Showing posts with label The Hindu article on Poverty Line. Show all posts
Showing posts with label The Hindu article on Poverty Line. Show all posts

Tuesday, July 30, 2013

ஏழைகளை எண்ணுவதில் நேர்மையின்மையைக் கடைப்பிடிக்கும் திட்டக் கமிஷன்:உத்சா பட்நாயக்


(திட்டக் கமிஷனின் கயமைத்தனமான கணக்குமுறையின் காரணமாக நம் நாட்டின் வறுமை வீழ்ச்சியடைந்திருப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது.)
திட்டக் கமிஷன்  20011-12ஆம் ஆண்டில் நாட்டில் வறுமை குறைந்துவிட்டதாகக் கூறி, மறுபடியும் நம்மை சங்கடத்திற்குள்ளாக்கி இருக்கிறது. நகர்ப்புறங்களில் 13.7 விழுக்காட்டினரும், கிராமப்புறங்களில் 25.7 விழுக்காட்டினரும் மட்டுமே வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள் என்று எதார்த்தமற்ற அளவுகோளை அது வரையறுத்திருக்கிறது. அதாவது நகர்ப்புறங்களில்  மாதத்திற்கு ஆயிரம் ரூபாயும் (நாளொன்றுக்கு ரூ.33.33ம்), கிராமப்புறங்களில் மாதத்திற்கு 816 ரூபாயும் (நாளொன்றுக்கு ரூ.27.20ம்) சம்பாதிப்பவர்கள் வறுமையைத் தாண்டிவிட்டவர்களாம். இந்தத் தொகையைக் கொண்டு நகர்ப்புறத்தில் ஒருவர் முடிவெட்டிக்கொள்ளக்கூட முடியாது என்ற நிலை இருக்கையில், திட்டக்கமிஷனானது  அந்தத் தொகையில் ஒருவர் வாழ்க்கைக்குத் தேவையான உணவு மற்றும் உணவு அல்லாத அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்வார் என்று தெரிவித்திருக்கிறது. இவர்களது கணக்கின்படி, 2009-10க்குப்பிறகு கடந்த இரு ஆண்டுகளில்வறுமை என்பது மிகப்பெரிய அளவில், கிராமப்புறங்களில்  எட்டு விழுக்காடு புள்ளிகளும், நகர்ப்புறங்களில் ஏழு விழுக்காடு புள்ளிகளும் வீழ்ச்சியடைந்திருக்கிறதாம். இந்த இரு ஆண்டுகளிலும் நாட்டின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவியதைப்பற்றியோ, வேலைவாய்ப்பு வளர்ச்சி மிகவும் மோசமாக இருந்தது பற்றியோ, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விலைவாசிகள் விஷம்போல் ஏறியதைப் பற்றியோ திட்டக்கமிஷன் கொஞ்சமாவது  பொருட்படுத்தியதாகவே தெரிய வில்லை. இப்போது பின்பற்றும் கயமைத்தனமான கணக்கீட்டு முறையையே திட்டக்கமிஷன் தொடர்ந்து பயன்படுத்துமேயானால், அடுத்த நான்காண்டுகளில் நாட்டின் வறுமைப் பட்டியலில் எவருமே இருக்க மாட்டார்கள்.
உண்மை நிலை என்ன?
இவ்வாறு வறுமை மட்டம் குறைந்திருக்கிறது என்று ஆட்சியாளர்கள் சொல்வது முழுமையாக தவறான கணக்கீட்டின் அடிப்படையிலேயேயாகும்.  உணவு அல்லாத அத்தியாவசிய செலவினங்கள் (வாடகை, போக்குவரத்து, உடல்நலம், கல்வி முதலான) அனைத்தையும் ஒருவர் பூர்த்திசெய்தபிறகு, கிராமப்புறங்களில் உள்ள ஒருவர் நாள் ஒன்றுக்குத் தனக்குத் தேவையான 220 கலோரி உணவை உட்கொள்வதற்கு இயலாத நிலையில் 75.5 விழுக்காட்டினரும், நகர்ப்புறங்களில் நாள் ஒன்றுக்குத் 2100 கலோரி உணவை உட்கொள்வதற்கு, 73 விழுக்காட்டினரால் இயலவில்லை என்பதுமே எதார்த்தமாகும்.  2004-5ஆம் ஆண்டில் இது முறையே கிராமப்புறத்திற்கு 69.5 விழுக்காடாகவும், நகர்ப்புறத்திற்கு 64.5 விழுக்காடாகவும் இருந்தது. எனவே இந்தப் பத்தாண்டுகளில் வறுமை என்பது கணிசமாக வளர்ந்திருக்கிறது.  இப்போதுள்ள பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பில் மந்த நிலைமை ஆகியவற்றின் காரணமாக நிலைமைகள் நிச்சயம் மோசமாகத்தான் இருக்க முடியும்.
தனியார் மருத்துவமனைகளுக்கு ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்றார் என்றால்  அவருக்கு ஏற்படும் செலவுகள், கல்வி, மின்சாரம், பெட்ரோல், எரிவாயு போன்றவற்றிற்குப் பயன்படுத்தும் செலவுகள் ஆகியவற்றுடன் உணவுப் பணவீக்கத்தால் கடுமையாக உயர்ந்துள்ள உணவுப்பொருள்களின் விலை ஆகியவற்றால் பொது விநியோக முறை மூலம் தான்யங்கள் வாங்கமுடியாத நாட்டின் பெரும்பான்மை மக்கள் எவரும் கற்பனைசெய்ய முடியாத அளவிற்கு மிகவும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் உட்கொள்ளும் சத்தான உணவு என்பது முன்பிருந்த நிலையைவிட மிகவும் மோசமான நிலைக்கு வீழ்ச்சியடைந்துவிட்டது என்பதுமே உண்மையாகும்.
இவ்வாறு எதார்த்த உண்மைகளைக் கணக்கில் கொள்ளாமல், மிகவும் குறைவான மற்றும் மக்களின் வறுமைக்கோடு வீழ்ச்சியடைந்துவிட்டதான மதிப்பீடுகளை திட்டக்கமிஷன்அளிக்க வேண்டியதற்கான அடிப்படைக் காரணம்தான் என்ன? நடைமுறையில் கமிஷனானது வறுமைக்கோடு தொடர்பாக தான்அளித்திட்ட தன் சொந்த வரையறையையே கைவிட்டுவிட்டது. 1973-74ஆம் ஆண்டில் மட்டும்தான் அது தன்னுடை சொந்த வரையறையை பிரயோகித்தது. அதன்பின்னர், கடந்த 40 ஆண்டுகளில் ஒருதடவை கூட மக்கள் உண்மையிலேயே செலவு செய்யும் அளவை வைத்து அது கணக்கிடவே இல்லை. ஆனால், தேசிய மாதிரி சர்வே ஐந்தாண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ளும் புள்ளிவிவரங்களைக் கொண்டு திட்டக் கமிஷன் இதனை மிகவும் எளிதாகச் செய்திட முடியும். ஆனாலும் அவ்வாறு செய்ய அது முன்வரவில்லை.
மாறாக, திட்டக் கமிஷன்  1973-74ஆம் ஆண்டில் விலைவாசி குறியீட்டெண்ணைக் குறிப்பதற்கு, மாதாந்திர வறுமைக்கோடு நகர்ப்புறங்களில்  ரூ.56 என்றும் கிராமப்புறங்களில் ரூ.49 என்றும்  மேற்கொண்ட கணக்கீட்டை  மட்டும் பிரயோகிக்கிறது. டெண்டுல்கர் குழு இந்த அம்சத்தை மாற்றவில்லை. அது குறிப்பிட்ட விலைவாசிக் குறியீட்டெண்ணை மட்டும் மாற்றியிருக்கிறது.
விலைவாசிக் குறியீட்டெண் குறிப்பிட்ட கால அளவில் ஒருவர் மேற்கொள்ளும் உண்மையான செலவுகளைப் பிரதிபலிப்பதில்லை.  1973-74இல் உயர் மட்ட அரசு அலுவலர் ஒருவர் ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஊதியம் பெற்றார் என்றால், அவரது சம்பளம் மட்டும் அட்டவணைப்படுத்தப்பட்டால் இன்று அவர் தன் மாதாந்திர ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் பெறுவார். ஆனால் வாழ்க்கைச் செலவினங்களை அட்டவணைப்படுத்தும்போது  அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அரசால் அமைக்கப்பட்ட ஊதியக் குழுக்கள் அங்கீகரித்திருப்பதன் காரணமாக அன்றையதினம் 1000 ரூபாய் ஊதியம் பெற்ற உயர் அரசு அலுவலர் இன்றையதினம் திட்டக்கமிஷன் கணக்கீட்டின்படி 18,000 ரூபாய் மாதாந்திர ஊதியமாகப் பெறவில்லை. மாறாக நான்கு பங்குக்கும் அதிகமாக 70,000 ரூபாய்க்கும் மேலாக ஊதியம் பெற்றுக்கொண்டிருக்கிறார். ஆயினும், வறுமை மதிப்பீட்டைச் செய்வதற்கு மட்டும் அதேபழைய முறையைக் கடைப்பிடிப்பதைத் திட்டக் கமிஷன் தொடர்கிறது. உண்மையில் இது வறுமைக்கோடு (poverty line)என்று சொல்வதைவிட. வறியநிலைக்கான கோட்டைவிட (destitute line) கீழானதாகும்.
மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கும் இல்லாமை நிலைமை
அதிகாரபூர்வமான வறுமைக்கோட்டு வரையறைகள் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேலும் மேலும் கீழே தள்ளிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இவ்வாறு இவர்கள் வறுமைக்கோட்டின் தரத்தைத் தொடர்ந்து கீழிறக்கிக்கொண்டே செல்வதன் காரணமாக, மக்கள் உண்மையில் இல்லாமையை நோக்கி சென்றுகொண்டிருந்த போதிலும்கூட, அவர்கள் ஏதோ முன்னேறிக் கொண்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை எப்போதும் இவர்களது அறிக்கைகள் காட்டிக் கொண்டிருக்கின்றன.  ஒரு பள்ளிக்கூடத்தில் ஆண்டுத் தேர்வில் சென்ற ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விழுக்காட்டை, இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விழுக்காட்டோடு ஒப்பிடவேண்டுமானால் தேர்ச்சி மதிப்பெண் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பது பள்ளி மாணவனுக்கு நன்கு தெரியும். ஒரு பள்ளி முதல்வர் தன் இஷ்டம்போல் மக்களுக்குத் தெரிவிக்காமல் தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்திட முடியாது. அதாவது சென்ற ஆண்டு ஒரு மாணவன் தேர்ச்சி பெற 100க்கு 50 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றிருந்ததை இந்த ஆண்டு 100க்கு 40 மதிப்பெண் எடுத்தால் போதும் என்று தன்னிச்சையாக அவர் குறைத்திட முடியாது. அவ்வாறு அவர் குறைத்துவிட்டு, சென்ற ஆண்டு தேர்ச்சி அடைந்த மாணவர்களைவிட இந்த ஆண்டு அதிகமானவர்கள் தேர்ச்சி அடைந்துவிட்டார்கள் என்று அவர் பீற்றிக்கொள்ளவும் முடியாது. பள்ளியின் தரத்தை மதிப்பிட வேண்டுமானால் இரு ஆண்டும் தேர்ச்சி மதிப்பெண் ஒரே அளவினதாக இருந்தால்தான் சாத்தியம். மாறாக இவ்வாறு தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைத்ததன் மூலம் பள்ளியின் தரம் குறைந்ததாகவே கருத முடியும். பள்ளிக்கூடும் அடுத்த ஆண்டு தேர்ச்சி மதிப்பெண் அளவை மேலும் குறைக்கிறது எனில், அதற்கு அடுத்த ஆண்டு மேலும் மேலும் குறைக்கிறது எனில், அப்பள்ளியில் தேர்ச்சி பெறாத மாணவர்களே இருக்கமாட்டார்கள். 100 விழுக்காடு அளவிற்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக பள்ளி முதல்வர் பீற்றிக்கொண்டிருப்பார்.
கிட்டத்தட்ட இதே அணுகுமுறையைத்தான் அதிகாரபூர்வ வறுமைக்கோட்டு வரையறை குறித்து, திட்டக் கமிஷன் செய்திருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக வறுமைக் கோடுக்கு இருந்த தர நிர்ணயத்தை, திட்டக் கமிஷன் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்திருக்கிறது. இதே பாணியைத் திட்டக்கமிஷன் தொடர்ந்து மேற்கொண்டால், அடுத்த சில ஆண்டுகளில் திட்டக்கமிஷனின் கணக்கீட்டின்படி இந்தியாவில் வறுமையே இருக்காது.
