Showing posts with label aiks. Show all posts
Showing posts with label aiks. Show all posts

Monday, July 23, 2018

ரக்பார் கான் குண்டர் கும்பலால் கொலை அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்



புதுதில்லி, ஜூலை 23-
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் ரக்பார் கான் என்னும் பால்பண்ணை வியாபாரி குண்டர் கும்பலால் காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டதற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பாஜகவின் ஆட்சியில் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் என்னும் பகுதியில் குண்டர் கும்பலால் முஸ்லீம்கள் கொலை செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெஹல்கான், உமர்கானை அடுத்து இப்போது ரக்பார் கான் கொல்லப்பட்டிருக்கிறார். ஒரு விலங்கின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படும் கொடுமை இந்தியாவில் மட்டும்தான் சாத்தியம்.
பாஜக ஆட்சியின் கீழ் ஆர்எஸ்எஸ்-இன் கீழ் இயங்கும் பல்வேறுவிதமான  அமைப்புகளும் முஸ்லீம்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் வெறுப்புப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு வருவதன் விளைவே இத்தகைய காட்டுமிராண்டித்தனமான கொலைகளாகும். கொலை செய்யும் குண்டர்கள் தண்டிக்கப்படுவதில்லை. மாறாக பாஜக அமைச்சரால் அவர்கள் மாலை அணிவித்து பாராட்டப்படுகிறார்கள். இத்தகைய இழி சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. பசுவின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படுவதை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளபின்னரும் இத்தகைய சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பாஜக அரசாங்கங்களும், அதன் கீழ் இயங்கும் குழுக்களும் மனிதகுலத்திற்கு எதிராகக் குற்றங்கள் புரிவதை மாற்றிக்கொள்ளவில்லை.
ரக்பார் கான் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைத்துக் கிரிமினல்களும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் விசாரணை தொடரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோருகிறது. மேலும், ரக்பார் கானின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இத்தகைய இழி சம்பவங்கள் இனியும் தொடராது இருக்கும்விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும்  ராஜஸ்தான் மாநில அரசை அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோருகிறது.
இவ்வாறு ஹன்னன்முல்லா அறிக்கையில் கோரியுள்ளார்.
(ந.நி.)



Wednesday, November 23, 2016

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்திருப்பதைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் முன் தமிழக விவசாயிகள் கண்டனப் பேரணி



புதுதில்லி. நவ. 23-
தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களைப் புறக்கணித்து நடந்து கொள்ளும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தில்லியில் நாடாளுமன்ற வீதியின்முன்பு, புதன்கிழமையன்று மாபெரும் கண்டனப் பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் இன்றையதினம் காவிரியில் போதுமான நீர் வராதததன் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டுவரும் விதத்திலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வலியுறுத்தியும். காவிரி நீர்ப் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழுவை உடனே அமைத்திட வலியுறுத்தியும், கருகும் பயிர்களைக் காப்பாற்றிட கர்நாடக மாநில அரசிடமிருந்து தேவையான தண்ணீரைப் பெற்றுத்தர வலியுறுத்தியும், மத்திய அரசு, கர்நாடக அரசுடன் இணைந்துகொண்டு தமிழக அரசுக்குத் துரோகம் செய்வதைக் கண்டித்தும் இந்தப் பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரணி/ஆர்ப்பாட்டத்த்ற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. பாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ, தலைமை வகித்தார்.  இப்பேரணி/ஆர்ப்பாட்டம் தொடர்பாக கே. பாலகிருஷ்ணன் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:
“தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாட்டிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைநகர் தில்லிக்கு வந்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நீண்ட காலத்திற்கு முன்பே தீர்ப்பு வழங்கியிருந்தபோதிலும், இதுநாள்வரையிலும் காவிரி நடுவர் நீதிமன்றத்தை அமைத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு, காவிரி நடுவர் நீதிமன்றத்தை அமைக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தும்கூட மத்திய அரசு அதற்கு செவிமடுத்து அமைக்கவில்லை என்பதுமட்டுமல்ல, அமைக்க முடியாது என்றும் அவ்வாறு மத்திய அரசுக்குக் கட்டளையிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணவாக்குமூலம் தாக்கல் செய்திருக்கிறார்கள்.
இது மத்திய அரச, தமிழக விவசாயிகளுக்கு இழைத்துள்ள மாபெரும் துரோகமாகும். இது தமிழக அரசையும் தண்டிக்கக்கூடிய விதத்தில் இருக்கிறது. எல்லா மாநிலங்களுக்கும் நீதி வழங்கக்கூடிய விதத்தில் பொதுவாக நடந்துகொள்ள வேண்டிய மத்திய பாஜக அரசு, கர்நாடக அரசுக்கு சார்பாக நடந்து கொண்டு, தமிழக அரசுக்கு துரோகம் செய்கிறது. இதனைக் கண்டிக்கக்கூடிய விதத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு  காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத காரணத்தால், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளாத நாளே இல்லை என்கிற அளவிற்கு அன்றாடம் தற்கொலைகள் நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 10, 15 நாட்களில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். 25 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் காய்ந்து கருகிவிட்டன.30 லட்சம், 40 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வேலையில்லாமல் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
எங்கள் குறைகளை பிரதமர் மோடி காதுகொடுத்து கேட்பார் என்று வந்தோம். ஆனால் பிரதமர் எங்களைப் பார்ப்பதற்கு மறுத்ததோடு மட்டுமல்லாமல், கர்நாடக அரசின்பக்கம் சாய்ந்துகொண்டு தமிழக அரசுக்குத் துரோகம் செய்துவிட்டார் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.“
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார்.
இப்பேரணி/ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் கண்டன உரை நிகழ்த்தினார்.
டி.கே.ரெங்கராஜன்
அப்போது அவர் கூறியதாவது:
“காவிரியில் தண்ணீர் வராததன் காரணமாக காவிரிப் பாசன பகுதி விவசாயிகள் நாள்தோறும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். மத்திய அரசோ. மாநில அரசோ காவிரிப்பாசனப் பகுதி விவசாயிகளின் பிரச்சனைகள் பற்றி கிஞ்சிற்கும் கவலைப்படாமல் இருக்கிறது. இதனைக் கண்டிக்கும் விதத்தில்தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அடுத்த ஆண்டு கர்நாடக மாநிலத்திற்குத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் தாங்கள் வெற்றிபெற்றுவிடலாம் என்று பாஜகவினர் கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். அதன்விளைவாகத்தான் தமிழக விவசாயிகளுக்கு கர்நாடக அரசுடன் சேர்ந்துகொண்டு மத்திய பாஜக அரசு துரோகம் செய்துகொண்டிருக்கிறது.  இவ்வாறு மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு விரோதமாக, பாமர மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. விளைவு, நாள்தோறும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சனைகளை ஊடகங்களும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.“
இவ்வாறு டி.கே.ரெங்கராஜன் கூறினார்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். திருநாவுக்கரசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள்.
(ந.நி.)