாம் அச்சுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், மக்களவைத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பை வெளியிடு வதில் ஊழல் நடைபெற்றிருப்பதை ரகசியப் புலனாய்வு நடவடிக்கை (sting operation) மூலம் ஓர் ஊடகம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறதுகாசு வாங்கிக்கொண்டு செய்தி (paid news) வெளியிடுவதைப்போல, காசு வாங்கிக்கொண்டு கருத்துக்கணிப்பு (paid opinion poll) வெளியிடுவதும் உண்டு என்று நாம் இதற்குமுன் கூறிவந்த கருத்தை மீளவும் உறுதிப்படுத்தக்கூடிய வகையில் இது அமைந்திருக்கிறதுஇது கார்ப்பரேட் ஊடகங்களின் உண்மை குணத்தை வெளிப்படுத்துகிறது. மக்களைத் திசை திருப்புவதற்காகவும், ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கக்கூடிய முறையிலும் எப்படியெல்லாம் கருத்துக்கணிப்புகள் திணிக்கப் படுகின்றன என்பதை இந்த ரகசிய புலனாய்வு உறுதிப்படுத்தி இருக்கிறது. மக்கள் கருத்தை தங்கள் நலன்களுக்கேற்ப மாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும்  இத்தகைய அறநெறி பிறழ்ந்த நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டக்கூடிய விதத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை இது மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டு வலியுறுத்தி இருக்கிறது.
நாட்டில் இவ்வாறு மாற்று அணி உருவாகியிருப்பதனால் மிகவும் கிலிக்கு ஆளாகியுள்ள ஆர்எஸ்எஸ் இதற்கெதிராக, “தத்துவார்த்தரீதியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள வலுவான’’ 2000 தீவிரமான ஊழியர்களை, களம் இறக்கத் தயாராகிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இவர்கள் கட்டவிழ்த்துவிடவுள்ள மதவெறித் தீயை பரவாது தடுத்திடக்கூடிய விதத்தில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியதும் அவசியமாகும்.
கார்ப்பரேட் மற்றும் வருமான வரி கட்டுபவர்களிடமிருந்து 2013ஆம் ஆண்டில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலிக்கப்படாமல் ரத்து செய்யப்படவுள்ளதாக மாநிலங்களவையில் சமீபத்தில் தெரிவிக்கப் பட்டதுகடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக இவர்களிடமிருந்து வசூலிக்காது வரிச் சலுகை அளித்தது இதன்மூலம் இந்த ஆண்டும் தொடர்ந்திருக்கிறது. இவை பணக்காரர்களுக்கு நேரடியாகவே அளிக்கப்பட்ட மான்யங்களேயன்றி வேறல்ல. பணக்காரர் களுக்கான இத்தகைய மான்யங்கள் இவர்களுக்கு வளர்ச்சிக்கானஊக்கத்தொகை’’ என்று ஆட்சியாளர்களால் கூறப்படுகின்றன. அதே சமயத்தில், ஏழைகளுக்கு இதுகாறும் அளிக்கப்பட்டு வந்த அற்ப மான்யங்கள் நம் பொருளாதாரத்தின் மீதான தாங்கமுடியாத சுமை என்று பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு வரிச்சலுகைகள் அளிக்கப்பட்ட பின்னரும்கூட நம் தொழில்கள் மற்றும் உற்பத்தி வளர்ச்சி என்பது தேக்க நிலையில்தான் இருக்கின்றன. இவ்வாறு பணக்காரர்களுக்கு மான்யங்கள் அளிப்பதற்குப் பதிலாக அந்தத் தொகை பொது முதலீடுகளில் பயன்படுத்தப் படுமானால் நிச்சயம் நாம் சிறந்தமுறையில் `உள்ளார்ந்தவளர்ச்சி திசைவழியில் முன்னேறிட முடியும். நாட்டின் உள்நாட்டுத் தேவையை விரிவாக்கக்கூடிய விதத்தில் இத்தகையதொரு மாற்று வளர்ச்சிப்பாதையை இப்பகுதியில் நாம் பலமுறை விளக்கி யிருக்கிறோம்அத்தகைய மாற்றுக்கொள்கைத் திசைவழி மூலமாகத்தான் மக்களுக்கு நிவாரணத்தை அளித்திட முடியும்.

தமிழில்: .வீரமணி

No comments: