Thursday, February 21, 2013

சாகித்திய அகாதெமி விருது பெற்ற டி.செல்வராஜுக்கு தில்லித் தமிழ்ச்சங்கத்தில் அறிஞர்கள் புகழாரம்




சாகித்திய அகாதெமி விருது பெற்ற டி.செல்வராஜுக்கு
தில்லித் தமிழ்ச்சங்கத்தில் அறிஞர்கள் புகழாரம்
புதுதில்லி, பிப்ரவரி 20-
2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான தோல் நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்ற டி.செல்வராஜ் அவர்களுக்குத் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அறிஞர் பெருமக்கள் புகழாரம் சூட்டினார்கள்.
இந்திய மொழிகளில் 2012ஆம் ஆண்டு வெளியான நூல்களுக்கு சாகித்திய அகாதெமி விருதுகள் திங்கள் அன்று வழங்கப்பட்டன. தமிழில் தோல் நாவலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான டி. செல்வராஜ் அவர்களுக்கு அவ்விருது கிடைத்தது. அவரைப் பாராட்டி, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் செவ்வாய் அன்று மாலை பாராட்டு விழாக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்ச்சங்கத்தில் உள்ள பாரதி மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற  பேராசிரியர் கி. நாச்சிமுத்து தலைமை வகித்தார். அப்போது தோல் நாவலின் சிறப்புகள் குறித்து மிகவும் சிறப்பாக உரையாற்றினார்.
தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் முகுந்தன் அனைவரையும் வரவேற்றார்முதுபெரும் எழுத்தாளர் சா. கந்தசாமி மற்றும் பரமசிவம் ஆகியோர் பாராட்டுரை வழங்கியபின், டி.செல்வராஜ் ஏற்புரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘தில்லித் தமிழ்ச்சங்கம் மிகவும் பழைமையான சங்கம் மட்டுமல்ல, மிகவும் பிரபலமான ஒரு சங்கமும் ஆகும். இந்தச் சங்கத்திலே பேசுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
எனக்குத் தோன்றுகிற சில விஷயங்களைத் தமிழ் மக்களுக்கு உங்கள் மூலம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
நண்பர் கந்தசாமி அவர்கள் தன்னடக்கம் காரணமாக, சாகித்திய அகாதெமி தேர்வுக்குழுவிற்குள் நடந்த பல விஷயங்களை சொல்லவில்லை. உண்மையில் கந்தசாமி அதில் இருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாது. என்னுடைய நாவல் அங்கு பரிசீலனைக்காகப் போய் இருக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது.
இலக்கிய உலகில் நானும் அவரும் வெவ்வேறு முகாம்களில் பணியாற்றிய போதிலும் இருவரும் கடந்த நாற்பது ஆண்டுகளாக நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ‘‘நான் நாவலைப் படித்தேன்’’ என்று கூட அவர் என்னிடம் சொல்லவில்லை. விருது வழங்கப்பட்ட பின்னர் ஒரு வார்த்தை அவர் என்னிடம் சொன்னார். ‘‘எங்கள் ஜாதியை இவ்வளவு அசிங்கமாக எந்த எழுத்தாளனும் சித்தரித்தது இல்லை’’ என்றார்அதற்கு நான் அவரிடம், ‘‘அசே அசிங்கமான மனிதன் பின்னர் தொழிலாளர் வர்க்கத்தின் தலைவராக உயர்ந்திருக்கிறானே, பார்த்தீர்களா?’’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘இரண்டையும்தான் பார்த்தேன்.’’ என்று கூறினார். நாவலை ஒரு தடவை அல்ல, பல தடவை படித்திருக்கிறார். தேர்வுக் குழுவுக்குப் போகும்போதே முடிவு பண்ணிவிட்டுத்தான் போனேன் என்று பின்னர் அவர் என்னிடம் கூறினார்.
பேராசிரியர் நாச்சிமுத்து அவர்கள் நாவலில் உள்ள பல விஷயங்களை நன்கு கூர்ந்து ஆய்வு செய்து இங்கே பேசினார்இதுபோன்று சோசலிச யதார்த்த நாவல்கள் தமிழில் வெகு காலம் கழித்துத்தான் வெளிவந்தன என்று மிகவும் ஆதங்கப்பட்டார். பொதுவாகத் தமிழ் நாவல்களில் சரித்திரப் பதிவுகள் இல்லை என்று கூறினார்அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு முற்போக்கு எழுத்தாளர்களாகிய நாங்களும் ஆளாகிறோமோ என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
1935இல்தான் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. 1927இலிருந்து 1930 வரையில் உலக அளவில் நடைபெற்ற பாசிசத்திற்கு எதிரான பண்பாடு பாதுகாப்பு எழுத்தாளர்கள் மாநாடு, பாரீசில் நடைபெற்றது. அந்தக் காலத்தில்தான் பாசிசமும், நாசிசமும் உலக அரங்கில் மனித நாகரிகத்திற்கு எதிராக வந்து கொண்டிருந்தது. அதை முதலில் எதிர்த்தவர்கள் படைப்பாளிகளும், எழுத்தாளர்களும்தான். பாசிசத்தையும், நாசிசத்தையும் எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடியது மட்டுமல்லாமல், ஸ்பெயினில் நடைபெற்ற போராட்டத்தில் பல எழுத்தாளர்கள் தங்கள் இன்னுயிரைப் பலி கொடுத்திருக்கிறார்கள். உங்களுக்கு எல்லாம் ஒரு விஷயம் தெரியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஸ்பெயினில் நடைபெற்ற போராட்டத்தில் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பாக அதன் உறுப்பினரான பண்டிட் ஜவஹர்லால் நேரு போராட்டக் களத்திற்குச் சென்று கலந்து கொண்டார்
1935இல் உருவாக்கப்பட்ட அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அங்கம் வகித்த முல்க்ராஜ் போன்றவர்கள் முற்போக்காளர்கள் மட்டுமல்ல, மார்க்சிஸ்ட்டுகளும் ஆவார்கள். இந்தியாவில் தேச விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டபோது, பண்டிட் ஜவஹர்லால் நேரு, சரோஜினி நாயுடு, அப்துல் கலாம், கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் போன்று, எழுத்தாளர்களை, அரசியல்வாதிகளை, சிந்தனையாளர்களை எல்லாம் அரவணைத்துக் கொண்டு அது செயல்பட்டது. நிறைய பேர் செயல்பட்டிருக்கிறார்கள். தகழி சிவசங்கரம்பிள்ளை போன்று நிறைய கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் அந்த இயக்கம் உருவாக்கியது.
அவ்வாறு இந்திய அளவில் மிகச் சிறப்பாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, அத்தகையதோர் இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் இதே காலகட்டத்தில் மணிச்கொடி பத்திரிக்கை உருவாகியது. அது ஆரம்பிக்கப்பட்டபோது வ.ரா,. சொக்கலிங்கம் போன்றவர்கள் பாரதியினுடைய கவிதைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தேச விடுதலைப் போராட்ட இயக்கத்தினையும் பிரதிபலித்தார்கள். அத்தகைய லட்சியத்தோடு மணிக்கொடி பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பத்திரிக்கை ஆரம்பித்து ஒரு 3 அல்லது 4 இதழ்கள் வந்தபிறகு, பி.ஸ். இராமையா அவர்கள் அதன் பொறுப்புக்கு வந்தபிறகு, அது வெறும் இலக்கியப் பத்திரிக்கையாக மாறிவிட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு பத்திரிக்கையாக அது மாறிவிட்டது.
அதன்பின்னர், தமிழகத்தில் கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் பி.ராமமூர்த்தி, .ஜீவானந்தம், பி.சீனிவாசராவ் போன்றவர்களாலே ஜனசக்தி ஆரம்பிக்கப்பட்டது. அதில் மூன்றாவது இதழில் பாரதிதாசனுடைய புதியதோர் உலகு செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் என்கிற பொதுவுடைமை தத்துவத்தை ஏற்றுக்கொண்ட கவிதை வருகிறது. இவ்வாறு வந்ததுமட்டுமல்லாமல், இப்படி எழுத்தாளர்கள், இடதுசாரி எண்ணம்கொண்ட படைப்பாளிகளை உருவாக்குகின்றபோது இவர்களையெல்லாம் ஓர் அமைப்புரீதியாக அணைத்துக்கொள்ளமுடியாத ஒரு நிலைமை அப்போது இருந்திருக்கிறது. அவர்களையெல்லாம் அணைத்துக்கொள்ள எங்களுடைய முன்னோடிகள் தவறிவிட்டார்கள். இந்தத் தவறின் காரணமாகவே இன்றையவரைக்கும் கந்தசாமியும் நானும் ஒன்றாக சேரமுடியவில்லை.
ஒரு செக்டேரியன் அப்ரோச் (sectarian approach) இன்னமும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் இருக்கிறது. அதிலிருந்து நாம் மாற வேண்டும்.
ஏனென்றால், ஆரம்பகாலத்திலே ஜனநாயகவாதிகள், தேசிய விடுதலைக்காக நின்றவர்கள், பண்டிட் ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் நம்முடன் வந்து சேர்ந்து நின்றார்கள். சரோஜினி நாயுடு நம்முடன் இருந்திருக்கிறார்.   முல்க்ராஜ் ஆனந்த் நம்முடன் இருந்திருக்கிறார்.
ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் 1938க்கும் 1954க்கும் இடைப்பட்ட  காலத்தில் நடைபெற்ற இயக்கங்களைப் பிரதிபலிக்கக்கூடிய எழுத்துக்கள் வரவில்லை. சரித்திரப் பதிவுகள் வரவில்லை. காரணம், இவர்களையெல்லாம் ஒன்றிணைக்கக்கூடிய வகையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்படவில்லை.
1955-56க்குப் பிறகுதான் உ ருவானது. அதற்குப்பின்னர் கூட சா.கந்தசாமி போன்றவர்கள் ஜனநாயக எழுத்தாளர்கள் வேறு முகாம்களில் இருந்தபோதும், அவர்களுடைய அப்பழுக்கற்ற இலக்கியப் பதிவுகளையும் எவரும் குறைசொல்ல முடியாது.
இன்றைக்கு எங்களுடைய பத்திரிக்கைகளில் எல்லாம் கந்தசாமி எழுதிக் கொண்டிருக்கிறார்இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால், கந்தசாமி போன்ற மூத்த எழுத்தாளர்களை, ஜனநாயக எண்ணம்கொண்ட படைப்பாளிகளை, நாம் இணைத்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் வருங்காலம் மிகவும் பயங்கரமாக இருக்கிறது. உலக முதலாளித்துவம் ‘‘மல்ட்டி கல்ச்சர்’’ என்னும் பன்முகக் கலாச்சாரத்தை, ‘‘யூனி கல்ச்சர்’’ என்னும் ஒரே கலாச்சாரமாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய பன்முகப் பண்பாட்டை முழுமையாக அழிப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறது.
பரமசிவம் மிகத் தெளிவாகச் சொன்னார். நம் நாட்லுள்ள பன்முகக் கலாச்சாரத்தை, பன்முகப் பண்பாட்டை பாதுகாத்து நிற்பவர்கள் நம் பெண்கள். மதுரையில் மீனாட்சி அம்மன்தான், காஞ்சியில் காமாட்சிதான். இவ்வாறு நம் நாட்டில் இன்னமும் தாய்வழிச் சமுதாயத் தெய்வங்கள்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. அவற்றை அவர்களால் அவ்வளவு எளிதாக அழித்துவிட முடியாதுஇதை அவர்கள் அழித்தால்தான் நம் பண்பாட்டை அவர்களால் ஒழிக்க முடியும்.
இதுஒருபுறம் இருக்க, படைப்பாளிகள், ஜனநாயக எண்ணம்கொண்ட படைப்பாளிகள், உலக முதலாளித்துவத்தினுடைய தாக்குதலிலிருந்து நம்முடைய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நாம் காப்பாற்ற வேண்டும். இதற்கு ஜனநாயக எண்ணம்கொண்ட எழுத்தாளர்களை முற்போக்கு எழுத்தாளர்கள் அணைத்துக்கொள்ள வேண்டும். கந்தசாமி போன்றவர்கள் எங்களுடன் சேர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாங்கள் இருவேறு முகாம்களில் இருந்தபோதும், சண்டை போட்டுக் கொண்டாலும் விரோதிகள் கிடையாது. எனவே, என் போன்ற எழுத்தாளர்கள் மட்டுமல்ல, எனக்குப் பின்னால் இருக்கின்ற எழுத்தாளர்களை, படைப்பாளிகளை வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் மூத்த எழுத்தாளர் என்ற முறையில் கந்தசாமி போன்றவர்களுக்கும் உண்டு. அந்தக் கடமையை அவர்கள் நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாவல் பற்றி
தோல்  நாவலில் சொல்லப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் எல்hலாம் உண்மையான கதாபாத்திரங்கள்நான் ஒரு வக்கீல். ஒரு வழக்கறிஞன் என்ற முறையில் தினம் தினம் புதுப் புதுப் பிரச்சனைகளை மட்டும் நான் சந்திக்கவில்லை, புதுப் புதுக் கதாபாத்திரங்களையும் சந்தித்தேன். அதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது
மேலும் ஆரம்பகாலத்திலிருந்தே என் நாவல்களைப் படிப்போருக்கு ஒரு விஷயம் நன்கு தெரியும். என் நாவல்களில் பெண்களை கோழைகளாக நான் படைக்கவில்லை. இந்த நாவலில் வரும் அருக்காணி, தாயம்மா போன்றவர்கள் எவ்வளவு மகத்தான தியாகங்களைச் செய்திருக்கிறார்கள், அதே நேரத்தில் எவ்வளவு தைர்யமிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள், இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
நேற்றையதினம் கூட எழுத்தாளர் பாமா அவர்களையும் அவருடன் மற்றொரு பேராசிரியையும் சந்தித்தபோது நான் சொன்னேன். ‘‘இந்நாவலைப் படியுங்கள். பெண்களைப் பற்றி நான் என்ன சொல்லி இருக்கிறேன் என்று உங்கள் அபிப்பிராயத்தை எனக்குச் சொல்லுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டேன். பெண்கள் சமூகத்தின் செம்பாதி. அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.
அதே போன்றுதான் தலித் எழுத்தாளர்கள்.   துரதிர்ஷ்டம் என்னவென்றால், தலித் எழுத்தாளர்கள், தலித்துகளின் அவமானங்களை, அவலங்களை எழுதுகிறார்களேயொழிய, அவற்றிற்கு எதிராக அவர்கள் நடத்திடும் போராட்டங்களைச் சொல்வதற்குத் தயங்குகிறார்கள்இந்திய சமூகத்தில் மூன்றில் ஒரு பங்கு தலித்துகளும் பழங்குடியினருமாவார்கள். இவர்கள் பங்களிப்பு இல்லாமல் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. அதே மாதிரி, சமுதாயத்தில் மூன்றில் இரு பங்காக இருக்கும் மற்றவர்களின் பங்களிப்பு இல்லாமல், இவர்கள் விடுதலையும் சாத்தியம் இல்லை. இந்த விஷயங்களை நான் என் நாவலில் கொண்டுவந்திருக்கிறேன்.
இது என் கொள்கை. என் கொள்கையை எனக்குக் கிடைத்த அனுபவங்களுடன் இணைத்து எழுதியதால்தான் இந்த நாவல் வெற்றி பெற முடிந்தது.  
அடுத்து, கதையில் வரும் வடிவாம்பாள் பாத்திரம். அவர் ஒரு தேவதாசி. அவர்தான் பிராமண வகுப்பைச் சேர்ந்த கதாபாத்திரமான சங்கரனைத் திருமணம் செய்து கொள்கிறார். அவ்வாறு திருமணம் செய்துகொண்டபோதிலும், திருமணத்தன்றே சங்கரன் சிறைக்குப் போய்விடுகிறார். வடிவாம்பாள் காதல் நிறைவேறவில்லை. இவ்வாறு நான் நாவலை ஒரு குறியீடாக (symbolic-ஆக) முடித்திருக்கிறேன். ஏனென்று சொன்னால் தொழிலாளி வர்க்கம் போராடிக் கொண்டிருக்கிறது. இன்னமும் முழுமையாக விடுதலையாகவில்லை. விடுதலையாக வேண்டும் என்பதைத்தான் அவ்வாறு குறியீடாகச் சொல்லி இருக்கிறேன்.
நாவலைப் படித்துப் பாருங்கள். நான் மலரும் சருகும் எழுதிய காலத்தில் அதன் கதாமாந்தர்களான விவசாயிகளால் அதனைப் படிக்க முடியவில்லை. ஆனால் இன்றைய தினம் தோல் நாவலை தொழிலாளர் வர்க்கம் படிக்க முடிகிறது.
இன்றைய காலகட்டத்தில் இந்த நாவல் தொழிலாளர் வர்க்கத்திற்கு மிகவும் தேவைப்பட்ட ஒரு நாவல். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, மேற்கு வங்கம், கேரள மாநிலங்களில் இடது முன்னணி ஆட்சி இல்லாத சமயத்தில் இது வந்திருக்கிறது. இந்த நேரத்தில் இந்நாவலைப் படிக்கும் ஒவ்வொரு தொழிலாளியும், ‘‘நான் ஒரு பாரம்பர்யமிக்க அமைப்பின் ஒரு பாகம்’’ என்று உணர வேண்டும் என்ற உணர்வோடுதான் இந்த நாவலை வெளியிட்டேன்.   இங்கே அமர்ந்திருக்கிற ஒவ்வொருவரும் இந்நாவலைப் படிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.
இவ்வாறு டி.செல்வராஜ் பேசினார்.
(தொகுப்பு: .வீரமணி)

No comments: