Sunday, October 3, 2021

கார்ப்பரேட்டுகள்-மத வெறியர்களின் கள்ளப் பிணைப்பு -சீத்தாராம் யெச்சூரி

 



 கார்ப்பரேட்டுகள்-மத வெறியர்களின் கள்ளப் பிணைப்பு

-சீத்தாராம் யெச்சூரி

(தமிழில்: ச.வீரமணி)     

[1991இல் கொண்டுவரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நாட்டு மக்களின் பல்வேறு தரப்பினரிடையே பல்வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்தியாவில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் அனைத்துமே அதன் கொள்கைகள் குறித்துக் கடுமையான முறையில் விமர்சனம் செய்து வந்திருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி, கடந்த முப்பதாண்டுகால நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களின் தாக்கம் குறித்தும், இந்த சீர்திருத்தங்களுக்கும் எதேச்சாதிகாரத்திற்கும், இது இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின்மீது விரிவான அளவில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும், ஃப்ரண்ட்லைன் செய்தியாளர் டி.கே.ராஜலட்சுமிக்கு நேர்காணல் அளித்துள்ளர். அதன் சாராம்சம் வருமாறு:]  

கேள்வி: நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை இடதுசாரிகள் எப்போதுமே விமர்சனம் செய்து வந்திருக்கிறார்கள். கடந்த முப்பதாண்டு கால அனுபவங்களைப் பார்க்கும்போது, இது தொடர்பாக இடதுசாரிகள் கூறிவந்த விமர்சனங்கள் சரியானவையாகவே இருந்திருக்கின்றன என நீங்கள் கூறுகிறார்களா?

சீத்தாராம் யெச்சூரி: நிச்சயமாக! நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களின் நோக்கம், லாபத்தை மையமாகக் கொண்டதேயொழிய, மக்களின் நலன்களை மையமாகக் கொண்டவை அல்ல. கடந்த முப்பதாண்டு கால நவீன தாரளமயப் பொருளாதரார சீர்திருத்தங்கள் மக்களைப் பட்டினி போட்டு, வறுமையை அதிகப்படுத்தி, மக்களுக்கிடையே பொருளாதார சமத்துவமின்மையை அதிவேகமாகமான முறையில் அதிகரித்து,  தங்களால் முடிந்த அளவுக்குக் கொள்ளை லாபம் ஈட்டுவது, அனைத்து நாடுகளிலுமே மக்களின் உள்நாட்டுத் தேவையில் கூர்மையான வீழ்ச்சியை ஏற்படுத்துவது ஆகியவற்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்திருக்கின்றன என்பதை இந்திய அனுபவங்களும், உலக அனுபவங்களும் காட்டியிருக்கின்றன. உலகப் பொருளாதார மந்தமும், மக்கள் மீது அது ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளும் கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்திற்குப்பின் மேலும் பன்மடங்கு அதிகமாகி அவர்கள் வாழ்வைச் சூறையாடுவது தொடர்கிறது. இது, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் கூறியிருப்பதை நினைவுபடுத்துகிறது. அதில் அவர், தனக்கே உரிய உற்பத்தி உறவுகளையும், பரிவர்த்தனை உறவுகளையும் சொத்துடைமை உறவுகளையும் கொண்டுள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் - இவ்வளவு பிரம்மாண்ட உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங்களையும் மாயவித்தைபோல் தோற்றுவித்துள்ள இந்த முதலாளித்துவ சமுதாயம் – தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டியெழுப்பி வந்த சக்திகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையில் இருக்கிறது.என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் முப்பது ஆண்டுகள் என்பவை, விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதற்கு சட்ட உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் போராடுவது தொடர்ந்து கொண்டிருக்கும் பின்னணியில் வந்திருக்கிறது. இவை நூறாண்டுகளுக்கு முன் பிரிட்டிஷார் கட்டாயப்படுத்தி அவுரிச் செடி (indigo plant) பயிரிடச் சொன்னதற்கு எதிராக பீகார் மாநிலத்தில் உள்ள சம்பரான் விவசாயிகள் நடத்திய சத்தியாக்கிரக போராட்டத்தினை நினைவுபடுத்துகின்றன. இவர்களின் கார்ப்பரேட் விவசாய முயற்சிகளும், மோடியின் பணமதிப்பிழப்பு காரணமாக சிறிய அளவிலான உற்பத்தி முறை அழிக்கப்பட்டதும், உணவுப் பற்றாக்குறையும் விரைவில் பட்டினிக் கொடுமை ஏற்படுவதற்கு இட்டுச் செல்லலாம்.  

இந்தியாவில் பின்பற்றப்படும் பொருளாதார சீர்திருத்த நடைமுறைகள் சர்வதேச நிதிமூலதனத்தின் ஆதிக்கத்திற்குட்பட்ட தத்துவார்த்தக் கட்டமைப்பான நவீன தாராளமயத்தின் ஒரு பிரிக்கமுடியாத பகுதியாகும். இதன் நோக்கம் முதலாளித்துவத்தின் மிக மோசமான குணமான கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற மிருக உணர்வைக் கட்டவிழ்த்துவிடுவதேயாகும். பொதுச் சொத்துக்களும் மற்றும் அனைத்துக் கனிம வளங்களும் மிகப்பெரிய அளவில் தனியாரிடம் தாரை வார்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. நவீன தாரளமயம் உலக அளவிலும் இந்தியாவிலும் கார்ப்பரேட்டுகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றன. இது அமல்படுத்தப்படுவது தொடங்கியிதிலிருந்தே, பணக்காரர்கள் மீதான வரிகள் உலக அளவில் 79 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. 2008 நிதி உருக்குலைவு (financial meltdown) ஏற்பட்டபின், பில்லியனர்களில் பெரும்பாலானவர்கள் மூன்றாண்டு காலத்திற்குள்ளேயே தங்கள் செல்வத்தைக் கரையாது தக்கவைத்துக்கொண்டதுடன், 2018இல் அதனை இரட்டிப்பாகவும் மாற்றிவிட்டார்கள். இந்தச் செல்வத்தை இவர்கள் உற்பத்தி மூலம் ஏற்படுத்திடவில்லை. மாறாக ஊக வணிகத்தில் தில்லுமுல்லுகளைச் செய்ததன் மூலமே ஏற்படுத்திக்கொண்டுவிட்டார்கள். அதனால்தான் உலக அளவில் ஆழமான அளவிற்குப் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோதிலும் அது பங்குச்சந்தை வர்த்தகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திட வில்லை.

மறுபக்கத்தில், உலக அளவில் வருமானம் ஈட்டக்கூடியவர்களில் 80 சதவீதத்தினர் 2008க்கு முன்பிருந்த நிலைக்குத் தங்களால் திரும்பமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். ஸ்தாபனரீதியான தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்த தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் மீதும் கடும் தாக்குதல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 1979இல் வேலை செய்த தொழிலாளர்களில் நாலில் ஒருவருக்கு தொழிற்சங்கங்களில் இருந்தார் என்ற நிலை இப்போது பத்தில் ஒருவர்தான் தொழிற்சங்கங்களில் இருக்கிறார் என்ற நிலைக்கு மாறியிருக்கிறது.

நாம் இப்போது சமத்துவமின்மை தொடர்பாக பல அடுக்குநிலையை அடைந்திருக்கிறோம்.  இப்போது ஒவ்வொரு நிமிடமும் பட்டினிச் சாவுக்கு அதிக அளவில் பலர் உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். ஜெப் பெசோஷ் போன்றவர்கள் பதினொரு நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் வானமண்டலத்திற்கு அனுப்புவதற்கு ராக்கெட்டுகளைத் தயார் செய்து கொண்டிருக்கும் அதே சமயத்தில் இங்கே  நாம் அநேகமாக ஒவ்வொரு நிமிடத்திலும் ஒருவரைப் பட்டினிச் சாவுக்குப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதனை மனிதகுலத்தின்  சாதனை அல்ல மாறாக மனிதகுலம் மேற்கொண்டுள்ள முட்டாள்தனமான நடவடிக்கை,  என்று ஆக்ஸ்பாம் இண்டர்நேஷனல் உலக சமத்துவமின்மைப் பிரச்சாரத்தின் தலைவரான (Oxfam International’s Global Head of Inequality Campaign) தீபக் சேவியர் ஜெஃப் பெசோசுக்குப் பேட்டி ஒன்றிற்குப் பதிலளிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

பெரும் பணக்காரர்கள் வரிசெலுத்தாது ஏமாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் தொழிலாளர் வர்க்கத்தினரிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளிலும் பரிதாபகரமான முறையில் இறங்கி யிருக்கிறார்கள்.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய பின்னர் அமெரிக்காவின் பில்லியனர்கள் 1.8 டிரில்லியன் டாலர்கள் அளவு பணக்காரர்களாக உயர்ந்திருக்கிறார்கள். கோவிட்-19 தடுப்பூசிகள் உற்பத்தி காரணமாக பிக் ஃபார்மா (Big Pharma) ஏகபோக நிறுவனத்தால் ஒன்பது புதிய பில்லியனர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.

18 மாதங்களில் மத்திய வங்கிகள் (central banks), கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய பின்னர் உலகப் பொருளாதார நிலையைச் சரியான முறையில் மிதக்கவிடுவதற்காக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 834 மில்லியன் டாலர்கள் என்ற விகிதத்தில் கடந்த 18 மாதங்களில் சுமார் 11 டிரில்லியன் டாலர்கள் செலவு செய்திருக்கின்றன. இது பெரிய அளவில் பங்குச்சந்தை வணிகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் மறு பக்கத்தில் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பசி-பட்டினிக் கொடுமைகள் மற்றும் பற்றாக்குறை நிலையையும் ஏற்படுத்தி மக்களை துன்ப துயரங்களில் ஆழ்த்துவதும் அதிகமாகியிருக்கிறது-   

பில்லியனர்கள் இவ்வாறு செயற்கையாக ஊதப்பட்ட பங்குச்சந்தை மீது சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார மந்தம் ஆழமானமுறையில் ஏற்பட்டுள்ள இதுபோன்ற பங்குச்சந்தை வீக்கம் உண்மையில் ‘நீர்க்குமிழி’ போன்றதேயாகும். இது பொருளாதாரத்தை மேலும் மோசமான முறையில் அழிக்கக்கூடிய விதத்தில் வெடித்திடும். இதனால் பல நாடுகள் மேலும் மோசமானமுறையில் பேரழிவினைச் சந்தித்திடும்.

நேரு கால சகாப்தமும் இன்றைய நிலையும்

கேள்வி: இடதுசாரிகள் எப்போதுமே 1980களுக்கு முன் நேரு கால சகாப்தத்தில் பின்பற்றப்பட்டு வந்த பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்து வந்திருக்கிறீர்கள். இப்போதுள்ள பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிப்பதிலிருந்து முன்பு மேற்கொண்ட விமர்சனங்கள் எப்படி வித்தியாசமானவை?

சீத்தாராம் யெச்சூரி: நேரு கால சகாப்தத்தில் பின்பற்றப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளையும் நாங்கள் கடுமையாக விமர்சித்திதோம் என்பது உண்மைதான். அப்போதைய விமர்சனம், அவர்கள்—அதாவது இந்திய ஆளும் வர்க்கங்களான - பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்பட்ட ஒரு முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவக் கூட்டணியால் பின்பற்றப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கான பாதை என்பது சுதந்திரப் போராட்ட காலத்தின்போது அது மக்களுக்கு அளித்த உறுதிமொழிகள் மற்றும் அபிலாஷைகளுக்குத் துரோகம் இழைக்கும் விதத்தில் அமைந்திருந்தது.  அவர்கள், வறுமை, பசி-பட்டினிக் கொடுமைகள், வேலையில்லாத் திண்டாட்டம், எழுத்தறிவின்மை ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவதற்குப் பதிலாக இவையனைத்தும் அதிகரித்தன. நேரு சகாப்த காலத்தில் சோசலிச பாணி சமுதாயம் (socialist pattern of society) என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு தம்பட்டம் அடிக்கப்பட்ட அதே சமயத்தில், எதார்த்தத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்னவென்றால், முதலாளித்துவப் பாதையிலான வளர்ச்சியேயாகும். முதலாளித்துவம் என்பது அதன் வரையறைக்கிணங்க, மனிதகுலத்தின் மீதான சுரண்டலை உக்கிரப்படுத்திக் கொள்ளை லாபம் ஈட்டுவது என்பதும் அதனை நோக்கி முன்னேறிச் செல்வது என்பதுமேயாகும். 

இப்போதைய ஆட்சியாளர்களால் பின்பற்றப்படும் பொருளாதாரக் கொள்கைகள் மீதான விமர்சனம் என்பது முற்றிலும் வேறானதாகும். நேரு சகாப்தத்தின்போது பின்பற்றப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட கொஞ்ச நஞ்ச சாதகமான அம்சங்களும் இப்போதைய ஆட்சியாளர்களால் மிகவும் வேகமான முறையிலும் முரட்டுத்தனமான முறையிலும் அழித்து ஒழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. திட்டக் கமிஷன் மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்படுத்தப்பட்டமை, அவை பொருளாதாரத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்காக சுதந்திர இந்தியாவில் அடித்தளம் இட்டமை ஆகிய அனைத்தும் திட்டமிடல் என்னும்

இந்தியாவில் ஒரு சுதந்திரமான பொருளாதார அடிப்படைக்கு அடித்தளமிட வேண்டும் என்ற நோக்கத்துடன் நம் பொருளாதாரத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டமிடல் என்னும் கருத்தாக்கத்துடன் திட்டக் கமிஷன் மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டன. மோடி அரசாங்கத்தால் பின்பற்றப்பட்டுவரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் இவை அனைத்தையும் ஈவிரக்கமற்ற முறையில் அழித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு இவர்கள் தொழில்நிறுவனங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்ததன் மூலம் விவசாயத்தையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

பொதுத்துறை நிறுவனங்கள் நம் நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துவதில் ஒரு பங்கினைச் செலுத்தி வந்தது. அதன் மூலம் தனியார் மூலதனமும் பயனடைந்தது. பொதுத்துறை நிறுவனங்கள் இவ்வாறு தனியார் மூலதனத்திற்கு உதவி வந்த அதே சமயத்தில், இந்தியாவையும் மேற்கத்திய மூலமதனத்திற்கு துணைபோகாமலும் இந்தியாவை அவற்றைச் சார்ந்திருக்கும் நிலைக்கு மாற்றாமலும் இந்தியாவைப் பாதுகாப்பதில் அரண்போன்று நின்றன.  இந்தியாவின் சுதந்திரமான பொருளாதார அடித்தளங்களைப் பாதுகாத்திடவும், நம் நாட்டின் சொத்துக்களைப் பாதுகாத்திடவும் வேண்டும் என்கிற இத்தகைய புரிதலுடன்தான் இடதுசாரிகள் பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று இன்றையதினம் வந்திருக்கிறார்கள்.

இந்தியா ஒளிர்கிறதா அல்லது அவதியுறுகிறதா?

கேள்வி: பொருளாதார தாராளமயக் கொள்கைகள் காரணமாக மிகவும் அதிகமான அளவில் வருமானம் மற்றும் செல்வாதாரங்கள் வந்திருப்பதாக நம்புகிறவர்கள் இருக்கிறார்களே! உழைக்கும் மக்கள் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற மற்றொரு பக்கமும் இதற்கு இல்லையா?

சீத்தாராம் யெச்சூரி: நவீன தாராளமய சீர்திருத்தங்களின் விளைவுகள் மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மிகவும் வேகமானமுறையில் விரிவுபடுத்தியிருக்கின்றன. ஒளிரும் இந்தியர்கள் எப்போதும் அவதிக்குள்ளாகியிருக்கும் இந்தியர்களின் தோள்களில் உட்கார்ந்துகொண்டுதான் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள்.  அவதிக்குள்ளாகியிருக்கும் இந்தியர்களின் சீரழிவிலிருந்துதான் ஒளிரும் இந்தியர்களுக்கான வெளிச்சம் கிடைக்கிறது.

2020 மார்ச்சுக்குப் பின் இந்தியாவில் உள்ள 100 பில்லியனர்களின் மதிப்பு 12,97,822 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் முகேஷ் அம்பானி கொரோனா தொற்றுக் காலத்தில் ஒரு மணி நேரத்தில் பெற்ற ஆதாயத்தை ஒரு சாமானியத் தொழிலாளி ஈட்ட வேண்டுமானால் 10 ஆயிரம் ஆண்டுகள் உழைத்திட வேண்டும். முகேஷ் அம்பானி ஒரு நொடியில் ஈட்டும் பணத்தை ஒரு சாமானிய தொழிலாளி பெற வேண்டுமானால் அவன் மூன்று ஆண்டுகள் உழைத்திட வேண்டும். சமீபத்தில் வெளியாகியுள்ள சமத்துவமின்மை கிருமி (The Inequality Virus) என்னும் ஆக்ஸ்பாம் அறிக்கை இவ்வாறுதான் கூறுகிறது.

மறுபக்கத்தில், 2020 ஏப்ரலில் ஒவ்வொரு மணி நேரத்திலும் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் என்றும் தரவுகள் காட்டுகின்றன. இந்தியாவில் சமூக முடக்கக்காலத்தில் பில்லியனர்களின் செல்வம் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது இது 2009இல் இருந்த 422.9 பில்லியன் டாலர்களைவிட 90 சதவீதம் அதிகமாகும். உண்மையில், இந்தியாவில் உச்சத்தில் உள்ள 11 பில்லியனர்களின் செல்வம் கொரோனா தொற்றுக் காலத்தில் அதிகரித்துள்ளதை மட்டும் வைத்து, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்யும் மக்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு வேலை கொடுக்க முடியும். அல்லது நாட்டின் ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் பத்தாண்டுகளுக்கான பட்ஜெட்டை நிறைவேற்ற முடியும்.

உச்சத்தில் உள்ள 20 சதவீதத்தினரில் 93.4 சதவீதத்தில் இத்தகைய முன்னேற்றம் அடைந்த துப்புரவு வளங்களைப் பெற்றிருக்கிற அதே சமயத்தில், ஏழைகளிலும் ஏழைகளாக இருக்கும் 20 சதவீதத்தினரில் 6 சதவீதத்தினர் மட்டுமே தனிப்பட்ட முறையில் முன்னேற்றம் அடைந்த துப்புரவு வளங்களைப் பெற்றிருக்கிறார்கள்.

இன்றைக்கும் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 59.6 சதவீதத்தினர் ஓர் அறை அல்லது அதற்கும் குறைவாகவுள்ள இடங்களிலேயே வசிக்கிறார்கள்.  

இந்தியா, உலக அளவில் மிகவும் குறைவான அளவே சுகாதார பட்ஜெட்டுக்கு செலவிடும் நாடுகளில் நான்காவது இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்தியாவில் உச்சத்தில் உள்ள 11 பில்லியனர்களுக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் மட்டும் அவர்கள் ஈட்டிய லாபத்தில் 1 சதவீதம் மட்டுமே வரி விதித்தால்கூட, அரசாங்கம் மக்களுக்கு மலிவுவிலையில் மருந்துகளை அளிப்பதற்காக அறிவித்திருக்கும் ஜன் அபுஷாதி திட்டத்திற்கு (Jan Aushadi Scheme), இப்போத ஒதுக்கியிருக்கும் தொகையைவிட 140 மடங்கு தொகை ஒதுக்க முடியும், அதன்மூலம் ஏழை மக்களுக்கும் விளம்புநிலையில் உள்ள மக்களுக்கும் அவர்கள் வாங்கக்கூடிய அளவிற்கு மருந்துகளை அளித்திட முடியும்.

கடந்த முப்பதாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம், ஆட்சியாளர்கள் பின்பற்றிய கொள்கைகள் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லாமல், அதற்குப் பதிலாக, கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி செய்து கொடுத்து, நாட்டில் பொருளாதார சமத்துவமின்மையைக் கூர்மையாக அதிகரித்திருக்கிறது. நாட்டில் இவ்வாறு செல்வத்தை உருவாக்குபவர்களை மதித்திட வேண்டும் என்று பிரதமர் மோடி நமக்குப் புத்திமதி சொல்கிறார். செல்வம் என்பது உழைக்கும் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட மதிப்பின் பணமாக்கலே தவிர செல்வம் என்பது வேறு இல்லை. இவ்வாறு மதிப்பை உருவாக்குபவர்கள்தான், நம் மக்களின் ஒட்டுமொத்த செல்வத்திற்கும் காரணமாக இருக்கிற உழைப்பாளர்கள்தான், மதிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

திட்டக் கமிஷனை மோடி அரசாங்கம் ஒழித்துக்கட்டியதைத் தொடர்ந்து, நாட்டில் சுதந்திரத்திற்குப் பின்னர், மக்களின் வறுமை அளவினை அளவிடுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த, ஊட்டச்சத்து நெறிமுறைகளுக்கான அடிப்படை நடவடிக்கைகளும் கைவிடப்பட்டன.

ஒரு நபருக்கு ஊட்டச்சத்து தேவை குறித்த வரைமுறை (norm) நமது நாட்டில் கிராமப்புற மக்களுக்கு நபர் ஒருவருக்கு 2,200 கலோரிகள் என்றும், நகர்ப்புற மக்களுக்கு நபர் ஒன்றுக்கு 2,100 கலோரிகள் என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 1993-94இல் தேசிய மாதிரி சர்வே மேற்கொண்ட ஆய்வின்படி, இந்த வரைமுறையின்கீழ் கிராமப்புறங்களில் கிராமப்புறங்களில் 58 சதவீதத்தினரும், நகரப்புறங்களில் 558 சதவீதத்தினரும், நகரப்புறங்களில் 57 சதவீதத்தினரும் இந்த வரைமுறையின்படி உணவு உட்கொள்ளாமல் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள் என்று காட்டுகிறது.  இதே நிறுவனம் பின்னர் 2011-12இல் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்த சதவீத அமைப்பு முறையே 68 என்றும் 65 என்றும் மாறியிருக்கிறது. இதற்கு அடுத்து இதேபோன்று இந்நிறுவனத்தின் சார்பில் 2017-18இல் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மோடி அரசாங்கம் இதனை வெளியே சொல்லக்கூடாது எனக்கூறி மறைத்துவிட்டது. இவ்வாறாக உலக அளவில் நிறுவப்பட்ட தரவுகள் தயாரிக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளையும் ஒழித்துக்கட்டும் வேலைகளில் மோடி அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது. எனினும் ஊடகங்களுக்குக் கசிந்துள்ள தரவுகளிலிருந்து கிராமப்புற இந்தியாவில் உணவு உட்கொள்வது மட்டுமல்லாமல் உண்மையான நுகர்வு செலவினம் ஒவ்வொருவருக்கும் 9 சதவீதம் வீழ்ச்சி  அடைந்திருப்பதாகக் காட்டுகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவாத காலத்திற்கு முன்பே, கிராமப்புற இந்தியாவிலும், நகர்ப்புற இந்தியாவிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வறுமை நிலை மிகவும் மோசமாக மாறியிருக்கிறது என்பது தெளிவாகவே தெரிகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்குப்பின் நிலைமைகள் மேலும் மோசமாக மாறியிருக்கின்றன.     

  இன்றையதினம், உலக பசி-பட்டினி அட்டவணை (Global Hunger Index), இந்தியாவை மிகவும் ஆபத்தான வகையினத்தில் (serious category) வைத்திருக்கிறது.  தேசிய குடும்ப சுகாதார சர்வே-5 (NFHS-5),  ஊட்டச்சத்தின்மை, குறிப்பாக குழந்தைகள் மத்தியில் அதிகரித்திருப்பதாகவும், குழந்தைகள் இறப்பும் (infant mortality), இதனுடன் தொடர்புடைய இதர அட்டவணைகளும் மிகவும் மோசமாக இருப்பதாகக் காட்டுகின்றன.

சமீபத்தில், உலக அளவிலான நிலையான வளர்ச்சி இலக்கு அட்டவணை (Global Index of Sustainable Development Goals), இந்தியாவை முன்பிருந்த நிலையிலிருந்து மேலும் இரண்டு இடங்கள் கீழே தள்ளியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து செயல்படும் பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Centre), கடந்த ஓராண்டில் இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை 60-இலிருந்து 134 மில்லியனுக்கு அதிகரித்திருப்பதாக மதிப்பிட்டிருக்கிறது. சென்ற ஆண்டில் உலக ஏழைகள் அட்டவணைக்கு இந்தியா 57.3 சதவீதம் பங்களிப்பினைச் செய்திருக்கிறது. நம்முடைய மத்தியதர மக்களில் 59.3 சதவீதத்தினர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் மீது இடதுசாரிகள் அளித்த நிர்ப்பந்தம்

கேள்வி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தின்போது, இடதுசாரிகள் அளித்த நிர்ப்பந்தம் காரணமாக ஐமுகூ அரசாங்கம் நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கையை சிறிதுகாலத்திற்கு நிறுத்தி வைத்ததாக நம்பப்படுகிறதே! நவீன தாராளமயச் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதிலிருந்து குறிப்பிடத்தக்க அளவிற்கு விலகி இருந்ததை ஐமுகூ கொள்கைகளை பிரதிபலிக்கிறதா?

சீத்தாராம் யெச்சூரி: ஐமுகூ அரசாங்கம் பொருளாதார சீர்திருத்தங்களை நிறுத்தி வைத்திடவில்லை. குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நவீன தாராளமயக் கொள்கைகளை மட்டும் அது பின்பற்றியது.  இவ்வாறு இது நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றியதால்தான் இடதுசாரிக் கட்சிகள் அதற்கு வெளியிலிருந்துகொண்டு ஆதரவு அளித்து வந்தது. இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணத்தைப் பாதுகாத்திட வேண்டும் என்பதற்காகவும், குடியரசின் அடித்தளங்களையே அரித்துவீழ்த்திடத் துடித்துக் கொண்டிருந்த மதவெறி சக்திகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலிருந்து தடுத்திட வேண்டும் என்பதற்காகவும், இத்தகைய ஆதரவு அதற்கு அளிக்கப்பட்டு வந்தது.   ஆம், இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே குறைந்தபட்ச பொது செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் முத்திரை பதிக்கத்தக்க விதத்தில் மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், வன உரிமைகள் சட்டம், உணவு உரிமை, நிலக் கையகப்படுத்துதல் தொடர்பாக ஒரு புதிய சட்டம், தகவல் உரிமைச் சட்டம், கல்வி உரிமை மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டன. இடதுசாரிகளின் நிர்ப்பந்தம் இல்லையெனில் இவையனைத்தும் வெளிச்சத்திற்கு வந்திருக்காது. 

நம் அரசமைப்புச்சட்டம்  மக்களுக்கு சில அடிப்படை உரிமைகளையும், உத்தரவாதங்களையும் அளித்திருக்கிறது. இந்தியா வளர்வதால் இந்த உரிமைகள் மற்றும் உத்தரவாதங்களும் விரிவடையக்கூடிய விதத்தில் தொடர வேண்டும் என இடதுசாரிகள் உறுதியாக நம்புகிறார்கள். வேலை அளிக்கும் உரிமை, நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இல்லை. ஆனால், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் கிராமப்புற மக்களுக்காவது குறைந்தபட்சம் வேலை உரிமையை உத்தரவாதம் செய்தது. இதனை அமல்படுத்திட ஆளும்வர்க்கங்கள் பல்வேறு வடிவங்களில் தில்லுமுல்லுகள் செய்தபோதிலும், கிராமப்புற வேலைவாய்ப்பு உரிமைக்கு இது கணிசமான அளவிற்கு உதவியது.

மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் கொண்டுவரப்பட்டபோதே, இதேபாணியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் ஒன்றும் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இடதுசாரிகள் வலியுறுத்தி வந்தார்கள். அதேபோன்றே நம் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் கல்வி ஓர் அடிப்படை உரிமை கிடையாது. ஆனால் அதனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். அதேபோன்றே தகவல் அறியும் உரிமைச் சட்டம், பழங்குடியினருக்கான வன உரிமைகள் சட்டம் போன்றவைகளும் மக்களுக்கான உரிமைகளாகவும் உத்தரவாதங்களாகவும் கொண்டுவந்தோம்.  இடதுசாரிகளின் நிர்ப்பந்தம் இல்லை என்றால் இவையனைத்தும், நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களால், சட்டங்களாக வந்திருக்காது.

கேள்வி: நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள், இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் என்ன, அதற்கும் எதேச்சாதிகாரம் வளர்வதற்கும் இடையே தொடர்பு உண்டா?

சீத்தாராம் யெச்சூரி: 2014க்குப் பின் உருவாகியிருப்பது என்னவென்றால் கார்ப்பரேட்டுகளின் நலன்களும் மதவெறி அரசியலும் கலக்கப்பட்டுள்ள ஒரு நச்சுக் கலவையாகும். இது மிகவும் மூர்க்கத்தனமான முறையில் நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுதல், பொதுத்துறை நிறுவனங்களைப் பெரிய அளவில் தனியார்மயமாக்குதல், கனிம வளங்கள் அனைத்தையும் தனியாரிடம் தாரை வார்த்தல் போன்றவற்றின் மூலமாக கொள்ளை லாபமை ஈட்டுவதற்கான கொள்கைகளைப் பின்பற்றுவதாகும். இது, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆட்சியாளர்களுக்கான கூட்டுக் களவாணிகளை உருவாக்கித் தந்திருக்கிறது, அரசியலில் ஊழலும் ஆறாகப் பாய்ந்துகொண்டிருக்கிறது. இத்துடன் மக்களின் ஜனநாயக உரிமைகள், குடிமை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீதும் கண்மூடித்தனமான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து கூறுபவர்கள் அனைவரும் தேச விரோதிகள் என முத்திரைகுத்தப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் உள்ள தேசத் துரோகக் குற்றப்பிரிவு முதலானவற்றின்கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் வரமுடியாத அளவிற்கு சிறைப்படுத்தப்படுகின்றனர். இவற்றின்மூலம் அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு அளித்துள்ள உத்தரவாதங்கள் அனைத்தும் அரித்து வீழ்த்தப்பட்டிருக்கின்றன.

இதனால்தான் உலகம், இந்தியாவை ஒரு தேர்தல் எதேச்சாதிகார நாடு (electoral autocracy) எனப் பிரகடனம் செய்திருக்கிறது. இந்தியாவிற்குச் சென்ற ஆண்டு 79ஆவத இடத்தை அளித்திருந்த உலகப் பொருளாதார சுதந்திர அட்டவணை (Global Economic Freedom Index), இந்த ஆண்டு 105ஆவது இடத்தை அளித்து மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது. அதேபோன்றே இந்தியாவை சென்ற ஆண்டு 94ஆவது நாடாக குறிப்பிட்டிருந்த மனித சுதந்திர அட்டவணை (Human Freedom Index), இந்த ஆண்டு அதனை 111ஆவது நாடாகக் கீழிறக்கி இருக்கிறது. இந்தியாவை சென்ற ஆண்டு 129 என்று குறிப்பிட்டிருந்த ஐ.நா.மன்றத்தின் மனித வளர்ச்சி அட்டவணை (UNDP Human Development Index), இந்த ஆண்டு 131ஆவது இடத்திற்குத் தள்ளி இருக்கிறது. இவ்வாறு நம் நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை வறியநிலைக்குத் தள்ளிக்கொண்டிருப்பதுடன், ஆட்சியாளர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டிருக்கும் எதேச்சாதிகாரம் முசோலினி பின்பற்றிய பாசிசத்தின் அச்சுறுத்தும் தீய அறிகுறிக்கிணங்க ஆட்சியில் கார்ப்பரேட்டுகளையும் கைகோர்த்துக்கொள்வதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

கேள்வி: இப்போது கோவிட்-19இன் காரணமாக நவீன தாராளமயமும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறதே, இதன் எதிரிகாலம் என்ன? இதற்கு மாற்று ஏதாவது…?

சீத்தாராம் யெச்சூரி: கொரோனா வைரஸ் பெருந்தொற்றும், அதனைச் சமாளித்து வெற்றிகொண்டு நம் மக்களின் உயிரையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் அளவுக்கு நம் சுகாதாரக் கட்டமைப்புப் போதிய அளவுக்கு இல்லாததும் மிகவும் கூர்மையான முறையில் தோலுரித்துக் காட்டப்பட்டுவிட்டன. இப்போது நாம் எதிர்கொண்டிருக்கும் ஆழமான பொருளாதார மந்தம் என்பது, உலக அளவில் பின்பற்றப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதிதான். லாபம் ஈட்டப்படுவது எவ்விதத்திலும் குறையக்கூடாது என்பதற்காக, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஊதியங்களை வெட்டுவதன் மூலமாகவும், வேலை நாட்களைக் குறைப்பதன் மூலமாகவும், மிகவும் முக்கியமாக, இந்தியாவில் செய்ததைப்போல ‘பணமதிப்பிழப்பு’ (‘demonetisation’) போன்ற நடவடிக்கைகள் மூலமாக சிறிய அளவிலான உற்பத்தியை ஒழித்துக்கட்டியதன் மூலமாகவும் இவ்வாறாக மக்கள் மீதான சுரண்டலை சாத்தியமான அனைத்து வழிகளிலும்  உக்கிரப்படுத்தி இருக்கிறார்கள். நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளுக்கிருந்த அனைத்து வாய்ப்பு வாசல்களையும் ஆக்கிரமித்த பின்னர் இப்போது கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாப நோக்கத்திற்காக, ஒப்பந்த விவசாயத்தின் அடிப்படையிலும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதன் மூலமாக இந்திய விவசாயத்தையும் ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதில், நவீன தாராளமய சீர்திருத்தங்கள் திவாலாகிவிட்டன என்பது உலகம் முழுதும் இப்போது அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுதும் மக்கள் மத்தியில் சமத்துவமின்மை மிகவும் அபாயகரமான முறையில் அதிகரித்துக்கொண்டிருப்பதைக் கண்டு தி எகனாமிஸ்ட் (The Economist) இதழ் கீழ்க்கண்டவாறு கூறுகிறது: சமத்துவமின்மை என்பது வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்க முடியும் மற்றும் திறமையற்றதாக இருந்திட முடியும் என்ற என்ற கட்டத்திற்கு வந்துவிட்டது.

 ஜோசப் ஸ்டிக்ளிட்ஷ் (Joseph Stiglitz), சமத்துவமின்மையின் விலை (The Price of Inequality) என்னும் தன்னுடைய நூலில் சமுதாயத்தில் உச்சத்தில் உள்ள 1 சதவீதத்தினரையும் மீதம் உள்ள 99 சதவீத மக்களையும் குறித்துக் கீழ்க்கண்டவாறு முடிவுக்கு வந்திருக்கிறார்: நம்முடைய பொருளாதார வளர்ச்சியை முறையாக அளந்தோமானால், நம் சமூகம் இப்போதுள்ளதுபோல் ஆழமாகப் பிளவுபடாதிருக்குமானால், இப்போதிருப்பதைக்காட்டிலும் மிகவும் அதிகமானதாக இருந்திடும். (“Our economic growth, if properly measured, will be much higher than what we can achieve if our society remains deeply divided.”)

அனைத்து முன்னேறிய நாடுகளும், நவீன தாராளமயக் கொள்கைக்கு வெறுப்பை ஊட்டக்கூடியதாக இருந்தபோதிலும், தன் நாட்டு மக்களுக்கு ஊக்குவிப்புத் திட்டங்களை (stimulus packages) அறிவித்திருக்கின்றன. உள்நாட்டுத் தேவையையும் பொருளாதார நடவடிக்கைகளையும் புதுப்பித்திட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இவ்வாறு இவை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதனால்தான் அரசாங்கச் செலவினங்களை அதிகப்படுத்தியிருப்பதை நியாயப்படுத்தி சமீபத்தில் உரையாற்றியுள்ளார். நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லைதான், ஆனாலும்… என்று கூறி இவ்வாறு பேசியிருக்கிறார்.

எனினும் மோடி அரசாங்கம் இதனைச் செய்ய மறுக்கிறது. தன்னுடைய கூட்டுக் களவாணி முதலாளிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தபோதிலும், மக்களுக்கு ஊக்கிவிப்புத் திட்டங்களை அறிவிக்க மறுக்கிறார். மோடி அரசாங்கம் நாளும் பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றுவதன் மூலமும், அதன் விளைவாக ஒட்டுமொத்த பணவீக்கம் ஏற்படுவதாலும், மக்கள் மீது சொல்லொண்ணா துன்ப துயரங்களை ஏற்றி யிருக்கிறது. இதன் காரணமாக உள்நாட்டுத் தேவை சுருங்கியிருக்கிறது, மேலும் பொருளாதார மந்தத்தை ஆழப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் உள்ள நாம், இத்தகைய சீர்திருத்தக் கொள்கைகளை மிகவும் ஆழமானமுறையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகும். நம் முன்னுரிமைகளை மாற்றியமைத்திட வேண்டும். வேளாண்துறையை வலுப்படுத்திட வேண்டும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் முதலீடுகள் செய்திட வேண்டும், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும், நமக்கு மிகவும் தேவையான விதத்தில், நம் உள் கட்டமைப்பு வசதிகளைக் கூர்மையான முறையில் அதிகப்படுத்திட வேண்டும். இவற்றின் மூலமாக வேலைவாய்ப்புகளைப் பெருக்கிட வேண்டும், உள்நாட்டுத் தேவைகளை அதிகப்படுத்திட வேண்டும்.

கேள்வி: பாஜக, 1990களுக்கு முன்பிருந்தே பின்பற்றப்படும் நவீன தாராளமயக் கொள்கைகளைத்தான் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறதே! நவீன தாராளமய சீர்திருத்தங்களை அது பின்பற்றும் விதம், இதர கட்சிகளைக் காட்டிலும் மிகவும் மூர்க்கத்தனமாக இருக்கிறதா?

சீத்தாராம் யெச்சூரி: பாஜக எப்போதுமே உள்ளொன்று வைத்துப் புறம்பொன்றுதான் தன்னுடைய இரட்டை நாக்குடன் பேசும். அது என்ன சொல்கிறது என்பதும், அது என்ன செய்கிறது என்பதும் இரண்டு முற்றிலும் வெவ்வேறான விஷயங்களாகும்.  ஆட்சிக்கு வருவதற்கு முன், தாங்கள் ஒரு தேசியக் கட்சி என்று கூறிக்கொண்டு, ‘ஸ்வதேசி’ என்ற முழக்கத்தை முழங்கி வந்தது. உலக வர்த்தக அமைப்பையும் எதிர்த்து வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தபின் தலைகீழாக மாறியது.

குறிப்பாக, 2014க்குப் பின்னர், பாஜக அரசாங்கம் நவீன தாராளமய சீர்திருத்தங்களை மிகவும் மூர்க்கத்தனமாக அமல்படுத்திக்கொண்டிருக்கிறது. இத்தகைய மூர்க்கத்தனம் முன்பு அதற்கு இருந்ததில்லை. இதற்கு ஒரு காரணம் உண்டு. பாஜக என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகும். ஆர்எஸ்எஸ் இந்தியாவில் தன்னுடைய வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் தன்மையிலான ‘இந்துத்துவா ராஷ்ட்ரம்’ என்னும் அமைப்பை நிறுவிட வேண்டும் என்கிற அரசியல் திட்டத்தையே எப்போதுமே பின்பற்றி வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்தபோது இதனை எய்திட அது தோல்வியடைந்ததன் காரணமாக இப்போது நம்முடைய அரசமைப்புச்சட்டத்தால் நிறுவப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை ஒழித்துக்கட்டிவிட்டு அதற்குப் பதிலாக அந்த இடத்தில் தன்னுடைய பாசிஸ்ட்  ‘இந்து ராஷ்ட்ரத்தை’ நிறுவிட வேண்டும் என்று உறுதியாகக் கோரிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அது தன்னுடைய குறிக்கோளில் வெற்றிபெற வேண்டுமானால் அதற்கு சர்வதேச ஆதரவு தேவை. குறைந்தபட்சம் சர்வதேச சமூகம் அதனைக் கடுமையாக எதிர்க்காமல் அது பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்குச் சிறந்த வழி, நவீன தாராளமய சீர்திருத்தக்கொள்கைகளை மூர்க்கத்தனமாகப் பின்பற்றுவதுதான் என அது கருதுகிறது.  உலக அளவிலான மற்றும் உள்நாட்டில் இயங்கக்கூடிய முதலாளிகளும், கார்ப்பரேட்டுகளும் ஆதரவினைத் தங்களுக்கு முழுமையாக அளிப்பதற்காக நாட்டைச் சூறையாடுவதன்மூலம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான புதிய வாய்ப்பு வாசல்களை அவர்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்ற முறையில் அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

 

 

வலதுபக்கம் இடம்பெயர்தல்

இந்தியா நவீன தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் உலக அரசியலில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?

சீத்தாராம் யெச்சூரி: உலக அரசியலில் வலதுசாரி இடம்பெயர்வு ஏற்பட்டிருப்பது, நீண்டகாலமாக நிலவிவரும் உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவேயாகும். இதன் காரணமாக உலக முதலாளித்துவம் கொள்ளை லாபம் ஈட்டுவதனைக் கடுமையாகப் பாதித்தது. இதற்கெதிராகத் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின்கீழ் உழைக்கும் மக்களின் ஒற்றுமையின்கீழ் கிளர்ச்சிப் போராட்டங்கள் உலகம் முழுதும் கிளர்ந்தெழுவதைத் தடுப்பதற்காக தொழிலாளர்கள் மத்தியில் நிறவெறி, இனவெறி, பிராந்திய வெறி, மதவெறி, சாதி வெறி என வலதுசாரி அரசியல் இடம்பெயர்தலுக்கு இட்டுச்செல்லும் அனைத்துவிதமான வெறிகளும் கிளப்பப்பட்டன. இவற்றுக்கெதிராகக் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின்கீழ் அணிதிரளும் உழைக்கும் மக்களைச் சீர்குலைத்திட வேண்டும் என்பதற்காகவே அவர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் அனைத்தும் நசுக்கப்பட்டன.

இந்தியாவிலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்ட்ரம் திட்டத்திற்குச் சேவகம் செய்திடும் விதத்தில்,  மதவெறித் தீயை விசிறிவிட்டும், மதச்சிறுபான்மையினருக்கு எதிராக  விஷத்தைக் கக்கும் வெறுப்புப் பிரச்சாரம் மற்றும் வன்முறை வெறியாட்டங்களை மேற்கொண்டும் அரசியலில் வலதுசாரி இடம்பெயர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது, இயற்கையாகவே, பாசிஸ்ட் நடவடிக்கைகளை நோக்கிக் காயை நகர்த்துவதற்கு ஏதுவாக எதேச்சாதிகாரத்தின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்கிறது.

குறிப்பாக, 2014க்குப்பின், கார்ப்பரேட்டுகள்-மதவெறியர்கள் கள்ளப் பிணைப்பு உருவாகி, தொடர்ந்து வலுப்பெற்று வந்திருக்கிறது. இது மிகவும் மட்டரகமான கூட்டுக்களவாணி முதலாளித்துவத்திற்கும் இட்டுச் சென்றுகொண்டிருக்கிறது. கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகள் தங்கள் சொத்துக்களை அபரிமிதமாகப் பெருக்கிக்கொண்டு வருவதிலிருந்தே இதனை நாம் நன்கு பார்த்து வருகிறோம். இந்தியாவின் சொத்துக்கள் அனைத்தையும் பெரிய அளவில் சூறையாடுவதற்கு வசதி செய்துகொடுக்கும் விதத்தில் அரசுத்தரப்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய பணமாக்கல் திட்டம் (NMP-National Monetisation Pipeline), இவர்களது நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களையும், ஆர்எஸ்எஸ் பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்ட்ரம் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒட்டுமொத்த திட்டத்தின் ஒரு பகுதியேயாகும்.    

நவீன தாராளமயச் சீர்திருத்தங்களை எவ்விதமான தங்குதடையுமின்றி எடுத்துச்செல்லக்கூடிய இத்தகைய கொள்கையானது, இயற்கையாகவே, இந்தியாவை சர்வதேச உறவுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச நிதிமூலதனத்தின் எடுபிடியாக மாற்றியிருக்கிறது. ஒருகாலத்தில் வளர்முக நாடுகளின் தலைவன் என்றும், அணிசேரா நாடுகள் இயக்கத்தின் வீரமுதல்வன் என்றும் பெயரெடுத்திருந்த இந்தியா, இன்றைய தினம் இவ்வாறு வரலாற்று எடுகளில் தரம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஓர் இளைய பங்காளி என்ற முறையில், தற்போது மிகவும் மூர்க்கத்தனமான முறையில் நவீன தாராளமய சீர்திருத்தங்களைப் பின்பற்றிக்கொண்டிருக்கும் கார்ப்பரேட்டுகள்-மதவெறியர்கள் கள்ளப்பிணைப்பு   நம் அரசமைப்புச்சட்டம் வரையறுத்துள்ளபடி தற்போது இருந்துவரும் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருப்பதிலிருந்து, ஆர்எஸ்எஸ்-இயக்கத்தின் நோக்கமான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்ட்ரமாக மாற்றுவதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கையின் ஒரு பகுதியேயாகும்.

(நன்றி: ஃப்ரண்ட்லைன்)

  

 

No comments: