Sunday, December 11, 2016

நீதித்துறை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்


நீதித்துறை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளுக்கும், மோடி அரசாங்கத்திற்கும் இடையி லான விரிசல் கடந்த சில வாரங்களில் அதிகரித் திருக்கிறது. அரசுத்தரப்பு வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல், உச்சநீதிமன்றத்திடம் உயர்நீதி மன்றங்களின் நீதிபதிகள் பதவிக்காக உச்சநீதி மன்ற மூத்த நீதிபதிகள் (கொலிஜியம்) அனுப்பி வைத்த 77 பெயர்களில், அரசாங்கம் 34 பெயர்களை மட்டும் ஏற்றுக்கொண்டு, மீதம் 43 பெயர்களை திருப்பி அனுப்பிவிட்டது. முன்னெப்போ தும் இல்லாத அளவிற்கு அரசாங்கம் உச்சநீதிமன்றத்துடன் மோதல் போக்கை அதிகரித் துள்ளது.உயர்நீதிமன்றங்களில் ஏராளமான நீதிபதிபணியிடங்கள் காலியாக இருக்கும் பின்ன ணியில்தான் இவ்வாறு உச்சநீதிமன்றத்திற்கும், அரசாங்கத்திற்கும் இடையே சச்சரவு ஏற்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 1,079. இதில் 478 இடங்கள் தான் நிரப்பப்பட்டிருக்கின்றன. இதன் பொருள், மொத்தம் உள்ள பணியிடங்களில் 55.7 சதவீதம் அள விற்குக் காலியாக இருக்கின்றன என்பதாகும்.
வெளிப்படைத்தன்மை கொண்ட முறை
மோடி அரசாங்கமானது, சட்டவிரோதமான முறையிலும், அரசியல்ரீதியாக சந்தேகிக்கக் கூடிய விதத்திலும் நீதிபதிகள் நியமனத்தில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது. உச்சநீதி மன்ற மூத்த நீதிபதிகள் (கொலிஜியம்) முன்மொழிந்திடும் நியமனங்களை நிராகரிக்கும் விதத்தில் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்திடும் முறையையே மாற்றி அமைத்திட மோடி அரசாங்கம்முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இந்தத்தரு ணத்தில் அரசாங்கம் 2014 அக்டோபரில் நிறை வேற்றிய தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணைய சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வாயமானது (Constitutional Bench) அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என்று கூறி,ரத்துசெய்துவிட்டதை நினைவுகூர்ந்திட வேண்டும். உச்சநீதிமன்றம், கொலிஜியம் முறையைஉறுதி செய்திட்ட அதே சமயத்தில், மேலும் வெளி ப்படைத்தன்மை வாய்ந்தவிதத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு ஒரு முறையை (Memorandum of Procedure) தயார் செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்டது.
நீதிபதிகள் நியமனத்தில் அரசாங்கமும் தலை யிடக்கூடிய விதத்தில் ஒரு ஷரத்தை வரைவு நீதிபதிகள் நியமன நடைமுறையில் சேர்த்திட வேண்டும் என்று அரசாங்கம் கோரி இருக்கிறது. உதாரணமாக, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் மூவர் அடங்கிய குழு பரிந்துரைத்திடும் பெயர்களை மட்டுமே கொலிஜி யம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியது. இவ்வாறு ஓய்வுபெற்ற தலைமைநீதிபதிகளின் குழுவை அரசா ங்கம் அமைத்திடும் என்றும் அந்த ஷரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு, யாரை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று கொலிஜியத்திற்குக் கட்டளையிடும் விதத்தில் அரசாங்கம் திருத்தம் கொண்டுவந்தது.
அரசின் ஆபத்தான திருத்தம்
அரசாங்கத்தின் சார்பில் முன்மொழியப்பட்ட மற்றுமொரு ஆட்சேபகரமான ஷரத்து என்ன வெனில், கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்படும் பெயர்களை அரசாங்கம் தேசியப் பாதுகாப்பு என்றபெயரில் நிராகரிப்பதற்கான உரிமை உண்டு என்றுதெரிவித்திருந்ததாகும். ஆர்எஸ்எஸ்/பாஜகபரிவாரங்களின் ‘தேசியவாதம்’ என்னும் கோட்பா ட்டிற்கு ஒத்துப்போகாதவர்கள் அனைவரையுமே, மதச்சார்பின்மையாளர்களையெல்லாம் ‘தேச விரோதிகள்’ என்று கருதுகிற அதன் ஒருதலைப்பட்ச கருத்திற்கு ஏற்ப, தங்கள் மதவெறி சித்தாந்தங்களுக்கு ஒத்துப்போகாத எவராக இருந்தாலும் அவர்களை நீதிபதிகளாக அனுமதித்திடக்கூடாது என்கிற இழிநோக்கம் அதில் புதைந்திருப்பதைக் காணமுடியும். இதற்காகத்தான் அது தேசப் பாதுகாப்பு என்கிற அச்சுறுத்தலை எழுப்பியிருக்கிறது.
அரசாங்கத்தின் சார்பில் சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் கொலிஜியம் அனுப்பிய 43 பெயர்களைத் திருப்பி அனுப்புவதற்கான முடிவை அரசாங்கம் ஏன் எடுத்தது என்பதற்கான காரணம் கூறப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு எதிராக ‘மிகமோசமான முறையில் உளவுத்துறை அறிக்கைகள் அனுப்பி இருந்ததாகவும்’ மற்றும் ‘அவர்களுக்கு எதிராக மிகவும் மோசமான புகார்கள் நிலுவையில் இருப்பதாகவும்,‘ அரசாங்கத்தின் தரப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி களில் மிக அதிக எண்ணிக்கையிலான நபர்களைஉளவுத்துறையானது நீதிபதி பதவிக்குப் பொருத்தமற்றவர்கள் என்று கருதியிருப்பது நம்பமுடியாத ஒன்று. பாஜக அரசாங்கத்தின் நோக்கம்மிகவும் தெளிவானது. தங்களுடைய அதிகாரப் பூர்வமான மதவெறி சித்தாந்தத்திற்கு உட்படாத எவரும் அல்லது தங்கள் இழிநோக்கத்திற்கு வளைந்துகொடுக்காத எவரும் நீதிபதிகளாக வருவதை அது ஏற்கத் தயாரில்லை என்பதேயாகும்.
தேவை நீதித்துறை ஆணையம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, உயர்மட்ட நீதித்துறையில் நீதிபதிகளை நியமனம்செய்வதில் கொலிஜியம் முறையானது பிழையான ஒன்று என்றும், திருப்தியளிக்கக்கூடிய நடை முறை அல்ல என்றும்தான் எப்போதும் கூறி வந்திருக்கிறது. நீதிபதிகளை நியமனம் செய்திடும் கடமையை நிறைவேற்றுவதற்கு, சுயேச்சையான மற்றும் விரிவான அடிப்படையில் அமைக்கப்படும் ஒரு தேசிய நீதித்துறை ஆணையம் தேவை என்றே அது கூறி வந்திருக்கிறது.இதுதொடர்பாக முன்பு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததற்கு மிக முக்கியக் காரணம், அதில் கொலிஜியத்தால் தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதி களை நிராகரித்திடும் உரிமை (veto powers) அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்டிருந்ததாகும்.
எனவே அத்தகைய குறைபாடுகள் அற்ற ஒரு தேசியநீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.இதனை நடைமுறைப்படுத்தும் வரையிலும், கொலிஜியம் முறைதான் அமலில் இருக்க வேண்டியிருக்கிறது. மோடி அரசாங்கம், நாட்டின் சுதந்திரத்தையும், அரசு அமைப்புகளின் ஒருமைப்பாட்டை யும் சீர்குலைத்திடும் விதத்தில் திட்டமிட்ட முறையில் செயல்பட்டுக்கொண்டு வருகிறது. நீதித்துறை யின் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை தங்கள் சித்தாந்தத்திற்கு ஏற்ப வசப்படுத்திடும் வேலைகளில் அது இறங்கியிருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. உச்சநீதி மன்றம், மீண்டும் அந்த 43 பெயர்களையே நீதிபதிகளாக நியமித்து அரசாங்கத்திற்கு அனுப்பினால், அதனை ஏற்பதைத்தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை.
அவ்வாறு அதனை ஏற்க அரசாங்கம் தவறுமேயானால், அது உயர்நீதித்துறையின் கட்டமைப்பையே கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கிய தாகவே எடுத்துக்கொள்ளப்படும். நீதித்துறை யை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரு வதற்காக மோடி அரசாங்கம் மேற்கொள்ளும் நாசகரமான முயற்சிகளை நாட்டிலுள்ள ஜனநாயக எண்ணம் கொண்டவர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை அது தெரிந்து கொள்ள வேண்டும்.
(டிசம்பர் 7, 2016)
(தமிழில்: ச. வீரமணி)


Saturday, December 10, 2016

வீரம் விளைந்தது




(‘பாவெல் இடைவிடாமல் உழைத்தான். அவன் நிம்மதியாக வாழ்வதில் நாட்டம் கொண்டவன் அல்ல; ஆர அமரக்கொட்டாவி விட்டுக்கொண்டு எழுந்திருப்பதையும், மணி பத்து அடித்தவுடன் நித்திரையின் அணைப்பை நாடுவதையும் அவன் விரும்பியவனல்ல. தானோ, பிறரோ, ஒரு வினாடியைக் கூட விரயம் செய்யக்கூடாது என்பது அவன் கருத்து’’)

‘‘மனிதனது மதிக்க முடியாத உடைமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழ முடியும். காலம் எல்லாம் குறிக்கோள் இல்லாமல் பாழாக்கிவிட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அளிக்காத வகையில் அவன் சீராக வாழ வேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழ வேண்டும்.
உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனிதகுலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக, நான் என் வாழ்வு முழுவதையும், சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்பொழுது கூறும் உரிமை பெறும் வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக் கூடுமாதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
’’நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி எழுதிய ‘‘வீரம் விளைந்தது’’ நாவலின் கதாநாயகன் பாவல் கர்ச்சாகின் சிந்தனையோட்டம் இது. இந்த நாவல் அநேகமாக நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கியின் சுய வரலாறுதான். அதனை ஒரு நாவலாக அவர் வடித்துத் தந்திருப்பார். அதுவும் எப்போது? தனக்குக் கண் தெரியாமல் போன பிறகு, பக்கத்து வீட்டிலிருந்த பெண்ணின் உதவியுடன் அக்கதையினை எழுதியிருப்பார்.இந்த நாவல் புரட்சி இயக்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கு மட்டுமல்ல, புரட்சி இயக்கம் குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கும் ஓர் அருமையான நாவலாகும்.இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே வாசகர்களின் குணநலனின் தன்மைக்கேற்ப அவர்களுடன் ஒன்றிவிடுவார்கள் என்பது உறுதி.
தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் எப்படித் திருக்குறளின் பாதிப்பு இருக்குமோ அதேபோன்று, சோவியத் இலக்கியங்கள் அனைத்திலும், வீரம் விளைந்தது நாவலின் பாதிப்பு நிச்சயமாக இருக்கும்.உண்மை மனிதனின் கதை நாவலின் கதாநாயகன், செஞ்சேனையில் விமானப் படைவீரனாக வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தவன், போரில் எதிரிகளின் விமானத்தால் ஏற்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டு தன் இரு கால்களையும் இழந்துவிடுவான். அவனுக்குத் தைரியம் ஊட்டுவதற்கு அக்கதையில் வரும் மேஜர் வீரம் விளைந்தது நாவலின் பாவல் கர்ச்சாகினைத்தான் உதாரணம் காட்டுவார்.
அதிகாலையின் அமைதியின் வரும் மங்கையர்களில் ஒருத்தி பயந்த சுபாவத்துடன் இருப்பாள். அவளுக்கு தைரியம் ஊட்டுவதற்காக அக்கதையின் நாயகன், அவளிடம் பாவல் கர்ச்சாகினைத்தான் உதாரணம் காட்டுவான்.இப்படி புரட்சி இயக்கத்தில் ஈடுபடும் ஊழியர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும், அவர்களுக்கு ஓர் உந்து சக்தியாக இந்த நாவல் இருந்தது, இருந்திடும்.ஒரு புரட்சியாளன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக பாவெல் வாழ்ந்தான்.
‘‘பாவெல் இடைவிடாமல் உழைத்தான். அவன் நிம்மதியாக வாழ்வதில் நாட்டம் கொண்டவன் அல்ல; ஆர அமரக்கொட்டாவி விட்டுக்கொண்டு எழுந்திருப்பதையும், மணி பத்து அடித்தவுடன் நித்திரையின் அணைப்பை நாடுவதையும் அவன் விரும்பியவனல்ல. தானோ, பிறரோ, ஒரு வினாடியைக் கூட விரயம் செய்யக்கூடாது என்பது அவன் கருத்து.
’’How the steel was tempered?” என்பது இதன் ஆங்கில மொழியாக்கத்தின் பெயராகும்.
இருப்புப்பாதை அமைத்துக் கொண்டிருந்த பாவெல் போன்று அர்ப்பணிப்பு மிகுந்த இளம் தோழர்களைக் குறித்த சொற்றொடர்தான் அது. ‘‘தோக்கரெவ், இந்த இளைஞர்கள் பத்தரை மாற்றுத் தங்கமென்று நீங்கள் கூறியது முற்றிலும் உண்மைதான். இங்குதான் எஃகு பதம் பெறுகிறது.!’’
அதேபோல நாவலில் ஒரு பகுதியில் ஒரு தொழிற்சாலையில் நடைபெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்திருப்பார். அந்த தொழிற்சாலையில் கட்சியில், வாலிபர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களும் வேலை செய்வார்கள், அல்லாதவர்களும் வேலை செய்வார்கள்.
கட்சி, வாலிபர் சங்க உறுப்பினர்கள் இதர உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாக இல்லாமல், அசட்டையாக வேலைக்கு வருவது, பொருள்களைக் கையாள்வது, உடைப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள். இதனைக் கண்டித்து பாவெல் ஆற்றும் உரையானது அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவைகளாகும்.
‘‘…. நான் இங்கு உணர்ச்சியூட்டும் பிரசங்கம் செய்ய விரும்பவில்லை. ஆனால் இந்த அஜாக்கிரதைக்கும் உதாசீனத்துக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும். இப்பொழுது வேலை செய்வதைவிடக் கவனமாகவும் கூடுதலாகவும் முதலாளிக்கு வேலை செய்ததாகப் பழைய தொழிலாளர்கள் ஒளிவுமறைவு இல்லாமல் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இப்பொழுது, நாமே எஜமானர்களாக இருக்கிறோம். எனவே மோசமாக வேலை செய்வதற்கு நியாயமே இல்லை.பீதின் அல்லது வேறொரு தொழிலாளியை மட்டும் குற்றம் கூறுவதில் பயனில்லை. நாம் அனைவருமே குற்றவாளிகள்தான். ஏனென்றால் இந்தக் கேட்டை முறையாக எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக சில சந்தர்ப்பங்களில் நாமே ஏதாவது ஒரு நொண்டிக் காரணம் கூறி, பீதின் போன்றவர்களை ஆதரித்து வாதாடுகிறோம்.’’
இதேபோல் நாவலைப் படிப்பவர் எவராக இருந்தாலும் அவர்கள் இன்புறுவதற்கும் அதே சமயத்தில் தங்களைச் சரிப்படுத்திக் கொள்வதற்கும், தங்களை உருக்கு போன்று பதப்படுத்திக் கொள்வதற்கும் இந்நாவல் துணை நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.இந்த நாவலில் எனக்குப் பிடித்தமான வரிகளில் முதன்மையான ஒன்றை இக்கட்டுரையின் முதல் பத்தியில் தந்துவிட்டேன். மற்றொன்று இயக்கத்தில் பலர் தன் உடல்நலம் குறித்து சிறிதும் கவலைப்படாது இயக்கத்திற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.
அவர்கள் குறித்து நி. ஒஸ்திரோவ்ஸ்க்கிய எழுதியுள்ள வரிகளுடன் இதனை நிறைவுசெய்கிறேன்.
‘‘… ஆனால் சில சமயங்களில் நாம் நமது சக்தியை விரயம் செய்யும் குற்றத்தைப் புரிகிறோம். பயனுறுதி யின்மையும் பொறுப்பற்ற போக்கும் எப்படி வீரத்தின் லட்சணங்களாக இருக்க முடியாதோ, அதேபோல சக்தியை வீண்செய்வதும் வீரலட்சணமாக இருக்க முடியாது. என் தேகாரோக்கியத்தைப் பற்றியே நான் அஜாக்கிரதையாக இருந்தேன்; அந்த முட்டாள்தனத்தை எண்ணி நான் என்னைக் கடிந்து கொள்கிறேன். அந்த அஜாக்கிரதைப் போக்கில் ஒரு வீரமும் இல்லை என்பதை இப்பொழுது உணர்கிறேன். அந்தக் கண்மூடித்தனம் இருக்காதிருந்தால், நான் மேலும் சில ஆண்டுகள் தாக்குப்பிடித்திருக்க முடியும். வேறுவிதமாகச் சொல்வதென்றால், இடதுசாரி வாதம் என்ற இளம்பருவ வியாதி, நம்முன் உள்ள பேராபத்துக்களில் ஒன்று.’’
ச. வீரமணி



Sunday, December 4, 2016

மதவெறி அபாயத்தை எதிர்த்து முறியடித்திடுவதற்கான உறுதியை மேலும் வலுப்படுத்திடுவோம்



டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இருண்ட  செயலினை அனுசரித்திடும் நாளாகும்.  முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், ஆர்எஸ்எஸ்-இந்துத்துவா வெறிக்கும்பல் பாபர் மசூதியை இடித்துத்தரைமட்டமாக்கியதன் மூலம் இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பின்மீதே கொடூரமான முறையில் தாக்குதலைத் தொடுத்தது. இந்த ஒரு செய்கையின் மூலம், அவை அரசமைப்புச் சட்டத்தையே கேலிக்கூத்தாக்கி,  அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற உருவரையை இடித்துத்தரைமட்டமாக்கிடுவதே தங்கள் நோக்கம் என்பதையும் அறிவித்தார்கள்.  
சங் பரிவாரக்கும்பல் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிட டிசம்பர் 6 தேதியைத் தேர்ந்தெடுத்தது என்பதும்கூட, ஏதோ ஒரு தேதி என்றமுறையில் மட்டும்  அல்ல.  டிசம்பர் 6 அன்றுதான் அரசமைப்புச் சட்டத்தின் சிற்பியான  டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் நினைவுதினம் நாடு முழுதும் வெகுவிமரிசையாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான மக்கள், (இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்,) மும்பை, தாதர் கடற்கரையில் அம்பேத்கரின் அஸ்தி தூவப்பட்ட இடத்தில் குழுமுவார்கள். 
பாபர் மசூதியைத் தகர்த்திட, சங்பரிவாரம் இந்தத் தேதியைத் தேர்ந்தெடுத்ததற்கு மிக முக்கியமான காரணம், அவை அம்பேத்கர் மீது மிகவும் ஆழமான முறையில் பகைமையைக் கொண்டிருந்ததாகும். டாக்டர் அம்பேத்கர் இந்து சட்டங்களில் அவர்கள் விரும்பாத விதங்களில் திருத்தங்களைக் கொண்டுவந்ததை முதலில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளாலும், அதன் துணை அமைப்புகளான இந்து மகா சபா, இந்துத்துவா பேர்வழிகளாலும் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அரசியல் நிர்ணய சபையில் கடைசியாக அரசமைப்புச் சட்டம் அரசமைப்புச்சட்டக் குழுவின் தலைவர் என்ற முறையில் அவரால் முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டபோது, ஆர்எஸ்எஸ் இயக்கமானது அதனை உடனடியாகக் கண்டிக்கத் தவறவில்லை.  அவர்களைப் பொறுத்தவரை அவர்களால் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரே தர்மசாஸ்திரம் என்பது மனு தர்மம் மட்டுமேயாகும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மக்களை அணிதிரட்டிட அது மேற்கொண்ட பிரச்சாரம்தான் நாட்டில் பல மாநிலங்களிலும், 1998இல் மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு பாஜகவை முன்னுக்குக் கொண்டுவந்தது. அப்போது அமைந்த வாஜ்பாயி அரசாங்கம்,  அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகளிலும் ஆர்எஸ்எஸ் ஆட்களை அமர்த்திடுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்தது. தங்களுடைய பிளவுவாத நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப, மதவெறித் தீயை விசிறிவிடக்கூடிய விதத்தில் இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் வரலாற்றை மாற்றி எழுதுவதற்கான வேலைகளிலும் இறங்கியது. 
பத்தாண்டுகளுக்குப் பின்னர், பெரும்பான்மையுடன் மக்களவையில் மோடி அரசாங்கம்ஆட்சிக்கு வந்தது.  இதன்பின்னர் இவர்கள் தங்களின் மதவெறி நிகழ்ச்சிநிரலை மேலும் மூர்க்கத்தனத்துடன் முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர்.  உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இந்துத்துவா சித்தாந்தவாதிகள் ஊடுருவத் தொடங்கினர். `வீட்டிற்குத் திரும்புவோம்(ghar vapsi)`, `புனித காதல்(love jihad)` மற்றும் `பசுவைப் பாதுகாப்போம் (gau raksha)` என்ற வேடங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக மிகவும் கொடூரமானமுறையில் தாக்குதல்களில் ஈடுபட்டனர். முஸ்லீம்களை பயங்கரவாதிகள் என்றும் தேசவிரோத சக்திகள் என்றும் முத்திரை குத்தினர். ஜனநாயக உரிமைகள் மீது எதேச்சாதிகாரமான தாக்குதல் தொடுக்கப்படுகிறது. அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் உரிமையும் இரக்கமின்றி நசுக்கப்படுகின்றன. நீதித்துறை நியமனங்களிலும் தலையிடுவதற்கு மிகவும் தீவிரமானமுறையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பத்திரிகை சுதந்திரமும் மிகவும் மோசமானமுறையில் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. 
இவ்வாறு பாபர் மசூதி தகர்ப்பு என்பது, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக இந்தியாவிற்கு எதிரான ஒரு நீண்டகால  யுத்தத்தின் தொடக்கமாகும்.  எனவே, டிசம்பர் 6 என்பது இவர்களின் மதவெறி நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு நாளாகவே அனுசரிக்கப்பட வேண்டும். மிகவும் விரிவான முறையில் மக்களை ஒன்றுபடுத்தி,  இவர்களின் எதேச்சாதிகார - மதவெறித் தாக்குதல்களை, எதிர்த்து முறியடித்திட, நம் உறுதியை மீளவும் புதுப்பித்துக்கொள்ள இந்த நாளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  நவீன தாராளமயம் மற்றும் பிளவுவாத மதவெறி ஆகிய இரண்டுக்கும் எதிராக, வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்களைக் கட்டி எழுப்பி இதனை வெற்றிகரமாகச் செய்து முடித்திட வேண்டும்.
(தமிழில்: ச. வீரமணி)
 

Saturday, December 3, 2016

நரேந்திர மோடியின் கொடுங்கோன்மை: டாக்டர் அமர்த்தியாசென்


டாக்டர் அமர்த்தியாசென்

பிரதமர் நரேந்திர மோடி, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது புத்திசாலித்தனமான செய்கையும் கிடையாது. மனிதாபிமானமுள்ள செய்கையும் கிடையாது.மோடியின் இந்நடவடிக்கையானது, கொடுங்கோன்மைமிக்கதும் எதேச்சதிகாரமானதும் ஆகும். கறுப்புப்பணத்தைக் கையாண்டிட இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுவதானது, அனைத்து இந்தியர்களும் சிரிக்கத்தக்க ஓர் நடவடிக்கையாகும்.
நவம்பர் 8 அன்று தொலைக்காட்சியில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி தோன்றி, இவ்வாறு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார்.புழக்கத்திலிருந்த ரூபாய் நோட்டுகளில் 86 சதவீத அளவிற்கு மதிப்புள்ள நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம், ரொக்க நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பிரதமர், இதனைச் சரிசெய்திட, ‘50 நாட்கள்’ ஆகும் என்றும், ‘ஊழல்’ மற்றும் ‘வரி ஏய்ப்பு’ ஆகியவற்றிற்கு எதிரான யுத்தத்தை மேற்கொண்டிருப்பதால் அதுவரைக்கும் கஷ்டத்தைத் தாங்கிக் கொள்ளுங்கள் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.மொத்தம் உள்ள கறுப்புப்பண அளவில் வெறும் 6 சதவீத அளவிற்குத்தான் நாட்டிற்குள் பணப் புழக்கத்தில் கறுப்புப்பணம் இருந்து வருகிறது. நிச்சயமாக அது 10 சதவீதத்திற்குள்தான் இருந்திடும்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததானது, சாதனை என்று பார்த்தோமானால் மிகமிகச்சிறிய அளவிற்குத்தான், ஆனால் இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அளவில் சீர்குலைவினை ஏற்படுத்தி இருக்கிறது. கறுப்புப்பணத்தைக் கருவறுக்க ஏதாவது செய்ய வேண்டும்தான்; ஆனால் அது புத்திசாலித்தனமாகவும், மனிதாபிமானத்துடனும் இருந்திட வேண்டும்.புதிய நோட்டுகள் இன்னமும் புழக்கத்திற்கு வராததால், வங்கிகள் ரூபாய் நோட்டுகள் இல்லாமல் திண்டாடுகின்றன. ஏடிஎம் மிஷின்கள் புதிய நோட்டுகளை வைக்கக்கூடிய அளவிற்கு இன்னமும் மாற்றியமைக்கப்படாமல் மூடிக் கிடக்கின்றன. கிராமப்புறங்கள் முறையான வங்கிச் செயல்பாடு இல்லாமல் துண்டித்துவிடப்பட்டுள்ளன.இதைக் கொடுங்கோன்மை என்று சொல்வேன். கொடுங்கோன்மை என்று சொல்வது ஏனென்றால், இது கரன்சி மீதான நம்பகத்தன்மையையே தகர்த்தெறிந்துவிட்டது என்பதால்தான்.
ரூபாய் நோட்டுகள் என்பவை பிராமிசரி நோட்டுகளாகும். அதாவது அரசாங்கம் மக்களுக்கு உறுதிமொழி கொடுக்கும் மதிப்பு மிக்க தாள்கள் ஆகும். எந்தவொரு அரசாங்கமும் அதனை மதித்திடவில்லை என்றால் அது மக்களுக்கு அளித்த உறுதிமொழியை மீறிய செயலாகும். திடீரென்று மக்களைப் பார்த்து அரசாங்கம் உனக்கு இந்த நோட்டுக்கு ரூபாய் தர மாட்டேன் என்று சொல்கிறது என்றால் அது கொடுங்கோன்மை இல்லாமல் வேறென்ன? நான் ஒன்றும் முதலாளித்துவத்தின் விசிறி அல்ல. முதலாளித்துவத்திற்கும் நம்பகத்தன்மைதான் (trust) திறவுகோலாகும். இந்த நடவடிக்கையானது அத்தகைய நம்பகத்தன்மைக்கு எதிரான ஒன்றாகும்.
முதலாளித்துவத்திற்குக் கூட மிகவும் அடிப்படையாக உள்ள பொருளாதாரத்தையே கீழறுத்திடும் அபாயம் இந்த நடவடிக்கையில் மறைந்திருக்கிறது. இவ்வாறான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழவில்லை என்றால், இன்று இதனை செய்த அரசாங்கம் நாளை இதனையே வங்கியில் உள்ள நோட்டுகளுக்கும் செய்ய முடியும். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் எதுவும் செல்லாது என்று கூறமுடியும். என்னுடைய சங்கடம் என்னவென்றால், இந்த நடவடிக்கையின் காரணமாக சட்டத்திற்கு உட்பட்டு நடந்துவருகிற பிரஜைகளும், வெள்ளைப் பணம் வைத்திருக்கிற சாமானிய மக்களும் கடும் துன்பங்களை அனுபவிக்கத் தள்ளப்பட்டிருப்பதுதான். அரசாங்கத்துடன் ஒத்துப்போகாதவர்கள் எல்லாம் தேசத்துரோகிகள் என்று கூறுவதற்கு 31 சதவீத மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பாஜக உரிமம் பெற்றதாகக் கூற முடியாது.
-(டாக்டர் அமர்த்தியாசென் என்டிடிவிக்கு
அளித்துள்ள பேட்டியிலிருந்து)

(தமிழில்: ச.வீரமணி)

‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’.__லெனின் பரிந்துரை செய்த புத்தகம்...


லெனின் பரிந்துரை செய்த புத்தகம்...
மாபெரும் நவம்பர் புரட்சியின் ஆரம்ப நாட்களை அற்புதமான விதத்தில் உயிர்த்துடிப்போடு சித்தரிக்கும் நூல் ஜான் ரீடு எழுதிய ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’.ஜான் ரீடு (1887 – 1920) – அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர், எழுத்தாளர், கட்டுரையாளர். ஜான் ரீடின் இந்நூல்தான் மனித குலத்தின் வரலாற்றில் புதிய சகாப்தத்திற்கு வழிகோலிய வெற்றிகரமான ரஷ்ய சோஷலிசப் புரட்சியைப் பற்றிய உண்மைகளை உலக மக்களுக்கு எடுத்துரைத்த முதல் நூலாகும்.

மாமேதை லெனின் இந்தப் புத்தகம் குறித்து இதன் அமெரிக்கப் பதிப்பின் முகவுரையில், ‘‘இந்தப் புத்தகத்தை அளவிலா ஊக்கத்தோடும், தளராத கவனத்தோடும் படித்தேன். அனைத்து உலகிலுமுள்ள தொழிலாளர்களுக்கு முழு மனதுடன் இப்புத்தகத்தைச் சிபாரிசு செய்கிறேன். பல லட்சக்கணக்கான பிரதிகளில் அச்சாகி இப்புத்தகம் வெளிவர வேண்டும். எல்லா மொழிகளிலும் பெயர்க்கப்பட வேண்டும் என்று நான் விரும்பும் புத்தகமாகும் இது. பாட்டாளி வர்க்கப் புரட்சி என்றால் என்ன? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன? இவற்றைப் புரிந்துகொள்வதற்கு, அக்டோபர் புரட்சியின் மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகளை உள்ளது உள்ளபடி உயிர்க் களையுடன் இந்நூல் விவரிக்கின்றது.
இந்தப் பிரச்சனைகள் விரிவாய் விவாதிக்கப்படுகின்றன, ஆனால் எவரும் இந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ முற்படுமுன் தமது முடிவின் உட்பொருளைச் சரிவர புரிந்து கொள்வது அவசியமாகும். சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தின் அடிப்படையான பிரச்சனையாகிய இதனைத் தெளிவுபடுத்த ஜான் ரீடின் புத்தகம் துணை புரியும் என்பதில் ஐயமில்லை.’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜான் ரீடு தமது ஒப்பற்ற நூலுக்கு அளித்த தலைப்பு ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ என்பதாகும். பெருவாரியான அந்நியர்கள் சோவியத் ரஷ்யாவைப் பற்றி முற்றிலும் வேறுவிதமான முறையில்தான் எழுதினார்கள். ஆனால் ஜான் ரீடு அந்த வகையைச் சேர்ந்தவர் அல்ல.
அவர் கருத்தில்லாத மேம்போக்கான பார்வையாளர் அல்ல. அவர் உளப்பூர்வமான புரட்சியாளர், கம்யூனிஸ்டு. நிகழ்ச்சிகளின் மெய்ப்பொருளை, அம்மாபெரும் போராட்டத்தின் உட்பொருளைப் புரிந்துகொண்டவர். இவ்வாறு இவர் புரிந்துகொண்ட காரணத்தால்தான் அவ்வளவு கூர்மையான பார்வையை அவரால் பெற முடிந்தது. இப்படிப்பட்ட பார்வை இல்லாதவர் எவராலும் ஒருநாளும் இம்மாதிரியான ஒரு நூலை எழுத முடியாது.போல்ஷிவிசம் குறித்து யார் என்ன நினைத்தாலும், ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியானது, மனிதகுல வரலாற்றின் மாபெரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும் என்பதிலும், போல்ஷிவிக்குகள் உயர்ந்தெழுந்தது உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதிலும் ஐயப்பாட்டுக்கு இடமில்லை.
பாரீஸ் கம்யூனது வீர வரலாற்றின் மிக நுண்ணிய விவரங்களை எல்லாம் தேடி வரலாற்றியலாளர்கள் எப்படி ஆவணங்களை அலசி ஆராய்கிறார்களோ, அதேபோல் அவர்கள் 1917 நவம்பரில் பெத்ரோகிராடில் என்ன நடைபெற்றது, எப்படிப்பட்ட மனப்பாங்கு மக்களை ஆட்கொண்டு இயக்குவித்தது, தலைவர்கள் எப்படிப்பட்டோராய் இருந்தார்கள், என்ன பேசினார்கள், என்ன செய்தார்கள் என்றெல்லாம் தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள். இதை மனதில்கொண்டுதான் தோழர் ஜான் ரீடு இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.சோவியத் புரட்சி குறித்து படிப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய மிக முக்கிய பிரச்சனை அதில்வரும் சில சொற்றொடர்கள் குறித்த உண்மையான பொருளைப் புரிந்துகொள்ள சிரமப்படுவதாகும்.

நரோத்னிக்குகள், போல்ஷ்விக்குகள், மென்ஷ்விக்குகள், செங்காவலர்கள் அல்லது செம்படையினர், வெண்காவலர்கள் அல்லது வெண்படையினர் போன்ற சொற்றொடர்களைப் புரிந்து கொள்ள சிரமப்படுவார்கள். எனவே, இவை குறித்து சிறுகுறிப்புகளை ஜான் ரீடு இந்நூலில் அளித்திருப்பார். சோவியத் சோஷலிசப் புரட்சி குறித்து அறிந்துகொள்ள ஆவலுடன் இருப்போருக்கு இது மிகவும் பயன் உள்ள விதத்தில் அமைந்திடும்.

அக்டோபர் புரட்சியா? நவம்பர் புரட்சியா? 1917 அக்டோபரில்தான் புரட்சி நடைபெற்றது. அது அக்டோபர் புரட்சிதான். எனினும் ரஷ்ய காலண்டர் பின்னர் 13 நாட்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, திருத்தப்பட்டதால் அக்டோபரில் நடைபெற்ற புரட்சி நவம்பர் 7 அன்று கொண்டாடப்படுகிறது.

ஜான் ரீடு இந்நூலை எழுதி வருகையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அவர் சேகரித்திருந்த விவரப்பொருள்களை பறிமுதல் செய்ய முயற்சித்தது. கூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டர்கள் ஜான் ரீடின் பதிப்பாளரது அலுவலகத்தைத் தொடர்ச்சியாக ஆறு தரம் சூறையாடி புத்தகக் கையெழுத்துப் பிரதியைத் திருடிச் சென்று அழித்துவிட முயன்றார்கள். எல்லா இடையூறுகளையும் இன்னல்களையும் மீறி ஜான் ரீடின் ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ 1919இல் அமெரிக்காவில் வெளிவந்தது, பின்னர் சோவியத் யூனியனிலும் உலகம் முழுவதும் பல மொழிகளிலும் வெளிவந்தது.மனிதகுல வரலாற்றிலே ஒரு புதிய சகாப்தத்தை, பாட்டாளி வர்க்கப் புரட்சிகளின் சகாப்தத்தைத் துவக்கி வைத்த ரஷ்யாவின் வெற்றிகர, சோசலிசப் புரட்சியினது உண்மைச் சித்திரத்தை உலகுக்கு அளிப்பதற்காக வெளிநாட்டிலே வெளியாகிய முதல் நூல் இதுவாகும். இதனை நாமும் படித்திடுவோம். மற்றவர்களையும் படிக்க வைப்போம்.

ச.வீரமணி


ஊனமுற்றோருக்கான ஒதுக்கீட்டை 5 சதவீதத்திலிருந்து குறைத்திடாதே


ஊனமுற்றோருக்கான ஒதுக்கீட்டை 5 சதவீதத்திலிருந்து குறைத்திடாதே
தில்லியில் இன்று ஊனமுற்றோர்க்கான அமைப்புகளின் மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டம்
புதுதில்லி, டிச. 3-
ஊனமுற்றோர் தினமான இன்று (சனிக்கிழமையன்று), ஊனமுற்றோர்க்கான பல்வேறு அமைப்புகளின் சார்பில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டம் தலைநகர் புதுதில்லியில் நடைபெற்றது. ஊனமுற்றோர் உரிமைகளுக்கான சட்டமுன்வடிவில் ஊனமுற்றோருக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பது 4 சதவீதம் என்று குறைத்திடக் கூடாது என்பதுடன் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இப்பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு விதங்களில் ஊனமுற்றோர்கள் இப்போது ஸ்தாபன ரீதியாகத் திரண்டு, தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில ஆண்டுகளாக வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன் தாக்கத்தின் காரணமாக மத்திய அரசாங்கம் 2014ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகள் குறித்த சட்டமுன்வடிவைக் கொண்டு வந்தது. ஆனால் இதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை ஊனமுற்றோர் அமைப்புகள் சுட்டிக்காட்டி கடந்த ஈராண்டு காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தின. இதன் காரணமாக இப்போது அரசு இந்தச் சட்டமுன்வடிவில் 197 திருத்தங்களைக் கொண்டுவந்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்காக, சமர்ப்பித்துள்ளது. ஆயினும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் காரணமாக எழுந்துள்ள பிரச்சனை காரணமாக மாநிலங்களவை இன்னமும் தன் இயல்பான நடவடிக்கைகளைத் தொடரமுடியவில்லை. இந்தத் தருணத்தில் இப்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டமுன்வடிவினைக் கண்ணுற்ற சமயத்தில் இதற்குமுன் ஊனமுற்றோருக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு தந்திட வேண்டும் என்பது 4 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது என்பதும், மேலும் வேலைநியமனம் செய்திடுவோர் வேலைக்குச் சேரும் நபரின் ஊனம் தங்கள் நிறுவனத்தின் வேலைக்குக் குந்தகம் விளைவிக்காது என்று திருப்தி கொள்ளவில்லையென்றால் அவரை வேலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பது போன்று ஒரு விலக்கக் கூறும் (proviso) இருப்பதையும் ஊனமுற்ற அமைப்புகள் கண்டுள்ளன. எனவே இந்த இரண்டும் கூடாது என்றும், முன்பு இருந்தது போலவே ஊனமுற்றோர் அனைவருக்கும் 5 சதவீதம் வேலைவாய்ப்பிலும், உயர் கல்வி நிலையங்களில் சேர்வதற்கு ஒதுக்கிட வேண்டும் என்றும், வேலையளிப்பவருக்குத் தந்துள்ள இத்தகைய சலுகையை ரத்து செய்திட வேண்டும் என்றும், இதனை அனுமதித்தால் இதனைப் பயன்படுத்திக்கொண்டு எந்தவொரு ஊனமுற்றோரும் வேலைக்குச் செல்ல முடியாது என்று தாங்கள் கருதுவதாகவும் ஊனமுற்ற அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் கருதுகிறார்கள்.
எனவே, நிறைவேற்றப்படவிருக்கும் சட்டமுன்வடிவில் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீடு 5 சதவீதமாக இருக்க வேண்டும் என்பதையும், வேலையளிப்பவர்களுக்குக் கொடுத்துள்ள விருப்புரிமையை ரத்து செய்திட வேண்டும் என்றும்  வலியுறுத்தி, சனிக்கிழமையன்று ஊனமுற்றோர் அமைப்புகளின் சார்பில் புதுதில்லி, நாடாளுமன்ற வீதியில் மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்ட நடைபெற்றது.
இப்பேரணி/ஆர்ப்பாட்டத்தில் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையைச் சேர்ந்த முரளிதரன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில தலைவர் பா. ஜான்ஸி ராணி உட்பட பலர் உரையாற்றினார்கள்.
(ந.நி.)

Thursday, December 1, 2016

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்



பிஎஸ்என்எல் நிறுவனத்தை தகர்த்திட மத்திய அரசின் இழிமுயற்சிகளைக் கண்டித்து
பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்
புதுதில்லி, டிச. 2-
மத்திய அரசு, தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் மொபைல் டவர்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திட மேற்கொண்டுள்ள  இழிமுயற்சிகளை கண்டிக்கும் விதத்தில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின்கீழ் இயங்கிடும் அலுவலர்களும், ஊழியர்களும் வரும் 2016 டிசம்பர் 15 அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளவிருக்கிறார்கள்.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி. அபிமன்யு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் கூறப்பட்டிருப்பதாவது:
“2016 டிசம்பர் 15 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் ஒட்டுமொத்த  ஊழியர்களும், அலுவலர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளார்கள். அரசாங்கம், பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தகர்த்திட மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிராக இந்தப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. இதுதொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 65 ஆயிரம் மொபைல் டவர்களை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக ஒரு குறிப்பினை அனுப்பி இருக்கிறது.  அரசின் இந்த நடவடிக்கையை பிஎஸ்என்எல் நிறுவனத்தில் செயல்படும் அனைத்து ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்களும் எதிர்த்துள்ளன.
பிஎஸ்என்எல் நிறுவனம்தான் பொதுத்துறை நிறுவனத்தில் முழுக்க முழுக்க 100 சதவீதம் அரசு நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விஎஸ்என்எல் ஏற்கனவே தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. எம்டிஎன்எல் நிறுவனத்தில் 46.5 சதவீதப் பங்குகள் ஏற்கனவே தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இப்போது அதேபோன்று பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் தனியாரிடம் வாரை வார்த்திட அரசாங்கம் துடித்துக் கொண்டிருக்கிறது. மொபைல் டவர்களுக்கு என்று ஒரு துணை அமைப்பு ஏற்படுத்த இருப்பது, பின்னர் அதனைத் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கான சூழ்ச்சியே தவிர வேறல்ல.
இதுதொடர்பாக அரசாங்கத்தின் இனிப்பு கலந்த வார்த்தைகளைக் கேட்க ஊழியர்கள் தயாரில்லை. பொதுத்துறை நிறுவனங்களை எப்படி எப்படியெல்லாம் தனியாரிடம் தாரை வார்த்திடலாம் என்பதற்காக நிட்டி ஆயோக்  ஒரு வரைவினை தயார்செய்து அரசாங்கத்திற்குத் தந்திருப்பது ஊரறிந்த ரகசியம். இன்றைய நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பொறுத்தவரை மொபைல் டவர்கள் அதன் உயிர்நாடியாகும். அதனை பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து பறித்துவிட்டால், பின் பிஎஸ்என்எல் இயற்கையாகவே மரணித்துவிடும். எனவே, அரசின் இந்நடவடிக்கையை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்துத் தொழிற் சங்கங்களும் எதிர்த்திடத் தீர்மானித்திருக்கின்றன.  
எனவேதான் அரசின் இந்த சூழ்ச்சியான நடவடிக்கையை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்திட அனைத்து சங்கங்களும் தீர்மானித்துள்ளன.”
இவ்வாறு பி.அபிமன்யு அறிக்கையில் கூறியுள்ளார்.
(ந.நி.)