Showing posts with label Modi'sTrisul. Show all posts
Showing posts with label Modi'sTrisul. Show all posts

Sunday, April 12, 2015

முதலாளிகளுக்கு சேவகம் மதவெறி எதேச்சதிகாரம் மோடி அரசின் திரிசூலம் இடைவேளையில் ஒரு மெகா மோசடி


ஈஸ்டர் ஞாயிறு (ஏப்ரல் 5) அன்று பிரதமர் மோடி, நீதித்துறையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைத்து நீதிபதிகளும் கலந்து கொண்ட மாநாட்டில் உரை நிகழ்த்தினார். இந்த மாநாட்டில் நாட்டில் உள்ள 24 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கலந்து கொண்டார்கள். அவர்கள் முன் உரை நிகழ்த்துகையில், “ஐந்து நட்சத்திர பாணியில் விறுவிறுப்பாகச் செயலாற்றி, புலனுணர்வு அடிப்படையில் தீர்ப்புகள் பெறப்படுவதற்கு எதிராக மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது இன்றைய தேவை.’’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருக் கிறார்.
திருவாளர் நரேந்திர மோடி, `ஐந்து நட்சத்திர செயல்வீரர்கள்’ (‘Five Start Activists’) என்ற சொற்றொடரை, அவர் பிரதமராவதற்கு முன்பே 2002 குஜராத்கலவரங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் மூலம் சட்டப் பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகக் குறிப்பிடுகையில் பயன்படுத்தி இருந்தார்.
நீதிபதிகளுக்கு மிரட்டல்
பொது நல மனுக்களை இழிவுபடுத்தி அவர் கூறியதை சட்ட வல்லுநர் கள் மிகவும் கடுமையாக விமர்சித்தனர். “பொது நல மனுக்களின் அதிகாரவரம் பெல்லை, விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக முன்வந்து போராடு பவர்களுக்கு உறுதி அளிப்பதற்காக, 1980களில் உச்சநீதிமன்றத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
இவ்வாறு விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காகப் போராடுபவர்களை `ஐந்து நட்சத்தி ஆர்வலர்கள்’ என்று குறிப்பிடுவதுஅரசமைப்புச் சட்டத்தின் உண்மையான நெறிமுறைகளுக்கும் உணர்வுகளுக் கும் எதிரானது என்று விமர்சனம் எழுந்துள்ளது.
“உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்ந்திருந்த கூட்டத்தின் முன்புஇவ்வாறு கூறியிருப்பது என்பது, இந்நீதிபதிகள் அரசமைப்புச் சட்டத் தின்கீழான விவாதங்களைக் கேட்டு தீர்ப்பு சொல்லாமல், தங்களைப் போன்றவர்களின் கருத்துக்களைக் கேட்டு ஆணைகள் வழங்க வேண்டும் என்றுகட்டாயப்படுத்தக்கூடிய ஒன்றேயாகும். இது நீதித்துறையை மிகவும் மோச மான முறையில் அவமதிக்கும் செயலாகும் என்று கண்டனக் குரலும் எழுந் துள்ளது.’’
மூன்று தூண்களின் சமநிலை
பிரெஞ்சு தத்துவஞானி மாண்டெஸ்க்கியூ, நவீன ஜனநாயகத்தின் அடித்தளமாக இருக்க வேண்டிய வரையறை ஒன்றை முன்வைத்திருக்கிறார். அதுதான்இன்றளவும் தொடர்கிறது. அவர், நாடாளுமன்ற/சட்டமன்ற நடவடிக்கைகள், ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் மற்றும் நீதித்துறையின் அதிகாரங்கள் ஆகிய அனைத்தும் ஒரே நபரின்கீழ் வருவதன் ஆபத்துக்களுக்கு அனைவரின் கவனத்தையும் கொண்டு வந்து, இவ்வாறு அரசமைப்புச் சட்டத்தின் மூன்றுதூண்களுக்கும் இடையே இருக்க வேண்டிய சமநிலையை அவ்வப்போதுஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் கருத்தாக்கத்தை நம்முடைய அரசமைப்புச் சட்டம் உட்பட பல நவீனஅரசமைப்புச் சட்டங்கள் தங்கள் அரசமைப்புச் சட்டங்களில் இணைத்திருக் கின்றன. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் (2007இல்) கூறியதைப்போல, “அரசமைப்புச் சட்டம் நாட்டில் நீதித்துறை உட்பட ஒவ் வொரு கட்டமைப்பின் அதிகாரத்தையும் நன்கு வரையறுத்திருப்பதுடன், அவற்றிற்கிடையேயான பரஸ்பர உறவுகள் குறித்த நெறிமுறைகளையும், ஒன்றையொன்று ஆய்வு செய்வது தொடர்பாகவும், அவற்றிற்கிடையிலான சமநிலை குறித்தும் நன்கு வரையறுத்து அளித்திருக்கிறது.’’ இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே அதிகாரங்களை வரை யறுத்திருப்பதுடன், இவை மூன்றும் பரஸ்பரம் நல்லிணக்கத்துடன் செயல்படவேண்டியதன் அவசியத்தையும் கூறும் அதே சமயத்தில், அரசமைப்புச் சட்டமானது மக்களின் அதிகாரமே எல்லாவற்றிற்கும் மையமானது என்றும் வரையறுத்திருக்கிறது.
நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை தொடக்கத்திலேயே, “இந்திய மக்களாகிய, நாம்,’’ என்று மிகவும் செம்மையான முறையில் வரையறுத்திருப்பதுடன், “இந்த அரசமைப்புச் சட்டத்தை நமக்குநாமே இதன்மூலம் நிறைவேற்றி, சட்டமாக்கி, அளித்துக்கொண்டிருக் கிறோம்,’’ என்று முடிகிறது. இவ்வாறு நம் அரசமைப்புச் சட்டம் மிகவும் தெளிவானது. இதன் கருத்தாக்கம், “நீதித்துறையின் கீழ் மறுஆய்வு’’ தானே ஒழிய, “நீதித்துறையின் விறுவிறுப்பான நடவடிக்கை’’ அல்ல.இவ்வாறு அரசமைப்புச் சட்டத்தில் ஒவ்வொன்றும் அதன் செயல்பாடு கள் குறித்து நன்கு வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்றுதன் வரையறையை மீறுமானால் அது மற்ற அமைப்புகளுடன் உரசுவ தோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த அளவில் அலங்கோலமான ஆட்சியை உருவாக்கிவிடும்.
ஆட்சியாளர்கள் தங்கள் வரையறையை மீறி சட்டமன்றங் களையும்/நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பொருட்படுத்தாத நிலைமை ஏற்படும் சமயங்களில் நீதித்துறை தலையிடவேண்டிய அடிப்படை உருவாகின்றன. நீதியரசர் வர்மா (2007ல்) குறிப்பிட்டதைப்போல, “சிலசுயநல சக்திகள் தங்கள் அரசியல் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக, அல்லது சில நெருடலான அரசியல் முடிவுகள் எடுக்க வேண்டிய சூழ்நிலையில், அரசாங்கம் அதற்கான பொறுப்பை ஏற்க மறுத்து, அதனை நீதிமன்றத் தின்பால் தள்ளிவிட்டு, நீதித்துறை வேண்டுமென்றே துஷ்பிரயோகமான முறையில் முடிவுகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படும் சூழ்நிலையில்,
ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நீதித்துறை செய்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விடுகிறது’’.
நீதித்துறை ஆணையம் அமைப்பதே தீர்வு
இத்தகைய சமநிலையின்மையைச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காகத் தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்றைநிறுவிட வேண்டும் என்று முன்மொழிந்திருந்தது. இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, பாஜக அரசாங்கம் செய்த முதல் வேலை, நீதித்துறை நியமனங்கள் சட்டமுன்வடிவைக் கொண்டு வந்ததாகும். தற்போது அரச மைப்புச் சட்டத்தின்கீழ் இயங்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் இடையிலான சமநிலையின்மையைச் சரிசெய்யாமல், நீதித்துறை நியமனங்கள் குறித்து பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் (அதாவது செல்வாக்கு செலுத்த வேண்டும்?) என்று இவ்வாறு செய்யப்பட்டிருக்கக்கூடும்.
இது, மீண்டும் ஒருமுறை, நம்நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையை மதிக்காமல் மிதித்துப் புறந்தள்ளி விட்டு, எதேச்சாதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கான முயற்சியேயாகும்.
நாடாளுமன்ற நடைமுறைகளையும் மோடி அரசாங்கம் கிஞ்சிற்றும் மதிக்காமல் மிதித்துத் தள்ளுகிறது என்பதற்கு மற்றுமோர் உதாரணம் நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்பட்டிருக்கும் நடைமுறையாகும். நாட்டில் இதற்குமுன்னெப்போதுமே இல்லாத விதத்தில், இடைவேளை விடப் பட்ட மாநிலங்களவையை `தள்ளிவைத்து’ இருப்பதாகும். அதன்மூலம் முன்பு பிறப் பிக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டம் காலாவதியாகிற ஏப்ரல் 5ஆம்தேதிக்கு முன்னர், மீண்டும் ஓர் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், இரு அவைகளில் ஓர் அவை மட்டும் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தள்ளிவைக்கப்பட்டிருப்பது நம் நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் அபூர்வத்திலும் அபூர்வமான ஒன்றாகும். சில மாநிலங்கள் குடியரசுத் தலைவரின் கீழ் நேரடி ஆட்சியிலிருக்கும் சமயத்தில் அம்மாநிலங்களுக்கான பட்ஜெட்டுகளுக்கு ஏற்பளிப்பு தேவைப்படும் சமயத்தில் இவ்வாறு அவசியமான சூழ்நிலை உருவாகலாம்.
ஆனால் அவசரச் சட்டம் பிறப்பிக் கப்பட வேண்டும் என்பதற்காக சமீபகால வரலாற்றில் இவ்வாறு நடந்ததே இல்லை. ஆட்சியாளர்கள் இவ்வாறு நடந்து கொண்டதன் மூலம், மிகவும் விசித்திரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலங்களவையின் 234வது அமர்வில் அறிமுகப்படுத்தப்பட்ட நிதிச் சட்ட முன்வடிவு ஒன்று இப்போது மீண்டும் மக்களவையின் 235வது அமர்விற்கு அனுப்பப் படவிருக்கிறது.
குடியரசுத் தலைவர் மாநிலங்களவையின் 235வது அமர்வு 2015 ஏப்ரல்23 லிருந்து மே 13 வரை கூடும் (முன்பு இது ஏப்ரல் 20 அன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது) என்று அழைப்பாணை பிறப்பித்திருக்கிறார். அவசரச்சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கான அதிகாரம் என்பது பிரிட்டிஷார் நம்மை ஆண்டபோது ஏற்படுத்திய ஒன்று. காலனியாதிக்கத்தின் கீழ் தேர்வு செய்யப் பட்ட மிகவும் குறைந்த அதிகாரங்களைக் கொண்டிருந்த நாடாளுமன்ற/சட்டமன்ற அமைப்புகளின் கருத்துக்களைக் கூட உதறித்தள்ளக்கூடிய அதிகாரத்தை மன்னர் பெற்றிருந்தார். அரசியல் நிர்ணய சபையில் இந்த ஷரத்து நீடிக்கப்படுவதை ஹிரிதே நாத் குஞ்ரு கடுமையாக எதிர்த்தார். 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின்கீழ் கவர் னர் ஜெனரல் அவசரச் சட்டம் பிறப்பிப்பதற்கான அதிகாரம் இருந்து வந்தது;
எப்போதும் “மக்கள் மத்தியில் இது செல்வாக்கின்றியே இருந்து வந்திருக்கிறது,’’ என்று அவர் கூறியதுடன், சுதந்திர இந்தியாவில் இது தொடரக்கூடாது என்று கூறி கடுமையாக ஆட்சேபித்தார். அரசமைப்புச் சட்டத்திலிருந்து இந்த ஷரத்தை நீக்கும் யோச னையை நிராகரித்து, டாக்டர் அம்பேத்கர் பதிலளிக்கையில் கூறியதாவது: “நான் அவைக்கு கீழ்க்கண்ட விவரங்களை சமர்ப்பித்துக் கொள்கிறேன்: சாதாரணமான சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஷரத்துக்களின்படி ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் திடீரென்று மற்றும் உடனடியாக ஏதேனும் பிரச்சனை உருவாகி அதனைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகலாம்.
அத்தகைய அவசரகாலமும் சரிசெய்யப் பட்டாக வேண்டும். அதற்கு சட்டத்தின்கீழ் குடியரசுத் தலைவருக்கு அவசரச்சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்படுவதே தீர்வாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. அதன்மூலம் ஆட்சி புரிவோர் அக்குறிப்பிட்ட சூழ்நிலையைச் சமாளித்திட முடியும்.’’ எனவேதான், அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கும் அதிகாரங்களை அளித்துள்ள அரசமைப்புச் சட்டத்தின் 123வது பிரிவு, நம் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது.
இப்போது என்ன அவசரம் வந்தது?
டாக்டர் அம்பேத்கரால் பரிந்துரைக்கப்பட்ட `அவசரநிலைமை’யின்கீழ்தான், மாநிலங்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்க்கும் சூழலில் நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்படுகிறதா? நடந்து கொண்டி ருக்கக்கூடிய நாடாளுமன்ற அமர்வுக்கூட்டத்தை, அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதற்காகவே தள்ளிவைத்து, ஆணை பிறப்பித்திருப்பது,
மோடி அரசாங் கமானது நாடாளுமன்ற நடைமுறைகளையும் அரசமைப்புச் சட்டத்தையுமே காலில் போட்டு மிதித்துத்தள்ளிவிட்டு, எதேச்சதிகார ஆட்சியை நோக்கி செல்வதற்கான ஆபத்தான நடவடிக்கையாகத் தெரியவில்லையா?இந்த அவசரச் சட்டத்தை மீளவும் பிறப்பிப்பதற்கான நம்பிக்கையிழந்த நிலைஏன்? பிரதமரும் பாஜகவின் தேசிய செயற்குழுவிலும் எதிர்க்கட்சிகள் “பொய் களைப்’’ பரப்புவதாக உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்வது, ஏன்? 2013ஆம் ஆண்டுநிலம் கையகப்படுத்தல் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாஜக முழுமையாக ஆதரவுஅளித்தது என்று சுட்டிக்காட்டுவது பொய்யா? பின் ஏன் இப்போது இத்தகைய மாற்றங்கள்? ஏற்கனவே துவண்டு தூளாகிப் போய்க்கொண்டிருக்கிற இந்திய விவசாயிகளின் நலன்களை மேலும் காவு கொடுத்து அயல்நாட்டு மற்றும் உள் நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதாயம் அடைவதற்காக, பிரதமரால் இவை கொண்டு வரப்படவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக தாராளமாக நிதி அளித்தவர்களுக்கு இது ‘திருப்பி அளிக்கும் தருணம்’என்றும் அதனை அமல்படுத்துவதற்கான முயற்சி என்றும் இதைச் சொல்லக் கூடாதா?இப்படியாக, நரேந்திர மோடி அரசாங்கம் மூன்று விதங்களில் ஆபத்தானதாக மாறி இருக்கிறது.
இந்த ஆபத்துக்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இப் போது தெளிவாகத் தெரியத் தொடங்கி இருக்கின்றன. பெரும்பான்மை நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களையும், நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக குணத்தையும் தாக்கக்கூடிய திரிசூலம் என்கிற ஆயுதமாக மோடி அரசின் நடவடிக்கைகள் மாறி இருக்கின்றன. நாட்டு மக்கள் முன் எழுந்துள்ள இத்தகைய சவால் ஒன்றுபட்ட வலுவான மக்கள் போராட்டங்கள் மூலமாக எதிர்த்து முறியடிக்கப்பட்டாக வேண்டும்.
(ஏப்ரல் 8, 2015)
(தமிழில்: ச. வீரமணி)