-பிரகாஷ் காரத்
மோடி அரசாங்கம்,
அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராகவும், கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும்
மின்னல்வேகத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. மோடி-அமித்ஷா ஆகிய இரட்டையரின்
பெரும் ஆதரவுடன் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு அறுத்தெரியப்பட்டு, அதன்
துணை ஷரத்தாக இருந்த 35-ஏ பிரிவு செல்லாததாக்கப்பட்டிருக்கிறது. அம்மாநிலத்தை
ஒழித்துக்கட்டியிருப்பதன் மூலமும் அதனை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்
இயங்கக்கூடியவிதத்தில் இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியிருப்பதன் மூலமும் அவர்கள்
மிகவும் நாணமற்றமுறையில் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள்.
இவை அனைத்தும்,
ஜம்மு-காஷ்மீர் மக்களை அடைத்து வைத்துவிட்டு, வலுக்கட்டாயமாக, மிகவும் வஞ்சமான
முறையில் செய்யப்பட்டிருக்கின்றன. அங்கே குடியரசுத்தலைவர் ஆணை, அரசமைப்புச் சட்ட
370ஆவது பிரிவை நீக்குவது தொடர்பான தீர்மானங்களும், சட்டமுன்வடிவுகளும் மற்றும்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சின்னாபின்னமாகப் பிரித்திருப்பதும் – ஆகிய அனைத்தும்
அரசமைப்புச் சட்டத்தின் மீது மிகவும் சூழ்ச்சியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு
மோசடியாகும்.
இதுவரையிலும் இந்திய ஒன்றியத்தில் 29 மாநிலங்கள் இருந்தன. இப்போது ஜம்மு –
காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்
நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் இந்த எண்ணிக்கை 28ஆகக் குறைந்துவிட்டது. இத்தகைய
நிகழ்வு, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாக ஒன்று. பாஜக அரசாங்கம், இதன்மூலம் அரசமைப்புச்
சட்டத்தின் 3ஆவது பிரிவை மீறியிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாவது
பிரிவானது, அரசமைப்புச் சட்டத்தின் ஓர்
அடிப்படைக் கூறாகும். இது, முன்னமே இருக்கிற ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றவோ
அல்லது புதியதாக உருவாக்கவோ வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்தின்
கருத்துக்களை அறிந்துகொள்ளாமல், செய்திட முடியாது. இவ்வாறு அம்மாநிலத்தின்
உரிமைகளில் கூச்சநாச்சமற்ற முறையில் தாக்குதல் தொடுத்திருப்பதையும், அதன்மூலம் கூட்டாட்சித் தத்துவத்தை
குழிதோண்டிப் புதைத் திருப்பதையும் இதற்குமுன் நாம் பார்த்ததே கிடையாது.
ஜம்மு-காஷ்மீர்
மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்திடும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது
பிரிவு, அரசியல் நிர்ணய சபையால் அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்தப்
பிரிவானது, இந்திய ஒன்றியத்தில் உள்ள இதர மாநிலங்களிலிருந்து, ஜம்மு-காஷ்மீர்
மாநிலத்திற்கு வித்தியாசமான முறையில் சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது. அதன்படி
அம்மாநிலமே தனக்கான அரசமைப்புச் சட்டத்தைத் தன்னுடைய அரசியல் நிர்ணயசபை மூலமாகத்
தானே இயற்றிக்கொள்ளும். இதன்மூலமாக
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கும், அதன் சட்டமன்றத்திற்கும் விரிவான அளவில் சுயாட்சி
வழங்கப்பட்டிருந்தது. அவற்றின்படி இந்திய
நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் தங்கள் மாநிலத்திற்கு ஏற்புடையதா என்று
அவர்கள் தீர்மானித்துக் கொள்ள முடியும்.
அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது
பிரிவின் பின்னணி
சுதந்திரத்திற்கு
முன் மன்னராட்சியின் கீழிருந்த ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சுதந்திரத்திற்குப்பின்
இப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தையும்,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள காஷ்மீரையும் உள்ளடக்கியதாக இருந்தது. அப்போது
அம்மாநிலத்தில் மகாராஜாவாக இருந்த ஹரிசிங் தன் மாநிலத்தை, இந்தியாவுடன்
இணைப்பதற்கு விரும்ப வில்லை. அவர் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைத் தனித்தே ஒரு
சுதந்திர நாடாகவே வைத்திருக்க விரும்பினார். எனவே, 1947 ஆகஸ்ட் 15 அன்று இது
தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அப்போது, ஷேக் அப்துல்லா தலைமையில்
இயங்கிவந்த தேசிய மாநாட்டுக் கட்சி, நிலப்பிரபுத்துவ மன்னராட்சிக்கு எதிராகப்
போராடிக் கொண்டிருந்தது. இது, அப்போது மன்னர் சமஸ்தானங்களில் நடைபெற்றுவந்த நிலப்பிரபுத்துவ
எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பகுதியாக இருந்தது.
அந்த சமயத்தில்
பாகிஸ்தானிலிருந்து பலர் ஊடுருவி வந்தபோது, அதிலும் பிரதானமாக வட மேற்கு முன்னணி
மாகாணத்திலிருந்த பதன்கள் ஸ்ரீநகர் எல்லைக்கு வந்தடைந்த போதுதான், மகாராஜா
காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத் திட ஒப்புக்கொண்டார்.
அதன்பின்னர் அத்தகையதொரு ஒப்பந்தம் 1947 அக்டோபர் 26 அன்று கையெழுத்தானது.
காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்த மக்கள், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைமையில்
அணிதிரண்டு, ஊடுருவியவர் களுக்கு எதிராகப் போராடினார்கள். இந்திய ராணுவம், விமானம்
வழியே ஸ்ரீநகருக்குள் இறங்கி, ஊடுருவியவர்களை விரட்டி அடித்தது.
இந்தப்
பின்னணியில்தான், அரசமைப்புச் சட்டத்தின் வரைவை உருவாக்கிக் கொண்டிருந்த அரசியல்
நிர்ணயசபை, அதில் 370ஆவது பிரிவையும் உருவாக்கி இணைத்தது. 370ஆவது பிரிவு, இந்திய
அரசுக்கும் காஷ்மீர் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே உருவான உடன்படிக்கையைப்
பிரதிநிதித்துவப்படுத்துகிறது. காஷ்மீரிகள் (Kashmiriyat) என்கிற தங்கள் சொந்த அடையாளங்களுடனேயே இந்திய ஒன்றியத்தில் வாழ்வதற்கான
காஷ்மீர் மக்களின் அபிலாசைகளை அது உள்ளடக்கி இருந்தது.
இந்திய நாட்டிற்கு,
இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், ஒரு நாடு மத அடிப்படையில்
இரண்டாகத் துண்டாடப்பட்ட சமயத்தில், ஒன்று முஸ்லீம் நாடாகவும் மற்றொன்று
மதச்சார்பற்ற நாடாகவும் துண்டாடப்பட்டசமயத்தில், பெரும்பான்மையினர் முஸ்லீம்களாக
உள்ள ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், முஸ்லீம் நாடான பாகிஸ்தானுடன் இணைவதை
நிராகரித்துவிட்டு, மதச்சார்பற்ற இந்தியாவுடன் இணைந்ததேயாகும். நாடு பிளவுண்டபோது,
வட மேற்கு இந்தியா கலவரங்களால் பாதிக்கப்பட்ட சமயத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு
அமைதி மற்றும் மதநல்லிணக்கத்தின் புகலிடமாகத் திகழ்ந்தது.
370ஆவது பிரிவு படிப்படியாக
சீர்குலைக்கப்பட்டது
காஷ்மீர்
மக்களுக்கு 370ஆவது பிரிவின்கீழ் அளித்த உறுதிமொழியிலிருந்து ஆட்சியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நழுவியதே காஷ்மீர்
பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணமாகும். 1953க்குப்பின் மத்தியில் ஆட்சியிலிருந்த
காங்கிரஸ் அரசாங்கங்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அரசமைப்புச் சட்டம் 370ஆவது
பிரிவின்கீழ் அளிக்கப்பட்டிருந்த
சுயாட்சியை அரித்துத் தேய்ப்பதற்கான நடவடிக்கைகளில் படிப்படியாக இறங்கின. காஷ்மீர்
மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்த சுயாட்சியை மறுப்பதும், மத்தியத்துவத்தை நோக்கிக்
காயை நகர்த்துவதற்கான நடவடிக்கைகளும் 60களிலும், 70களிலும் 80களிலும் தொடர்ந்து
மேற்கொள்ளப்பட்டு வந்தன. அம்மாநிலத்தின் சுயாட்சியின் பெரும்பாலான அம்சங்களை
ஒழித்துக்கட்டக்கூடிய விதத்தில் 370ஆவது பிரிவு படிப்படியாகச்
சீர்குலைக்கப்பட்டது. 1954இல் ஜம்மு-காஷ்மீருக்கு என்று தனி அரசமைப்புச் சட்டம்
உருவாக்கப்பட்டபின்னர், 2010 வரையிலும் 42 உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்து
அம்மாநிலத்தில் தலையிட்டிருக்கிறது. இவை, 370ஆவது பிரிவு ஏற்படுத்தப்பட்ட
சமயத்தில் இருந்த காஷ்மீர் நிலைமையிலிருந்து மிகவும் விரிவான அளவிற்கு மத்திய
ஆட்சியாளர்களின் தலையீட்டை அதிகப்படுத்தியது. மத்திய ஆட்சியாளர்கள் அரசமைப்புச்
சட்டம் 370ஆவது பிரிவின் உண்மையான சாரத்தை எப்படியெல்லாம் உருக்குலைத்துச்
சிதைத்து வந்திருக்கிறார்கள் என்பதை சட்ட வல்லுநர் ஏ.ஜி. நூரனி அவர்கள் மிகவும்
செம்மையாக ஆவணப்படுத்தி இருக்கிறார். இயற்றப்பட்ட 97 சட்டங்களில், 94 சட்டங்கள்
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கும் பிரயோகிக்கக் கூடியவைகளாகும்.
அந்நியப்படுதலும் தீவிரவாதம்
தலைதூக்குதலும்
காஷ்மீர் மாநிலத்தின்
சுயாட்சி அரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கே ஜனநாயகமும் ஜனநாயக உரிமைகளும்
படிப்படியாக நசுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டன. தேர்தல்கள்
மத்திய ஆட்சியாளர்களின் ஆசிர்வாதத்துடன் வெளிப்படையாகவே மோசடியாக நடத்தப்பட்டன.
இதனை 1987 தேர்தலில் அப்பட்டமாகவே காண முடிந்தது.
இந்தப் பின்னணியில்தான் அங்கே
மக்கள் அந்நியப்படுவதற்கான அடையாளங்கள் வளர்ந்தன. இது பலரை தீவிரவாதத்தின்
பக்கமும், விடுதலை (‘Azadi’) என்னும் முழக்கத்துடன் ஆயுதப் போராட்டம்
மேற்கொள்வதற்கும் தள்ளியது. இவ்வாறு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி
உணர்வை, இஸ்புல் முஜாஹிதீன் போன்ற பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய சக்திகளும், பின்னர்
மிகவும் தீவிரவாத இயக்கங்களான ஜைய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத குழுக்களும் பயன்படுத்திக்
கொள்ளத் துவங்கின.
ஆரம்ப
காலத்திலிருந்தே, மன்னராட்சிக்கு எதிராக தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையில்
நடைபெற்ற இயக்கத்திற்கு எதிராகவே இந்து வகுப்புவாத சக்திகள் இருந்தன. ஜனசங்கத்திற்கு முன்பிருந்த பிரஜா பரிஷத்,
உண்மையில், மகாராஜாவை ஆதரித்து வந்தது. ஜன சங்கமும், இந்து மகாசபையும் 370ஆவது
பிரிவையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு எவ்விதமான சுயாட்சி அளிப்பதையும்
முழுமையாக எதிர்த்து வந்தன. இந்துத்துவா சித்தாந்தத்தின் கீழ் இயங்கிடும்
ஆர்எஸ்எஸ் ஆதரவு ஜன சங்கமும் பின்னர் பாஜகவும் 370ஆவது பிரிவை உறுதியாக எதிர்த்தே
வந்தன. அவர்களுடைய சித்தாந்தம் என்பது
வலிமையான மத்தியத்துவப்படுத்தப்பட்ட இந்தியா என்பதேயாகும். மேலும், காஷ்மீர்
மக்கள் மீது அவர்கள் பகைமை கொள்வதற்கு மற்றுமொரு முக்கியகாரணம், அப்பகுதி
முஸ்லீம்கள் ஆதிக்கத்தின்கீழ் உள்ள பகுதியாக இருப்பதுமாகும்.
ஜம்மு-காஷ்மீர் சிதைக்கப்பட்டது இந்துத்துவாவின்
சூழ்ச்சியே
எல்லைகளுக்கு அப்பாலிருக்கின்ற இஸ்லாமிய
ஆட்சியாளர்கள் விரும்புவதைப்போலவே, இந்துத்துவா வாதிகளும், ஆர்எஸ்எஸ்-உம், மத
அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மூன்றாகப் பிரித்திடவே விரும்பி
இருக்கிறார்கள். அதாவது, இந்துக்கள்
பெரும்பான்மை யாகவுள்ள ஜம்முவைத் தனியாகவும், முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும்
காஷ்மீர் பள்ளத்தாக்கைத் தனியாகவும், புத்திஸ்டுகள் சற்றே பெரும்பான்மையுடன்
இருக்கின்ற லடாக் பகுதியைத் தனியாகவும் பிரிக்கவே விரும்பினார்கள். இம்மூன்று
பிரிவினரும் சேர்ந்து ஒன்றாக இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆட்சியாளர்களுக்கு
வெறுக்கத்தக்க ஒன்றாகவே இருந்து வந்தது.
ஆர்எஸ்எஸ்-பாஜகவின்
கூற்றுப்படி, காஷ்மீர் பள்ளத்தாக்கு என்பது பிரிவினைவாதமும், பயங்கரவாதமும் நன்கு
வளர்வதற்கான மண் என்றே நம்பின. ஏனெனில் அங்கே உள்ள மக்களின் மதச் சேர்மானம் அப்படி
இருப்பதாக அவை கருதின. அவர்களிடம் ஊறிப்போயிருக்கின்ற முஸ்லீம் எதிர்ப்பு
கண்ணோட்டமானது, காஷ்மீர் மக்களுக்கு எவ்விதமான ஜனநாயக உரிமைகளையும் அளிப்பதற்கு
எதிரான விதத்திலேயே அமைந்திருந்தது. 370ஆவது பிரிவை ரத்து செய்வதை அவர்கள்
நியாயப்படுத்தியதற்குக் காரணம், அதன்பின்னர் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களைத்
தங்களுடைய ராணுவத்தின் மூலம் நசுக்கிவிடலாம் என்பதேயாகும்.
ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி-அமித் ஷா இரட்டையரைப்
பொறுத்தவரை, காஷ்மீர் என்பது அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய அதே
சமயத்தில், அங்குள்ள மக்களோ முஸ்லீம்களாக இருப்பதால் அந்நியர்களாகக் கருதப்பட
வேண்டியவர்களாவார்கள்.
ஆர்எஸ்எஸ்/பாஜக,
ஜம்மு மக்களுக்கும், காஷ்மீர் மக்களுக்கும் இடையே மதவேற்றுமையை அதிகப்படுத்திட
தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2014இல் மோடி அரசாங்கம் ஆட்சிக்கு
வந்தபின்னர் இதற்கான முயற்சிகளில் வெறித்தனம் அதிகரித்தது. மக்களின் ஜனநாயக
உரிமைகளுக்கான கிளர்ச்சிகள் ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினரின் மூலம் மிகவும்
வெறித்தனமாக நசுக்கப்பட்டன. சாமானிய மக்களை தீவிரவாதிகளைப்போலக் கருதி அவர்கள்மீது
ராணுவம்/துணை ராணுவப் படையினர் தாக்கும் நிகழ்வுகள் அதிகரித்தன. அனைத்துவிதமான
அரசியல் பேச்சுவார்த்தைகளையும் நிராகரித்திடும் போக்கு காஷ்மீர் மாநிலத்தில்
நிலைமைகளை மிகவும் மோசமாக்கி இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் இளைஞர்கள்
தீவிரவாத இயக்கங்களில் சேர்வது என்பது அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இதன்காரணமாக பாதுகாப்புப் படையினர் மற்றும்
தீவிரவாதிகள் கொல்லப்படுவது என்பதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
மாபெரும் சிறைக்கூடம்
பாஜக
ஆட்சியாளர்களுக்கு, காஷ்மீர் மக்கள் மீது இருக்கின்ற வெறுப்பை, ஜம்மு-காஷ்மீர்
மாநிலத்தை சிதைப்பதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்படும் சமயத்தில்,
மாநிலத்திற்குள் பாதுகாப்புப் படையினரைக் குவித்ததில் நன்கு வெளிப்பட்டது. கூடுதல்
மத்திய துணை ராணுவப்படையினர் பல்லாயிரக் கணக்கானோர், மற்றும் ராணுவத்துருப்புகள்
பல்லாயிரக் கணக்கானோர் மாநிலம் முழுவதும்
வான்வழியாக இறக்கப்பட்டு, குவிக்கப்பட்டனர். பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கைது
செய்யப்பட்டனர். தகவல்களை மக்கள் தெரிந்தகொள்ளக்கூடாது என்பதற்காக இணையம் மற்றும்
மொபைல்போன்கள் சேவைகள் முடக்கப்பட்டன. அமர்நாத் யாத்ரிகர்களின் யாத்திரை
திரும்பப்பெறப்பட்டது. சுற்றுலாப்பயணிகள் திரும்ப அழைக்கப்பட்டனர். காஷ்மீர் மாநிலமே மாபெரும் சிறைக்கூடாமாக
மாறியது. காஷ்மீர் மாநிலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் சமயத்தில்
அந்தச் சட்டத்தால் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய மக்களிடம் ஜனநாயக
பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்று
பாருங்கள்!
போலிப் பகட்டு வாதங்கள்
370ஆவது பிரிவை
ரத்துசெய்வதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்வைத்த
வாதங்கள், இந்துத்துவா முகாம்களில் அடிக்கடிக் கூறப்படும் பட்டுத்தேய்ந்த பழகிப்போன
வாதங்களேயாகும்.
370ஆவது பிரிவு,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் இணைப்பதற்குத் தடையாக இருந்தது என்று அவர்
கூறியிருக்கிறார். உண்மையில், காஷ்மீர் மக்கள், அவர்களுக்கு இந்திய அரசின்
சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் விரும்பியேதான் இந்திய
ஒன்றியத்துடன் சேர்ந்தார்கள். இந்த
உறுதிமொழிகள் பின்னர் 370ஆவது பிரிவில் சேர்க்கப்பட்டன. இவ்வாறு காஷ்மீர்
மக்களுக்கு இந்தியாவுடன் இணைவதற்கு அரசமைப்புச்சட்டத்தின்கீழ் பாதுகாப்பு
அளிக்கப்பட்டிருந்தது.
அமித் ஷா,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஊட்டி
வளர்ப்பதாகக் கூறியிருக்கிறார். உண்மை என்னவென்றால், காஷ்மீர் மக்களுக்கு 370ஆவது
பிரிவின்கீழ் அளிக்கப்பட்ட சுயாட்சிக்கான உறுதிமொழிகள் அரிக்கப்பட்டதன் விளைவாகவே
அம்மக்கள் மத்தியில் அதிருப்தியும் இந்தியாவிடமிருந்து அந்நியப்படும் சிந்தனையும்
அதிகரித்து, அவை பிரிவினைவாதம் தலைதூக்குவதற்கும், பாகிஸ்தான் உதவியுடனும்
உடந்தையாக இருப்பதன் மூலமும் பயங்கரவாதத்தின் வளர்ச்சிக்கும் இட்டுச் சென்றன. அம்மாநிலத்தில் சுயாட்சியையும் மறுக்கப்பட்டுள்ள
ஜனநாயகத்தையும் மீளவும் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே அம்மக்கள் மத்தியில்
அந்நியப்படுதலை சமாளித்திட முடியும்.
அமித் ஷா, காஷ்மீர்
மாநிலத்தில் வளர்ச்சியின்மைக்கும், (development) பொருளாதார வளர்ச்சி (economic
growth) இன்மைக்கும் 370ஆவது பிரிவையே
குற்றம் சாட்டி இருக்கிறார். கடந்த முப்பதாண்டுகளாக அம்மாநிலத்தில் தலைதூக்கிய
தீவிரவாதமும், சங்கடமான சூழ்நிலைமையும்தான் வளர்ச்சிப் பணிகளையும், பொருளாதார
வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை யும் முடக்கின. அங்கே ஓர் அரசியல் தீர்வினைக் கண்டு,
அமைதியையும் இயல்புவாழ்க்கையையும் திரும்பக் கொண்டுவராமல், அமித் ஷா கூறுவதுபோல்
அங்கே வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் தனியார் முதலீடு பீறியடித்திடும் என்று
நினைப்பதெல்லாம் பகல்கனவேயாகும்.
இறுதியாக, அமித் ஷா,
மாநிலத்தில் மிகவும் விரிவான அளவிற்கு ஊழலும் பொது நிதி சூறையாடலும்
ஏற்பட்டிருப்பதற்கும் 370ஆவது பிரிவைக் குறை கூறியிருக்கிறார். ஜம்மு-காஷ்மீர்
மாநிலத்திலும் ஊழல் தலைவிரித்தாடுவதும், கூலிக்கு மாரடிக்கும் நிர்வாகம்
இருப்பதும் உண்மைதான். ஆனாலும், இதற்கும் காரணங்கள் என்னவென்றால், அங்கே
சரியானமுறையில் ஜனநாயக நடைமுறைகள் இல்லாததும், நிர்வாகத்தினர் தங்களுக்கு மேல்
உள்ளவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்கிற நிர்வாக அமைப்புமுறை மிகவும்
பலவீனமாக இருப்பதுமேயாகும்.
ஜம்மு-காஷ்மீர் வெகு
காலமாகவே போலீஸார் ஆளும் மாநிலமாகவே
(police state) இருந்து வருகிறது. நீண்டகாலமாகவே மத்திய ஆட்சியின் கீழ்தான்
இருந்திருக்கிறது. (ஒட்டுமொத்தத்தில் சுமார் பத்தாண்டு காலம் மத்திய ஆட்சியின்
கீழ் இருந்திருக்கிறது.) இவ்வாறு அம்மாநிலத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதற்குக்
காரணம், மத்திய அரசின் கீழான அதிகாரவர்க்கமும், பாதுகாப்புத்துறை நிர்வாகமும்
அவர்களுக்கு உடந்தையாயிருக்கின்ற அரசியல்வாதிகளுமே காரணமாகும். ஏனெனில் இவர்கள்
பெரிதாக எவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
மோடி அரசாங்கத்தின் போலி வாதங்கள்
அரசமைப்புச்
சட்டத்திற்கு எதிராக மோடி அரசாங்கம் மேற்கொண்டிருக்கிற சதி எதேச்சாதிகார ஆட்சியே
நடக்கிறது என்பதற்கான நேரறிகுறியாகும். அரசமைப்புச் சட்டத்தின் மற்றுமொரு பிரிவை –
அதாவது 367ஆவது பிரிவை – மாற்றுவதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது
பிரிவின்கீழ் குடியரசுத் தலைவர் உத்தரவு ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இவ்வாறு மாற்றியமைத்த பின்னர், அதனை 370ஆவது பிரிவின் சாரத்தை நீக்குவதற்காகப்
பயன்படுத்திக் கொள்ளப் பட்டிருக்கிறது. இத்தகையதொரு ஏற்பாட்டின்படி, மாநில
சட்டமன்றத்தின் இசைவு பெறவேண்டும் என்பது ஆளுநரால் பறித்துக்
கொள்ளப்பட்டிருக்கிறது. ஏனெனில் அந்த மாநிலம் குடியரசுத்தலைவரின் ஆட்சியின் கீழ்
இப்போது இருந்து வருகிறது.
ஆளும் கட்சியினரின்
சூழ்ச்சித்தந்திரங்களும், மோடி அரசாங்கத்தின் எதிர்க்கட்சியினரை மிரட்டிப்
பணியவைக்கிற அதிகாரங்களும் இதில் நன்கு செயல்பட்டிருக்கின்றன. பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர்சிபி, தெலுங்கு தேசம்,
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் பல கட்சிகள், தங்கள் தலையில் மண்ணைவாரிப்
போடக்கூடிய கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு, பாஜகவிற்கு ஆதரவாக அணிதிரண்டதிலிருந்து இதனைக்
காண முடியும். ‘தன்னுடைய காலை வெட்டுவதற்குத் தன்னுடைய கோடாலியையே
பயன்படுத்தியதைப்போல’ என்கிற இந்தி பழமொழியையே
இவர்களின் செய்கை காட்டுகிறது.
காஷ்மீரில் 370ஆவது
பிரிவின்கீழ் அளிக்கப்பட்ட சுயாட்சியை அங்கே அளிக்காமல் அதனை அரித்துவீழ்த்தியதில்
காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பங்கு உண்டு.
நாடாளுமன்றத்தில் பாஜகவின் நடவடிக்கைக்கு எதிராக வலுவான முறையில் அதனால்
எதிர்ப்பினைப் பதிவு செய்திட முடியாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணமாகும்.
நீண்ட போராட்டம் எதிர்நோக்கி இருக்கிறது
குடியரசுத் தலைவர்
உத்தரவுக்கும் இந்தச் சட்டமுன்வடிவுக் நிறைவேற்றப்பட்டிருப்பதற்கும் எதிராக
நீதித்துறையில் மேல்முறையீடுகள் செய்யப்படும் என்பதில் ஐயமில்லை. ஆனால், காஷ்மீர்
மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளுக்குத் துரோகம் இழைத்ததற்கு எதிராக நீண்ட
போராட்டம் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. இந்தப் போராட்டம்
ஜம்மு-காஷ்மீருக்கானது மட்டும் அல்ல. நாட்டின் ஜனநாயகத்தைப்
பாதுகாத்திடுவதற்காகவும், நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்குமான
ஒரு போராட்டமுமாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி, அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்பட்ட சுயாட்சியைப்
பாதுகாத்திட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. சுயாட்சியை
அளிப்பதற்கான அதிகாரங்களையும், 370ஆவது பிரிவின்கீழான அதிகாரங்களையும் அரித்து
வீழ்த்திவந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. பாஜகவின்
நிலைப்பாட்டிற்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்மாநிலத்தில்
அதிகபட்சம் சுயாட்சி அளித்திட வேண்டும் என்றும், மேலும் அம்மாநிலத்தின் ஜம்மு,
காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுக்கும் தனித்தனியே பிராந்திய அளவிலான சுயாட்சி
அளித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்திருக்கிறது. தீவிரவாதிகளின் ஆயுத
வன்முறைகளையும், எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளையும் எதிர்த்துமுறியடித்திட
வேண்டும் கூறுகிற அதே சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அம்மாநிலத்தில் இயங்கிடும்
அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுடனும் ஓர் அரசியல் பேச்சுவார்த்தை
நடத்தி, அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்து வந்திருக்கிறது.
ஜம்மு-காஷ்மீர்
மாநிலத்தை “இணைத்திடும்” பாஜக அரசாங்கத்தின்
நடவடிக்கைக்கு, மக்களில் பல பிரிவினர் ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றால்
எழுந்துள்ள பிரச்சனைக்கு இது முடிவு கட்டுவதற்கான உறுதியான வழி என்று அவர்களால்
பார்க்கப்படுகிறது. இவ்வாறுதான் மோடி அரசாங்கத்தின் சார்பில்
அதிகாரபூர்வமானமுறையில் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதனால் ஜம்மு-காஷ்மீர்
மாநிலத்துக்கும் நாட்டுக்கும் ஏற்படக்கூடிய நீண்டகால பாதிப்புகள் குறித்து மக்கள்
முன் வைக்கப்படவில்லை.
இந்தப் பணியை
இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள்தான் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, ஜம்மு-காஷ்மீர்
மாநிலத்தின் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பர்ய கலாச்சாரத்தையும் மதச்சார்பின்மையையும்
பாதுகாத்திடுவதற்கான போராட்டத்தை, இந்துத்துவா எதேச்சாதிகாரத்திற்கு எதிரான
போராட்டத்துடனும், நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சித்
தத்துவத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடனும் இணைத்து முன்னெடுத்துச் செல்ல
வேண்டும்.
(தமிழில்: ச. வீரமணி)
No comments:
Post a Comment