Sunday, May 9, 2021

பாஜக-வின் தேர்தல் தோல்வி விவசாயிகள் மகிழ்ச்சி - அசோக் தாவ்லே

 

பாஜக-வின் தேர்தல் தோல்வி

விவசாயிகள் மகிழ்ச்சி

-அசோக் தாவ்லே

சென்ற வாரம், வரலாறு படைத்திடும் விவசாயிகள் போராட்டம்,  இரு பெரும் நிகழ்வுகளை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடியது. முதலாவது நிகழ்வு என்பது மே தினமாகும். இரண்டாவது நிகழ்வு என்பது ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பெரிய மாநிலங்களான கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் பாஜக படுதோல்வி அடைந்ததும், அதனையொட்டி, அது உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலிலும் கடும் பின்னடைவினை சந்தித்ததுமாகும்.



பாஜக-வின் படுதோல்வி--விவசாயிகள் மகிழ்ச்சி

நானூறுக்கும் மேற்பட்ட விவசாயிகளைப் பலிகொடுத்து, கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திவரும் லட்சக்கணக்கான விவசாயிகளின் மத்தியில், மோடி-அமித்ஷா தலைமையிலான ஆர்எஸ்எஸ்/பாஜக மத்திய அரசாங்கத்திற்கு எதிராகக் கடுங் கோபம் இருந்துவருகிறது. இதனை தில்லி எல்லைகளில் போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகளிடம் மட்டுமல்ல, 2021 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நாடு முழுதும் மகத்தான அளவில் நடைபெற்ற நூற்றுக்கணக்கான விவசாயிகளின் மகா பஞ்சாயத்துக் களிலும் நன்கு காண முடிந்தது.

வட இந்தியாவில் பல பகுதிகளில் பாஜக தலைவர்களைச் சமூகப் பகிஷ்காரம் செய்திடுங்கள் என்று அறைகூவல் விடுக்கப்பட்டு, அது அமல்படுத்தப்பட்டு வருகிறது.  

விவசாயிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பாஜக-விற்கும் அதன் கூட்டணிக்கட்சிகளுக்கு எதிராகவும் வாக்களித்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதற்காக, அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பும், அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவும் தேர்தல்கள் நடைபெற்ற மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குத் தங்கள் தலைவர்களை அனுப்பி வைத்தன.

பெரிய மாநிலங்கள் மூன்றில் பாஜக படுதோல்வியடைந்ததை, போராடும் விவசாயிகள் மிகவும் விரிவான அளவில் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். பாஜக-வின் தோல்வியை வரவேற்று, அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பும், அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவும் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. தங்கள் அணியினர் மத்தியில் ஒற்றுமையைப் பேணிப்பாதுகாப்பதற்காக, வெற்றி பெற்றவர்களின் பெயர்களைக் கூறாது தவிர்த்துவிட்டனர்.

பின்னர் இரு நாட்கள் கழித்து உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக துடைத்தெறியப்பட்டதை அறித்து விவசாயிகளின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கட்சி சின்னத்தில் நடைபெறவில்லை என்ற போதிலும்கூட, எந்த வேட்பாளர் எந்தக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். இதுவரை கிடைத்திருக்கிற தகவல்களின்படி, பாஜக பெரும்பாலான மாவட்டங்களில் படுதோல்வி அடைந்திருக்கிறது. மொத்தம் உள்ள 3,050 மாவட்டப் பஞ்சாயத்துக்களில், சமாஜ்வாதிக் கட்சி 747ஐயும், பாஜக 666ஐயும், பகுஜன் சமாஜ் கட்சி 322ஐயும், காங்கிரஸ் 77ஐயும் வென்றிருக்கின்றன.

இதில் மிகவும் குறிப்பாக, அயோத்தியில் உள்ள 40 மாவட்டப் பஞ்சாயத்துக்களில் எட்டு இடங்களில் மட்டும், மதுராவில் உள்ள 33 இடங்களில் எட்டு இடங்களில் மட்டும், வாரணாசியில் உள்ள 40 இடங்களில் வெறும் ஏழு இடங்களில் மட்டும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. லக்னோவில் மொத்தம் உள்ள 25 மாவட்ட பஞ்சாயத்துக்களில் மூன்றிலும், மீரட்டில் மொத்தம் உள்ள 33 இடங்களில் நான்கில் மட்டும், சாம்லியில் மொத்தம் உள்ள 19 இடங்களில் நான்கில் மட்டும், பாக்பத்தில் மொத்தம் உள்ள 20 இடங்களில் நான்கில் மட்டும், பிஜ்னாரில் மொத்தம் உள்ள 56 இடங்களில் எட்டில் மட்டும், முசாபர்நகரில் மொத்தம் உள்ள 45 இடங்களில் 11 இடங்களில் மட்டும், கோரக்பூரில் மொத்தம் உள்ள 68இல் 20இல் மட்டும் வென்றிருக்கிறது. பல இடங்களில் சமாஜ்வாதிக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளமும், பகுஜன் சமாஜ் கட்சியும் அடுத்தடுத்து வந்திருக்கின்றன. பல இடங்களில் சுயேச்சைகள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இவர்களை வாங்குவதற்கு நிச்சயமாக பாஜக முயலும். ஆனாலும், உத்தரப்பிரதேச வாக்காளர்கள் அளித்துள்ள செய்தி மிகவும் தெள்ளத்தெளிவான ஒன்றாகும். அதனை ஒருமுகப்படுத்திட வேண்டும்.   

அடுத்து, 2022 பிப்ரவரியில் உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட், பஞ்சாப் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. பஞ்சாப்பில் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தின் விளைவாக, போட்டியிடும் எந்தத்தொகுதியிலாவது பாஜக தன்னுடைய ஜாமீன் தொகையைப் பெற்றாலே பெரிய விஷயமாகும். உத்தரப்பிரதேசத்திலும், உத்தர்காண்டிலும் பாஜக தோல்வியடைவதை உத்தரவாதப்படுத்திட தன் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு ஏற்கனவே அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சபதம் எடுத்துக்கொண்டுள்ளது.  

மே தினம்:தொழிலாளி-விவசாயி ஒற்றுமையை வலுப்படுத்துவோம்

மே தினம், தில்லி எல்லைகளிலும் மற்றும் நாடு முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் பல லட்சக்கணக்கான விவசாயிகளாலும், தொழிலாளர்களாலும் தொழிலாளி-விவசாயி ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்பட்டது. அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பும், மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடையும் இணைந்து விடுத்த அறைகூவலுக்கிணங்க இவ்வாறு கொண்டாடப்பட்டது. தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுடன் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் தங்களை இணைத்துக் கொண்டார்கள். மத்தியில் ஆட்சியில் உள்ள ஆர்எஸ்எஸ்/பாஜக மத்திய அரசாங்கத்திற்கும், அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புனிதமற்றக் கூட்டணிக்கு எதிராக, தங்கள் பொது வர்க்க எதிரிக்கு எதிராக, தொழிலாளர்-விவசாயிகள் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக தில்லியின் எல்லைகளிலும் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் மே தினத்தன்று பிரம்மாண்டமான கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

 இக்கூட்டங்களில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் சரியாகவேச் சுட்டிக்காட்டியபடி, ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆக்சிஜன் கிடைக்க வழியேதும் செய்யாது நாட்டில் இனப்படுகொலையை மேற்கொண்டிருக்கும் மோடி-அமித்ஷா இரட்டையர் ஆட்சியின் குற்ற நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, மே தினம் நாடு முழுதும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களாலும் விவசாயிகளாலும் ஒன்றுபட்டுக் கொண்டாடப்பட்டது.

ஏப்ரல் 28 அன்று அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பும், மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடையும் இணைந்த கூட்டம் இணைய வழி நடத்தப்பட்டது. இவ்விரு அமைப்புகளும் 2020 நவம்பர் 26 முதல் தங்கள் போராட்டங்களை ஒன்றுபட்டு மேற்கொண்டு நடத்தி வருகின்றன. இவ்வாறு ‘அகில இந்திய வேலை நிறுத்தம்’, ‘கிராமப்புற பாரத் பந்த்’, ‘தில்லியை நோக்கிப் பேரணி செல்வோம்’ என்கிற அனைத்து இயக்கங்களும் இவ்வாறு ஒன்றுபட்டே நடத்தப்பட்டன.   

ஏப்ரல் 28 கூட்டத்தின்போது, கோவிட்-19 நிலைமையை மிகவும் மோசமான முறையில் கையாண்டுவரும் பாஜக மத்திய அரசாங்கத்தின் செயல்பாடுகள் கண்டனம் செய்யப்பட்டன. இதற்கெதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், வேளாண் சட்டங்களை ரத்து செய்தல், தொழிலாளர் (விரோத) சட்டங்களை ரத்து செய்தல், மின்சார திருத்தச் சட்டமுன்வடிவைத் திரும்பப் பெறுதல், குறைந்தபட்ச ஆதார விலையையும் கொள்முதலையும் உத்தரவாதப்படுத்திட மத்திய சட்டம் கொண்டுவருதல் ஆகியவற்றுக்காகவும்  தனியார்மயம் மற்றும் கார்ப்பரேட் மயத்திற்கு எதிராகவும் இதுநாள்வரையிலும் நடைபெற்றுவரும் ஒருமைப்பாடு மற்றும் ஒன்றுபட்ட நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்திடவும் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடையும், அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பும் கோவிட்-19 சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுடன், தொழிலாளர்கள்-விவசாயிகள் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளையும் இணைத்து ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

ஏப்ரல் 30 அன்று, இந்தியத்தொழிற்சங்க மையம்-அகில இந்திய விவசாயிகள் சங்கம்-அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் மையத் தலைவர்கள் பங்கேற்ற இணையவழிக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்துவிதமான ஆதரவையும், நிவாரண உதவிகளையும் அளிக்க வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. அதே சமயத்தில், பாஜக அரசாங்கம் இவ்வாறு கடும் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையிலும் அதைப்பற்றிக் கவலைப்படாதிருந்துவரும் பாஜக அரசாங்கத்தின் கிரிமினல் ரீதியான அலட்சியப்போக்கையும், இதனைப்பயன்படுத்திக்கொண்டு மக்கள் விரோதக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதையும் மக்கள் மத்தியில் தோலுரித்துக்காட்டவும் தீர்மானிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பெரிய அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது சாத்தியமில்லை என்பதாலும், அறிவுடைமையுமாகாது என்பதாலும், பின்னர் பெரிய அளவில் அணிசேர்க்கைக்காக, ஸ்தலப்பணிகளைத் தயாரிக்கத் தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக மே 8 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் பொதுச் செயலாளர்கள் பங்கேற்ற இணையவழிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 9.5.2021)

(தமிழில்:ச.வீரமணி)

 

No comments: