Wednesday, March 16, 2011

இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையைப் புனரமைப்பு செய்திட-போதிய நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்:மக்களவையில் பி.ஆர். நடராஜன் கோரிக்கை

புதுதில்லி, மார்ச் 16-
இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையைப் புனரமைப்பு செய்திட போதிய நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பி.ஆர். நடராஜன் பேசியதாவது:
‘‘தமிழ்நாட்டில் ஊட்டியில் இருக்கின்ற இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை எக்ஸ்ரே பிலிம்கள் உட்பட பல மிகவும் கேந்திரமான போட்டோ பிலிம்களை உற்பத்தி செய்து வரும் பொதுத்துறை நிறுவனமாகும். 1991களில் இதன் ஊழியர் எண்ணிக்கை 4500 ஆகும். இப்போது 800ஆக சுருங்கி விட்டது. இவர்களில் 55 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் தலித்துகள் மற்றும் பழங்குடியினராவார்கள். மேலும் இந்நிறுவனம் பல்வேறு வழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.
அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக இந்நிறுவனம் நலிவடையும் நிலைக்கத் தள்ளப்பட்டுவிட்டது. இதனை இயற்கையாக சவக்குழிக்கு அனுப்பிட அரசு உத்திகளை மேற்கொண்டு வருவதா நான் கருதுகிறேன்.

பட்ஜெட் மீது நிதியமைச்சர் உரையாற்றுகையில் எச்பிஎப் நிறுவனத்தை தமிழக அரசுடன் கலந்து பேசி புனரமைப்பு செய்திட வேண்டும் என்று ஒப்புக் கொண்டுள்ளபோதிலும், அதற்காக கடந்த ஆண்டு 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததாகக் கூறியுள்ள போதிலும், 2011-12ஆம் ஆண்டில் அதற்காக நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யாதிருக்கிறார். நிதி ஒதுக்கீடு சுத்தமாக இல்லாமல் புனரமைப்பு எப்படிச் சாத்தியம் என்று புரியவில்லை. எனவே போதிய நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு எச்பிஎப் நிறுவனத்தை புனரமைத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

20 ஆண்டு காலமாக ஊதிய உயர்வு இல்லாமல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிக்கும் தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசுமுன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார்.
--

(ச.வீரமணி)

No comments: