சென்னை ஐஐடி-இல்
செயல்பட்டுவந்த அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையும்
பின்னர் அத்தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள விதமும் மத்தியில் உள்ள பாஜக
அரசாங்கத்தின் சகிப்புத்தன்மையின்மையையும் கபடவேடத்தையும் நன்கு
அம்பலப்படுத்திவிட்டன. மதிப்புமிக்க பி.ஆர். அம்பேத்கரின் 125ஆவது பிறந்தநாள்
ஆண்டைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள்
முயற்சித்துக் கொண்டிருக்கும் சமயத்தில்தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.
இதனைச் செய்வதற்காக
இக்கூட்டம் டாக்டர் அம்பேத்கர் இந்துத்துவாவின் ஆதரவாளர் என்றும், ஆர்எஸ்எஸ்
இயக்கத்தின் விசுவாசி என்றும் காட்டக்கூடிய விதத்தில் வரலாற்றையே திரித்துக்
கூறிக்கொண்டிருக்கிறது. அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுதும் பிராமணியத்தை உயர்த்திப்
பிடிக்கும் நால்வர்ண சாதிய அமைப்புமுறைக்கு எதிராகப் போராடியவர். சமூக ஒடுக்குமுறைக்கு
ஊற்றுக்கண்ணாக விளங்குவது மனுஸ்மிருதி என்று அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
1936ஆம் ஆண்டில் வெளியான சாதியை ஒழித்துக்கட்டுவோம் என்கிற அவரது நூல், சாதிய
அமைப்புமுறையையும், பிராமணிய மேலாதிக்கத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று
அறைகூவல் விடுத்துள்ளது. இறுதியில் அவர், இந்துமதத்திற்குள்ளேயே இருந்து கொண்டு
சாதிய அமைப்புமுறைக்கு எதிராகப் போராடுவது சாத்தியமில்லை என்று தீர்மானித்து,
இந்து மதத்திலிருந்தே
அவரும் அவரைப் பின்பற்றுவோரும் விலகி புத்தமதத்தைத் தழுவினார்கள்.ஆனால் இப்போது
ஆர்எஸ்எஸ் அவரது தத்துவார்த்த மற்றும் சமூகப் போராட்டங்களைத் திரித்துக் கூற
முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அம்பேத்கர் ஓர் உண்மையான இந்துவாக இருக்கக்கூடிய
அதே சமயத்தில், இந்துயிசத்தை சீர்திருத்தம் செய்து, தீண்டாமையை ஒழித்துக்கட்ட
வேண்டும் என்றுதான் விரும்பினாராம். அவர் புத்திஸ்ட்டாக மாறியதுகூட இந்து
தர்மத்தைப் பின்பற்றும் மற்றொரு வழியாம். மேலும், ஆர்எஸ்எஸ், “அம்பேத்கர்
கம்யூனிஸ்ட்டுகளின் எதிரியாக இருந்தார்’’ என்றும், “கம்யூனிசத்தை எவ்விதத்திலும்
விட்டுக்கொடுக்காது எதிர்த்து வந்தார்,’’ என்றும் திரும்பத் திரும்ப பிரச்சாரம்
செய்து கொண்டிருக்கிறது.
இங்கேயும்கூட, ஆர்எஸ்எஸ்
அம்பேத்கரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களில் ஒருசிலவற்றைத் தேர்ந்தெடுத்து
மேற்கோள் காட்டிக்கொண்டிருக்கிறது. அம்பேத்கரின் எழுத்துக்களை ஒருங்கிணைந்து
படிக்கும் எவரும், மார்க்சிஸ்ட் தத்துவத்தை ஏற்றுக்கொள்ளாத அதே சமயத்தில், காரல்
மார்க்சின் சிந்தனைகளில் சிலவற்றை அவர் ஒத்துக்கொண்டார் என்பதை அறிவார்கள்.
அம்பேத்கர் கருத்தோட்டமும் கண்ணோட்டமும் அவர் தாராள சமூகக் கருத்துக்களுடனான ஒரு
சமூக ஜனநாயகவாதி என்பதை நன்கு காட்டும். இந்துத்துவாவை டாக்டர் அம்பேத்கர்
வெறுக்கத்தக்க ஒன்றாகவே பார்த்தார். அவர் இஸ்லாமிய பழமைவாதத்தை வெறுத்த அதே
அளவுக்கு இந்து ராஷ்ட்டிரம் என்கிற சித்தாந்தத்தையும் எதிர்த்தார். அவர்
கூறியிருப்பதாவது: “இந்து ராஜ்ஜியம் என்பது உண்மையாகும்பட்சத்தில், சந்தேகமே
இல்லை,
நாட்டிற்கு அது
மிகப்பெரிய கேடாகும். ஓர் இந்து என்ன சொல்கிறார் என்பது அல்ல பிரச்சனை, இந்துயிசம்
என்பது சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் கேடு
பயக்கக்கூடியதாகும். அதனால் ஜனநாயகத்துடன் ஒத்திசைந்து வாழ முடியாது.
என்னவிலைகொடுத்தேனும் இந்து ராஜ்ஜியம் தடுக்கப்பட வேண்டும்.’’மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை அமைச்சகம், சென்னை ஐஐடி-இல் செயல்பட்டுவந்த அம்பேத்கர் -
பெரியார் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மொட்டைக் கடிதம் ஒன்றைத்
தாங்கள் பெற்றிருப்பதாகக்கூறி அதன் நகலை ஐஐடி நிர்வாகத்திற்கு அனுப்பி,
அதுதொடர்பாக என்ன செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள் என்று கேட்டதைத் தொடர்ந்து, ஐஐடி
அதிகாரிகள் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்திற்குத் தடை விதித்தார்கள்.
மொட்டைக்கடிதத்தின்
சாராம்சம் என்னவெனில், அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம், மோடி அரசாங்கம்
குறித்தும் அதன் பொருளாதார மற்றும் காவிமயக் கொள்கைகள் குறித்தும்
விமர்சித்திருந்ததேயாகும். இந்தத் தடைக்கு எதிராக நாடு முழுதும் மாணவர்கள்,
கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் விரிவான அளவில்
கிளர்ந்தெழுந்தனர். ஆர்எஸ்எஸ் சார்பான வலதுசாரி அமைப்புகள் உட்பட பல மாணவர்
அமைப்புகள் செயல்படக்கூடிய அதே சமயத்தில் இதற்கு மட்டும் தடை ஏன் என்பதற்கு ஐஐடி
நிர்வாகத்தால் விளக்கம் அளிக்க முடியவில்லை. இறுதியாக, ஐஐடி நிர்வாகம் பின்வாங்க
வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்திற்கு
அங்கீகாரத்தை மீண்டும் வழங்கியது.
ஆர்எஸ்எஸ்-சும் அதன்
இந்துத்துவா சக்திகளும் தங்கள் காவிமய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு
உயர்கல்வி அமைப்புகளைக் குறிவைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. முன்னதாக,
தில்லி ஐஐடி நிர்வாகம் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு சைவ உணவு
மட்டுமே பரிமாற வேண்டும் என்று தீர்மானித்தது. பல்கலைக்கழக அளவில் உள்ள
பாடத்திட்டங்களில் புராதன இந்தியாவில் விஞ்ஞானம் என்னும் தலைப்பின் கீழ் வேத கால
விஞ்ஞானத்தை சொல்லிக் கொடுக்கப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக் கின்றன. இந்து
சாஸ்திரங்கள் வானளாவப் புகழப்படுகின்றன. குருமார்கள் ஆட்சி மற்றும் படுபிற்போக்கு
நால்வர்ண சாதிய அமைப்புமுறை, இந்துத்துவா சித்தாந்தத்தின் ஒரு பகுதி என்று
உயர்த்திப்பிடிக்கப்படுகின்றன. இவ்வாறு ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் தங்களது
நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே சமயத்தில், அம்பேத்கரின் சமூகநீதிப் பார்வையை
சூழ்ச்சியுடன் அழித்துவிட்டு அவரது கொள்கைகளும் தங்களது கொள்கைகளே என்று
பாசாங்குடன் நடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களது இத்தகு சூழ்ச்சிகள்
முறியடிக்கப்பட முடியும் என்பதற்கு சென்னை ஐஐடி-இல் அம்பேத்கர் - பெரியார் வாசகர்
வட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை தகர்த்தெறிந்து சிறிய அளவிலானவெற்றியை
ஈட்டியிருப்பது, குறிப்பாய்த் தெரிவிக்கிறது.
தமிழில்: ச. வீரமணி


