Tuesday, September 2, 2014

மோடி “மோகம்’’ குறைந்து வருகிறது!


பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்

மோடி அரசாங்கம் நூறு நாட்களை நிறைவு செய்வதற்கு எட்டு நாட்களுக்கு முன்னதாகவே, பீகார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பெரிய பின்னடைவை பாஜக, ஆர்எஸ்எஸ் சந்தித்துள்ளன. தேர்தல் நடைபெற்ற 18 இடங்களில், பாஜக வெறும் பத்து இடங்களி லேயே வெற்றி பெற்றுள்ளது. இதற்குமுன் இத்தொகுதிகளில் 16 இடங்கள் பாஜகபெற்றிருந்தது. 2014 பொதுத் தேர்தலு டன் ஒப்பிடும்போது, பீகாரில் முன்பு10ல் எட்டு இடங்களைப் பெற்றிருந்தது. இப் போது அவற்றில் 4 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதுவும் மிகவும் குறைந்த வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளது. உதாரணமாக, பங்கா தொகுதியில் வெறும் 711 வாக்குகளே கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

மாறாக, ஐக்கிய ஜனதா தளம் பர்பத்தா தொகுதியில் சுமார் 67 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மூன்று தொகுதி களுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக முன்பு பெற்றிருந்த ஒரு தொகுதியை இழந்துவிட்டது. அதேபோன்று கர்நாடகாவிலும் அது பெற்றிருந்த ஒரு தொகுதியை இழந்து விட்டது. இவை அனைத்தும் மோடி மோகம்’’ குறைந்து வருவதையும், பொதுத்தேர்தலின்போது இருந்த செல்வாக்கு இப்போது சரிந்து வருவதையுமே புலப் படுத்துகின்றன. மக்களின் மனதில் ஆட்சியாளர்கள் குறித்து தீர்மானகரமான முறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதையே இவை தெளிவு படுத்துகின்றன. பெரிய ஊடகங்கள் மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதை ஒப்புக் கொண்ட போதிலும், “மக்களின் விருப்பம் குறித்து முடிவு எடுப்பதற்கு இது தருணம் அல்ல’’ என்றும் இந்த முடிவுகளை வைத்து மட்டும் அதிகம் கூறிட முடியாது’’ என்றும் கூறி சமாளிக்கின்றன.
இது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கதல்ல. மோடி சுனாமியை’’ ஏற்படுத்திட முன்னணியில் நின்றவர்கள் இந்திய கார்ப்பரேட்டுகளும் அவர்களின் ஊடகங்களும் என்பதை நாம் மறந்துவிட முடியாது. பொதுத் தேர்தல் முடிந்து ஒரு சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் ஏற் பட்டிருக்கும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள அவர்கள் விரும்ப மாட்டார்கள்தான். பிரபல தேசிய நாளேடு ஒன்று தன் தலையங்கத்தில், “இடைத் தேர்தல் முடிவுகள் எதிர்கால அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள் எப்படி உருவாகப் போகிறது என்பதைக்காட்டும் அறிகுறி,’’ என்று வர்ணித்திருக்கிறது. (தி டைம்ஸ் ஆப் இந்தியா, ஆகஸ்ட் 26, 2014)

மற்றொரு நாளேடும், ஈசாப் கதைகளை எழுதியவர் கூறியிருப்பதைப் போல `தனிப்பட்ட ஒருநிகழ்வை அடிப்படையாகக் கொண்டுஒரு முடிவுக்கு வருதல் அறிவுடைமை யாகாது,’ என்று எழுதி இருப்பதுடன், “இதேபோன்று இடைத்தேர்தலில் 10-8 என்ற விகிதத்தில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கும், பாஜக கூட்டணிக் கட்சி களுக்கும் இடையிலான வெற்றியை வைத்து மோடி அரசாங்கத்தைக் குற்றம்சாட்டுவது அவசரப்பட்டுக் கூறப்படும் முடிவாகவே அமைந்திடும்,’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறது. மக்களால் உயர் வாகக் கருதப்படும் மற்றொரு நாளேடும், “பீகார் இடைத்தேர்தலில் ஏப்ரல்-மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக - எல்ஜேபி கூட்டணி முழுமையாக வெற்றி பெற்ற இடங்கள் ஆறில் ஐந்தைத் தற்போது ராஷ்ட்ரிய ஜனதா தளம் - ஐக்கிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளபோதிலும் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆயினும், இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் ஒரு கட்சியின் அதிர்ஷ்டத்தை சாதிய ரீதியிலான கூட்டுகள் தீர்மானிக்கப்படுவது இப்போது மீண்டும் மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது’’ என்று எழுதியிருக்கிறது.(தி இந்துஸ்தான் டைம்ஸ், ஆகஸ்ட் 16, 2014). அதேபோன்று தி டைம்ஸ் ஆப்இந்தியா நாளேடும், தன்னுடைய 2014 ஆகஸ்ட் 27 இதழில், “ஐக்கிய ஜனதாதளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணிச் சூதாட்டம் சாதிய கணக்கீடு களையெல்லாம் தாண்டி முரண்பாடற்ற முறையில் நல்லதோர் அரசாங்கத்தை அளிப்பது தொடர்பாக இன்னமும் மெய்ப் பிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது,’’ என்று எழுதியுள்ளது. இவர்கள் இவ்வாறெல்லாம் கூறு வதை நம்பிக்கையற்ற முறையில் தள்ளிவிட முடியுமா? இதற்கு முன்பு உத்தரகாண்டில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது பாஜக முழுமையாகத் துடைத் தெறியப்பட்டது.

தேர்தல் நடைபெற்ற மூன்று இடங்களிலும் அது தோல்வி அடைந்தது. பீகாரிலும் கூட, வாக்குகளின் விவரங்கள் காட்டுவது என்னவெனில் ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டணியின் வாக்கு விகிதம் கணிசமாகக் கரைந்துவிட்டது என்பதே ஆகும். ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின்போது மேற்படி பத்து பகுதிகளிலும் அவற்றின் வாக்கு விகிதம் 45.3 சதவீதமாக இருந்தது. இந்த இடைத் தேர்தல்களின்போது இது 37.3 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இவ்வாறு பாஜகவிற்கு எதிராக 8 சதவீத மக்கள் மாறி இருக்கிறார்கள். இதற்கு மாறாக, ஆர்ஜேடி-ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசின் வாக்கு விகிதம் 40. 3 சதவீதத்திலிருந்து 44.9 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இவ்வாறு 4.6 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2014 பொதுத் தேர்தல்களின்போது பத்து பகுதிகளில் ஒன்பதில் பாஜக-எல்ஜேபி அணி வெற்றி பெற்றிருந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்ட மன்றத் தேர்தல்களின்போது கூட, பாஜகவும் அதன் கூட்டணிகளும் பத்துஇடங்களில் ஏழு இடங்களை வென்றிருந் தன. இவற்றில் பாஜக மட்டும் 6 இடங் களைப் பெற்றிருந்தது. இந்தப் பத்து இடங்களுமே பாஜக மிகவும் வலுவாக உள்ளபகுதியாகும்.

எனவே இப்போது இக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிற சரிவினை வெறும் சாதிய ரீதியிலான வாக்குகள்’’ என்று ஒதுக்கித் தள்ளுவது ஏமாற்றும் தந்திரமேயாகும்.மதவெறி சக்திகளுக்கு எதிராக, முரண்பாடுகளற்ற முறையில் கூட் டணி அமைப்பதற்கு இன்னும் போகவேண்டிய தூரம் அதிகமாக இருக் கிறது என்ற போதிலும், இப்போது வெளியாகி இருக்கும் தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் ஆர்எஸ்எஸ்/பாஜககூட்டணியிடம் அதிருப்தி அடைந்துவிட்டனர் என்பதையும், மக்கள் மோடி அரசாங்கத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரல், அது தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறிய பிரச்சனைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை உணரத் தொடங்கி விட்டனர் என்பதிலும் ஐயமில்லை. மோடியின் தலைமையில் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றும் புத்துயிர் பெற்ற இந்தியா உருவாகும் என்றும் மக்கள் நம்பித்தான் மோடிக்கு வாக்களித்தார்கள்.
ஆனால், அவர்களின் நம்பிக்கைகள் பொய்த்துப்போகக்கூடிய விதத்தில், பெட் ரோலியப் பொருட்கள் மற்றும் ரயில்வே கட்டணங்களின் செங்குத்தான விலை உயர்வும், புதிய வேலை வாய்ப்புகளை உரு வாக்கக்கூடிய விதத்தில் பொருளாதார நடவடிக்கைகளில் மாற்றங்கள் எதுவும் கண்ணுக்குப் புலப்படாத விதத்திலும், மக்களின் துன்ப துயரங்கள் மட்டும் பல்கிப் பெருகியுள்ளன. தேர்தல் பிரச் சாரத்தின்போது மோடி குறிப்பிட்ட வாக்குறுதிகள் குறித்து எதுவும், செங் கோட்டையின் கொத்தளங்களின் மேலிருந்து அவர் ஆற்றிய தன்னுடைய முதல் சுதந்திர தின உரையில் அவர் குறிப்பிடவில்லை.

விலைவாசியைக் கட்டுப்படுத்துவேன் என்றோ, ஊழலை ஒழிப்பேன் என்றோ, குறைந்தபட்ச அரசாங்கத்தைக் கொண்டு அதிகபட்ச ஆட்சியை அளிப்பேன் என்றோ தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய எது குறித்தும் அவர் கூறிடவில்லை. ஆனால், அதே சமயத்தில் இந்த அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் பல பகுதிகளில் வகுப்புக் கலவரங்கள்தான் கூர்மையான முறை யில் அதிகரித் திருக்கின்றன. இப்போதுகூட சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல்கள் நடைபெற்ற பீகாரில் தேர்தல் ஆதாயங்களைப் பெற வேண்டும் என்றநோக்கத்தோடு மதவெறித் தீ விசிறிவிடப்பட்டது. விரைவில் உத்தரப்பிர தேசம், மகாராஷ்ட்ரா, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் போன்ற முக்கியமான மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் விரைவில் நடைபெற விருப் பதையொட்டி அங்கெல்லாம் மதவெறித் தீயை விசிறிவிடுவதற்கான வேலைகள் அதிகரித்திருப்பதைத் தெளிவாகவே பார்க்க முடிகிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறித் தீயை கொளுந்துவிட்டு எரியச் செய்வதற்காக, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் பெரும்பான்மை மத வெறி நிகழ்ச்சிநிரலில் சமீபத்தில் சேர்க் கப்பட்டிருக்கும் பிரச்சனை, “ஜிகாத் காதல்’’ பிரச்சனையாகும். முஸ்லிம் இளைஞர்கள் இந்துப் பெண்களை மயக்கி இழுத்து, வலுக்கட்டாயமாக முஸ்லிம்களாக மாற்றிவிடுகிறார்கள் என்று கூறத் தொடங்கி இருக்கிறார்கள். உண்மையில் இது விசித்திரமான வாதம் மட்டுமல்ல, அருவருக்கத்தக்க ஒன்றுமாகும். பாஜகவின் சார்பில் நாடாளுமன்ற மக்களவையில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட கிடையாது என் பது அனைவரும் அறிந்த உண்மை. எல் லோருக்கும் தெரிந்த அக்கட்சியைச் சார்ந்த இரு அரசியல் முகங்கள் இந்துப்பெண்களைத்தான் திருமணம் செய் திருக்கிறார்கள். தர்மேந்திரா - ஹேம மாலினி. தர்மேந்திரா பாஜக-வின் முன்னாள் எம்.பி. ஹேமமாலினி இன்னாள் எம்.பி. இவர்கள் திருமணம் செய்துகொண்டபோது இஸ்லாம் மதத்திற்கு மாறித்தான் திருமணம் செய்து கொண்டார்கள். தில்லியின் மிகவும் பிரபலமான சிக்கந்தர் பகத் இந்திரா காந்தியின் அவசர நிலைக் காலம் முறியடிக்கப்பட்டபின் நடந்த தேர்தலில் மக்களவை உறுப் பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனதா கட்சியின் ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.

இவரும் ஓர் இந்துப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டார். எனவே, ஆர்எஸ்எஸ்/பாஜக வகை யறாக்களைப் பொறுத்தவரை, “ஜிகாத் காதல்’’ என்கிற முழக்கம் மதவெறித் தீயை விசிறிவிடுவதற்கான ஓர் உத்திதானே யொழிய வேறல்ல. அதன்மூலம் இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்த வேண் டும் என்பதே அவர்கள் குறிக்கோள். இதுவாக்கு வங்கி அரசியலின் மிகவும் மோசமான நடைமுறை உத்தியாகும். இவர்களின் உத்தி நாட்டின் சமூக நல்லிணக் கத்திற்குக் கடும் பாதிப்புகளை ஏற் படுத்தும். இவ்வாறு இவர்கள் தங்கள் குறுகிய சொந்த அரசியல் ஆதாயங் களுக்காக, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின்மீது கடும் தாக்குதல்களை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்தா விட்டால், பல்வேறு சமூக, கலாச்சார, மொழி மற்றும் மத நம்பிக்கைகளைக் கொண்டவர்களாக இருந்த போதிலும் அனைவரும் ஒன்றாக மிகவும் வளமான முறையில் இதுநாள்வரை வாழ்ந்து வந்த உயரிய வாழ்க்கை கொடூரமான முறை யில் தாக்குதல்களுக்கு உள்ளாகும்.

இந்தியா என்னும் சிந்தனையே’’ அடித்து வீழ்த்தப்பட்டு விடும். இடைத்தேர்தல்களின் முடிவுகள் இந்தப் பின்னணியில்தான் பார்க்கப் பட வேண்டும். தற்போதுள்ள நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, வெறிபிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிச `இந்து ராஷ்ட்ரமாகமாற்ற வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் திட்டத்தை நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்கிற மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கக் கூடிய விதத்திலேயே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என்கிற அடிப்படையில் இடைத் தேர்தல்களின் முடிவுகள் பார்க்கப்பட வேண்டும். இவ்வாறு ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மதவெறித் தீயை விசிறிவிடும் அதே சமயத்தில், நாட்டின் பெரும்பான்மை மக்களைத் துன்ப துயரத்திற்கு ஆளாக்கி வரும், நாட்டின் இருவேறு இந்தியர்களுக்கும் இடையிலான இடை வெளியை அதிகப்படுத்தி வரும், சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டளைக்கிணங்க நவீன தாராளமயப் பொருளாதார சீர் திருத்தங்களை தொடர்ந்து பின்பற்றி வரு கிறார்கள். உண்மையில் இவர்களின் கொள்கைகள் பெரும்பான்மை மக்கள் மீது மேலும் துயரங்களையே ஏற்றிடும். நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாத்திட இவர்களின் இத்தகைய அரக்கத் தனமான உத்திகள் அனைத்தையும் முறி யடித்திட வேண்டியது அவசியமாகும்.

- தமிழில்: ச.வீரமணி