Monday, March 23, 2009

மதவெறி அரசியலை வீழ்த்துவோம்!



பாஜகவினருக்கு ஒரு சிறு துளியாவது அரசியல் நாகரிகம் இருக்குமானால், உடனடியாக வருண்காந்தியை, தேர்தல் கூட்டங் களில் மதவெறி நஞ்சைக் கக்கிய குற்றத்திற் காக, மக்களவைத் தேர்தலில் பிலிபித் தொகு தியில் வேட்பாளராக நிறுத்தியிருப்பதிலிருந்து விலக்கிக் கொள்ள உடனடியாக முன்வரவேண்டும். தேர்தல் ஆணையம் மிகவும் சுறுசுறுப் புடன் வருண்காந்திக்கு எதிராக கிரிமினல் வழக்கு ஒன்றைப் பதிவு செய்திட உள்ளூர் காவல்துறையினருக்குக் கட்டளையிட்டுள் ளது. இந்தியத் தண்டனைச் சட்டமும், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதிதுவச் சட்ட மும் ‘‘மதவெறித் துவேஷத்தை ஏற்படுத்து பவர்கள்’’ அல்லது ‘‘வேட்பாளரின் மதத்தின் அடிப்படயில் வாக்குகளைக் கோருவது’’ ஆகிய இரண்டையுமே இழிந்த, ஊழல் அரசி யல் நடைமுறைகள் என்று தெள்ளத்தெளி வாக வரையறுத் திருக்கின்றன. தேர்தல் நடைபெறும் சமயமாக இருந்தாலும் இல்லா விட்டாலும், இந்தியத் தண்டனைச் சட்டத் தைப் பொறுத்தவரை, அதன் 153ஏ பிரிவின்படி, ‘‘பல்வேறு குழுக்களுக்கி டையே மதத்தில் பெயராலோ, இனத்தின் பெயராலோ, பிறப்பிடத்தின் பெயராலோ அல்லது இருப்பிடத்தின் பெயராலோ, அல் லது மொழியின் பெயராலோ, அல்லது வேறேதேனும் ஒருவிதத்திலோ பகைமை யை ஏற்படுத்தும் விதத்தில் பேசினாலோ, நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் நடந்து கொண்டாலோ, மூன்றாண் டுகள் வரை சிறைத் தண்டனையும், அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை யும், அல்லது இரண்டும் சேர்த்தே தண் டனை விதிக்கக்கூடிய’’ கைது செய்தற் குரியதோர் குற்றமாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமும், 125ஆவது பிரிவின்படி, ‘‘தேர்தலையொட்டி வகுப்பினருக்கிடையே பகைமையை ஏற் படுத்துவோருக்கு’’ இதேபோன்றதோர் தண்டனையை விவரித்திருக்கிறது. இந்தப் பிரிவின்கீழ், மதத்தின் அடிப்படையில் பகை மையை அல்லது வெறுப்பை ஏற்படுத்து வோர் இதேபோன்று தண்டிக்கப் படுவார்கள் என்று குறிப்பிட்டே விவரித்திருக்கிறது. வருண்காந்தி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால், பாஜக இப் போது, ‘‘சட்டம் அதன் கடமையைச் செய்யட் டும்’’ என்று கூறியிருக்கிறது. ஆனால் அது போதாது. சிவசேனையின் தலைவர் பால் தாக்கரே வழக்கில், அவரது வாக்குரிமை ஆறாண்டு காலத்திற்குப் பறிக்கப்பட்டது மற்றும் அந்தக் காலத்தில் அவர் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கப்பட்ட போதி லும், இவ்வாறு ஆணை வருவதற்கு வெகு நீண்ட காலமானது. பால் தாக்கரே, 1987இல் வெலிபார்லி சட்டமன்றத் தொகுதிக்கு நடை பெற்ற இடைத்தேர்தலின்போது, இதே போன்று அவதூறு பொழிந்து, மதவெறி நஞ் சைப் பரப்பினார் என்பதற்காக குற்றம் சாட்டப் பட்டிருந்தார். இவ்வாறான மதவெறித்தீயை உருவாக்கிய அவரது பேச்சுக்கு எதிராக, உயர் நீதிமன்றம் அளித்த மேற்படி தீர்ப்பை, உச்ச நீதிமன்றம், 1999இல் இறுதியாக உறுதிசெய்த போதுதான், அமலுக்கு வந்தது. சட்டவிதி முறைகளின்படி, அப்போது குடியரசுத் தலை வராக இருந்த மறைந்த கே.ஆர்.நாராயணன், உச்சநீதிமன்றத்தின் ஆணையை, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி, தண்டனையின் அளவு குறித்து தீர்மானிப்பதற்காக அனுப்பி வைத்தார். தேர்தல் ஆணையமானது, அதன் மீது, பால்தாக்கரேயை ஆறாண்டு காலத் திற்கு வாக்குரிமையைப் பறித்து ஆணை பிறப்பித்தது.இப்போது, வருண்காந்தி வழக்கில், இவ் வாறு சட்டம் தம் கடமையைச் செய்திட நீண்டகாலம் காத்துக்கொண்டிருக்கக் கூடாது. வருண்காந்தியால் காக்கப் பட்ட மதவெறி நஞ்சு தொடர்பான வீடியோக் கள் ‘‘போலியானவை’’ என்று கூறப்படுபவை எல்லாம் ‘‘யு ட்யூப்’’ (லடிர வரநெ) போன்ற இணையதளம் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள் பல்வேறு ஒளிபரப் புகளின் மூலம் தூள் தூளாக்கப்பட்டு விட் டன. வருண்காந்தி, தான் பேசியதன் காரண மாக எங்கும் எவ்வித வன்முறைச் செயலும் நடைபெறவில்லை என்பதால், தான் குற்ற வாளி அல்ல என்று விசித்திரமானதோர் விளக்கத்தை கூறியுள்ளார். அவர் கக்கிய நஞ்சுப் பேச்சுக்களை மீண்டும் ஒருமுறை நம் இதழில் வெளியிட்டு அருவருப்புகொள்ள நாம் தயாரில்லை. எந்த ஒரு நாகரிகமுடைய மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல்வாதி யாலும் அவரது பேச்சை சகித்துக் கொள்ள முடியாது. சட்டம் தன் கடமையைச் செய்ய நடவடிக்கையைத் தொடரும் அதே சமயத் தில், பாஜகவானது வாக்காளர்கள் மத்தி யில், தங்களுடைய நிலைபாட்டைத் தெளிவு படுத்தக்கூடிய விதத்தில், வருண்காந்தியை, தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆயினும் இதுபோன்றெல்லாம் பாஜக போன்ற ஒரு கட்சியிடம் எதிர்பார்ப்பது, அதீத மான ஒன்றுதான். ஆர்எஸ்எஸ் அமைப்பா னது, “அயோத்தியில் தாவாவுக்குரிய இடத் தில் ராமர் கோவிலைக் கட்ட யார் உறுதி மொழி அளிக்கிறார்களோ அவர்களைத் தான் ஆதரிப்போம்” என்று கூறியுள்ள நிலை யில், பாஜக, 2009 பொதுத் தேர்தலுக்கு தன்னுடைய வெறித்தனமான இந்துத்வா நிகழ்ச்சிநிரலை மீண்டும் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரகடனம் செய் துள்ளது. சமீபத்தில், கர்நாடகாவில், இருப தாம் நூற்றாண்டின் இணையற்ற கலைஞ ரான சார்லி சாப்ளின் சிலையை வைத்திட அனுமதிக்காமல் இழுத்தடித்திருப்பதி லிருந்து, தேர்தல் ஆதாயங்களுக்காக பாஜக, மதவெறித் தீயை விசிறிவிட முன்வந்திருப்ப தைத் தெளிவாகக் காண முடிகிறது. இவ் வாறாக, ஒரு சமயத்தில் பாஜக-வின் கூட் டணிக்கட்சிகளாக இருந்தவை - குறிப்பாக கிழக்குக் கடற்கரையோரம் முழுவதும் அதன் அணியில் இருந்த கட்சிகள் - அதனை அநாதையாகக் கைவிட்டுவிட்டு, விலகிக் கொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்கு அதிகதூரம் போக வேண்டிய தில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அடிப்படை முரண்பாடு என்பது - பாஜக எந்த அளவிற்குத் தன்னுடைய வெறித்தன மான இந்துத்வா நிகழ்ச்சிநிரலை மீண்டும் செயல்படுத்திட முயற்சிக்கிறதோ அந்த அளவிற்கு அதன் கூட்டணிக் கட்சிகள் அதனைக் கைவிட்டுவிட்டு விலகி ஓடு வதும் தவிர்க்கமுடியாதது.இத்தகைய சூழ்நிலைமைகளில், வாக்கா ளர்கள், வரவிருக்கும் தேர்தலில் இத்தகைய மதவெறி நஞ்சைக் கக்கும் கிரிமினல் அரசி யல்வாதிகளை மறுதலித்திடக் கூடிய வகை யில் உறுதியுடன் செயல்பட வேண்டும்.
தமிழில் : ச.வீரமணி

Wednesday, December 31, 2008

2009: மாற்றுக்கொள்கைகளுக்கான போராட்டங்களை வலுப்படுத்திடுவோம்





வாசகர்கள் அனைவருக்கும் 2009ஆம் ஆண்டு புதிய புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள் கிறோம்.

2008ஆம் ஆண்டு, உலகிற்கும் நம் நாட்டிற்கும் மிகவும் சிரமமான ஓர் ஆண்டாக இருந்திருக்கிறது. 1930களில் ஏற்பட்ட மிகவும் மோசமான பொருளாதார மந்த நிலைமைக்கு அடுத்து இந்த ஆண்டு மிகவும் மோசமான நெருக்க டியை உலக முதலாளித்துவம் சந்தித்தது. உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை சூறையாடப்பட் டிருக்கிறது. ‘மனிதர்களைச் சுரண்டு வதை அடிப்படையாகக் கொண்டுள்ள முதலாளித்துவம் என்னும் அமைப் பானது, எந்தக்காலத்திலும் நெருக்கடிக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்துவிட முடியாது’ என்கிற உண்மையை இந்த நெருக்கடியானது மீண்டும் ஒருமுறை முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறது. இது முதலாளித்துவம் குறித்த மார்க்சிய ஆய்வுமூலம் மெய்ப்பித்துக்காட்டப்பட்ட ஒன்று மட்டுமல்ல, முதலாளித்துவ அமைப்பு முறையானது சோசலிச அமைப்பு முறையாக மாற்றி யமைக்கப்பட வேண்டிய மார்க்சிய வழிகாட்டுதலையும் அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடது சாரிக் கட்சிகள் எழுச்சி பெற்று வருவதும் மற்றும் பல நாடுகளில் ஏகாதிபத்தியத் தின் நவீன தாராளமயக் கொள்கைக ளுக்கு எதிராக வீரஞ்செறிந்த போராட் டங்கள் நடைபெற்று வருவதும், இதனைத் தெளிவாகக் காட்டுகிறது. நாம் 2008ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து அனுப்பும் அதே சமயத்தில், சோசலிசத்திற்கு ஆதரவாக - உலக அளவிலும் சரி; நம் நாட்டிலும் சரி - வர்க்கச் சேர்மானங் களை வலுப்படுத்திட நாம் எடுத்துக் கொள்ளும் உறுதிப்பாட்டை இரட்டிப் பாக்கிடுவோம். பல முக்கியமான குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிப் போக்குகள் 2008ஆம் ஆண்டில் நம் நாட்டில் நடைபெற்றிருக் கின்றன. அவற்றுள், பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் பல்கிப் பெருகியிருப்பது ஆழ்ந்த கவலையளிக்கக்கூடியதாகும்.
அரசின் அதிகாரபூர்வ பட்டியல்களின் படியே மும்பை தாக்குதல் மற்றும் காபூ லில் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது உட்பட நாட்டின் பல பகுதிகளில் பெரிய அளவில் நடைபெற்றுள்ள ஏழு தாக்கு தல்களில் மொத்தம் 377 பேர் பலியாகி யுள்ளனர். இத்தாக்குதல்களில் ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந் துள்ளனர். மேலும் 2008ஆம் ஆண்டானது, இதற்குமுன் இருந்திடாத அளவிலான இயற்கைப் பேரிடர்களையும் எதிர்கொண் டது. இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், சமீப காலத்தில் ஏற்பட்ட வெள்ளக் கொடுமைகளில் மிகவும் மோசமானது, நேபாளத்திலிருந்து வரும் கோசி ஆற்றில் ஏற்பட்ட திசைமாற்றமானது பீகார் மற்றும் வட இந்தியமாநிலங்களில் பல பகுதி களில் பல்லாயிரக்கணக்கானோரைப் பலி கொண்டு பேரழிவினை ஏற்படுத் தியுள்ளது. 28 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வீடற்றவர்களாக மாறிப் போயுள்ளார்கள். வெள்ளப் பெருக்கானது அஸ்ஸாம், ஒரிசா போன்ற வேறு பல மாநிலங்களிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2008ஆம் ஆண்டில் இந்திய - அமெ ரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளதையும் பார்த்தோம். இந்திய - அமெரிக்க போர்த்தந்திரக் கூட்டணியை வலுப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஆட்சியாளர்கள் இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய பாது காப்பு மற்றும் போர்த்தந்திர நடவடிக்கை களின் ஓர் அங்கமாக மாற்றிவிட்டார்கள். இது நம் நாட்டின் இறையாண்மை மற்றும் சுயேட்சையான அயல்துறைக் கொள்கை இரண்டின் மீதும் கடும் விளைவுகளை ஏற்படுத்தவே இட்டுச் செல்லும். மேலும் நாட்டில் நம் பாரம்பரிய முறைகளின் மூலமாகவே நம் நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றபோதிலும், அதனை விடுத்து, அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் போட்டிருப்பதானது, நம் நாட்டின் மிக அரிதான நம் வள ஆதா ரங்களை வற்றச் செய்திடவே வழி வகுக் கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் நம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம் படப்போவதைவிட, அணு உலைகளை அளித்திட இருக்கும் அமெரிக்கக் கம்பெனிகள் கொள்ளை லாபம் அடித்து கொழுப்பதற்கே உதவிடும். 2008ஆம் ஆண்டில் ஏழை - பணக் காரர் இடையேயான இடைவெளி மேலும் விரிவடைந்ததையும் பார்த்தோம். ‘ஒளிர் கின்ற’ இந்தியனுக்கும், ‘உழல்கின்ற’ இந்தியனுக்கும் இடைவெளி மேலும் ஆழமானதையும், அதன்மூலம் ஒரு பக் கத்தில் உலக அளவிலான பில்லிய னர்கள் இந்தியாவில் அதிகரிப்பதற்கும், அதே சமயத்தில் மறு பக்கத்தில் நம் மக்கள் தொகையில் சுமார் ஐந்தில் நான்கு பங்கினர் ஒரு நாளைக்கு இருபது ரூபாய் கூட வருமானமின்றி வாடுவதற்கும் இட் டுச் சென்றது. விவசாயிகள் தற்கொலை செய்வது கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2008ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை என்றபோதிலும், 2007ஆம் ஆண்டில் இது 16,632 ஆக இருந்திருக் கிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற் கொலை செய்து கொள்கிறார்கள், ஒவ்வொரு நாளிலும் 46 பேர், அல்லது ஒவ் வொரு மணி நேரத்திலும் 4 பேர் என்கிற ரீதியில் தற்கொலை செய்து கொள்கி றார்கள் என்பது இதன் பொருள். ஐந்து வய துக்குக் குறைவான நம் குழந்தைகளில் 58 சதவீதத்தினர் போதிய ஊட்டச்சத்து உணவின்றி வாடுவதாக ‘யுனெஸ்கோ’ கூறுகிறது. ஊட்டச்சத்தின்மையாலும் அதன்மூலம் தாக்கக்கூடிய வியாதிக ளுக்குக்கூட மருந்து உட்கொள்ள முடி யாமலும் ஒவ்வொரு நாளும் ஆயிரத் திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றன. நிச்சயமாக, இத்தகைய நிலைமை களைத் தொடர்ந்திட அனுமதிக்கக் கூடாது. ஆயினும், இதற்கு முந்தைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநா யகக் கூட்டணி அரசோ அல்லது தற் போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசோ பின்பற்றும் நவீன தாராள மயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறான மாற்றுக் கொள்கை களைப் பின்பற்றுவது தேவை. இந்த நிலையில் மக்களின் எண்ணத் தைப் பிரதிபலிக்கும் நாடாளுமன்ற மானது, ஆளும் வர்க்கத்தினரால் வேண் டுமென்றே முழுமையாகச் செயல்பட விடாமல் மிகவும் துயரார்ந்த முறையில் அதன் நாட்கள் வெட்டிச் சுருக்கப்பட் டன. காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசானது நாடாளுமன்றத்தில் பெரும் பான்மையை மெய்ப்பிக்க மிகவும் கேவலமான முறையில் குதிரை பேரத்தில் ஈடுபட்டது. நாட்டில் அரசியல் அறநெறி இந்த அளவிற்குக் கீழ்த்தரமாக இதற்கு முன் சென்றதில்லை. சுதந்திரத்திற்குப் பின், 2008ஆம் ஆண்டில்தான் மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றம் கூடியுள்ளது. இடதுசாரிக் கட்சிகள் குறைந்தபட்சம் ஆண்டிற்கு நூறு நாட்க ளாவது நாடாளுமன்றத்தின் அமர்வு நடந் திட வேண்டும் என்று கோரிய போதிலும், 2008இல் வெறும் 46 நாட்கள் மட்டுமே கூடியிருக்கிறது. அதேபோன்று 2008 மற்றோர் விதத்திலும் ‘பெயர்’ வாங்கி யிருக்கிறது. நாடாளுமன்ற வரலாற்றி லேயே மிக நீண்ட அமர்வு நடைபெற்றி ருப்பதும் 2008இல்தான். மன்மோகன் சிங் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக ஜூலை 21 அன்று கூட்டப்பட்ட அமர்வு, டிசம்பர் 23 வரைக் கும் தொடர்ந்தது. ஆயினும் இடையில் 18 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் நடைபெற்று பின்னர் காலவரையின்றி ஒத்திபோடப்பட்டிருக்கிறது.
சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரோ அல்லது குளிர்காலக் கூட்டத்தொடரோ இல்லாமல் இருந்ததும் 2008ஆம் ஆண்டுதான்.நம்முடைய அரசியலமைப்புச் சட்டத் தின்படி, நாடாளுமன்றம் என்பது சட்டங் களை இயற்றும் ஓர் அங்கமாக மட்டும் இருந்திடவில்லை, அது மேலும் அரசின் செயல்பாடுகள் குறித்து, மக்களின் சார்பில் கேள்வி கேட்கும் ஓர் அமைப்பாகவும் செயல்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால், நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை இவ்வாறு வேண்டுமென்றே வெட்டிச் சுருக்கியதன் மூலம், அரசு தன்னுடைய செயல்பாடின்மை குறித்து மக்களுக்குப் பதில் சொல்லாமல் சாதுரியமாகத் தப்பித்துக் கொண்டுவிட்டது.
உண்மையில் ஐமுகூ அரசாங்கம் இதற்காகத்தான் நாடாளுமன்றத்தின் நாட் களை வெட்டிச் சுருக்கியுள்ளது. ஆயினும், எந்த ஒரு அரசு இருந்தாலும் சில சட்டங்கள் நிறைவேற்றப்பட்டேயாக வேண்டும் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிசீலனைக்கு உட்படுத்தாமல் பல சட்டங்களை நிறைவேற் றியுள்ளது.
நாடாளுமன்றம் நடைபெற்ற கடைசி நாளன்று என்ன நடந்தது? நாடாளுமன்றத்தில் முழுமையாக அமளி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், பதினோரு சட்டமுன்வடிவுகள் கொண்டு வரப்பட்டு, பத்தே நிமிடங்களில் அனைத்தும் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டன. இதுபோன்றதொரு நிலை, இதற்கு முன் கேட்டிராத ஒன்று.
இத்தகைய சூழ்நிலையில்தான் இன்சூரன்ஸ் துறையை அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்ப தற்கான முக்கிய திருத்தங்கள் முன்மொழி யப் பட்டிருக்கின்றன. உலகப் பொரு ளாதார நெருக்கடியிலிருந்து பாடங்கற்றுக் கொள்வதற்குப் பதிலாக, உலக ஊக வர்த்தகச் சூதாடிகளிடமிருந்து இந்திய நிதிச் சந்தையைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, ஐமுகூ அரசானது இன்சூரன்ஸ் துறையில் தற்போதுள்ள 26 சதவீதத் திலிருந்து 49 சதவீதமாக அந்நிய முதலீட் டை அதிகரிப்பதற்கான வேலையில் இறங்கியிருக்கிறது. இன்றைய தினம் ஆயுள் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் சொத்து மதிப்பு சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய்களாகும். இந்தியப் பொருளாதாரத்தில் அதன் முதலீடு என்பதும் சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாயா கும். அவற்றால் சுமார் 6.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யத்தக்க உபரியை அதிகரித்திட முடியும். 2007-08ஆம் ஆண்டில் அவற்றின் லாபம் சுமார் 2,800 கோடி ரூபாய். அவை சுமார் 450 கோடி ரூபாயை அரசுக்கு ஆதாயப் பங்காக (டிவிடண்ட்) அளித்திருக்கிறது. இந்தத் தொகை என்பது அரசாங்கத்தின் பங்குத் தொகைக்கு (equity) சமமாகும்.

கோடிக்கணக்கான இந்திய மக்களின் சேமிப்புக் களஞ்சியமாகத் திகழும் இன் சூரன்ஸ் துறையானது, இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள் மற்றும் நாட் டின் பல்வேறு கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதானமான மூலா தாரமாக இருந்து வருகிறது. இவற்றின் மீது அந்நிய மூலதனத்தை கொள்ளை யடித்துச் செல்வதற்காக அனுமதிப்பது என்பது, அடிப்படையில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மறுதலிப்பது என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உலக அளவில் பொரு ளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில், சர்வதேச நிதி மூலதனத்திற்கு நம்நாட்டின் வளங் களைக் கொள்ளையடித்துச் செல்வதற் காக, நம் நாட்டின் மக்களால் உருவாக் கப்பட்ட நம் நாட்டின் பொருளாதாரத்தை காவு கொடுப்பது என்பதே இதற்குப் பொருளாகும். அந்நிய முதலீட்டின் வரம்பை உயர்த்துவதன் மூலம் நம் நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங் களை அதிகரித்திட முடியும் என்று அர சுத்தரப்பில் கூறப்படுவது யதார்த் தத்துக்கு முற்றிலும் முரணான ஒன்றா கும். இன்சூரன்ஸ் துறை 1999இல் அன் றைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிடப்பட்டது. அதன்பின் 21 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இந்தியாவில் தங்கள் செயல்பாட்டைத் துவக்கின. அவர்கள் முதலீடு செய்துள்ள மூலதனப் பங்கிற்கு மேல், ஒரு ரூபாய் அளவிற்குக் கூட இந்தியாவிற்குள் அவை இதுவரை கொண்டுவரவில்லை. தற்போதைய உலக முதலாளித்துவ நெருக்கடியானது, நவீன தாராளமய சித்தாந்தம் திவாலாகிப்போன ஒன்று என்று மெய்ப்பித்தப்பின்னரும்கூட, ஐமுகூ அரசானது மேற்படி நவீன தாராளமயப் பொருளாதார நிகழ்ச்சி நிரலைப் பின்பற்ற முயற்சிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்திட, இத னை எதிர்த்து, முறியடித்திட வேண்டும். எனவேதான், வரவிருக்கும் 2009ஆம் ஆண்டு, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடுவதற்கான, வாழ்க்கை மற்றும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்து வதற்கான போராட்டங்களைத் தீவிரப் படுத்த வேண்டிய ஒன்றாக இருக்கும். இந்தப் போராட்டங்களின் குறிக்கோள் கள் இயற்கையாகவே ஆளும் வர்க்கங் களை மாற்றுக் கொள்கைகளைப் பின் பற்ற வளைந்து கொடுக்க நிர்ப்பந்திக்கும். ஆயினும், அத்தகைய வளைவானது, ஏகாதிபத்திய ஆதரவு மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளைப் பின்பற்றும் காங்கிரஸ் மற்றும் மதவெறி சக்திகளுக்கு எதிராக ஒரு மாற்று அரசியல் சேர்மா னத்தைக் கொண்டு வர முடியும். 2009இல் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், இந்திய அரசியலில் அத்தகையதோர் தீர்மானகரமான மாற்றத்தை உத்தரவாதப்படுத்திட வேண்டும். சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையைக் கொண்டுவரக் கூடிய வகையில் 2009ஆம் ஆண்டை செம்மையாக அமைத்திடுவோம்.2009ஆம் ஆண்டின் வெற்றியை உத்தரவாதப்படுத்த நாம் அனைவரும் உறுதியேற்போம்.தமிழில்: ச. வீரமணி

Sunday, November 9, 2008

உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்திய மக்களைக் காப்பாற்ற



உலக நிதி நெருக்கடி என்பது இப்போது ஆழமான அளவிற்கு உலகப் பொருளாதார நெருக்கடியாக உருக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிவிட்டது. உலகின் வளர்ச்சியடைந்த பொருளாதார நாடுகள் என்று சொல்லப்பட்டவை எல்லாம், தற்போது நீண்ட நெடிய பொருளாதார மந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

இந்தியா உட்பட உலகில் உள்ள வளர்முக நாடுகளும் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகும் நிலை வரவிருக்கிறது.
இவ்வாறு உலகில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டிட ஐமுகூ அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் ஏமாற்றம் அளிக்கக்கூடியவைகளாக இருக்கின்றன. ஆரம்பத்தில் உலக நிதி நெருக்கடியால் இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இருக்காது என்று மறுத்தபோதிலும், அதனைத் தடுத்து நிறுத்திட, அது மேற்கொள்ளும் நடவடிக்கைகளானது, இதனால் பாதிக்கப்படும் சாமானிய மக்களைப் பாதுகாக்கக்கூடிய வகையில் இல்லாது மாறாக பெரும் நிதி நிறுவனங்களின் நலன்களைக் காப்பாற்றத் துடிக்கக்கூடிய வகையிலேயே அமைந்துள்ளன. நாட்டின் பணவீக்கத்தைக் அது மேற்கொண்டுள்ள ஒரேயொரு பொருளாதார நடவடிக்கை என்பது வங்கிகளின் வட்டிவீதத்தைக் குறைத்திருப்பதுதான். இதனால் எந்தப் பயனும் இல்லை.
ஐமுகூ அரசாங்கம், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, யோசனைகள் கூறுவதற்கு, கார்பரேட் பெரும்புள்ளிகள் மற்றும் வங்கியாளர்களை மட்டுமே இதுவரை அழைத்திருக்கிறது. மாநில அரசாங்கங்களையோ அல்லது மற்ற அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய - மாநில அரசுகளின் மற்ற நிதிசார்ந்த அமைப்புகளையோ அழைத்துக் கலந்து பேச வேண்டுமென்று அதற்குத் தோன்றவே இல்லை. மக்களின் நலன்கள் மீது கட்டப்படும் கார்பரேட் நிறுவனங்களின் லாபங்கள் உலகம் முழுதும் கடுமையாக வீழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஐமுகூ அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்கள் இன்னும் அத்தகைய நபர்களையே விடாது பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் நிலை தொடர்கிறது. வீழ்ந்து கொண்டிருக்கும் உலகப் பொருளதார நெருக்கடியிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற இந்த வழிப் பயனளிக்காது என்கிற சூழ்நிலையில், உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தத்தின் கடுமையான பாதிப்பிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றிட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கீழ்க்கண்டவாறு துல்லியமான பரிந்துரைகளை முன்வைக்கிறது.
பரிந்துரைகள்
மத்திய அரசு, ஒரு சிறப்பு நிதித் திட்டத்தை அறிவித்திட வேண்டும். அதன்படி, பொது செலவினத்தை அதிகரித்து அதன் மூலம் உழைக்கும் மக்களின் வருமானம் மற்றும் நுகர்வு நடவடிக்கைகளை அதிகரிக்கவும், வேண்டும்.
மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசாங்கங்களும் நிதிப் பற்றாக்குறையை அதிகரித்திட இது சரியான தருணமாகும்.
நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM Ac t) சட்டத்தை ரத்து செய்திட வேண்டும். மாநில அரசாங்கங்களுக்காக ஓர் ஒருங்கிணைந்த கடன் நிவாரணத் திட்டத்தைக் கொண்டுவந்து, மாநில அரசாங்கங்கள் விரிவடைந்த வகையில் நிதி மேலாண்மையைப் பின்பற்றிட ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இருக்கும் பணியிடங்களைப் பாதுகாத்திட...
உலக அளவில் பொருளாதார மந்தம் ஏற்பட்டிருக்கக்கூடிய சூழலில் நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பாதுகாத்திட, அரசாங்கம் முன்னுரிமை அளித்திட வேண்டும்.
தொழில்நிறுவனங்கள் ஆலைமூடல் அல்லது ஊதிய வெட்டு போன்றவற்றைச் செய்யாது தடுத்திடக்கூடிய வகையில், நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பதற்காக, சட்டம் (moratorium) ஒன்றை அரசு அறிவித்திட வேண்டும். ஏனெனில் தொழில்நிறுவனங்கள் ஆலை மூடல் அல்லது ஊதிய வெட்டு நடவடிக்கைளை மேற்கொண்டால், அது மக்களின் வாங்கும் சக்தியை மேலும் குறைத்து, நிலைமைகளை மேலும் கேடாக்கிடும். மாநில அரசாங்கங்களும் நடப்பிலுள்ள தொழிலாளர்நலச் சட்டங்களைக் கடுiமாக அமல்படுத்தி, ஆலை மூடல் மற்றும் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதிலிருந்து பாதுகாத்திட வேண்டும்.
நிதிச் செலவினங்களைச் சரிசெய்திடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அரசு முதலில், சமீககாலத்தில் ஊதிப் பெருத்துள்ள தொழில்நிறுவனங்கள் அடைந்திடும் லாபம் மற்றும் அதிகாரிகளின் ஊதியம் ஆகியவற்றில்தான் கை வைக்க வேண்டும். நாட்டில் ஒரு வருமானங்கள் கொள்கை (Incomes Policy)யைக் கொண்டுவர வேண்டும். அதன்கீழ் அதிகாரிகளின் ஊதியம், ஏறும் விலைவாசி மற்றும் தொழிலாளர்கள் ஈட்டிடும் குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும்.
உண்மையான பொருளாதாரத்தை உயர்த்தத் திட்டமிடல்
வேலைவாய்ப்பு அதிகம் அளிக்கக்கூடிய மற்றும் புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையில் அரசாங்கம் பொது முதலீட்டை அதிகப்படுத்தி, புதிய தொழில்நிறுவனங்களை உருவாக்கிட வேண்டும். ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் வேலையிழப்போரை இந்நிறுவனங்களில் அமர்த்திட வேண்டும்.
வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்: தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் வலுப்படுத்தப்பட்டு, அதனை நகர்ப்புரங்களுக்கும் விரிவாக்கிட வேண்டும். நூறு நாட்களுக்கு மேல் வேலை அளிப்பதற்கும் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
வேளாண்மை: உணவு தான்யங்கள் உற்பத்தி ஊக்குவிக்கப்பட வேண்டும். நாடு முழுதும் அனைத்து முக்கிய பயிர்களுக்கும் பொது கொள்முதல் நடவடிக்கைகள் விரிவாக்கப்பட வேண்டும். உணவுப் பாதுகாப்புத் திட்டப்பணிக்கான ஒதுக்கீடுகள் மற்றும் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டம் கணிசமான அளவில் விரிவாக்கப்பட வேண்டும். பாசனத்திற்கான பொது முதலீடும் கணிசமான அளவிற்கு மேம்படுத்தப்பட வேண்டும். பருத்தி மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பணப் பயிர்களுக்கு, உயர் சங்கவரி மூலமாக இறக்குமதிக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட வேண்டும். ரப்பர், முந்திரி போன்ற பணப் பயிர்களுக்கும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் கொண்டு வந்து, விலைவீழ்ச்சியிலிருந்து அவற்றைத் தடுத்து அவற்றைப் பாதுகாக்கக்கூடிய வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உணவு மற்றும் எரிபொருள் விலைகள்: டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் முறையே ரூ.4 மற்றும் ரூ.2 உயர்த்தப்பட்டது, மேலும் தாமதமின்றி குறைக்கப்பட வேண்டும். சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருப்பதனால் இங்கும் விலைகளைக் குறைத்திட வேண்டும். (ஒரு பேரலுக்கு 60 டாலருக்குக் கீழ் விலை குறைந்திருக்கிறது) பொது விநியோக முறையை அனைவருக்கும் சீரானதாக்கி, மான்ய விலையில் உணவுதான்யங்கள் நாட்டில் உள்ள அனைத்துப் பகுதியினருக்கும் சென்றடைந்திட வேண்டும். பொருளாதாரத்தில் நுகர்வுத் தேவையைப் பெருக்கிட இந்நடவடிக்கை அவசியம்.
சில்லரை வர்த்தகம்: நுகர்வு வளர்ச்சி மெதுவாக இருப்பதனால், சிறிய மற்றும் சாலையோர வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், பெரும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள்சில்லரை வணிக வளாகங்களை விரிவுபடுத்தி, சந்தையின் பெரும்பகுதியை அபகரிக்க அனுமதிப்பது, நிலைமையை மேலும் கேடாக்கிடும். எனவே நாட்டில் உள்ள சிறிய மற்றும் சாலையோர வியாபாரிகளைப் பாதுகாத்திடக் கூடிய வகையில் பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்குக் கடிவாளமிடுவது அவசியம்.
சிறிய அளவிலான தொழில்கள் : சிறிய அளவிலான தொழில்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய நெருக்கடியினால் அதிகமான அளவிற்கு வேலைஇழப்புகள் ஏற்பட்டு, அதனைச் சார்ந்துள்ள தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.குறிப்பாக ஏற்றுமதி சார்ந்த தொழில்களான ஆடைகள் மற்றும் தோல் தொடர்பான தொழில்நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றன. இவற்றை மனதில் கொண்டு, நிவாரண நடடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
ஏற்றுமதி இறக்குமதி வரிகள் மூலம் பாதுகாப்பு: பொது முதலீடு மூலமாக பொருளாதார நிலைமையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது, உள்நாட்டுத் தொழிலகங்களைப் பாதுகாத்திட, உரிய ஏற்றுமதி இறக்குமதி வரிக் கொள்கை அவசியம்.
நிதித்துறையில் உள்ள விதிமுறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். நிதித் துறைமீது அரசின் கட்டுப்பாடு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். நிதிநிறுவனங்கள் வளமானவர்களுக்கு நுகர்வுப் பொருள்கள் வாங்குவதற்கு கடன்கள் அளிப்பதற்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக, வேளாண்மை மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்கக்கூடிய வகையில் கடன்கள் வழங்கப்பட வேண்டும்.
மூலதனக் கணக்கு மாற்றத்தக்க தன்மை (Capital Account Convertibility): தாராபூர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் மூலதனக் கணக்கைத் தாராளமயப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். மூலதனம் உள்வரவு மற்றும் வெளிச்செல்லுதல் (டிரவகடடிற) தொடர்பாக கடும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட வேண்டும்.
அநாமதேயக் குறிப்புகள் (Participatory Notes) : PNs எனப்படும் அநாமதேயக் குறிப்புகள், வெளிநாட்டு முதலீட்டாளர்களால் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட வேண்டும். ஊக வணிகத்திற்கு இடம் கொடுக்கும் அனைத்து நடைமுறைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.
வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறைகளைப் பாதுகாத்தல்: வங்கி முறைப்படுத்தல் (திருத்தச்)சட்டமுன்வடிவு, பாரத ஸ்டேட் வங்கி (திருத்தச்) சட்டமுன்வடிவு மற்றும் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை தற்போதுள்ள 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துதல் போன்ற வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையை அழித்திடக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு கைவிட வேண்டும்.
ஓய்வூதியச் சீர்திருத்தம்: ஐமுகூ அரசாங்கம் ஓய்வூதியச் சீர்திருத்தங்களை உடனடியாகக் கைவிட வேண்டும். ஓய்வூதிய நிதியம் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி அதிகாரக்குழுமம் சட்டமுன்வடிவு (PFRDA Bill) ரத்து செய்யப்பட வேண்டும்.. அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, குறைந்தபட்ச ஓய்வூதியம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி