அரசமைப்புச்சட்ட நீதிமன்றம்
அதன் செயல்பாட்டிலிருந்து தோல்வியடைந்துவிட்டது
(உச்சநீதிமன்றம் புலம்பெயர்
தொழிலாளர்களை, அவர்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் பாதுகாத்திடாமல் உதாசீனம்
செய்திருக்கிறது)
-ஏ.பி.ஷா
தமிழில்:
ச.வீரமணி
கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றால்
ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடி, உலகின் பல நாடுகளைக் கவ்விப்பிடித்திருப்பதுபோல், இந்தியாவையும்
கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பதால், அது பல்வேறு விசித்திரமான சவால்களை எதிர்கொண்டிருக்கிறது.
இதில் மிகவும் கடுமையான பிரச்சனை என்பது புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனையாகும். அவர்களுக்கு
வேலை இல்லை, வருமானத்திற்கான வழி எதுவும் இல்லை, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான
வழி எதுவும் இல்லை, குரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா
என்பதைக் கண்டறிவதற்கான சோதனை வசதிகள் இல்லை, அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான
சாதனம் எதுவும் இல்லை, தங்கள் வீடுகளுக்குப் போய்ச்சேர்வதற்கான வழிகளும் எதுவும் இல்லை.
ஒவ்வொரு நாளும், புலம்பெயர் தொழிலாளர்கள் பல நூறு மைல்கள் நடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்
என்றும், போகும்போதே பலர் இறந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் நாம் கேள்விப்படுகிறோம்.
இதில் மிகவும் சோகமானதும் துன்பமிக்கதுமான விஷயம் என்னவென்றால் இவர்களின் நிலைமைகள்
குறித்தும், இவர்களின் நலன்கள் குறித்தும் கவனிக்க வேண்டிய நிறுவனங்கள் அக்கறையற்று இருப்பதும், உணர்ச்சியற்று மரக்கட்டைகள்போன்று
இருப்பதுமாகும். நான் இங்கே நிறுவனங்கள் என்று குறிப்பிடுவது, நம் உச்சநீதிமன்றத்தைத்தான்.
இது, புலம்பெயர் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருக்கிறது என்பதை திருப்திகரமான
முறையில் ஒப்புதல் அளிப்பதில் தோல்வி அடைந்திருக்கிறது. அவர்களுக்கு மிகவும் பாதுகாப்புத்
தேவைப்படும்போது, அவற்றை அவர்களுக்கு வழங்குவதில் உதாசீனமாக இருந்து வருகிறது.
குரோனா வைரஸ் தொற்றின் பாதகமான
விளைவுகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளித்திட வேண்டும் என்பதை எவரும் மறுக்க
முடியாது. ஆனால், அரசாங்கம் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும், அது அவசரநிலைக்
காலமாக இருந்தாலும்கூட, அவை அரசமைப்புச்சட்டத்தின் தனியுரிமைக்கு உட்பட்டுதான் எப்போதும்
இருந்திட வேண்டும். நீதித்துறை என்பது இன்றைய சூழ்நிலையில் மிக முக்கியமான கண்காணிப்பு
அமைப்பாக (watchdog) மாறி இருக்கிறது.
தொழிலாளர்களுக்கு நிவாரணம் எதுவும்
இல்லை
இந்த சமூக முடக்கத்தில், குடிமக்களின்
அடிப்படை உரிமைகள் முழுமையாக மீறப்பட்டிருக்கின்றன என்பதற்கு, குறிப்பாக புலம்பெயர்
தொழிலாளர்கள் போன்று மிகவும் வடுப்படத்தக்க நிலையில் உள்ள மக்கட்பிரிவினரின் அடிப்படை
உரிமைகள் ஒட்டுமொத்தமாக மீறப்பட்டிருக்கின்றன என்பதற்கு, போதுமான அளவிற்கு சாட்சியங்கள்
இருக்கின்றன. ஆனால் உச்சநீதிமன்றம், இது தொடர்பாக வந்திருக்கிற மனுக்கள் மீது நாட்டிலுள்ள
நிலைமைகள் குறித்து விசாரிப்பதற்குப் பதிலாக, இந்த மனுக்களை அனுமதிக்க மறுத்துக்கொண்டு,
அல்லது, ஒத்திவைத்துக்கொண்டு தன்னுடைய தந்த சிம்மாசனத்தில் பாதுகாப்பாக அமர்ந்துகொண்டிருக்கிறது.
வலுவானமுறையில் எவ்வித நிவாரணமும்
வழங்காது, நீதிமன்றம் அரசமைப்புச்சட்டத்தின் கீழ் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள நீதிக்கான
மிகவும் அடிப்படை உரிமைக்கான வழியைக் குடிமக்களுக்கு மறுத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு
செய்திருப்பதன் மூலம், அது பல லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களைக் கீழே வீழ்த்தியிருக்கிறது,
ஓர் அரசமைப்புச்சட்டத்தின் கீழான நீதிமன்றமாகத் தன்னுடைய கடமையைப் போதுமான அளவில் நிறைவேற்றுவதில்
தோல்வி அடைந்திருக்கிறது. நவீன இந்தியாவின்
மிகவும் கண்டிப்பான சமூக முடக்கங்களில் ஒன்றாக விளங்குவதில், மத்திய அரசு ஏராளமான கட்டளைகளைப்
பிறப்பித்திருக்கிறது, ஆனால், அவற்றை நிறைவேற்ற வேண்டியவை மாநில அரசுகள்தான் என்றும்
அமர்த்தியிருக்கிறது. ஆனால், புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை என்பது இயல்பாகவே மாநிலங்களுக்கிடையேயான
ஒரு பிரச்சனையாகும். மாநிலங்கள் அதனை உள்ளார்ந்த முறையிலும் மற்றும் குறுக்குவெட்டு
முறையிலும் (internally as well as interse) கையாள வேண்டியிருந்தது, இருக்கிறது.
புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்புவதற்குப்
பாதுகாப்பான போக்குவரத்தை யார் உத்தரவாதம் செய்திட வேண்டும்? அவர்களைத் தனிமைப்படுத்திய
காலத்தில் அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான ஊதியத்தை, யார் கொடுக்க வேண்டும்? அல்லது, அவர்களின் உடல்நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை
யார் கவனித்துக்கொள்ள வேண்டும்? அவர்களின் உணவுக்கும் அப்பாற்பட்டு அவர்களின் தேவைகளை
யார் கவனித்துக்கொள்ள வேண்டும்? அவர்களின் வேலையிழப்புக்கான இழப்பீட்டை யார் உத்தரவாதம்
செய்திட வேண்டும்? அவர்களை முறையாகவும், அடிக்கடியும் சோதனை செய்து பார்க்க வேண்டியது
யார்? இவை அனைத்திற்கும் பொறுப்பு மத்திய அரசுதான் என்று உச்சநீதிமன்றம்தான் கட்டளை
பிறப்பிக்க முடியும். இதுதொடர்பான மனுக்களை நிராகரித்திருப்பதன் மூலம் அல்லது ஒத்திவைப்பதன்
மூலம், நீதிமன்றம் எண்ணற்றக் கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை,
ஒரு கொள்கை சம்பந்தப்பட்ட விஷயமா? அதன்காரணமாக அதில் நீதிமன்றம் தலையிடுவதற்கான தகுதி
இல்லையா? அல்லது, அரசாங்கங்கள் ஏற்கனவே தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் இரு வேளை போஷாக்கான
உணவு அளித்து வருகின்றனவா? (Governments already provide labourers with two square
meals a day.) எனவே, அவர்களுக்கு மேலும் என்ன தேவை? (நிச்சயமாக ‘ஊதியங்கள் இல்லை’).
புலம் பெயர் தொழிலாளர்கள் ரயில்வே டிராக்குகளில் தூங்கிக்கொண்டிருக்கையில் மிகவும்
கொடூரமான முறையில் ரயில் ஏறிக் கொல்லப்பட்ட சம்பவங்கள் தவிர்க்கப்பட முடியாதவைகளா?
ஏனெனில், ‘அத்தகைய சம்பவங்கள் எப்படி நிறுத்தப்பட முடியும்?’ என்று கேட்கிறீர்களா?
இவற்றுக்கு இணையாக, வழக்கறிஞர்களும் ‘வெறுமனே’ செய்திகளின்
அடிப்படையில் நீதிமன்றத்தை அணுகியமைக்காக,
தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால், நீதிமன்றம் இத்தகைய சம்பிரதாயத்தை அபூர்வமாக
வலியுறுத்தியிருக்கிறது. அதனுடைய கடிதங்கள் மூலமாகவே மனுக்களை அனுமதித்திடும் அதிகாரவரம்பெல்லை
(epistolary jurisdiction) பழங்கதையாகிவிட்டதா? ஆகையால்தான் அதன் எதிர்வினை மிகவும்
அவசரநிலைக் காலத்தில் தாறுமாறானதாகத் தோன்றுகிறதா?
மேலேகூறப்பட்டுள்ள விவரங்களில்
நீதிமன்றத்தின் சாக்குப்போக்குகளில் பல, குறிப்பாக கொள்கை மற்றும் நீதித்துறை யல்லாத
தலையீடு (the question of policy and non-judicial interference) ஆகிய பிரச்சனைகள்
தொடர்பாக முந்தைய தீர்ப்புரைகள் பலவற்றால் கையாளப்பட்டிருக்கின்றன. கொள்கைப் பிரச்சனை
தொடர்பாக எண்ணற்ற தீர்ப்புரைகள் உண்டு. உதாரணமாக, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள்
மீதான விசாகா வழிகாட்டும் நெறிமுறைகள், உணவுக்கான உரிமை, மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல்
பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து எண்ணற்ற தீர்ப்புரைகள் உண்டு. இவ்வழக்குகள் அனைத்திலும்,
நீதிமன்றம் கொள்கைகளை வகுத்துள்ளது. மாநிலங்கள் அவற்றை அமல்படுத்த வேண்டும் என்றும்கட்டளைகள்
பிறப்பித்திருக்கிறது.
இன்றையதினம், அரசாங்கம்தான் நிலைமையை
மிகச்சிறந்த முறையில் கணித்திட முடியும் (the government is the best judge of the
situation) என்று நீதிமன்றம் எதிர்வினையாற்றியிருக்கிறது. இது மிகவும் வருந்தத்தக்கது.
நீதிமன்றம் இவ்வாறு நம்புவதன்மூலம், அரசமைப்புச்சட்டம் நெருக்கடிக் காலங்களில் மவுனமாக
இருந்துவிடக்கூடாது என்பதை மறந்துவிட்டதுபோன்றே தோன்றுகிறது. அதேபோன்று, நிலைமைகளை,
அதிலும் குறிப்பாக அரசின் கடப்பாடுகள் சம்பந்தமான பிரச்சனைகளை, நேரடியாகக் கண்காணிப்பதிலிருந்து
எதுவும் நீதிமன்றத்தைத் தடுத்திடவில்லை. அது நேரடியாகவே அதிகாரவர்க்கத்திடமிருந்து
அனுபவரீதியான தரவுகளை எளிதாகக் கேட்டுப் பெற முடியும். நீதிமன்றம் இவ்வாறு இதற்குமுன்
பல முறை செய்திருக்கிறது.
ஒருவர், இத்தகைய நிலைமையைக் கையாள்வதில்,
உச்சநீதிமன்றமானது, இரக்கமின்றி, அல்லது கூருணர்ச்சியற்று நடந்துகொண்டிருப்பதால் உடனடியாகத்
தாக்குதலுக்கு ஆளாகிறார். இது, இருவிதமான அவதானிப்புகளுக்கு வரச்செய்கிறது. முதலாவது,
நீதிமன்றம் இந்த மனுக்களை வெறுமனே நிராகரித்திட அல்லது ஒத்திவைத்திடவில்லை. இது இவ்வாறு
மனுக்கள் தாக்கல்செய்த மனுதாரர்களை நிவாரணம் கோரி நீதிமன்றங்களை அணுகக்கூடாது என்று
மிகவும் சுறுசுறுப்பாக விரட்டியடித்திருக்கிறது. ஏனெனில், இதெல்லாம் ஆட்சியாளர்களின்
பொறுப்பு என்று நீதிமன்றம் தீர்மானித்துவிட்டது. சாதாரணமாக, உச்சநீதிமன்றம் குறைந்தபட்சம்
மனுதாரர்களை உயர்நீதிமன்றங்கள் பக்கம் தள்ளிவிடும். ஆனால், இங்கே, அதைக்கூட உச்ச நீதிமன்றம்
செய்திடவில்லை. நடைமுறையில் உச்சநீதிமன்றம்
அவ்வாறு வந்தவர்களுக்கு, நீதிமன்றத்தின் கதவுகளைச் சாத்தி அறைந்திருக்கிறது.
இரண்டாவது, பொது நல மனுக்களை எப்படிக்
கருதிட வேண்டு என்ற ஒரு விஷயம் இருக்கிறது. பொது நல மனுக்கள் என்பவை ஏழைகள், அடித்தட்டு
மக்கள் மற்றும் வடுப்படத்தக்க நிலையில் உள்ளவர்கள் மற்றும் “பொதுமக்களில் எவரொருவருக்கும்”, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை
உத்தரவாதப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட கருவியாகும். அவர்களின் சார்பாக நீதிமன்றம்
பொருத்தமான கட்டளைகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோர முடியும். இதுதான் பொதுநல மனுக்களின் இதயமாக இருக்கிறது. ஒரு
பொது நல மனுவின் கருத்தாக்கம் எவருக்கும் எதிர்ப்பானதல்ல. ஆனால், நீதிமன்றம் இந்த மனுக்களை
அரசாங்கத்திற்கு எதிரானவைகளாக கருதிக்கொண்டிருக்கிறது. உண்மையில், பொதுநல மனுக்கள்,
நீதிமன்றங்களுக்கும், அவற்றைத் தாக்கல் செய்யும் மனுதாரர்களுக்கும் இடையேயான ஒரு கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும். பிரச்சனைக்குத்
தீர்வு காண்பதற்கு ஒவ்வொருவரும் நீதிமன்றம் வந்து பிரச்சனைக்கு நீதிமன்றத்துடன் சேர்ந்து
தீர்வு காண்பதற்கான முயற்சியேயாகும். இன்றையதினம், உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள்
எப்படி இருப்பதாக நம்மால் பார்க்க முடிகிறது? அதற்கு பலகோடி டாலர்கள் உள்ள கிரிக்கெட்
நிர்வாகத்திற்கு நேரம் ஒதுக்க முடிகிறது, அல்லது குறிப்பிட்ட ஒரு சுயவிவர பத்திரிகையாளருக்கு
நேரம் ஒதுக்க முடிகிறது. ஆனால், அதே சமயத்தில் கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின்
உண்மையான அவலநிலை குறித்து ஆராய்வதை உதாசீனம் செய்திருக்கிறது. ஏனெனில், மேலே கூறிய
பெரியமனிதர்களின் வழக்குகளைப்போன்று நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை எடுத்துக்கொள்ளக்கூடிய
அளவிற்கு இவர்களிடம் பணமும் இல்லை, உயர் அந்தஸ்தும் இல்லை.
உயர்நீதிமன்றங்களின் பங்கு
இந்தக் கட்டத்தில், சில உயர்நீதிமன்றங்கள்
மிகச்சிறந்தமுறையில் பங்களிப்புகள் ஆற்றியிருப்பதைப் பாராட்டிட வேண்டும். உச்சநீதிமன்றம்
இதில் தலையிடவில்லை என்பதால் உயர்நீதிமன்றங்களும் தலையிடமுடியாது என்கிற விதத்தில்
அரசாங்கம் அவற்றை அதைர்யப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டபோதிலும், அந்த உயர்நீதிமன்றங்கள்
அவற்றைப் பொருட்படுத்தவில்லை. இதில் குறைந்தபட்சம் நான்கு உயர்நீதிமன்றங்களை, (கர்நாடகம்,
சென்னை, ஆந்திரப்பிரதேசம் மற்றும் குஜராத்) புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து
கேள்விகள் கேட்கத் தொடங்கி இருக்கின்றன. இது கிட்டத்தட்ட,
அவசரநிலை காலத்தின்போது என்ன நடந்ததோ அதே போன்றதுதான். அப்போதும் உயர்நீதிமன்றங்கள்
மிகவும் தைர்யமாக உரிமை மீறல்களுக்கு எதிராக நின்றன. அவற்றை அப்போதும் உச்சநீதிமன்றம்
தலையிட்டு அவற்றைத் தள்ளுபடி செய்தது. உதாரணமாக, சென்னை உயர்நீதிமன்றம், ஜனநாயகத்தை
இந்த மாதிரி நெறித்திட முடியாது என்று கூறி ஊடகங்களுக்கு எதிராக வந்த கிரிமினல் மானநஷ்ட
வழக்குகளைத் தள்ளுபடி செய்தது. இப்போது இதற்கு நேரெதிரான விதத்தில் உச்சநீதிமன்றத்தின்
எதிர்வினை இருக்கிறது. அரசுத்தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர் (சொலிசிடார் ஜெனரல்), பொய்ச்செய்திகள்
காரணமாகத்தான் தொழிலாளர்கள் வெளியேறினார்கள் என்று விசித்திரமானமுறையில் வாதிடுகிறார்.
உச்சநீதிமன்றமும் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. மேலும் அதில்
உச்சநீதிமன்றம், ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் செய்திகள் வெளியிடவேண்டும் என்று அறிவுரைகள்
வேறு செய்திருக்கிறது. இத்தகைய தருணங்களில்
உயர்நீதிமன்றங்கள் பகுத்தறிவு, துணிவு மற்றும் பச்சாத்தாபம் ஆகியவற்றின் தீவுகளாக வந்திருக்கின்றன.
எனினும், உண்மையில், புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனை என்பது மாநிலங்களுக்கிடையேயான
பிரச்சனையே தவிர, ஒரு மாநிலத்திற்குள்ளான பிரச்சனை அல்ல. உச்சநீதிமன்றம் தலையிடுவதற்கு
இதுவே தருணம். அவ்வாறு தலையிட்டு அரசாங்கம் சொல்வதே வேதவாக்கு என்று இருப்பதற்குப்
பதிலாக, பேரழிவு நிலைமையைக் கண்காணித்திட முன்வர வேண்டும். நீதியரசர் பிராண்டிஸ் வார்த்தைகளை
நீதியரசர் எச்.ஆர்.கன்னா தன்னுடைய ஏடிஎம் ஜபல்பூர் ரிங் வழக்கில் மேற்கோள் காட்டியிருப்பது
இந்த சமயத்தில் மிகவும் உண்மையாகும்: “அரசாங்கத்தின் நோக்கங்கள் வைராக்கியமுள்ளவர்களால், சட்டத்தின் ஆட்சிக்கு
மதிப்பளிக்காது, நயவஞ்சகமாக அத்துமீறப்படுகையில்,
அதன்மூலம் சுதந்திரத்திற்குப் பெரிய அளவில் ஆபத்து ஏற்பட்டிருக்கும்போது, சுதந்திரத்தைப்
பாதுகாத்திடுவது நம் மாபெரும் கடமை என்பதை அனுபவம் நமக்குக் கற்றுத்தந்திட வேண்டும்.”
(கட்டுரையாளர்,
தில்லி மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களின் முன்னாள் நீதியரசர் மற்றும் இந்திய சட்ட
ஆணையத்தின் முன்னாள் தலைவர்.)
(நன்றி:
The Hindu)
No comments:
Post a Comment