Sunday, October 30, 2016

மோடியின் ராஜ்ஜியத்தில் வேலையின்மை



இந்தியா, வேலைவாய்ப்பை உருவாக்கு வதில் ஓர் ஆழமான நெருக்கடியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் நல வாரியம் (Labour Bureau) சமீபத்தில் வேலை வாய்ப்பு-வேலைவாய்ப்பின்மை குறித்து ஓர்ஆய்வினை நடத்தி அறிக்கையினை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் வேலை யில்லாத் திண்டாட்டம் கடந்த ஐந்தாண்டுகளில் இப்போது மிக அதிகமாக இருப்பதாகவும், உழைப்புசக்தியை தரக்கூடிய 15வயதுக்கு மேற் பட்டவர்களில் 5 சதவீதத்தினர் வேலையின்றி வாடுவதாகவும் தெரிவித்துள்ளது. மூவரில் ஒருவர் ஓராண்டுக்குக் கீழேதான் வேலை பார்ப்பதாக அது தெரிவித்துள்ளது.
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 சதவீதம் என்பது 2 கோடியே 30 லட்சம் பேர்களாகும். மேலும், தகுதிக்குக் குறை வான வேலையில் இருப்பவர்கள் (underemployed) 35 சதவீதத்தினர். அதாவது இது சுமார் 16 கோடி பேர்களாகும்.
தொழிலாளர் நல வாரியத்தின் மற்றுமோர் ஆய்வறிக்கை, தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு அல்லது வேலைவாய்ப்பின்மை என்ன என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. வேலை வாய்ப்பை மிகவும் முனைப்பாகத் தந்து கொண்டிருந்த எட்டு தொழில்பிரிவுகளில் -- அதாவது, ஜவு ளித்தொழில், தோல் பதனிடுதல், உலோகங்கள், மோட்டார், ரத்தினக்கற்கள் மற்றும் தங்க நகை ஆபரணங்கள், போக்குவரத்து, தகவல்தொழில்நுட்பம், கைத்தறி மற்றும் விசைத்தறி என்னும் எட்டு தொழில்பிரிவுகளில் -- வேலைவாய்ப்பு குறித்த காலாண்டு ஆய்வினை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அவ்வாறு 2015 ஜூலை - செப்டம்பருக்கான காலாண்டிற்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் 1,34,000 வேலைகள் மட்டுமே உருவாக்கப் பட்டிருப்பதாகக் கண்டிருக்கிறது. இது மிகவும்குறைவான ஒன்றாகும். 2009 முதல் 2011 வரை யிலான ஆண்டுகளில் ஒவ்வோர் காலாண்டிலும் சுமார் 3 லட்சம் வேலைகள் உருவானது என்பதுடன் ஒப்பிட்டால் இப்போது ஏற்பட்டுள்ள சரிவினை புரிந்து கொள்ள முடியும்.
மோடி அரசாங்கத்தால் ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் வேலையின்மை வளர் ச்சிக்கே இட்டுச் சென்றிருக்கிறது. 2012-13ஆம் ஆண்டிற்கும் 2015-16ஆம் ஆண்டிற்கும் இடையே, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒவ்வொரு ஒரு சதவீத வளர்ச்சிக்கும், வேலைகளில் உயர்வு என்பது வெறும் 0.20 சதவீதம் மட்டுமேயாகும். மோடி அரசாங்கத்தின் தோல்விகளிலேயே மிகப்பெரிய படுதோல்வி, எதுவெனில் இதுவரை வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறி இருப்பதே யாகும்.
பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில், அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு, ஒவ்வோராண்டும் இளைஞர்களுக்காக ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தது. மோடியின் மிகவும் பிரியமான கோஷமான, ‘இந்தியாவில் உற்பத்தி செய்க (Make in India)’ என்னும் கோஷம், வெறும் வெற்றுக் கோஷம் என்பது மிகவேகமாக மெய்ப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொது முதலீடு குறித்து நிதி அமைச்சர் என்னதான் வாய்ச்சவடால் அளித்திருந்தபோதிலும், அநேக மாக அவ்வாறு எந்த முதலீடும் இல்லை.
தனியார் துறையிலும் முதலீடு என்பது மிகமிகக் குறைவு. தொழில் உற்பத்தியும் கடுமையாக வீழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்களிலும் முறையே 2,5 சதவீதம், 0.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் வேலைவாய்ப்பு வளர்ச்சியை முடக்குவதற்கான பங்களிப்பினைச் செய்திருக்கிறது. கடந்த மூன்றாண்டு காலமாக மத்திய அரசு சமர்ப்பித்த மூன்று பட்ஜெட்டுகளிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்டிருக்கிற வளர்ச்சியின் அளவிற்குக் கூட உண்மையான வளர்ச்சி என்பது இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசின் பங்கு குறைந்து கொண்டே வந்திருப்பதால், உள்நாட்டுத் தேவை மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மோடி அரசாங்கம்தன்னுடைய ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் செலவினங்களை வெட்டியது. மறைமுக வரிகளை உயர்த்தி யது. (இது மறைமுகமாக செயற்கையான விதத்தில்மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை அதிகரித்துக் காட்டியது.) இவ்விரு காரணிகளும் மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்துள் ளன. மோடி அரசாங்கமானது வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு, தொழிலாளர் நலச் சட்டங்கள் குந்தகம் விளைவிப்பதாகக் குறை கூறிக் கொண்டிருக்கிறது. எனவே, இப்போது அது வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்குப் பதிலாக, தொழிலாளர் நலச் சட்டங்களை, தொழிலாளர் விரோதசட்டங்களாகவும், முதலாளிகள் நலச் சட்டங் களாகவும் மாற்ற நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. விவசாய நெருக்கடியும், வேலையில்லாத் திண்டாட்டமும் இணைந்து பல மாநிலங்களில் சமூகப் பதற்ற நிலைமை மற்றும் மக்களிடையே அதிருப்தி ஆகியவற்றையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு சாதியினர் தங்கள் சாதியினருக்கு அதிகமான அளவில் இட ஒதுக்கீடு வேண்டும் என்றுபோராட்டத்தில் இறங்கியுள்ளனர். அரசுத்துறை களில் மிகமிக அரிதாக உள்ள வேலைவாய்ப்புகளே இத்தகைய போராட்டங்களின் விளைவாகும்.எனவே, மோடி அரசாங்கத்தின் வேலை களைக் கொல்லும் கொள்கைகளுக்கு எதிராகவும், வேலைவாய்ப்பை உருவாக்கும் விதத்திலும், விவசாய வளர்ச்சி, பொருளாதாரத்தில் தேவைகளை அதிகரிக்கும் விதத்திலும், தொழிற் சாலைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதத்திலும் மாற்றுக்கொள்கைகளை அமல் படுத்த வேண்டும் என்பதற்காக போராடுவது இன்றைய தினம் கட்டாயமாக மாறி இருக்கிறது.
(அக்டோபர் 25, 2016)
தமிழில்: ச. வீரமணி


No comments: