Saturday, July 10, 2010

அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்



விலைவாசி உயர்வுக்கு எதிராக ஜூலை 5 அன்று நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெற்றி பெற்றதானது, ஆட்சியில் அங்கம் வகிப்போர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மிகப் பெரும்பான்மையான சாமானிய மக்கள் மத்தியில் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தன்னெழுச்சியாக வெடித்துள்ள கோபத்தைப் புரிந்துகொண்டு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திடவும், சாமானியர்களின் வாழ்வில் மேம்பாட்டைக் கொணரவும் உரிய முறையில் நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, காங்கிரசும், ஆட்சியில் அங்கம் வகிக்கும் அதன் சில கூட்டணிக் கட்சிகளும் பெறுநிறுவன ஊடகங்கள் மற்றும் பெரு நிறுவனங்களின் காலை நக்கிப் பிழைத்திடும் கூலி எழுத்தாளர்களின் உதவியுடன் நம்மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு நம்மீது சேற்றை அள்ளிவீசுவதில், திரிணாமுல் காங்கிரசும் அதன் தலைவரும் முதல் பரிசினைப் பெறுகிறார்கள். மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தம் வழக்கமாக நடைபெறும் சமயங்களை விட இந்தத் தடவை மக்கள் மத்தியில் தன்னெழுச்சியான பிரதிபலிப்பின் காரணமாக முன்னெப்போதையும் விடப் பெருமளவில் அனைத்துத் தரப்பு மக்களும், மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மிகவும் ஆவேசத்துடன், வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதைக் கண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், மார்க்சிஸ்ட் கட்சியானது ‘‘வகுப்புவாதக் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டுவிட்டதாக’’க் குற்றஞ் சாட்டியிருக்கிறார்.

இத்தகைய குற்றச்சாட்டைக் கூறும் நபர் எப்படிப்பட்டவர்? நாட்டில் முதன்முதலாக 1998இல் மத்தியில் வாஜ்பாயின் தலைமையின் கீழ் வகுப்புவாத சக்திகளின் ஆட்சி அமைவதற்கு வழிவகுத்துத் தந்த நபரிடமிருந்துதான் இவ்வாறு குற்றச்சாட்டு வந்திருக்கிறது. இப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தின் வகிக்கும் அதே துறையை (ரயில்வே துறையை) அப்போதும் பெற்றுக் கொண்டு வகுப்புவாத சக்திகளுக்குத் துணையாக நின்று செயல்பட்டவர். பின்னர் 2001இல் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றபோது காங்கிரசுடன் கை கோர்க்க வேண்டும் என்பதற்காக, தேசி ய ஜனநாகக் கூட்டணியைக் கைகழுவிவிட்டு வந்தவர். பின்னர் காங்கிரஸ் கூட்டணி மக்களால் நையப் புடைக்கப்பட்டபோது, உடனடியாகக் காங்கிரசைக் கைவிட்டு, தீண்டும் தேஜகூட்டணியில் சேர்ந்து கொண்டவர். அதுவும் எப்படிப்பட்ட பின்னணியில்? குஜராத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மதவெறி சக்திகளால் வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்ட சூழ்நிலையில், அவர்களுடன் போய் சேர்ந்து கொண்டவர். இவ்வாறு மாறி மாறி சந்தர்ப்பவாத நிலை எடுத்து, பாஜக-வினருடன் மிகநெருங்கிய கூட்டாளியாக இருந்தவர்தான் மார்க்சிஸ்ட் கட்சி மீது ‘‘பாஜக-வுக்குத் துணை போவதாக’’த் துணிந்து தாக்குதல் தொடுக்கிறார்.

நாம் நேரடியாகவே விஷயத்திற்கு வருவோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இதர மதச்சார்பற்ற எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து, அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தன. பின்னர்தான், பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் அதே தேதியில் அதேபோன்ற தொரு அறைகூவல் விடுத்தன. மேலும், இடதுசாரிக் கட்சிகள் விலைவாசி உயர்வுக்கு எதிராக கடந்த ஓராண்டு காலமாக நடத்தி வந்த பிரச்சாரத்தின் உச்சகட்டமாகத்தான் இப்போது அகில இந்திய வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. பலமுறை இப்பிரச்சனை நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது. ஆயினும், அரசாங்கம் இதைப்பற்றிக் கவலைப்படாது சொரணையற்று இருந்ததால், இடதுசாரிக் கட்சிகள் வெகுஜனக் கிளர்ச்சிகள் மற்றும் போராட்டங்கள் மூலமாக அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கத் தீர்மானித்தன. 2010 மார்ச் 12 அன்று ‘நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி’ என்கிற மாபெரும் இயக்கம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 8 அன்று ‘சிறை நிரப்பும்’ போராட்டம் நாடு முழுதும் சக்தியாக நடந்தது. இதில் இடதுசாரிக் கட்சிகளின் தொண்டர்கள் 25 லட்சத்திற்கும் மேலானோர் கைதானார்கள். இதனைத் தொடர்ந்து இடதுசாரிக் கட்சிகள் சார்பில் ஏப்ரல் 27 அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. இப்போதைய வேலைநிறுத்தம், நாடாளுமன்றத்தில் நாம் முன்வைத்த வாதங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே நாம் நடத்திய எதிர்ப்பு இயக்கங்கள் அனைத்தையும் அரசாங்கம் உதாசீனம் செய்துவிட்டு பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மீண்டும் உயர்த்தியதால், நடத்தப்பட்டது.

மதவெறிக்கு எதிரான போராட்டத்திலும், நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பை உயர்த்திப் பிடிப்பதிலும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு குறித்து, நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். 2004 பொதுத் தேர்தல்களின்போது, மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 61 பேர்களில் 54 பேர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றவர்கள் என்பது நினைவுகூரப்பட வேண்டும். ஆயினும், மீண்டும் அரசு அமைக்க மதவெறி சக்திகளுக்கு இடம் அளித்திடக் கூடாது என்ற காரணத்திற்காக, இடதுசாரிக் கட்சிகள் அதே காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. இடதுசாரிகள் பலமாகவுள்ள மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுராவில் இடதுசாரிகளுக்குப் பிரதான எதிர்க்கட்சி காங்கிரஸ் என்ற நிலை இருந்தபோதிலும், இவ்வாறு நிலைப்பாடு எடுக்கப்பட்டது. இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியானது, நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பினை உயர்த்திப்பிடிப்பதில் உறுதி பூண்டிருக்கிறது. ஆனால் முன்பு பாஜகவுடன் உறவு கொண்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் மதச்சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறுவதற்காக நம்மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறது.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக பல காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் இவ்வாறு பொய்யாகப் புனையப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் தான், 1996இல் வாஜ்பாய் தலைமையில் 13 நாட்களே நீடித்த அரசாங்கத்தைக் கீழிறக்குவதற்காக ஓர் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை அமைத்திட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் ஆற்றிய முக்கிய பங்களிப்பினை நினைவுகூர்வது அவசியமாகும். அப்போது காங்கிரஸ் கட்சியானது, நாட்டுக்கும் குடியரசுத் தலைவருக்கும் இப்போது ஏற்பட்டுள்ள ‘மதச்சார்பற்ற கூட்டணி’ ஆட்சிக் காலம் முழுதும் நீடிக்கும் என்று ஓர் உறுதிமொழியை அளித்தது. ஆயினும், அது தன் சொந்த உறுதிமொழிக்குத் துரோகம் இழைத்து, 1998இல் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. அதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்திட வழிவகுத்துத் தந்தது. அவ்வாறு காங்கிரஸ் கட்சி அப்போது துரோகம் இழைக்காது இருந்திருக்குமானால், மதவெறி சக்திகள் 1998இல் ஆட்சிக் கட்டிலில் ஏறும் வாய்ப்பே வந்திருக்காது.

இத்தகைய முட்டாள்தனமான அரசியல் தில்லுமுல்லுகளையும், கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கான தேவை ஏன் ஏற்பட்டது என்பதை ஆராய்வது அவசியமாகும். அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் விஷம்போல் ஏறிக் கொண்டிருப்பதைக் கண்டித்தே இவ்வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக மக்களிடம் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடே, வேலை நிறுத்தம் இந்த அளவிற்கு வெற்றி பெற்றதற்குக் காரணமாகும். உண்மையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக மற்ற பொருள்களின் விலைகளும் ஏற்கனவேயே உயர ஆரம்பித்துவிட்டன. மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான இத்தகைய தாக்குதல்களின் காரணமாகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் இதர மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து அரசு பிறப்பித்த விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி வெகுஜன எதிர்ப்பு இயக்கங்களுக்கு அறைகூவல் விடுத்திருக் கின்றன. மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதும் அவற்றை மேம்படுத்துவதும் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நடைமுறையின் அடிப்படை சாரமாகும்.
நாம் சென்ற வாரம் இதே பகுதியில் தெரிவித்ததைப்போல, 1996-98இல் ஐக்கிய முன்னணி ஆட்சி செய்த சமயத்தில், பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான முன்மொழிவு, கொண்டுவரப்பட்ட சமயத்தில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி மீதான அனைத்து வரிகளும் ரத்த செய்யப்பட்டது. இந்த முன்மொழிவானது 2002 ஏப்ரலில் வாஜ்பாய் அரசாங்கத்தால், இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைக்காமல், அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் 21 தடவை பெட்ரோலும், 24 தடவை டீசலும் விலை உயர்த்தப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதனுடன் இணைந்திருந்த மதச்சார்பற்ற கட்சிகளும் இத்தகைய விலைஉயர்வுகள் மூலம் மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் கூடுதல் சுமைகளை ஏற்றியதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு இயக்கங்களை நடத்தின. பல சமயங்களில் மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் நடத்திய எதிர்ப்பியக்கங்களில் இதர கட்சிகளுடன் காங்கிரசும் சேர்ந்து கொண்டது. 2004 பிப்ரவரி 21 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமானது, பொதுத் தேர்தல் நெருங்குவதை அடுத்து மக்களை எதிர்நோக்க அஞ்சி, பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் வெளியிட்டது. அதில், ‘‘இனிமேல் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் உயராது என்ற உறுதிமொழியை’’ அளித்தது.

இதிலிருந்து ஓர் உண்மையை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். யார் ஆட்சியில் இருந்தாலும், மக்கள் மீது பொருளாதாரச் சுமைகளை யார் ஏற்றினாலும், மக்கள் நலன்களைப் பாதிக்கக்கூடிய கொள்கைகளை எவர் அமல்படுத்த முயற்சித்தாலும், அவற்றிற்கெதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமரசமேதுமின்றி, மக்களை அணிதிரட்டிப் போராடும். நம் அரசியல் எதிரிகளின் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத நிலைகளைப் போலல்லாது, மக்கள் மீதான தாக்குதல் தொடுக்கப்படும்போதெல்லாம் ஆட்சியிலிருப்பவர்களுக்கு அந்த சமயத்தில் ஆதரவு அளித்துக்கொண்டிருந்தாம் சரி, இல்லையாயினும் சரி, மார்க்சிஸ்ட் கட்சி அத்தகைய தாக்குதல்களை எதிர்த்து உறுதியாகப் போராடும். மக்களின் நலன் ஒன்று மட்டும்தான் - அவர்களின் முன்னேற்றம் ஒன்று மட்டும்தான் - மார்க்சிஸ்ட் கட்சியின் உறுதியான ஐயத்திற்கிடமில்லாத சங்கல்பமாகும். மதவெறி சக்திகளினால் நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பின் மீது ஏவப்படும் தாக்குதலை எந்த அளவிற்கு உறுதியோடு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்து நின்றுப் போராடுகிறதோ அதே அளவிற்கு, அத்துடன் சேர்த்தே, மக்களின் மீதான தாக்குதலுக்கு எதிராகவும் போராடும்.

(தமிழில்: ச. வீரமணி)

No comments: