ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் நூற்றாண்டு
-சீத்தாராம் யெச்சூரி
2018 ஏப்ரலில் நடைபெற்ற
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாடு, 2019 ஏப்ரல் 13
வரையிலும் ஆண்டு முழுவதும் ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் நூற்றாண்டை அனுசரித்திட
வேண்டும் என்று அறைகூவல் விடுத்து, ஒரு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி
இருக்கிறது. இது இப்போது நாடு முழுதும் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வடிவங்களில்
நடந்து வருகின்றன. அதில், “போராட்டத்தின்
படிப்பினைகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தி, காலனிய நுகத்தடியிலிந்து இந்தியாவை
விடுவித்திட மக்கள் மேற்கொண்டிருந்த தீர்மானத்தைப் புரிந்துகொள்ள,” இதனைப்பயன்படுத்திக்
கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுக்
கோரியிருந்தது.
1919 ஏப்ரல் 13 அன்று வைசாகி
தினத்தன்று, ஜாலியன்வாலா பாக்கில் நடைபெற்ற படுகொலைகள் 20ஆம் நூற்றாண்டில்
நடைபெற்ற அரசியல் குற்றங்களிலேயே மிகவும் மோசமான ஒன்றாகக் கருதப்படுகிறது. பிரிட்டிஷ்
காலனிய ஆட்சியாளர்களின் கொடூரத்தன்மை, இதன் மிகவும் மட்டரகமான
காட்டுமிராண்டித்தனத்திலும், மனிதகுல நாகரிகத்தின் எவ்வகையான தன்மைக்கும்
ஒத்துவராததிலும் நன்கு வெளிப்பட்டது. அதிகாரபூர்வ மதிப்பீடு, இப்படுகொலைகள்
நிகழ்வில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 400க்கும் மேற்பட்டவை என்றும், காயமடைந்தோர்
எண்ணிக்கை 2,000க்கும் அதிகம் என்றும் கூறும் அதே சமயத்தில், தேசிய இயக்கத்தால்
அமைக்கப்பட்ட சுயேச்சையான பல்வேறு விசாரணை ஆணையங்கள், பத்தாயிரத்திற்கும்
மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும், பல்லாயிரக்கணக்கானவர்கள் காயங்கள் அடைந்தனர்
என்றும் காட்டக்கூடிய விதத்தில் ஆவணச்சான்றுகளை அளித்துள்ளன. ஜாலியன்வாலா பாக்,
ஒரு சிறிய நுழைவாயிலைத்தவிர சுற்றிலும் அனைத்துப்பகுதிகளும் மூடப்பட்ட ஒரு
பூங்காவாகும். பிரிட்டிஷார் கொண்டுவந்த “ரவுலட் சட்டத்தை” “கருப்புச் சட்டம்”
என்று சித்தரித்து, பஞ்சாப் மாகாணம் முழுதும் எதிர்ப்பு இயக்கங்கள்
நடைபெற்று வந்தன. அதன் ஒருபகுதியாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்
ஜாலியன்வாலாபாக் பூங்காவில் குழுமியிருந்தார்கள். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள்
ஜாலியன்வாலாபாக்கில் மேற்கொண்ட ஒடுக்குமுறையை, மிகவும் கொடூரமான இனப்படுகொலைகள்
(massacre) என்று சொல்வதைத்தவிர வேறெந்த வார்த்தையாலும் குறிப்பிட முடியாது.
பின்னணி
வைசாகி தினத்தை பஞ்சாப்
மாநிலத்தில் இந்துக்களும், முஸ்லீம்களும், சீக்கியர்களும் இணைந்தே கொண்டாடுவார்கள்.
ஒரே டம்ளரில் உள்ள தண்ணீரை அனைவரும் இணைந்தே குடிப்பார்கள். அதேபோன்று ஒரே தட்டில்
உள்ள உணவை அனைவரும் இணைந்தே உண்பார்கள். இவ்வாறு மக்கள் அனைவரும் தங்கள் மத
வேறுபாடுகளை ஓரங்கட்டிவைத்துவிட்டு, அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன்,
இவ்விழாவினைக் கொண்டாடுவதை, பிரிட்டிஷாரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
தங்களுடைய பிரித்தாளும் கொள்கைக்கேற்ப, எப்படியாவது இத்தகைய மக்கள் ஒற்றுமையை
உடைத்தெறிய வேண்டும் என்று நயவஞ்சமானமுறையில் திட்டமிட்டார்கள். குறிப்பாக 1857
முதல் சுதந்திரப் போரை அடுத்து, இவர்களின் இத்தகைய கபடத்தனம் இவர்கள் மத்தியில்
கூர்மையடைந்தது. 1857 முதல் சுதந்திரப் போர் சமயத்தில், அனைத்து மதங்களைச் சார்ந்த
மக்களும், தங்கள் மதமாச்சர்யங்களை மறந்து, மொகலாய மாமன்னர் பகதூர் ஷா ஜஃப்பார்
அவர்களை, பிரிட்டிஷாருக்கு எதிராக
சுதந்திர இந்தியாவின் இறையாண்மைமிக்க மன்னர் என்று பிரகடனம் செய்தனர்.
மக்கள் மத்தியில் காணப்பட்ட இத்தகைய ஒற்றுமை ஜாலியன்வாலாபாக்கிலும் நன்கு
தெரிந்தது. இது பிரிட்டிஷார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
1918இல் தில்லியில் நடைபெற்ற அகில
இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வருடாந்திர அமர்வு, அடுத்த அமர்வினை பஞ்சாப்பில்
நடத்துவது என்று தீர்மானித்தது. பஞ்சாப்பில் மக்களை அரசியல்ரீதியாகத் திரட்டும்
வேலையாகவே பிரிட்டிஷார் இதனைப் பார்த்தனர். ஏனெனில், பிரிட்டிஷ் இராணுவத்தினருக்கு
அதிக அளவு ஆட்கள் பஞ்சாப்பிலிருந்துதான் எடுக்கப்பட்டுவந்தார்கள். இது
பாதிக்கப்படக்கூடும் என்று பிரிட்டிஷார் நினைத்தார்கள். எனவே இதனை வளர விடக்கூடாது
என்று அவர்கள் கருதினார்கள். எனவே, பஞ்சாப்பில் அடுத்த அகில இந்திய காங்கிரஸ்
கமிட்டியின் அமர்வு நடைபெறுவதை தடுத்திட அவர்கள் முயற்சியில் இறங்கினார்கள். பஞ்சாப்பில்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அமர்வினை நடத்திட, அமிர்தசரஸில் முன்னணி
வழக்குரைஞராக இருந்துவந்த டாக்டர் சைபுதீன் கிச்லியூ, லாகூரில் மருத்துவராக
இருந்துவந்த டாக்டர் சத்பால் ஆகியோர் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தார்கள். இது
பிரிட்டிஷாரால் ஒரு மாபெரும் சவாலாகப் பார்க்கப்பட்டது.
ஆனாலும், பஞ்சாப் மக்கள் மத்தியில்
சுதந்திரத்திற்கான வேட்கை ஏற்கனவே வேர்பிடிக்கத் துவங்கி விட்டன. கதார் கட்சியின்
செல்வாக்கும், 1913-14களில் புலம்பெயர்ந்து அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை
மற்றும் கனடா சென்றிருந்த சீக்கியர்கள் உருவாக்கி இருந்த இயக்கமும்,
பிரிட்டிஷார்கள் கதார் இயக்கத்தினருக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டிருந்த
மனிதாபிமானமற்ற ஒடுக்குமுறையும் – இவை அனைத்தும் சேர்ந்து பஞ்சாப் இளைஞர்கள்
மத்தியில் சுதந்திர இயக்கத்தில் பெரும்திரளாக இணைந்திட உத்வேகத்தை ஏற்படுத்தி
இருந்தன.
ரவுலட் சட்டத்திற்கு எதிராகக்
கிளர்ச்சிகள்
அதே சமயத்தில், பிரிட்டிஷ் காலனி
அரசாங்கம் மிகவும் கொடூரமான ரவுலட் சட்டமுன்வடிவுகளை அறிமுகப்படுத்தி இருந்தது. இவை,
மேன்முறையீட்டிற்கான உரிமை எதுவும் அளித்திடாமல், புரட்சிகர நடவடிக்கைகளில்
சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும்
எவரொருவரையும் தண்டனை அளித்திட, மூன்று நீதிபதிகளடங்கிய நீதிமன்றத்திற்கு,
அதிகாரம் அளித்திருந்தன. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும் எவரொருவரையும்கூட
சந்தேகத்தின்பேரில் அடைத்துவைப்பதற்கு இச்சட்டம் அதிகாரங்களை
ஏற்படுத்திக்கொண்டிருந்தது. உள்ளூர் அரசாங்கங்கள், தங்களுக்கு ஆபத்தானவர்கள் என்று
எவரைக்கருதினாலும் அவரைக் கைது செய்வதற்கு இச்சட்டத்தில் அதிகாரங்கள்
வழங்கப்பட்டிருந்தன. இச்சட்ட ஷரத்துக்களுக்கு எதிராக எவரொருவரும் மேல்முறையீடு
செய்வதற்கான உரிமை வழங்கப்படவில்லை.
மகாத்மா காந்தி, 1919 மார்ச் 30
அன்று, பிரிட்டிஷாரைத் தன் முடிவுகளிலிருந்து பின்வாங்கிட வலியுறுத்துவதற்காக, ஓர்
ஒத்துழையாமை இயக்கத்தின் மூலமாக கிளர்ச்சி நடவடிக்கைக்காக அறைகூவல் விடுத்தார். அன்றையதினம்
காவல்துறையினர் தில்லியில் நடைபெற்ற ஹர்த்தால் போராட்டத்தின்போது மேற்கொண்ட
துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள், நூற்றுக்கும் மேலானவர்கள்
காயங்கள் அடைந்தனர். இதனைக் கண்டிக்கும் விதத்தில் இதற்கெதிராக, நாடு முழுதும்
ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, இந்துக்கள்,
முஸ்லீம்கள், சீக்கியர்கள் இடையே ஒற்றுமை ஏற்பட்டது.
இவற்றால் எல்லாம் சற்றும்
வளைந்துகொடுக்காத, பிரிட்டிஷ் அரசாங்கம், அமிர்தசரஸில் நடைபெறவிருந்த அகில இந்திய
காங்கிரஸ் கமிட்டி அமர்வினை நடக்கவிடாது கழுத்தைநெறித்திட வேண்டும் என்பதற்காக,
ஏப்ரல் 10 அன்று அவற்றை முன்னின்று நடத்திய டாக்டர் சைபூதின் கிச்லியூவையும்,
டாக்டர் சத்பாலையும் கைது செய்தது. அவர்களைக் கண்காணா இடத்திற்கு எங்கோ எடுத்துச்
சென்றது. இந்த செய்தியை மக்கள் ஆவேசமான கிளர்ச்சி நடவடிக்கைகளுடன் எதிர்கொண்டனர்.
அமிர்தசரஸில் அமைந்திருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்முன், தங்கள் தலைவர்களை
விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் பெரும்திரளாகத் திரண்டனர்.
அப்போது மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர்
கொல்லப்பட்டனர். ஆத்திரமடைந்த கிளர்ச்சியாளர்கள், பிரிட்டிஷ் அலுவலகங்களையும்,
அதிகாரிகளையும் குறிவைத்துத் தாக்கத் தொடங்கினார்கள். மக்களின் ஆவேசக்
கிளர்ச்சிகள் அதிகரித்துக் கொண்டிருந்ததைக் கட்டுப்படுத்த முடியாமல் பிரிட்டிஷார்
திணறினர். இதனால் முதலில் அமிர்தசரஸையும், பின்னர் ஒட்டுமொத்த பஞ்சாப்பையும் இராணுவ
ஆட்சியிடம் பிரிட்டிஷார் ஒப்படைத்தனர். கிட்டத்தட்ட ஓர் இராணுவ ஆட்சியே
அமல்படுத்தப்பட்டது.
படுகொலைகள்
இந்தப் பின்னணியில்தான் நன்கு
விளம்பரம் செய்யப்பட்டு, ஜாலியன்வாலா பாக்கில் ஒரு பிரம்மாண்டமான
பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்கத்துக் கிராமங்களிலிருந்து,
அமிர்தசரஸுக்கு வைசாகி கொண்டாட்டங்களில்
கலந்துகொள்வதற்காக வந்திருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும்,
குழந்தைகளும் இப்பொதுக்கூட்டத்தில் திரண்டனர். அமைதியான முறையில் கூட்டம்
தொடங்கியது. திடீரென்று ஜெனரல் டயர் கூட்டத்திற்குள் புகுந்தான். பூங்காவிற்குள்
குழுமியிருந்த மக்கள் வெளியேறிச் செல்ல முடியாதவாறு, பூங்காவின் சிறிய வாயிலை
அடைத்தான். மக்களை நோக்கி சுடத் தொடங்கினான். பிரிட்டிஷ் துருப்புக்கள் தொடர்ந்து
சுட்டுக்கொண்டே இருந்தன. அவர்களிடமிருந்த 1600 குண்டுகளும் தீரும்வரை அவர்கள்
சுட்டுக்கொண்டே இருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து இதற்கெதிராக
மக்களின் எதிர்ப்பு, பிரிட்டன் உட்பட உலகம் முழுதும் வெடித்தது. இதன்பின்னர்
இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ஒரு விசாரணை ஆணையத்தை பிரிட்டிஷ் அரசாங்கம்
அமைத்தது. ஹண்டர் கமிட்டி என்பது இதன் பெயராகும். அதேசமயத்தில்,
படுகொலைகளுக்குப்பின்னர், பிரிட்டிஷ் அரசாங்கம் அமிர்தசரஸில் வீடுகளுக்கு
வழங்கியிருந்த தண்ணீர் விநியோகம் மற்றும் மின் இணைப்புகளைத் துண்டித்தது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அமிர்தசரஸில் குடியிருக்கும் மக்கள் எவ்விதமான உதவியும்
செய்திடக்கூடாது என்கிற குரூரமான சிந்தனையுடனேயே பிரிட்டிஷ் அரசாங்கம் இவ்வாறு
நடந்துகொண்டது. ஹண்டர் குழுவின் முன் அளித்திட்ட வாக்குமூலத்தில், ஜெனரல் டயர்,
கூறும்போது, தன் தலைமையில் படுகொலைகள் நடைபெற்றதற்காகக் கிஞ்சிற்றும் வருந்திட
வில்லை. மாறாக, அவ்வாறு படுகொலைகள் மேற்கொண்டதை நியாயப்படுத்தியே வாக்குமூலம்
அளித்தான். மக்களைக் கலைந்துசெல்லுங்கள் என்று எவ்விதமான எச்சரிக்கையும்
விடுக்காமலே துப்பாக்கிக்சூடு நடத்தியதை அவன் ஒப்புக்கொண்டான். 1919 ஆகஸ்ட் 25
அன்று பொது ஊழியர் பிரிவுக்கு (General Staff Division) அவன் சமர்ப்பித்திருந்த
அறிக்கை பின்வருமாறு:
“நான் கூட்டத்தைப் பார்த்து,
சுட்டேன். கூட்டம் கலைந்து செல்லும் வரை நான் சுட்டேன். என்னுடைய நடவடிக்கையை நான்
நியாயப்படுத்திட வேண்டுமானால், இவ்வாறு மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது
சரிதான் என்றே நான் கருதினேன். அப்போதுதான் அது குறைந்தபட்சம் மக்கள் மத்தியில்
தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் கருதினேன்.
என்னிடம் அந்த சமயத்தில் அதிகத் துருப்புக்கள் இருந்திருக்குமாயின்
இறந்தோர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்திருக்கும். கூட்டத்தினரைக் கலைந்து
செல்லுமாறு செய்வதுமட்டும் என் நோக்கமாக இருந்திடவில்லை. மக்கள் மத்தியில்,
குறிப்பாக பஞ்சாப் மாகாணம் முழுவதிலும்,
குறிப்பிட்ட அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திட வேண்டும் என்பதே என்
நோக்கமாகும். இதில் நான் கடுமையாக நடந்துகொண்டேன் என்ற கேள்விக்கே இடமில்லை.”
பிரிகேடியர்-ஜெனரல் டயர், தன்னுடைய
நோக்கம், பஞ்சாப் முழுவதும் மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும்
என்பதேயாகும் என்றான். “கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும்
கொல்லவேண்டும் என்றே நான் தீர்மானித்திருந்தேன்,”
என்று டயர் மேலும்
கூறினான்.
மக்கள் போராட்டம் : ஒரு
திருப்புமுனை
இந்தியாவின் விடுதலைப் போராட்ட
வரலாற்றில் ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
பிரிட்டிஷார் எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டபோதிலும்கூட, அவர்களால் அமிர்தசரஸில்
நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அமர்வை தடுத்து நிறுத்திட
முடியவில்லை. இந்த அமர்வு காங்கிரஸ் கமிட்டியின் குறிப்பிடத்தக்கவொரு அமர்வாக
மாறியது. இந்த அமர்வில்தான், மகாத்மா காந்தி முதல் சிவில் ஒத்துழையாமை
இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தார். நாட்டு மக்களின் ஒற்றுமை மேலும் வலுவடைந்தது.
ரவீந்திரநாத் தாகூர், பிரிட்டிஷ்
சாம்ராஜ்யத்தால் தனக்கு அளிக்கப்பட்டிருந்த வீரத்திருத்தகைப்பட்டத்தை (Knighthood)
திருப்பி ஒப்படைத்ததன் மூலமாக தன் கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக 1919
மே 31 அன்று வைஸ்ராய்க்கு எழுதியிருந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது: “அப்பாவி மக்கள்மீது அநியாயமாக
ஏவப்பட்டுள்ள தண்டனைகளின் கொடூரத்தன்மையானது, எந்தவொரு நாகரிக அரசாங்கமும்
மேற்கொள்ளாத அளவிற்கு மிகவும் மோசமானவைகளாகும். பஞ்சாப்பில் எங்கள் சகோதரர்கள்
மீது ஏவப்பட்டுள்ள அவமானங்களும், அநியாயங்களும் அரசாங்கத்தின் கள்ள மவுனத்தின்
மூலமாக, நாடு முழுதும், நாட்டின் மூலைமுடுக்கெல்லாம், சென்றடைந்திருக்கின்றன.
இத்தகைய கொடூரமான நடவடிக்கைக்கு எதிராக உலக மக்கள் வெளிப்படுத்தியுள்ள நேர்மையான
சீற்றம், எங்கள் மக்களின் இதயங்களை கொள்ளைகொண்டுவிட்டன. எனினும், ஆட்சியாளர்கள்
இதனைக் கண்டுகொள்ளாமல் புறந்தள்ள முயற்சிப்பதோடு, இத்தகைய இழிசெயல்களைப்
புரிந்தமைக்காகத் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொண்டு, சுகபோகத்தில்
திளைக்கின்றனர். இத்தகு சூழ்நிலையில் என்னால், என் நாட்டு மக்களுக்காக நான் செய்யக்கூடியது,
கோடிக்கணக்கான என் நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து
எழுப்பும் ஆவேசக்குரலை எதிரொலிக்கும் விதத்தில், நானும் அவர்களுடன்
இணைந்துகொள்வதேயாகும். இவ்வாறு என் நாட்டு மக்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ள
சூழ்நிலையில், இதனைக் கேலிசெய்யும் விதத்தில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவப்
பட்டங்களைத் திரும்ப ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டது. அவ்வாறு எனக்கு இந்த
அரசாங்கம் அளித்துள்ள கௌரவப்பட்டங்களைத் திருப்பிஅனுப்பிவைக்கிறேன்.”
இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாபி
மொழியின் புகழ்மிக்க எழுத்தாளரான நானக் சிங் என்பவர் ஒரு நீண்ட கவிதை, வைசாகி
கொலைகாரன், (Khooni Baisakhi) என்னும் தலைப்பில் எழுதினார். இக்கவிதையை வெள்ளை
அரசாங்கம் தடை செய்தது. எனினும்கூட, நாடு முழுதும் இக்கவிதை விரிவானமுறையில்
சென்றடைந்தது. நாட்டில் சுதந்திரத்திற்கான போராட்டத்தை வலுப்படுத்தும் விதத்தில்
இது அமைந்திருந்தது.
உத்தம் சிங் என்பவர் 15 வயது நிரம்பிய அநாதைச் சிறுவனாக இருந்த
சமயத்தில் ஜாலியன்வாலா பாக் படுகொலைகளை நேரில் கண்டவர், 21 ஆண்டுகளுக்குப்
பின்னர், 1940 மார்ச் 13 அன்று, ஜாலியன்வாலாபாக் படுகொலைகளைப்புரிந்திட்ட
கொலைகாரன் மைக்கேல் ஓ’டயரை, லண்டனில், காக்ஸ்டன் ஹாலில் சுட்டுக் கொன்றார்.
அப்போது கைதுசெய்யப்படுகையில் தன் பெயரை, ராம் முகமது சிங் ஆசாத் என்று கூறினார்.
உத்தம்சிங்கிற்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு, 1940 ஜூன் 12 அன்று
தூக்கிலிடப்பட்டார். அப்போது அவர்
அளித்திட்ட வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
“நான் இதனைச் செய்தேன். ஏனெனில்
டயருக்கு எதிராக கோபம் கொண்டிருந்தேன். அதற்கு அவன் தகுதிபடைத்தவன்தான். அவன்தான்
உண்மையான குற்றவாளி. அவன் எங்கள் மக்களின் வீர உணர்வுகளை நசுக்க விரும்பினான்.
எனவே, நான் அவனை நசுக்கினேன். கடந்த 21 ஆண்டுகளாக, அவனைப் பழிதீர்த்திட
முயற்சித்துக் கொண்டிருந்தேன். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனெனில்
என் வேலையை நான் செய்துவிட்டேன். சாவைக் கண்டு நான் பயப்படவில்லை. என் நாட்டுக்காக
நான் இறக்கிறேன். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் என் நாட்டு மக்கள் பட்டினியால்
வாடுவதை நான் பார்த்திருக்கிறேன். இதற்கெதிராக நான் போராடி இருக்கிறேன். இது
என்னுடைய கடமை. என்நாட்டுக்காக இறப்பதைவிட மிகப்பெரிய பேறு எதுவாக இருந்திட
முடியும்?”
ஜாலியன்வாலா பாக் படுகொலைகள்
நடைபெற்ற சமயத்தில், பகத் சிங்கிற்கு வயது 12. அப்போது அவர் லாகூரில் மாணவராக
இருந்தார். பின்னர் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டு, அவர் ஜாலியன்வாலாபாக்
வந்து, அங்கிருந்த ரத்தக்கறை படிந்த மண்ணை எடுத்துச் சென்றார். அது இப்போதும் பகத்
சிங் நினைவு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஜாலியன்வாலாபாக்
படுகொலைகள், இளம் புரட்சியாளர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டது.
ஜாலியன்வாலாபாக் படுகொலைகளின்
79ஆம் ஆண்டு தினத்தன்று தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் கூறியவற்றை நாம் மீளவும்
நினைவுகூர்வோம்: “ஜாலியன்வாலா பாக்கில் தங்கள்
ரத்தத்தைக் கூட்டாகச் சிந்தியதன்மூலம்,
நாட்டின் விடுதலைக்காக அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும் என்கிற செய்தியை
நாட்டு மக்களுக்கு அளித்துள்ள அனைத்து
மக்களுக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக்
கொள்கிறேன். கொல்லப்பட்ட மக்கள் மத்தியில் உண்மையான சுதந்திரத்திற்கான அபிலாசைகள்
– அதாவது பசி, பஞ்சம், பட்டினியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கம் –
இருந்ததை நாம் மறந்துவிடவில்லை. நாட்டு மக்களுக்கு சிறந்ததோர் எதிர்காலத்தை
அமைப்பதற்காக நடைபெறும் போராட்டத்திற்கு, ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் தொடர்ந்து
உத்வேகத்தை அளித்திடும். அத்தியாகிகளின் தியாகங்கள் என்றென்றும் நமக்கு வழிகாட்டிடும்
ஒளிவிளக்காக அமைந்திடும்.”
-தமிழில்: ச. வீரமணி