Friday, November 23, 2012

அங்கன்வாடி ஊழியர்கள் போன்ற மதிப்பூதியம் பெறும் ஊழியர்கள் - குறைந்தபட்ச ஊதியம் கோரி ‘மகாமுற்றுகை’ப் போராட்டம்




புதுதில்லி, நவ. 23-
மதிப்பூதியம் என்றும் ஊக்கத்தொகை என்றும் கூறி கோடிக்கணக்கான ஊழியர்களை ஏமாற்றிச் சுரண்டி வரும் மத்திய அரசு, தங்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று  வலியுறுத்தி வரும்  நவம்பர்.26 - 27 தேதிகளில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்துகிறார்கள். இப்போராட்டத்தில் நாடு முழுவதுமிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள். 
இது தொடர்பாக புதுதில்லியில் உள்ள சிஐடியு அலுவலகமான பிடிஆர் பவனில் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொதுச் செயலாளர் தபன்சென் மற்றும் செயலாளர் ஹேமலதா கூறியதாவது:
’’நாட்டில் போலியோ என்கிற கொடும் நோய் இன்றைய தினம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இதற்கு முக்கிய காரணம் நாட்டில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் போன்று கீழ்மட்டத்தில் வேலை செய்யும் ஊழியர்களாகும். அங்கன்வாடி ஊழியர்கள் என்றும், ஆஷா ஊழியர்கள் என்றும், அனைவருக்கும் கல்வி போன்று பல்வேறு திட்டங்களிலும் படித்த இளைஞர்களையும், இளம்பெண்களையும் வேலைக்கு அமர்த்தி மத்திய அரசு வேலை வாங்கி வருகிறது. ஆனால், அவர்களை ஊழியர்கள் என்று அங்கீகரிக்காமல், அவர்கள் அனைவருக்கும் ‘சமூக ஆர்வலர்கள்’, ‘சமூக செயல்வீரர்கள்’, ‘நண்பர்கள்’, ‘விருந்தினர்கள்’, ‘யசோதாக்கள்’, ‘மமதாக்கள்’ என்று பெயரிட்டு அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் கூட அளிக்காமல் மதிப்பூதியம்,  தொகுப்பூதியம் என்ற பெயர்களில் அற்பத் தொகையை அளித்து வருகிறது. 
நாட்டில் போலியோ ஒழிக்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர்கள் அங்கன்வாடி ஊழியர்களாவர். அதேபோன்று கிராமப்புறங்களில் கர்ப்பிணிப் பெண்கள் இறப்பு விகிதம் அநேகமாக இல்லாமல் ஒழிக்கப்பட்டிருப்பதற்கும் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆஷா என்ற பெண் ஊழியர்களாவர். ஆனால் இவர்களுக்கு நிரந்தர ஊதியம் எதுவும் கிடையாது. மாறாக ஒரு பெண் கருவுற்றபின் அவர்து கர்ப்ப காலமான பத்து மாதங்களுக்கும் அவரை முறையாகக் கவனித்து, உதவி செய்து, பிரசவ காலத்தில் மருத்துவமனையில் சேர்க்கும் வரை உதவி செய்தால், ஓர் ‘ஆஷா’ ஊழியருக்கு 350 ரூபாய் (இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது) என்று வழங்கப்படுகிறது. இவ்வாறு சமூகத்தில் ஆணி வேராக இருக்கக்கூடிய கிராமங்களில் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் இவர்களுக்கு அரசாங்கம் வண்ண வண்ணப் பெயர்களிட்டு அழைத்தபோதிலும், தொழிலாளர் என்ற அந்த°தை மட்டும் அளிக்க மறுத்து வருகிறது. 
இதனை நாட்டிற்குத் தெரிவிக்கும் வண்ணம் நாடாளுமன்ற வீதியில் வரும் நவம்பர்  26-27 தேதிகளில் இப்பெண் ஊழியர்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்து முற்றுகைப் போராட்டத்தை மேற்கொள்கின்றனர். 
வரும் அனைவரையும் ஊழியர்கள் என்று அங்கீகரித்து, மதிப்பூதியம், ஊக்கத்தொகை போன்று கூறி ஏமாற்றாமல் அனைவரும்  மத்தியத் தொழிற்சங்கங்கள் கோரியுள்ளவாறு மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறையாது குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், ஓய்வூதியம், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, சுகாதாரக் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்புப் பயன்கள் அளிக்கப்பட வேண்டும், அனைவரையும் முறைப்படுத்த வேண்டும் என்று கோரி இவர்கள் முற்றுகைப்போராட்டத்தை நடத்துகிறார்கள். 
இவ்வாறு ஏ.கே.பத்மநாபன், தபன்சென், ஹேமலதா ஆகியோர் கூறினார்கள்.
(ந.நி.)

No comments: