Sunday, February 23, 2014

ஆம் ஆத்மி கட்சி : யார் பக்கம்?


பிரகாஷ் காரத்

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர விந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற முதலாளிகள் அமைப்பின் (சிஐஐ) கூட்டத்தில் தங்கள் கட்சியின் பொருளாதாரக் கொள்கை குறித்துப் பேசி யிருக்கிறார். ஏஏபி கட்சியின் சார்பாக பொருளாதாரக் கொள்கை குறித்து ஒரு முழுமையான அளவிலான ஆவணம் இல்லாத நிலையில், கெஜ்ரிவால் அங்கே பேசிய பேச்சின் தொனி ஏஏபி கட்சிக்கு பொருளாதாரக் கொள்கை தொடர்பாக உள்ள தத்துவார்த்த நிலைப்பாடு மற்றும் கொள்கை அணுகுமுறை குறித்து தெரி விப்பதாக எடுத்துக்கொள்ளலாம். கெஜ்ரிவால், “அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதற்கும் வர்த்தகத் திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அரசாங்கம் வர்த்தகம் எதையும் செய்யக் கூடாது. அவை அனைத்தையும் தனி யார் துறையிடம் விட்டுவிட வேண்டும்’’ என்று பேசியிருக்கிறார்.

அவர் மேலும், தான் இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம் மற்றும்லைசன்ஸ் ராஜ்ஜியத்திற்கு எதிரானவன்’’ என்றும் பிரகடனம் செய்திருக் கிறார். கெஜ்ரிவால் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பேசியதால் இவ்வாறு பேசியிருக்கிறார் என்றும், இதனை அக்கட்சியின் அடிப்படைப் பொருளாதார சிந்தனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் சிலர் கூறலாம். ஆனால், இந்தக் கருத்துக்களை கெஜ்ரிவால் முன்வைக்கும்போது முரண்பாடு எதுவுமின்றி மிகவும் உறுதியாகத்தான் எடுத்துவைத்துள்ளார். இதற்கு முன்பும் ஒரு தடவை அவர், “எங்கள் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை, நாங்கள் முதலாளித்துவவாதிகளுமல்ல, சோசலிசவாதிகளுமல்ல அல்லது இடதுசாரிகளுமல்ல. நாங்கள் மிகவும் `சாமானியர்கள் நாங்கள் எந்த வொரு குறிப்பிட்ட தத்துவத்துடனும் இணைந்தவர்கள் அல்ல. எங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய விதத்தில் எந்த தத்துவம் இருக்கிறதோ, அது இடதாக இருந்தாலும் சரி அல்லது வலதாக இருந்தாலும் சரி, அந்த தத்துவத் திலிருந்து நாங்கள் கடன் வாங்கிக் கொள்வோம். ஆயினும் ஒன்றில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். `அரசாங்கம் என்பது வர்த்தகம் எதுவும் செய்யக் கூடாதுஎன்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். வர்த்தகம் என்பது தனிப்பட்ட நபர்களிடம் தான் இருந்திட வேண்டும்.’’ என்றும் கூறியிருக்கிறார்.அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதற்கும் வர்த்தகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.’’ என்று அடிக்கடி அவர் கூறுவது என்பதும் அனைத்தையும் தனியார் துறையிடமே விட்டுவிட வேண் டும்’’ என்பதும் நவீன தாராளமயக் கண்ணோட்டத்தின் பகுதிகளில் ஒன்றே யாகும்.

இவ்வகைக் கண்ணோட்டம்தான் உலகம் முழுதும் மேலோங்கியிருக்கிறது. இந்த அளவுகோலின்படி அனைத்து வர்த்தகத் துறைகளும் மற்றும் பொருளா தார நடவடிக்கைகளும் தனியார் கைகளிடமே இருந்திட வேண்டும் என்றும், அனைத்தையும் சந்தையே ஆளும் என்றும் ஆகிறது. மின்சாரம், தண்ணீர் விநியோகம் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற அடிப்படை சேவைகளைக் கூட தனியாரிடமே தந் திட வேண்டும் என்றும் ஆகிறது. கெஜ்ரிவால் சிஐஐ கூட்டத்தில் பேசுகையில், அரசாங்கத்தின் கடமை என்ன வெனில் ஒரு நல்ல முறைப்படுத்தும் ஆட்சியை அது நடத்திட வேண்டும் என்றும், அனைத்து வர்த்தக அமைப்பு களும் அரசாங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் வாதிட்டிருக்கிறார்.

