Monday, December 31, 2012

புத்தாண்டை நோக்கி தொழிலாளர்கள்



ஏ.கே. பத்மநாபன்

போராட்டக் களங்கள் பல கண்ட 2012 நிறைவடைகிறது. 
ஆண்டு துவங்கி இரு மாதங்களுக்குள்ளேயே இந்திய வர லாற்றின் மிகப் பெரியத் தொழிலாளர் வேலை நிறுத்தம் 2012 பிப்ரவரி 28 அன்று நடைபெற்றது. 1991இல் துவங்கப்பட்ட தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான தொடர் கிளர்ச்சிகள், போராட்டங்கள், வேலை நிறுத்தங்களின் தொடர்ச்சியாக இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது. 14 ஆவது முறையாக இந்த அகில இந்திய ஒரு நாள் வேலை நிறுத்தம், இந்தியத் தொழிற்சங்க இயக்க வரலாற்றில் முதன் முறையாக அனைத்து மத்தியத் தொழிற் சங்கங்களும் ஒன்றாக நடத்திய வேலை நிறுத்தம். பல்வேறு துறைவாரி சம்மேள னங்களும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டு, பத்து கோடி உழைப் பாளி மக்கள் ஆளும் வர்க்க கொள்கை களுக்கு எதிராக தங்களது கண்டனத் தைத் தெரிவித்தனர். இந்தக் கண்டன இயக்கங்கள் பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை என்பதே நமது அனுபவம். இது உலகளா விய அனுபவமும் கூட. முதலாளித்துவ பொருளாதார அமைப்பு நெருக்கடியில் சிக்கி, பல அரசாங்கங்களே திவால் நிலையை எட்டியபோதும்கூட, அதன் விளைவுகளை முழுவதும் உழைத்து வாழ்கின்ற மக்கள் மீதே அவை திணித் துள்ளன. இதற்கு எதிராகவே முதலாளித் துவ நாடுகளில் விதிவிலக்கு ஏதுமில்லா மல் தொடர் கிளர்ச்சிகளும், வேலை நிறுத் தங்களும் நடைபெற்றன. தொழிலாளர்கள் அடக்குமுறைகளை எதிர்கொண்டனர்.

முதலாளித்துவ நெருக்கடி பாதுகாப் பான முதலீட்டு மையங்களைத் தேட வேண்டிய கட்டாயத்தை, பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தியது. வளர்ந்து வரும் பொருளாதார அமைப்பு கொண்ட நாடுகள் என முத்திரையிடப் பட்ட இந்தியா போன்ற நாடுகள் மீது இந்த முதலீட்டாளர்கள் நேரடியாகவும், மறை முகமாகவும் நிர்ப்பந்தங்கள் செலுத்தினர். இந்திய அரசு மீது தொடுக்கப்பட்ட நிர்ப் பந்தங்களை இந்த ஆண்டில் நாம் பளிச்எனக் கண்டோம். மன்மோகன் சிங் அரசு மீது உலக முதலீட்டாளர்களின் கடுமை யான விமர்சனங்கள் இந்திய அரசைக் கண்மூடித்தனமான நிலைக்குக் கொண்டு சென்றது. அடுத்தகட்ட பொரு ளாதாரக் கொள்கைகள் என பெயரிடப் பட்டு புதிய தாக்குதல்கள் வேகப்படுத்தப் பட்டன. செப்டம்பர் மாதத்திலிருந்து இந்தத் தாக்குதல்கள் வேகம் அடைந்தன. 
இந்தப் பின்னணியில்தான் செப்டம்பர் 4 அன்று அனைத்துத் தொழிற்சங்கங்கள் அகில இந்திய சிறப்பு மாநாட்டை தில்லியில் நடத்தி புதிய போராட்ட நடவடிக்கைக ளுக்குத் திட்டமிட்டன. மண்ணெண் ணெய், சமையல் எரிவாயு உட்பட விலைகளை உயர்த்தும் அரசின் அறிவிப் புகளும் இந்தக் காலத்தில்தான் வெளி வந்தன. செப்டம்பர் 20 அன்று நாடெங்கிலும் கடையடைப்பு, பொது வேலைநிறுத்தம் உட்பட ஸ்தம்பிப்பு நிலை ஏற்பட்டது. ஆனால் மத்திய அரசு கவலைப்பட வில்லை. தொழிற்சங்க இயக்கம் போராட் டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு மனதாய் முடிவு செய்தது. தயாரிப்பு மாநாடுகள், பிரச்சார இயக்கங்கள் எனத் துவங்கி, டிசம்பர் 18 அல்லது 19 தேதி களில் சாலை மறியல், ரயில் மறியல், சிறை நிரப்புப் போராட்டங்கள் நடைபெற் றன. பல லட்சம் தொழிலாளர்கள் இந்த ஆவேசப் போராட்டங்களில் பங்கேற்றனர். அனைத்து மாநிலங்களிலும் இந்தப் போராட்டங்கள் முழு வேகத்துடன் நடை பெற்றன. அதன் பிரதிபலிப்பு டிசம்பர் 20 அன்று நாடாளுமன்றத்தின் முன் கண் டோம். தலைநகரில், அண்டை மாநிலங் களிலிருந்து ஆண்களும், பெண்களுமாய் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண் டனர். நாடாளுமன்றத்திற்குள் தாராளமயக் கொள்கை அமலாக்கச் சட்டமுன்வடிவு விவாதிக்கப்படும் நேரத்தில் இந்தியத் தெருக்கள் தொழிலாளர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு, களம் ஆயிற்று. நவம்பர் - டிசம்பர் மாதங்கள் நாட்டுக் குக் குளிர் காலம்தான். ஆனால், போராட் டத் தீகொழுந்துவிட்டெரிந்த மாதங்க ளாக இவை அமைந்தன. நவம்பர் 6இல் கட்டுமானத் தொழிலாளர்கள் நாடெங் கிலும் வேலைநிறுத்தம் செய்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

நவம்பர் 26, 27 தேதிகளில் வரலாறு காணாத ஒரு போராட்டம் தில்லியில் நடந்தது. மத்திய அரசின் 12 சேவைத் திட்டங்களில் வேலைசெய்யும் லட்சக்கணக்கான பெண் ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து 50 ஆயிரம் பெண் ஊழியர்கள் பங்கேற்ற மகா முற் றுகைப் போராட்டம்அது. டிசம்பர் 12 அன்று போராட்டப் பாரம்பரியமிக்க அஞ்சல் ஊழியர்கள், வருமானவரித்துறை ஊழியர்கள், மாநிலக் கணக்காய்வுத் தலைவர் அலுவலக (ஹஉஉடிரவேயவே ழுநநேசயட டீககiஉந) ஊழியர்கள் என பல லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தத் தில் ஈடுபட்டனர். டிசம்பர் 20 அன்று இந்திய வங்கித் துறையைத் தனியாருக்குத் தாரை வார்க் கும் சட்டத் திருத்தங்களை மாநிலங் களவை விவாதித்துக்கொண்டிருக்க, வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர். வங் கிப் பணிகள் நாடெங்கும் ஸ்தம்பித்தன. இவை ஒருசில எடுத்துக்காட்டுகளே. 2012 முழுவதும் போராட்ட நாட்களாகவே அமைந்தன. மலை உச்சியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் முதல் கடற் கரை மீனவர்கள் வரை உறுதிமிக்க போராட்டங்களை நடத்திய காலம் இது. நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப் பதற்காக நாடாளுமன்றமும் போராட்டக் களமாகியதைக் கண்டோம். ஆண்டு இறுதியில் கணக்குப் பார்க் கிறபோது இது வலிமைமிக்கப் போராட் டங்களின் காலம் என்று கூறினால் அது மிகையல்ல, உண்மை.தாராளமயக் கொள்கைகளுக்கு எதி ராக மட்டுமல்ல, மக்கள் ஒற்றுமையைக் குலைக்கும் வகுப்புவாதம், பல்வகைப் பிளவுவாதப் போக்குகள், பயங்கரவாத நடவடிக்கைகள், வன்முறைகள், ஒடுக் கப்பட்ட மக்கள் பகுதியினரான தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினர் மீது கொடூரத் தாக்குதல்கள், இதற்கெல்லாம் மேலாகப் பெண்கள், குழந்தைகள் மீது மனிதத் தன்மை இழந்து நிற்கும் முறையிலான வன்முறை வெறியாட்டங்கள். முதலாளித் துவ நெருக்கடி, பொருளாதாரத்துறையை மட்டுமல்ல, வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் கொடூரமாகத் தாக்குகிறது. இந்தத் தாக்குதல்களின்போது இவற்றின் உண்மையான கோரமுகங்கள் வெளியில் தெரிகின்றன. 
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடுகள் எல்லாம் அடிப்படைக் கொள்கைகளை எட்டுகிறபோது வேற் றுமை மறைந்து, ஒன்றுதிரள்வதைக் காண்கிறோம்.தாராளமயக் கொள்கை அமலாக்கத் தில் பிரதான ஆளும் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பக்கம்தான் என் பதைப் பகிரங்கமாகவே அறிவிக்கின்றன. மாநில மக்களின் நலன் காக்கவே செயல் படுகிறோம் எனப் பறைசாற்றும் பல மாநிலக் கட்சிகளும் சந்தர்ப்பவாத சகதி யில் விழுந்து கிடப்பதைக் காண்கிறோம். மக்கள் நலன் காக்கும் அரசியல் பாதை எது என்பதை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டிய காலம் இது. வீடு வீடாக இந்த செய்திகள் கொண்டு செல்லப்பட வேண்டும். மாற்றுக் கொள் கைகளை மக்கள் முன் நிறுத்தியாக வேண்டும். இந்தப் பணியில் இந்தியத் தொழிற்சங்க இயக்கத்திற்கு மிகப் பெரிய கடமையுண்டு. அதை நோக்கிப் பயணிப் பதற்கான வாய்ப்புகளைத்தான் அனைத் துத் தொழிற்சங்க கூட்டுமேடை உருவாக் கித் தந்திருக்கிறது.
பல்வகை வேறுபாடுகளுக்கு அப் பால், பிரச்சனைகள் - கோரிக்கைகள் அடிப்படையிலான ஒற்றுமை உருவாகி யுள்ளதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடிப்படை ஜன நாயக உரிமைகளும், சங்கம் சேரும் உரி மையும் கூட மறுக்கப்பட முடியும் என் பதைக் கடந்த மூன்று ஆண்டுகள் நமக் குத் தெளிவுபடுத்தியுள்ளன. இதை உணர்ந்துதான் தொழிற்சங்க இயக்கம் ஒன்றுதிரண்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் எழுப்புவதில் தொழிற்சங்க இயக்கம் முன் னணியில் நின்று செயல்பட வேண்டும். போராடுகிற மக்கள் பகுதியினருக்கு உறு துணையாய் நிற்க வேண்டியது, தொழி லாளி வர்க்கத்தின் கடமை. இந்தப் பின் னணியில்தான் புத்தாண்டில் பிப்ரவரி 20 - 21 தேதிகளில் இதுநாள்வரை கண்டிராத முறையில் 48 மணி நேர பொது வேலை நிறுத்தம் எனும் அறைகூவல் வெளிவந் துள்ளது.

அதே நாளன்று அகில இந்திய விவசா யிகள் சங்கமும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் தங்கள் விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து மறியல் களம் காண்கின்றன.உற்பத்திச் சக்கரங்களை நிறுத்தி வைத்து, இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என ஆட்சியாளர்களுக்கு எச் சரிக்கை செய்யவே இந்த இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம்.
ஒற்றுமையும் போராட்டமும்; அதுவே புத்தாண்டின் நம்பிக்கை ஒளி.

--

Sunday, December 30, 2012

2013 ஆம் ஆண்டை வரவேற்போம்!



வாசகர்கள் அனைவருக்கும் புத் தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஆயினும் தலைநகரில் மிகவும் கொடூர மான முறையில் கூட்டு வன்புணர்ச்சிக்கு ஆளான பெண் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அக் கொடுமைக்கு எதிராகவுள்ள கோபத் துடனும் கனத்த இதயத்தோடும்தான் இவ் வாழ்த்துக்களை நாம் தெரிவித்துக் கொள்கிறோம். (அப்பெண் டிசம்பர் 29 அன்று இறந்துவிட்டார்.)

பழையன கழியட்டும், புதியன பிறக் கட்டும் என்று பொருள்படும் டென்னிசன் அவர்களுடைய (Ringing out the old, ringing in the new) பாடல் வரிகள் இத் தருணத்தில் வழக்கமாகப் பயன்படுத்தப் படும். சிறந்ததோர் வாழ்க்கைக்கான மாற் றங்கள் வரவிருக்கும் ஆண்டில் வரும் என் பதற்கான நம்பிக்கை அவரது பாடல் வரி களில் உண்டு.

ஆயினும், கழிந்து சென் றுள்ள ஆண்டில் நமக்கு ஏற்பட்ட அனுப வங்கள் அவரது நம்பிக்கை வரிகளைப் பொய்த்துப்போகச் செய்யக்கூடிய விதத் தில் அமைந்திருக்கின்றன. நம்பிக்கை கள் எதுவுமே எதார்த்த உண்மைகளாகத் தானாய் மாறிவிடாது. சிறந்ததோர் வாழ்க் கை வேண்டுமானால் அதனை மக்கள் விடாப்பிடியான போராட்டங்கள் மூலமே சாதித்திட முடியும். சென்ற ஆண்டு, ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது லோக்பால் சட்ட முன்வடிவை மாநிலங்களவையில் நிறை வேறவிடாமல் சவக்குழிக்கு அனுப்பிய துடன் 2012ஆம் ஆண்டு முடிவுக்கு வந் திருக்கிறது. ‘‘எது எப்படி இருந்தபோதி லும், உயர் மட்ட அளவில் நடை பெறும் ஊழலை ஒழித்துக் கட்டுவதற்காக, சரி யான அமைப்புகளை உருவாக்குவதற் காக, கடந்த நாற்பதாண்டு காலமாக மேற் கொண்டுவந்த நீண்ட நெடிய போராட்டம் கடைசியாக 2012இல் அமைவதற்கான வாய்ப்புகள் நிறுவப்பட்டுள்ளன. ஆயினும், இதுவும் தாமாகவே ஏற்பட்டுவிடாது. இதற்கான நிர்ப்பந்தத்தை மக்களின் மகத் தான போராட்டங்கள் மூலமாக அரசுக்கு தொடர்ந்து இடைவிடாது அளித்துக் கொண்டிருக்க வேண்டும்,’’ என்று நாம் கூறினோம். ஆயினும் மக்களின் நிர்ப் பந்தங்கள் கடுமையாக இருந்தபோதிலும் இது நடைபெறாமலே 2012 முடிவுக்கு வந்துவிட்டது. அதே சமயத்தில், நாட்டையே குலுக் கிய எண்ணற்ற ஊழல்களை அடுக் கடுக்காக 2012 பார்த்திருக்கிறது. நம் நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட் டிருக்கின்றன. நம் நாட்டின் மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையை உருவாக்கு வதற்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பெரு மளவில் எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி வேறு காரியங்களுக்காகத் திருப்பிவிட் டது மட்டுமின்றி, நம் நாட்டின் வளங்களும் இரக்க உணர்ச்சி எதுவுமின்றி கொள்ளை யடிக்கப்பட்டிருக்கின்றன. ‘‘உயர்மட்ட அளவில் நிலவும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை, பொருளாதார சீர்திருத் தங்களுக்கு எதிரான போராட்டத்துடன் சரியான முறையில் இணைத்திடாமல் வலுவான முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியாது,’’என்று நாம் சொல்லி யிருந்தோம். ஆயினும், நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டம், மன்மோகன் சிங் அரசாங்கமானது முன்னிலும் மோச மான முறையில் பொருளாதார சீர்திருத் தங்களை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறது.

இது, நாம் எதிர் பார்த்ததைப்போல, மக்கள் மீது மேலும் சொல்லொண்ணா அளவில் பொருளா தாரச் சுமைகளை ஏற்படுத்திடும். ஆட்சி யாளர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) யின் வளர்ச்சி விகிதம் 9 விழுக்காடாக இருந்திடும் என்று சொல் லியிருந்தார்கள். ஆனால் வெறும் 6 விழுக் காடு அல்லது அதற்கும் குறைவான விகி தத்தோடேயே இந்த ஆண்டு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. அனைத்து அத் தியாவசியப் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில், மக்களின் துன்ப துயரங்களும் கடுமையாகிக் கொண்டிருக்கின்றன. உலகப் பொருளாதார நெருக்கடியும் மந்தமும் தொடர்ந்து மோசமாகிக் கொண் டிருக்கக்கூடிய பின்னணியில், ஆட்சி யாளர்கள் கடைப்பிடித்துவரும் நவீன தாராளமயக் கொள்கையானது நாட்டில் உடையோருக்கும் இல்லாதோருக்கும் இடையிலான இடைவெளியை மேலும் விரிவாக்குவதற்கு இட்டுச் செல்கிறது. ஆட்சியாளர்களின் சீர்திருத்தக் கொள் கைகள், சர்வதேச நிதி மூலதனம் மற்றும் இந்தியப் பெரு முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்ட வழி வகுத்துத்தரும் அதே சம யத்தில், நாட்டு மக்களையும் வறியவர் களாக்கிக் கொண்டிருக்கிறது. நாட்டில் பெருவாரியாக உள்ள உழைக்கும் மக்க ளின் மீது பொருளாதாரச் சுரண்டலைக் கூர்மைப்படுத்துவதன் மூலம் மட்டுமே அவர்களால் கொள்ளை லாபம் ஈட்ட முடியும். 2013ஆம் ஆண்டில் நம் மக்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை உருவாக்கித் தர வேண்டுமானால், ஆட்சியாளர்களின் கொள்கைத் திசைவழியை மாற்றி அமைத் திட வேண்டியது அவசியமாகும். அத் தகைய மாற்று என்பது நமக்குத் தேவை யான சமூக மற்றும் பொருளாதாரக் கட்ட மைப்பு வசதிகளை உருவாக்கிட பொது முதலீடுகளை அதிகப்படுத்துவதில் அடங்கி இருக்கிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு உருவாக்கி, அதன் மூலம் நாட்டில் மக்களின் குடும்பத் தேவைகளை விரிவாக்கிட முடியும். இது, உற்பத்தித் துறைக்கும் (Manufacturing Sector) ஊக்கத்தைக் கொடுத்து, ஒட்டு மொத்தத் தொழில் உற்பத்தியையும் அதி கரித்திட இட்டுச் செல்லும். இத்தகைய மாற்றுக் கொள்கைத் திசைவழி மூலம் மட் டுமே நிலையான மற்றும் உள்ளீடான வளர்ச்சியை அளித்திட முடியும். கடந்த ஐந்தாண்டுகளாக உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக நம் நாட்டின் ஏற்றுமதிகள் கூர்மையாக வீழ்ச்சியடைந் துள்ள சூழ்நிலையில், இத்தகைய மாற்றுத் திசைவழியே பொருத்தமான ஒன்றாகும். இன்றைய சூழ்நிலையில் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சிக் கொள்கை செயல்பட முடி யாது. நம் நாட்டின் உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்வதன் மூலமே வளர்ச்சியைக் கொண்டுவர முடியும். ஆனால் ஆட்சியா ளர்கள் கடைப்பிடிக்கும் தற்போதைய நவீன தாராளமய சீர்திருத்தங்கள், நாட் டில் பெரும்பான்மையாக உள்ள மக்களின் வாங்கும் சக்தியைக் கூர்மையாக வீழ்ச்சி யடையச் செய்து, எதிரான விளைவு களையே ஏற்படுத்திடும். அடிக்கடி ஒரு கேள்வி எழுப்பப்படு கிறது: பொது முதலீடுகளுக்குத் தேவை யான வளங்களுக்கு எங்கே போவது? சென்ற ஆண்டில் நாம் திரும்பத் திரும்ப இது குறித்து விளக்கியிருப்பதைப்போல, ஆட்சியாளர்கள் அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய வரிவருவாயைத் தள்ளுபடி செய்திருப்பது மட்டும் 5.28 லட்சம் கோடி ரூபாய்களாகும்.

இது நம் மொத்த உள் நாட்டு உற்பத்தியின் பற்றாக்குறையான 5.22 லட்சம் கோடி ரூபாயைவிட அதிக மாகும். ஆனால் ஆட்சியாளர்கள் பற்றாக் குறையைச் சரி செய்கிறோம் என்ற பெய ரில் டீசல், சமையல் எரிவாயு, யூரியா முதலானவற்றின் விலைகளை உயர்த்தி, ஏழை மக்களுக்கு அளித்துவந்த அற்ப மானியங்களையும் கண்டபடி வெட்டிக் குறைத்திருக்கிறார்கள். இவ்வாறு பற் றாக்குறைக்கு, ஆட்சியாளர்கள் பணக் காரர்களுக்கு அளித்துவந்த வரிச்சலுகைகள் அல்லது மானியங்கள்தான் கார ணமாகும். ஆனால் அதனால் ஏற்பட்டுள்ள சுமைக ளையும் துன்பதுயரங்களையும் ஏழை மக்கள் தாங்க வேண்டிய கொடுமை.நாட்டு மக்களில் பெரும்பான்மையான வர்களின் நலன்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால், சிறந்ததோர் இந்தியா வைக் கட்ட வேண்டுமானால் ஆட்சியா ளர்களின் இத்தகைய கொள்கைத் திசை வழியை அனுமதித்திட முடியாது. எனவே, 2013ஆம் ஆண்டு ஆட்சியாளர்கள் தங் களது கேடு பயக்கும் கொள்கைகளை மாற்றியமைத்திட வற்புறுத்தும் வகையில் - அவர்களுக்குப் பெரிய அளவில் நிர்ப் பந்தங்கள் கொடுக்கும் விதத்தில் - வெகு ஜனப் போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட வேண்டும். சுதந்திர இந்தியாவின் வர லாற்றில் முதன்முறையாக அனைத்துத் தொழிற்சங்கங்களும், தங்கள் அரசியல் பின்னணியைப் புறந்தள்ளிவிட்டு, முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒன்று பட்டு நின்று, ஆட்சியாளர்களின் கொள் கைகளுக்கு எதிராக, இரண்டு நாள் தொடர் வேலைநிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்திருக்கின்றன. நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் அனைவ ராலும் இதன் வெற்றி உத்தரவாதப்படுத் தப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் தாங் கள் கடைப்பிடித்துவரும் தற்போதைய கொள்கையைத் தொடர்வது என்பதன் பொருள், நாட்டு மக்களின் வாழ்க்கையை மேலும் மோசமான விதத்தில் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வது என்பதே யாகும்.

அதுமட்டுமல்ல, நம் நாட்டின் செல் வங்களை மேட்டுக் குடியினர் லஞ்ச ஊழல் மற்றும் ஆட்டபாட்டங்கள் மூலம் வற்றச் செய்வது என்பதுமாகும். மேலும் நாட்டின் சமூகப் பின்ன ணியை ஆராயுங்கால், 2012ஆம் ஆண்டு கட்டப் பஞ்சாயத்துக்கள், சாதிரீதியிலான ஒடுக்குமுறைகள் தொடர்தல், மதச்சிறு பான்மையினருக்கு அடிப்படை உரிமை களைக் கூடத் தர மறுப்பது தொடர்தல், பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அளவிற்கு மீறி அதிகரித்தல் போன்ற வற்றின் மூலம் பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தோம். தில்லி யில் மருத்துவ மாணவி ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் கூட்டு வன் புணர்ச்சிக்கு ஆளான சம்பவம் என்பது தனித்த ஒன்றல்ல. சிறுமிகள் உட்பட பெண்கள் மீதான இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளி லிருந்தும் வந்து குவிகின்றன. நம் நாட்டின் மாண்புகள், நவீன தாராளமயப் படுபிற் போக்கு கலாச்சாரத்தின் காரணமாக சிதைந்து சின்னாபின்னமாகி வருவதன் விளைவாகவே சமூகத்தின் மனிதாபி மானமற்ற இத்தகைய போக்குகள் அதி கரிப்பதற்குக் காரணமாகும். மேலும், இத் தகைய பொருளாதார சீர்திருத்தங்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மூல தனத்தின் லாபத்தைப் பெருக்கக்கூடிய அதே சமயத்தில், மக்களின் வாழ்க்கைத் தேவைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்து, சுருங்கச் செய்யவும் இட்டுச் செல்கிறது. இதன் காரணமாக சமூ கத்தின் பல பிரிவினரும் தாங்கள் பெற்று வந்த கொஞ்சநஞ்ச சலுகைகளும் தங் களை விட்டுப் பறிபோகும்போது அவற் றைத் தக்க வைப்பதற்காகக் கடுமை யாகப் போராட வேண்டிய நிலைக்குத் தள் ளப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய நிலை, நாட்டில் இயங்கிவரும் அனைத்துவித மான பிரிவினைவாத மற்றும் சீர்குலைவு சக்திகள் மீண்டும் தழைத்தோங்குவதற்கு வசதி செய்து தந்திருக்கிறது. இதன் கார ணமாகவே மீண்டும் பிற்போக்குத்தன மான போக்குகள் வலுப்பெற்றிருக்கின்றன. வரவிருக்கும் ஆண்டில் இவற்றிற்கு எதி ராகவும் கடுமையான முறையில் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.2013ஆம் ஆண்டில் கர்நாடகா, மத் தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, திரி புரா, மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய எட்டு மாநிலங்கள் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள் கின்றன.

இந்திய ஆளும் வர்க்கங்கள் நாட் டின் வளங்களைக் கொள்ளையடித்து நாட்டு மக்களை வறுமையில் தள்ளும் தாங்கள் கடைப்பிடித்துவரும் கொள்கை களுக்கு எதிராக மக்கள் மேற் கொண் டுள்ள போராட்டங்களிலிருந்து அவர் களைத் திசைதிருப்பிவிடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றன. இத்துடன், 2014ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலும் வர இருக்கிற சூழலில், 2013இல் ஆட்சி யாளர்கள் மக்களை ஏமாற்றக்கூடிய விதத் தில் சில சில்லரைத்தனமான மேம்பூச்சு நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அத் தகைய நடவடிக்கைகளில் ஒன்றுதான் பொது விநியோக முறை மூலமாக அத் தியாவசியப் பொருள்களைக் கொடுப்ப தற்குப் பதிலாக நேரடி ரொக்கப் பட்டு வாடா திட்டம் (Direct Cash Transfer scheme) குறித்த அறிவிப்பாகும். இது ஒரு மாபெரும் மோசடித்திட்டமாகும். ஏனெ னில், விலைவாசி தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் இவர்கள் அளித்திடும் ரொக்கத்தின் உண்மை மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து கொண்டே இருக்கும். அதன் விளைவாக, மக்கள் தங்களின் குறைந்தபட்சத் தேவை களைப் பூர்த்தி செய்ய இயலா நிலைக்குத் தள்ளப்படுவது என்பதும் அதிகரித் துக்கொண்டே இருக்கும். பொது விநி யோக முறை மூலமாக, வறுமைக் கோட் டுக்குக் கீழ்/வறுமைக்கோட்டுக்கு மேல் என்று எவ்விதப் பாகுபாடுமின்றி, நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் 35 கிலோ கிராம் உணவு தானியங்களை அதிகபட்சம் கிலோ 2 ரூபாய் விலைக்கு அளிப்பதன்மூலமே ஓர் பொருள்பொதிந்த உணவுப் பாதுகாப் பினை நம் மக்களுக்கு அளித் திடமுடியும்.வரவிருக்கும் ஆண்டில் நாம் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகளில் ஒருசிலவற்றை இவ்வாறு விவாதித் திருக்கிறோம்.
பெரும்பான்மையான மக் களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்து, சிறந்ததோர் வாழ்க்கையை அவர்களுக்கு அளித்திட வேண்டுமானால், வெகுஜனப் போராட்டங்களை வலுவாக முன்னெடுத் துச் செல்ல வேண்டும் என்பதிலிருந்து நம் கவனத்தை சிதறடித்துவிடக் கூடாது. நம்முடைய வல்லமை என்ன என் பதை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக 2013ஐப் பயன்படுத்திடாமல் நாம் இருந்துவிடக் கூடாது. 2013ஐ வர வேற்போம். நாட்டு மக்களின் உக்கிரமான போராட்டங்கள் நிறைந்த ஆண்டாக அதனை மாற்றி, நியாயமாக நமக்குக் கிடைக்க வேண்டிய பங்கினைப் பெறக் கூடிய விதத்தில் அதனை மாற்றி அமைத் திடுவோம்.

தமிழில்: ச.வீரமணி

Friday, December 21, 2012

அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்ததால் மெக்சிகோ நாட்டின் இன்றைய கதி -அருண் குமார்




இந்தியாவும் மிக விரைவில் வட அமெரிக்க நாடுகளின் கதிக்கு ஆளாகிடலாம். அதாவது அந்நாடுகளில் இதுருந்த சிறிய வர்த்தக நிறுவனங்கள் மங்கி மறைந்துவிட்டன. விவசாயம் வீழ்ச்சியடைந்து விட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் மிகப் பெரிய அளவில் காணப்படுகிறது.
மெக்சிகோ நகரில் உள்ள ஓட்டலுக்கு மெக்சிகோ விமானநிலையத்திலிருந்து டாக்சியில் என்னை ஏற்றிச் சென்ற ஓட்டுநர் ஒரு கணினி பகுத்தாய்நர்  (System Analyst) ஆவார். என்னை விமான நிலையத்திலிருந்து ஓட்டலுக்குக் கொண்டு செல்வதற்கு இடையிலான 30 கிலோ மீட்டர் தூரத்தில் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தின் அவல நிலை குறித்தும் சரளமான ஆங்கிலத்தில் அவர் என்னிடம் தெரிவித்து விட்டார். உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து அவர் என்னிடம் தெரிந்து கொள்ள விரும்பினார். ஏனெனில், தானும் தன்னைப்போன்றவர்களும் மெக்சிகோவில் படும் துன்பங்கள் குறித்து அப்போதுதான் தன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்று அவர் நினைத்தார். வேலையில்லாத் திண்டாட்டம் குறித்தும், தனக்கு ஒரு சரியான வேலை கிடைக்காதது குறித்தும் அவர் என்னிடம் முறையிட்டார். தன் குழந்தைகளுக்கும் இதுவே கதி என்று அவர் கூறினார். அமெரிக்காவையும் அதன் கொள்கைகளையும் சமூகத்தில் நிலவும் லஞ்ச ஊழல்களையும் அவர் சாடினார். அதன்பின் மெக்சிகோவில் நான் தங்கி இருந்த ஒரு வார காலத்திலும் எனக்கு இதுபோன்று எண்ணற்ற அனுபவங்கள் ஏற்பட்டன.
பெரும் மால்கள் (Big Malls)
டாக்சி பல வர்த்தக நிறுவனங்களையும், மக்கள் குடியிருப்புப் பகுதிகளையும் கடந்து சென்றது. ஆயினும்  சிறிய கடைகள் எதையும் நான் பார்க்கவில்லை. மிகப் பெரிய மால்கள் (மால் என்றால் மிகப்பெரிய வணிக வளாகம் ஆகும். திரையரங்குகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உட்பட அனைத்து வகையான வர்த்தக நிறுவனங்களும்  உள்ள இடமாகும். புதுதில்லி, மும்பை, சென்னை போன்ற இடங்களில் ஏற்கனவே முளைத்துவிட்டன.), ஆட்டோமோபைல் டீலர்கள், பெட்ரோல் நிலையங்கள், ரெஸ்டாரண்டுகள், மருந்துக் கடைகள், கார் ரிப்பேர் கடைகள் இருந்தன. குடியிருப்பு காலனிகளிலாவது சிறிய கடைகள் இருக்குமா என்று என்று தெரியவில்லை. எனது நண்பர் ஒருவர் 1980 மத்திய வாக்கில் இந்தியத் தூதரகத்தில் வேலைக்குச் சேர்ந்த என் நண்பர் ஒருவர் என்னிடம் கூறியபோது, தான் வேலைக்குச் சேர்ந்த சமயத்தில் எங்கு பார்த்தாலும் பழக் கடைகள் இருந்ததாகவும்மாலையில் ஒருவர் தனக்கு வேண்டிய பழங்களை வாங்கிச் சாப்பிட முடியும் என்றும்ஆனால் இப்போது அத்தகைய கடைகளை எங்கேயுமே பார்க்க முடியவில்லை என்றார். இந்தியப் பெருநகரங்களின் கதியும் எதிர்காலத்தில் இதுதானோ என்று நான் வியந்தேன்.
சிறிய கடைகள் இல்லாதது என்னை மிகவும் வியக்க வைத்ததெனில், மிகவும் ஆழமான முறையில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டம்தான் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  மெக்சிகோவும் 1994 இலிருந்தே நாஃப்டா  எனப்படும்  வட அமெரிக்க சுதந்தர வர்த்தக ஒப்பந்தத்தில் ஓர் அங்கமாக இருந்து, அந்நிய  முதலீட்டை இறக்கிய நாடாகும்.  அமெரிக்காவிலிருந்து பல தொழிற்சாலைகள் வட மெக்சிகோவிற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்துதான் அமெரிக்கா மற்றும் கனடிய சந்தைகளுக்குப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன. மெக்சிகோ  நகரம் கார்களின் வருகையால் பரபரப்பாகியது.   இந்தியாவுடன் ஒப்பிடுகையில்  தனி நபர் வருமான த்தில், நம்மைவிட பத்து மடங்கு அதிகமான அளவில் இருந்தது.  ஒன்றன் மீது ஒன்றாக மேம்பாலங்கள் நிறைய கட்டப்பட்டபோதிலும் போக்குவரத்து நெருக்கடியும் மிகுந்திருந்தது. அதிகாலை நேரத்தில் 25 நிமிடங்களில் கடக்கும் தூரத்தை, பகல் நேரங்களில் கடக்க வேண்டுமானால் இரண்டிலிருந்து மூன்று மணி நேரமாகும். நிலப்பரப்பின் பெரும்பகுதி தண்ணீருக்கு மேலே இருந்ததால், வானுயர் கட்டடங்களைக் கட்டவேண்டுமானால் மிகவும் செலவு செய்து அஸ்திவாரங்களை அமைக்க வேண்டியிருந்ததால், நிறைய கட்டடங்கள் ஒன்று அல்லது இரண்டு மாடிக் கட்டடங்களாகவே கட்டப்பட்டன. எனவே நகரத்தின் பரப்பளவு விரிவானதாக மாறியது.
மெக்சிகோ நகரத்திற்கு 1980களின் மத்தியவாக்கில் சென்றவர்கள் நிறைய சிறிய ஸ்டோர்கள் இருந்ததை நினைவு கூர்கிறார்கள். ஆனால் இப்போது உலகின் மிகப்பெரிய பணக்காரரான கார்லோஸ் ஸ்லிம் என்பவருக்குச் சொந்தமான சன்பார்ன் தொடர் ஸ்டோர்கள்தான் அங்கே காணப்படுகின்றன. சன்பார்ன் ஸ்டோர்களில் முதல் தளத்தில் உணவு விடுதி, ஒரு பொருள் அன்பளிப்பு கடை (gift stores), ஒரு மருந்துக் கடை இருக்கின்றன. மற்ற கடைகள் தரைத் தளத்தில் இருக்கின்றன. நான் ஒரு இளைஞனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, குடியிருப்புப் பகுதிகளின் முனைகளில் இத்தகைய ஸ்டோர்கள் இருந்ததைத் தான் பார்த்ததில்லை என்று கூறினார்.
நான் தங்கியிருந்த ஓட்டலின் சன்னலிலிருந்து பார்த்தபோது பெரிய பெரிய மால்களைத்தான் பார்க்க முடிந்ததே தவிர, என்னால் சிறிய ஸ்டோர்கள் எதையும் பார்க்க முடியவில்லை. அமெரிக்காவில் காணப்படுவதைப் போலவே சியர்ஸ் , வால்மார்ட், மெக்டொனால்டுகள்தான் எந்தப் பக்கம் பார்த்தாலும் காணப்பட்டன.  குடியிருப்புப் பகுதிகளிலும் சிறிய ஸ்டோர்கள் எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. அங்கும்வட அமெரிக்காவின் செவன் இலெவன்ஸ்  என்னும் நிறுவனத்தின் கடைகள்தான் காணப்பட்டன. ஏழைகள் வாங்குவதற்காக அங்குள்ள நடைபாதைகள் மற்றும் சந்தைகளின் அருகே சிறு சிறு கடைகள் இருந்ததைப் பார்த்தேன். மால்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நடைபாதைகளில் உள்ள இக்கடைகளுக்கு வந்து உணவுப் பொருள்களை வாங்கி உண்பதையும் பார்த்தேன். ஏனெனில் மால்களில் உள்ள விலைகள் அவர்களின் சம்பளத்திற்குள் வாங்கி உண்ணக்கூடிய அளவிற்க இல்லாத நிலை.
இவ்வாறு சிறிய கடைகளைச் சுற்றிப் பார்த்த சமயத்தில். எனக்கு வழிகாட்டியாக வந்தவர், மக்கள் பெரும்பாலானவர்கள் இங்கு வந்துதான் பொருள்களை வாங்குவார்கள் என்றும் ஏனெனில் இங்குதான் அவை மலிவாகக் கிடைக்கின்றன என்றும் கூறினார்.
நான் மெக்சிகோ நகருக்கு வெளியே இருந்த டியோடிஹூவாகான் என்னும் பிரமிடுகளைப் பார்க்கச் சென்றேன்.  அங்கே இருந்த சூரியக் கடவுள் என்னும் பெரிய பிரமீடு, எகிப்தில் உள்ள பெரிய பிரமீடுகளை விட பெரியதாக இருந்தது. மூன்று மைல் நீளமும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மக்களையும் கொண்ட அப்பகுதி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புராதன நகரத்தின் ஒரு பகுதியாகும். அந்த இடங்களைப் பார்க்கும்போது மிகவும் உத்வேகம் அளித்தது என்றாலும்,ஒவ்வொரு இடத்தையும் பல மணி நேரம் ஏறி இறங்குவதற்குள் மிகவும் களைத்துப்போய்விட்டது.  முடிவில், சாப்பிடுவதற்காக பக்கத்தில் இருந்த நகரத்திற்குச் சென்றோம். அதன் நுழைவாயிலில் ஓர் அழகான வளைவு இருந்தது. தெருக்களில் எண்ணற்ற சிறய ஸ்டோர்கள் வரிசை வரிசையாக இருந்தன.
கிராமக் குடியரசு
அடுத்த நாள்மொலிலோஸ் என்னுமிடத்தில் இருந்த தால்னேபாண்ட்லா  என்னும் கிராமத்தைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். இது ஒரு புரட்சிகர கிராமமாகும். என்னை விருந்தோம்பி உபசரித்த அல்வாரோ என்பவர் ஒரு பொருளாதாரப் பட்டதாரியாவார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து குடியேறிவிட்டார்.
அங்கிருந்த விவசாயிகளுடன் இணைந்து 4000 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த அம்மலைக் கிராமத்தில் பழ வகைகளைப் பயிர் செய்து வந்தார்.
இக்கிராமம் லஞ்சஊழல் அரசியல் கட்சிகளை நிராகரித்துவிட்டது. கிராமவாசிகள் தங்கள் சொந்தத் தலைவரைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஓர் அரசியல் கட்சியின் பிரமுகரான அந்நகராட்சியின் தலைவரை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. அல்வாரோவும் மற்றும் சிலரையும் பயங்கரவாதிகள் என்று பிரகடனம் செய்து அரசாங்கம்  அவர்களைக் கைது செய்திட துருப்புக்களை அனுப்பி வைத்தது. எனவே அவர்கள் தலைமறைவாகச் செல்ல வேண்டியதாயிற்று. மெக்சிகோ நகரம் முழுதும் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக பல்கலைக் கழகங்களில் இவை நடந்தன. பின்னர் அரசாங்கம் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கைவிட்டு, ஓர் ஒப்பந்தத்திற்கு வந்தது. இங்குள்ள நிலம் முழுவதும் இங்குள்ளவர்களுக்கே சொந்தம் என்றும், வெளியாள் எவருக்கும் இவற்றை விற்க முடியாது என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு பேராசிரியர் தங்கள் கிராமத்திற்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், கிராமத் தலைவர்கள் எனக்கு கிராமத்தில் விளைந்த பொருள்களைக் கொண்டு விருந்து படைத்து நன்கு உபசரித்தார்கள். அவர்களது உணவு வகைகளும் மிகவும் சுவையாக இருந்தது. ஆல்வாரோகாந்திஜி குறித்தும் அவருடைய அஹிம்சை தத்துவம் குறித்தும் ஒரு நவீன சமுதாயத்தில் அதை எப்படிப் பிரயோகிக்க முடியும் என்றும் என்னிடம் கேட்டார். மெக்சிகோவில் காந்திஜிக்கு ஒரு தனி இடம் இருப்பதுபோல் தோன்றுகிறது. அங்கிருந்த புத்தகக் கடைகளில் பலவற்றின் பெயர்கள் காந்தி என்று அழைக்கப்பட்டன.  காந்திஜியின் பெயரால் பல சாலைகளும் பூங்காக்களும் கூடக் காணப்பட்டன.
அமெரிக்காவுடனும், நாஃப்டா-வுடனும் விவசாயிகள் மிகவும் நிலைகுலைந்து போயுள்ளனர். சுதந்திர சந்தையானது அமெரிக்காவிலிருந்து மான்ய விலையில் உணவுப் பொருள்களைக் கொண்டுவந்து தங்கள் விவசாயத்தை அழித்துவிட்டது என்று அவர்கள் முறையிட்டனர். இப்போது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 4 விழுக்காடு மட்டுமே என்றனர். இவ்வாறு, நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வந்த விவசாயமும், சில்லரை வர்த்தகமும் கடந்த இருபதாண்டுகளில் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அதன் காரணமாகத்தான் வேலையில்லாத் திண்டாட்டமும் (5.2 விழுக்காடு அளவிற்கு) அதிகரித்துள்ளது. தங்களுடைய கல்வித் தகுதிக்குக் குறைவான வேலைகளில் 25 விழுக்காடு அளவிற்கு வேலை பார்க்கின்றனர்.
நான் ஒரு பேராசிரியரைச் சந்தித்தேன். தன் மகனுக்கு வேலை கிடைத்திருக்கிறது என்றால் அது அவனுக்குள்ள தொடர்புகளை வைத்துத்தான் என்றார்.  மற்றொருவர் என்னிடம், தன் பையன் பி.எச்டி. செய்து கொண்டிருக்கிறான் என்றும், அவன் எதிர்காலம் என்னாகுமோ என்று மிகவும் கவலையாக இருக்கிறது என்றும் கூறினார்.  அந்நிய நேரடி முதலீடு அதிகம் வந்தும் ஏன் இந்த நிலை? வேலையில்லாத் திண்டாட்டம் ஊதியங்களைக் குறைத்துவிட்டது. பல்கலைக் கழகத்தில் நான் சந்தித்த உதவிப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் கூறுகையில், தான் அளித்திடும் விரிவுரைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனக்கு ஊதியம் அளிக்கப்படுகிறது என்றும், இவ்வாறு நான் பெறும் ஊதியத்தைக் கொண்டு, கைக்கும் வாய்க்குமே போதவில்லை என்றார். மேலும் அவர் என் நிலைமையைவிட டாக்சி டிரைவரின் நிலைமை மேல் என்றார்.
கொள்ளைக் கும்பலின் ஆட்சி
அமெரிக்காவிலிருந்து முதலீடுகள் வந்து கொட்டப்படும் வட மெக்சிகோவில், கொள்ளைக் கும்பலின் ஆட்சியே நடைபெறுகிறது. சட்டமின்மையும் ஒழுங்கின்மையும் அங்கே தலைவிரித்தாடுகிறது. அரசாங்கம் என்ற ஒன்று அங்கு இருப்பதாகவே தெரியவில்லை. வேலையில்லா இளைஞர்கள் கொள்ளைக் கும்பலில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். போதைப்பொருள்கள் கடத்தல், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் புலம் பெயர்ந்து செல்லுதல் இளைஞர்கள் மத்தியில் காணப்படுகிறது.  இவ்வாறு புலம்பெயர்ந்து செல்லுதலும் வேலைவாய்ப்பின்மையை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்து சென்றவர்கள் அனுப்பி வைத்திடும் பணமும், பெட்ரோலியம் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறையும்தான் மெக்சிகோ பொருளாதாரத்தை ஓரளவிற்குக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. பொருளாதார நெருக்கடி ஆழமாகாமல் ஓரளவிற்குத் தடுத்து நிறுத்தி இருக்கிறது.
மெக்சிகோவின் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்குப் பதிலாக, அது அமெரிக்காவிற்கு மிகவும் அருகில் இருப்பது, அதனுடனான சுதந்திர வர்த்தகம், அங்கிருந்து வரும் முதலீடுகள் ஆழமான வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது, பாரம்பர்யமாக இருந்து வந்த விவசாயத்தை வீழ்ச்சியடையச் செய்து விட்டது, மெட்ரோ நகரங்களில் இருந்த சில்லரை வர்த்தகர்களுக்கு முடிவு கட்டிவிட்டது.  நான் மெக்சிகோவில் இன்று நான் பார்த்த காட்சி, இந்தியாவிற்கும் வர வெகு காலமாகாது.
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மெக்சிகோவைவிட நம் நாட்டில் நெருக்கடி நிலைமை மேலும் மோசமானதாக இருக்கும்.  ஏனெனில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து சென்றிட அண்டை நாடாக அமெரிக்கா இங்கே இல்லை. பெட்ரோல் உற்பத்தியோ அல்லது சுற்றுலாத்துறையோ மெக்சிகோவில் இருப்பதுபோல் இங்கு கிடையாது. எனவே நிலைமைகள் இங்கே மெக்சிகோவைவிட மிகவும் மோசமானதாக இருந்திடும்.
(கட்டுரையாளர், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சமூக விஞ்ஞானத்துறைத் தலைவர்)
தமிழில்: ச.வீரமணி

Thursday, December 20, 2012

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து-இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஊழியர்கள் பங்கேற்ற பேரணி












மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து
இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஊழியர்கள் பங்கேற்ற பேரணி
புதுதில்லி, டிச. 20-
மத்திய அரசின் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள்-மத்திய மாநில அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கலந்து கொண்ட நாடாளுமன்றம் நோக்கி நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணியால் இன்று தில்லி மாநகரமே ஸ்தம்பித்தது.  இப்பேரணிக்கு ஐஎன்டியுசி உட்பட சிஐடியு, ஏஐடியுசி, யுடியுசி, எச்.எம்எஸ். உட்பட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனம், அகில இந்திய மாநில  அரசு ஊழியர் சம்மேளனம், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பாதுகாப்புத்துறை ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் அறைகூவல் விடுத்திருந்தன.
நாடாளுமன்ற வீதியில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணி/ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே பத்மநாபன், பொதுச் செயலாளர் தபன்சென், ஏஐடியுசி பொதுச் செயலாளர் குருதாஸ்தாஸ் குப்தா, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் யெலாளர் சுகுமால் சென், தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் எம். சண்முகம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.
பேரணி நடைபெற்றுக்கொண்டிருக்கையில் தீக்கதிர் செய்தியாளருக்கு ஏ.கே. பத்மநாபன் கூறியதாவது:
‘‘ வருகிற 2013 பிப்ரவரி 20-21 அன்று நாடெங்கிலும் உள்ள அனைத்துத் துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களும்ஊழியர்களும் மத்திய அரசாங்கத்தினுடைய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் பொது வேலைநிறுத்தம் நடத்துவது என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக இன்று (டிசம்பர் 20ஆம் தேதி) நாடாளுமன்றம் நோக்கி நடைபெறுகிற இப்பேரணி/ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களைச் சார்ந்த தொழிலாளர்களும், தேசிய சம்மேளனங்களின் ஊழியர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டிருப்பதானது, பிப்ரவரி  20-21 வேலை நிறுத்தத்தை உறுதிப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது.
மத்திய அரசினுடைய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து 2009 முதல் நடைபெற்று வரும் போராட்டங்களினுடைய தொடர்ச்சிதான் இது. நேற்றும், நேற்றைக்கு முன்தினமும் (டிசம்பர் 18-19) தேதிகளில்)- பல்வேறு மாநிலங்களிலும் சாலை மறியல், சிறை நிரப்பும் போராட்டம் என நடைபெற்ற போராட்டங்களில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களிலும் பங்கேற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறுகிற இந்தப் பேரணியும் பிப்ரவரி 20-21 நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கு எடுக்காட்டாக அமைந்துள்ளது.
மத்திய அரசைப் பொறுத்த மட்டிலும் அது தொழிலாளர்களுடைய, ஊழியர்களுடைய கோரிக்கைகளைப் பற்றி, பிரச்சனைகளைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. இன்று இதே நாளில் நாடெங்கிலும் உள்ள வங்கித்துறை ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து வங்கித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரால் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை அழிப்பதை எதிர்த்தும், இந்திய வங்கித் துறையை தனியார் பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைக்கக்கூடிய நடவடிக்கையை எதிர்த்தும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.     
பல்வேறு மாநிலங்களிலும் ஓய்வூதியம் கோரியும், டிசம்பர் 12 அன்று பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து. ஓய்வூதியம் சீர்திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் மற்றக் கோரிக்கைகளுக்காகவும் போராடியிருக் கிறார்கள்.
சென்ற டிசம்பர் 15 அன்று சென்னையில் மத்திய பொதுத்துறையைச் சார்ந்த சங்கங்ளின் சார்பில் பிப்ரவரி 20-21 வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக முடிவுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள் என அனைத்துப் பகுதி தொழிலாளர்களும் நடத்திடும் இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சி, நிச்சயமாக வரும் பிப்ரவரி 20-21 தேதிகளில் நடைபெறவிருக்கிற வேலைநிறுத்தம் வரலாற்றுச் சிறப்புமிக்க வேலைநிறுத்தமாக அமையும் என்பது நிச்சயம்.’’
இவ்வாறு ஏ.கே. பத்மநாபன் கூறினார்.
(ந.நி.)
(படங்கள் இணைத்திருக்கிறேன்.)
  

Friday, November 30, 2012

முற்றிலும் தவறான வாதம்


நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட் டத்தொடர் முதல் நான்கு நாட்கள் முற்றிலுமாக சீர்குலைக்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்ட பின்னர், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசாங்கம் ஒரு சிறுபான்மை அரசாங்க நிலைக்குச் சுருங்கிவிட்டது. எனவே அது, சில்லரை வர்த் தகத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திடும் அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கொண்டுவந்துள்ள தீர்மானம் வாக் கெடுப்புக்கு விடப்படும் சமயத்தில் அரசு தனக்கு ஆதரவாகப் பெரும்பான்மையைப் பெற வேண்டும் என்பதற்காக கால அவகாசத் தைப் பெறும் பொருட்டு, இவ்வாறு சீர்குலைவு வேலைகளை அனுமதித்துக் கொண்டிருக்கிறது. சென்ற திங்களன்று நடைபெற்ற அனைத் துக் கட்சிக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட் சியும், சமாஜ்வாதிக் கட்சியும் தங்கள் மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்திய பின்னர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தாங்கள் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு குழுவாக(B-team) செயல்படுவோம் என்றும், வாக் கெடுப்புடன் கூடிய விவாதத்தை வலியுறுத்த மாட்டோம் என்றும் தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய பின்னர், காங்கிரஸ் கட்சி செவ்வாயன்று ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் கூட் டத்தைக் கூட்டியது.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிராக இடது சாரிகள் மற்றும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் விடுத்திருந்த தேசிய அளவிலான கடைய டைப்புப் போராட்ட அறைகூவலை ஆதரித்த திராவிட முன்னேற்றக் கழகம், ‘‘ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கத்திற்கு எதிராக வாக்க ளிக்க மாட்டோம் என்றும், அவ்வாறு செய்தால் அது வகுப்புவாத பாஜகவிற்கு பயனளிக் கலாம்’’ என்றும் கூறி தற்போது தலைகீழாய்க் கவிழ்ந்துவிட்டது. அடல் பிகாரி வாஜ்பாயின் தலைமையிலான பாஜகவின் அமைச்சர வையில் முழுமையாக இருந்த ஒரு கட்சியிட மிருந்து இவ்வாறு விசித்திரமான முறையில் விளக்கம் வந்திருக்கிறது. திரைமறைவில் எது நடந்திருந்த போதிலும், திமுகவின் முடிவின் மூலம் சிறுபான்மை ஐ.மு.கூட்டணி-2 அர சாங்கம் மீண்டும் ஒருமுறை ஒரு பெரும்பான் மையை எப்படியோ சமாளித்துப் பெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டத்திலிருந்து வெளியே வந்தபின், பிரதமர் தங்களுடைய அரசாங்கம் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு எதிராக எந்த வகையான தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும், அதனைத் தோற்கடிக்க பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது என்று மிகவும் பெருமையாகப் பீற்றிக்கொண்டிருக் கிறார். ஆயினும், நாம் இதனை அச்சுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் வரை, இது தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. (வெள்ளிக்கிழமையன்று உள்ள நிலவரப்படி மக்களவையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு மக்களவை சபாநாயகர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.) அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர்கள் ‘‘அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புக்குக் கீழ் வரும் நிர்வாக முடிவுகளின் (executive decision) மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை’’ என்கிற வாதத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய முன்னுதாரணம் 2001 மார்ச் 1 அன்று மக்களவையில் ஏற் கனவே இருந்திருக்கிறது, பால்கோ எனப் படும் பாரத் அலுமினியம் கம்பெனியின் பங்கு களைத் தனியாருக்குத் தாரை வார்த்திட அரசு மேற்கொண்ட நிர்வாக முடிவுகளுக்கு எதிராக விவாதம் நடைபெற்று, வாக்கெடுப்பும் நடந்தது.
பல்துறை சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திடும் முடிவு ஒரு நிர்வாக முடிவு என்று கூறப்படுவதானது முற்றிலும் தவறான ஒன்றாகும். இத்துறையில் அந்நிய நேரடி முதலீடு என்பது 1999ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி மேலாண் மைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்திற்கிடமின்றி தடைசெய்யப்பட்டுள்ள ஒன்றாகும். அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடிய விதத்தில் எவ்விதமான முடிவினை மேற் கொள்வதாக இருந்தாலும், 1999ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட் டத்தின் விதிமுறைகளில் திருத்தம் செய்தாக வேண்டும். அதனை இந்திய ரிசர்வ் வங்கி செய்திருக்கிறது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கை எதுவும் அளிக்காது. இவ் வாறு திருத்தம் செய்தமைக்கு எதிராக, இவ் வாறு திருத்தம் செய்தது தொடர்பாக உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று அரசாங்கத்திற்கு எதிராகக் குற்றம் சாட் டப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதன் மீது, 2012 அக்டோபர் 15 அன்று உச்சநீதிமன்றம் ‘‘இதன்மீது உரிய சட்ட நடைமுறைகள் பின் பற்றப்படவில்லை’’ என்று அரசுக்குச் சுட்டிக் காட்டியபோது, அரசுத்தரப்பில் ஆஜரான அட் டார்னி ஜெனரல் ‘‘இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி தேவையான திருத்தத்தை இரு வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட விதிமுறை களில் செய்திடும்’’என்கிற உறுதிமொழியை உச்சநீதிமன்றத்திற்குக் கொடுத்திருக்கிறார். அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி, பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முத லீட்டை அனுமதிப்பதற்கு வகை செய்யக் கூடிய விதத்தில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் செய்துள்ளது. இது, 2012 அக்டோபர் 30 அரசிதழிலும் பிரசுரிக்கப் பட்டுள்ளது. 1999ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் 48ஆவது பிரிவு, இந்திய ரிசர்வ் வங்கியால் இச்சட்டத்தின் விதிமுறைகளில் எவ்விதமான திருத்தம் கொண்டுவரப்பட்டாலும் அது ‘‘எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக’’ (“as early as possible”) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும், அவ்வாறு தாக்கல் செய் யப்பட்டபின், இந்திய ரிசர்வ் வங்கியின் திருத் தத்தின் மீது இரு அவைகளில் எந்த அவையி லிருந்தாவது எந்த உறுப்பினராவது திருத்தம் கொண்டுவர முடியும்.
இந்திய ரிசர்வ் வங்கி யின் திருத்தம், சட்டப்படி செல்லாது என்று கூட திருத்தம் கொண்டுவர முடியும். அத் தகைய திருத்தத்தை உறுப்பினர் 30 நாட் களுக்குள் கொண்டுவர வேண்டும். அவ்வாறு உறுப்பினர் திருத்தம்கொண்டுவரம் பட்சத்தில் அது அவையின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானிக்கப்பட வேண்டும். இதுவும் வாக்கெடுப்பின் மூலம் மட்டும்தான் நடத்தப்பட வேண்டும்.எனவே, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்கிற முடிவு ஏற்கனவே உள்ள சட்டங்களின் கீழான ஒரு நிர்வாக முடிவு (executive decision) அல்ல, மாறாக அவ்வாறு அரசு முடிவு எடுக்க வேண் டுமானால், அதற்கு ஏற்கனவே இருந்துவரும் சட்டத்தில் திருத்தம் செய்தாக வேண்டும். நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத் தின்கீழ், இவ்வாறு சட்டத்தின் கீழ் திருத்தங் களை நிர்வாகமோ (அதாவது அரசாங்கமோ) அல்லது நீதித்துறையோ செய்துவிட முடியாது. சட்டங்களை உருவாக்குவதற்கு, அல்லது ஏற் கனவே இருந்துவரும் சட்டங்களில் திருத் தங்களைக் கொண்டுவருவதற்கு, அதிகாரம் படைத்த ஒரே அமைப்பு நாடாளுமன்றம் மட் டும்தான். இவ்வாறு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற் கான முடிவை நாடாளுமன்றம் மட்டுமே எடுத் திட முடியும். எனவே இவ்வாறு நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் இதில் அரசாங்கம் முடிவு எடுக்க முடியாது என்று ஆணித்தர மாக அறிவுறுத்தியிருக்கிறது. நாட்டில் உள்ள இத்தகைய நடை முறையை புறக்கணித்திட, அழித்திட, அல்லது பயனற்றதாக்கிட அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் வெற்றிபெற அனு மதித்திட முடியாது. உச்சநீதிமன்றத்தின் நிர்ப் பந்தத்தின் காரணமாகத்தான் அரசாங்கம் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத் தின் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர முன்வந்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள மனுதாரர், அரசாங்கம், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத் தின் 48ஆவது பிரிவின்படி நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் இவ்வாறு தான் செய் துள்ள திருத்தங்களை தாக்கல் செய்யாது இருந்துவிடலாம் என்கிற தன் ஐயுறவுகளை (apprehensions) உச்சநீதிமன்றத்தில் வெளிப் படுத்தியபோது, உச்சநீதிமன்றம் தற்போது நடைபெற்றுவரும் குளிர்காலக் கூட்டத் தொடர் முடியும் வரை பொறுத்திருங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறது. ஒருவேளை அர சாங்கம் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் 48ஆவது பிரிவின் ஷரத்துக் களைப் பின்பற்றாது இருந்துவிடுமானால், பின்னர் மனுதாரர் அதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தை மீண்டும் அணுகமுடியும் என்று உச்சநீதிமன்றம் மனுதாரருக்குக் கூறியிருக் கிறது. நாட்டில் அமலில் உள்ள சட்டங்கள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை எனில், பின் உச்சநீதிமன்றமானது நிச்சயமாக இதில் தலையிடும் என்பது தெளிவாகி இருக்கிறது.இவ்வாறு, இந்தப் பிரச்சனை தொடர்பாக ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம், நாடாளுமன் றத்தில் வாக்கெடுப்பினைத் தவிர்த்திட எவ் வித வழியும் கிடையாது. ஆயினும், காங்கிரஸ் கட்சியானது கடந்த காலங்களில் செய்ததைப் போலவே இப்போதும் எப்படியாவது பெரும் பான்மையைப் பெற்றிட அனைத்துவிதமான வழிகளிலும் இறங்கியிருக்கிறது.
1993இல் சிறுபான்மை காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்த போது, அதனைத் தோற்கடிக்க இத் தகைய இழி வகைகளில் அது இறங்கியது. ஜார்கண்ட் கையூட்டு வழக்கில் அது வெட்ட வெளிச்சமாகியது. 2008இல் இந்திய-அமெ ரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்திற்கு வெளியி லிருந்து அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டபோது, அவர்கள் மிகவும் வெட்கங் கெட்ட முறையில் குதிரை பேரம் நடத்தி வாக் குகளைப் பெற்று வென்றார்கள். வாக்கு களுக்குப் பணம்அளித்த ஊழல் மூலம் அது வெட்டவெளிச்சமாகியது. அதேபோன்று தற்போதும் நாடாளுமன்றத்தில் பெரும்பான் மையைப் பெறுவதற்காக இவர்கள் மேற் கொள்ளும் பேரங்கள் நாட்டின் முன் அம் பலமாவதற்கு அதிகக் காலம் பிடிக்காது.எப்படிப் பார்த்தாலும், நாட்டின் நலன், அதன் பொருளாதாரம் மற்றும் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிட, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடை அனுமதிப்பது தொடர்பாக வாக் கெடுப்புடன் கோரிய விவாதத்தை நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரும், வாக்கெடுப்பு வரும்போது சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிராக வாக்களித்திடும்.
தமிழில்: ச.வீரமணி