Tuesday, September 15, 2020
அக்டோபர் புரட்சியும் தந்தை பெரியாரும்: ருஷியாவின் வெற்றி தந்தை பெரியார்
அக்டோபர் புரட்சியும்
தந்தை பெரியாரும்:
ருஷியாவின் வெற்றி
-தந்தை பெரியார்
ஐந்து வருட திட்டத்தின் பலன்
ருஷியாவில் 1917ல் நிகழ்ந்த புரட்சிக்குப் பின்னர் அந்நாடு உலக மக்களின் கவனத்தைப் பெரிதும் தன்பால் இழுத்துக்கொண்டது. சமதர்ம நோக்கமுடைய ஆன்றோர்களும், பொருளாதார நெருக்கடியால் கஷ்டப் படும் ஏழை மக்களும் ரஷ்ய சமதர்மத் திட்டத்தின் நுண்பொருளை நன் குணர்ந்து தத்தம் நாடுகளிலும் அத்திட்டங்களைப் புகுத்தி மிகுந்த தீவிரமாய் ஒரு பக்கம் பிரசாரஞ் செய்துவர, ஊரார் உழைப்பில் உடல் நோவாதுண்டு வாழும் சோம்பேறிச் செல்வவான்களும் அவர்களின் தரகர்களான புரோகிதர் களும், அவர் தம் பத்திரிகைகளும் முதலாளித்துவ அரசாங்கமும் சமதர்ம உணர்ச்சியை ஒழிக்கப் பற்பல சூழ்ச்சி முறைகளையும், மிருகத்தனமான பயங்கர ஆட்சி முறையையும் கையாண்டு வருவதும் ருஷியாவைப்பற்றிப் பொய்யும் புழுகுமான வியாசங்களை உலமெங்கும் பரப்பி அந்த ஆட்சி முறையை பலவாறு குற்றஞ் சொல்லி அங்கு பட்டினியும், பஞ்சமும் நிறைந் திருக்கின்றனவென்று கூறியும் வேறு பல தீய முறைகளைக் கையாடி வரு கின்றனர். ருஷியாவின் சமதர்மக் கொள்கை ஒரு பொழுதும் நடை முறை யில் சாத்தியமாகாது என்று புகன்ற ராஜ தந்திரிகளும், ருஷியாவில் தனியு டைமை யொழிந்து பொதுவுடைமை மிளிர்வதால் அங்கு மக்களின் முயற்சி யும், அறிவும் குன்றி உற்பத்திகள் குறைந்து போய்விடும் என்று தர்க்க ரீதியாய் மொழிந்த பொருள் நூலாசிரியர்களும் தங்கூற்றுத் தவரொன்று தானே இன்று ஒத்துக்கொள்ளும்படி செய்து விட்டதோடு ஐரோப்பிய வல்லரசுகளெல்லாம் ரஷியாவை அலட்சியம் செய்து வாழ முடியாத நிர்பந்தத்திற்குள் வந்து விட்டதென்பதை எவரும் மறுக்க முடியாது.
ரஷிய சமதர்மத் திட்டமோ இன்னும் முற்றுப் பெறவில்லை. உலக மெங்கும் சமதர்ம ஆட்சியாய் விளங்குங் காலத்திலே சமதர்ம ஆட்சியின் திட்டம் வெற்றி பெறுமென்று கூறலாம். இப்பொழுது ரஷியா உலகத்திலுள்ள முதலாளித்துவத்தோடு போரிட்டுக் கொண்டிருக்கிறதென்றே கூறவேண்டும். அப்போரில் தமது எதிரிகளை நிர்த்தாக்ஷண்யமாகத் தண்டித்து வருவதை நியாய புத்தியுள்ள எவரும் தவறென்று கூறத் துணியார். ரஷியாவில் மனிதனுக்கு சுதந்தரம் அதிகமில்லையென்று கூறப்படுகிறது. தனிமனிதனு டைய சுதந்திரத்திற்குப் போதிய இடமிருப்பதாகக் கூறப்படும் நாட்டிலுள்ள மக்களைவிட ரஷ்ய மக்களுக்கு அந்நாட்டில் அதிக சுதந்திரமும் உரிமையு மிருப்பதோடு ஜார் சக்கரவர்த்தியின் கொடிய ஆட்சியில் உண்ண உணவும், உடுக்க உடையும், ஒண்ட நிழலும், படுக்கப் பாயுமின்றி கோடானுகோடி மக்கள் தவித்து ஆயிரக்கணக்காய்-இல்லை-லட்சக்கணக்காய் பட்டினி யாலும் நோயாலும் மடிந்த ரஷியா நாட்டிலே பட்டினியென்றால் இன்ன தென்பதை எவருமறியாதபடி, நோய் என்றால் இன்னதென்பதை உணராத படியும் நாளைக்கு உணவிற்கு என்செய்வது, வியாதியால் இரண்டு நாள் படுத்துக்கொண்டால் நமது நிலையென்ன? நமது குடும்பத்தின் கதியென்ன? என்றகவலையே அறியாத மக்களாய் வாழும்படி செய்து நாடெங்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்திருக்கும்படி இச் சுருங்கிய காலத்திற்குள் சோவியத் ஆட்சி செய்து உலகத்திலுள்ள எல்லா முதலாளித்துவ அரசாங்கங் களும் திடுக்கிடச் செய்து விட்டதென்பதை நன்கு அறியலாம்.
பொதுவுடமைத் தத்துவம்
உலகிலேயே உற்பத்தி செய்யும் செல்வத்திலே உற்பத்தி செய்துவரும் தொழிலாளிக்கு சரிசமமான பங்கு கிடைத்திருந்தால் உலகிலே இன்று காணக்கிடக்கும் பொருளாதார நெருக்கடியும் வேலையில்லாத் திண்டாட்ட மும் உண்டாயிராதென்பதே பொது உடமை இயக்கத்தினரின் எண்ணம்.
ரஷிய பொது உடமை முறை உலகிலுள்ள ஏனைய நாடுகளும் பின்பற்றி தொழில் உற்பத்தியை அதிகப்படுத்தினால் தொழிலாளியினுடைய உண்மையான நிலை வெளிப்பட்டுவிடும். உழைப்பதற்கென்று ஒரு வகுப்பும் அதன் பலனை அனுபவிப்பவர் என்றே மற்றொரு வகுப்புமின்றி எல்லோரும் உழைக்க வேண்டுமென்று எல்லா அரசாட்சியாரும் சட்டம் செய்து விட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் உழைத்து விட்டு உலகிலே தன் உணவிற்கு வேண்டியதைச் சம்பாதித்துக் கொண்டு இன்பமாய் அமைதியோடு வாழமுடியும்.
பொதுவுடமை என்றால் என்ன?
“எல்லா உயிர்ப் பிராணிகளுக்கும் பொதுவாக வுள்ள இந்த உணவுப் பிரச்சினை தீர்ந்து விட்டால் மக்கள் தங்களிடமுள்ள மனிதத் தன்மையை விருத்தி செய்து கொள்ளமுடியும். பொதுவுடமையின் நோக்கமும் இதுவே யாகும். வருமானத்தை உழைப்பாளிகள் சமமாகப் பங்கிட்டுக் கொள்வ தென்பதே இதன் பொருள். வயிற்றுப் பசிக்கு உணவுதேடுங் காலமும் தூங்கும் நேரமும் தவிர மீதமுள்ள நேரம் தன் வயிற்றுக்கும் பிறருக்கும் கட்டுப்படாது சுதந்திரமாய் வாழுங்காலம். அது மக்களெல்லோருக்கும் சம மாக இருக்க வேண்டுமென்பதே பொதுவுடமையின் உண்மையான தத்து வம்” என்று ஓரிடத்தில் பேராசிரியர் பெர்னாட்ஷா பெரிதும் வியாக்கியானம் செய் துள்ளார்.
இந்நிலை அடைய உலகிலுள்ள எல்லா தேசத்தினரும் பொது வுடமைக் கொள்கையை ஒப்புக்கொண்டு நடந்தால் தான் முடியும். இந்தக் கருத்துடன் தான் இன்றைய ரஷிய ஆட்சி நடந்து வருகிறது. இந் நன்னோக் கம் வெற்றி பெற ஒவ்வொரு நாட்டிலும் எதேச்சாதிகாரமுள்ள தொழிலாளி யின் பிரதி நிதிகளிருக்க வேண்டுமென்பதே சோவியத் நிபுணர்களின் கருத்தாதலின் ரஷியாவில் அவர்களுக்குத் தகுந்த தற்போதைய அரசியல் முறையை நிறுவியுள்ளார்கள்.
முதலாளிகளென்போர் யார்?
ஐந்து வருடத்தில் தொழிலாளிகளின் உடல் நலம், அறிவு விருத்தி முதலான நலனைப் பெருக்க பெரிதும் திட்டங்கள் ஏற்படுத்தினர். அங்குள்ள உற்பத்திப் பொருள்களை எவ்விதத் தடங்கலுமின்றி சர்க்காரே பிற நாடுகளில் கொண்டு விற்பனை செய்தனர். சில தொழிலில் லாபமும், சில தொழிலில் நஷ்டமும் ஏற்பட்டாலும் சர்க்காரே முதலாளியாக இருப்ப தால் நஷ்டத்தை லாபம் வரக்கூடிய பொருளிலிருந்து ஈடு செய்து கொள்ள முடிகிறது. உற்பத்தி செலவுகளை யெல்லாம் கழித்து 100க்கு 10 அல்லது 20 பாகம் தொழிலாளி களின் அபிவிருத்திக்காகச் செலவழித்து வருகிறார்கள்.
விவசாயம்
ரஷியாவில் எல்லா நிலையங்களையும் சர்க்கார் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு மக்களை ஓர் இயந்திரம் போல் பாவித்து வருகிறார்கள் என்பது தவறு. விவசாயத்திற்கு லாயக்கான பூமிகளில் சில பாகம் சர்க்கார் பண்ணைகள்; சில பாகம் பல குடியானவர்கள் கூட்டுறவாகப் பயிரிடும் பண்ணைகள்; மற்றொரு பாகம் தனி விவசாயிகள் தனியாகப் பயிரிடும் நிலம் எனப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
ரஷியா, விவசாயத்தைப் போல் கைத்தொழிலையும் அபிவிருத்தி செய்ய முனைந்து வேலைசெய்து விருத்தி செய்துவருகிறது. அதன் கைத் தொழில் அபிவிருத்தியை கீழ்கண்ட புள்ளிவிபரங்களால் நன்கறியலாம்.
இந்திய நாடு
பிற நாடுகள் இத்தகைய நோக்கங்களை கையாண்டு திட்டத்தைக் கண்டு வெற்றியடைந்து கொண்டு போகும்பொழுது இந்தியா வாளா விருக்கு மேயானால் சீக்கிரத்தில் பொருளாதார நெருக்கடி யென்னும் சூழலில் பட்டு அதோ கதியாய் விடுமென்பது நிட்சயம்.
சில மாதங்களுக்கு முன் ரஷியா தோழர் ஒருவர் கவி. ரவிந்தரநாத் தாகூருக்கு நிருபம் ஒன்று எழுதியிருந்தாராம். அதில் சோவியத் ஆட்சியில் தொழில் முன்னேற்றமடையக் காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்? உங்கள் தேசம் அத்தகைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாயிருப்பவை எவைகள்? என்று வினாவியிருந்தார். அதற்கு கவி-தாகூர் “தங்கள் நாட்டில் செல்வப் பெருக்கை தனி மனிதர்களிடமிருந்து எல்லாப் பொது மக்களுமடங்கிய சமுதாயத்திற்கு பயன்படுமாறு செய்திருப்பதுதான் உங்கள் ரஷிய நாட்டின் வெற்றிக்கு காரணம் சமுதாய விசயங்களில் முயர்ச்சியற்று எல்லாம் இறைவன் செயலென்றிருப்பதே எங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கிறது” என்று பதில் எழுதியிருந்தார்.
(1933 ஜூலை 23 குடி அரசு இதழில் வெளியான கட்டுரையிலிருந்து சில பகுதிகள்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment