Showing posts with label price hike. Show all posts
Showing posts with label price hike. Show all posts

Wednesday, March 3, 2010

பெட்ரோல் விலை உயர்வை நியாயப்படுத்தாதீர்: சிபிஎம்

புதுதில்லி, மார்ச் 3-
பெட்ரோல் - டீசல் விலையை நியாயப்படுத்தக்கூடாது, அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் ஒர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

‘‘ஒரு நீண்டகாலத் தொலைநோக்கின்’’ அடிப்படையில்தான் பட்ஜெட்டில் பெட்ரோல - டீசல் விலைகளை உயர்த்தியிருப்பதாகப் பிரதமர் விலை உயர்வினை நியாயப்படுத்தி இருக்கிறார். இதனால் மேலும் விலை உயர்வு ஏற்பட்டு அதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்களே என்ற கவலைக் கிஞ்சிற்றும் இல்லாததும், வழுவான பொருளாதார சிந்தனையும்தான் பிரதமரை இவ்வாறு கூறச் செய்திருக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வின் மூலமாக வரவிருக்கும் ஆண்டில் அரசு 20 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வரைக்கும் அரசு வருவாய் ஈட்டிடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் நிதி அமைச்சர் தன்னுடைய பட்ஜெட் உரையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருமான வரியிலிருந்து விலக்கு அறிவித்திருக்கிறார். இவ்வாறு வசதிபடைத்தவர்களுக்கான வருமான வரியில் விலக்கு அளித்துள்ள அரசு அதே தொகையை அல்லது அதைவிடக் கூடுதலான தொகையை சாமானியர்களிடமிருந்து வசூலிக்கக்கூடிய முறையில் பெட்ரோல் - டீசல் விலைகளை உயர்த்தி இருப்பதை எப்படி நியாயப்படுத்துகிறது என்றே தெரியவில்லை.

‘‘மக்கள் நலத் திட்டங்கள்’’ என்றால் என்ன? பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் எரிபொருள்களுக்கு வரி விதித்திடும் அதே சமயத்தில் ஊக்குவிப்பு என்ற முறையில் முதலாளிகளுக்கு ஓராண்டில் மட்டும் 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் கார்பரேட் வரியிலிருந்து சலுகை அளிப்பதுதான் ‘‘மக்கள் நலத் திட்டங்களா’’?

எரிபொருள் விலை உயர்வு என்பது மொத்த விலைவாசி அட்டவணை (wholesale price index)யில் வெறும் 0.4 விழுக்காடு உயர்வினையே அளித்திடும் என்று பிரதமர் கூறியிருப்பதானது தவறான கணிப்பேயாகும். ஏனெனில் எரிபொருள் விலை உயர்வு அதனோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அது உணவுப் பொருள்களின் விலைகளையும் உயர்த்திடும். 2009 ஜூலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் உயர்ந்ததை அடுத்து உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்து, பணவீக்கம் அதிகரித்ததை நாம் அறிவோம். தற்சமயம் மக்கள் சுமார் 20 விழுக்காடு அளவிற்கு உணவுப் பொருள்களின் விலை உயர்வால் விழிபிதுங்கி அல்லாடிக்கொண்டிருக்கக்கூடிய இத்தருணத்தில் இவ்வாறு பெட்ரோல் - டீசல்களின் விலைகளை உயர்த்துவது அவர்கள் வாழ்வில் சொல்லொண்ணாத் துயரத்திற்கே இட்டுச் செல்லும்.
இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை உயர்வை பிரதமர் மிகவும் தடித்தனமான முறையில் நியாயப்படுத்தி இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது. பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் மேல் விதிக்கப்பட்டுள்ள சுங்க மற்றும் கலால் வரிகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மீண்டும் வன்மையாக வலியுறுத்துகிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
(ச.வீரமணி)