Saturday, March 23, 2019

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்திடும்




தி இந்து நாளிதழில் சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

(நாட்டில் உள்ள பெரும் பணக்காரர்களைத் தவிர மற்ற அனைத்துத் தரப்பு மக்களும், பாஜகவின் ஆட்சியில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று தி இந்து நாளிதழ் நேர்காணல் கண்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் அரசியல் உத்திகள் குறித்தும், இடதுசாரிகளின் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவற்றிற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:)

கேள்வி: தேர்தல் மிகவும் நெருங்கிவந்துவிட்டபோதிலும், மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவதில் இன்னமும் தயக்கம் காட்டிக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறதே!
சீத்தாராம் யெச்சூரி: இவ்வாறு கூறுவது உண்மையல்ல. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் நாட்டிலுள்ள அனைத்துத்தரப்பு மக்களையுமே கடுமையாகப் பாதித்திருக்கின்றன. பெரும் பணக்காரர்களைத் தவிர, மற்ற அனைத்துத் தரப்பினருமே  கடந்த ஐந்தாண்டுகளில்  கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இப்போது மக்கள் முன் உள்ள மிக முக்கியமான பிரச்சனை இதுவேயாகும். இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, மக்கள் மத்தியில் மதவெறியையும், போர் வெறியையும் கிளப்பிவிடுவதற்கான முயற்சிகளில் ஆட்சியாளர்கள் இறங்கி இருக்கிறார்கள். மேலும் மக்கள் மத்தியில்  கூருணர்ச்சிமிகுந்த பிரச்சனைகளை உருவாக்கிடவும் அதன்மூலம் மதவெறித் தீயை விசிறிவிடவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவற்றை இவர்கள் தேர்தல் நெருங்க நெருங்க மேலும் தீவிரப்படுத்திடுவார்கள். இந்தத் தருணத்தில் எதிர்க்கட்சிகள் முக்கியமான மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தேர்தலின் முடிவினைத் தீர்மானிக்கப் போகிறது.
கேள்வி: புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாலக்கோட்டில் விமானப் படையினர் நடத்திய தாக்குதல்கள் தேர்தலின் முடிவினை மாற்றியமைத்திடாதா?
சீத்தாராம் யெச்சூரி: மக்களின் கவனத்தை உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்புவதற்காக ஆட்சியாளர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதனால்தான் பிரதமரே மிகவும் மூர்க்கத்தனமான முறையில் இப்பிரச்சனைகள் அரசியலாக்கப் பார்த்தார். இவரைத் தொடர்ந்து பாஜக தலைவரும், மத்திய அமைச்சர்களும் பாலக்கோட்டில் நடைபெற்ற விமானப் படையினரின் தாக்குதல் குறித்தும் இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்து பூஜ்யத்திலிருந்து, 450 பேர் வரையும் இறந்ததாக, தங்கள் இஷ்டத்திற்கு அள்ளிவீசினர். அந்த இடத்தில் பயன்படுத்திய செல்போன்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு அவற்றைப் பயன்படுத்திய அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்று நம் நாட்டின் உள்துறை அமைச்சரே கூறியதைப் பார்த்தோம்.   இதற்கு ஆதாரம் என்ன என்று எதிர்க்கட்சியினர் எவரும் கேட்கவில்லை. நாம் கூறியதெல்லாம், நம் விமானப்படையினர் தாக்க வேண்டிய இடங்களைச் சரியாகக் குறியிட்டு, வெற்றிகரமான முறையில் தாக்குதல் தொடுத்திருப்பதாகக்கூறி விமானப் படையினரை நாம் பாராட்டியிருக்கிறோம். இப்போது, அதன் விளைவு என்ன? விமானப் படையின் தளபதி கூறியிருப்பதைப்போல,
இப்பிரச்சனைகள் மீது  அரசாங்கம்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதேயாகும். அரசாங்கம் இவ்வாறு பதில் சொல்வதற்குப் பதிலாக, ‘எதிர்க்கட்சியினர் ராணுவத்தினரை எதிர்க் கேள்விகள் கேட்பதாக,’ எதிர்க்கட்சியினர் மீது திருப்பித்தாக்குதல் தொடுத்திருக்கிறது. இது முற்றிலும் மடத்தனமாகும். நாங்கள் கூறுவதென்னவெனில் இதன்மூலமாக இந்த அரசாங்கம் ஆதாயம் தேட முயற்சிக்கிறது என்பதேயாகும். ஊரி என்னும் ஊரில் நடைபெற்ற துல்லியத் தாக்குதல் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திடும் என்று அரசாங்கம் கூறியது.  ஆனால் அது நடைபெறவில்லை. பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்கின்றன. அவை புல்வாமா நிகழ்வு வரையிலும் தொடர்ந்தன. இப்போது, பாலக்கோட்டிற்குப் பின்னர், இது பயங்கரவாதத் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் என்று கூறப்பட்டது. இதுவும் உண்மையல்ல. இதன்பின்னர் 12க்கும் மேற்பட்ட நம் பாதுகாப்புப்படையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஜம்முவில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் நடந்திருக்கிறது. இவையெல்லாம் மக்கள் கேட்கும் நியாயமான கேள்விகளாகும். ஜம்மு-காஷ்மீரில் உள்ள பதற்றநிலைமைகளை பாஜக-வினர் தங்களுக்குச் சாதகமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆனால். அதில் அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. இந்திய வாக்காளர்கள் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில், எதிர்க்கட்சியினர் – ஆளுங் கட்சியினர் என்ற பேதம் கிடையாது. பயங்கரவாதம் என்பது நாட்டின் எதிரி. நாடு ஒன்றுபட்டு நின்று அதனை எதிர்த்திடும்.  ஆனாலும் பயங்கரவாதிகள் நாட்டு மக்களிடம் காணப்படும் ஒற்றுமையை, தங்களின் நடவடிக்கைகளின் மூலமாக பிரித்திட முயற்சிக்கிறார்கள்.  இவர்கள் வீசிய இத்தகைய சூழ்ச்சி வலையில் ஆட்சியாளர்களும் பாஜகவும் வீழ்ந்து சிக்கிக்கொண்டுவிட்டனர்.

கேள்வி: மேற்கு வங்கத்தில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்திட நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளை  காங்கிரஸ் கட்சி நிராகரித்திருக்கிறதே. இதன் தாக்கம் இடது முன்னணிக்கு எப்படி இருக்கும்?
சீத்தாராம் யெச்சூரி: மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில், எப்போதுமே அங்கே கூட்டணி இருந்ததில்லை. பாஜகவையும் திரிணாமுல் காங்கிரசையும் தோற்கடித்திட வேண்டும் என்கிற எங்கள் குறிக்கோளை எய்துவதற்கு ஒரு முயற்சியை மேற்கொண்டோம். அதற்காக, பாஜக-விற்கு எதிரான வாக்குகளும், திரிணாமுல் காங்கிரசுக்கு எதிரான வாக்குகளும் ஒரேயிடத்தில் குவிவதற்கான வேலைகளைச் செய்வோம் என்று நாங்கள் கூறினோம். இதேபோன்ற குறிக்கோளையுடைய மற்றவர்களுடனும் இணைந்துபோக தயாராக இருக்கிறோம் என்றும் நாங்கள் கூறினோம். எங்கள் நோக்கங்களை மேலும் தெளிவாக விளக்குவதற்காக, தற்போது பாஜக அல்லாது மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அல்லாது காங்கிரஸ் கட்சியும் இடது முன்னணியும் பெற்றுள்ள இடங்களில் பரஸ்பரம் போட்டியிட வேண்டாம் என்றும், நாங்கள் காங்கிரஸ் வென்ற இடங்களில் போட்டியிட மாட்டோம் என்றும் தாமாகவே முன்வந்து ஒரு யோசனையை முன்வைத்தோம். ஆனால் இதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. நாங்கள் வென்றுள்ள இடங்களிலும் அவர்கள் போட்டியிடும் விதத்தில் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்கள். இதுவரையிலும் அவ்வாறு செய்வதிலிருந்து எங்களை நாங்கள் தவிர்த்து வந்தோம். ஏனெனில் மக்கள் முன் நாங்கள் வைத்திட்ட வேண்டுகோளில் நாங்கள் உண்மையாக இருக்கிறோம் என்பதையும், இதற்குத் துரோகம் இழைப்பவர்கள் அவர்கள்தான் என்பதையும் மக்கள் தெரிந்து கொள்ளட்டும்.  சென்ற மக்களவைத் தேர்தலில் 27 சதவீதம் வாக்குகளைப் பெற்ற இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்புகிறது. இங்கே மிக முக்கியமான பிரச்சனை, இடங்களின் எண்ணிக்கை அல்ல. பாஜக அல்லாத, திரிணாமுல் காங்கிரஸ் அல்லாத வாக்குகளை மிக அதிகமான அளவில் பெறக்கூடிய வேட்பாளர் யார் என்பதே இங்கே மிகவும் முக்கியமாகும்.

கேள்வி: இதன் தாக்கம் தேர்தல் முடிவுகளில் எவ்வாறு இருந்திடும்?
சீத்தாராம் யெச்சூரி: பொறுத்திருந்து பார்ப்போம். பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரண்டையுமே தோற்கடிக்கக்கூடிய ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டால் அது வாக்காளர்கள் மத்தியில் பெரிய அளவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்திடும். இதில் கூட்டணி அல்லது முன்னணி என்று கூறும் பிரச்சனையே கிடையாது.   

கேள்வி: மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே எதிர்க்கட்சியினர் பாஜகவிற்கு எதிராக அணிதிரள்வதை காங்கிரஸ் கட்சியானது தன்னுடைய பெரிய அண்ணன் மனப்பான்மை காரணமாக ஒத்துவராமல் வீணடிக்கிறது என்று நீங்கள் குறைகூறுகிறீர்களா?
சீத்தாராம் யெச்சூரி: நான் எவரையும் கூறைகூறும் ஒருவனல்ல. அவர்களின் முடிவுக்கு அவர்களுக்குப் பல காரணங்கள் மற்றும் நோக்கங்கள் இருக்கலாம். எங்கள் கவலை, நாட்டின் நலன் மற்றும் நாட்டு மக்களின் நலன், குறிப்பாக வங்க மக்களின் நலன் அடிப்படையிலானதாகும். அதன் அடிப்படையில் ஒரு திட்டத்தை தயாரித்து முன் வைத்தோம். தேர்தலில் தங்களின் முன்னுரிமைகள் என்ன என்று ஒவ்வொரு கட்சியுமே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் எங்கள் முன்னுரிமைகளை கீழ்க்கண்டவாறு தீர்மானித்திருக்கிறோம்: முதலாவது, பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் முறியடிப்போம். இரண்டாவது, மத்தியில் அமரும் ஆட்சியாளர்கள் மக்கள் நலன் சார்ந்த முறையில் கொள்கைத் திசைவழியில் மாற்றத்தை ஏற்படுத்திட நிர்ப்பந்தம் அளிக்கக்கூடியவிதத்தில், இடதுசாரிகளை வலுப்படுத்துவோம். மூன்றாவது, மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைவதை உத்தரவாதப்படுத்திடுவோம். தேர்தல்களும் அரசியலும் பள்ளிக்கூடக் கணக்கு போன்றதல்ல. (Elections and politrics is not arithmetic.) மக்கள் கடந்த காலங்களில் தங்களுக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்கள் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் தீர்மானிப்பார்கள்.
அரசியலில் இரண்டும் இரண்டும் நான்கு என்று  வாக்கு சதவீதத்தைக் கூட்டிக் காண்பிப்பதில் அர்த்தமே இல்லை. இரண்டும் இரண்டும் 22ஆகவும் மாற முடியும் அல்லது பூஜ்யமாகவும் மாற முடியும்.

கேள்வி: காங்கிரஸ் கட்சி தன்னுடைய முன்னுரிமைகளைச் சரியானமுறையில் பெற்றிருக்கவில்லை என்கிறீர்களா?
சீத்தாராம் யெச்சூரி: இதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். அதன்மீது நான் விமர்சனம் செய்ய முடியாது.

கேள்வி: மக்களவையில் ஒற்றை இலக்கத்தில் இடங்களைப் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் கூட்டணி அமைத்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறதா?
சீத்தாராம் யெச்சூரி: நான் கட்சியின் பொதுச் செயலாளராக மாறியபோது, மக்களவையில் எங்களுக்கு ஒற்றை இலக்கத்தில்தான் இடங்கள் இருந்தன. 2004க்கும் 2014க்கும் இடையே எங்கள் வீழ்ச்சி இருந்தது. இப்போது, நாங்கள் என்ன கூறிக்கொண்டிருக்கிறோம் என்றால், அமைய இருக்கும் ஆட்சியில் அவர்களின் கொள்கைத் திசைவழியில் செல்வாக்கை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு எங்கள் இடங்களை அதிகரித்திட வேண்டும் என்பதாகும். இன்றைய தினம், நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளுமே விவசாய நெருக்கடி குறித்து அல்லது வேலையில்லாக் கொடுமை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றன. இதற்கு எங்களால் நடத்தப்பட்ட போராட்டங்கள்தான் காரணமாகும். மக்கள் இயக்கங்களின் மூலமாக அனைத்துக் கட்சியினரின் நிகழ்ச்சிநிரல்களிலும் நாங்கள் செல்வாக்கினை செலுத்தியிருக்கின்றோம். ஆனால் அவை நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் பிரதிபலிக்கவேண்டியிருக்கிறது. இதற்கு எங்கள்  எண்ணிக்கை அதிகரிப்பதன்மூலமாக எங்கள் இருப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்.  நாட்டில் எங்குமே எங்களை யாராவது கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்களா என்று நாங்கள் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. தமிழ்நாட்டைத் தவிர நாட்டின் இதர பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட பகுதிகளில் எங்கள் சொந்த பலத்தில்தான் போட்டியிடுகிறோம். தமிழ்நாட்டில் மட்டும் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறோம்.
(நன்றி: தி இந்து)
(தமிழில்: ச. வீரமணி)

Thursday, March 21, 2019

2019 பொதுத் தேர்தல்கள்: பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிக்கவேண்டியதன் அவசியம்




சீத்தாராம் யெச்சூரி

நாடு, 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் போர்க்களத்திற்குள் இறங்கி இருக்கிறது. ஆட்சியிலுள்ள கட்சியானது, தாங்கள் கூறிய உறுதிமொழிகளை கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியின்போது நிறைவேற்றியுள்ளனவா என்று மக்களால் ஆராய்ந்துபார்க்கப்பட்டு நீதி வழங்கும் வழக்கமான ஒரு தேர்தல் இது அல்ல. பொதுவாக ஒவ்வொரு தேர்தலின்போதும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு இழைத்த துரோகங்கள்தான் தேர்தலின்போது முன்நிற்கும். ஆனால் இது அப்படிப்பட்ட ஒரு தேர்தல் மட்டும் அல்ல.
எனினும், இந்தத் தேர்தல் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஏன் அவ்வாறு நாம் கூறுகிறோம்? ஏனென்றால், இதன் முடிவில், நம் அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் எதிர்காலம் ஆபத்திற்குள்ளாகி இருக்கிறது. நாட்டின் எதிர்காலமும் ஆபத்திற்குள்ளாகி இருக்கிறது. ஏனெனில், பிரதமர் நரேந்திர மோடியின்கீழ் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசானது, கடந்த ஐந்தாண்டுகளில் நாட்டிலுள்ள அனைத்து அரசமைப்புச்சட்ட அமைப்புகள் மற்றும் அதிகாரக்குழுமங்கள் மீதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் தொடர்கின்றன.
மத்திய பாஜக ஆட்சி, நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தூண்களாக விளங்கும் அம்சங்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்திய வாக்காளர்கள் முன் உள்ள பிரதானமான பணி, இந்த அரசாங்கத்தைத் தூக்கி எறிவதை உறுதிப்படுத்துவதும், இதற்கு மாற்றாக நம் அரசமைப்புச்சட்டத்தின் குடியரசைப் பாதுகாத்திடக்கூடிய விதத்தில் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசாங்கத்தை நிறுவுவதும், அதன்பின்னர், அதனை ஒருங்கிணைக்கக்கூடிய விதத்தில் முன்னேறுவதுமாகும். எனினும், இதற்கு, மோடி அரசாங்கத்தால் தற்போது பின்பற்றப்பட்டுவரும் கொள்கைத் திசைவழியை  மக்களுக்கு ஆதரவான விதத்தில் மாற்றியமைக்கக்கூடியதோர் அரசாங்கமாக மாற்றி அமைத்திட வேண்டும். இதற்கு, 17ஆவது மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் எண்ணிக்கை வலுவானவகையில் அமைந்திட வேண்டியது அவசியம்.    
கடந்த ஐந்தாண்டுகளில், பாஜகவின் ஆட்சியில், நம் அரசமைப்புச் சட்டத்தின் நான்கு அடிப்படைத் தூண்களும், அதாவது மதச்சார்பற்ற ஜனநாயகம், பொருளாதாரத்தில் தன்னிறைவு, சமூக நீதி மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகிய நான்கும், திட்டமிட்டு தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்தன.
மதச்சார்பற்ற ஜனநாயகம்
பாஜகவின் ஆட்சியில் மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாயின. மக்கள் மத்தியில் மதவெறி மிகவும் அஞ்சத்தக்கவிதத்தில் விசிறிவிடப்பட்டது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் உருவாக்கப்பட்ட தனியார் ராணுவங்கள் பசுப் பாதுகாப்பு என்ற பெயரிலும், அறநெறிப் போலீஸ் என்ற பெயரிலும், தலித்துகள் மீதும் முஸ்லீம்கள் மீதும் குறி வைத்துத் தாக்குதல்களைத் தொடுத்தன.  மதவெறி அடிப்படையிலான இவர்களது இத்தகைய நடவடிக்கைகள், நாடு முழுதுமே ஒரு விதமான வெறுப்பு மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் நடைபெறும் சூழலை  உருவாக்கி இருக்கின்றன.  நம் மக்கள் மத்தியில் இதுகாறும் நிலவிவந்த சமூக நல்லிணக்க நடைமுறையையே கடுமையாக ஒழித்துக்கட்டக்கூடிய அளவிற்கு நாட்டில் இயங்கும் பல்வேறு பொதுவெளிகள் மதவெறி நஞ்சுக்கு இரையாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அனைத்துக் கல்வி நிறுவனங்களும் காவிமயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், நம் கல்வி அமைப்புமுறையே காவிமயத்திற்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் காவிமயத்திற்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதேபோன்று, நாட்டிலுள்ள அனைத்துக் கலாச்சார மையங்களும், கல்வி மையங்களும் கல்வித்தகுதியே இல்லாத அல்லது பெயரளவில் கல்வித்தகுதி பெற்றுள்ள ஆர்எஸ்எஸ் பேர்வழிகளால் நிரப்பப்பட்டு வருகின்றன. வளமான மதச்சார்பற்ற சமரசஞ்சார்ந்த இந்திய வரலாற்றை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் இந்து புராணங்களில் கூறப்படும் கட்டுக்கதைகளையே வரலாறாகத் திணிப்பதற்கான முயற்சிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதைப்போன்றே வளமான இந்திய தத்துவவியல் பாரம்பர்யத்தையும், இந்து இறையியல் தத்துவத்திற்குள் திணிப்பதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, ஆர்எஸ்எஸ் வரையறுத்துள்ள ஒரு வெறிபிடித்த  சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்கு வழிவகை ஏற்படுத்தும் விதத்தில் இவையனைத்தையும் ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மேற்கொண்டு வருகின்றன. இவையனைத்தும் நம் இந்தியக் குடியரசின் அடிப்படைகளையே தகர்த்தெறிந்துவிடும். மதச் சிறுபான்மையினர் மற்றும் இதர சிறுபான்மையினர் மத்தியில் ஒரு பாதுகாப்பின்மையை ஏற்படுத்திடும். அவர்களின் வாழ்வாதாரங்கள் மீதும் மிகவும் நாணங்கெட்டவிதத்தில் தாக்குதல்களை அதிகரித்திடும். ஒட்டுமொத்தத்தில் நம் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்குமே கடும் ஆபத்தினை விளைவித்திடும்.
இந்திய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகக் கருதப்பட்ட ஜனநாயக உரிமைகள் தற்போது கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. பாதுகாப்பைப் பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஜனநாயக உரிமைகளை வெட்டிச் சுருக்குவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மக்களின் அந்தரங்கத்தின் மீதான அடிப்படை உரிமைகள், ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளி வர்க்கம், விவசாயிகள் மற்றும் மக்களின் இதர பிரிவினரும் தங்கள் கோரிக்கைகளுக்காக அணிதிரள்வதற்கான உரிமைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும்,  சுதந்திர இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள சில தாக்குதல்களாகும்.
பொருளாதாரத்தில் தன்னிறைவு
பொருளாதாரத்தில் தன்னிறைவு என்பதைப் பொறுத்தவரையில், மோடி அரசாங்கமானது இந்தியாவை இந்தக் குறிக்கோளை எய்துவதிலிருந்து வெகு தொலைவுக்கு அப்பால் விலக்கிக் கொண்டு சென்றுவிட்டது. இந்த அரசாங்கத்தின் ஐந்தாண்டு கால ஆட்சியில், சர்வதேச மூலதனம் மற்றும் உள்நாட்டுப் பெரு முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி செய்துதரும் விதத்தில் நம் பொருளாதாரத்தின் கதவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி என்னும் இரட்டைத் தாக்குதல்கள் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்களில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் நாசத்தை ஏற்படுத்தியதுடன், நாட்டில் பொருளாதார மந்த நிலை உருவாகவும் இட்டுச் சென்றது. கடந்த ஐந்தாண்டுகளில், பதிவுசெய்யப்பட்டுள்ள, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி, அரசாங்கத்தின் தரப்பில் இது தொடர்பான தரவுகளின்மீது பல்வேறு தில்லுமுல்லுகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அதன்பின்னர் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் கூட, இப்போதுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது கடந்த பல ஆண்டுகளில் மிகவும் மோசமான ஒன்று என்றே காட்டியுள்ளது.  வேலையின்மை கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியிருக்கிறது. முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருந்த கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரங்கள் நாசப்படுத்தப்பட்டிருக்கின்றன.
விவசாய நெருக்கடி மேலும் ஆழமாகத் தொடர்வதன் காரணமாக, விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொள்வதும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நாட்டுப்புற மக்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து உறுதிமொழிகளுக்கும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.  விவசாய விளைபொருள்களுக்கு, உற்பத்திச் செலவினத்தைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் என்கிற உறுதிமொழிக்குத் துரோகம் இழைக்கப்பட்டிருப்பதன் மூலம் விவசாயிகளுக்குத் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தைப் படிப்படியாக அழித்துக்கொண்டிருப்பதன் மூலம் கிராமப்புற மக்களுக்கான வேலைகள் பறிக்கப்பட்டு, நாட்டுப்புற மக்களின் உண்மை ஊதியம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத நிலைமையாகும். பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த மந்த நிலைமையுடன், அத்தியாவசியப் பொருள்களின் கடும் விலை உயர்வுகளும், நாட்டு மக்களின் பெரும்பான்மையானவர்களை வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளியிருக்கிறது.
நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மூர்க்கத்தனமாகப் பின்பற்றியதும், பொருளாதாரத்தை நாசப்படுத்தியதும் மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வை  அதிகரித்திடவும் இட்டுச்சென்றுள்ளன. நாட்டில் உருவாக்கப்பட்ட கூடுதல் செல்வத்தில் 73 சதவீதம் மக்கள் தொகையில் 1 சதவீதமாக இருக்கின்ற செல்வந்தர்களின் கைகளுக்குச் சென்றிருக்கிறது.
மோடியின் தன்னிறைவு
பிரதமர் மோடி தன்னிறைவு என்பதற்கு புதியதொரு விளக்கத்தினைத் தந்துகொண்டிருக்கிறார். தன்னிறைவு என்பதை அவர் தானும் தான் சார்ந்திருப்பவர்களும் என்கிற விதத்தில் வியாக்கியானம் செய்துகொண்டிருக்கிறார். (Self-reliance means self and reliance.) இவரது அரசாங்கத்தின்கீழ் இவர்கள்  ஊட்டி வளர்த்திடும் கூட்டுக்களவாணி முதலாளித்துவத்தின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. தங்களுக்கு வேண்டிய கூட்டுக்களவாணி முதலாளிகள் நாட்டின் சொத்துக்களையும், பொதுத்துறை வங்கிகளில் மக்கள் சேமித்துவைத்திருந்த தொகைகளையும் மிகப்பெரிய அளவில் சூறையாடிவிட்டு, வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல அனுமதித்திருக்கிறார்கள்.  இவ்வாறு இவர்கள் வங்கிகளில் கடன்பெற்றுவிட்டுத் திருப்பிச் செலுத்தாத தொகை என்பது சுமார் 15 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாகும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது. மோடிக்கு மிகவும் வேண்டிய கார்ப்பரேட்டுகள் நாட்டில் நடைபெற்றுள்ள ரபேல் ஊழல் போன்று பல ஊழல்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். 
இவ்வாறு தாங்கள் உதவிடும் கூட்டுக் களவாணி முதலாளிகள் யார் என்று மக்களுக்கு வெளிப்படுத்தக்கூடாது என்பதற்காகவே, மோடி அரசாங்கம் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பது தொடர்பாக புதிய சட்டங்களையே இயற்றியிருக்கிறது. இதில், தேர்தல் பத்திரங்கள் வெளியிடுவது என்பதும் ஒன்றாகும். இச்சட்டத்தின் மூலம் வங்கிகளில் தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்கள் யார், எந்தக் கட்சிக்கு அவர்கள் அவற்றைத் தருகிறார்கள் என்று மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு ரகசியத்தைக் கொண்டுவந்திருப்பதன் மூலமாக, மோடி அரசாங்கம், தங்களுக்கு உதவிடும் கூட்டுக்களவாணிகள் யார் என்பதை மக்களிடமிருந்து மறைத்துவிடலாம் என்று நம்புகிறது. இருந்தாலும்கூட, நாட்டில் வெளியாகியிருக்கின்ற தேர்தல் பத்திரங்களில் 95 சதவீதம் பாஜகவிற்குத்தான் சென்றிருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.  இவ்வாறு மோடி அரசாங்கமானது அரசியலில் ஊழலை சட்டபூர்வமாகவே மேற்கொண்டுவருகிறது.
கூட்டாட்சித் தத்துவம்
நம்முடைய அரசமைப்புச்சட்டத்தின் ஆணிவேர், கூட்டாட்சித் தத்துவமாகும். இது, தற்போது கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எவ்விதமான கூச்சநாச்சமுமின்றி சலுகைகளை வாரி வழங்குவதும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுடன் பகைமையுடன் நடந்துகொள்வதன்மூலமாக மத்திய மாநில உறவுகள் சீர்கேடடைந்து வருவதுடன், திட்டக் கமிஷனை ஒழித்துக்கட்டியதன் மூலமாக மாநில அரசுகள் தங்கள் திட்டச் செலவினங்கள் தொடர்பான பிரச்சனைகளை எடுத்துச் சென்று அவற்றைத் தீர்ப்பதற்கான வாய்ப்பில்லாமல் போய்விட்டன.  இப்போது மாநில அரசுகள், மத்திய அரசின் கருணையால் வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. தேசியப் பேரிடர் அல்லது மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காகப் பிரத்யேகமான திட்டங்கள் எதையாவது கொண்டுவந்தால் அவற்றுக்காக மத்திய அரசிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டிருக்கின்றன. தேசிய வளர்ச்சிக் கவுன்சில் முற்றிலுமாக செயல்படவில்லை. இதன் காரணமாக மாநில அரசுகள் தங்கள் தேவைகளைச் சொல்லி, தங்களுக்குத் தேவையான நிதியைப் பெறக்கூடியவிதத்தில் செயல்பட்டு வந்த ஓர் அமைப்பு இல்லாமல் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டது.
ஜிஎஸ்டி அமைப்பு முறையானது, மாநில அரசுகளுக்கு இருந்த வருவாய் ஈட்டும் வழிமுறைகளைப் பறித்துவிட்டது.  தற்போது ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் முறையானது, மாநில அரசுகள் தங்கள் வருவாயில் கணிசமான அளவிற்கு இழப்பினைச் சந்திப்பதற்கு இட்டுச் சென்றிருக்கின்றன. இதன்மூலம் மாநில அரசுகள் தாங்கள் மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளுக்கு உண்மையாக இருப்பதில் சிரமப்படுகின்றன.
ஒட்டுமொத்தத்தில், பாஜக அரசாங்கமானது, அரசமைப்புச்சட்டம் வகுத்துத்தந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப்புதைத்துவிட்டு, அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசாங்கத்திற்குக் கொண்டுசெல்லக்கூடிய விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது, பாசிச சித்தாந்த முறையை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலுக்கு மிகவும் சரியாகப் பொருந்துகிறது.
சமூக நீதி
நம் அரசமைப்புச் சட்டம், மக்களுக்குப் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நீதி வழங்குவதை உத்தரவாதம் செய்கிறது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் இம்மூன்று முனைகளிலும் மக்களுக்கு பெரிய அளவில் அநீதி இழைக்கப்பட்டு வந்ததைப் பார்த்தோம். தலித்துகள் மற்றும் முஸ்லீம்கள் மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு,  கொல்லப்பட்டுள்ளார்கள். வன உரிமைச் சட்டத்தின்கீழ் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அதேபோன்றே சமூகநீதியை உத்தரவாதப்படுத்தும் முறையில் கொண்டுவரப்பட்டிருந்த தலித்/பழங்குடியினர் (வன்கொடுமைத் தடைச்)சட்டம் மற்றும் கல்வி நிறுவனங்களில் தலித்/பழங்குடியினர் நியமனம் செய்யப்படும் பட்டியல் முறை நீர்த்துப்போகச் செய்யப்பட்டிருக்கின்றன.  தங்கள் உரிமைகளைப் பாதுகாத்திட தலித்துகள் போராட முன்வரும்போது, அவர்கள் மிகவும் ஈவிரக்கமற்ற முறையில் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின்கீழ் செயல்படும் தனியார் ராணுவங்கள் அவர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல்களை ஏவுகின்றன. பாஜக அரசாங்கங்கள், தலித்துகளைத் தாக்கும் கயவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதையும், தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள்மீதே பொய் வழக்குகள் போடுவதையும் மேற்கொண்டு வருகின்றன.
மோடி அரசாங்கத்தின் கீழ் பெண்களின் மீதான தாக்குதல்களும் மிக அதிகமாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்களும், பாலியல்ரீதியான தாக்குதல்களும் மிகவும்  அதிகரித்திருக்கின்றன. மிகவும் கொடூரமான கூட்டு வன்புணர்வுக் குற்றங்களும், இளம்பெண்கள் கொல்லப்படுவதும், இளஞ்சிறுமிகள் கூட கொல்லப்படுவதும் எந்த அளவிற்கு நம் சமூகம் மனிதாபிமானமற்ற ஒன்றாக மாறியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த அளவிற்கு மனிதாபிமானமற்ற இழி செயல்கள் நம் சமூகத்தில் முன்னெப்போதும் நடந்ததில்லை.
அதிகரித்துவரும் போராட்டங்கள்
மோடி அரசாங்கம் மற்றும் அதனுடைய கொள்கைகளுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றுவருவதை சமீப ஆண்டுகளில் பார்க்கிறோம். தொழிலாளி வர்க்கத்தின் மிகப் பெரிய அளவிலான வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன.  நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் போர்ப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் இதர பிரிவினர், தங்கள் வாழ்வாதாரங்கள்மீது கடும் தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ள மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகவும், மக்கள் நலன் காத்திடும் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்தும் போராடுவதற்காக ஒரே பதாகையின்கீழ் ஒன்றிணைந்து வருகின்றனர்.
இவ்வாறு அதிகரித்துவரும் போராட்டங்களை சீர்குலைத்திட, ஒன்றுபட்டு நிற்கும் மக்களை திசைதிருப்பிட, மக்கள் மத்தியில் மதவெறித் தீயை விசிறிவிடவும் மற்றும் மக்களின் உணர்ச்சியைக் கிளப்பும்விதத்தில் பிரச்சனைகளை உருவாக்கவும் மோடி அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் பாதுகாப்பு
கடந்த ஐந்தாண்டுகளில், ஜம்மு-காஷ்மீர் தொடர்பான மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் அம்மாநில மக்களை மேலும் தனிமைப்படுத்தக்கூடிய அளவிற்கு கொண்டுசென்றுள்ளன. பயங்கரவாதத் தாக்குதல்கள் படிப்படியாக அதிகரித்திருக்கின்றன. 2009-க்கும் 2014-க்கும் இடையே 109 பயங்கரவாதத் தாக்குதல்களாக இருந்தது, 2014-க்கும் 2019க்கும் இடையே 626ஆக அதிகரித்திருக்கின்றன. அதேபோன்று உயிரிழந்த பாதுகாப்புப்படையினரின் எண்ணிக்கையும் 139இலிருந்து 483ஆக உயர்ந்திருக்கிறது. சாமானிய மக்கள் கொல்லப்பட்டது 12இலிருந்து 210ஆக உயர்ந்திருக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்த மீறல்கள் என்பவையும் 563இலிருந்து 5596ஆக அதிகரித்திருக்கிறது. மோடி அரசாங்கத்தின் காஷ்மீர் கொள்கையின் விளைவாக காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் இணைவது என்பது 2014இல் 16 ஆக இருந்தது, 2018இல் 198ஆக உயர்ந்திருக்கிறது.   ‘காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் அனைத்துத்தரப்பு இயக்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம் அதன்மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்’ என்று காஷ்மீர் மக்களுக்கு அளித்த உறுதிமொழிக்கு, மோடி அரசாங்கம் துரோகம் இழைத்துவிட்டது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இதன் கொள்கை கடிகாரத்தின் பெண்டுலம் போன்று இங்குமங்கும் ஆடிக்கொண்டிருக்கிறது. ஊரி என்னும் ஊரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட துல்லியத் தாக்குதல் இத்தகைய தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் எனக் கூறப்பட்டது. ஆயினும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்கின்றன. புல்வாமாவில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 44 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டார்கள். இந்திய விமானப் படையினர் பாகிஸ்தானில் பாலக்கோட்டில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். எனினும் பயங்காவாதத் தாக்குதல்கள் தொடர்கின்றன. ராணுவத்தினர் பலர் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நின்று உறுதியுடன் குரல் கொடுக்கிறது. எனினும், மோடி அரசாங்கமும் பாஜகவும் இப்பிரச்சனையை, நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தினை விளைவித்திடும் என்பதுபோல், அரசியலாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.  
கடந்த ஐந்தாண்டுகளாக தாங்கள் சந்தித்த எண்ணற்ற பிரச்சனைகளுக்கு மோடி அரசாங்கமும் பாஜகவும்தான் காரணம் என்று முடிவு செய்துள்ள மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மோடியும், பாஜகவும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இந்த அரசாங்கத்தையும், தங்கள் வாழ்வாதாரங்களை நாசப்படுத்தியுள்ள இதன்பின் நிற்கின்ற சக்திகளையும்  தூக்கி எறிந்திட மக்கள் உறுதிபூண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.  தங்களுக்கு எதிராக மக்களிடம் கொழுந்துவிட்டெரிகின்ற கோபாவேசத்தைத் திசைதிருப்புவதற்காக ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மக்கள் மத்தியில் மதவெறியையும், போர் வெறியையும் தூண்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.  இத்தகைய இவர்களின் இழி முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். இத்தகைய சக்திகள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துவிட்டால், இப்போதிருக்கும் அரசமைப்புச்சட்டம் நீடிக்குமா என்பதே சந்தேகமாகும்.
இப்போது மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுபவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாக்ஷி மகராஜ், 2019இல் நடைபெறும் தேர்தல்தான் இந்தியாவில் நடைபெறும் கடைசித் தேர்தல் என்று கூறியிருக்கிறார். இதனை பிரதமரோ அலலது பாஜகவோ மறுதலித்திடவில்லை. மக்கள் இவ்வாறு இவர்களால் விடப்பட்டுள்ள எச்சரிக்கையை சரியாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இத்தகைய இழிசக்திகளை தேர்தலில் தோற்கடித்திடவும், மக்கள் நலனைப் பிரதிபலிக்கக்கூடியதான, இந்தியாவின் பொருளாதார இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கக்கூடியதான திசைவழியில் செல்லக்கூடியதான,  சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கக்கூடியதான மாற்று அரசாங்கத்தை அமைத்திடத் தங்களை ஆயத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
வரவிருக்கும் தேர்தலில் இந்தக் குறிக்கோள்களை எய்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் உறுதிபூண்டுள்ளன.
(தமிழில்: ச. வீரமணி)