Showing posts with label true face of US imperialism. Show all posts
Showing posts with label true face of US imperialism. Show all posts

Friday, October 29, 2010

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூர முகம் - மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டிருக்கிறது



விக்கி லீக்ஸ்(Wicky Leaks) என்னும் இணைய தளம் வெளிப்படுத்தி இருக்கும் அமெரிக்க அரசின் ரகசிய யுத்த ஆவணங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரமுகத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி இருக்கிறது. ‘உலகை உய்விக்க வந்த உத்தமன்’ என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், மற்ற நாடுகளில் நடைபெறும் ‘மனித உரிமைகள் மீறல்கள்’ தொடர்பாக அடிக்கடி ஆர்ப்பரிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மை சொரூபத்தை அது உலகுக்கு வெளிப்படுத்தி இருக்கிறது. ‘விக்கி லீக்ஸ்’ வெளியிட்டிருக்கும் சுமார் நான்கு லட்சம் அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களில் கண்டுள்ள விவரங்களிலிருந்து, இராக்கில் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பது வெளி உலகிற்குத் தெரிய வந்திருக்கிறது.

இந்த ஆவணங்கள், 2004 முதல் 2009 வரையிலான காலத்தில் இராக்கில் சண்டை நடந்த சமயத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் யுத்த நடவடிக்கைகளைத் பட்டியலிட்டிருக்கின்றன. எவ்வளவு கீழ்த்தரமான முறையில் அமெரிக்க மற்றும் அதற்கு ஆதரவாக நின்ற நாடுகளின் துருப்புக்கள் இராக்கியர்களுக்கு எதிராக மிகக் கொடூரமான முறைகளில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டன என்பதை இந்த ஆவணங்கள் மிகவும் தெளிவாகக் காட்டியிருக்கின்றன. குறிப்பாக அமெரிக்க ஆதரவு இராக் படைகள் அபு கிராய் சிறைச்சாலையில் நடத்தியுள்ள கொடூரமான அத்துமீறல்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

‘விக்கி லீக்ஸ்’ இந்த ஆவணங்களை ‘தி நியுயார்க் டைம்ஸ்’, ‘தி பிரிட்டிஷ் டெய்லி’, ‘தி கார்டியன்’, பிரஞ்சு இதழான ‘லீ மாண்டே’ (Le Monde) மற்றும் ஜெர்மன் சஞ்சிகை ‘டெர் ஸ்பீஜெல்’ (Der Spiegel) ஆகியவற்றிற்குக் கிடைக்குமாறு செய்திருக்கிறது. இதனை அடுத்து இது உலகின் மனச்சாட்சியையே உலுக்கிவிட்டது. இந்தக் கசிவுகள் அமெரிக்க ராணுவ வரலாற்றில் மிகப்பெரும் கசிவுகளாகக் கருதப்படுகின்றன.

‘விக்கி லீக்ஸ்’ ஆவணங்கள் வெளிப் படுத்தியுள்ள கொடூர சித்திரவதைகள், கொலைகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் அடிப்படையில் இராக்கில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்க ராணுவம் ஒரு முழுமையான புலனாய்வை மேற்கொண்டிட பராக் ஒபாமா கட்டளையிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஐ.நா. ஸ்தாபனத்தின் சித்திரவதைகள் தொடர்பான தலைமைப் புலனாய்வாளர் மான்ஃபிரெட் நோவாக் சித்திரவதைகளுக்கு எதிராக ஐ.நா.கன்வென்ஷனின் நெறிமுறைகள் மீறப்பட்டிருப்பதை இவை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன என்று கூறியிருக்கிறார். எனவே, ஒபாமா நிர்வாகம், இதன்மீது புலனாய்வு செய்திட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரிட்டிஷ் கூட்டணி அரசாங்கமானது, இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தும் விவரங்கள், உண்மையில் மிகவும் ‘அசாதாரணமானவை’ என்றும் ‘அதிர்ச்சியளிக்கக்கூடியவை’ என்றும் சித்தரித்திருக்கிறது. இங்கிலாந்தின் துணைப் பிரதமரான, நிக் கிளெக், ‘‘டோனி பிளேர் அரசாங்கமானது 2003 மார்ச்சில் அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு இராக்கில் நுழைந்தது ‘சட்டவிரோதமான’ செயல்’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த ஆவணங்கள் மேலும் பல அதிர்ச்சியளிக்கும் விவரங்களை வெளிப்படுத்தி இருக்கின்றன. இராக்கில் போர் தொடுக்க அமெரிக்கா, அதிகமான அளவில் தனிப்பட்ட ஒப்பந்தக்காரர்களைச் சார்ந்திருந்ததாகவும், உலகில் மேற்கொண்ட யுத்தங்கள் எதிலும் இதற்கு முன் அது இவ்வாறு நடந்துகொண்டதில்லை என்றும் ஆவணங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. அமெரிக்காவானது இராக்கிலும் பின்னர் ஆப்கானிஸ்தானத்திலும் நடைபெற்ற சண்டைகளில் தன் நாட்டின் போர்வீரர்களைவிட அதிகமான அளவில் ஒப்பந்தக்காரர்களை ‘அவுட்சோர்சிங்’ முறையில் அமர்த்தி இருந்தது என்பதும் இவ்வாறு அதிர்ச்சியளிக்கும் விவரங்களில் ஒன்றாகும். தன் நாட்டின் போர் வீரர்களைவிட ஒப்பந்தக்காரர்கள் எண்ணிக்கை அதிகம் என்று அது கூறுகிறது. ஆப்கானிஸ்தானத்தில் இன்றைய தினம் வன்முறையைப் பரப்பிக் கொண்டிருப்பதும், அதன் மூலம் தாலிபான்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பதும் இத்தகைய ஒப்பந்தக்காரர்கள்தானாம். இதனை அடுத்து இப்போது அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் அதிக அளவு துருப்புக்களைப் பயன்படுத்த இருப்பதையும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

நவீன நாகரிக உலகில் இவ்வாறு மனித உரிமை மீறல்கள் மற்றும் மிகக் கொடூரமான யுத்தக் குற்றங்களைப் புரிந்துள்ளமைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் பதில் சொல்லியேயாக வேண்டும்.
அதிபர் ஒபாமா நம் நாட்டிற்கு விரைவில் வர இருக்கும் இச்சமயத்தில், இந்தியா இப்பிரச்சனைகளை எழுப்பிட வேண்டும். இராக்கில் அமெரிக்க ராணுவப் படையெடுப்புக்கு மறுப்பு தெரிவித்து இந்திய நாடாளுமன்றம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை அவருக்கு நினைவுபடுத்த வேண்டும். (உண்மையில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, இடதுசாரிகள் கண்டனம் (condemn) தெரிவிக்க வேண்டும் என்றுதான் கோரியிருந்தார்கள். ஆயினும் மற்ற கட்சிகள் அதற்கு உடன்படாது, இவ்வாறு ‘மறுப்பு தெரிவித்து’ (disapprove) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.) மேலும் இந்தியா அமெரிக்க அதிபரிடம், மும்பையில் 26/11 நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உள்ள தொடர்புகள் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது தொடர்பாகவும் பேசிட வேண்டும். அவன், இரட்டை ஏஜண்டாக இருந்தது - அதாவது பாகிஸ்தானில் அவன் பயங்கரவாதிகளின் முகாம்களில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில், லஸ்கர்-இ-தொய்பா மூலமாக அல்கொய்தா இயக்கத்திற்கும் அமெரிக்க உளவு ஸ்தாபனங்களுக்கும் - வேலை செய்துகொண்டிருந்தான் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. ஹெட்லி, தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து 12 பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக்கொண்டிருக்கிறான். ஹெட்லியின் மூன்று மனைவிமார்கள் அமெரிக்க அரசாங்கத்தை முதலில் 2005இலும் பின்னர் மீண்டும் 2008இலும் ஹெட்லி, லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தான் என்றும், மும்பையில் தாக்குதல் தொடுக்க சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறான் என்றும் எச்சரித்திருந்தார்கள் என்று ‘தி நியுயார்க் டைம்ஸ்’ குறிப்பிட்டிருக்கிறது. இவ்வாறு அவர்கள் எச்சரிக்கை செய்திருந்தபோதிலும் அவற்றின் மீது அமெரிக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்குக் காரணம், இத்தாக்குதல்களில் பாகிஸ்தானின் தலையீடு பிரதானமாக இருப்பது வெளியுலகத்திற்குத் தெரிய வந்துவிடலாம் என்பதால் அதனைத் தவிர்த்திருக்கலாம் என்று ‘தி நியுயார்க் டைம்ஸ்’ மேலும் குறிப்பிட்டிருக்கிறது.

இப்பிரச்சனை தொடர்பாகவும் ஒபாமா நிர்வாகம் தெளிவுபடுத்திட வேண்டும். இந்தியாவிற்கு எதிராக அதன் மண்ணில் பயங்கரவாத நடவடிக்கைகளில் எவர் ஈடுபட்டாலும் அதனை சகித்துக்கொள்ள மாட்டோம் என்கிற திட்டவட்டமான உறுதிமொழியை இந்தியாவிற்கு அது அளித்திட வேண்டும். ஆயினும், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் நலன்களுக்கு உகந்தவிதத்தில்தான் செயல்படும் என்பதையே வரலாறு நமக்கு மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்திருக்கிறது. எக்காலத்திலும் வேங்கை தன் புள்ளிகளை மாற்றிக்கொள்ளாது.
இராக்கிற்கு எதிராக போர் புரிந்ததற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் கூறிய அனைத்தும் தவறானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டு விட்டன. ஆயினும், அதன் அடிப்படையில், அமெரிக்க ஏகாதிபத்தியம், மீண்டும் ஒருமுறை, தன் கொடூரமான முகத்தை, உலகுக்கு வெளிப்படுத்தி இருக்கிறது. அடிப்படை மனித உரிமைகளையும் மனித குல விடுதலையையும் நேசிக்கும் அனைவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், அது செய்திட்ட கொலைபாதகச் செயல்களுக்கு அதனைப் பொறுப்பேற்கவும் கோர வேண்டும்.

(தமிழில்: ச. வீரமணி)