Thursday, April 1, 2010

கட்டைப்பஞ்சாயத்துக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்:
அர்யானா மாநிலம், கர்னால் அமர்வு நீதிமன்றம், ‘‘கருணைக் கொலை’’ என்ற பெயரில் கட்டைப் பஞ்சாயத்து நடத்தி, இளம் ஜோடிகளை மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் கொன்ற ஐவருக்கு மரண தண்டனையும், மற்றொருவருக்கு ஆயுள் தண்டனையும் அளித்துத் தீர்ப்பளித்திருப்பதானது, அர்யானா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆழமான முதல் நடவடிக்கையாகும். 2007 ஜூனில் திருமணம் செய்து கொண்ட மனோஜ் மற்றும் பாப்லி என்னும் இரு இளம் ஜோடிகள் மிகவும் கொடூரமான முறையில் கொலையுண்ட வழக்கில் இத்தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. நீதித்துறையின் மூலம் வந்துள்ள இந்நடவடிக்கையானது, பத்தாம்பசலித்தனமான சமூகப் பழக்க வழக்கங்களையும் சாதிய நடைமுறைகளையும் உதறித் தள்ளும் இளம் தம்பதியினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கொலைபாதக மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திட, அர்யானா மாநில அரசாங்கத்தையும் அதன் நிர்வாகத்தையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தூண்டிடும் என நம்புவோம். இத்தகைய ‘கருணைக் கொலைகள்’ அர்யானா மாநிலத்திற்குள் மட்டும் நடைபெறவில்லை. மேற்கு உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு பரிமானங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

சாதிய ரீதியாக நடைபெறும் கட்டைப் பஞ்சாயத்துக்கள் இளம் தம்பதிகளை அவர்கள் ஒரே கோத்திரத்திற்குள் திருமணம் செய்து கொண்டால், அத் திருமணம் சகோதரர்களுக்கிடையே நடைபெற்றதாகக் கருதி, அவர்கள் சமூகக் கட்டமைப்பை மீறி விட்டார்கள் என்று கூறி அவர்களுக்கு மரண தண்டனையை விதிக்கின்றன. இத்தகைய திருமணங்கள் தலித் மற்றும் உயர்சாதியினருக்கிடையே எனில், இத்தகைய கட்டைப் பஞ்சாயத்துக்கள் அளித்திடும் தண்டனைகள் மேலும் கொடூரமான முறையில் அமைகின்றன. இத்தகைய ‘கருணைக் கொலைகளை’ ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டும் மேற்கொள்வதில்லை. இந்து - முஸ்லீம் இடையிலான திருமணம் கூட மிகவும் கொடூரமான முறையில் எதிர்கொள்ளப்பட்டதை, 2007 ஜூலையில் மீரட் நகரில், அஃப்சனா என்னும் முஸ்லீம் பெண், மனோஜ் என்னும் இந்து ஆணைத் திருமணம் செய்த வழக்கில் பார்த்தோம். அவர்கள் இருவரையும் பெண்ணின் குடும்பத்தினர் கொன்று போட்டனர்.

சாதிவெறி மற்றும் மதவெறியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள், பெண்கள் குறித்த மோசமான அணுகுமுறையின் விளைவாகவே நடைபெறு கின்றன. பெண்கள், குடும்பத்தில், சாதியில் மற்றும் இனத்தில் வெறும் சொத்துக் களாகவே பார்க்கப்படுகிறார்கள். பெண்களுக்குத் தங்கள் உடம்பு குறித்து அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. பெண்களின் ‘‘புனிதம்’’ (உhயளவவைல) என்பது அப் பெண் பிறந்த இனத்தின் ‘‘கௌரவம்’’ (“hடிnடிரச”)ஆகக் கருதப்படுகிறது. இத்தகைய தந்தை வழிச் சமுதாய, மகளிர் விரோத கண்ணோட்டமானது குடியரசு இந்தியாவில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளுக்கும், அனைத்து மாண்புகளுக்கும் எதிரானதாகும்.
இத்தகைய நிலப்பிரபுத்துவ கண்ணோட்டமும், காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளும் நாட்டின் தலைநகரின் ஒருசில கிலோ மீட்டர் தூரத்திலேயே இன்னமும் தொடர்கின்றன. முதலாளித்துவ வளர்ச்சியோ, அதன் விளைவாக கிராமப்புறங்களில் பணக்காரர்கள் அதிகமாகியுள்ளதோ இத்தகைய சாதி வெறியர்களின் கட்டைப் பஞ்சாயத்துக் களின் செல்வாக்கைக் குறைத்திட வில்லை. காவல்துறையும், நிர்வாகமும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும்கூட உடந்தையாக இருந்து இவர்களின் கொடூரமான நடவடிக்கைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்கள். அர்யானாவில் பிரதான கட்சிகளாக இருக்கும் காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய லோக் தளமும் கட்டைப் பஞ்சாயத்துக்களுக்கு எதிராக நிலைப்பாட்டினை எடுக்க மறுத்து வருகின்றன. ஏனெனில் ஆதிக்க சாதியினரைப் பகைத்துக்கொள்ள அவை விரும்பவில்லை.
இத்தகைய கட்டைப் பஞ்சாயத்துக்கள் சட்டவிரோதமானவை என்று அறிவித்து சட்டமியற்ற வேண்டும் என்றும், இவ்வாறு ‘‘கருணைக் கொலைகள்’’ (hடிnடிரச மடைடiபேள) புரிவோர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை மீது மத்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுத்திட வில்லை. சமீபத்தில்தான் மத்திய உள்துறை அமைச்சர் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான ‘‘கருணைக் கொலைகளுக்கு’’ எதிராகக் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித் திருக்கிறார். இதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.
கட்டைப் பஞ்சாயத்துக்களின் சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அர்யானா மாநிலப் பிரிவு மிகவும் துணிச்சலுடன் போராட்டங்ளை மேற்கொண்டது. மனோஜ் மற்றும் பாப்லி கொல்லப்பட்ட சம்பவங்கள் மீது உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, அக்குடும்பத்தினருடன் இணைந்து மாதர் சங்கம் தொடர்ந்து போராடியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர்யானா மாநிலப் பிரிவும் மற்ற கட்சிகள் போல் ஒதுங்கி நின்று விடாது, கட்டைப் பஞ்சாயத்துக்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியுடன் நின்றது.

இத்தகைய கட்டைப் பஞ்சாயத்துக்களுக்கு எதிராகவும், ‘‘கருணைக் கொலைகளுக்கு’’ எதிராகவும் உரிய சட்டம் இயற்றவேண்டும் என்றும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்படும் கட்டைப் பஞ்சாயத்துக்களைச் சட்டவிரோதமானவை என்று அறிவிக்க வேண்டும் என்றும் அனைத்து ஜனநாயக சக்திகளும் கோர வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது உறுதியான மற்றும் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். தங்கள் விருப்பம்போல் திருமணம் செய்து கொள்ளும் இளம் தம்பதிகளின் உரிமைகளைப் பாதுகாத்திட அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். கட்டைப் பஞ்சாயத்துக்களின் கொடுங்கோன்மை செயல்பாடுகள், படுபிற்போக்குத்தனமான, மகளிர் விரோத சமூகப் பழக்க வழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டிய தருணம் வந்துவிட்டது. நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளும் இத்தகைய சமூக இழிவுகளுக்கு எதிராக மக்களின் உணர்வைத் தட்டி எழுப்பும் விதத்தில் விடாது பிரச்சாரம் செய்திட முன்வர வேண்டியது அவற்றின் கடமையாகும்.

(தமிழில்: ச. வீரமணி)

No comments: