இந்திய - அமெரிக்க இராணுவம் சாரா அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்ப தற்காக, இடதுசாரிகள் மீது, அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது சேற்றை வாரி வீசுவதென்பது ஓர் உச்சநிலைக்கு வந்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஊதுகுழலாகச் செயல்படுபவர்கள் மற்றும் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகப் பொய் யும் புனைசுருட்டும் கலந்து மிகவும் கீழ்த்தரமான தாக்குதலைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ் வாறான இழிவான பிரச்சாரத்தில் கடை சியாக வந்திருப்பது, பாகிஸ்தானில் இந்தியாவின் ஹை கமிஷனராக இருந்த ஜி. பார்த்தசாரதி கட்டுரையாகும். இவர் 2008 ஜூன் 9, ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’, நாளிதழில் ‘ரெட் ஸ்டார் ஓவர் சவுத் பிளாக்’ (சவுத் பிளாக்- புதுடில்லி யில் பிரதமர் அலுவலகமும், பாதுகாப்புத் துறை அலுவலகமும் இயங்கும் இடம்) என்னும் தலைப்பில் எழுதியுள்ள கட்டு ரையில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு முட்டுக்கட்டை போட் டுக் கொண்டிருப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது மிகவும் கீழ்த்தர மான முறையில் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். அவருடைய அவதூறின் அடிநாதமாக இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ‘இந்தியாவை சீனாவின் சார்பு நாடாக மாற்ற உறுதி பூண்டி ருக்கிறது’ என்பதாகும்.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக இவ்வாறான தாக்குதல்கள் இதற்கு முன்பும் வந்திருக்கின்றன. மார்க்சிஸ்ட் கட் சிக்கு எதிராக எழுதிக்கொண்டே, இந்திய ஆளும் வர்க்கங்களையும் அ-ரிக்க ஏகாதிபத்தியத்தையும் துதி பாடு பவர்களுக்கு, பிற்போக்கு சக்திகளிடமிருந்தும், கணிசமான அளவில் ஆதாயம் வருவதால், இவ்வாறு கூலிக்கு மாரடிக் கும் கூட்டம் தொடர்ந்து நம்மீது அவ தூறை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்று மில்லை. “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவின் நலன்களுக்காகவே செயல்படுகிறது” என்று கூட ஓய்வு பெற்ற இந்திய உளவு ஸ்தாபன அதிகாரி ஒருவர் மார்க்சிஸ்ட் கட்சி மீது வசைமாரி பொழிந்திருந்தார். (‘இந்துஸ்தான் டைம்ஸ்’ 2007 ஆகஸ்ட் 21 நாளிதழில் பி.ராமன் என்பவர் ‘மஞ்சூரியன் வேட் பாளர்கள்’ என்ற தலைப்பிலான கட்டுரையில்) மேற்படி கட்டுரையில் அந்தப் பேர்வழி, ‘‘மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் தற்போதைய ஐ.மு.கூட்டணி அர சாங்கத்தை நிர்ப்பந்தித்து ஆயிரம் சீனப் பொறியாளர்களுக்கு விசா வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்’’ என்று அபாண்டமான முறையில் கட்சி மீது குற்றச்சாட்டுகளை ஏவியிருக்கிறார். அவ்வாறு அவர் எழுதியதற்கு ஒரு மயி ரிழை ஆதாரத்தைக் கூட காட்டவில்லை, காட்ட வேண்டும் என்று கருதவும் இல்லை. இத்தகைய பேர்வழிகளின் கூடார மாக நம் உளவு ஸ்தாபனங்கள் கடந்த காலங்களில் விளங்கியதால்தான், இந்தியா ஒரு பிரதமரை இழந்தது, ஒரு முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் பேர்வழி இப்போது ஓய்வு பெற்று விட்டார். ஆயினும் இவ்வாறு நம் மீது சேற்றை அள்ளிவீசுவதன் மூலம், ஓய்வுக் காலத்தில் மிகவும் சுகபோகத்தில் திளைக்க வாய்ப்புகள் தன்னைத் தேடி வரலாம் என்ற நப்பாசை இவருக்கு இருக்கக் கூடும். இதேபோன்ற குற்றச்சாட்டுகளை நம்மீது சுமத்துவதற்கு இந்திய கார்ப்ப ரேட் நிறுவனங்களும் இப்போது முன்வந் துள்ளன. பிக்கி (FICCI) பொதுச்செய லாளர், டாக்டர் அமித் மித்ரா, தி டைம்ஸ் ஆப் இந்தியா, 2008 ஏப்ரல் 10 நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில், இதேபோன்ற குற்றச் சாட்டுகளை அள்ளிவீசியிருக்கிறார்.
இவை அனைத்துமே கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருப்பதால், இவர்கள் நம்மீது வீசியுள்ள குற்றச்சாட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பரிசீலிப் போம். முதலில் சீனாவிற்கு ஆதரவாகத் தான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு கொடுத்து வருகிறோம் என்பதை எடுத்துக்கொள்வோம். கட்சி உருவான, முதல் இருபதாண் டுகளில், உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை எதிர்த்தன என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான வரலாறு தெரிந்த அனைவருக்கும் தெரி யும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைத் திசைவழிகள், நாட்டு நலனுக்கும் நாட்டு மக்களின் நலன்களுக்கும் எது சரியென்று உணர்கிறதோ அதன் அடிப்படையில்தான் எப்போதுமே தீர்மானிக்கப்பட்டு வந்திருக்கின்றன. எனவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடிகளில் இந்தியாவின் இறையாண்மையை சரண் செய்திட ஆவலுடன் துடித்துக் கொண்டிருக்கும் பேர்வழி கள், நாட்டுப்பற்று குறித்து நமக்குச் சான்றிதழ் வழங்குவதிலிருந்தும், நமக்கு தேவையற்ற முறையில் அறிவுரை வழங் குவதிலிருந்தும் தங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. நம்மீது பழிதூற்றுவோர் உண்மையிலேயே யோக்கியமானவர்களாக இருப்பின், நாம் வைத்திடும் விமர்சனங்களுக்கு நேர்மையான முறையில் பதில் கூற வேண்டுமேயொழிய, நய வஞ்சக வேலைகளில் ஈடுபடக்கூடாது.
இந்தியாவின் அணுசக்தி இராணுவ வல்லமையை மட்டுப்படுத்திட செய்திடும் எந்த முயற்சியும் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கே மிகப்பெரிய அளவில் உதவிடும் என்று ஆவேசமாக அவர்க ளால் வாதிடப்படுகிறது.
இந்திய - அமெ ரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை தீவிர மாக ஆதரித்து நிற்போர், அவ்வாறு செய்வதன் மூலமாக நம் அண்டை நாட் டுக் காரர்களுக்குத்தான் அனுகூலத்தை அளித்திட விரும்புகிறார்கள் என்று நாம் அவர்களுக்கு எதிராகத் திருப்பிக் கேட் கலாமா? இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்ப வர்கள்தான் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் கட்டளைக்கிணங்க செயல்படுகிறார்கள் என்று நாமும் குற்றம் சுமத்த முடியும்.இத்தகைய அவதூறுப் பிரச்சாரம் அன்னியில், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதன் மூலம் நாம் இந்தியாவின் எரிசக்தி வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருக் கிறோம் என்றும் நம்மீது குற்றம் சுமத்தப் படுகிறது. குறிப்பாக, உலக அளவில் எண்ணெய் விலைகள் வானத்தை நோக்கி உயர உயரப் போய்க்கொண் டிருக்கும் சமயத்தில்தான் இவ்வாறு குற்றம் சுமத்தப்படுகிறது. ஆயினும், கீழ்க்கண்ட உண்மைகளைச் சற்றே பரி சீலனை செய்திடுங்கள். இந்தியாவின் தற்போதைய மின் உற்பத்தியின் அளவு 127 ஜிகா வாட்ஸ்களாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்போதைய வளர்ச்சிவிகிதத்தின்படி, இது 2016-17 வாக்கில் 337 ஜிகா வாட்ஸ்களாக வளரவேண்டியது அவசியம். இதனை நாம் எய்திடாவிட்டால், இந்தியாவில் போடப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் கடுமையாக சுருக்கப்பட வேண்டியிருக் கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆயினும் அணுசக்தி மூலம் மின் உற்பத் தியை விரிவாக்கம் செய்திடுவதுதான் சிறந்ததோர் வழியா என்பதே நாம் முன்வைத்திடும் கேள்வியாகும்.2006இல் அணுசக்தி மூலம் 3.9 ஜிகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்யப் பட்டது. இது நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 3 சதவீதமாகும். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறை வேறி, அமல்படுத்தப்பட்டால், இவ்வாறு அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வ தென்பது 2016 வாக்கில் அதிகபட்சமாக 20 ஜிகா வாட்ஸ் இருந்திடலாம் அல்லது நம் நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள மொத்த மின் உற்பத்தியில் 6 சதவீதத்திற்கும் சற்றுக் கூடுதலாக இது அமைந்திடலாம். மேலும், அணுசக்தி மூலம் மின் உற் பத்தி செய்வது சிக்கனமானதா? நிச்சயமாகக் இல்லை. மாறாக இது தான் மிகவும் செலவுபிடிக்கக்கூடியது. நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்படுவது டன் ஒப்பிடுகையில், அதைவிட ஒன் றரை மடங்கு செலவு பிடிக்கக்கூடியது. எரிவாயு மூலமாக மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தியோடு ஒப்பிட்டால், அணு சக்தி மூலமான மின் உற்பத்தி இரு மடங்கு செலவு பிடிக்கக்கூடியது. இதேபோன்றதுதான் நீர் மின் உற்பத்தி செலவினமும். இந்தியாவில் நிலக்கரி இருப்பு அபரிமிதமான அளவில் இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்தி யாவில் அனல் மின்சார உற்பத்தி முறை தான் மின் உற்பத்திக்கு மிகச்சிறந்த முறை என்று திட்டக் கமிஷன் மதிப்பிட் டிருக்கிறது. நீர்மின் உற்பத்தியைப் பொறுத்த வரை நாட்டில் சுமார் 150 ஜிகாவாட்ஸ் அளவிற்கு மின் உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்றுள்ள போதிலும், 2006இல் 33 ஜிகாவாட்ஸ் உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்குத்தான் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின் றன. கூடுதலாக, மேலும் 55 ஆயிரம் மெகா வாட் நேபாளம் மற்றும் பூடானி லிருந்து நாம் இறக்குமதி செய்திட முடி யும். இவ்வாறு நீர் மின் உற்பத்தியை அதிகப் படுத்துவதன் மூலமாக, அணு சக்தி மூலம் மின் உற்பத்தி செய்திடும் செலவினத்தில் பாதியளவு மட்டும் செலவு செய்து, நம்முடைய எரிசக்திக் கொள்ள ளவை அதிகரித்திடலாம் என்பதோடு மட்டுமல்லாமல், ஒவ்வோராண்டும் ஆயி ரக்கணக்கான மனித உயிர்களைக் காவு வாங்கும் ஆறுகளின் ஆக்ரோஷத் தையும் பணிய வைத்து வசப்படுத்திட முடியும். இவ்வாறாக, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமானது இந்தியா வின் எரிசக்தி வள ஆதாரங்களை அதி கரித்திட உதவும் என்கிற அரசுத்தரப்பு வாதத்தில் பசையேதும் இல்லாததால் அதனை ஏற்றுக்கொள்வதற்கில்லை. இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந் தம் நிறைவேறினால், அணு ஈனுலை களை வாங்குவதற்காக, அமெரிக்க நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இந்தியா அளித்திட வேண்டும். இதனால் மிகப்பெரிய அள வில் இலாபம் ஈட்டும் அமெரிக்கப் பன் னாட்டு நிறுவனங்கள் அவற்றில் ஒரு சிறு துளியை இந்தியாவில் உள்ள கார்ப் பரேட் நிறுவனங்களுக்கு அளித்திட லாம். அமெரிக்கா, தன்னுடைய சொந்த நாட்டில், கடந்த முப்பதாண்டுகளில் ஓர் அணு ஈனுலையைக் கூட நிறுவிடவில் லை என்பதை நினைவில் கொள்ளுங் கள். பின் ஏன் நாம் அமெரிக்காவின் பொருளாதார நலன்களுக்கு முட்டுக் கொடுப்பதற்காக இந்த ஒப்பந்தத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? இந்த ஒப்பந்தம் ஏற்பட்டால் அதில் நாம் முதலீடு செய்திடும் தொகையை, நம் நாட்டில் நீர், நிலக்கரி, வாயு, சுத்தமான புதுப்பிக்கப் படாத (ஊடநயn nடிn-சநநேறயடெந) மற்றும் சூரியஒளி ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தியில் ஈடுபட்டோ மானால் நம் நாட்டின் எரிசக்தி வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்திடும். இவ்வாறு, அணுசக்தி ஒப்பந்தமானது இந்தியா விற்கு, இராணு வம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களிலும் சுயேட்சையான அயல்துறைக் கொள் கையிலும் மிகப்பெரிய அளவிற்கு ஊனப்படும் நிலையை உருவாக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், நம்முடைய அற்ப அளவிலான வள ஆதாரங்களை யும் பெருமளவிற்கு வற்ற வைத்துவிடும். இந்த ஒப்பந்தமானது, எதிர்காலத் திலும் இந்தியாவின் இறையாண் மைக்கு நிலையான பாதிப்புகளைக் கொண்டுவந்திடும். இதுபோன்ற பிரச் சனைகள் எதைப்பற்றியும் கவலைப்படா மல், இவற்றிற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்ற கவலையும் இல்லாமல், இடதுசாரிகள் மீது சீனாவுக்கும் பாகிஸ் தானுக்கும் விசுவாசமாக இருக்கிறார் கள் என்று அவதூறை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவும் சமீ பத்தில் நடைபெற்ற அதன் தேசிய செயற் குழுக் கூட்டத்தில் இதேபோன்று நம்மீது அவதூறை அள்ளிவீசியது. இன்றைய சூழ்நிலையில், ஒரு பல் துருவ உலகக் கோட்பாட்டை நோக் கியே சர்வதேச உறவுகள் அமைந்திட வேண்டும் என்பதே இயற்கையான போக்காகும். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதனை ஓர் ‘ஒருதுருவ உலகக் கோட்பாடாக’ சீர்குலையச் செய்து, உலக நாடுகளை தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர அனைத்து விதமான சாகசங்களையும் செய்து கொண்டிருக்கிறது. வளர்முக நாடுக ளின் தலைவனாக கடந்த காலங்களில் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து செயல்பட்டு வந்த இந்தியா, அதில் உறுதியாக நின்று பல்துருவ உலகக் கோட்பாட்டை உயர்த் திப்பிடித்திட உறுதியாக இருந்திட வேண் டும். அதைவிடுத்து, அமெரிக்க ஏகாதி பத்தியத்துடன் இணைந்துகொண்டு, ‘ஒருதுருவ உலகக் கோட்பாட்டை’த் திணித்தால், உலக அரசியலில் இந்தியா விற்கு இருந்து வந்த தனித்தன்மை கரைந்து காணாமல் போய்விடும். நாட்டின் நலன்களையும், நாட்டு மக் களின் நலன்களையும் பாதுகாத்திட இடதுசாரிகள் கோருவது இதுதான்.
தமிழில்: ச.வீரமணி