

புதுதில்லி, நவ. 20-
உலகப் பொருளாதார நெருக்கடிக்கு மாற்று சோசலிசமே என்றும், மார்க்சிச லெனினிசத்தில் நம்பிக்கை கொண்டுள்ள கட்சிகளின் அடிப்படையில் தொழிலாளி வர்க்கம் புரட்சிகர தத்துவார்த்தப் போராட்டத்தை வலுப்படுத்தி முன்னெடுத்துச்செல்ல அணிதிரள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி அறைகூவல் விடுத்தார்.
சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு வெள்ளியன்று காலை புதுதில்லியில் உள்ள ராமடா பிளாசா ஓட்டலில் உள்ள ரீகல் அரங்கில் தொடங்கியது. உலகம் முழுதுமிருந்து 48 நாடுகளிலுள்ள 58 கட்சிகளைச் சேர்ந்த 87 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாடு, புரட்சிகர மற்றும் சர்வதேச கீதம் இசைத்தபின் தொடங்கியது. மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய செயற்குழு உறுப்பினர் பல்லவ சென்குப்தா வரவேற்றார். பின்னத் மாநாட்டின் வரைவு பிரகடனத்தை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே சீத்தாராம் யெச்சூரி இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
‘‘சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாட்டை முதன்முறையாக ஆசியக் கண்டத்தில் நடத்துகிறோம். இம்மாநாட்டின் ஆய்வுப் பொருளாக, மாநாட்டு வழிநடத்தும்குழு, ‘‘ சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, தொழிலாளர் மற்றும் மக்கள்திரளின் போராட்டம், மாற்றுக் கொள்கை, கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் பங்கு’’ என்று வரையறுத்திருக்கிறது. இன்றைய உலக நிலைமையில் இது மிகவும் சரியான கருப்பொருளாகும்.
இன்றையதினம் ஏற்பட்டிருக்கிற உலக முதலாளித்துவ நெருக்கடி என்பது ஒரு சில முதலாளித்துவ பொருளாதாரவாதிகள் கூறுவதுபோல், ‘ஒருசிலரின் பேராசையின் விளைவாக ஏற்பட்டதல்ல’, மாறாக இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி என்பது மார்க்ஸ் குறிப்பிட்டதைப்போல, ‘‘மனிதசமுதாயத்தைச் சுரண்டுவதையே அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்புமுறையில் முடிவு அப்படித்தான் அமைந்திடும்’’. இப்போது அதற்கு ஏற்பட்டிருக்கிற மரண அடியிலிருந்து எவரும் அதனைக் காப்பாற்றிட முடியாது. உலகின் பல நாடுகளில் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் அதனைக் காப்பாற்றிட கடுமையான முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், அவற்றால் அது சவக்குழிக்குச் செல்வதை ஒரு சில நாட்களுக்குத் தள்ளிப்போட முடியுமே தவிர, நிச்சயமாக அதனைத் தடுத்து நிறுத்திட முடியாது.
சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தகர்ந்த நிகழ்வுகளானது உலக சோசலிச சக்திகளுக்கு ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ஏகாதிபத்தியம் கடந்த இருபதாண்டுகளில் உலகை ஆளும் தன் மேலாதிக்க நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்தி, தன் ஆதிக்கத்தை உலகம் முழுதும் செலுத்தியது. ஆயினும் அதனால் அது விரும்பிய அளவிற்கு முன்னேற முடியவில்லை. உலகில் பல நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கெதிராக வளர்ந்து வந்த எதிர்ப்பு இயக்கங்கள், அதனை வேகமாக முன்னேற விடவில்லை.
லெனின், ஏகாதிபத்தியத்தை, ‘‘சோசலிசப் புரட்சிக்கு முந்தைய நிலையில் உள்ள’’ முதலாளித்துவத்தின் இறுதி மற்றும் உச்சகட்டம் என்று வரையறுத்தார். முதலாளித்துவம் நிர்மூலமாகிவிடும் என்றும் சோசலிசம் மலர்ந்துவிடும் என்றும் இதனைப் பலர் இயந்திரரீதியாக எடுத்துக்கொண்டனர். ஏகாதிபத்தியத்தை வீழ்த்திட பல கட்டங்கள் வரலாற்று ரீதியாக உண்டு. அதற்கு சோசலிச ஒழுங்கு வளர்ந்தாக வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில், ஏகாதிபத்தியமும் உலக முதலாளித்துவமும், பிரம்மாண்டமான முறையில் மூலதனக்குவிப்பினை ஏற்படுத்துவதன் மூலம் உச்சபட்ச லாபத்தை எட்டிட முயன்றுகொண்டிருக்கின்றன. இது சர்வதேச நிதி மூலதனத்திற்கு இட்டுச் சென்றது. சர்வதேச நிதிமூலதனம் நவீன தாராளமயக் கொள்கையை வரையறுத்தது. முதலில் இது நாடுகளுக்கிடையேயிருந்த தடைகளை நீக்கியது. இத்தகைய வர்த்தக தாராளமயம், நாடுகளுக்குள் செயல்பட்டு வந்த உள்ளூர் உற்பத்தியாளர்களையும், சிறிய அளவில் நாட்டிற்குள் மட்டுமிருந்த தொழில்களை ஒழித்துக்கட்டியது. இவ்வாறு மூலதனம் தாராளமாக உலகம் முழுதும் சென்றதானது, பன்னாட்டு நிறுவனங்களை பல நாடுகளிலும் உற்பத்திச் சொத்துக்களைப் பெற்று, மூலதனக் குவிப்பைப் பல்மடங்கு பெருக்கியது.
அடுத்ததாக, சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் மூலமாக அனைத்து நாடுகளுக்கும் கடன்களை வழங்கி, உலகையே ஏகாதிபத்தியத்தின் வலைக்குள் சிக்க வைத்திருக்கிறது.
மூலதனத்தின் வரலாற்றின் நெடுகிலும் அத மூலதனக் குவிப்பை இரு வழிகளில் மேற்கொண்டு வந்திருக்கிறது. முதலாவதாக, அபரிமிதமான உற்பத்தி மூலமாக மூலதன விரிவாக்கம். இரண்டாவதாக, பலாத்காரம் மூலமாக. இதன் கொடூரத்தன்மையை மார்க்ஸ் மூலதனத்தின் ஆரம்பநிலையிலான குவிப்பு என்று வரையறுக்கிறார்.
உலகமயத்தின் காரணமாக, பெரும் பகுதி மக்களின் வாங்கும் சக்தி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக, நிதி மூலதனம் விரைவாக லாபத்தை எட்ட வேண்டும் என்பதற்காக, தவணைமுறையில் அதிகமான நபர்களுக்கு கடன்கள் அளிக்க முன்வந்தது. ஆயினும் கடனைப் பெற்றவர்களால் நிர்ணயிக்கப்பட்ட தேதிகளுக்குள் கடன்களை மீள செலுத்த முடியாது, கடனாளிகள் மிகவும் இடிந்துபோனதானது, இந்த முதலாளித்துவ முறையையும் முடமாக்கியுள்ளது. இதுவே இப்போது மிகப்பெரிய அளவில் நடந்துள்ளது.
சரியானமுறையில் ஒரு வலுவான அரசியல் மாற்று உலக அளவில் இல்லாத நிலையில், முதலாளித்துவம் தனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடியிலிருந்து மீண்டுவிடும். ஆனாலும் அதற்காக அது மக்களை மேலும் கடுமையான முறையில் சுரண்டலுக்குள்ளாக்கும். மக்களின் உடைமைகளை மேலும் வலுக்கட்டாயமாக பறித்திட முயலும்.
ஏகாதிபத்தியம், தன்னுடைய தகவல் - தொலைத்தொடர்பு - கலைநிகழ்ச்சிகளைப் பரப்பிடம் கார்பரேட் ஊடகங்களால் முதலாளித்துவத்திற்கு மாற்றைக் கூறிடும், நமக்கு எதிராக வலுவான முறையில் தத்தவார்த்த தாக்குதலைத் தொடுத்துள்ளன. உலகமயத்தின் கலாச்சாரம் என்பது மக்களைத் தங்களுடைய அன்றாடப் பிரச்சனைகள் குறித்தும் அதன் காரணங்கள் குறித்தும் அறிந்து கொள்ளாமல் வைத்திருப்பதேயாகும். இவர்களது கண்ணோட்டத்தில் கலாச்சாரம் என்பது மக்களை, தங்களுடைய வறுமை மற்றும் துன்ப துயரங்களுக்கான காரணங்களை அறிய முடியாமல் செய்து, திசை திருப்புவதேயாகும்.
சமீபத்தில் உலகம் முழுதும் நடைபெற்றுவரும் தொழிலாளர்வர்க்கத்தின் போராட்டங்கள் என்பதை அநேகமாகத் தாங்கள் பெற்ற உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத்தான் நடைபெற்றிருக்கின்றன.
ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக்கத்தை வலுப்படுத்திக்கொண்டிருந்த போதிலும், அது உலகைப் பல்வேறு முனைகளில் தாக்கியபோதிலும், அது முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியில் சிக்கி அதன் விளிம்புநிலைக்கு வந்துவிட்டது. இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தத்தைவிட மேலும் கடுமையான முறையில் அது நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறது.
இவ்வாறு நாம் சொல்வதனால், முதலாளித்துவம் தானாகவே நிர்மூலமாகிவிடும் என்று பொருளல்ல. அது தூக்கியெறியப்பட்டாக வேண்டும். இதற்கு மார்க்சிச லெனினிசத்தில் நம்பிக்கை கொண்டுள்ள கட்சிகளின் தலைமையில் உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கம் புரட்சிகர சித்தாந்தப் போராட்டத்தை வலுப்படுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் அணிதிரள வேண்டும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
(ந.நி.)