இவ்வாறு முறைப் படுத்தும் அமைப்புகள் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவான முறையில் விதிகளை உருவாக்கிட வேண்டும் என்று கூறுவதும் நவீன தாராளமய மாடலின் ஒரு பகுதிதான். தில்லியில் மின் விநியோகம் தனியார்மயமாக்க வேண்டும் என்பதை அவர் எதிர்த்த நாட்களையெல்லாம் கெஜ்ரிவால் மறந்து விட்டது போன்றே தோன்றுகிறது. இப் போது கெஜ்ரிவால் கூறிடும் அளவுகோல், தண்ணீர் தனியார்மயம் சம்பந்தமாக ஏஏபி கட்சியின் தொலைநோக்கு ஆவ ணத்தில் கூறப்பட்டிருப்பதற்கும் எதிரான நிலைப்பாடு என்கிற அளவிற்குச் சென்றிருக்கிறது.
சிஐஐ கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதில் காணப்படும் மற்றொரு முக்கிய அம்சம், “தான் முதலாளித்துவத்திற்கு எதிரானவன் அல்ல, மாறாக சலுகைசார் முதலாளித்துவத்திற்குத்தான் எதிரி’’ என்று கூறியிருப்பதாகும். தில்லியில் மின் விநியோகத்தை மேற்கொண்டுள்ள அம்பானியினுடைய கம்பெனிக்கு எதிராக அல்லது ரிலையன்ஸ் எரிவாயு விலை நிர்ணயம் சம்பந்தமான பிரச்சனைக்கு எதிராக அவர் நடத்தி வரும் போராட்டம் சலுகைசார் முதலாளிகளுக்கு எதிரான வை என்று அவர் வாதிடுகிறார். இங்கேகெஜ்ரிவாலும் அவரது ஏஏபி கட்சியும் பிரதானப் பிரச்சனையை பார்க்க மறுக் கின்றன.

அதாவது நவீன தாராளமயத்தின் குணம் என்பதே மிகப்பெரிய அளவில் சலுகைசார் முதலாளித்துவத்தை உற்பத்தி செய்திடும் என்பதை அவர்கள் பார்க்க மறுக்கிறார்கள். நவீன தாராளமய ஆட்சியில் இயல்பாய் அமைந்திருப் பதே இயற்கை வள ஆதாரங்களைக் கொள்ளையடிக்கவும் ஒட்டுமொத்தத்தில் பெரும் வர்த்தக நிறுவனங்கள் அபரிமித மான லாபம் ஈட்டவும் வசதி செய்து தர வேண்டும் என்பதேயாகும்.உதாரணத்திற்கு கனிம வளங்கள் எடுக்கப்படுவதைப் பார்ப்போம்.

கனிம வளத்துறை தனியார் கம்பெனிகளுக்குத் திறந்துவிடப்பட்டதை அடுத்து அவை அபரிமிதமான லாபம் ஈட்டியிருப்பதை அறிவோம். நவீன தாராளமயக் கொள்கையின் கீழ் அரசுக்கும் பெரும் வர்த்தக அமைப்புகளுக்கும் இடையிலான பிணைப்பு என்பது மிக உயர்ந்த நிலை யிலான சலுகை சார் முதலாளித்துவம் என்பதேயாகும். கெஜ்ரிவாலின் கூற் றின் படி, இவை அனைத்திற்கும் தேவைஒரு நல்ல முறைப்படுத்துபவர் என்றஅளவில்தான். கெஜ்ரிவாலின் அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதற்கும் வர்த்தகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்கிற கருத் தாக்கத்தின்படி நாட்டில் கனிம வளங்கள் எடுக்கப்படுவதும் தனியார் துறையிடம்தான் இருந்திட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது சாரிக் கட்சிகளும் கனிம வளங்கள் எடுக்கப்படுவது முழுமையாகப் பொதுத் துறையில்தான் இருந்திட வேண்டும் என்று கோரி வருகின்றன. ஏஏபி கட்சி யைச் சேர்ந்த யோகேந்திர யாதவ் என் பவர் இது, “புத்திசாலித்தனமான பொருளாதாரம் இல்லை’’ என்று பேசியிருக்கிறார். இவ்வாறு இடதுசாரிகளின் நிலைப் பாட்டை ஏஏபி தலைவர்கள் நிராகரிக் கிறார்கள். அதேபோன்று ஏஏபி தலைவர்கள் அடிக்கடி, “நாங்கள் இடதுசாரிகளும் அல்ல, வலதுசாரிகளும் அல்ல’’ என் றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை, அவர்கள், “அது இடது சாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல. மாறாக நல்ல சிந்தனை எங்கிருந்து வந்தாலும், அது பழையதாக இருந்தாலும் அல்லது புதியதாக இருந்தாலும், அது நாட்டின் நலனுக்கு ஏற்புடையதாக இருந் தால், ஆதரிப்போம்’’ என்கிறார்கள். அவர்களுடைய சிந்தனாவாதியான யோகேந்திர யாதவ், “இந்தியாவின் இன்றைய நிலையில் இடதுசாரி - வலதுசாரி சிந்தனைகளுக்கு அர்த்தம் ஏது மில்லை’’ என்று கூறியிருக்கிறார். இவ்வாறு கூறும் நபர் தன்னை ஒருசோசலிஸ்ட் என்று கூறிக்கொண்டிருப் பவராவார். இவ்வாறு தாங்கள் இடது சாரிகளுமல்ல, வலதுசாரிகளுமல்லஎங்களுக்கு என்று எந்தத் தத்துவப் பின்னணியும் கிடையாது என்று ஏஏபி கட்சியின் நிலைப்பாடு என்பது நவீன தாராளமயக் கட்டமைப்பிலிருந்து வெளியே போக முடியாத, தங்கள் கொள்கைகளின் குழப்ப நிலையை மூடிமறைப்பதற்கான ஒன்றேயாகும். இத்தகைய கண்ணோட்டத்தின் அடிப் படையில், ஏஏபி கட்சித் தலைவர்கள் இடதுசாரிக் கட்சிகளிடம் காட்டிடும் மனோபாவம் ஆச்சர்யப்படத்தக்கதாக இல்லை. மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், யோகேந்திர யாதவ், “இடது சாரிகள் கொண்டிருப்பது போன்ற தத்துவத்தையோ அல்லது அரசியலையோ நாங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது தவறானது’’ என்று கூறியிருக்கிறார். அவர் மேலும், “எப்போதெல்லாம் இடதுசாரிகள் கேரளா விலோ அல்லது மேற்கு வங்கத்திலோ அரசாங்கத்தின் அங்கமாக இருக்கிறார் களோ, அப்போதெல்லாம் அவர் கள் மற்ற கட்சிகள் நடந்து கொள் வதைப் போலத்தான் நடந்து கொள்கிறார்கள்,’’ என்றும் கூறியிருக்கிறார்.

யோகேந்திர யாதவ்வைப் பொறுத்த வரை, நிலச்சீர்திருத்தங்கள் அமலாக்கம், தொழிலாளர்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்துதல், பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கி யமை, இடதுசாரிகளின் தலைமையில் இவ்விரு மாநிலங்களிலும் ஆட்சி நடைபெற்ற சமயத்தில் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் முற்றிலுமாக இல்லாதிருந் தமை ஆகிய எதுவுமே முக்கியத்துவம் அல்லாதவைகளாகும். அவை அனைத்துமே இடதுசாரிக் கொள்கைகளின் விளைவு கள் அல்லவா? அதேபோன்று அனைவருக்குமான பொது விநியோக முறை வேண்டும் என்கிற இடதுசாரிகளின் நிலைப்பாட்டினையும் யாதவ் எதிர்க் கிறார். மும்பையில் முதலீட்டாளர்களின் மாநாடு ஒன்றில் பேசுகையில், யாதவ், “உணவு மானியங்கள் அளிக்கப்படக் கூடாது. மக்களுக்கு நேரடியாக உணவு அளிப்பது என்பது மிகவும் திறனற்ற ஒன்று என்பதோடு, ஏழைகளுக்கு சேவைசெய்வது என்ற பெயரால் அதிக செலவு பிடிக்கக்கூடியதுமாகும்’’ என்று கூறி யிருக்கிறார்.யாதவ் மேலும், “தாங்கள் காங்கிரஸ் அல்லது பாஜகவிற்கு மாற்றாக மட்டு மல்ல, இடதுசாரிகளுக்கும் மாற்றாக ஒரு மாற்றை அளிக்க விரும்புகிறோம்,’’ என்றும் பீற்றிக்கொண்டுள்ளார். ஏஏபிகட்சியின் மாற்று என்பதன் பொருள் இப்போது தெளிவாகிக் கொண்டிருக் கிறது. அது நவீன தாராளமயக் கொள் கைகளுக்கு மாற்றாக இருக்கப் போவதில்லை, மாறாக அதே கொள்கையை நேர்மையான’’ வடிவத்தில் பின்பற்று மாம்.
தமிழில்: ச.வீரமணி


No comments: