(2)
(முன்கூட்டி எச்சரிக்கை
செய்கிறார்கள் என்பதன் பொருள் தாக்குவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்கிறார்கள் என்பதாகும்.)
2014 பொதுத் தேர்தல்கள் நடைபெற்ற சமயத்திலேயே, இப்பகுதியில் நாம், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, ‘வளர்ச்சி’ என்றும் ‘குஜராத் மாடல்’ என்றும் பல்வேறு தேர்தல்
தாயத்துக்களை அணிந்திருந்த போதிலும், எதார்த்தத்தில் அவை மதவெறித் தீயைக் கூர்மைப்படுத்தும் பிரச்சாரத்தையே
மேற்கொண்டன என்றும் அவற்றை மூடிமறைக்கும் முகமூடி
களாகவே மேற்படி தாயத்துக்களை அவை பயன்படுத்திக் கொண்டன என்றும் பல தடவைகள், சுட்டிக்காட்டினோம். காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ-2 அரசாங்கத்தின் மீது
மக்களிடம் விரிவான முறையில் அமைந்திருந்த வெறுப்பு உட்பட பல்வேறு காரணிகள் இருந்தபோதிலும், அவற்றையெல்லாம்விட
அதிகமாக, ‘இந்து வாக்குவங்கி’யை மதவெறி அடிப்படையில் ஒருமுகப்படுத்தி, நாணமற்ற முறையில் அது
மேற்கொண்ட ‘வாக்கு வங்கி’ அரசியல்தான் தேர்தல்
ஆதாயங்களுக்கு மிகவும் பிரதான காரணியாகும். எனவேதான், பாஜக இந்த வெற்றிக்குப்பிறகு, (மொத்தம் வாக்களித்தவர்களில்
31 சதவீத அளவிற்குத்தான்
மக்கள் அதற்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றபோதிலும் கூட) தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயக
இந்தியக் குடியரசை,
ஆர்எஸ்எஸ்
இயக்கத்தின் தத்துவார்த்த அடிப்படையில்
அவர்களின் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றிட மிகவும் மூர்க்கத்தனமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகிறது.
ஆர்எஸ்எஸ் என்னும் இயக்கத்தின்
ஓர் அரசியல் அங்கம்தான் பாஜக. இந்த அரசாங்கத்தின் முதல் நூறு நாட்கள் முடிவதற்கு முன்பேயே, இவர்கள் தங்களின் மதவெறி
நிகழ்ச்சிநிரலை மிக வேகமாகக் கட்டவிழ்த்து விடத் துவங்கி விட்டார்கள். தேர்தல் சமயத்தில் வளர்ச்சி குறித்து அவிழ்த்துவிட்ட வாக்குறுதிகள்
எல்லாம் காற்றோடு காற்றாகப் போய்விட்டன. இவர்கள் கூறியதையெல்லாம் நம்பி இவர்களுக்கு
வாக்களித்த அப்பாவி மக்களின் நம்பிக்கைகள் எல்லாம் தகர்ந்து தரைமட்டமாகிவிட்டன. ஆட்சிப்பொறுப்பு ஏற்றவுடனேயே இந்த அரசாங்கம் டீசல், சமையல் எரிவாயு போன்ற
பெட்ரோலியப் பொருட்களின் விலைகளையும், ரயில் கட்டணங்களையும்
செங்குத்தான விதத்தில் உயர்த்திவிட்டது. இவர்களின்
பட்ஜெட் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும்
எவ்விதக் கூச்ச நாச்சமுமின்றி நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை இவர்கள் பின்பற்றுவதை
வெளிப்படுத்து கின்றன. சர்வதேச நிதி மூலதனத்தின்
ஆதரவுடன் இந்திய கார்ப்பரேட்டுகள் மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அளப்பரிய அளவிற்கு
ஆதரவு அளித்த பின்னணியில்,
இதுபோன்றதொரு நிலைமை ஏற்படுவது இயற்கையாகவே தவிர்க்கமுடியாத ஒன்றுதான். எனவேதான், நாட்டு மக்கள் நலன்களையும் நாட்டின் இறையாண்மையும் காவு கொடுத்து அந்நிய முதலீடுகளுக்கு
அதிக அளவில் வாய்ப்புகளையும்,
இந்தியக் கார்ப்பரேட்டுகளுக்கு மிகப்பெரிய அளவில் சலுகைகளையும் அளித்து வருகிறார்கள்.
பாஜக தன்னுடைய மதவெறி
நிகழ்ச்சி நிரலை அடக்கி வாசிக்கும் என்று கூறி தேர்தல் பிரச்சாரத்தின்போது அதனை ஆதரித்தவர்களில்
பலர், புதிய அரசாங்கம் ஆட்சிப்
பொறுப்பேற்ற ஒருசில வாரங்களுக்குள்ளேயே, தாங்கள் வஞ்சிக்கப் பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்து இப்போது அமைதியாகி
விட்டார்கள். வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரல் - அரசியலமைப்புச் சட்டத்தின்
370ஆவது பிரிவை ரத்து
செய்தல், பொது சிவில் சட்டம், அயோத்தியில் தாவாவுக்குரிய
இடத்தில் ராமர் கோவில் கட்டுதல் - அனைத்தும் கேபினட் அமைச்சர்களால் பேசப்படும் சங்கதிகளாகிவிட்டன.
பாஜக வெற்றியைத் தொடர்ந்து,
‘இந்து ராஷ்ட்ரம்’
நிறுவப்படுவது தொடங்கிவிட்டது என்று ஒரு கோவா அமைச்சர் பேசியிருக்கிறார்.
நாட்டின் பல பகுதிகளில், வகுப்புவாத பதட்ட நிலைமைகள்
முடுக்கிவிடப்பட்டுள்ளன. பல இடங்களில் மூர்க்கத்தனமான முறையில் கலகங்களும் அப்பாவி
மக்கள் கொல்லப்படுவதும் நடந்திருக்கின்றன. தேர்தலுக்கு முன்பே முசாபர்நகரில் மதவெறித்
தீ கொளுந்துவிட்டு எரிந்து பலர் கொல்லப்பட்டதையும், காயங்கள் அடைந்ததையும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளைத் துறந்து வெளியேற்றப்பட்டதையும்
இப்பகுதியில் முன்பு குறிப்பிட்டிருக்கிறோம்.
2013இல் தேர்தல் நடைபெற்ற
சமயத்தில், நாடு முழுதும் வகுப்புவாத
வன்முறையின் கீழ் 823 நிகழ்வுகள் நடந்துள்ளன
என்று உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில்
மட்டும், 247 வன்முறை வெறியாட்டங்கள்
நடந்துள்ளன. இதன் பின்னணியில்தான் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவை இடங்களில்
பாஜக 71 இடங்களையும் அதன்
கூட்டணிக் கட்சிகள் 2 இடங்களையும் வென்றுள்ளன.
தேர்தலுக்கு முன் சில மாதங்களில் நாடு முழுதும் நடைபெற்ற வகுப்புவாத வன்முறை சம்பவங்களில்
இம்மாநிலம் உச்சத்தில் இருந்தது. 2014இல் ஏப்ரல் - ஜூன்
மாதங்களில் நாடு முழுதும் 149 வகுப்புவாத மோதல்கள்
நடைபெற்றுள்ளன. சட்டமன்றத் தேர்தல்களை விரைவில் சந்திக்கவிருக்கும் மகாராஷ்ட்ராவிலும், அதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திலும்
இத்தகைய மோதல்கள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன.
தில்லியில் புதிய அரசாங்கம்
ஆட்சிப் பொறுப்பை ஏற்ற, மே 16க்குப் பின், கடந்த பத்து வாரங்களில், உத்தரப் பிரதேசத்தில்
மட்டும் வகுப்புவாத தன்மை கொண்ட 605 நிகழ்வுகள் நடந்துள்ளதாக, அதிகாரபூர்வ புள்ளி
விவரங்களை ஆதாரமாகக் கொண்டு,
தேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மிக விரைவில் சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெறக்கூடிய
12 சட்டமன்றத் தொகுதிளைச்
சுற்றி இந்நிகழ்வுகளில் மூன்றில் இரண்டு பங்கு நடைபெற்றிருக்கிறது என்பது குறித்துக்
கொள்ளப்பட வேண்டியவைகளாகும். இதேபோன்றே பீகாரிலும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெறவிருக்கும்
10 தொகுதிகளில் வன்முறை
சம்பவங்கள் நடந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியில்
அமர்ந்தபிறகு, பாஜகவானது தன்னுடைய
“அனைத்தும் நன்றாகவே
நடக்கிறது’’ என்பதுபோன்ற முழக்கங்களுக்கு
விடைகொடுத்துவிட்டு,
தங்கள் தேர்தல் ஆதாயங்களை மேலும் அதிகரித்துக்கொள்ளக்கூடிய விதத்தில் ஆர்எஸ்எஸ்-இன் ஆணிவேர்களான மதவெறித்
தீயைக் கூர்மைப்படுத்தும் வேலையில் மிகவும் கூச்சநாச்சமின்றி இறங்கிவிட்டது.
இத்தகைய வகுப்புவாத
பதட்டநிலைமைகளைத் தூண்டிவிடக்கூடிய விதத்தில் வேறு சில “சமூக மூலக்கூறுகளும்’’ இருக்கின்றன. முசாபர்நகர் கலவரங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக ஜாட்
இனத்தவரை நிறுத்தியதைப் போல,
சஹரான்பூர் கலவரங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக சீக்கியர்களை நிறுத்தி இருக்கின்றன.
இடைத்தேர்தல்களின்போது பகுஜன் சமாஜ் கட்சி ஒதுங்கி இருந்த சமயத்தில், பாஜக-வானது தலித்துகளின்
ஆதரவினைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்சிராம்
1980களின் பிற்பகுதிகளில், முஸ்லீம்களையும் தலித்துகளையும்
ஒரே குடையின்கீழ் கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்துதான் அக்கட்சி மாநில அரசாங்கத்தில்
அமர முடிந்தது. தாங்கள் வெற்றி பெற வேண்டுமானால் இந்த ஒற்றுமை தகர்க்கப்பட வேண்டும்
என்பதை பாஜக நினைத்தது. குறிப்பாக மேற்கு உத்தரப்பிரதேசத்தில் இதனைச் செய்திட அது முனைந்தது.
நாட்டு மக்கள் மத்தியில் நிலவும் சமூக நல்லிணக்கத்தை அழிப்பது நாட்டின் நாட்டு மக்களின்
ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரிய அளவில் அழிவினை உண்டாக்கும். ஆயினும்
ஆர்எஸ்எஸ்/பாஜக, நாட்டில் மக்கள் மத்தியில் நிலவும் இத்தகைய சமூக நல்லிணக்கத்தினை, மனச்சான்றின் உறுத்தல்
எதுவுமின்றி, தங்கள் தேர்தல் மற்றும்
அரசியல் ஆதாயங்களுக்காக அழித்தொழித்திடும் வேலைகளில் இறங்கி இருக்கிறது.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கூட்டங்களில்
தலைவர்கள் ஆற்றும் உரை கலகத்தைத் தூண்டக்கூடிய விதத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. சென்ற வாரம் இந்தூரில் உரையாற்றிய விசுவ இந்து பரிசத் தலைவர் ஒருவர் முஸ்லீம்கள்
2002 குஜராத்தை மறந்திருக்கலாம், சென்ற ஆண்டு நடந்த
முசாபர்நகர் கலவரங்களை நன்கு அறிந்திருப்பார்கள் என்று பேசியிருக்கிறார். “அனுமானின் வாலில் நீங்கள் தீ வைப்பீர்களானால், இலங்கை எரியும்,’’ என்றும் அவர் தன் பேச்சின்போது
மேலும் மிரட்டியிருக்கிறார்.
இவ்வாறு இவர்களின்
சமிக்ஞைகள் மிகவும் தெளிவானவை. முன்கூட்டி எச்சரிக்கை செய்கிறார்கள் என்பதன் பொருள்
தாக்குவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்கிறார்கள் என்பதாகும். இவ்வாறு இவர்கள் மேற்கொள்ளும்
மதவெறி நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திட, நாட்டுப்பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியரும் கிளர்ந்தெழுந்திட வேண்டும்.
இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் இதுகாறும் பின்னிப்பிணைந்து உருவாக்கப்பட்டுள்ள நம்
நாட்டின் பல்வேறு இன,
பல்வேறு மத, பல்வேறு சமூக வலைப்பின்னலை
பலவீனப்படுத்தி, சிதறடித்திடும். அதனை
அனுமதித்திடக் கூடாது. அத்தகைய அவர்களின் முயற்சிகளை நாம் அனைவரும் வலுவானமுறையில்
ஒன்றுபட்டு நின்று முறியடித்திடுவோம்.
(ஆகஸ்ட் 11, 2014)