Thursday, February 21, 2013

சாகித்திய அகாதெமி விருது பெற்ற டி.செல்வராஜுக்கு தில்லித் தமிழ்ச்சங்கத்தில் அறிஞர்கள் புகழாரம்




சாகித்திய அகாதெமி விருது பெற்ற டி.செல்வராஜுக்கு
தில்லித் தமிழ்ச்சங்கத்தில் அறிஞர்கள் புகழாரம்
புதுதில்லி, பிப்ரவரி 20-
2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான தோல் நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்ற டி.செல்வராஜ் அவர்களுக்குத் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அறிஞர் பெருமக்கள் புகழாரம் சூட்டினார்கள்.
இந்திய மொழிகளில் 2012ஆம் ஆண்டு வெளியான நூல்களுக்கு சாகித்திய அகாதெமி விருதுகள் திங்கள் அன்று வழங்கப்பட்டன. தமிழில் ‘தோல்’ நாவலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான டி. செல்வராஜ் அவர்களுக்கு அவ்விருது கிடைத்தது. அவரைப் பாராட்டி, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் செவ்வாய் அன்று மாலை பாராட்டு விழாக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்ச்சங்கத்தில் உள்ள பாரதி மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற  பேராசிரியர் கி. நாச்சிமுத்து தலைமை வகித்தார். அப்போது தோல் நாவலின் சிறப்புகள் குறித்து மிகவும் சிறப்பாக உரையாற்றினார்.
தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் முகுந்தன் அனைவரையும் வரவேற்றார்.  முதுபெரும் எழுத்தாளர் சா. கந்தசாமி மற்றும் பரமசிவம் ஆகியோர் பாராட்டுரை வழங்கியபின், டி.செல்வராஜ் ஏற்புரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘தில்லித் தமிழ்ச்சங்கம் மிகவும் பழைமையான சங்கம் மட்டுமல்ல, மிகவும் பிரபலமான ஒரு சங்கமும் ஆகும். இந்தச் சங்கத்திலே பேசுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
எனக்குத் தோன்றுகிற சில விஷயங்களைத் தமிழ் மக்களுக்கு உங்கள் மூலம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
நண்பர் கந்தசாமி அவர்கள் தன்னடக்கம் காரணமாக, சாகித்திய அகாதெமி தேர்வுக்குழுவிற்குள் நடந்த பல விஷயங்களை சொல்லவில்லை. உண்மையில் கந்தசாமி அதில் இருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாது. என்னுடைய நாவல் அங்கு பரிசீலனைக்காகப் போய் இருக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது.
இலக்கிய உலகில் நானும் அவரும் வெவ்வேறு முகாம்களில் பணியாற்றிய போதிலும் இருவரும் கடந்த நாற்பது ஆண்டுகளாக நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ‘‘நான் நாவலைப் படித்தேன்’’ என்று கூட அவர் என்னிடம் சொல்லவில்லை. விருது வழங்கப்பட்ட பின்னர் ஒரு வார்த்தை அவர் என்னிடம் சொன்னார். ‘‘எங்கள் ஜாதியை இவ்வளவு அசிங்கமாக எந்த எழுத்தாளனும் சித்தரித்தது இல்லை’’ என்றார்.  அதற்கு நான் அவரிடம், ‘‘அசே அசிங்கமான மனிதன் பின்னர் தொழிலாளர் வர்க்கத்தின் தலைவராக உயர்ந்திருக்கிறானே, பார்த்தீர்களா?’’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘இரண்டையும்தான் பார்த்தேன்.’’ என்று கூறினார். நாவலை ஒரு தடவை அல்ல, பல தடவை படித்திருக்கிறார். தேர்வுக் குழுவுக்குப் போகும்போதே முடிவு பண்ணிவிட்டுத்தான் போனேன் என்று பின்னர் அவர் என்னிடம் கூறினார்.
பேராசிரியர் நாச்சிமுத்து அவர்கள் நாவலில் உள்ள பல விஷயங்களை நன்கு கூர்ந்து ஆய்வு செய்து இங்கே பேசினார்.  இதுபோன்று சோசலிச யதார்த்த நாவல்கள் தமிழில் வெகு காலம் கழித்துத்தான் வெளிவந்தன என்று மிகவும் ஆதங்கப்பட்டார். பொதுவாகத் தமிழ் நாவல்களில் சரித்திரப் பதிவுகள் இல்லை என்று கூறினார்.  அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு முற்போக்கு எழுத்தாளர்களாகிய நாங்களும் ஆளாகிறோமோ என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
1935இல்தான் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. 1927இலிருந்து 1930 வரையில் உலக அளவில் நடைபெற்ற பாசிசத்திற்கு எதிரான பண்பாடு பாதுகாப்பு எழுத்தாளர்கள் மாநாடு, பாரீசில் நடைபெற்றது. அந்தக் காலத்தில்தான் பாசிசமும், நாசிசமும் உலக அரங்கில் மனித நாகரிகத்திற்கு எதிராக வந்து கொண்டிருந்தது. அதை முதலில் எதிர்த்தவர்கள் படைப்பாளிகளும், எழுத்தாளர்களும்தான். பாசிசத்தையும், நாசிசத்தையும் எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடியது மட்டுமல்லாமல், ஸ்பெயினில் நடைபெற்ற போராட்டத்தில் பல எழுத்தாளர்கள் தங்கள் இன்னுயிரைப் பலி கொடுத்திருக்கிறார்கள். உங்களுக்கு எல்லாம் ஒரு விஷயம் தெரியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஸ்பெயினில் நடைபெற்ற போராட்டத்தில் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பாக அதன் உறுப்பினரான பண்டிட் ஜவஹர்லால் நேரு போராட்டக் களத்திற்குச் சென்று கலந்து கொண்டார். 
1935இல் உருவாக்கப்பட்ட அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அங்கம் வகித்த முல்க்ராஜ் போன்றவர்கள் முற்போக்காளர்கள் மட்டுமல்ல, மார்க்சிஸ்ட்டுகளும் ஆவார்கள். இந்தியாவில் தேச விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டபோது, பண்டிட் ஜவஹர்லால் நேரு, சரோஜினி நாயுடு, அப்துல் கலாம், கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் போன்று, எழுத்தாளர்களை, அரசியல்வாதிகளை, சிந்தனையாளர்களை எல்லாம் அரவணைத்துக் கொண்டு அது செயல்பட்டது. நிறைய பேர் செயல்பட்டிருக்கிறார்கள். தகழி சிவசங்கரம்பிள்ளை போன்று நிறைய கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் அந்த இயக்கம் உருவாக்கியது.
அவ்வாறு இந்திய அளவில் மிகச் சிறப்பாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, அத்தகையதோர் இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் இதே காலகட்டத்தில் மணிச்கொடி பத்திரிக்கை உருவாகியது. அது ஆரம்பிக்கப்பட்டபோது வ.ரா,. சொக்கலிங்கம் போன்றவர்கள் பாரதியினுடைய கவிதைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தேச விடுதலைப் போராட்ட இயக்கத்தினையும் பிரதிபலித்தார்கள். அத்தகைய லட்சியத்தோடு மணிக்கொடி பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பத்திரிக்கை ஆரம்பித்து ஒரு 3 அல்லது 4 இதழ்கள் வந்தபிறகு, பி.எஸ். இராமையா அவர்கள் அதன் பொறுப்புக்கு வந்தபிறகு, அது வெறும் இலக்கியப் பத்திரிக்கையாக மாறிவிட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு பத்திரிக்கையாக அது மாறிவிட்டது.
அதன்பின்னர், தமிழகத்தில் கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், பி.சீனிவாசராவ் போன்றவர்களாலே ஜனசக்தி ஆரம்பிக்கப்பட்டது. அதில் மூன்றாவது இதழில் பாரதிதாசனுடைய ‘புதியதோர் உலகு செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்’ என்கிற பொதுவுடைமை தத்துவத்தை ஏற்றுக்கொண்ட கவிதை வருகிறது. இவ்வாறு வந்ததுமட்டுமல்லாமல், இப்படி எழுத்தாளர்கள், இடதுசாரி எண்ணம்கொண்ட படைப்பாளிகளை உருவாக்குகின்றபோது இவர்களையெல்லாம் ஓர் அமைப்புரீதியாக அணைத்துக்கொள்ளமுடியாத ஒரு நிலைமை அப்போது இருந்திருக்கிறது. அவர்களையெல்லாம் அணைத்துக்கொள்ள எங்களுடைய முன்னோடிகள் தவறிவிட்டார்கள். இந்தத் தவறின் காரணமாகவே இன்றையவரைக்கும் கந்தசாமியும் நானும் ஒன்றாக சேரமுடியவில்லை.
ஒரு ‘செக்டேரியன் அப்ரோச்’ (sectarian approach) இன்னமும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் இருக்கிறது. அதிலிருந்து நாம் மாற வேண்டும்.
ஏனென்றால், ஆரம்பகாலத்திலே ஜனநாயகவாதிகள், தேசிய விடுதலைக்காக நின்றவர்கள், பண்டிட் ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் நம்முடன் வந்து சேர்ந்து நின்றார்கள். சரோஜினி நாயுடு நம்முடன் இருந்திருக்கிறார்.   முல்க்ராஜ் ஆனந்த் நம்முடன் இருந்திருக்கிறார்.
ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் 1938க்கும் 1954க்கும் இடைப்பட்ட  காலத்தில் நடைபெற்ற இயக்கங்களைப் பிரதிபலிக்கக்கூடிய எழுத்துக்கள் வரவில்லை. சரித்திரப் பதிவுகள் வரவில்லை. காரணம், இவர்களையெல்லாம் ஒன்றிணைக்கக்கூடிய வகையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்படவில்லை.
1955-56க்குப் பிறகுதான் உ ருவானது. அதற்குப்பின்னர் கூட சா.கந்தசாமி போன்றவர்கள் ஜனநாயக எழுத்தாளர்கள் வேறு முகாம்களில் இருந்தபோதும், அவர்களுடைய அப்பழுக்கற்ற இலக்கியப் பதிவுகளையும் எவரும் குறைசொல்ல முடியாது.
இன்றைக்கு எங்களுடைய பத்திரிக்கைகளில் எல்லாம் கந்தசாமி எழுதிக் கொண்டிருக்கிறார்.  இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால், கந்தசாமி போன்ற மூத்த எழுத்தாளர்களை, ஜனநாயக எண்ணம்கொண்ட படைப்பாளிகளை, நாம் இணைத்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் வருங்காலம் மிகவும் பயங்கரமாக இருக்கிறது. உலக முதலாளித்துவம் ‘‘மல்ட்டி கல்ச்சர்’’ என்னும் பன்முகக் கலாச்சாரத்தை, ‘‘யூனி கல்ச்சர்’’ என்னும் ஒரே கலாச்சாரமாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய பன்முகப் பண்பாட்டை முழுமையாக அழிப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறது.
பரமசிவம் மிகத் தெளிவாகச் சொன்னார். நம் நாட்லுள்ள பன்முகக் கலாச்சாரத்தை, பன்முகப் பண்பாட்டை பாதுகாத்து நிற்பவர்கள் நம் பெண்கள். மதுரையில் மீனாட்சி அம்மன்தான், காஞ்சியில் காமாட்சிதான். இவ்வாறு நம் நாட்டில் இன்னமும் தாய்வழிச் சமுதாயத் தெய்வங்கள்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. அவற்றை அவர்களால் அவ்வளவு எளிதாக அழித்துவிட முடியாது.  இதை அவர்கள் அழித்தால்தான் நம் பண்பாட்டை அவர்களால் ஒழிக்க முடியும்.
இதுஒருபுறம் இருக்க, படைப்பாளிகள், ஜனநாயக எண்ணம்கொண்ட படைப்பாளிகள், உலக முதலாளித்துவத்தினுடைய தாக்குதலிலிருந்து நம்முடைய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நாம் காப்பாற்ற வேண்டும். இதற்கு ஜனநாயக எண்ணம்கொண்ட எழுத்தாளர்களை முற்போக்கு எழுத்தாளர்கள் அணைத்துக்கொள்ள வேண்டும். கந்தசாமி போன்றவர்கள் எங்களுடன் சேர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாங்கள் இருவேறு முகாம்களில் இருந்தபோதும், சண்டை போட்டுக் கொண்டாலும் விரோதிகள் கிடையாது. எனவே, என் போன்ற எழுத்தாளர்கள் மட்டுமல்ல, எனக்குப் பின்னால் இருக்கின்ற எழுத்தாளர்களை, படைப்பாளிகளை வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் மூத்த எழுத்தாளர் என்ற முறையில் கந்தசாமி போன்றவர்களுக்கும் உண்டு. அந்தக் கடமையை அவர்கள் நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாவல் பற்றி
‘தோல்’  நாவலில் சொல்லப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் எல்hலாம் உண்மையான கதாபாத்திரங்கள்.  நான் ஒரு வக்கீல். ஒரு வழக்கறிஞன் என்ற முறையில் தினம் தினம் புதுப் புதுப் பிரச்சனைகளை மட்டும் நான் சந்திக்கவில்லை, புதுப் புதுக் கதாபாத்திரங்களையும் சந்தித்தேன். அதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. 
மேலும் ஆரம்பகாலத்திலிருந்தே என் நாவல்களைப் படிப்போருக்கு ஒரு விஷயம் நன்கு தெரியும். என் நாவல்களில் பெண்களை கோழைகளாக நான் படைக்கவில்லை. இந்த நாவலில் வரும் அருக்காணி, தாயம்மா போன்றவர்கள் எவ்வளவு மகத்தான தியாகங்களைச் செய்திருக்கிறார்கள், அதே நேரத்தில் எவ்வளவு தைர்யமிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள், இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
நேற்றையதினம் கூட எழுத்தாளர் பாமா அவர்களையும் அவருடன் மற்றொரு பேராசிரியையும் சந்தித்தபோது நான் சொன்னேன். ‘‘இந்நாவலைப் படியுங்கள். பெண்களைப் பற்றி நான் என்ன சொல்லி இருக்கிறேன் என்று உங்கள் அபிப்பிராயத்தை எனக்குச் சொல்லுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டேன். பெண்கள் சமூகத்தின் செம்பாதி. அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.
அதே போன்றுதான் தலித் எழுத்தாளர்கள்.   துரதிர்ஷ்டம் என்னவென்றால், தலித் எழுத்தாளர்கள், தலித்துகளின் அவமானங்களை, அவலங்களை எழுதுகிறார்களேயொழிய, அவற்றிற்கு எதிராக அவர்கள் நடத்திடும் போராட்டங்களைச் சொல்வதற்குத் தயங்குகிறார்கள்.  இந்திய சமூகத்தில் மூன்றில் ஒரு பங்கு தலித்துகளும் பழங்குடியினருமாவார்கள். இவர்கள் பங்களிப்பு இல்லாமல் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. அதே மாதிரி, சமுதாயத்தில் மூன்றில் இரு பங்காக இருக்கும் மற்றவர்களின் பங்களிப்பு இல்லாமல், இவர்கள் விடுதலையும் சாத்தியம் இல்லை. இந்த விஷயங்களை நான் என் நாவலில் கொண்டுவந்திருக்கிறேன்.
இது என் கொள்கை. என் கொள்கையை எனக்குக் கிடைத்த அனுபவங்களுடன் இணைத்து எழுதியதால்தான் இந்த நாவல் வெற்றி பெற முடிந்தது.  
அடுத்து, கதையில் வரும் வடிவாம்பாள் பாத்திரம். அவர் ஒரு தேவதாசி. அவர்தான் பிராமண வகுப்பைச் சேர்ந்த கதாபாத்திரமான சங்கரனைத் திருமணம் செய்து கொள்கிறார். அவ்வாறு திருமணம் செய்துகொண்டபோதிலும், திருமணத்தன்றே சங்கரன் சிறைக்குப் போய்விடுகிறார். வடிவாம்பாள் காதல் நிறைவேறவில்லை. இவ்வாறு நான் நாவலை ஒரு குறியீடாக (symbolic-ஆக) முடித்திருக்கிறேன். ஏனென்று சொன்னால் தொழிலாளி வர்க்கம் போராடிக் கொண்டிருக்கிறது. இன்னமும் முழுமையாக விடுதலையாகவில்லை. விடுதலையாக வேண்டும் என்பதைத்தான் அவ்வாறு குறியீடாகச் சொல்லி இருக்கிறேன்.
நாவலைப் படித்துப் பாருங்கள். நான் மலரும் சருகும் எழுதிய காலத்தில் அதன் கதாமாந்தர்களான விவசாயிகளால் அதனைப் படிக்க முடியவில்லை. ஆனால் இன்றைய தினம் தோல் நாவலை தொழிலாளர் வர்க்கம் படிக்க முடிகிறது.
இன்றைய காலகட்டத்தில் இந்த நாவல் தொழிலாளர் வர்க்கத்திற்கு மிகவும் தேவைப்பட்ட ஒரு நாவல். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, மேற்கு வங்கம், கேரள மாநிலங்களில் இடது முன்னணி ஆட்சி இல்லாத சமயத்தில் இது வந்திருக்கிறது. இந்த நேரத்தில் இந்நாவலைப் படிக்கும் ஒவ்வொரு தொழிலாளியும், ‘‘நான் ஒரு பாரம்பர்யமிக்க அமைப்பின் ஒரு பாகம்’’ என்று உணர வேண்டும் என்ற உணர்வோடுதான் இந்த நாவலை வெளியிட்டேன்.   இங்கே அமர்ந்திருக்கிற ஒவ்வொருவரும் இந்நாவலைப் படிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.
இவ்வாறு டி.செல்வராஜ் பேசினார்.
(தொகுப்பு: ச.வீரமணி)

Wednesday, February 13, 2013

அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை


நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது அப்சல் குரு தூக்கிலிடப்பட்டுள்ள நிகழ்வு ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு இந்த கேள்விகளை வலுப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப் பட்ட நிலையில், நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து விடக்கூடாது என்பதற்காக விரைவாக அவர் தூக்கிலிடப்பட்டார் என்று உள்துறை அமைச்சர் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த வழக்கில் நீண்ட நெடிய நீதி மற் றும் சட்ட நடைமுறைகள் நடந்தேறியுள் ளன. அப்சல் குருவுக்கு 2002 டிசம்ப ரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆகஸ்ட் 2005ல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், அப்சல் குருவின் மனைவி 2006 அக் டோபரில் கருணை மனுத் தாக்கல் செய்தார்.

2013 பிப்ரவரி 3ம் தேதி ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இந்தப்பின்னணியில் தூக்கு தண் டனை நிறைவேற்றப்பட்ட விதம் பரவ லான விமர்சனத்திற்கு உள்ளாகியுள் ளது. நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பாக கருணை மனு நிராகரிக்கப்பட்ட விவரம் தண்டனை விதிக்கப்பட்டவருக்கோ அவரது குடும் பத்தினருக்கோ உரிய காலத்தில் தெரி விக்கப்படவில்லை. அப்சல் குருவை அவரது குடும்பத்தினர் கடைசி நேரத்தில் சந்திப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட் டுள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட் டது மற்றும் தூக்கிலிடப்படும் தேதி குறித்த விவரம் அவரது குடும்பத்தினருக்கு விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்ட விதமும் இரக்கமற்ற தன்மையை அப்பட்ட மாக வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த தூக்குத் தண்டனை நிறை வேற்றப்பட்ட காலமும் ஏராளமான கேள்விகளை எழுப்புவதாக உள்ளது. பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கை யில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வேறு சிலரும் உள்ளனர். தேவேந்தர் பால் சிங், புல்லார் கருணை மனு நிரா கரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் பியாங்சிங் கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட மற் றொரு நபரான பல்வந்த் சிங்கிற்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவ ருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட் டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள் ளது. ஜனாதிபதி அவர்களது கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இதைத் தொடர்ந்து அம்மூவரும் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தால் தூக்குதண்டனைக்கு தடையுத்தரவு பெற்றுள்ளனர்.

ஆனால் இதேபோன்று அன்றி அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டவுட னேயே அவர் தூக்கிலிடப்பட்டுள்ளார். மேற் கூறப்பட்ட வழக்குகளில் நீதிமன்ற உத்தரவு களை நிறைவேற்றுவதில் அரசியல் காரணங் களும் கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட் டுள்ளன. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு தமிழக சட்ட மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பஞ் சாப் வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக் கப்பட்டதற்கு பஞ்சாபில் உள்ள அகாலிதள அரசுஎதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ரஜோ னைவை தூக்கிலிட எதிர்ப்பு தெரிவித்து பஞ் சாபில் பந்த் நடைபெற்ற நிலையில், மத்திய அரசினால் தூக்கு தண்டனையை நிறை வேற்ற தடைவிதிக்கப்பட்டுள்ளது.அப்சல் குருவை தூக்கிலிடப்பட்டதற்கு பல் வேறு அரசியல் காரணங்கள் உள்ளன என் றும் தனித்த முறையில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றுமே காஷ்மீர் மக்கள் முடிவுக்கு வந்துள்ளனர். அப்சல் குருவை தூக்கிலிடவேண்டும் என்று பாஜக மற்றும் நரேந்திர மோடி எழுப்பிய குரலுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செவி சாய்த்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள் ளது. நாட்டின் இதர பகுதியினர் நடத்தப்படு வதை விட தாங்கள் பாரபட்சமாக நடத்தப் படுவதாக காஷ்மீரிகள் கருதுகின்றனர். காஷ் மீரில் நிலவும் பிரச்சனையை மேலும் தீவிர மாக்கவே இது உதவும். காஷ்மீரில் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் ரீதி யான தீர்வுக்கு எந்தவிதமான திட்டவட்ட நட வடிக்கையையும் ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு முன்னெடுக்காத நிலையில் அப் சல் குரு தூக்கிலிடப்பட்ட விதம் அந்நியமாகும் உணர்வில் மேலும் எண்ணெய் வார்ப்பதோடு பிரிவினைவாத உணர்வை தூண்டிவிடும்.தூக்குதண்டனையை ஒழிக்கவேண்டும் என்பது வலுவான மற்றும் சமகால பொருத் தப்பாடுடைய ஒன்றாகும். இது தொடர்பான தனது நிலையை மறுபரிசீலனை செய்வது தொடர்பான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தற்போது ஈடுபட்டுள்ளது. 

இதனிடையே, பாஜக மற்றும் கார்ப்பரேட் ஊடகங்கள் இனவெறி அடிப்படையில் தங் களுக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக ஊதிப் பெரிதாக்கி செய்யப்படும் பிரச்சாரம் வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது. பாஜகவைப் பொறுத் தவரை பயங்கரவாதத்திற்கு எதிரான போராட் டம் என்பது அவர்களது பாரபட்சமான அரசியல் தளத்தையும் அவர்களது குறுகிய அரசியல் நலனை அடிப்படையாகக் கொண்டதுமாகும்.


Monday, February 11, 2013

அதிகரித்துவரும் மதவெறித் தீ!

2004இல் பொதுத்தேர்தல் நடைபெற்றபோது, கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்து விதமான கருத்துக்கணிப்புகளையும், ஊகங்களையும் புறந்தள்ளிவிட்டு, நாட்டு மக்கள் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு மகத் தான வெற்றியை ஈட்டித்தந்து, அரசாங்கத்தை அமைத்திட வழி வகுத்துத்தந்தனர். ‘‘இந்தியா ஒளிர்கிறது’’ என்றும் ‘‘எல்லாம் நன்றாகவே நடக்கிறது’’ என்றும் மிகவும் மூர்க்கத்தனமாக பாஜகவின் தலைமையில் உள்ள மதவெறி சக்திகள் கட்டவிழ்த்துவிட்ட பிரச்சாரத்தை யெல்லாம் தவிடுபொடியாக்கினார்கள். எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையின் காரணமாகத்தான் அப்போது ஆட்சியிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் பொதுத்தேர்தலையும் ஒரு சில மாதங்களுக்கு முன்பே கொண்டுவந்தது. ஆயினும் இடதுசாரிக் கட்சிகளின் தீர்மானகரமான ஆதரவுடன் மட்டுமே ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம் அமைக்கப்படும் என்ற முறையில் மக்கள் தீர்ப்பு அமைந்தது.

அதன் அடிப்படையில் ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டத்தின் அடிப்படையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்க இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்தன. மக்கள் இவ்வாறு தீர்ப்பு அளித்ததன் மூலம் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. நாட்டின் அரசியல் வரலாற்றில் வரவேற்கத்தக்க மாற்றமாக இது அமைந்தது. அந்த சமயத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் மிகவும் மோசமான முறையில் மதவெறித் தீ விசிறிவிடப்பட்டுக் கொண்டிருந்தது. குஜராத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படு கொலைகளால் ஏற்பட்டுள்ள கொடூரமான காயங்கள் இன்னமும் மக்கள் மனதிலிருந்து அகலவில்லை. அதேபோன்று பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலி மும்பையில் பாட வந்தபோது அவரைப் பாடவிடாமல் தடுத்து, அவருக்கு எதிராக வெறுக்கத்தக்க பிரச் சாரத்தை மேற்கொண்டது,  இந்தியாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட விடாமல் சிவசேனையால் தடுக்கப்பட்டது, விதவை மறுமணம் போன்ற சமூகக் கொடுமைகளுக்கு எதிரான திரைப்படங்கள் தடை செய்யப்படுதல் போன்ற எண்ணற்ற நடவடிக் கைகள் நாட்டின் பல பகுதிகளிலும் வெளிவந்து கொண்டிருந்தன.

இத்தகு சூழ்நிலையில்தான் 2004 மக்கள் தீர்ப்பானது ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தது. அது கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், வன நிலங்களில் பழங்குடியினர் உரிமைகளைக் காத்திடுவதற்கான சட்டம், தகவல் அறியும் உரிமைச்சட்டம், விவசாயிகள் கடன் தள்ளுபடி போன்று மக்களுக்கு நேரடி யாகப் பயனளிக்கக்கூடிய விதத்தில் எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மக்களுக்கு நன்மை பயக்கும் இத்திட்டங்கள் பலவும், இடதுசாரிக் கட்சிகளின் தூண்டுதலால் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டன. மேலும், ஆட்சியாளர்கள் அமல்படுத்தி வந்த தாராளமய நிதி சீர்திருத்தக் கொள்கைகளை இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்து வந்ததன் காரணமாக சர்வதேச நிதி மூலதனத்தின் ஊக நடவடிக்கைகளுக்கு நாட்டின் பொதுத்துறை சொத்துக்கள் இரையாகாமல் தடுக்கப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக, இப்போது வரலாறு ஒரு முழுச் சுற்று பயணம் செய்திருப்பது போல் தோன்றுகிறது. மீண்டும் ஒருமுறை கலாச்சார மற்றும் மதவெறி, தன் கோர முகத்தை நாட்டின் பல பகுதிகளில் உயர்த்தத் தொடங்கியுள்ளது. சமீபத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் மதவெறி விஷத்தைக் கக்கி இருக்கிறார். இவ்வாறு இவர், ஆந்திரப் பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் எம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த அக்பருதீன் ஒவாசி, 2012 டிசம்பர் 22 அன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், அடிலாபாத் மாவட்டம், நிர்மல் நகரத்தில் வெறித்தனமாகப் பேசி விஷத்தைக் கக்கி சரியாக ஒரு மாதம் கழித்து, இவர் பேசியிருக்கிறார். அவர் அப்போதே கைது செய்யப்பட்டுவிட்டார். 2013 ஜனவரி 22 அன்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவரான பிரவீண் தொகாடியா, மேற்படி நிர்மல் நகருக்கு, எண்பதே கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம், நாண்டட் மாவட்டத்தில் போகார் என்னும் நகரத்தில், இவ்வாறு தன் வெறுப்புப் பேச்சை நிகழ்த்தி இருக்கிறார். வகுப்புவாதமும் மத அடிப்டைவாதமும் ஒன்றை மற்றொன்று ஊட்டி வளர்த்திடும், வலுப்படுத்திடும் என்று கூறியதை - மிகச் சரி என்று மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்திருக்கிறது. இம்முயற்சிகளின் மூலம் இவர்கள் நம்முடைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் அடித்தளங்களையே அழித்திட முனைகிறார்கள். கலை மற்றும் பண்பாட்டுத் தளங்களிலும் இத்தகைய வெறித்தன்மை வளர்ந்துகொண் டிருக்கிறது. ‘விஸ்வரூபம்’ என்னும் கமல் ஹாசனின் திரைப்படம் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டது. இப்படத்திற்கு ஆட்சேபணை தெரிவித்த சில பிரிவினருடன் திரைப்படத் தைத் தயாரித்தவர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் கண்டதை அடுத்து இப்படத்தைத் திரையிடுவதற்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது. தியேட்டர்களில் திரையிடுவதற்காக மத்தியத் தணிக்கை வாரியம் சான் றிதழ் வழங்கியபின் இவ்வாறு ஒரு திரைப் படத்தைத் தடை செய்தது என்பது ஓர் ஆழ மான பிரச்சனையை எழுப்பி இருக்கிறது. ஸ்ரீநகரில், அனைத்துப் பாடகர்களும் பெண்களேயான பிரகாஷ் என்னும் ராக் இசைக்குழுவினர், ‘‘தெய்வ நிந்தனை நடவடிக்கை’’யில் ஈடுபட்டிருப்பதாக மத குரு மஃப்டி பஷீர்-உட்-தின் பிறப்பித்த ‘ஃபட்வா’ (fatwa) அச்சுறுத்தலை அடுத்து, அவர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தாது கைவிட்டு விட்டார்கள்.மேற்கு வங்க முதல்வரின் கட்டளைக் கிணங்க மேற்கு வங்கத்தில் நடந்ததைப் போன்று, தற்போது ஆக்ராவிலும் காவல்துறை யினர் ஒருவரைக் கைது செய்திருக்கிறார்கள். அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா? பிரதமர், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் உட்பட அரசியல் தலைவர்களின் கார்ட்டூன்களை ‘ஆபாசமாக’  வரைந் திருக்கிறாராம்.

புதுதில்லியில் நடைபெற்றுவந்த ஒரு மாடர்ன் ஆர்ட் கண்காட்சி தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது. இதற்குக் காரணம் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மகளிர் பிரிவான துர்கா வாஹினி என்னும் அமைப்பு இக்கண்காட்சியில் பெண்களை நிர்வாணமாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்று கூறி எதிர்ப்புக் கிளர்ச் சிகளுக்கு ஏற்பாடு செய்தது. உண்மையில் இக்கண்காட்சியில் உலகப் புகழ்பெற்ற அம் ரிதா சேர்-கில், ராஜா ரவி வர்மா, அஞ்சோலி இளமேனன், எம்.எப். உசேன், ஜோகேன் சவுத்ரி போன்றோரின் ஓவியங்கள் வைக்கப் பட்டிருந்தன. அதேபோன்று பெங்களூரில், தில்லியைச் சேர்ந்த ஒருவர் தான் நடத்தி வந்த ஓவியக் கண்காட்சியை மூடிவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். கர்நாடக ‘கலாச்சாரப் போலீஸ்’ அவர் வைத்திருந்த இந்து ஆண் கடவுள்களையும், பெண் கடவுள்களையும் அருவருப்பானவைகளாகக் கருதியதால், அவர் இம்முடிவுக்கு வந்தார். இக்கண்காட்சியை ஒரு நாள் முன்னதாகத்தான் கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் திறந்து வைத்தார். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஓர் இலக்கியத் திருவிழாவிற்குப் பங்கேற்க வருவதாக இருந்தது. ஆனால் அவர் வருகையை மேற்கு வங்க அரசு தடுத்துள்ளது. மாநில அரசு இவ்வாறு நடவடிக்கை எடுத்ததற்கு என்ன காரணம் என்று இதுவரைத் தெரிவித்திடவில்லை. தன்னைத் தற்காத்துக்கொள்வதற்காக அது, ‘இடது முன்னணி அரசு, வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை இவ்வாறு நடத்தவில்லையா?’ என்று கேட்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் வழக் கம்போலவே இது தொடர்பான முழு உண்மை களையும் சவுகரியம் கருதி கூறவில்லை. தஸ்லிமா நஸ்ரீன் கொல்கத்தாவிற்கு வந்தார். இடது முன்னணி அரசாங்கத்தால் அவரது வருகை தடுக்கப்படவில்லை. அவரது நூல் ஒன்று கொல்கத்தாவில் வெளியிடப்பட்டது. அதிலிருந்த சில பிரிவுகள், அதே நூல் வங்க தேசத்தில் வெளியிடப்பட்டபோது அதில் இல்லை. இதனை அடுத்து அங்கே எதிர்ப்புகள் வெளிப்பட்டன. பெரிய அளவில் வன்முறை வெடிக்கும் சூழல் உருவானதை அடுத்து, அன்றைய மாநில அரசால் ராணுவம் வரவழைக்கப்பட்டு பெரிய அளவில் வன் முறை தவிர்க்கப்பட்டது. சூழ்நிலை அந்த அளவிற்கு மாறியதால்தான் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எதிர்ப்பாளர்களுடன் இடது முன்னணி அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகள் மற்றும் முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்தே மாநிலத்தில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக அவரை கொல்கத்தாவிலிருந்து அப்புறப்படுத்திட மத்திய அர சாங்கத்தை மாநில அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் சல்மான் ருஷ்டி விவகாரத்தில், அவரை கொல்கத்தாவிற்கு வராதீர் என்று மாநில அரசால் நேரடியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் அவ்வாறு மாநில அரசு நட வடிக்கை எடுத்தது என்பது குறித்து எதுவும் மக்களுக்குச் சொல்லப்படவில்லை.இவை அனைத்தும் நாட்டின் ஒற்றுமைக் கும் ஒருமைப்பாட்டுக்கும் மற்றும் சமூகத்தின் மதச்சார்பின்மை மாண்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய தீய அறிகுறிகளாகும். விரக் தியின் விளிம்புக்குச் சென்றுள்ள ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக, ஆட்சிக்கு வந்தால் யார் பிரதமர் என்று இப்போது குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டுள்ள பாஜக, தில்லியில் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, மதவெறித் தீயை உசுப்பிவிடும் இந்துத்வா நிகழ்ச்சிநிரலை மீண்டும் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. மதவெறித் தீயை உசுப்பிவிடுவதன் மூலம் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங் களை அடைந்திடலாம் என்று அது நம்புகிறது. இவ்வாறு, மதவெறியர்களின் நடவடிக்கை களின் காரணமாக,  நம் மதச்சார்பற்ற ஜன நாயகக் குடியரசின் அடித்தளங்கள் மீண்டும் ஒருமுறை கடும் சோதனைக்கு உள்ளாகியுள்ளன. தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரத் தாக்குதல்களுக்கு எதிராகக் கடும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிற நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் இவர்களின் மதவெறிப் பிரச்சாரம் உதவாது. தற்போது ஆட்சியாளர்களுக்கு எதிராக அவர்கள் மேற்கொண்டிருக்கிற போராட்டத்தைத் திசைதிருப்பவே அது உதவிடும். எனவே, நாட்டின் நலனுக்காகவும், நாட்டு மக்களின் நன்மைக்காகவும், இத்தகைய மதவெறிப் பிரச்சாரங்கள் தீர்மானகரமான முறையில் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி