Tuesday, September 8, 2015

ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் மோடி அரசு: ஆபத்தின் அறிகுறி




                                                                     சீத்தாராம் யெச்சூரி

(முந்தைய ஐமுகூ அரசாங்கத்தை ஒருரிமோட் கண்ட்ரோல்மூலம் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அடிக்கடி பிரதமர் நரேந்திரமோடி குறை கூறிக் கொண்டிருப்பார். அதுபோல் அல்லாமல் இப்போதைய பாஜக தலைமையிலான அரசாங்கத்தை ஆர்எஸ்எஸ் இயக்கம் நேரடியாகவே தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கிறது.)
சமீபத்தில் தில்லியில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பிரதமரும் அவரதுஅமைச்சரவை சகாக்களும் கலந்து கொண்டதும், அவர்களின் பணிகள் குறித்து ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆய்வு செய்ததும், பாஜக-வானது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அரசியல் அங்கம்தானே தவிர, வேறெதுவும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை தங்களுடைய குறிக்கோளான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் இந்து ராஷ்ட்ரம்ஆக மாற்ற வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்கு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளஅமைச்சர்கள் எப்படி முன்வந்தார்கள்என்றுநியாயமாகவே கேள்விகள் எழுந்துள்ளன. ஆர்எஸ்எஸ் மாநாடு நடைபெற்ற அதே சமயத்தில் வேறு பல இடங்களில்நடைபெற்ற தொழில் முனைவோர் சங்கங்களின் கூட்டங்களில் பங்கேற்றஅமைச்சர்கள் இவ்வாறான விமர்சனங்களைப் புறக்கணித்திருக்கிறார்கள்.
முந்தைய ஐமுகூ அரசாங்கத்தை ஒருரிமோட் கண்ட்ரோல்மூலம் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அடிக்கடி பிரதமர் நரேந்திரமோடி குறை கூறிக் கொண்டிருப்பார். அதுபோல் அல்லாமல் இப்போதைய பாஜக தலைமையிலான அரசாங்கத்தை ஆர்எஸ்எஸ் இயக்கம் நேரடி யாகவே தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கிறது.
வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம். இந்தியாவின் முதல் உள்துறை அமைச்ச ராக இருந்த சர்தார் பட்டேல், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்தார். 1948 பிப்ரவரி 4 அன்று வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் அறிக்கையில் அவர் கூறியிருந்ததாவது: சங் பரிவாரத்தின் ஆட்சேபணைக்குரிய மற்றும் தீங்கு பயத்திடும் நடவடிக்கைகள் எவ்விதத் தடைகளும் இன்றி தொடர்ந்திருக்கின்றன. சங் பரிவாரத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட வன்முறைக் கலாச்சாரம் பல அப்பாவி உயிர்களைப் பலிவாங்கி இருக் கிறது.  இதில் கடைசியாகப் பலியானது, மிகவும் மதிப்புமிக்க காந்திஜியாவார்.’’
ஆர்எஸ்எஸ் இயக்கம் தங்கள் மீது விதித்துள்ள தடையை விலக்கிக் கொள் வதற்காக பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும் என்று அரசாங்கத்தைக் கோரி வந்தது. 1948 நவம்பர் 14 அன்றுபட்டேலின் உள்துறை அமைச்சகம் ஆர்எஸ்எஸ் தலைவர் எம்எஸ் கோல்வால்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து, ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது கோல்வால்கர் அளித்த பல வஞ்சகமான வாக்குறுதிகள் குறித்தும் அதில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கூறுவதற்கும், அவர்களைப் பின்பற்றுவோர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது,’’ என்று குறிப்பிட்டு, பட்டேல் தடையை விலக்கிட மறுத்துவிட்டார்.
ஆர்எஸ்எஸ் இயக்கம்ஒரு கலாச்சார ஸ்தாபனமாகமட்டுமேஇருந்திடும் என்றும், ‘ரகசிய நடவடிக்கைகளைக் கைவிடும்என்றும், ‘வன்முறையைத் துறந்திடும்என்றும் அரசாங்கம் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் மிகவும் வளைந்து கொடுத்து, ஏற்றுக் கொண்ட பிறகுதான், 1949 ஜூலை 11 அன்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. அன் றையதினம் அது அளித்திட்ட அத்தனை நிபந்தனைகளையும்இன்றைய தினம் அது அப்பட்டமாக மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆர்எஸ்எஸ் இயக்கம் அரசியல் அரங்கில் செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையைப் புறந்தள்ளுவதற்காக, தனக்கென்று ஓர் அரசியல் கட்சியை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கியது. நேருவின் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்திட்ட ஷியாமா பிரசாத்முகர்ஜியின் உதவியுடன் பாரதிய ஜனசங்கத்தை ஆரம்பித்திட தன் ஊழியர்களை அனுப்பி வைத்தது. அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் தீன தயாள் உபாத்யாயா, அடல் பிகாரி வாஜ்பாயி, எல்கே அத்வானி மற்றும் எஸ்எஸ் பண்டாரி ஆகி யோர் அடங்குவர். (ஆதாரம்: பாசு, தத்தா, சர்க்கார் மற்றும் சென், காக்கி அரைக் காலா டைகள்: காவிக்கொடிகள், 1993, , 48)
1977இல் ஜன சங்கம் ஜனதா கட்சி யுடன் இணைந்தது. இந்திராகாந்தி கொண்டு வந்த அவசரநிலை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமைந்த மத்திய அரசாங்கத்தில் அதன் தலைவர்களும் அமைச்சர்களானார்கள். இந்தஅமைச்சர்கள் மற்றும் இவ்வியக்கத்தைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்களும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திலிருந்து வெளியேற மறுத்ததாலும், தங்கள் இரட்டைஉறுப்பினர்பதிவுபிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க மறுத்ததாலும், ஜனதா அரசாங்கம் கவிழ்ந்தது. அதன்பின்னர் ஜனதாகட்சியுடன் இணைந்திருந்த முந்தைய ஜனசங்கத்தைச் சேர்ந்தவர்கள் தனியே வந்து பாரதிய ஜனதா கட்சியை அமைத்தார்கள். இவ்வாறுதான் பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாக வழுவாது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது இப்போது மிகவும் தெளிவாகி விட்டது.
2014 தேர்தலின்போது பாஜக மக்களுக்கு அளித்திட்ட பல வாக்குறுதிகளையும் அமல்படுத்துவதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் ஆர்எஸ் எஸ் இயக்கத்தின் நிகழ்ச்சிநிரல் ஒன்றை மட்டுமே முன்னெடுத்துச் செல்ல தீவிர மாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு செய்வதற்கான கட்டளையை அது மக்களிடமிருந்து பெறவில்லை. புதியசாலை அல்லது புதிதாகப் பெயர் வைக்க வேண்டிய இடங்களில், ஒளரங்கசீப் சாலையை, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவைப் போற்றுவதற்காக மாற்றி இருக்கிறது. இதன்பின்னால் உள்ள மதவெறி நோக்கம் மிகவும் தெளிவானது.
இந்தியாவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று யார் குரல் கொடுத்தாலும், உலக நாடுகள் பலவற்றில் மரண தண்டனைகள் கிடையாது, அந்த நாடுகளுடன் இந்தியாவும் சேர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் அவ்வாறு கோரிய போதிலும்கூட, யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட பின்னணியில், அவ்வாறு கூறுவோர் அனைவரும் பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். நாட்டிலுள்ள நீதிபரிபாலன அமைப்புகள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்றும், பாபர் மசூதி தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, பம்பாயில் நடைபெற்ற வகுப்புவாதக் கலவரங்களில் ஈடுபட்ட கயவர்கள் மீது, ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் அடையாளம் காட்டியபடி, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோருபவர்கள் எல்லாம் தேச விரோதிகள்என முத்திரைகுத்தப்பட்டார்கள். முஸ்லிம் பிரச் சனை ஓர் இந்தியப் பிரச்சனை என்று நினைவுகூர்ந்து அற்புதமானமுறையில் உரையாற்றியுள்ள நம் குடியரசுத் துணைத்தலைவர் அவ்வாறு பேசியமைக்காகக்குறிவைத்துத் தாக்கப்பட்டுக்கொண் டிருக்கிறார்.
நம் நாட்டின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 14 சதவீதமாகும். அதாவது 180 மில்லியன். (18 கோடி பேர்) உலகில் இரண்டாவது பெரிய அளவிலானவர்களாக, நாட்டின் சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டின் சுதந்திர இயக்கத்தின் போதும், இப்போது நவீன இந்தியாவிலும், முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் நாட்டின் பிரிக்கமுடியாத அங்கமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தஉரை, நம் அனைவரையுமே உள்ளாய்வு செய்து, செயல்படத் தூண்டியிருக்கிறது. குடியரசுத் துணைத் தலைவரைக் கடிந்து கொண்டிருப்பதன் மூலம், ஆர்எஸ்எஸ் இயக்கமானது, மீண்டும் ஒருமுறை, இந்தியாவின் மிக உயர்ந்த அளவிலான நாகரிகத்தின் வீரியத்தையே, குலைத்திடக்கூடிய விதத்தில் துளையிட்டுக் கொண்டிருக்கிறது.
பல மதங்கள் சங்கமித்த இந்திய நாகரிக வளர்ச்சி ஆர்எஸ்எஸ்பரிவாரத்தால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. வளமான நம் நாகரிகத்தின் உள்ளடக்கம் பேணிப் பாதுகாக்கப்பட்டாக வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, அதனைத்தகர்க்கக்கூடிய விதத்தில் அனைத்து விதமான முயற்சிகளிலும் இன்றைய தினம்இவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.
ஒளரங்கசீப் அன்றைய தினம் அனைவராலும் பாதுஷாஎன்று அன்புடன் அழைக்கப் பட்டு சிம்மாசனம் ஏறியவர். வகுப்புவாதம் இன்று மனிதகுல நாகரிகத்தில் உயர்ந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்த நாட் டை அவ்வாறு மேலே செல்லாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறது. பாஜக அரசாங்கம் மேற்கொண்டிருக்கிற மாபெரும் கயமைத்தனமாகும் இது. ஆட்சியைப் பிடிப்பதற் காக அது மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளுக்குத் துரோகம் செய்திருப் பதைவிட மிகவும் மோசமான விஷயம் இதுவாகும்.
நன்றி:
தி இந்துஸ்தான் டைம்ஸ், 8-9-15
தமிழில்: ச.வீரமணி

Monday, September 7, 2015

இனியும் நம்மை நாம் பீற்றிக்கொள்ள முடியாது




இந்தியா, பாகிஸ்தானில் சன்னி தீவிரவாதிகளால் ஷியா மற்றும் கிறித்துவ சிறுபான்மையினர் கொல்லப்படுவதுபோன்று பாகிஸ்தானும் அல்ல, நாத்திக இடுகையாளர்கள் (atheist bloggers), அடிப்படைவாதிகளால் கொல்லப்படுவது போன்று வங்க தேசமும் அல்ல, என்று இதுகாறும் நமக்கு நாமே மிகவும் பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டு வந்தோம். ஆனால் இனியும் அவ்வாறு நம்மை நாம் பீற்றிக்கொள்ள முடியாது.  இதில் நாட்டில் கொல்லப்பட்டவர்களின் அளவு முக்கியமல்ல. ஆனாலும் அத்தகைய வெறுப்பை உமிழும் மிருகங்கள் தலைதூக்கி இருக்கின்றன என்பதும், அவை நாட்டில் பல பகுதிகளில் முன்னேறிக்கொண்டிருக்கின்றன என்பதுமே நம்மை கவலை கொள்ளச் செய்திருக்கின்றன.
கன்னட அறிஞர் எம்எம் கல்புர்கி, ஞாயிறு அன்று கர்நாடக மாநிலம், தர்வாத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  2013 ஆகஸ்ட்டில் பகுத்தறிவாளர் நரேந்திர நரேந்திர தபோல்கரும், பிப்ரவரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான கோவிந்த் பன்சாரேயும் சுட்டுக்கொல்லப்பட்டபின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்போது மூன்றாவது நபராக கல்புர்கி அதேபோன்று சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இவர்கள் மூவருமே மூடப் பழக்க வழக்கங்கள் மற்றும் சாதீய நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டார்கள்,  சமூக சமத்துவத்தைப் போதித்தார்கள், சமூக வரலாற்றை மாற்று கோணத்தில் முன்வைத்திட முனைந்தார்கள்.   இவர்கள் மூவருமே தீவிரவாதக் குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார்கள். இதில் மிகவும் திகைப்பூட்டும் செய்தி என்னவெனில், கர்நாடக மாநிலம், பண்ட்வாலில், பஜ்ரங் தளம் என்னும் அமைப்பின் சக கன்வீனராக இருக்கும் புவித் ஷெட்டி என்னும் நபர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கல்புர்கி கொலை செய்யப்பட்டதை வரவேற்றிருப்பதுடன், “முன்பு யுஆர் ஆனந்தமூர்த்தி, இப்போது அது எம்எம் கல்புர்கி. இந்துயிசத்தைக் கிண்டல் செய்வோர்க்கு இவ்வாறு நாய்களின் மரணம்தான்.’’ என்று எழுதியிருப்பதுடன், அடுத்து எழுத்தாளர் கேஎஸ் பகவான் என்பவரை அச்சுறுத்தும் விதத்தில், “அடுத்து நீங்கள்தான்’’ என்று அச்சுறுத்தி இருக்கிறார்.
சமூக முன்னேற்றத்திற்காகவும், பொதுவாழ்வு மேன்மையுறவும் அல்லும் பகலும் அயராது பாடுபடும் இத்தகைய மேதைகளை இழக்கும் கொடுமையைத் தடுத்துநிறுத்திட மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமும், அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும். சிவானந்த் கனவி என்னும் எழுத்தாளரின் கூற்றின்படி, கல்புர்கி, ஒன்பதாம் நூற்றாண்டு கன்னட கவிதைகளின்  நுட்ப வேறுபாடுகள் குறித்தும், பன்னிரண்டாம் நூற்றாண்டின் வச்சனா இலக்கியத்தின் புரட்சிகரத் தன்மைகள் குறித்தும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கற்றுத்தந்திருக்கிறார். தன் சொந்த ஆய்வுக் கட்டுரைகள் நான்கு தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார். மற்ற எழுத்தாளர்கள் எழுதிய ஏழு தொகுதிகளைத் தொகுத்து அளித்திருக்கிறார். பிஜப்பூர் அடில்ஷாஹி மன்றத்தில் 18ஆம் நூற்றாண்டில் பாரசீக மொழியில் எழுதப்பட்ட உலக வரலாற்றை கன்னடத்தில் மொழியாக்கம் செய்து ஏழு தொகுதிகள் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.  இவ்வாறு இவரே ஒரு பல்கலைக்கழகம் போன்று செயல்பட்டதால், அறிவிலிகளால் அவரது மேதைமையை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.  கல்புர்கி, பன்சாரே மற்றும தபோல்கர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நம் நாட்டின் சுதந்திர சிந்தனையாளர்களுக்கு ஆழமான அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.  இச்சம்பவங்கள் ஆட்சியாளர்களுக்கு ஒரு சவாலாக எழுந்துள்ளன.  நம் நாட்டின் சுதந்திரத்தையும், நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பினையும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்துவோம் என்று ஆட்சியாளர்கள் மெய்ப்பித்திட வேண்டும்.
(நன்றி: தி இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு தலையங்கம், 1-9-15)
(தமிழில்: ச.வீரமணி)


Friday, September 4, 2015

வரலாறு படைத்திட்ட வேலைநிறுத்தம்




(People’s Democracy தலையங்கம்)
மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சுயேச்சையான தேசிய சம்மேளனங்கள் அறைகூவலுக்கு இணங்க செப்டம்பர் 2 அன்று நடைபெற்ற அகில இந்திய பொது  வேலை நிறுத்தத்திற்கு நாடு முழுதும் உள்ள தொழிலாளர்கள் மத்தியிலிருந்து அபரிமிதமான ஆதரவு கிடைத்திருக்கிறது.   இந்த வேலைநிறுத்தத்தில் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். பல மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நசுக்குவதற்காக காவல்துறையினர் ஏவப்பட்டுள்ளனர்.  மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் தன்னுடைய காவல்துறையையும் தன் குண்டர் படையையும்  பயன்படுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை மிருகத்தனமாகத் தாக்கி இருக்கிறது.  இத்தாக்குதல்களைத் தொழிலாளர்கள் துணிவுடன் எதிர்த்துநின்று முறியடித்து, வேலைநிறுத்தத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.  2015 மே 26 அன்று புதுதில்லியில் நடைபெற்ற மத்தியத் தொழிற் சங்கங்களின் தேசிய சிறப்பு மாநாடு வேலை நிறுத்தத்திற்கான அறைகூவலை விடுத்திருந்தது. 
மத்தியத் தொழிற்சங்கங்களால் முன் வைக்கப்பட்ட 12 அம்சக் கோரிக்கைகள் தொழிலாளர்களின் அடிப்படைக் கோரிக்கைகளான, குறைந்தபட்ச ஊதியம், அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புப் பயன்பாடுகள், தொழிற்சங்க உரிமைகள், தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றுடன் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை எதிர்ப்பது போன்று  பல்வேறு பிரச்சனைகளையும் உள்ளடக்கி இருந்தன.  சாமானிய மக்களின் உயிர்ப்பிரச்சனைகள் சிலவற்றையும் இக்கோரிக்கைகள் உள்ளடக்கி இருந்தன.
வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு ஒருசில நாட்களுக்கு முன், பாரதீய மஸ்தூர் சங்கம், அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளுக்குத் திருப்தி தெரிவித்து,  வேலை நிறுத்தத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. ஆனால், இதர மத்திய தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை ஏற்றுக் கொள்ளாமல், வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துச் செல்வது எனத் தீர்மானித்தன.
 1991இல் தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதற்குப்பின்னர், இப்போது நடைபெற்ற வேலைநிறுத்தம், 16ஆவது வேலை நிறுத்தமாகும்.  2009க்குப் பின்னர் அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சுயேச்சையான தேசிய சம்மேளனங்களும் இணைந்த கூட்டு மேடை அறிவித்த  நான்காவது வேலைநிறுத்தமுமாகும். இதற்கு முந்தைய அறைகூவல் என்பது, 2013 பிப்ரவரி 20-21 தேதிகளில் நடைபெற்ற இரு நாள் பொது வேலைநிறுத்தமாகும்.
தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் தொழிற்சங்கங்களின் உரிமைகள் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை முறியடிக்கக்கூடிய விதத்தில் செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளதால் இது மிகுந்த முக்கியத்துவம் உடையதாகும்.   கோரிக்கை சாசனத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் மிக முக்கியமான ஒன்று, தொழிலாளர்நலச் சட்டங்களில் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களுக்கு எதிரானதாகும். நவீன தாராளமயம் தொழிலாளர்களின் உரிமைகளை, “நிச்சயமற்றதாக, நிரந்தரமற்றதாகமாற்றியிருப்பதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது. நிரந்தரத் தொழிலாளி என்று எவரும் கிடையாது, அதற்கு மாற்றாக ஒப்பந்தத் தொழிலாளி என்றும் தற்காலிகத் தொழிலாளி என்றும் அவர்களை மாற்றி, அதன்மூலம் வேலை பாதுகாப்பிற்கு முடிவுகட்டி தொழிலாளர்களைப் பாதுகாப்பற்றவர்களாக மாற்றி அமைத்திருக்கிறது. எளிதில் வளைந்துகொடுக்கக்கூடிய தொழிலாளர்’’ (““flexibility of labour””) என்று தாராளமயம் அதற்குப் பெயர்சூட்டி இருக்கிறது. இதற்கு, தொழிலாளர் சந்தையில் இருந்துவரும் ஒழுங்குமுறைகளை நீக்க வேண்டியது அவசியம்.  நாட்டில் அமலில் இருந்து வந்த தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிலாளர்களை வேலையளிப்பவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு டிஸ்மிஸ் செய்வது, பதவிஇறக்கம் செய்வது, தொழிற்சாலைகளையே மூடிவிடுவது போன்றவற்றிலிருந்து சில பாதுகாப்புகளை அளித்து வந்தது. அத்தகைய தொழிலாளர்நலச் சட்டங்களையே ஒழித்துக்கட்ட மோடி அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.
மோடி அரசாங்கம், தொழிலாளர்நலச் சட்டங்களில் தொழிலாளர் நலன்களுக்கு எதிரானவிதத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதில்  மிகவும் குறியாக இருக்கிறது. முதலில் பாஜக தன்னுடைய மாநில அரசாங்கங்கள் மூலமாக இந்தத் திருத்தங்களைச் செய்திட முனைந்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள பாஜக அரசாங்கம் முன்கை எடுத்து இதனைச் செய்தது. அதனைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில அரசாங்கங்கள் இதனைச் செய்துள்ளன. இந்தத் திருத்தங்கள் மூலம், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நிறுவனங்களில் பணியாற்றும் மூன்றில் இரு பங்கு தொழிலாளர்களும், ஊழியர்களும் தொழிலாளர்நலச் சட்டங்களின் வரையறைகளிலிருந்து வெளித்தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
தொழிலாளர்நலச் சட்டங்களை இவ்வாறு திருத்துவதன் மற்றுமொரு முக்கியமான நோக்கம், தொழிற்சங்கங்களைப் பலவீனப்படுத்துவதும், தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்படுவதை மிகவும் சிக்கல் நிறைந்ததாக மாற்றுவதுமாகும். இவர்கள் முன்மொழிந்துள்ள திருத்தங்களின்படி, ஒரு தொழிற்சாலையில் ஒரு சங்கம் அமைக்கப்பட வேண்டுமானால், அங்கே பணியாற்றும் தொழிலாளர்களில் அல்லது ஊழியர்களில் குறைந்தபட்சம் 10 சதவீதம், அல்லது குறைந்தது 100 தொழிலாளர்கள், இதில் எது குறைவோ அது, விண்ணப்பதாரர்களாக இருந்திட வேண்டும். இப்போது அந்த எண்ணிக்கை 7 ஆகும். இதன் மூலம் சங்கம்கோரி விண்ணப்பிப்பவர்களை வேலையளிப்ப வர்கள் பழிவாங்குவது மிகவும் எளிது. இதன்மூலம் சங்கம் அமைக்கப்படுதலையே வேலையளிப்பவர்கள் மிக எளிதாகத் தடுத்துநிறுத்திட முடியும். அதேபோன்று சட்டவிரோத வேலைநிறுத்தங்களுக்கு கடும் தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் வேலை நிறுத்தங்களை மிக எளிதாக சட்டவிரோதமானவை என்று அறிவித்திடமுடியும். தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குவதன் மூலமாக, “முதலாளிகளின் வேலைகளை எளிமைப் படுத்துவதை’’ உத்தரவாதப்படுத்துவதே மோடி அரசாங்கத்தின் விருப்பமாகும்.  தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க ஒருபோதும் அனுமதியோம் என்று மோடி அரசாங்கத்தை எச்சரிக்கை செய்யும் விதத்தில், தொழிலாளி வர்க்க இயக்கத்திடமிருந்து  வேலைநிறுத்தத்திற்கு வியக்கத்தக்க விதத்தில் ஆதரவு கிட்டியிருக்கிறது.
வேலைநிறுத்தம் உயர்த்திப்பிடித்த மற்றுமொரு முக்கியமான பிரச்சனை, இன்சூரன்ஸ், ராணுவம் மற்றும் ரயில்வே துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரித்து அவற்றைத் தனியாருக்குத் தங்குதடையற்றவிதத்தில் தாரை வார்த்திடும் அரசின் நடவடிக்கைக்கு எதிரானதாகும்.  நிலக்கரித் தொழிலை தேசியமயமாக்கியதை ஒழித்துக்கட்டும் விதத்தில், நிலக்கரி சுரங்கங்களைத் தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு மோடி அரசாங்கம் ஏற்கனவே தாரை வார்த்துவிட்டது.   பொதுத்துறை வங்கிகள் சிலவற்றின் பங்குகளை 51 சதவீதத்திற்கும் கீழே குறைத்திடவும் மோடி அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. தாராளமயக் கொள்கைகளின் முக்கிய அம்சமே பொதுத்துறை நிறுவனங்களை ஒட்டுமொத்தத்தில் கைகழுவுவதாகும். இத்தகைய அரசின் தனியார்மய முயற்சிகளுக்கு இவ்வேலைநிறுத்தத்தை மகத்தானவகையில் வெற்றிபெறச் செய்திருப்பதன்மூலம் தொழிலாளி வர்க்கம் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறது.
தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் இதர பிரிவினர் தங்கள் எதிர்ப்பியக்கங்களை நடத்தி இருப்பது ஊக்கம் அளிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கின்றன.  மோடி அரசாங்கத்தின் நாசகரக் கொள்கைகளை எதிர்த்து, முறியடிக்கக்கூடிய விதத்தில் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை இவ்வேலைநிறுத்தம் உயர்த்திப் பிடித்திருக்கிறது. செப்டம்பர் 2 வேலைநிறுத்தம், நாட்டில் ஒன்றுபட்ட வெகுஜனப் போராட்டங்களின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் படக்கூடிய அளவிற்கு ஒரு முக்கிய நிகழ்வாகும்.
(செப்டம்பர் 2, 2015)
(தமிழில்: ச.வீரமணி)