Showing posts with label jnu. Show all posts
Showing posts with label jnu. Show all posts

Thursday, November 3, 2016

நாட்டிலுள்ள நிலைமை அறிவிக்கப்படாத அவசரநிலையைப் பிரதிபலிக்கிறது பிரகாஷ்காரத் கண்டனம்



புதுதில்லி, நவ. 4-
நாட்டிலுள்ள நிலைமை அறிவிக்கப்படாத அவசரநிலையைப் பிரதிபலிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறினார்.
ஜேஎன்யு மாணவர் நஜீப் காணாமல் போய் இருபது நாட்களுக்கும் மேலாகிவிட்டது. அவரைக் கண்டுபிடிப்பதற்கு ஜேஎன்யு நிர்வாகமோ, தில்லி காவல்துறையோ உருப்படியாக முயற்சிகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. எனவே இதனைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜேஎன்யு வளாகத்தில் வியாழன் அன்று கண்டனக் கூட்டம் நடத்தினார்கள், இதில் பங்கேற்று உரையாற்றும்போது பிரகாஷ் காரத் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசியதாவது:
"அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டிருந்த அந்தக்காலத்திலும்கூட, காவல்துறையினர்  ஜேஎன்யு  வளாகத்திற்குள் நுழைந்தபோது, மாணவர்கள் சரண் அடைந்திடவில்லை. இத்தகைய சோதனைக் காலங்களில் ஜேஎன்யு மாணவர் பேரவைக்கு அனைத்து மாணவர்களும் ஒன்றுபட்டு நின்று ஆதரித்திட வேண்டும். 
மத்திய ஆட்சியாளர்கள் ஜனநாயக சிந்தனைகளை நசுக்கி, இந்த பல்கலைக்கழகத்தின் மாண்புகளையே அழித்து ஒழித்துவிடவேண்டும் என்று விரும்புகிறார்கள்.  அதனை ஒருபோதும் அனுமதித்திட முடியாது."
இவ்வாறு பிரகாஷ்காரத் பேசினார்.
அரவிந்த் கேஜரிவால்
கூட்டத்தில் பங்கேற்ற தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது:
"மக்களின் அதிகாரத்தால் மட்டுமே காணாமல் போன நஜீம் அகமதை மீண்டும் கொண்டுவர முடியும். நஜீம் அகமதுவுக்காக இங்கே நடைபெறும் கூட்டம் போன்று வளாகத்திற்கு வெளியிலேயும் நடத்திட வேண்டும். 
இந்தியா கேட் முன்பு நான் அனைவரும் மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து அமர்ந்திடுவோம். நாடு முழுதுமிருந்து மாணவர் அமைப்புகளின் சார்பில் தூதுக்குழுவினரை அழைத்திடுவோம். நஜீப் அகமது திரும்ப வராவிட்டால், இளைஞர்களின் வாக்கு இனி நமக்குக் கிடைக்காது என்று மத்திய அரசை உணரச் செய்திடுவோம்.
நஜீப் அகமது காணாமல் போயுள்ள விவகாரத்தில் ஏபிவிபி-க்கு பின்னே ஆர்எஸ்எஸ் இயக்கம் இருப்பதால், தில்லி காவல்துறை உருப்படியான விசாரணை எதையும் செய்திடாது. ஏபிவிபி மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட ஜேஎன்யு துணை வேந்தரும் பயப்படுகிறார். அவ்வாறு அவர் செய்தாரானால் தானும் காணாமல் போய்விடுவோமோ என்று அவர் பயப்படுகிறார்.
ஆர்எஸ்எஸ்க்கு எதிராகவோ, ஏபிவிபிக்கு எதிராகவோ அல்லது பாஜகவிற்கு எதிராகவோ எவரேனும் குரல் எழுப்பினால், அவர்கள் தேச விரோதி என்று முத்திரை குத்தப்படுவார்கள் அல்லது காணாமல் போவார்கள். 
நஜீப் மட்டும் அம்பானியின் மகனாக இருந்திருந்தால் மோடிஜி இந்நேரம் அவரைப் பார்ப்பதற்காகப் பறந்து வந்திருப்பார். ... ஆனால் இது எல்லாம் அவர் கவனத்தை ஈர்க்காது.
பாஜக இந்துக்களுக்கான ஒரு கட்சியும் இல்லை, முஸ்லீம்களுக்கான ஒரு கட்சியும் இல்லை. அதிகாரத்திற்காகத் தன் சொந்தத் தந்தையைக் கூட விற்க அவர்கள் தயங்க மாட்டார்கள். குஜராத்தில் கடந்த 40 ஆண்டு காலமாக ஆட்சியில் அவர்களை அமர வைத்த பத்திதார்களைக் கூட அவர்கள் தாக்கினார்கள். தலித்துகளைத் தாக்கினார்கள். முன்னாள் ராணுவ வீரர் இறந்ததற்காகத் துக்கம் அனுசரிக்கும் அவரது குடும்பத்தாரையும் தாக்கினார்கள்."
இவ்வாறு அரவிந்த் கேஜரிவால் பேசினார். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர், மணிசங்கர் ஐயர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ)யைச் சேர்ந்த கவிதா கிருஷ்ணன், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கே.சி. தியாகி, ஆகியோருடன், ஜார்கண்ட் மாநிலத்தில் மாட்டுக்கறி வைத்திருந்தது தொடர்பாக காவல்நிலையத்தில் லாக்கப்பில் இருந்த  மினாஜ் அன்சாரியின் குடும்பத்தைச் சேர்ந்தவரும் உரையாற்றினார்கள். 
கூட்டத்தில் பங்கேற்ற நஜீப்பின் தாயார், "என் மகன் காணாமல் போய் 20 நாட்களாகிவிட்டதே, எங்கே என் மகன்? ஏன், எவராலேயுமே என் மகனைக் கண்டுபிடித்துத் தர முடியவில்லை?" என்று கோரி கதறியழுத காட்சி கூட்டத்திலிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.
(ந.நி.)
(படம் இணைத்திருக்கிறேன். )
படக்குறிப்பு: ஜேஎன்யு வளாகத்தில் பிரகாஷ்காரத் உரையாற்றுகிறார். சசி தரூர், நஜீப் தாயார் மற்றும் சகோதரி உடன் உள்ளனர்.