Showing posts with label Climate change. Show all posts
Showing posts with label Climate change. Show all posts

Wednesday, August 26, 2015

எரிசக்தித் தேவைகளை அழிக்க முயல்வதா?




சீத்தாராம் யெச்சூரி

[இந்தப் புவியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தான் சுவாசிக்கும் காற்று அதில் உள்ள நிறைகுறைகளுடன் சமமானதாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில், தங்கள் நாட்டிலிருந்து கார்பன் உமிழ்தலைப் படிப்படியாகக் குறைத்திட வேண்டும் என்கிற அறிவுரையை அமெரிக்கா ஏற்க மறுக்கிறது.]
நாடாளுமன்றம் நடைபெறாமல் முட் டுக்கட்டை, பீகார் தேர்தல், நாட்டின் பல பகுதிகளிலும் வகுப்புவாதப் பதற்றநிலை அதிகரித்துக் கொண்டிருத்தல், சாமானிய மக்களின் துன்ப துயரங்கள் வளர்ந்து கொண்டிருத்தல், போன்றவை நாட்டின் அரசியலில் முனைப்பாய் முன் வந்திருக்கக் கூடிய அதே சமயத்தில், புவிவெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டுக்கொண்டிருத்தல் போன்ற கேந்திரமான பிரச்சனைகள் தொடர்பாக இந்தியாவில் பாஜக தலைமையிலான அரசாங்கம் போதுமானஅளவிற்குக் கவனம் செலுத்தாமல்இருப்பதும் குறிப்பிடப்பட வேண்டியதொரு முக்கிய அம்சமாகும். புவிவெப்பமயமாதல் குறித்த ஐ.நா. கட்டமைப்பு கன்வென்ஷனின் கீழ் (UNFCCC-UN Framework Convention on Climate Change) 21ஆவது சர்வதேச மாநாடு வரும் டிசம்பரில் பாரீசில் நடைபெறவிருக்கிறது. இப்பிரச்சனை தொடர்பாக இந்தியா நீண்டகாலமாக மேற் கொண்டுவந்த நிலைப்பாடுகளை மோடி அரசாங்கம் கணிசமான அளவிற்கு நீர்த் துப்போகச் செய்துகொண்டிருக்கிறது என்றே வெளிவந்துள்ள அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. வறுமையை ஒழிக்கவும் அது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாம் எடுத் துக்கொண்டிருந்த உறுதிமொழிகளுக்கு இது மிகவும் மோசமான அளவில் விளைவுகளை ஏற்படுத்திடும்.
பனி ஆறுகள் உருகுதல்
1990களிலிருந்து நடைபெற்று வரும் உலக அளவிலான உச்சிமாநாடுகள் அனைத்துமே பசுங்கூட வாயுக்களை உருவாக்கி அவற்றின்மூலம் புவி வெப்ப மயமாதலைக் கட்டுப்படுத்தாவிட்டால், பருவ நிலைகளில் கடும் மாற்றங்கள் ஏற்படும் என்று எச்சரித்து வந்திருக்கின் றன. இந்த மாற்றங்கள் மனிதகுலம் முழுமைக்கும் கேடு பயக்கக்கூடிய அதேசமயத்தில், இதனால் மிகவும் பாதிக்கப் படுவது ஏழை மக்களேயாவர், அதிலும் குறிப்பாக வளர்முக நாடுகளில் உள்ள ஏழை மக்களாவர். இந்தியாவில் இமய மலையின் வெண்பனிக்கட்டி ஆறுகள் உருகிக்கொண்டிருப்பதாலும், பருவமழை பெய்வதில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதன் விளைவாக வெள்ளம், வறட்சி, கடல் மட்டம் உயர்வு போன்றவை ஏற்படுவதன் காரணமாகவும், பல கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டுப் புலம்பெயர்ந்து செல்லக்கூடிய அபாய நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.
உலக அளவிலான தட்பவெப்பம் 2 டிகிரி செல்சியசுக்கு மிகைப்படாமல் இருக்க வேண்டும் என்பது அனைவரும் விவாதித்து ஏற்றுக்கொண்ட விஷயம். இதனை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றால் அனைத்து நாடுகளும் கார்பன்(கரிமப்பொருள்) உமிழ்தல் வரையறுக்கப்பட வேண்டியதை உத்தரவாதப்படுத்த வேண்டியது இன்றைய அவசரத் தேவையாகும். இல்லையேல் மக்களின் எதிர்கால வாழ்க்கை மீண்டும் சரிப்படுத்த இயலாஅளவிற்குச் சொல்லொண்ணா அச்சுறுத்தலுக்குள்ளாகும். சுற்றுச்சூழல் குறித்துஆய்வு செய்யும் சர்வதேச ஏஜென்சிகள், ஜூலை மாதத்தில் உலகம் முழுதுவமான சராசரி தட்பவெப்பநிலை, நிலம் மற்றும் கடல் மேற்பரப்பில், 20ஆம் நூற்றாண்டின் சராசரியை விட 0.81 டிகிரி செல்சியஸ்அதிகம் இருந்தது என்று தெரிவித்திருக்கின்றன.
விலக்கும் இலக்கும்
ஆர்க்டிக் கடல் பனிக்கட்டிகள் 1981-2010 ஆண்டுகளின் சராசரியைவிட 3,50,000 சதுர மைல்கள் (9.5 சதவீதம்) உருகிவிட்டன. உண்மையில் உலகம் வெப்பமாகி இருக்கிறது.இது தொடர்பாக, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக உலக நாடுகளிடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள், ‘ஒரு பொதுவான ஆனால் அதே சமயத்தில் வித்தியாசமான பொறுப்புடன்’ (‘common but differentiated responsibility’)கார்பன் உமிழ்தலைக் கட்டுப்படுத்திடநடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்திருந்தன. அதாவது, உலகம் இவ்வாறு வெப்பமயமாவதற்கு பெரிதும் காரணமாகவுள்ள வளர்ச்சி அடைந்த (முதலாளித்துவ) நாடுகள் இதனைக் குறைப்பதற்குப் பெரிய அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். 1997இல் நடைபெற்ற கியாட்டோ புரோ டோகால் (Kyoto Protocol), இந்தியா போன்ற வளர்முக நாடுகள் தங்கள் சக்திக்கேற்ற விதத்தில் எந்த அளவிற்கு முடியு மோ அந்த அளவிற்குக் குறைத்திட நடவ டிக்கைகள் எடுத்திட வேண்டும் என்ற அறிவுரையுடன் விலக்கு அளித்திருந்த அதே சமயத்தில், வளர்ச்சி அடைந்த நாடு கள் ஒவ்வொன்றுக்கும் இலக்குகளை நிர் ணயித்திருந்தது. ஆனால் நடந்துள்ளது என்ன? வளர்ச்சி அடைந்த நாடுகள் கார்பன் உமிழ்தலைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரித்திருக்கின்றன. 1900 சராசரியுடன் ஒப்பிடும் போது அவை 5 சதவீதம் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக 10சதவீதம் அதிகரித்திருக்கின்றன. அமெரிக்கா கியாட்டோ புரோடோகாலை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், தன் நாட்டில்அதனை 17 சதவீதமாக அதிகரித்திருக் கிறது.
நியாயமற்ற நிபந்தனை
அமெரிக்கா, உலக நாடுகள் ஏற்றுக் கொண்டிருந்த, ‘ஒரு பொதுவான ஆனால் அதே சமயத்தில் வித்தியாசமான பொறுப்புடன்கார்பன் உமிழ்தலைக் கட்டுப்படுத் திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்ற கொள்கையைக் கைவிட்டு விட்டு, அதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாடும் தன்னிச்சையாக முன்வந்து தங்கள் நாடு எந்த அளவு கார்பன் உமிழ்தலைக் குறைத்திட முடியும் என்று அறிவித்திட வேண்டும் என்று நியாயமற்றமுறையில் நிபந்தனை விதித்துக் கொண்டிருக்கிறது.இத்தகைய நிபந்தனைகளை எதிர்ப்பதற்கு அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையின் கீழ் இயங்கும் பாஜக அரசாங்கம், அந்த நிபந்த னைகளை அப்படியே தலைகுனிந்து கை கூப்பி ஏற்றுக்கொண்டு, கார்பன் உமிழ்தலைத் தன்னிச்சையாக வெட்டிக் குறைத்திட இலக்கு நிர்ணயிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. பாரீஸ் உச்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்படயிருக்கும் இதன் பெயர் திட்டமிட்டிருக்கிற தேசிய அளவிலான தீர்மானிக்கப் பட்டுள்ள பங்களிப்புகள் (INDCs-Intended Nationally Determined Contributions) என்பதாகும்.
ஏற்க மறுக்கும் அமெரிக்கா
ஒரு பொதுவான ஆனால் அதேசமயத்தில் வித்தியாசமான பொறுப்புடன்கார்பன் உமிழ்தலைக் கட்டுப்படுத்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று உலக நாடுகள் ஒப்புக்கொண் டிருந்த முடிவினை மறுதலித்திட வேண் டும் என்பதும், வளர்ந்த (முதலாளித்துவ)நாடுகளுக்குக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கக்கூடாது என்பதும்தான் அமெரிக்காவின் விருப்பமாகும். அதை இந்தியா தன்னுடைய தன்னிச்சையான நடவடிக்கை மூலம் செயல்படுத்த முன்வந்திருக்கிறது. 1990 அளவுமட்டங்களில் கார்பன் உமிழ்தலைக் கட்டுப்படுத்திட வேண்டும் என்கிற கியாட்டோ புரோடோகால் கைவிடப்படுகிறது. மாறாக, 2005ஆம் ஆண்டு அளவில் 2030க்குள் அமெரிக்கா 20 சதவீதம் உமிழ்தலைக் குறைத்திடவும், ஐரோப்பிய யூனியன் 40 சதவீதம் குறைத்திடவும், ரஷ்யா 25 சதவீதம் குறைத்திடவும் இப்போது முன் வந்திருக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாஇந்தியாவிற்கு வந்திருந்த சமயத்தில், வெளியிடப்பட்ட இந்தியா – அமெரிக்கா கூட்டு அறிக்கையில், புவி வெப்பமயமாதல் சம்பந்தமான நிகழ்ச்சிநிரல் மீது ஆர்வம் காட்டப்படவில்லை. அப்போது இந்தியா, தற்போதுள்ள புவிவெப்பமயமாதல் குறித்த ஐ.நா. கட்டமைப்பு கன்வென்ஷனின் அறிவுரைகள் பாரீஸ் உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. இதன்பொருள், அமெரிக்கா, ‘ஒரு பொதுவான ஆனால் அதே சமயத்தில் வித்தியாசமான பொறுப்புடன்கார்பன் உமிழ்தலைக் கட்டுப்படுத்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்பதற்கு உட்பட வேண்டும், அதன் மூலம் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் சமம் என்ற கொள் கையை அது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
இந்தப் புவியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தான் சுவாசிக்கும் காற்று அதில் உள்ள நிறைகுறைகளுடன் சமமானதாக இருக்க வேண்டும் என்கிற அடிப் படையில், தங்கள் நாட்டிலிருந்து கார்பன் உமிழ்தலைப் படிப்படியாகக் குறைத்திட வேண்டும் என்கிற அறிவுரையை அமெரிக்கா ஏற்க மறுக்கிறது.
அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் வெளியேற்றும் கார்பன் உமிழ்தலின் அளவு இந்தியாவை விட 20 மடங்கு அதிகமாகும்.வளர்முக நாடுகள் தங்களின் சமூகப்பொருளாதார வளர்ச்சிக்கும், வறுமை ஒழிப்புக்கும் உதவிட, வளர்ந்த நாடுகள் புவி வெப்பமயமாதல் குறித்த ஐ.நா. கட்டமைப்பு கன்வென்ஷனின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தன்னுடைய நான்காவது பிரிவின்கீழ் ஏழாவது பத்தியில் மிகவும் தெளிவாகத் தெரிவித் திருக்கிறது.
சிவப்புக் கோடுகளை மீறக்கூடாது
ஆனால் அமெரிக்கா இவ்வாறு பொறுப்பினை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.ஆயினும், இந்தியா, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து, திட்டமிட்டிருக்கிற தேசியஅளவிலான தீர்மானிக்கப்பட்டுள்ள பங்களிப்புகளை, ஒருதலைப்பட்சமாக அறிவித்திருக்கிறது. சூரிய எரிசக்தியை அதிகப்படுத்துவதன்மூலம் இதனைச் செய்திடலாம் என்று இந்தியா இவ்வாறு முடிவு செய்திருக்கிறது. இது சாத்தியமற்ற ஒன்று. சூரிய எரிசக்தி உற்பத்திக்கான செலவினம் சர்வதேச அளவில் குறைந்திருக்கிறது. எனினும், இந்தியாவில் இதனை உற்பத்தி செய்வதற்காக 90 சதவீதம் வரை மானியம் அளித்து வருகிறது.ஆயினும், புவிவெப்பமயமாதலுக்கு எதிராக நீண்டகாலமாகக் குரல் கொடுத்துவரும், சந்திரசேகர் தாஸ்குப்தா கூறியிருப்பதுபோல, “சூரிய எரிசக்தி உற்பத்தி லாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, புவிவெப்ப மயமாதலைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல.’’
இவ்வாறு மோடி அரசாங்கம் மிகவும் தெளிவான முறையில் தவறுசெய்துகொண் டிருக்கிறது. 2009இல் நாடாளுமன்றம் இதுதொடர்பாக, இந்தியாவின் நிலை குறித்து விவாதித்து, சில சிவப்புக் கோடுகளை‘red lines’) வரையறுத்திருக்கிறது. அதனை எந்த அரசாங்கமாக இருந்தாலும் மீறக் கூடாது.
அவை பின்வருமாறு:
(1)   இந்தியா ஒருதலைப்பட்சமாக எந்த உறுதிமொழியையும் அறிவித்திடக் கூடாது, அல்லது கார்பன் உமிழ்தலைக் குறைப்பது தொடர்பாக எந்தக் கட்டுப் பாட்டையும் ஏற்றுக்கொள்ளவும் கூடாது.
(2)   வளர்ந்த (முதலாளித்துவ) நாடுகள் பரஸ்பரம் உறுதியளிக்க முன்வராத நிலையில், இந்தியா கார்பன் உமிழ்தல் தொடர் பாக எவ்வித காலக்கெடுவையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
(3)   இந்தியா, இதுதொடர்பான ஐ.நா.அறிவுரைகளை வளர்ந்த நாடுகளை ஏற்றுக்கொள்ளச் செய்திட, தொடர்ந்து நிர்ப்பந்தங்கள் அளித்திட வேண்டும். வளர்முக நாடுகள் பசுங்கூடத் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதற்கு அறிவுச் சொத்துரிமையின்கீழ் ராயல்டி எதுவும் கோராமல் நிதி உதவிமற்றும் தொழில்நுட்ப உதவி செய்திட வேண்டும்.
மோடி அரசாங்கம் இப்போது இந்த சிவப்புக் கோடுகளைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. இதன்பொருள், நாட்டில் வறுமை மற்றும் பசி-பஞ்சம்-பட்டினி போன்றவற்றை சமாளித்திட அத்தியாவசியத் தேவையான நம் எரிசக்தித் தேவைகளைக் கைவிடுவது என்பதாகும்.
(நன்றி: தி இந்துஸ்தான் டைம்ஸ், 25-8-2015)
(தமிழில்: ச.வீரமணி)