திட்டக்கமிஷன், நகர்ப்புற தில்லி மாநிலத்திற்கு மாதாந்திர வறுமைக்கோட்டுக்கான வரையறையை 2009-10க்கான ஆண்டிற்கு ரூ.1040 என்று வரையறுத்திருந்தது. இன்றையதினம் விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியில் இதர செலவுகள் அனைத்தையும் ஒரு நுகர்வோர் செய்தபின்ஒரு நாளைக்கு 1400 கலோரி உணவை உட்கொள்ளத்தான் அவரால் செலவு செய்ய முடியும்.  ஒருவர் 2100 கலோரி உணவு உட்கொள்ள வேண்டுமானால், மிகச் சரியான வறுமைக்கோடு வரையறை என்பது ரூ. 5,000 ஆகும். நாட்டில் நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கும் உணவுப் பணவீக்கத்தின் காரணமாக உணவுப் பொருள்களின் அதீத விலைகளும், தனியார் மருத்துவமனைகளில் ஏற்படும் கடுமையான செலவினங்களும், மற்றும் போக்குவரத்துக் கட்டணம், மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் போன்றவற்றிக்கு ஆகும் செலவினங்களும் எல்லாம் சேர்ந்து மக்களைத் தங்கள் உணவுக்காகச் செய்திடும் செலவை மிகப்பெரிய அளவில் வெட்டிச் சுருக்கி இருக்கிறது என்று சொன்னால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. ஆய்வாளர்கள் மேற்கொண்டிருக்கிற கணக்கீட்டின்படி தில்லியில் ஒருவர் உட்கொள்ளும் உணவு நாளொன்றுக்கு 1756 கலோரி அளவேயாகும். நிலையான வருமானம் உடையோர் தங்கள் தேவைகளை எப்படியோ சமாளித்துக்கொள்கிறார்கள் என்றபோதிலும், நாட்கூலி பெறும் அடிமட்டத்தில் உள்ளவர்கள் தங்கள் ஜீவனத்தை நடத்திட எந்த அளவிற்கு இன்னலுக்கு ஆளாகிறார்கள் என்பது பணக்கார வர்க்கத்தினருக்குத் தெரியாது. நகர்ப்புற மக்கள் தொகையில் 55 விழுக்காட்டினர் நாளொன்றுக்கு 1800 கலோரி உணவுகூட உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஐந்தாண்டிற்கு முன்பு இந்த அளவிற்கு மோசமான நிலை கிடையாது.
திட்டக் கமிஷனில் வேலைபார்க்கும் பொருளாதார வாதிகள் அதிக அளவில் பயிற்சி பெற்றவர்கள்தான். எதார்த்த நிலையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், சரியற்ற கணக்கீட்டு முறையை இவர்கள் தொடர்வது ஏன் என்று கேட்கப்படுகிறது. நாம் கணக்கிடுவதைப்போன்றே வறுமைக்கோட்டுக்காக நிர்ணயித்திருக்கிற 1040 ரூபாயில் ஒருவரால் 1400 கலோரி உணவைத்தான் உட்கொள்ள முடியும் என்று நிச்சயமாக அவர்களுக்கும் தெரியும்.  ஆயினும் இந்தியா உட்பட வளர்முக நாடுகள் இத்தகைய கணக்கீட்டு முறையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று உலக வங்கியின் பொருளாதாரவாதிகள் அளித்திடும் நிர்ப்பந்தம் இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
ஆசியாவில் வறுமை வீழ்ச்சியடைந்திருப்பதாக உலக வங்கி அளித்திடும் அறிக்கைகளும் போலித்தனமான ஒன்றேயாகும். எதார்த்தத்தில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதும், அதீத உணவுப் பணவீக்கமும் வறுமை நிலையையும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதனை ஒப்புக்கொள்வது என்பதன் பொருள் தற்போது உலக அளவில் வறுமை குறித்து உலக வங்கியின் பொருளாதாரவாதிகள் அளித்துவரும் தவறான கணக்கீடுகள் அனைத்தும் ஓர் அழுகிய கரையான் தின்ற வீடுபோல நொறுங்கி வீழ்ந்துவிடும். மேலும் இவர்களால் இவ்வாறு அளிக்கப்படும் போலித்தனமான வறுமை வீழ்ச்சி அறிக்கைகள் மூலமாகத்தான் இவர்களால் உலகமயம் மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகள் காரணமாக மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள் என்கிற வாதத்தை மிகவும் சவுகரியமாக முன்வைத்திட முடியும். ஆயினும்,
உண்மை ஒருநாள் வெளியாகும் - அதில்
உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும்.
பொறுமை ஒருநாள் புலியாகும் - அதற்குப்
பொய்யும் புரட்டும் பலியாகும்.
(கட்டுரையாளர், தில்லி, ஜவஹர்லால் நேருப் பல்கலைக்கழக, ஓய்வுபெற்ற பேராசிரியர்.)
(தமிழில்: ச.வீரமணி)