Saturday, December 3, 2016

‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’.__லெனின் பரிந்துரை செய்த புத்தகம்...


லெனின் பரிந்துரை செய்த புத்தகம்...
மாபெரும் நவம்பர் புரட்சியின் ஆரம்ப நாட்களை அற்புதமான விதத்தில் உயிர்த்துடிப்போடு சித்தரிக்கும் நூல் ஜான் ரீடு எழுதிய ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’.ஜான் ரீடு (1887 – 1920) – அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர், எழுத்தாளர், கட்டுரையாளர். ஜான் ரீடின் இந்நூல்தான் மனித குலத்தின் வரலாற்றில் புதிய சகாப்தத்திற்கு வழிகோலிய வெற்றிகரமான ரஷ்ய சோஷலிசப் புரட்சியைப் பற்றிய உண்மைகளை உலக மக்களுக்கு எடுத்துரைத்த முதல் நூலாகும்.

மாமேதை லெனின் இந்தப் புத்தகம் குறித்து இதன் அமெரிக்கப் பதிப்பின் முகவுரையில், ‘‘இந்தப் புத்தகத்தை அளவிலா ஊக்கத்தோடும், தளராத கவனத்தோடும் படித்தேன். அனைத்து உலகிலுமுள்ள தொழிலாளர்களுக்கு முழு மனதுடன் இப்புத்தகத்தைச் சிபாரிசு செய்கிறேன். பல லட்சக்கணக்கான பிரதிகளில் அச்சாகி இப்புத்தகம் வெளிவர வேண்டும். எல்லா மொழிகளிலும் பெயர்க்கப்பட வேண்டும் என்று நான் விரும்பும் புத்தகமாகும் இது. பாட்டாளி வர்க்கப் புரட்சி என்றால் என்ன? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன? இவற்றைப் புரிந்துகொள்வதற்கு, அக்டோபர் புரட்சியின் மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகளை உள்ளது உள்ளபடி உயிர்க் களையுடன் இந்நூல் விவரிக்கின்றது.
இந்தப் பிரச்சனைகள் விரிவாய் விவாதிக்கப்படுகின்றன, ஆனால் எவரும் இந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ முற்படுமுன் தமது முடிவின் உட்பொருளைச் சரிவர புரிந்து கொள்வது அவசியமாகும். சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தின் அடிப்படையான பிரச்சனையாகிய இதனைத் தெளிவுபடுத்த ஜான் ரீடின் புத்தகம் துணை புரியும் என்பதில் ஐயமில்லை.’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜான் ரீடு தமது ஒப்பற்ற நூலுக்கு அளித்த தலைப்பு ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ என்பதாகும். பெருவாரியான அந்நியர்கள் சோவியத் ரஷ்யாவைப் பற்றி முற்றிலும் வேறுவிதமான முறையில்தான் எழுதினார்கள். ஆனால் ஜான் ரீடு அந்த வகையைச் சேர்ந்தவர் அல்ல.
அவர் கருத்தில்லாத மேம்போக்கான பார்வையாளர் அல்ல. அவர் உளப்பூர்வமான புரட்சியாளர், கம்யூனிஸ்டு. நிகழ்ச்சிகளின் மெய்ப்பொருளை, அம்மாபெரும் போராட்டத்தின் உட்பொருளைப் புரிந்துகொண்டவர். இவ்வாறு இவர் புரிந்துகொண்ட காரணத்தால்தான் அவ்வளவு கூர்மையான பார்வையை அவரால் பெற முடிந்தது. இப்படிப்பட்ட பார்வை இல்லாதவர் எவராலும் ஒருநாளும் இம்மாதிரியான ஒரு நூலை எழுத முடியாது.போல்ஷிவிசம் குறித்து யார் என்ன நினைத்தாலும், ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியானது, மனிதகுல வரலாற்றின் மாபெரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும் என்பதிலும், போல்ஷிவிக்குகள் உயர்ந்தெழுந்தது உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதிலும் ஐயப்பாட்டுக்கு இடமில்லை.
பாரீஸ் கம்யூனது வீர வரலாற்றின் மிக நுண்ணிய விவரங்களை எல்லாம் தேடி வரலாற்றியலாளர்கள் எப்படி ஆவணங்களை அலசி ஆராய்கிறார்களோ, அதேபோல் அவர்கள் 1917 நவம்பரில் பெத்ரோகிராடில் என்ன நடைபெற்றது, எப்படிப்பட்ட மனப்பாங்கு மக்களை ஆட்கொண்டு இயக்குவித்தது, தலைவர்கள் எப்படிப்பட்டோராய் இருந்தார்கள், என்ன பேசினார்கள், என்ன செய்தார்கள் என்றெல்லாம் தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள். இதை மனதில்கொண்டுதான் தோழர் ஜான் ரீடு இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.சோவியத் புரட்சி குறித்து படிப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய மிக முக்கிய பிரச்சனை அதில்வரும் சில சொற்றொடர்கள் குறித்த உண்மையான பொருளைப் புரிந்துகொள்ள சிரமப்படுவதாகும்.

நரோத்னிக்குகள், போல்ஷ்விக்குகள், மென்ஷ்விக்குகள், செங்காவலர்கள் அல்லது செம்படையினர், வெண்காவலர்கள் அல்லது வெண்படையினர் போன்ற சொற்றொடர்களைப் புரிந்து கொள்ள சிரமப்படுவார்கள். எனவே, இவை குறித்து சிறுகுறிப்புகளை ஜான் ரீடு இந்நூலில் அளித்திருப்பார். சோவியத் சோஷலிசப் புரட்சி குறித்து அறிந்துகொள்ள ஆவலுடன் இருப்போருக்கு இது மிகவும் பயன் உள்ள விதத்தில் அமைந்திடும்.

அக்டோபர் புரட்சியா? நவம்பர் புரட்சியா? 1917 அக்டோபரில்தான் புரட்சி நடைபெற்றது. அது அக்டோபர் புரட்சிதான். எனினும் ரஷ்ய காலண்டர் பின்னர் 13 நாட்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, திருத்தப்பட்டதால் அக்டோபரில் நடைபெற்ற புரட்சி நவம்பர் 7 அன்று கொண்டாடப்படுகிறது.

ஜான் ரீடு இந்நூலை எழுதி வருகையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அவர் சேகரித்திருந்த விவரப்பொருள்களை பறிமுதல் செய்ய முயற்சித்தது. கூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டர்கள் ஜான் ரீடின் பதிப்பாளரது அலுவலகத்தைத் தொடர்ச்சியாக ஆறு தரம் சூறையாடி புத்தகக் கையெழுத்துப் பிரதியைத் திருடிச் சென்று அழித்துவிட முயன்றார்கள். எல்லா இடையூறுகளையும் இன்னல்களையும் மீறி ஜான் ரீடின் ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ 1919இல் அமெரிக்காவில் வெளிவந்தது, பின்னர் சோவியத் யூனியனிலும் உலகம் முழுவதும் பல மொழிகளிலும் வெளிவந்தது.மனிதகுல வரலாற்றிலே ஒரு புதிய சகாப்தத்தை, பாட்டாளி வர்க்கப் புரட்சிகளின் சகாப்தத்தைத் துவக்கி வைத்த ரஷ்யாவின் வெற்றிகர, சோசலிசப் புரட்சியினது உண்மைச் சித்திரத்தை உலகுக்கு அளிப்பதற்காக வெளிநாட்டிலே வெளியாகிய முதல் நூல் இதுவாகும். இதனை நாமும் படித்திடுவோம். மற்றவர்களையும் படிக்க வைப்போம்.

ச.வீரமணி


No comments: