Sunday, February 10, 2013

வாக்குறுதிகளை மீறும் ராஜபக்சே





இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே தன்னுடைய சுதந்திரநாள் உரையில், ‘‘இந்நாட்டின் இன அடிப்படையில் வெவ்வேறு விதமான நிர்வாகங்களை நடத்துவது என்பது நடைமுறைச் சாத்தியமல்ல’’ என்று கூறியதன் மூலம்  நாட்டில் உள்ள தமிழ்ச் சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு ஊறு விளைவித்திருக்கிறார்.  இவ்வாறு அவர் கூறியிருப்பதானது, 2009ஆம் ஆண்டில் எல்டிடிஇ-இனருக்கு எதிராக நடைபெற்ற யுத்தத்தின்போது, ஆட்சேபணைக்குரிய  வழிமுறைகளைப் பின்பற்றி ராணுவரீதியாக அவர்களை வென்றபின்னர், தமிழர்களுக்கு அவர் அளித்த உறுதிமொழிகளிலிருந்து அவர் பின்வாங்குகிறார் என்றே பொருள்.  இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் 13ஆவது  அத்தியாயத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதன் அடிப்படையில் அதிகாரங்கள் பரவலாக்கப்படும் என்று அவர் உறுதிமொழி அளித்திருந்தார். இவ்வாறு அவர் கூறியதன் மூலம், அவருக்கு  தமிழ்ச் சிறுபான்மை இனத்தினர் மீது எவ்விதமான சண்டையும் கிடையாது என்றும்பிரபாகரன் தலைமையிலான இயக்கம் அழிக்கப்பட்டபின் தமிழ் இனத்தினர் சிங்கள இனத்தினருடன் சரிசமமாகவே நடத்தப்படுவர் என்றும் உலகம் முழுதும் செய்தி கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதுமே  இவ்வாறு அவர் அளித்த உறுதிமொழியின் பின்னேயுள்ள உட்பொருளாகும்.
 அப்போது இலங்கைத் தமிழர்களுக்காக ராஜபக்சே வெளிப்படுத்திய பரிவு என்பது இலங்கைப் படையினர் தமிழ் மக்கள் மீது மிகப் பெரிய அளவில் நடத்திய மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்தினரிடம் மூடி மறைக்கும் ஒன்றாகவே தற்போது தெரிகிறது.  இலங்கை ராணுவத்திற்கும், எல்டிடிஇ-இனருக்கும் இடையே சண்டை நடைபெற்ற சமயத்தில் சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மதிப்பீடு ஒன்று கூறுகிறது.  ஜெனிவாவில் உள்ள ஐ,நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் மனித உரிமைகள் மீறல்களுக்காக ராஜபக்சே அரசாங்கம் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகலாம் என்றே தெரிகிறது. 
எல்டிடிஇ இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் ஒழித்துவிட்டதன் மூலம் இலங்கை இனப்பிரச்சனை வரலாறு படைத்திருக்கிறது என்று ஒருவேளை ராஜபக்சே நம்பலாம். ஆனால் அவர் தவறு செய்கிறார். இந்தவகைகளில் பிரச்சனை களுக்குத் தீர்வுகாண முடியாது. இத்தகைய பிரச்சனைகளுக்கு இத்தகைய வழிகளில் முற்றுப்புள்ளி வைத்திட முடியாது. 2009இல் அவர் தமிழ்ச் சிறுபான்மையினருக்கு அளித்திட்ட அநேகமாக அனைத்து உறுதிமொழி களிலிருந்தும் அவர் பின்வாங்கும் பட்சத்தில், இலங்கை வாழ் தமிழர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகக் கருத முடியாது. 
தமிழ்ச் சிறுபான்மையினரின் நலன்களைக் காப்பதற்காகக் களத்தில் உள்ள தமிழ் தேசியக் கூட்டணி, தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தப்படுவதாக, இலங்கை அரசாங்கத்தின் மீது  குற்றஞ்சாட்டியுள்ளது.  மேலும், இலங்கையின் வடபகுதிகளை  ராணுவ மயமாக்கும் வேலைகளிலும் இலங்கை அரசாங்கம் இறங்கியிருப்பதாக ராஜபக்சே அரசாங்கத்தின்மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.  அனைத்துத் தமிழ் மக்களின் அபிலாசைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின்  13ஆவது அத்தியாயத்தில் உரிய திருத்தங்களைச் செய்து, சுயாட்சி மாகாணக் கவுன்சில்களுக்கு  அதிகாரங்களைப் பரவலாக்குவதன் மூலம் மட்டுமே  இலங்கை இனப்பிரச்சனைக்கு ஓர் உண்மையான தீர்வினை அளித்திட முடியும். மாறாக, ‘‘நாட்டில் அனைத்து இனத்தினரும் சம உரிமைகளுடன் சேர்ந்து வாழ்வதே தீர்வாகும்’’ என்றெல்லாம் அதிபர் ராஜபக்சே கூறும் நீதிபோதனைகள் எல்லாம் உதவிடாது.
( தி டிரிப்யூன் தலையங்கம், 8.2.13) தமிழில்: ச.வீரமணி

Sunday, February 3, 2013

பயங்கரவாத அச்சுறுத்தலை முறியடிப்போம்


 65 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜனவரி 30ஆம் நாள்தான், மகாத்மா காந்தி இந்து மதவெறியன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின் 29 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, காலிஸ்தானி தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.  22 ஆண்டுகளுக்கு முன்பு, 1991 பொதுத் தேர்தல்கள் நடைபெற்ற சமயத்தில், அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, எல்டிடிஇ மனிதவெடி குண்டால் விழுங்கப்பட்டார்.
நாடு சுதந்திரம் அடைந்து பிரிவினை ஏற்பட்டபின் கடந்த அறுபதாண்டுகளில்,  லட்சோப லட்சம் மக்கள், இவர்களில் பெரும்பாலோர் ஒன்றுமறியா அப்பாவி மக்கள், வகுப்புவாதத்தாலும், மத அடிப்படைவாதத்தாலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாத வன்முறைக்கு இரையாகி இருக்கின்றார்கள். சமீபத்திய நிகழ்வுகள் என்பவை 2002இல் குஜராத்தில் மிகவும் கொடூரமான முறையில் முஸ்லீம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைகளாகும்.  அடிப்படைவாத சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட  எல்லை தாண்டிய பயங்கரவாதம் 2008இல் உச்சத்திற்குச் சென்று, மும்பையில் 26/11 பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. பல்வேறு விதமான பயங்கரவாதக்குழுக்கள் நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக வட கிழக்கில், செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.   
‘‘இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மாபெரும் அச்சுறுத்தலாக’’ இருக்கிறது என்று இப்போதைய பிரதமர் குறிப்பிட்டதைப்போல மாவோயிஸ்ட்டுகள் அரசியல் வன்முறையை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். சாதி அடிப்படையிலான பயங்கரவாத வன்முறைச் சம்பவங்களும் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பெண்களுக்கு எதிராக பயங்கரவாத வன்முறைகள் அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கும் விதத்தில் தில்லியில் ஓடும் பேருந்து ஒன்றில் ஒரு பெண் மிகவும் காட்டுமிராண்டித்தனமாக கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்து ஒட்டுமொத்த நாடே கொதித் தெழுந்தது.
பயங்கரவாத வன்முறையும், வன்முறை அரசியலும் நம் நாட்டைப்போலவே பல்வேறு மாறுபட்ட தன்மைகளைக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து வலுப்படுத்திட வேண்டுமானால், இவ்வாறு நாட்டில் நடைபெற்றுள்ள அனைத்து விதமான பயங்கரவாத நடவடிக்கைகளும் சமரசமேதுமின்றி எதிர்த்து முறியடிக்கப்பட்டாக வேண்டும்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆய்வுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர், ‘‘காவி பயங்கரவாதம்’’ குறித்து சில விமர்சனங்களைச் செய்தவுடன், பாஜக/ஆர்எஸ்எஸ் கூடாரம் அமளியில் ஈடுபட்டு அதன் புழுதி அடங்குவதற்குள்ளேயே திரைப்பட நடிகர் சாருக்கான்  வெளிநாட்டு இதழ் ஒன்றில் வெளியிட்டுள்ள கட்டுரை தொடர்பாக சில கருத்துமோதல்கள் இப்போது வந்திருக்கின்றன.  ‘‘இந்தியாவில் பாதுகாப்பில்லை, தொல்லைக்கு உள்ளாக்கப்படுகிறேன், சங்கடத்திற்கு உள்ளாக்கப் படுகிறேன்’’ என்று குறிப்பிட்டது தொடர்பாக எந்தப் பிரச்சனையும் இல்லை என்று எவ்வித மோதலுக்கும் இடம் அளிக்காது அவர் உடனடியாக மறுத்துவிட்டார்,  ‘‘...சில சமயங்களில் தான் ஓர் இந்திய முஸ்லீம் நடிகராக இருப்பதால் அற்ப ஆதாயங்களுக்காக மதச் சிந்தனைகளைப் பயன்படுத்திடும் குறுகிய மனம்படைத்தவர்களாலும், மத மூட நம்பிக்கை உடையவர்களாலும்   தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறேன்’’ என்றுதான்  தான் குறிப்பிட்டதாக மிகவும் மன்றாடி விளக்கமளித்திருக்கிறார், இவரது கூற்றை மெய்ப்பிக்கும் விதத்தில், பாகிஸ்தான் உள்விவகாரங்கள் அமைச்சர் ரெஹ்மான் மாலிக், நடிகரின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தி இருக்கிறார், இதற்கு உடனடியாக மத்திய உள்துறை அமைச்சரும் கண்டித்து பதிலடி கொடுத்திருக்கிறார், பயங்கரவாதத்திற்கு இரையாகியுள்ள உங்கள் நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படுவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்று பாகிஸ்தானுக்கு இந்திய அரசாங்கமும் அனைத்துப் பெரிய கட்சிகளும் வெளிப்படையாகப் பதிலடி கொடுத் திருக்கின்றன,
அதேபோன்று, முன்னதாக, அனைத்துவிதமான பயங்கரவாதமும் ஒன்றை மற்றொன்று ஊட்டி வளர்க்கும், வலுப்படுத்தும் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம், மும்பையில் 26/11 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் பிரதானமாகக் குற்றஞ்சாட்டப் பட்டவனும் தற்போது பாகிஸ்தானால் புகலிடம் அளிக்கப் பட்டிருப்பவனுமான  ஹஃபீஸ் சயீத், உள்துறை அமைச்சர் ‘‘காவி பயங்கரவாதம்’’ என்று கூறியிருப்பதைப் பாய்ந்து பற்றிக்கொண்டிருக்கிறான், 1999இல் இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் நடைபெற்ற சமயத்தில் லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் செய்திச் செயலாளரிடம் (information secretary), இந்தியாவில் எதிர்கால அரசை யார் அமைத்திடுவார் என்று கேட்கப்பட்டபோது. அவர் கூறிய வாசகங்களை சற்றே நினைவுகூர்க, ‘‘ பாஜகவினர்தான் எங்களுக்குப் பொருத்தமானவர்கள்.  ஓராண்டிற்குள் அவர்கள் எங்களை அணுசக்தி மற்றும் ஏவுகணை வல்லரசு நாடாக மாற்றினார்கள்,  பாஜகவின் அறிக்கைகளினால் லஸ்கர்-இ-தொய்பா மிகவும் நல்லமுறையில் வளர்ந்தது, முன்பு இருந்ததைவிட சிறந்தமுறையில் வளர்ந்தோம், அவர்களே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நாங்கள் கடவுளை வேண்டுகிறோம். அவ்வாறு அவர்கள் வந்துவிட்டால் நாங்கள் மேலும் வலுவாக உருவாவோம்.’’ (இந்துஸ்தான் டைம்ஸ்,  ஜூலை 19, 1999).
இந்துத்வா பயங்கரவாதம் (இந்து பயங்கரவாதம் அல்ல) உட்பட அனைத்து வகையான பயங்கரவாத நடவடிக்கைகளையும் எதிர்த்து முறியடித்திட வேண்டியது அவசியமாகும், ஒட்டுமொத்தத்தில், ஒரு மதத்தைப் பின்பற்றும் தனிநபர்கள் மேற்கொள்ளும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக  ஒட்டுமொத்த மதத்தினரும் பொறுப்பேற்க முடியாது என்பது தெள்ளத்தெளிவான ஒன்றாகும், இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும், ஆயினும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தினருக்கு மட்டும் இது பொருந்தாது, ஆர்எஸ்எஸ் தங்களுடைய தீர்மானங்களில், ‘‘இஸ்லாமிய பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்’’ என்று நிறைவேற்றுவதை வழக்கமாகவே கொண்டிருக்கிறது, இது அவர்களின் இரட்டை நிலையை வெளிப்படுத்துகிறது.  நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, வெறிபிடித்த மதச் சகிப்புத்தன்மையின்மை அடிப்படையில்  இந்து ராஷ்ட்ரம் ஆக மாற்றுவதற்கான ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சித்தாந்த மூலவேர்கள் அதில் பிரதிபலிக்கின்றன,
மத்திய உள்துறை அமைச்சர்   புலனாய்வுகளிலிருந்து தனக்குக் கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில்தான் காவி பயங்கரவாதம் என்று கூறினார்,  2010 ஜூலையில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்கள், நாடாளுமன்றத்தில், ‘‘தேசிய புலனாய்வு ஏஜன்சி (NIA-National Investigation Agency) சம்ஜூதா எக்ஸ்பிரசில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதல்களை விசாரணை செய்து, அத்தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைத்து சதிகளையும் ஆய்வு செய்திடும் என்றும், 2008 செப்டம்பர் 8 அன்று மாலேகான் மற்றும் 2007 மே 18 அன்று ஹைதராபாத் மெக்கா மசூதி ஆகியவற்றில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும், இதில் சம்பந்தம் உண்டா என்பது குறித்தும் அது ஆராய்ந்திடும் என்றும் கூறியிருந்தார். தில்லி - லாகூர் சம்ஜூதா எக்ஸ்பிரசில் 2007 பிப்ரவரி 18 நள்ளிரவில் இரு கோச்சுகளில் வெடிகுண்டு வெடித்ததை அடுத்து 68 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு முன்பும் பலதடவைகள், நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களில் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் சம்பந்தப்பட்டிருப்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது குறித்து மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம்,  2008 அக்டோபர் 13 அன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சமர்ப்பித்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்திருந்தோம்.  ‘‘2003இல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பார்பாணி, ஜால்னா, ஜால்கான் மாவட்டங்கள், 2005இல் உத்தரப்பிரதேசத்தில் மாவ் மாவட்டம், 2006இல் நாண்டட், 2008 ஜனவரியில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம், மற்றும் 2008 ஆகஸ்டில் கான்பூர் மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கீழ் இயங்கும் பஜ்ரங் தளம் போன்ற ஸ்தாபனங்கள் கடந்த ஒருசில ஆண்டுகளாக சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று காவல்துறையினரின் புலனாய்வுகள் தெரிவிக்கின்றன,’’ என்று அந்த அறிக்கையில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.
இவை அனைத்தையும் கண்டுகொள்ளாமல், பாஜக தற்போது உள்துறை அமைச்சரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி இருக்கிறது. அதன் செய்தித் தொடர்பாளர், ‘‘சம்ஜூதா எக்ஸ்பிரசில் நடைபெற்ற தாக்குதலுக்குப்பின்னே பயங்கரவாதிகள் இருந்தார்கள் என்றால், அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கட்டும், சங் பரிவாரத்தின் முன்னாள் சுயம்சேவக்குகள் அதில் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். ஆனால், உங்களால் தேசிய அளவிலான ஸ்தாபனத்தின் சித்திரத்தை உருக்குலைத்து விட முடியாது.’’ என்று கூறியிருக்கிறார். 
இவ்வாறு, அவர்கள் மீண்டும் ஒருமுறை, இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகள் திசைமாறிப்போன ஒருசிலரின் நடவடிக்கைகளாக இருக்கலாம் என்றும் அதற்காக ஒட்டுமொத்தமாகவே ஸ்தாபனத்தை குறைகூறக் கூடாது என்றும்  பிரகடனப்படுத்தி இருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் கூறுவது ஒன்றும் புதிதல்ல. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது நாதுராம் கோட்சே குறித்தும் இவ்வாறுதான் இவர்கள் கூறினார்கள். ஆயினும், ஓர் ஊடக நேர்காணலில், கோட்சேயின் சகோதரன், தங்கள் குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செயல்வீரர்கள் என்று பெருமையுடன் கூறியிருக்கிறான்.  சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் பட்டேல், 1948 பிப்ரவரி 4 அன்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்து அறிவித்துள்ள அரசாங்கக் குறிப்பில்,  ‘‘சங் பரிவாரங்களின் ஆட்சேபகரமான மற்றும் தீங்கு பயத்திடும் நடவடிக்கைகள் குறையாது தொடர்கின்றன.  சங் பரிவாரம் பின்பற்றும் வன்முறைக் கலாச்சாரம் பல உயிர்களைக் காவு வாங்கி இருக்கிறது. இதில் மிகவும் சமீபத்திய, மிகவும் விலைமதிக்கமுடியாத இழப்பு என்பது காந்திஜியை இழந்ததாகும்.’’ என்று கூறியிருக்கிறார்.  
  ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வரலாறும் அது பின்பற்றும் நடைமுறைகளும் அவ்வியக்கத்தில் வல்லினம் (`core)மிக்கவர்கள் என்றும், இடையினம் (`fringe) மிக்கவர்கள் என்றும் வித்தியாசம் இருப்பதாகக் கூறுவதைப் பொய்ப்பித்திருக்கின்றன. இந்துக்களுக்கு தீவிரவாதப் பயிற்சி அளிப்பது என்பதும், வன்முறையை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது என்பதும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் நீண்ட நெடுங்காலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றவைகளேயாகும்.   சாவர்க்கர் (ஜின்னா செய்வதற்கு ஈராண்டுகளுக்கு முன்னாலேயே இஸ்லாம் மற்றும் இந்து என்று இரு நாட்டுக் கொள்கையை முன்கொணர்ந்தவர்) ‘‘அனைத்து அரசியலையும் இந்துமதமாக்கு, இந்துக்கள் அனைவரையும் ராணுவமயமாக்கு’’ என்ற முழக்கத்தை முன்வைத்தவர்.  இவற்றால் உத்வேகமடைந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிறுவனரை வழிகாட்டியாகக் கொண்ட டாக்டர் பி.எஸ், மூஞ்சே  பாசிஸ்ட் சர்வாதிகாரி முசோலினியைச் சந்திப்பதற்காக  இத்தாலிக்குப் பயணம் சென்றார். இவர்களது சந்திப்பு 1931 மார்ச் 19 அன்று நடைபெற்றது.  அவரது சொந்த நாட்குறிப்பில் மார்ச் 20 அன்று எழுதியுள்ள குறிப்புகளில், இத்தாலிய பாசிசம் தன் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிப்பது தொடர்பாக புளகாங்கிதம் அடைந்து எழுதியிருப்பதைக் காண முடியும். இந்தியா திரும்பியபின், டாக்டர் மூஞ்சே 1935இல் நாசிக்கில் மத்திய மிலிட்டரி கல்வி சொசைட்டி (Central Military Education Society)யை நிறுவினார். இதுதான் 1937இல் நிறுவப்பட்டதும்,  இந்துத்வா பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து வருவதாகத் தற்போது குற்றஞ் சாட்டப் பட்டுள்ளதுமான போன்சாலா மிலிட்டரிப் பள்ளியின் முன்னோடியாகும். 1939இல் கோல்வால்கர் நாசி பாசிசத்தின் கீழ் யூதர்களைக்  கொன்று குவித்த ஹிட்லரை வெகுவாகப் பாராட்டியதுடன், ‘‘இவரது நடவடிக்கைகள் இந்துஸ்தானில் உள்ள நம் அனைவருக்கும் கற்றுக்கொள்வதற்கும், ஆதாயம் அடைவதற்கும்  நல்லதொரு படிப்பினையாகும்’’ என்று கூறியிருக்கிறார். பின்னர், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து, அப்போது உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தவரும், சமீபத்தில் மீண்டும் பாஜகவில் சேர்ந்திருப்பவருமான கல்யாண்சிங், ‘‘பாபர் மசூதியை இடிக்கும் வேலையை ஒப்பந்தக்காரர்களிடம் விட்டிருந்தால் பல நாட்கள் எடுத்துக்கொண்டிருப்பார்கள், ஆனால் நம் கர சேவகர்கள் ஒருசில மணி நேரத்தில் அதனை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டார்கள்’’ என்று பீற்றிக் கொண்டதைக் கண்டோம்.
உண்மையில், இதே ஜனவரி 30 அன்றுதான் 80 ஆண்டுகளுக்கு முன்பு 1933இல் பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாகத் தழுவிக்கொண்ட  பாசிஸ்ட் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராகப் (chancellor) பதவி ஏற்றுக்கொண்டான். 
பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது என்பதை இந்தியா நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.  மிக எளிமையாகச் சொல்வதென்றல் அது தேசவிரோதமானது. எனவே அதற்கு எதிராக எவ்விதத் தயவுதாட்சண்யமும் காட்டக்கூடாது. மேலும், அனைத்துவிதமான பயங்கரவாதமும் ஒன்றை மற்றொன்று ஊட்டி வளர்த்து, வலுப்படுத்திடும், நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அழித்திட  இட்டுச் செல்லும்.
மகாத்மா காந்தி கொல்லப்பட்ட தினமான ஜனவரி 30ஆகிய இந்த தினத்தில் நாட்டில் பயங்கரவாதம் என்னும் அச்சுறுத்தலை முறியடிப்பதற்கான நம் உறுதியை இரட்டிப்பாக்கிக்கொள்வோம்.
(2013 ஜனவரி 30 அன்று எழுதப்பட்டது)
தமிழில்: ச.வீரமணி