Monday, December 23, 2013

லோக்பால் சட்டமுன்வடிவு: ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்

இறுதியாக, லோக்பால் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் நாட்டின் மேல்மட்டங்களில் நிலவும் ஊழலை எதிர்கொள்வதற்கான ஓர் அமைப்பு நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட முன்வடிவானது,  இச்சட்டமுன்வடிவில் மேற்கொள்ளப் பட வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட மாநிலங்களவை தேர்வுக்குழு அளித்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை இணைக்கப்பட்டு, மாநிலங்களவையில் சட்டமுன்வடிவு நிறைவேறி அதன்பின்னர் மக்களவையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து, கடைசியில் லோக்பால் நாட்டின் சட்டமாக மாறி இருக்கிறது.இவ்வாறு இந்தச் சட்டம் நிறைவேறு வதற்கு 45 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. 1968-ல் மறைந்த மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்திருந்த நிர்வாக சீர்திருத்த ஆணையம்தான் இத்தகையதோர் அமைப்பு அவசியம் என்று முதன்முதலாக பரிந்துரைத்திருந்தது.
அதிலிருந்தே இது தொடர்பாக இதுவரை எட்டு வரைவு சட்டமுன்வடிவுகள் நாடாளுமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்டன. ஆயினும் சச்சரவுக்குரிய முக்கியமான அம்சங்கள் பலகுறித்து உடன்பாடு ஏற்படாததால் இது சட்டமாவதற்கான சாத்தியம் இல்லாமல் போயிற்று. இந்த வரிசையில் இந்தக்கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்ட சட்டமுன்வடிவானது ஒன்பதாவது சட்ட முன்வடிவாகும். லோக்பால் போன்றதொரு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கோரியதில் கடந்த முப்பதாண்டு காலமாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் இருந்துவந்தது. போபர்ஸ் ஊழல்கள் நாட்டையே குலுக்கிய சமயத்தில் அதனைத் தொடர்ந்து ஆட்சியே மாறிய சமயத்தில், நாட்டின் மேல்மட்டங்களில் நிலவும் ஊழலை வலுவான முறையில் தடுக்கும் விதத்திலும், வர்த்தகர்கள்-அதிகாரவர்க்கம்-அரசியல்வாதிகளுக்கு இடையே வலுவாகவுள்ள புனிதமற்ற இணைப்புச் சங்கிலியை உடைக்கும் விதத்திலும் வலுவான சட்டம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
அப்போது 1989-ல் ஆட்சியிலிருந்த வி.பி. சிங் தலைமையிலான அரசாங்கம் தான் பிழைத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு தேவைப்பட்டதால், மார்க்சிஸ்ட் கட்சி இதுபோன்றதொரு சட்டமுன்வடிவை நிறை வேற்ற வலியுறுத்தியது. அதன்பின்னர் இரு சமயங்களில், 1996இலும் 1997இலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியி லிருந்து ஆதரவு அளிக்கவில்லை என்றால் ஆட்சியில் நீடித்திருக்க முடியாது என்கிற மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், ஐக்கிய முன்னணி அரசாங்கம், லோக்பால் சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தின் முன் கொண்டுவந்தது. எனினும் அது சட்டமாக நிறைவேறவில்லை. மீண்டும், 2004-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து அளித்த ஆதரவுடன் ஐமுகூ-1 அரசாங்கம் அமைந்தசமயத்தில் உருவான பொது குறைந்தபட்ச திட்டத்தில் லோக்பால் நிறுவப்படும் என்கிற லட்சியம் சேர்க்கப்பட்டது. அப்போது உருவாக்கப்பட்ட சட்டமுன்வடிவுதான் தற்போது இறுதி யாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இவ் வாறு லோக்பால் அமைப்பும், மாநில அளவில் லோக் அயுக்தா அமைப்பும் அமைக்கப்படுவதற்கான சட்டமுன்வடிவு நிறை வேறிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இடைவிடாது உறுதியாகப் போராடி வந்துள்ளது. உயர்மட்டத்தில் நிலவும் ஊழ லுக்கு எதிராக பல அமைப்புகள் போராடி வந்த போதிலும் அவ்வாறு அமைக்கப்படவிருக்கும் புலனாய்வு அமைப்பான, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ-இன்) சுயாட்சித்தன்மை மற்றும் அதிகார வரம்பெல்லை ஆகியவை குறித்து இந்தச்சட்ட முன்வடிவில் மிகப்பெரிய அளவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் குறிப்பிடத் தக்க அளவில் உள்ள சில குறைபாடுகளையும் எதிர்காலத்தில் சரிசெய்திட வேண்டியது அவசியம்.ஒட்டுமொத்தத்தில் ஊழலுக்கு எதிராக நாம் மேற்கொண்ட போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால், லோக்பால் அமைக்கப்படுவதுடன் மேலும் பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அதனுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டி இருப்பதை, திரும்பத்திரும்ப வலியுறுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
1988ஆம் ஆண்டு லஞ்சஊழல் தடுப்புச் சட்டத்திலும் ஊழலின் வரையறையை மேலும் விரிவானதாக மாற்றக்கூடிய விதத் தில் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகருதுகிறது. தற்போதுள்ள சட்ட வரையறைஎன்பது மிகவும் குறுகிய ஒன்றாக, அதிகாரத் தில் உள்ளோர் சொந்த ஆதாயத்திற்காக அல்லது வளத்திற்காகத் துஷ்பிரயோகம் செய்வது என்பதுடன் சுருக்கிக் கொள்கிறது. பல வழக்குகளில், அதிகாரத்தில் உள்ளோர் தங்கள் அதிகாரத்தை தனியார் நிறுவனங்கள் ஆதாயம் அடைய துஷ்பிரயோகம் செய் கிறார்கள். தற்போதுள்ள 1988 லஞ்சஊழல் தடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நபர்’’ என்ற வரையறையின்கீழ் நிறுவனங்கள் வராததால் இவ்வாறு அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வோர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை. மேலும் பல சமயங்களில் அதிகாரத்திலுள்ளோர் செய்யும் களவுகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். எனினும் அவர்களின் நடவடிக்கைகளின் காரணமாக பொது கஜானாவிற்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற் படுவதைப் பார்க்கிறோம்.
உதாரணமாக பொதுத்துறை நிறுவனங்கள் பல அடிமாட்டு விலைக்குத் தனியாருக்கு விற்கப்பட்டிருக் கின்றன. இதற்கு அதிகாரத்திலுள்ளோர் தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்திருப்பதுதான் காரணம் என்பதில் சந்தேகமில்லை. எனவே வேண்டும் என்றே எந்த நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வரம்புமீறிய முறையில் ஆதாயம் எதையும் கொடுப்பவர் அல்லது பொது ஊழியர் எவரிடமிருந்தாவது சட்டவிதிமுறைகளை மீறி வரம்பு மீறிய ஆதாயம் அடைபவர்’’ என்று சேர்த்து லஞ்ச ஊழலுக்கான வரையறையை விரிவாக்க வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக ஊழல் தடுப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்காகத் தனி சட்டமுன்வடிவு ஒன்று இரு அவைகளிலும் கொண்டுவருவதற்காக, இரு அவைகளின் நிகழ்ச்சி நிரலிலும் சேர்க் கப்பட்டுவிட்டதாக அரசுத் தரப்பில் உறுதி தரப்பட்ட அதே சமயத்தில், அப்படியானால் அதனை லோக்பால் சட்டமுன்வடிவிலும் இணைத்து, அரசிடமிருந்து ஒப்பந்தம் அல்லது டெண்டர் ஏலத்தைப் பெற்றிட ஊழல்வழிகளில் ஈடுபடும் அனைத்துத் தனியார் நிறுவனங்களையும் அதன் செயல் எல்லை வரையறைக்குள் ஏன் கொண்டுவரக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாதிடப்பட்டது. இது தொடர்பாக ஒரு துல்லியமான திருத்தத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்மொழிந்தோம். ஆயினும் நாடாளுமன்றத்தில் பெரும் பான்மையாக உள்ள இரு கட்சிகளும் - காங்கிரசும் பாஜகவும் - அவர்களுக்கு நிதிஉதவி செய்வோரை, அவர்களுக்குப் படியளப் போரைப் பாதுகாப்பதற்காக - கைகோர்த்து நின்று - இதனைத் தோற்கடித்துவிட்டது.
ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் பக்கத்தை, அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களை லோக்பால் சட்டத்தின் வரையறைக் குள் கொண்டு வராதவரை, அவ்வாறு கொண்டு வந்து அவை அரசியல் கட்சிகளுக்கு அள்ளித் தருவதை ஒழித்துக்கட்டாத வரை, ஊழலை நிச்சயமாக ஒழித்திட முடியாது. உண்மையில், லோக்பால் சட்டம் கொண்டுவருவதுடன், தேர்தல்களில் அபரிமிதமான முறையில்பணபலமும், புஜபலமும் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தக்கூடிய விதத்தில் தீவிரமானமுறையில் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வராதவரை, ஊழலை வலுவானமுறையில் ஒழித்துக்கட்ட முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாதிட்டது.மேலும் தற்சமயம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா என்பதை ஆய்வு செய்திடும் முறை மிகவும் பலவீனமாகவும், அதிருப்தி அளிக்கக்கூடிய விதத்திலுமே இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்த வரை, அரசியலமைப்புச் சட்டத்தின் 105 ஆவது பிரிவு, பேச்சு மற்றும் வாக்களிக்கும் சுதந்திரம் தொடர்பாக அவர்களுக்குப் பாது காப்பை அளிக்கிறது.
இவ்வாறு இவர்களுக்கு அளிக்கப்பட்ட பேச்சு சுதந்திரமும், வாக்களிக்கும் சுதந்திரமும் ஊழலுக்கு வழிவகுக்காமல் இருக்கிறதா என்பதை உத்தரவாதப் படுத்தக்கூடிய விதத்தில் இன்றைய தினம் எதுவும் இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் வேலைகள் குறித்து ஆய்வு செய்த தேசிய ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 105ஆவது பிரி விற்குத் திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் இதனைச் செய்திட முடியும். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் (வாக்களித்தல், பேசுதல் போன்ற) செய்கைகள் மூலம் எவ்வகையிலாவது ஊழல் நடவடிக்கை எதிலாவது ஈடுபட்டார் எனில் அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய விதத்தில் அவரது செய்கையை ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரக்கூடிய விதத்தில் ஒரு சட்டம் தேவைப்படுகிறது. ஐமுகூ-1 அரசாங்கம் ஆட்சி புரிந்த காலத்தில், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை அரசு தன்னிச்சையாக நிறைவேற்ற முடிவு செய்ததை அடுத்து, அதற்கு ஆதரவு அளித்து வந்த இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதற்குப்பின்னர், 2008-ல் மக்களவையில் அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட சமயத்தில் ஆட்சி யிலிருந்து தப்பிப்பிழைப்பதற்காக ஐமுகூ-1அரசாங்கம் ``காசு கொடுத்து வாக்கு’’வாங்குவதற்காக எந்த அளவிற்கு இழிசெயல்களில் ஈடுபட்டதென்பதையெல்லாம் நாடு நன்கறியும்.
எனவே இதுபோன்றதொரு சட்டம் இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியமாக மாறி இருக்கிறது.அதேபோன்று ஊழலை வெளிச்சத் திற்குக் கொண்டுவருவோரை பாதுகாப்பது என்பதும் இன்றையதினம் மிகவும் அத்தியாவசியமாகி இருக்கிறது. ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவோரைக் கண்காணித்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கான ஒரு சட்டமுன்வடிவையும் லோக்பால் சட்டத்துடன் சேர்த்தே கொண்டு வந்திருக்க முடியும். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக லோக்பால் சட்டமுன்வடிவுடன் அதனையும் சேர்த்து எடுத்துக் கொள்ளப்பட முடியவில்லை. லோக்பால் சட்டமுன்வடிவை அவசரத்துடன் நிறைவேற்ற வேண்டிய தேவை இருந்தது. அதேபோன்று, 2010ஆம் ஆண்டு பொது நலன் பகிரங்கப்படுத்தல் (தகவல் பாதுகாப்பு) சட்டமுன்வடிவையும் வலுப்படுத்தி விரைந்து நிறைவேற்றிட வேண்டும். ஒரு வலுவான மற்றும் திறம்பட இயங்கக்கூடிய லோக்பால் நிறுவப்படுவதுடன், ஊழலை உண்மையிலேயே ஒழிக்க வேண்டும் என்று அரசு கருதுமானால், கீழ்க்கண்டவாறு ஆறு பரிந்துரைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கிறது
(1) இதன் வரையறைக்குள் வரக்கூடிய விதத்தில் நீதித்துறையின் நடத்தைகளையும் கொண்டுவந்திட வகை செய்யும் விதத்தில் தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
(2) பொதுமக்கள் குறைபாடுகளைக் களைவதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரஜைகள் சாசனத்தை பாதுகாக்க ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
(3) ஊழலில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் விதத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் 105ஆவது பிரிவு திருத்தப்பட வேண்டும்.
(4) தேர்தல்களில் கிரிமினல்களின் பண பல அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
(5) மாநில அளவில் பணியாற்றும் பொது ஊழியர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடிய விதத்தில் மாநில அளவில் உருவாக்கப்படும் லோக் அயுக்தாக்கள் அமைந்திட வேண்டும்.
(6) வரி ஏய்ப்போரால் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
எனவே, லோக்பால் சட்டத்தை நாடாளுமன்றம் இறுதியாக நிறைவேற்றி இருக்கும் அதே சமயத்தில், அரசாங்கத்தின் உயர்பீடங்களில் நாளும் அதிகரித்து வரும் ஊழல்களை ஒழித்துக்கட்ட வேண்டுமானால் மேலே கூறியவாறு மேலும் பல சட்டங்களை கொண்டுவர வேண்டியது அவசியம்.
ஆயினும், நாட்டில் அங்கிங்கெனாத படி எங்கும் பிரகாசமாய் புரையோடிப் போயிருக்கின்ற ஊழல் என்னும் கொள்ளைநோயை ஒழித்துக்கட்டுவது என்பது இதற் கெதிராக சமூகத்தின் சமூக உணர்வு மட்டத்தையும் ஒட்டுமொத்தமாக உயர்த்துவதன்மூலமே சாத்தியமாக்கிட முடியும். இதற்கு நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளின் அறநெறிப்பண்பும் உயர்ந்த அளவில் இருந்திட வேண்டும். ஆனால் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளில் இடதுசாரிக் கட்சிகள் தவிர மற்ற கட்சிகளில் பெரும்பாலானவற்றிடம் இதனைக் காண முடியவில்லை. நாட்டிலுள்ள இரு பிரதான அரசியல் கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் ஊழல் புரிவதில் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுவதை நாம் பார்க்கிறோம். எனவே ஊழல் சேற்றில் உழலும் அரசியல் கட்சிகளிடமிருந்து நம் சமூகத்தைக் கழுவித் தூய்மைப்படுத்தக்கூடிய விதத்தில் ஓர் அரசியல் மாற்றே இன்றைய அவசியத் தேவையாகும்.
(தமிழில்: ச.வீரமணி)

No comments: