Tuesday, September 2, 2014

மோடி “மோகம்’’ குறைந்து வருகிறது!


பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்

மோடி அரசாங்கம் நூறு நாட்களை நிறைவு செய்வதற்கு எட்டு நாட்களுக்கு முன்னதாகவே, பீகார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பெரிய பின்னடைவை பாஜக, ஆர்எஸ்எஸ் சந்தித்துள்ளன. தேர்தல் நடைபெற்ற 18 இடங்களில், பாஜக வெறும் பத்து இடங்களி லேயே வெற்றி பெற்றுள்ளது. இதற்குமுன் இத்தொகுதிகளில் 16 இடங்கள் பாஜகபெற்றிருந்தது. 2014 பொதுத் தேர்தலு டன் ஒப்பிடும்போது, பீகாரில் முன்பு10ல் எட்டு இடங்களைப் பெற்றிருந்தது. இப் போது அவற்றில் 4 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதுவும் மிகவும் குறைந்த வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளது. உதாரணமாக, பங்கா தொகுதியில் வெறும் 711 வாக்குகளே கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

மாறாக, ஐக்கிய ஜனதா தளம் பர்பத்தா தொகுதியில் சுமார் 67 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மூன்று தொகுதி களுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக முன்பு பெற்றிருந்த ஒரு தொகுதியை இழந்துவிட்டது. அதேபோன்று கர்நாடகாவிலும் அது பெற்றிருந்த ஒரு தொகுதியை இழந்து விட்டது. இவை அனைத்தும் மோடி “மோகம்’’ குறைந்து வருவதையும், பொதுத்தேர்தலின்போது இருந்த செல்வாக்கு இப்போது சரிந்து வருவதையுமே புலப் படுத்துகின்றன. மக்களின் மனதில் ஆட்சியாளர்கள் குறித்து தீர்மானகரமான முறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதையே இவை தெளிவு படுத்துகின்றன. பெரிய ஊடகங்கள் மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதை ஒப்புக் கொண்ட போதிலும், “மக்களின் விருப்பம் குறித்து முடிவு எடுப்பதற்கு இது தருணம் அல்ல’’ என்றும் “இந்த முடிவுகளை வைத்து மட்டும் அதிகம் கூறிட முடியாது’’ என்றும் கூறி சமாளிக்கின்றன.
இது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கதல்ல. மோடி “சுனாமியை’’ ஏற்படுத்திட முன்னணியில் நின்றவர்கள் இந்திய கார்ப்பரேட்டுகளும் அவர்களின் ஊடகங்களும் என்பதை நாம் மறந்துவிட முடியாது. பொதுத் தேர்தல் முடிந்து ஒரு சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் ஏற் பட்டிருக்கும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள அவர்கள் விரும்ப மாட்டார்கள்தான். பிரபல தேசிய நாளேடு ஒன்று தன் தலையங்கத்தில், “இடைத் தேர்தல் முடிவுகள் எதிர்கால அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள் எப்படி உருவாகப் போகிறது என்பதைக்காட்டும் அறிகுறி,’’ என்று வர்ணித்திருக்கிறது. (தி டைம்ஸ் ஆப் இந்தியா, ஆகஸ்ட் 26, 2014)

மற்றொரு நாளேடும், ஈசாப் கதைகளை எழுதியவர் கூறியிருப்பதைப் போல `தனிப்பட்ட ஒருநிகழ்வை அடிப்படையாகக் கொண்டுஒரு முடிவுக்கு வருதல் அறிவுடைமை யாகாது,’ என்று எழுதி இருப்பதுடன், “இதேபோன்று இடைத்தேர்தலில் 10-8 என்ற விகிதத்தில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கும், பாஜக கூட்டணிக் கட்சி களுக்கும் இடையிலான வெற்றியை வைத்து மோடி அரசாங்கத்தைக் குற்றம்சாட்டுவது அவசரப்பட்டுக் கூறப்படும் முடிவாகவே அமைந்திடும்,’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறது. மக்களால் உயர் வாகக் கருதப்படும் மற்றொரு நாளேடும், “பீகார் இடைத்தேர்தலில் ஏப்ரல்-மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக - எல்ஜேபி கூட்டணி முழுமையாக வெற்றி பெற்ற இடங்கள் ஆறில் ஐந்தைத் தற்போது ராஷ்ட்ரிய ஜனதா தளம் - ஐக்கிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளபோதிலும் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆயினும், இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் ஒரு கட்சியின் அதிர்ஷ்டத்தை சாதிய ரீதியிலான கூட்டுகள் தீர்மானிக்கப்படுவது இப்போது மீண்டும் மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது’’ என்று எழுதியிருக்கிறது.(தி இந்துஸ்தான் டைம்ஸ், ஆகஸ்ட் 16, 2014). அதேபோன்று தி டைம்ஸ் ஆப்இந்தியா நாளேடும், தன்னுடைய 2014 ஆகஸ்ட் 27 இதழில், “ஐக்கிய ஜனதாதளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணிச் சூதாட்டம் சாதிய கணக்கீடு களையெல்லாம் தாண்டி முரண்பாடற்ற முறையில் நல்லதோர் அரசாங்கத்தை அளிப்பது தொடர்பாக இன்னமும் மெய்ப் பிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது,’’ என்று எழுதியுள்ளது. இவர்கள் இவ்வாறெல்லாம் கூறு வதை நம்பிக்கையற்ற முறையில் தள்ளிவிட முடியுமா? இதற்கு முன்பு உத்தரகாண்டில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது பாஜக முழுமையாகத் துடைத் தெறியப்பட்டது.

தேர்தல் நடைபெற்ற மூன்று இடங்களிலும் அது தோல்வி அடைந்தது. பீகாரிலும் கூட, வாக்குகளின் விவரங்கள் காட்டுவது என்னவெனில் ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டணியின் வாக்கு விகிதம் கணிசமாகக் கரைந்துவிட்டது என்பதே ஆகும். ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின்போது மேற்படி பத்து பகுதிகளிலும் அவற்றின் வாக்கு விகிதம் 45.3 சதவீதமாக இருந்தது. இந்த இடைத் தேர்தல்களின்போது இது 37.3 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இவ்வாறு பாஜகவிற்கு எதிராக 8 சதவீத மக்கள் மாறி இருக்கிறார்கள். இதற்கு மாறாக, ஆர்ஜேடி-ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசின் வாக்கு விகிதம் 40. 3 சதவீதத்திலிருந்து 44.9 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இவ்வாறு 4.6 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2014 பொதுத் தேர்தல்களின்போது பத்து பகுதிகளில் ஒன்பதில் பாஜக-எல்ஜேபி அணி வெற்றி பெற்றிருந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்ட மன்றத் தேர்தல்களின்போது கூட, பாஜகவும் அதன் கூட்டணிகளும் பத்துஇடங்களில் ஏழு இடங்களை வென்றிருந் தன. இவற்றில் பாஜக மட்டும் 6 இடங் களைப் பெற்றிருந்தது. இந்தப் பத்து இடங்களுமே பாஜக மிகவும் வலுவாக உள்ளபகுதியாகும்.

எனவே இப்போது இக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிற சரிவினை “வெறும் சாதிய ரீதியிலான வாக்குகள்’’ என்று ஒதுக்கித் தள்ளுவது ஏமாற்றும் தந்திரமேயாகும்.மதவெறி சக்திகளுக்கு எதிராக, முரண்பாடுகளற்ற முறையில் கூட் டணி அமைப்பதற்கு இன்னும் போகவேண்டிய தூரம் அதிகமாக இருக் கிறது என்ற போதிலும், இப்போது வெளியாகி இருக்கும் தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் ஆர்எஸ்எஸ்/பாஜககூட்டணியிடம் அதிருப்தி அடைந்துவிட்டனர் என்பதையும், மக்கள் மோடி அரசாங்கத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரல், அது தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறிய பிரச்சனைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை உணரத் தொடங்கி விட்டனர் என்பதிலும் ஐயமில்லை. மோடியின் தலைமையில் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றும் புத்துயிர் பெற்ற இந்தியா உருவாகும் என்றும் மக்கள் நம்பித்தான் மோடிக்கு வாக்களித்தார்கள்.
ஆனால், அவர்களின் நம்பிக்கைகள் பொய்த்துப்போகக்கூடிய விதத்தில், பெட் ரோலியப் பொருட்கள் மற்றும் ரயில்வே கட்டணங்களின் செங்குத்தான விலை உயர்வும், புதிய வேலை வாய்ப்புகளை உரு வாக்கக்கூடிய விதத்தில் பொருளாதார நடவடிக்கைகளில் மாற்றங்கள் எதுவும் கண்ணுக்குப் புலப்படாத விதத்திலும், மக்களின் துன்ப துயரங்கள் மட்டும் பல்கிப் பெருகியுள்ளன. தேர்தல் பிரச் சாரத்தின்போது மோடி குறிப்பிட்ட வாக்குறுதிகள் குறித்து எதுவும், செங் கோட்டையின் கொத்தளங்களின் மேலிருந்து அவர் ஆற்றிய தன்னுடைய முதல் சுதந்திர தின உரையில் அவர் குறிப்பிடவில்லை.

விலைவாசியைக் கட்டுப்படுத்துவேன் என்றோ, ஊழலை ஒழிப்பேன் என்றோ, குறைந்தபட்ச அரசாங்கத்தைக் கொண்டு அதிகபட்ச ஆட்சியை அளிப்பேன் என்றோ தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய எது குறித்தும் அவர் கூறிடவில்லை. ஆனால், அதே சமயத்தில் இந்த அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் பல பகுதிகளில் வகுப்புக் கலவரங்கள்தான் கூர்மையான முறை யில் அதிகரித் திருக்கின்றன. இப்போதுகூட சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல்கள் நடைபெற்ற பீகாரில் தேர்தல் ஆதாயங்களைப் பெற வேண்டும் என்றநோக்கத்தோடு மதவெறித் தீ விசிறிவிடப்பட்டது. விரைவில் உத்தரப்பிர தேசம், மகாராஷ்ட்ரா, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் போன்ற முக்கியமான மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் விரைவில் நடைபெற விருப் பதையொட்டி அங்கெல்லாம் மதவெறித் தீயை விசிறிவிடுவதற்கான வேலைகள் அதிகரித்திருப்பதைத் தெளிவாகவே பார்க்க முடிகிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறித் தீயை கொளுந்துவிட்டு எரியச் செய்வதற்காக, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் பெரும்பான்மை மத வெறி நிகழ்ச்சிநிரலில் சமீபத்தில் சேர்க் கப்பட்டிருக்கும் பிரச்சனை, “ஜிகாத் காதல்’’ பிரச்சனையாகும். முஸ்லிம் இளைஞர்கள் இந்துப் பெண்களை மயக்கி இழுத்து, வலுக்கட்டாயமாக முஸ்லிம்களாக மாற்றிவிடுகிறார்கள் என்று கூறத் தொடங்கி இருக்கிறார்கள். உண்மையில் இது விசித்திரமான வாதம் மட்டுமல்ல, அருவருக்கத்தக்க ஒன்றுமாகும். பாஜகவின் சார்பில் நாடாளுமன்ற மக்களவையில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட கிடையாது என் பது அனைவரும் அறிந்த உண்மை. எல் லோருக்கும் தெரிந்த அக்கட்சியைச் சார்ந்த இரு அரசியல் முகங்கள் இந்துப்பெண்களைத்தான் திருமணம் செய் திருக்கிறார்கள். தர்மேந்திரா - ஹேம மாலினி. தர்மேந்திரா பாஜக-வின் முன்னாள் எம்.பி. ஹேமமாலினி இன்னாள் எம்.பி. இவர்கள் திருமணம் செய்துகொண்டபோது இஸ்லாம் மதத்திற்கு மாறித்தான் திருமணம் செய்து கொண்டார்கள். தில்லியின் மிகவும் பிரபலமான சிக்கந்தர் பகத் இந்திரா காந்தியின் அவசர நிலைக் காலம் முறியடிக்கப்பட்டபின் நடந்த தேர்தலில் மக்களவை உறுப் பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனதா கட்சியின் ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.

இவரும் ஓர் இந்துப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டார். எனவே, ஆர்எஸ்எஸ்/பாஜக வகை யறாக்களைப் பொறுத்தவரை, “ஜிகாத் காதல்’’ என்கிற முழக்கம் மதவெறித் தீயை விசிறிவிடுவதற்கான ஓர் உத்திதானே யொழிய வேறல்ல. அதன்மூலம் இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்த வேண் டும் என்பதே அவர்கள் குறிக்கோள். இதுவாக்கு வங்கி அரசியலின் மிகவும் மோசமான நடைமுறை உத்தியாகும். இவர்களின் உத்தி நாட்டின் சமூக நல்லிணக் கத்திற்குக் கடும் பாதிப்புகளை ஏற் படுத்தும். இவ்வாறு இவர்கள் தங்கள் குறுகிய சொந்த அரசியல் ஆதாயங் களுக்காக, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின்மீது கடும் தாக்குதல்களை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்தா விட்டால், பல்வேறு சமூக, கலாச்சார, மொழி மற்றும் மத நம்பிக்கைகளைக் கொண்டவர்களாக இருந்த போதிலும் அனைவரும் ஒன்றாக மிகவும் வளமான முறையில் இதுநாள்வரை வாழ்ந்து வந்த உயரிய வாழ்க்கை கொடூரமான முறை யில் தாக்குதல்களுக்கு உள்ளாகும்.

“இந்தியா என்னும் சிந்தனையே’’ அடித்து வீழ்த்தப்பட்டு விடும். இடைத்தேர்தல்களின் முடிவுகள் இந்தப் பின்னணியில்தான் பார்க்கப் பட வேண்டும். தற்போதுள்ள நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, வெறிபிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிச `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்ற வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் திட்டத்தை நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்கிற மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கக் கூடிய விதத்திலேயே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என்கிற அடிப்படையில் இடைத் தேர்தல்களின் முடிவுகள் பார்க்கப்பட வேண்டும். இவ்வாறு ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மதவெறித் தீயை விசிறிவிடும் அதே சமயத்தில், நாட்டின் பெரும்பான்மை மக்களைத் துன்ப துயரத்திற்கு ஆளாக்கி வரும், நாட்டின் இருவேறு இந்தியர்களுக்கும் இடையிலான இடை வெளியை அதிகப்படுத்தி வரும், சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டளைக்கிணங்க நவீன தாராளமயப் பொருளாதார சீர் திருத்தங்களை தொடர்ந்து பின்பற்றி வரு கிறார்கள். உண்மையில் இவர்களின் கொள்கைகள் பெரும்பான்மை மக்கள் மீது மேலும் துயரங்களையே ஏற்றிடும். நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாத்திட இவர்களின் இத்தகைய அரக்கத் தனமான உத்திகள் அனைத்தையும் முறி யடித்திட வேண்டியது அவசியமாகும்.

- தமிழில்: ச.வீரமணி


Sunday, August 3, 2014

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு : யாருக்காக?



பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்

மோடி அரசாங்கம் இந்தியா வந்துள்ள அமெரிக்க அயல்துறை அமைச்சர் ஜான் கெர்ரிக்கு வரவேற்புப் பரிசு அளிக்கக் கூடிய விதத்தில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் உச்சவரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்திட இருக்கிறது. இன்சூரன்ஸ் சட்டங்களில் இதற்கான சட்டத் திருத் தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளு மன்ற பட்ஜெட் அமர்வில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. ஐமுகூ-1 அரசாங்கக் காலத்தில் அமைக்கப்பட்ட இந்திய - அமெரிக்க வர்த்தகர் அமைப்பில் இதற்கான கோரிக்கை திரும்பத்திரும்ப எழுப்பப்பட்டு வந்தது.
இதனை நிறைவேற்றும் விதத்தில்தான் மோடி அரசு இந்நடவடிக்கையை இப்போது எடுத்திருக்கிறது. நிதித்துறையில் தாராளமய சீர்திருத் தங்களை மேற்கொள்ள வேண்டும் என் பது நவீன தாராளமயக் கொள்கையின் மிக முக்கியமான அம்சமாகும். இதற்கு அந்நிய நிதி மூலதனம் நம் நாட்டிற்குள் வருவதற்கு இருந்து வரும் கட்டுப்பாடுகளை நீக்குதல், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறைகளைத் தனியாருக்குத் தாரை வார்த்தல், இத்துறைகளில் அந்நிய நிதி மூலதனம் முதலீடு செய்யப்படுதல் முதலானவை அவசியமாகும். இன்சூரன்ஸ் துறையைப் பொறுத்தவரையில், 1999ல் வாஜ்பாய் அரசாங்கம் இருந்த காலத்தில் இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, இன்சூரன்ஸ் துறையில் தனியார் நுழைந்திடவும் அந்நியநேரடி முதலீட்டில் 26 சதவீதம் அனு மதிக்கப்பட்டது. அப்போதிருந்தே அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்ச வரம்பை 49 சதவீதமாக உயர்த்திட நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டு வந்தது.
இடதுசாரிக் கட்சிகள் இம்முயற்சிகளுக்கு எதிராக இருந்தன. ஐமுகூ-1 அரசாங்கம் அவ்வாறு செய்யவிடாது தடுத்து நிறுத்தின. இடதுசாரிகள் ஐமுகூ அரசை ஆதரிப்பதை விலக்கிக் கொண்ட பின்னர் அரசாங்கம் இந்தச்சட்டமுன்வடிவை 2008ல் மாநிலங்கள வையில் அறிமுகப் படுத்தியது. ஆயினும், ஐமுகூ-2 அரசு காலத்திலும் அதனை நிறைவேற்றுவதில் அது தோல்வி கண்டது. நிதித்துறை சார்ந்த நிலைக் குழு 2011ல் இச்சட்டமுன்வடிவினை ஆய்வு செய்து உச்ச வரம்பினை உயர்த்த வேண்டிய தேவையில்லை என்று பரிந்துரைத்தது. அந்த நிலைக்குழுவிற்கு பாஜக தலைவர் யஷ்வந்த் சின்காதான் தலைவராக இருந்தார். இப்போது, அந்நிய நேரடி முதலீட்டுக் கான உச்சவரம்பை 49 சதவீதமாக உயர்த்துவதற்கான சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
சர்வதேச நிதி மூலதனத்தை தாஜா செய்வதில் அதற்கிருக்கும் ஆர்வமும், நவீனதாராளமயக் கொள்கைகளைப் பின்பற்று வதில் அதற்கிருக்கும் பிடிவாதமும் இதில்நன்கு வெளிப்படுகிறது. நாடாளுமன்றத் தில் இச்சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்படும்போது, முன்பு எப்படியாவது இதனைநிறைவேற்றிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியும்அதனை ஆதரிப்பதில் எவ் விதத் தயக்கமும் காட்டாது. இக்கொள்கைகளைப் பொறுத்த வரையில் இவ்விரு கட்சிகளுக் கும் இடையே எவ்வித வித்தியாசமும் கிடையாது. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் இவை.இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு இவை முன்வைக்கும் வாதங்கள் இவற்றால் காலங்காலமாகச் சொல்லப்படுபவைகளே.
இவற்றின் விரிவாக்கத்திற்காக அதிக மூலதனத்தை இது கொண்டு வருமாம், மக்கள் மத்தியில் இன்சூரன்ஸ் செய்யப்படுவதை இது அதிகரித்திடுமாம், அதிக வேலை வாய்ப்பு களையும் இது உருவாக்கிடுமாம். இவ்வாதங்களை மிக எளிதாக மறுதலித் திட முடியும். இந்தத் துறையைப் பொறுத்த வரை உள்நாட்டு மூலதனத்திற்குப் பஞ்சமே இல்லை. அதேபோல் அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இதுநாள் வரையிலான ஸ்திரத்தன்மையற்ற செயல்பாடும், தங்களின் கொள்ளை லாபக் குறிக்கோளை மறைத்து மக்க ளிடம் கொண்டுசென்ற தந்திரமான நடைமுறைகளும் மக்கள் மத்தியில் எவ்வித மான நம்பிக்கையையும் ஏற்படுத்திட வில்லை. 2008ல் ஏற்பட்ட உலகப் பொருளா தார நெருக்கடி அமெரிக்காவின் நிதித்துறையின் அவலட்சணங்களையும் மக்கள்எப்படியெல்லாம் மோசடிக்கு உள்ளாக்கப் பட்டார்கள் என்பதையும் உலகுக்கு நன்கு அம்பலப்படுத்திவிட்டது. அமெரிக்காவின் மிகப்பெரும் காப்பீட்டு நிறுவன மான ஏஐஜி அநேகமாக மூழ்கியே போய் விட்டது.
அமெரிக்க அரசாங்கம்தான் மிகப்பெரிய அளவில் நிதி உதவி செய்து அதனைத் தூக்கி நிறுத்தி இருக்கிறது. இத்தகைய அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுப்பதுடன், எவ்விதக் கட்டுப்பாடுமின்றி செயல்பட்டு உடைந்து சின்னாபின்னமாகிப் போயுள்ள இதேவிதமான நிதித்துறை அமைப்பை இந்தியாவில் உள்ள இன்சூரன்ஸ் மற்றும் நிதித்துறை நிறுவனங்களுக்கும் இறக்குமதி செய்திட இந்த அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பலவிதமான மோசடிகளிலும் தில்லுமுல்லுகளிலும் ஈடுபட்டதன் பின்னணியில்தான் 1956இல் இந்தியாவில் இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப் பட்டது. அந்தக் காலத்தில் நடந்தவற்றையெல்லாம் சற்றே திரும்பிப் பார்த்திடுவோம். லாபம் ஒன்றையே குறிக் கோளாகக் கொண்ட அந்நிய நிறுவனங்கள் நம் நாட்டிற்குள் நுழைவதன் மூலம் நம் நாட்டு மக்களின் சேமிப்புகளும், நலன் களும் அபாயத்திற்குள்ளாகும் என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.
தற்சமயம், எல்ஐசி எனப்படும் ஆயுள்இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் போட்டிபோட்டு, ஆயுள் இன்சூரன்ஸின் சந்தைப் பங்கில் 74 சதவீதத்தினைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. எல் ஐசி அரசாங்கத்திற்கு மிகப்பெரிய தொகையினை ஈவுத்தொகையாக அளித்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கத் தின் நேரடி கட்டுப்பாட்டில் பல வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதுமான அளவிற்கு முதலீடும் செய்து கொண்டிருக்கிறது. இன்சூரன்ஸ் துறையையும், பென்ஷன் நிதியத்தினையும் தனியாருக்குத் தாரை வார்ப்பது மற்றும் அவற்றை சந்தையின் ஏற்ற இறக்கத்திற்குத் தள்ளிவிடுவது என்பதன் பொருள் அரசாங்கத்தின் வளர்ச் சித் திட்டங்கள் மற்றும் மக்களின் சமூக நலத் திட்டங்களைக் காவு கொடுத்து அவற்றை பெரும் நிதிமுதலைகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வழியேற்படுத்தித் தருவது மற்றும் கார்ப்பரேட் நலன்களுக்கு சேவகம் செய்வது என்பதேயாகும்.
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பை உயர்த்துவது என்று சொல்கிறபோது, பென்ஷன் துறையிலும் அந்நிய நேரடிமுதலீட்டின் உச்சவரம்பை உயர்த்தப் போகிறார்கள் என்றே அர்த்தமாகும். ஏனெனில் பென்ஷன் துறையும் இன்சூரன்ஸ் துறையுடன் இணைக்கப் பட்ட ஒன்று. வங்கித்துறை, தனியாருக்குத் திறந்து விடப்பட்டிருப்பதுடன் இதுவும் சேர்த்துபார்க்கப்பட வேண்டும். வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டபின் முதன்முதலாக தொழில் நிறுவனங்களும் தனியார் வங்கிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டிருக்கின் றன. வங்கித்துறையில் அந்நிய நேரடிமுதலீடு 26 சதவீதம். ஆயினும் வங்கிச் சட்டத்தின்படி வாக்களிப்பதற்கான உச்சவரம்பு 10 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக உயர்த்தப்பட்டு சட்டத்திருத்தம் சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்டுவிட் டது.
இதன் மூலம் இப்போது அயல்நாட்டு வங்கிகள் இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளை மிக எளிதாக கபளீகரம் செய்திட முடியும். இந்த பட்ஜெட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்குகளையும் பெருமளவில் தனியாருக்குத் தாரைவார்த்திட உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. நிதித்துறை தாராளமயத்திற்கு எதிரான போராட்டம், (அந்நிய மூலதனத்திற்கு இன்சூரன்ஸ் துறையைத் திறந்துவிடுதலை எதிர்த்த போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும்) நவீன தாராளமய ஆட்சிக்கெதிரான போராட்டத் தின் முக்கியமானதொரு பகுதியாகும். இக்கொள்கைகள் நாட்டு மக்களின்நலன்களுக்கும், நாட்டின் இறையாண் மைக்கும் எதிரானவைகளாகும்.
இது இன்சூரன்ஸ் துறையில் பணி யாற்றும் ஊழியர்களின் போராட்டமாக மட்டும் பார்க்கப்படக்கூடாது. நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சங்க இயக்கமும் இடதுசாரிகளும் ஜனநாயக சக்திகளும் இப்போராட்டத்தினைத் தங்களு டையதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இன்சூரன்ஸ் சட்டத்தில் கொண்டுவர இருக்கிற சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளி யிலேயும், ஒரு வலுவான போராட்டத்தை நடத்திட வேண்டும். - தமிழில்: ச.வீரமணி