Sunday, February 5, 2017

டிரம்ப் ஆட்சியின் முதல் பத்து நாட்கள்




People’s Democracy தலையங்கம்

டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டபின், முதல் பத்து நாட்களில் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை ஆராய்ந்தோமானால் அவர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது வெளிப்படுத்திய வெறித்தனமான பேச்சிற்கு உண்மையாக இருக்கிறார் என்பதைக் காணமுடியும். டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள நிர்வாக உத்தரவுகள் அவர் எந்த அளவுக்கு அமெரிக்காவில் குடியேறி யிருப்பவர்களுக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு எதிராக, பெரும்வர்த்தகப் புள்ளிகளுக்கு ஆதரவாகஇருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும். அவர் பிறப்பித்த நிர்வாக உத்தரவுகளில் முதலாவது, மெக்சிகோவுடனான எல்லையில் சுவர் கட்டி எழுப்புவது தொடர்பானதாகும். சட்ட விரோதமாகக் குடியேறுபவர்களைத் தடுத்திட இது தேவை என்று டிரம்ப் கூறுகிறார். மேலும் டிரம்ப், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல, இவ்வாறு கட்டி எழுப்பப்படும்சுவருக்கான செலவையும் மெக்சிகோவேஏற்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார். மெக்சிகோ ஜனாதிபதி இதனைச் செய்யமுடியாது என்று கூறி மறுத்திருக்கிறார். தற்போது டிரம்ப் நிர்வாகம் மெக்சிகோவிலிருந்து வரும் பொருள்களுக்கு 20 சதவீதம்கூடுதல் வரி விதித்து அதன்மூலம் சுவர் கட்டுவதற்கான செலவுத் தொகையை எடுத்துக் கொள்வோம் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறது. டிரம்ப் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு குழாய்வழி திட்டங்களை ((the Keystone XL and the Dakota Access pipeline projects)) மறு ஆய்வுக்கு உட்படுத்திடவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதனை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அமெரிக்க பழங்குடியின மக்களும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இந்தக் குழாய் வழி திட்டங்களுக்கான தடையை நீக்குவதன் மூலம் டிரம்ப் எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் வலுவான முறையில் ஈடுபட்டிருப்பவர்களின் நலன்களுக்கு சேவகம் செய்திட முன்வந்தி ருக்கிறார். டிரம்ப் பிறப்பித்த உத்தரவுகளிலேயே மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய உத்தரவு எதுவெனில் ஏழு முஸ்லிம் நாடுகளிலிருந்து மக்கள் எவரும் அமெரிக்காவிற்குள் வர தடை விதித்திருப்பதாகும். ஈரான், இராக், சிரியா, சூடான், லிபியா, ஏமன் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளிலிருந்து 90 நாட்களுக்கு மக்கள் எவரும் – அவர்களிடம் உரிய விசா இருந்தாலும் கூட – அமெரிக்காவிற்குள் வரத்தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அகதிகள் கூட 120 நாட்களுக்கு வருவதற்கான அனுமதி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. சிரியாவிலிருந்து நிரந்தரமாகவே அகதிகள் வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், இராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் அகதிகளில் கிறித்தவர்கள் இருந்தால் அவர்கள் மட்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெளிவுபடுத்தி இருக்கிறது. இவற்றின் காரணமாக உரிய விசாக்களுடன் இந்நாடுகளிலிருந்து வந்து அமெரிக்காவின் விமானநிலையங்களில் தரை இறங்கிய நூற்றுக்கணக்கான மக்கள் விமான நிலையங்களிலேயே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான அப்பட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள வெறித்தனமான நடவடிக்கைக்கு உலகம் முழுதுமிருந்து கண்டனம் எழுப்பப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டணி நாடுகளான ஜெர்மனியும், பிரான்சும் இந்த நடவடிக்கையை விமர்சித்திருக்கின்றன. அமெரிக்காவிற்குள்ளும் கூட, பெரிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு வெளியே மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டு இவ்வாறு தடை விதித்திருப்பது, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், அமெரிக்கனின் குணத்திற்கு எதிரானது என்றும் கண்டன முழக்கங்கள் எழுப்பி இருக்கிறார்கள். இதில் வேடிக்கையான வினோதம் என்னவென்றால், இத்தகைய வெறித்தனமான நடவடிக்கையை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வரவேற்றிருப்பதாகும். தங்கள் நாட்டில் முஸ்லிம்கள் வாழ்வதை அமெரிக்காவால் சகித்துக்கொள்ள முடியாது என்று தாங்கள்கூறி வந்ததை இந்த நடவடிக்கை நிரூபித் திருக்கிறது என்று அது கூறியுள்ளது. அமெரிக்க அதிபரின் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடு, ஜிஹாதி மற்றும் தீவிரவாத சக்திகளுக்கே ஊக்கம் அளிக்க உதவிடும். மேலும் டிரம்ப் தன்னு டைய ‘‘அமெரிக்கா முதலில்’’ (“America first”)) கொள்கையையும் செயல்படுத்த முன்வந்திருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது உறுதியளித்தபடி டிரம்ப், பசிபிக் நாடுகளுக்கிடை யிலான கூட்டமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஆசியன் நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கிடையே முன்மொழியப்பட்ட 12 நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் ஒபாமா நிர்வாகத்தால் சீனாவைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகும். பசிபிக் நாடுகளுக்கிடையிலான கூட்டமைப்பு (டிபிபி) என்பதும், ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான அட்லாண்டிக் நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் மூலதனக் கூட்டமைப்பு என்பதும் சம்பந்தப்பட்ட நாடுகளின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கக்கூடிய விதத்தில் அந்தந்த நாடுகளில் உள்ள கார்ப்பரேட்டுகளின் அதிகாரத்தை வலுப் படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டவைகளாகும். இந்த ஒப்பந்தங்களின் மூலம் கார்ப்பரேட்டுகள் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள ஆட்சியாளர்கள் தங்கள் நலன்கள் காப்பாற்றப்பட என்ன என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். டிபிபியை ரத்து செய்வது அமெரிக்க கார்ப்பரேட்டுகளில் ஒருசில பிரிவினருக்கு ஏற்புடை யதல்ல என்ற போதிலும், டிரம்ப் அவர்களுக்கு வரிச்சலுகைகள் மற்றும் பல்வேறு சலுகைகள் அளிப்பதாக உறுதிமொழி அளித்திருக்கிறார். கார்ப்பரேட் வரியை 35 சதவீதத்திலிருந்து 15 முதல் 20 சதவீதத்திற்கு வெட்டிக் குறைப்பதாக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவேன் என்று கூறியிருக்கிறார்.
டிரம்ப் இவ்வாறு ஏராளமாக உத்தரவுகள் பிறப்பித்திருக்கக்கூடிய சூழ்நிலையில், மோடி அரசாங்கம் இவற்றையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்க்கக்கூடிய நிலையைத்தான் எடுக்க முடிந்திருக்கிறது. டிரம்பின் வெற்றி, நரேந்திர மோடியாலும், பாஜகவாலும் வரவேற்கப்பட்டது. ஏனெனில் அவரை அரசியல்ரீதியாகவும், சித்தாந்தரீதியாகவும் தங்கள் உடன்பிறப்பு என்றே பார்க்கிறார்கள். குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான அவரு டைய நிலைப்பாடு அவர்களை வெகுவாகவே கவர்ந்திருக்கிறது.
ஆயினும், டிரம்ப் நிர்வாகத்தின் சமீபத்திய நடவடிக்கை, இந்தியாவில் பலரதுகண்டனத்திற்கும், கவலைக்கும் ஆளாகியுள்ளது. இந்தியர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்திட அமெரிக்காவிற்கு செல்வதற்கான எச்-1பி விசாக்கள் வழங்குவ தற்கான விதிமுறைகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர டிரம்ப் உத்தேசித்திருக்கிறார். ஐந்து உயர் நிறுவனங்கள், தங்களுடைய ஐ.டி. இருப்பில் சந்தை மதிப்பில் 33 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பினை அடைந்திருக்கின்றன.
மோடி அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அது அமெரிக்காவின் போர்த்தந்திர நட வடிக்கைகளுக்கு இளைய பங்காளியாகி யுள்ள சூழ்நிலையில் டிரம்பின் இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக என்னசெய்வ தென்று தெரியாமல் விழிபிதுங்கி நின்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் கவலைகள் பற்றியெல்லாம் அதிதீவிர வெறித்தனத்துடன் செயல்படும் டிரம்ப் நிர்வாகம் கவலைப்படப் போவதில்லை. இந்தியா தன்னுடைய அயல்துறைக் கொள்கையை பன்முக வடிவமைப்புகளுடன் மாற்றியமைத்துக்கொண்டு தீவிரமாகச் செயல்படக்கூடிய வல்லமையுடன்தான் இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் அதனை செயல்படுத்திட அது முன்வர வேண்டும். இவற்றில் மிகவும் பிரதானமானது ஆசியன் நாடுகள், ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய மண்டல ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்தம் ஆகும். இந்த உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கிடையாது. அதேபோன்று இந்தியா பிரிக்ஸ் நாடுகளில் கூட்டமைப்பிலும், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பிலும் தன்னுடைய பங்களிப்பினை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சீனா துவங்கியுள்ள ‘ஒரு பகுதி, ஒரு சாலை’ (`One Belt, One Road’)  திட்டம் குறித்த தன்னுடைய எதிர்மறையான அணுகுமுறையைக் கைவிட வேண்டும். இவ்வாறு இந்தியா பொருளாதார மற்றும் போர்த்தந்திர உறவுகளை மாற்றி யமைத்துக் கொள்வதன் மூலமும், பல்வகைப்பட்ட அமைப்புகளில் தீவிரமாகப் பங்கேற்றுச் செயல்படுவதன் மூலமும் மட்டுமே, இழந்துவிட்ட போர்த்தந்திர சுயாட்சித்தன்மையை மீண்டும் பெற்று, அயல்துறைக் கொள்கையை சுதந்திரமான அடிப்படையில் அமைத்துக்கொள்ள முடியும். ஆனால், அமெரிக்காவிடம் ‘அதீதமாக’ பாசம் வைத்துள்ள மோடி அதனைக் கைவிட்டு, தன்னுடைய அணுகுமுறையை மாற்றி அமைத்துக் கொள்வாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியேயாகும்.
(பிப்ரவரி 1, 2017)
(தமிழில்: ச.வீரமணி)


Wednesday, February 1, 2017

ஏழைகள் மீது மேலும் சுமைகள்

ஏழைகள் மீது மேலும் சுமைகள்
மக்களின் துன்ப துயரங்கள் குறித்து இந்த பட்ஜெட் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்பது மட்டுமல்ல, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கொடூரமான முறையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றும் விதத்திலேயே அமைந்திருக்கிறது.
புதுதில்லி, பிப்.1-
மத்திய அரசின் 2017-18 பட்ஜெட் மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய அரசு ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததனால் ஏற்பட்டநாசகரமான விளைவுகளிலிருந்து சாமானிய மக்கள் இன்னமும் மீளாத சூழ்நிலையில் உழைக்கும் மக்களை மேலும் கசக்கிப்பிழியும் விதத்தில் பட்ஜெட் முன்மொழிவுகளை நிதி அமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.முன்னதாக செவ்வாயன்று அவரால் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையானது, பொருள்கள் வாங்குவதும், சேவைகளைப் பயன்படுத்துவம் மிகவும் கூர்மையான அளவில் வீழ்ச்சி அடைந்திருப்பதைத் தெளிவாகவே காட்டியது. கடுமையாக வேலையிழப்பு ஏற்பட்டிருப்பதையும், விவசாயத்தின் மூலமான வருமானங்கள் வீழ்ச்சி அடைந்திருப்பதையும், பணப்புழக்கம் உள்ள துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் சமூகச் சீர்குலைவு ஏற்பட்டிருப்பதையும் ஆய்வறிக்கை காட்டியது.ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ஆட்டோமொபைல்ஸ், சிமெண்ட், உருக்கு, காகிதம், அலுமினியம், ரசாயன உரங்கள் போன்ற அடிப்படையான தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதன் காரணமாக மிகப் பெரிய அளவில் இத்தொழில்களில் வேலையின்மை ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், 40 மில்லியன் டன்கள் உணவு இருப்பு மற்றும் போதுமான அளவிற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இருந்தபோதிலும் மத்திய அரசு ‘சுருக்கும் நிதிக் கொள்கையை’ (உடிவேசயஉவiடியேசல களைஉயட யீடிடiஉநைள) தொடரவே விரும்புகிறது.
செலவினத்தைக் குறைத்து...
சென்ற ஆண்டு (திருத்திய மதிப்பீட்டில்) மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.4 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அது 12.7 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. செலவினத்தைக் குறைத்ததன் மூலமாகவே நிதிப் பற்றாக்குறை இலக்கு சரி செய்யப்பட்டிருக்கிறது.
மொத்த வருவாய் பற்று 2016-17-ல் (திருத்திய மதிப்பீட்டில்) மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.4 சதவீதமாக இருந்தது. இப்போது 2017-18 பட்ஜெட் மதிப்பீட்டில் 9 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. பட்ஜெட் நடவடிக்கைகள் மூலம் தள்ளுபடி செய்யப்பட்ட வரிகள் 30 ஆயிரம் கோடி ரூபாயாகும்.. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவீதமாகும்.
மறைமுக வரி மூலமாக 75 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாயை அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதன்மூலம் உழைக்கும் மக்கள் மீதான சுமையை அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியை அதிகரிப்பதன் மூலம் வருவாய் பற்றை அதிகரித்திட அரசாங்கம் பெரிதும் திட்டமிட்டிருக்கிறது.
கூடுதல் வரி வருவாய் கிடைக்குமா?
அரசாங்கம் நேரடி வரிமூலம் 1.3 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக வசூலிக்க இருப்பதாக கூறியிருக்கிறது. உண்மையில் இது நடக்கப்போவதில்லை. ஏனெனில் இது முழுக்க முழுக்க கற்பனையான உயர் பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எல்லாம் அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதேபோன்று வரிகள் மீது ஜிஎஸ்டி(GST)யின் தாக்கம் எந்த அளவிற்கு நிச்சயமற்று இருக்கும் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
ரியல் எஸ்டேட் ஊக வர்த்தகர்கள் மற்றும் கட்டிடம் கட்டுபவர்களுக்கு அபரிமிதமான ஆதாயத்தை அளிக்கக்கூடிய விதத்திலும் நிலம் கையகப்படுத்தல் மற்றும் நிலங்களை அவர்களுக்கு அடிமாட்டு விலைக்குத் தாரை வார்த்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் நிதியமைச்சர் செயல்பட்டிருக்கிறார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME) மீதான வருமான வரியானது 50 கோடிக்கும் கீழான பரிவர்த்தனை (transaction)இருந்தால் குறைத்திடுவது என ஒரு முன்மொழிவினை அளித்திருக்கிறார். இது கார்ப்பரேட்டுகள் வரி ஏய்ப்பு செய்திட புதிய மார்க்கங்களைத் திறந்துவிடும்.
நிதி அமைச்சர் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைத் திரும்பத்திரும்ப கூறியிருப்பதுடன் அதன்காரணமாக கடன் அளிப்பதற்காக வங்கிகளுக்கு அதிக அளவில் பணம் சேர்ந்திருப்பதாகவும் பீற்றிக் கொண்டிருக்கிறார். உழைக்கும் மக்களின் சேமிப்பு கட்டாயப்படுத்தி, பறித்து வங்கிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அரசாங்கம் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கிய அடுத்த நிமிடமே ஏழை மக்கள் தங்கள் பணத்தை வங்கிகளிலிருந்து எடுத்துவிடுவார்கள். எனவே இது நீண்ட கால அளவில் பயன் அளிக்காது.
பட்ஜெட்டின் படி வெறும் 1.48 சதவீதம்தான் மொத்த பட்ஜெட் தொகையில் பழங்குடியினரின் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 2.44 சதவீதம்தான் தலித்துகளுக்கான நலத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது அவர்களின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானதாகும். அதேபோன்று பாலின பட்ஜெட்டுக்கான ஒதுக்கீடும் மொத்த ஒதுக்கீட்டில் 5.3 சதவீதம் அளவிற்குத்தான் இருக்கிறது.
மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் கிராமப்புற மக்களின் வறுமையை பெரிய அளவில் ஒழிப்பதற்கான ஒரு திட்டமாகும். இதற்கான ஒதுக்கீட்டில் கணிசமான உயர்வு எதுவும் இல்லை. சென்ற ஆண்டு 47.4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு 48 ஆயிரம் கோடி ரூபாய் அவ்வளவுதான்.
கல்வி நிதி கடும் வீழ்ச்சி
சமூகநலத்துறைகளுக்கான செலவினங்களில் மிகச்சிறிய அளவிற்கே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பணவீக்கத்துடன் இதனைஒப்பிட்டுப் பார்த்தோமானால், 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளால் ஏற்பட்டுள்ள ஊதிய செலவினத்தை எதிர்கொள்ளக்கூட இது போதாது. சுகாதாரத்திற்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஒரு சிறிய அளவு கூடுதலாகி இருந்த போதிலும், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு போன்றவற்றிற்கான ஒதுக்கீடுகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. (2016-17இல் திருத்திய மதிப்பீட்டில் 2.2 சதவீதமாக இருந்தது, 2017-18 பட்ஜெட் மதிப்பீட்டில் 2.16 சதவீதம்.) நிதி அமைச்சர் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று திரும்பத்திரும்ப கூறினார். ஆனால், விவசாயத் துறைக்கு ஒதுக்கியுள்ள பட்ஜெட் தொகையில் அது பிரதிபலித்திடவில்லை. விவசாயத்துறைக்கான ஒதுக்கீடு 1,98 சதவீதத்திலிருந்து, 1.95 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. அரசாங்கத்தின் தம்பட்டம் அடித்திடும் திட்டங்களுக்குக்கூட எவ்விதமான ஒதுக்கீடும் கிடையாது.
அதேபோன்றே நிதி அமைச்சர் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து நிறையவே பேசியபோதிலும், அரசாங்கத்தின் மூலதனச் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.86 சதவீதத்திலிருந்து, 1.84 சதவீதமாகக் குறைந்துதான் இருக்கிறது.
அபத்தமான அறிவிப்புகளே!
அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது சம்பந்தமாக நிதி அமைச்சர் ஏராளமான அறிவிப்புகளை செய்திருக்கிறார். ரொக்க நன்கொடை என்பதன் வரம்பை 2000 என்று அறிவித்திருப்பதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை. ஏனெனில் பல நன்கொடைகள் வெளிச்சத்திற்கு வருவதே இல்லை. அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி கொடுப்பதற்குத் தடை விதிக்காத வரையிலும், அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினங்களுக்கு வரம்பு விதிக்காத வரையிலும், தேர்தல் நிதி சம்பந்தமான சீர்திருத்தங்கள் எல்லாம் அபத்தமானவைகளே தவிர வேறெதுவும் இல்லை.
ஒட்டுமொத்தத்தில், இந்த பட்ஜெட் மக்களின் துன்ப துயரங்கள் குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்பதுமட்டுமல்ல, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கொடூரமானமுறையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றும் விதத்திலேயே அமைந்திருக்கிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கூறியிருக்கிறது. (ந.நி.)