Wednesday, March 16, 2011

மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல-இடது ஜனநாயக முன்னணியை மீண்டும் வெற்றிபெறச் செய்திடுவோம்




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் மேற்கு வங்கத்தில் அமைந்த இடது முன்னணியும் கேரளாவில் அமைந்த இடது ஜனநாயக முன்னணியும் தற்போதுள்ள முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் இந்திய அரசாங்கத்தின் கீழேயே, அதன் அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டே சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு எண்ணற்ற சாதனைகளைப் புரிந்திருக்கின்றன. ஆயினும் ஆளும் வர்க்கங்கள் தங்கள் சுரண்டலைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காக இதனை வேண்டுமென்றே மறைத்து வைத்திருக்கிறது. மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநில அரசுகள் உயர்த்திப் பிடித்துள்ள அரசியல் அறநெறி மற்றும் உயர்ந்த அளவிலான அவற்றின் தரம் இதர பகுதிகளில் ஆளும் வர்க்கங்கள் நம் நாட்டின் வளங்களைச் சூறையாடுவதற்கு முற்றிலும் எதிரான முறையில் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. எனவேதான் இவ்விரு அரசாங்கங்களும் நாட்டில் ஜனநாயக இயக்கத்தின் வழிகாட்டிகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.

உலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், வேறெங்கும் நடைபெறாததொரு மகத்தான வரலாற்றைக் கேரள மக்கள் உருவாக்கி இருந்தார்கள். 1957இல் கேரள மாநிலம் உருவானபின், நடைபெற்ற முதல் தேர்தலில் மக்கள் ஒரு கம்யூனிஸ்ட் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை, ஆளும் வர்க்கங்கள், மக்களின் பேராதரவுடன் சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளி வர்க்கத்தின் கட்சியால் தலைமை தாங்கப்படும் ஒருஅரசாங்கத்தை சகித்துக் கொள்ளமுடியாது, ஜனநாயக விரோதமாக டிஸ்மிஸ்செய்தபோதிலும், இடதுசாரி அரசாங்கம் கடைப்பிடித்த மக்கள்நலஞ் சார்ந்த மாற்றுக் கொள்கையானது கேரளத்தின் அரசியலிலும் வளர்ச்சியிலும் நிலைத்து நிற்கக்கூடிய அளவிற்கு, உண்மையில் இந்தியா பூராவிற்குமே, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கேரள மாநிலமானது, மனித வள வளர்ச்சியிலும், சமூக வளர்ச்சியிலும் ஓர் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ள மாநிலமாகும், சில அம்சங்களில், மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளைவிட முன்னேறியுள்ள பகுதியாகும். கேரளாவில், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமானது மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. முறைசாராத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம், முறைசாராத் தொழிலில் ஈடுபட்டுள்ள கர்ப்பிணிப் பெண் தொழிலாளர்களுக்கு ஒரு மாத மகப்பேறு விடுப்பு, இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம், நீண்டுகாலம் நீடித்துள்ள நோய்களுக்குக்கூட இலவச சுகாதாரக் காப்பீடு போன்ற திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. பொது விநியோக முறையில் மட்டுமல்லாது, ஒரு மிக விரிந்த அளவிலான வகையில் நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட்டு அவற்றில் 13 அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக எவ்வித விலை உயர்வும் இல்லாமல் சீராக வழங்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் அமல்படுத்தப்பட்டு வரும் இஎம்எஸ்வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 50 லட்சம் வீடுகள் கட்டப்படுவது முழுமை யடைந்துவிட்டால், கேரளாவில் எந்தவொரு குடும்பமும் வீடில்லாமல் இருக்காது. கேரளாவில் 1957இல் அமைந்த இஎம்எஸ்அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப் பரவல் திட்டம் அங்கே ஜனநாயகத்தை நன்கு வலுப்படுத்தி இருக்கிறது. ஜனநாயக அமைப்பில் மக்கள் முழுமையாகப் பங்கேற்கும் நடவடிக்கைகள் கேரள மக்களுக்கு விரிவான முறையில் பயனளித்திருக்கிறது.

இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் கடைப்பிடித்த மாற்றுக் கொள்கைத் திசைவழி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உதாரணமாக, மத்திய அரசாங்கம் லாபம் ஈட்டும் பொதுத்துறைகளைக் கூடத் தனியாருக்குத் தாரை வார்க்கத் துடித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் வெற்றி நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களைக் கூட புனரமைத்து வலுவடைய வைத்திருக்கின்றன. 2005-06ஆம் ஆண்டில் 90 கோடி ரூபாய்கள் நட்டத்தில் இயங்கிய தொழில் பிரிவுகள் 2009-10ஆம் ஆண்டில் 240 கோடி ரூபாய்கள் லாபத்தில் இயங்கக் கூடியவைகளாக மாறி யிருக்கின்றன. இந்த உபரித் தொகை நடப்பில் உள்ள பொதுத் துறை தொழில் பிரிவுகள் விரிவாக்கத்திற்காக மீண்டும் முதலீடு செய்யப்பட்டு, புதிதாக எட்டு தொழில் பிரிவுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அநேகமாக நாட்டில், கேரளாவில் மட்டுமே இக்காலத்தில் புதிதாக பொதுத்துறை தொழில் பிரிவுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் மத்தியில் ஆட்சியில் உள்ள முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் ஆட்சி அளித்துள்ள குறைந்தபட்ச அதிகார வரம்புக்குள்ளேயே கூட, மக்களுக்குக் குறிப்பிடத்தக்க அளவிற்குப் பயனளிக்கக்கூடிய திட்டங்களை, மக்கள் நலஞ்சார்ந்த திட்டங்களை, மாநில அரசுகளால் நிறைவேற்ற முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை கேரள இடது ஜனநாயக முன்னணி மெய்ப்பித் திருக்கிறது. இதனால்தான் சமீபத்தில் வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வுகள் பல, கேரளாவில் ஆட்சிக்கு எதிரான உணர்வு (யவேi-inஉரஅநெnஉல) மக்கள் மத்தியில் இல்லை என்று தெரிவிக்கின்றன. கேரள மாநிலத்தில் ஒருமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தால், மறுமுறை காங்கிரஸ்தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெறும் என்ற நிலை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்த போதிலும், இந்த முறை நாம் மேலே விவரித்த காரணங்களால் அதனை மாற்றி அமைத்திட வேண்டும். கேரள மக்கள் இதுநாள்வரைப் பெற்று வந்த முக்கியமான ஆதாயங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும், அவை மேலும் விரிவான அளவில் எடுத்துச் செல்லப்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது அவசியம்.

இவ்வாறு சொல்லும் அதே சமயத்தில், நம்மக்களுக்குச் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, மாற்றுக் கொள்கைத் திசைவழியில் அகிலஇந்திய அளவிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறத் தேவையில்லை.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: