தலையங்கம்
பிரதமரும், பாஜகவும் நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்ற பேரவைகளுக்கும் ஒரேசமயத்தில் தேர்தல்கள் நடத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். குடியரசுத் தலைவர், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சமயத்தில், ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியது தொடர்பாக ஒரு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார். அப்போதுதான் அரசியல் கட்சிகள் மத்தியில் இப்பிரச்சனை தொடர்பாக ஒரு கருத்தொற்றுமைக்கு வர முடியும் என்றும் கூறியிருக்கிறார்.
ஜனநாயக விரோதமானது
அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதால் அரசின் கஜானாவிற்கு அதிக செலவு பிடிக்கிறது என்றும் எனவே ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்தலாம் என்றும் இவர்களால் விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும், தேர்தலுக்கு முன்பு அமல்படுத்தப்படும் ‘தேர்தல் நடத்தை விதி‘ (‘Model Code of
Conduct’) காரணமாக, வளர்ச்சித்திட்டங்களின் கீழான நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைகின்றன என்றும் இவர்கள் இதுகுறித்து விவாதத்தை முன்வைக்கிறார்கள். மேலும், ஒவ்வோராண்டும் தேர்தல்கள் நடைபெறுவதால் மனிதவளம் மீதுபெரும் சுமை ஏற்றப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்ற பேரவைகளுக்கும் ஒரேசமயத்தில் தேர்தல்கள் நடத்த வேண்டும் என்பதற்கு எதிராக முன்வைக்கப்படும் வாதங்கள், இயற்கையில் தொழில்நுட்பரீதியானதாகும் அல்லது நடைமுறைசாத்தியமற்றதாகும். ஒரே நேரத்தில் தேர்தல் என முன்வைக்கப்படும் கருத்தாக்கம் என்பது அடிப்படையில் ஜனநாயக விரோதமானது என்பதாலும் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையின் ஆணிவேரையே பிடுங்கி எறியக்கூடியது என்பதாலும்தான் இதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்ற பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்துவது, அரசாங்கங்கள் நாடாளுமன்ற/சட்டமன்றங்களுக்குப் பதில் சொல்லும் பொறுப்பிலிருந்து தங்களைக் கழற்றிக்கொள்வதற்கு இட்டுச்செல்லும். இது அரசமைப்புச் சட்டத்தின் கீழான பொறுப்புகளை மீறும் செயலாகும். அரசமைப்புச்சட்டத்தின்கீழ், ஓர் அரசாங்கம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது தோல்வி அடைந்தாலோ அல்லது நிதிச்சட்டமுன்வடிவில் தோல்வி அடைந்தாலோ அந்த அரசு ராஜினாமா செய்யக் கடமைப்பட்டதாகும். அதன்பின்னர் மாற்று அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால், அவை கலைக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற மக்களவைக்கோ அல்லது மாநில சட்டமன்ற பேரவைகளுக்கோ அரசமைப்புச்சட்டத்தின்கீழ் நிலையான பதவிக்காலம் நிர்ணயிக்கப்படவில்லை.
கொடூரமான முன்மொழிவு...
கொல்லைப்புற ஏற்பாடு...
ஒரேசமயத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக, ஏராளமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக, நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பரிந்துரைகளில் ஒன்று, மக்களவைக் கலைக்கப்படுவது தவிர்க்கப்படமுடியாத நிலை உருவானால் மற்றும் மீதமுள்ள மக்களவைக்கான பணிக்காலம் குறுகியதாக இருக்குமானால், அத்தகு சமயங்களில் மீதமுள்ள காலத்திற்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை நீடித்திடலாம் என்பதாகும். இதற்காக அடுத்த தேர்தல் நடந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் புதிய அமைச்சரவை அமையும்வரைக்கும், குடியரசுத் தலைவர், தனக்கு அறிவுரைகள் வழங்குவதற்காக தனக்கு வேண்டிய நபர்களைக் கொண்டு ஓர் அமைச்சரவையை அமைத்துக்கொள்வாராம். இத்தகைய மிகவும் கொடூரமான முன்மொழிவு குடியரசுத்தலைவரை, ஆட்சியை நடத்திடும் தலைவராக மாற்றிடும். இது, நாட்டை ஆளுவதற்காக, குடியரசுத் தலைவரைக் கொல்லைப்புற வழியாகக் கொண்டுவரும் ஏற்பாடேயாகும்.இதுதொடர்பாக மற்றொரு அனுமானமும் முன்வைக்கப்படுகிறது. அது என்னவென்றால், இவ்வாறு ஓர் அவை கலைக்கப்பட்டால், அந்த சமயத்தில் அதன் மீதமுள்ள பணிக்காலம் அதிக காலத்திற்கானதாக இருக்குமாயின், தேர்தல் என்பது மீதம் உள்ள பணிக்காலத்திற்கு மட்டும்தான் நடைபெறுமாம். அதாவது, மக்களவை இரண்டு ஆண்டு காலம் நீடித்திருந்தபின் கலைக்கப்படுமாயின், பின்னர் நடைபெறவிருக்கும் தேர்தலின் மூலம் புதிதாகப் பணியேற்பவர்கள் மீதமுள்ள மூன்று ஆண்டு காலத்திற்குத்தான் பொறுப்பிலிருப்பார்கள். எனவே, உண்மையில் இவ்வாறு அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுமாயின், இவர்கள் ஒரே சமயத்தில் மக்களவைக்கும், பேரவைகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்கான நோக்கமே அடிபட்டுப்போகிறது. அதேபோன்று, சட்டமன்ற பேரவைகள் தன்னுடைய பணிக்காலத்தில் பெரும்பகுதி கழிந்தபின்னர், கலைக்கப்படுமாயின், மீதமுள்ள பணிக்காலத்திற்கு அந்த மாநிலத்தின் ஆளுநர், ஆட்சியை நடத்திடுவார். இந்த ஏற்பாடும் மத்திய ஆட்சி அங்கே கொண்டுவரப்படுகிறது என்பதன் பொருளேயாகும்.
அடிப்படை உரிமையை பறிக்கும்
ஆயுளை வெட்டுவதும் நீடிப்பதும்
மக்களவையையும் மாநில சட்டமன்றப் பேரவை களையும் சீரமைத்திடுவதற்காக முன்வைக்கப்படும் மற்றொரு வழி, இதற்காக சில சட்டப் பேரவைகளின் காலத்தை நீட்டிப்பது அல்லது குறைப்பது என்பதாகும். உதாரணமாக, நிதி ஆயோக், அளித்துள்ள முன்மொழிவில் திரிபுரா மாநில பேரவையின் பணிக்காலத்தை 15 மாதங்களுக்கு வெட்டியும், பீகார்மாநில பேரவையின் பணிக்காலத்தை 13 மாதங்களுக்கு நீட்டித்தும் பரிந்துரைத்துள்ளது. இவ்வாறு ஒரு பேரவையின் பணிக்காலத்தை வெட்டுவதோ அல்லது நீட்டிப்பதோ மிகவும் ஜனநாயக விரோதமான செயலாகும், நாட்டின் குடிமக்கள் தங்கள் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமையைப் பறித்திடும் செயலாகும். ஆட்சியாளர்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்குப் பதில் சொல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே தந்திரமானவிதத்தில் பல்வேறு யோசனைகளையும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் முன்மொழிந்திருக்கிற மற்றுமொரு பரிந்துரை என்னவெனில், ஓர் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால், அப்போதே அவையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. இதன் பொருள், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் அரசாங்கத்தை அப்புறப்படுத்து வதற்காக தாங்கள் பிரயோகிக்க இருக்கும் உரிமையின்மீது கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதோடு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நிபந்தனையும் விதிப்பதாகும். நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளின் ஆட்சிக்காலம் குறித்த இத்தகைய எண்ணவோட்டங்கள் ஆளும் வர்க்கங்களின் எண்ணவோட்டங்களேயாகும். இவை நவீன தாராளமயக்கொள்கைகளுடன் முழுமையாக ஒத்துப் போகின்றவை களாகும்.
கூட்டாட்சி அமைப்பின் மேன்மை
நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கும் உரிமைக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதையோ, அல்லது பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தும் மாநில அரசாங்கத்தை மத்திய அரசு கலைத்துவிட்டு, புதிதாகத் தேர்தல் நடத்துவதையோ ஏற்க முடியாது.இந்தியா பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பல்வேறு கலாச்சாரங்களுடன் உள்ள மாபெரும் நாடாகும். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து கொண்டுசெல்லக்கூடிய விதத்தில் கூட்டாட்சித்தத்துவத்துடன் அமைந்துள்ள அரசியல் ஜனநாயகம்தான் இங்கே நிலைத்துநிற்க முடியும். பல்வேறு மாநிலங்களுக்கும் பல்வேறு சமயங்களில் தேர்தல்கள் நடைபெறுவது கூட்டாட்சி அமைப்பின் கூறுகளில் ஒன்றாகும்.பாஜகவின் “ஒரே தேசம், ஒரே தேர்தல்” என்கிற முழக்கமானது, அக்கட்சி, “ஒரே தேசம், ஒரேகலாச்சாரம், ஒரே மொழி” என்று நம்பிக்கொண்டிருப்ப துடன் ஒத்துப்போகின்ற ஒன்று. அரசமைப்புச்சட்டத்தைத் திருத்தி, ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்த வேண்டுமென்கிற கருத்தாக்கம், மத்திய எதேச்சதி காரத்துவத்தையே வளர்த்திடும். இது உறுதியுடன் எதிர்க்கப்பட்டு, முறியடிக்கப்பட வேண்டியதாகும்.
பிப்ரவரி 7, 2018
தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment