Showing posts with label Veera Tamil Shorthand Training. Show all posts
Showing posts with label Veera Tamil Shorthand Training. Show all posts

Saturday, May 30, 2020

வீரா தமிழ்ச் சுருக்கெழுத்து 1




வீரா தமிழ்ச் சுருக்கெழுத்து

அன்பார்ந்த நண்பர்களே,
தமிழ்ச் சுருக்கெழுத்து தொடர்பாக நாள்தோறும் பத்து நிமிடங்கள் யூ-ட்யூப் வலைதளத்தில் பதிவிடலாம் என முடிவு செய்திருக்கிறேன். எந்த அளவிற்கு வெற்றிகரமாக இருக்கும் என்று காலம்தான் சொல்ல வேண்டும்.
அன்பு நண்பர்களே,
நான் தமிழ்ச் சுருக்கெழுத்தில் நிமிடத்தற்கு 150 வார்த்தைகள் தேர்வில் மாநிலத்தில் முதலாவதாகவும் ஒரேயொரு ஆளாகவும் தேர்ச்சி பெற்றவன் என்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். நான் 1976 முதல் 1986 வரை ஆங்கிலச் சுருக்கெழுத்து மற்றும் தமிழ்ச் சுருக்கெழுத்துக் கற்றுக் கொண்டவன். தஞ்சை மாவட்டத்தில் குற்றவியல் நீதித்துறையில் ஆராய்வாளராக இருந்த நான், சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றதன்காரணமாக சுருக்கெழுத்தராகவும் மாறினேன். பின்னர் தமிழ்ச் சுருக்கெழுத்து உயர்வேகம் (நிமிடத்திற்கு 150 வார்த்தைகள்) தேர்வில் வெற்றிபெற்றதால், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையிலும் தமிழ் நிருபராகப் பணியாற்றி இருக்கிறேன்.
நான் நீதிமன்றத்தில் பணியாற்றிய காலத்தில் பல்வேறு சிரமங்களுடன்தான் சுருக்கெழுத்து கற்றுக்கொண்டேன். ஆங்கிலச் சுருக்கெழுத்திற்கு - பிட்மேன் முறைக்கு – ஏராளமான நூல்கள் உண்டு. அகராதியே மூன்று வகையில் உண்டு. கையடக்க அகராதி. வெறும் சுருக்கெழுத்து வடிவங்கள் உள்ள அகராதி மற்றும் ஆங்கிலம் – ஆங்கிலச் சுருக்கெழுத்து வடிவம் – மற்றும் அதற்கான பொருளுடன் கூடிய அகராதி என உண்டு.
தமிழைப் பொறுத்தவரை சீனிவாசராவ் எழுதிய தமிழ்ச் சுருக்கெழுத்து நூலை, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விவாதப்பதிவாளராக இருந்த அனந்தநாராயணன் அவர்கள் மிகவும் சிறப்பாக அரசின் உதவியுடன் வெளிக்கொண்டு வந்திருந்தார். அதைத்தான் நான் பயிற்சி செய்தேன். அந்தக் காலத்தில் குமுதல் வார இதழில் சுருக்கெழுத்துக்கு என்று ஒரு பக்கம் அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்ததையும் அவற்றின் தொகுப்பையும் நான் வைத்திருந்தேன். தமிழ்ச்சுருக்கெழுத்திற்கு என்று தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார் என்று சொன்னால் அது மிகையல்ல.
எனினும், அவரே ஓய்வுபெற்றபின் இப்போது வெளியிட்டுள்ள தமிழ்ச் சுருக்கெழுத்து நூலில் எண்ணற்ற மாற்றங்களைச் செய்து வெளியிட்டிருக்கிறார். ‘மந்திரிகள்’ ‘அமைச்சர்களாகி’ இருக்கிறார்கள். ‘கனம் சபாநாயகர் அவர்களேங என்பது ‘மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே’ என்று மாறியிருக்கிறது. ‘கஷ்டநிஷ்டூரங்கள்’ போன்ற வார்த்தைகள் இப்போதுள்ள நூலில் இல்லை.
இதேபோல் நான் பயிற்சி செய்த காலத்தில் எண்ணற்ற சுருக்கெழுத்து வடிவங்களை நானே உருவாக்கி இருக்கிறேன். நான் நிமிடத்திற்கு 150 வார்த்தைகள் தேர்வில் வெற்றி பெறுவதற்கும், என்னிடம் பயின்ற மாணவர்களும் தமிழ்ச்சுருக்கெழுத்துத் தேர்வுகளை நேரடியாகவே முதுநிலைத் தேர்வுக்குச் சென்று, முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்கும் அந்தச் சுருக்கெழுத்து வடிவங்கள் பெரிதும் உதவின என்று நான் உளமார நம்புகிறேன்.
எனவே அவற்றை நான் எதிர்கால சந்ததியினருக்கு உதவிடும் விதத்தில் இந்த வலைத்தளத்தின் மூலம் பதிவேற்றலாம் என முடிவு செய்திருக்கிறேன். எவருக்கேனும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் என் மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவித்தீர்களானால் அவர்களுக்குத் தெளிவுபடுத்திடவும் தயாராக இருக்கிறேன்.
நான் உருவாக்கிய சுருக்கெழுத்து வடிவங்களில் நாள்தோறும் சுமார் பத்து வடிவங்களை அறிமுகப்படுத்தலாம் என எண்ணியிருக்கிறேன்.
1)   ‘என்று’ என்பதற்கும் ‘என்ற’ என்பதற்கும் தமிழ்ச் சுருக்கெழுத்துப் புத்தகத்தில் ‘ஏனென்றால்’ என்பதற்கு இருக்கின்ற வரிவடிவமான ‘வரிக்கு மேலே ஒரு புள்ளி’ (a dot will be put above the line) வைத்திடுக. ஏனெனில் ‘ஏனென்றால்’ என்பது ‘என்ற/என்று’ வரக்கூடிய அளவிற்கு அதிக அளவிற்கு வராது. எனவே ‘ஏனென்றால்’ என்று வரும்போது வேறு விதத்தில் எழுதிக்கொள்ளலாம்.
2)   இதன் கிளைச்சொற்களான, ‘என்றும்’ என்பதற்கு இரு புள்ளிகள், ‘என்றென்றும்’ என்பதற்கு மூன்று புள்ளிகள், ‘என்றுதான் என்பதற்கு : என்பதுபோல் மேலேயும், கீழேயும் புள்ளிகள், ‘என்றும்தான்’ என்பதற்கு ‘என்றும் என்பதற்கான இருபுள்ளிகளை வைத்துவிட்டு, கீழே ஒரு புள்ளி வைத்திடுக.
3)   ‘என்றால்’ என்று வரும்போது அதே புள்ளியை வரியை ஒட்டி (on the line) மேல் வைத்திடுக. கிளைச் சொற்களும் மேலே எழுதியது போன்றே ‘என்றாலும்’, ‘என்றால்தான்’, ‘என்றாலும்தான்’ என வந்தாலும் எழுதிடலாம். ஒன்றும் பிரச்சனை கிடையாது.

ஆங்கிலத்தில்  a என்பதற்குப் போடக்கூடிய வடிவத்தை ‘என்று/என்ற’ என்பதற்கும்,  the  என்பதற்குப் போடக்கூடிய வடிவத்தை ‘என்றால்’ என்பதற்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
4)   சுருக்கெழுத்துப் புத்தகத்தில் ‘இருக்கிறது/இருக்கின்றன’ என்பதற்கு ஆங்கிலத்தில் ‘should’ என்பதற்குப் பயன்படுத்தும் வடிவத்தைப் பயன்படுத்தி இருப்பார்கள். இந்த வடிவத்தை ‘இருக்கிறது’ என்பதற்கு மட்டும் வைத்துக் கொள்க. இருக்கின்றன என்பதற்கு வேறு வடிவத்தைப் பின்னர் கூறுகிறேன்.


என் மின்னஞ்சல் முகவரி: veeramani1107@gmail.com,
என் இடுகை முகவரி: illakkia.blogspot.com
(தொடரும்)