Saturday, December 8, 2018



 ‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்
(அர்பன் நக்சல் என்ற சொற்றொடர் ஒருசமயம் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட விவசாயிகளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்றையதினம் அது, அரசுக்கெதிராக அசவுகரியமான கேள்விகளைக் கேட்பவர்களை நிந்திப்பதற்கான சொற்றொடராகவே அநேகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆட்சியதிகாரத்திலிருப்போரை முகத்துதி செய்ய மறுத்திடும் எழுத்தாளர்களும், கவிஞர்களும்கூட இதேகதிக்கு ஆளாகிறார்கள். அவர்களை ஆட்சியிலுள்ளவர்கள் ‘தேசவிரோதிகள்’ என மிகவும் எளிதாக முத்திரை குத்திவிடுகிறார்கள். நான் எதை சாப்பிடவேண்டும் என்று அனுமதிக்கிறேனோ அதைமட்டும்தான் நீ சாப்பிடவேண்டும் என்று சொல்பவர்கள் ஆட்சியில் உள்ள காலத்தில் இவ்வாறு முத்திரை குத்துவது என்பது எளிதான காரியம்தான்.
புகழ்பெற்ற கல்வியாளரும், வரலாற்றறிஞரும், செயற்பாட்டாளருமான ரோமிலா தாப்பர், ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக் கருவிகளுக்கு எதிராக எவ்வித அச்சமுமின்றித் துணிவுடன் கருத்துக்களைச் சொல்லி வருபவராவார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், சில ஊடகங்களும், ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சில அமைப்புகளும் ‘அர்பன் நக்சல்கள்’ என்று முத்திரைகுத்தி ஐந்து மனித உரிமைப் போராளிகளைக் கைது செய்ததைக் கண்டித்துத் துணிந்து கருத்துக்களைப் பதிவு செய்தார். முன்னதாக, அவர் வரலாற்றைக் காவிமயமாக்குவதற்கு எதிராகக் குரல் எழுப்பினார். இவ்வாறு காவிமயப்படுத்துவதென்பது பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர் களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்குப் பொருந்தக்கூடிய விதத்தில் மாற்றியமைக்கப்படுகிறது என்ற விமர்சனத்தை முன்வைத்தார்.
இப்போது அவர், பேச்சுரிமை, விவாத உரிமை மற்றும் கருத்து வேறுபாட்டைத் தெரிவிக்கும் உரிமைக்காகவும் கடுமையாகப் போராடத் தீர்மானித்துவிட்டார். கருத்துக்கூறாமல் ஒதுங்கிக் கொள்வதுஎன்பது தீர்வாகாது என்று நம்பிக்கையுடன் கூறும் அவர், இத்கைய தாக்குதல்களுக்கு எதிராகப் போராட இளைய சமுதாயம் முன்வர வேண்டும். ஏனெனில் இவர்களின் கொள்கைகளால் பாதிக்கப்படுவது இளைஞர்களின் வாழ்க்கைதான், அவர்களுடைய தலைமுறைதான் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவதாகும். இவர்களுக்குப்பின் வரக்கூடிய தலைமுறை மிகவும் மோசமான அளவில் பாதிப்புக்கு உள்ளாகும். மிகப்பெரிய அளவில் அவை ஆட்டங்காணும். ஏன் நீங்கள் மவுனமாக இருக்கிறீர்கள்?என்று அவர்களைப் பார்த்துக் கேளுங்கள். தங்களுக்கு வேலை கிடைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அவர்கள் நினைக்கலாம். இத்தகைய சிந்தனை அவர்களைவிட்டு அகல வேண்டும். அரசின் அடக்குமுறைக்கு முடிவே கிடையாது என்பதை உணர்ந்துகொண்டு அவர்கள் போராட வேண்டும்,என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.
பிரண்ட்லைன் இதழ் சார்பாக அதன் நிருபர், சியா உஸ் சலாம் (Ziya Us Salam) கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு, பேராசிரியர் ரோமிலா தாப்பர் அளித்த பதில்களும் வருமாறு:)
கேள்வி: அர்பன் நக்சல் என்கிற சொற்றொடர் முதன்முறையாக எப்போது பயன்படுத்தப்பட்டது?
ரோமிலா தாப்பர்: இந்தச் சொற்றொடர் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்ற எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது ஆகஸ்ட்டில் ஐந்து மனித உரிமைப் போராளிகள் கைது செய்யப்பட்ட சமயத்தில் சுற்றுக்கு வந்தது. அந்த சொற்றொடரே முன்னுக்குப்பின் முரண்பாடான இரு சொற்கள்தான். இதனைக் கண்டுபிடித்த, இதனைப் பயன்படுத்துகின்ற பேர்வழிகள் இதனைப் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. நகர்மயமாக்கல் (urbanism) அல்லது நக்சல் (naxal) என்பனவற்றின் அர்த்தம் அவர்களுக்குத் தெரியுமா என்றும் தெரியவில்லை. நக்சல்பாரி இயக்கம் மேற்கு வங்கத்தில் விவசாயிகளையும், பழங்குடியினரையும் அணிதிரட்டி துவங்கப் பட்டதாகும். அவர்கள் தங்கள் நடவடிக்கைகளின் மையமாக எந்தக்காலத்திலுமே நகரங்களை ஏற்படுத்திக்கொண்டதில்லை. இன்றைக்கும்கூட, எங்கெல்லாம் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றனவோ, அவை மிகவும் வறியநிலையில் உள்ள விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் வாழும் சமூகங்களேயாகும். நகரங்களில் சில சேரிகள் நக்சல் இயக்கங்களுக்கு ஆதரவினை அளிக்கின்றன. அவர்களை ‘அர்பன் நக்சல்கள்’ என்று கூறி நக்சல்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் அர்த்தமேதும் இல்லை.
இந்தப் பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்துக் கவலைப்படுகிற நகர்ப்புற குடியிருப்பாளர்களை இது குறிக்கிறது என்றாலோ அல்லது தங்களுடைய சிந்தனையோட்டத்தில் யாரெல்லாம் இடதுசாரிகளாக இருக்கின்றார்களோ அவர்களை இது குறிக்கிறது என்றாலோ, அப்போதும்கூட இது ஒரு பொருத்தமற்ற சொற்றொடரேயாகும். ஏனெனில் அவர்கள் யாரும் நக்சல்கள் கிடையாது.   
சில பேர்வழிகளுக்கு, அர்த்தமற்ற சொற்றொடர்கள்கூட, ஒருவிதமான பாசாங்குத்தனமான அர்த்தத்தைக் கொடுக்கும். அதனை அவர்கள் பிறரைத் தூற்றுவதற்காக, இடக்கரடக்கலாகப் பயன்படுத்துவார்கள். இந்த வகையில்தான் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் தங்கள் மதச் சிந்தனைக்கு எதிரான கருத்துக்களைக் கூறும் சுதந்திரச் சிந்தனையாளர்கள் அனைவரையும், தங்களுடைய மதச் சிந்தனைகளைப் பழிப்பவர்களென்றே கருதி, அதற்கு எதிராக அவர்களை அவமதிக்க வேண்டும் என்ற விதத்திலும், தூஷிக்க வேண்டும் என்ற விதத்திலும் அவர்களுக்கெதிராக, ‘அர்பன் நக்சல்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்கள்.
மேலும், ‘அர்பன் நக்சல்’ என்பது தொடர்பாக, ஆட்சியாளர்கள் கூறும் வியாக்கியானமும் அர்த்தமற்றதாகவும், குழப்பத்தைத் தரக்கூடியதாகவும் உள்ளது. ஆட்சியாளர்கள் இதனைத் தங்கள் விருப்பத்திற்கேற்றவிதத்தில், தீர்மானித்துக்கொள்கிறார்கள். ஆட்சியாளர்கள் யாரையெல்லாம் ‘அர்பன் நக்சல்கள்’ என்று குறிப்பிட்டார்களோ அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு ‘ஜோக்’காகத்தான் இதனை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்தச் சொற்றொடரை ஆட்சியாளர்கள் ஓர் அச்சுறுத்தலாகவும் பயன்படுத்துகிறார்கள்.
கேள்வி: என்னவிதமான அச்சுறுத்தல்?
ரோமிலா தாப்பர்: ஆட்சியில் உள்ளவர்களுக்கு – நிர்வாகம், காவல்துறை மற்றும் அரசியல் அதிகாரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பவர்களுக்கு – தங்களுக்குப் பிடிக்காதவர்களை ‘அர்பன் நக்சல்கள்’ என்ற முத்திரை குத்தி, குற்றம்சாட்டுவதற்கு இப்போது சாத்தியமாகிறது. பின்னர் அவர்களைக் கைது செய்து சிறைக்குள் அடைத்துவிட அவர்களால் முடிகிறது. இதற்கு அவர்களுக்கு நன்கு மெய்ப்பிக்கப்பட்ட சான்றாவணம் எதுவுமே தேவையில்லை. இதனை சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்களின் வழக்கில் நம்மால் பார்க்க முடிந்தது.
கேள்வி:  அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் என்பதற்கும், அரசுக்கு எதிராகக் கருத்துவேறுபாடுகளைத் தெரிவிப்பது என்பதற்கும் இடையே பாகுபடுத்திப்பார்க்க வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்?
ரோமிலா தாப்பர்: இவ்வாறு பாகுபடுத்திப் பார்க்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். நக்சலிசம் குறித்தும் மாவோயிசம் குறித்தும் ஆழமாக ஆய்வு செய்திருப்பவர்கள் இத்தகைய பாகுபாட்டினைச் செய்திருக்கிறார்கள். இதனைக் குழப்புவது என்பது வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு குழப்புவதன் மூலம் ஆட்சியாளர்கள் பெரிய அளவில் மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடிகிறது.
கருத்துவேறுபாடுகளைத் தெரிவிப்பதற்கான சுதந்திரம் மறுக்கப்படுவதென்பது கடந்த சில ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக இது, பசுக்களை ஓட்டிக்கொண்டு செல்பவர்களைக் கொல்வது, அல்லது முஸ்லீம்கள் போன்று குல்லாய் அணிந்திருப்பவர்களைக் கொல்வது, அல்லது சாதி மாறி அல்லது மதம் மாறி கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் இளம் பெண்களையும், இளைஞர்களையும் கொல்வது என்ற முறையில் இவை நடந்து கொண்டிருக்கின்றன. ‘இந்தச் செயல்களில் ஈடுபட்டவர்கள் சாதி விதிமுறைகளையும், மதப் பழக்க வழக்கங்களையும் மீறினார்கள், எனவே இவர்களைக் கொல்வது சரிதான்’ என்று பின்னர் இவை நியாயப்படுத்தப்படுகின்றன. எனவேதான், இவ்வாறு சமூகப் பழக்க வழக்கங்களுக்கு எதிராக, சமுதாயத்திற்கு எதிராக மற்றும் இப்பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் அமைப்புகளுக்கு எதிராக, கருத்துவேறுபாடுகளைத் தெரிவிப்பவர்கள் மீது இவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று கூறுகிறேன்.

கேள்வி: ஆனால் இப்போதெல்லாம் சில கட்டுரைகளைக் கூட தேச விரோதமானவை என்று முத்திரை குத்தப்படுகின்றனவே!
ரோமிலா தாப்பர்: ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுதப்படுபவை, விவாதிக்கப்படுபவை மற்றும் விமர்சிக்கப்படுபவை அனைத்துமே தேச விரோதமானவை என்று முத்திரை குத்தப் படுகின்றன. அவ்வாறு எழுதியவர்கள், விவாதித்தவர்கள் அல்லது விமர்சனம் செய்தவர்கள் சந்தேகத் திற்குரியவர்கள் என்று கருதப்படுகிறார்கள். ஒரு பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் கருத்துவேறுபாடு தெரிவிப்பதற்கான உரிமையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்காகவே அந்தப் பல்கலைக்கழகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. அதன் சுயாட்சித்தன்மை பல வகைகளில் நீக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முற்போக்கு சிந்தனையாளர்களின் பல்கலைக்கழகமாக இருந்த அதனை எல்லாவகைகளிலும் வலுவற்றதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கல்வியின் இரு அடிப்படைச் செயல்பாடுகள் எவை? தற்போது இருந்துவரும் அறிவு (knowledge) குறித்து எப்படிக் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதும், விவாதங்கள் மூலமாகவும் படிப்பு மூலமாகவும் மிகவும் விரிவான அளவிற்கு அதனை வெளிப்படுத்துவது என்பதுமாகும். இவை அனைத்துமே இப்போது துண்டு துண்டாக வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாடப் புத்தகங்களை மாற்றும் சமயத்தில், மாணவர்களுக்கு என்ன சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும் என்கிற சாராம்சங்கள் மாற்றப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கு ஆட்சியாளர்கள் சொல்லும் சாக்குப்போக்கு என்ன தெரியுமா? அவை இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறதாம். ஒரு மதம், வலுவானதாக இருப்பின், இத்தகைய அற்ப ஆட்சேபணைகளை எல்லாம் பொருட்படுத்தாது. உண்மையில் ஆபத்திற்குள்ளாகியிருப்பது மதம் அல்ல. மதத்தைப் பயன்படுத்தும் பேர்வழிகள்தான். இவர்கள், தேவையில்லாமல் தங்கள் தசைகளை முறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி: மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதன் விளைவாக, கருத்துவேறுபாடு தெரிவிப்பவர்களுக்கு எதிராகக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரித்திடுமா?
ரோமிலா தாப்பர்: மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதன் காரணமாக, கருத்துவேறுபாடு தெரிவிப்பவர்கள் மீதான கட்டுப்பாடுகளும் அதிகரித்திடும். இவர்களைத் தடுத்திட  வேண்டும் என்ற நோக்கத்துடன் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்படக்கூடும். ‘அர்பன் நக்சல்’ என்ற முத்திரையை பல்வேறு குழுக்கள் மீதும் குத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. எவரும் எந்தக்காரணத்திற்காகவும் ‘அர்பன் நக்சல்’ என்று முத்திரை குத்தப்படலாம்.  ‘அர்பன் நக்சல்’ என்பவர்கள், தேச விரோத நடவடிக்கைகளில் ரகசியமாக ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படக்கூடும். இவ்வாறு இவர்கள் முத்திரைகுத்தும் ‘அர்பன் நக்சல்கள்’ ஏராளமாக இருந்தால், எவ்வாறு இவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் என்று கேள்வி கேட்கும் காலம் வராதா? இந்திய சமூகத்தில் இவ்வாறு ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கருத்துவேறுபாடு தெரிவிப்பவர்கள் அதிகமாக இருப்பதற்கான காரணம் என்ன? ஒரு சமுதாயத்தில் கருத்துவேறுபாடு தெரிவிப்பவர்களை தான்தோன்றித்தனமாக தள்ளுபடி செய்துவிட முடியாது. அவர்கள் எழுப்பும் கேள்விகள் ஆட்சியாளர்களை எவ்வளவு சங்கடத்திற்குள்ளாக்கியபோதிலும், அவற்றுக்கு அவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும், விளக்கம் அளித்துத்தான் ஆக வேண்டும். மாறாக அவற்றைப் பூசிமெழுகிடக் கூடாது.
கேள்வி: கருத்துவேறுபாட்டைத் தெரிவிப்பதற்கான வரையறைக்கு, பயங்கரவாதம் எப்படி முக்கியத்துவம் உடையதாகிறது?
ரோமிலா தாப்பர்: பயங்கரவாதம் இன்றையதினம் உலகம் முழுவதும் இருந்து வருகிறது. இதில் நாம் ஒன்றும் விதிவிலக்கல்ல. அரசாங்கத்தின் கொள்கைகள், வெற்றி பெறாமல் போகும்போதோ அல்லது உண்மையில் பிரகடனம் செய்த அளவிற்கு அல்லது எதிர்பார்த்த அளவிற்கு செயல்படுத்தப்படவில்லை என்றாலோ, அதற்கு அரசாங்கத்தைப் பலிதீர்க்கும் விதத்தில் பயங்கரவாதம் உருவாவதாகக் கூறமுடியும், மற்றும் அப்படித்தான் பல சமயங்களில் உருவாகிறது. பின்னர் அரசாங்கக் கொள்கைகளின் தோல்விகளுக்கான விளக்கமாகவும் இவை மாறுகின்றன. தோல்விகள் குறித்து மக்கள் கேள்வி கேட்பதைத் தடுக்கும் விதத்திலும், மீறி கேட்டால் அவர்களை ஒடுக்குவதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது.
 நீங்கள் கேட்ட  கேள்விக்கு இதுதான் தெளிவான மற்றும் எளிதான பதிலாகும். ஆயினும் பயங்கரவாதத்தின் தோற்றம் என்பது மிகவும் சிக்கலான விஷயமாகும், மிகவும் ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
பயங்கரவாதத்தை இரு கோணங்களில் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. ஒன்று, பயங்கரவாத நடவடிக்கைகளைப் பரப்பி, வன்முறைகளின் பல்வேறு வடிவங்களின் மூலமாக மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்துவது. இத்தகைய செயல்களில் ஈடுபடும் ஆயுதக் குழுக்கள் நாட்டின் சட்டங்களைத் தூக்கி எறிந்துவிட்டு தங்கள் இஷ்டம்போல் அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றன. அவர்கள், தாங்கள் நிறைவேற்றுவதற்காகப் பல நிகழ்ச்சிநிரல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம். அவை அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக, மத ரீதியாக அல்லது இவை அனைத்தும் கலந்த ஒன்றாக இருக்கலாம். பயங்கரவாதம் குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்கான மற்றொரு வழி வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவது. தங்களின்கீழ் இருக்கின்ற உண்மையான பிரஜைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள பிரஜைகளை எதிர்த்திடவும் இவ்வாறு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுகிறோம் என்றும் பயங்கரவாதிகளால் கூறப்படுகிறது. அரசின் கீழ் இயங்கிடும் அமைப்புகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பதை மட்டுமே நாம் வரலாறு நெடுகிலும் பார்த்து வந்திருக்கிறோம். ஆனால், நம்முடைய காலத்தில் இதுகூட அங்கீகரிக்கத்தக்கதாக மாறி இருக்கிறது. சுதந்திரம் பெற்றபின்னர் நாம் இவற்றிற்கு எதிராகப் பேசுவதற்கு முன்வந்திருக்கிறோம். சுதந்திரத்திற்குப்பின்னர் இவ்வாறு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகள் அதிகரித்துக்கொண்டிருப்பதை உதாசீனம் செய்துவிட முடியாது.
மற்றொரு கோணம், இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே மேற்கொள்ளப்படுவதற்கான காரணம் ஏன் என்பது குறித்ததாகும். அடிக்கடி, இதற்கான காரணம் என்ன என்று கூறப்படுகிறது? இத்தகைய பகுதி, முறையாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட வில்லை அல்லது பொருளாதார ரீதியாக வறிய நிலை தொடர்கிறது அல்லது ஊழல் நிர்வாகம் அல்லது சாதி மற்றும் மத மோதல்களைக் கட்டுப்படுத்திடாமல் தொடர்வதற்கு அனுமதிக்கப்படுகிறது - போன்ற பிரச்சனைகள் நிலவுவதாகக் கூறப்படுகின்றன. அடிப்படைக் கேள்வி என்னவென்றால், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகளின்படி அப்பகுதியில் முறையான வளர்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதேயாகும். அநேகமாக இப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு அவ்வாறான உரிமைகள் போய்ச் சேர்ந்திருக்காது, அவ்வாறே மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் பெயரளவில் மக்களின்மீது எவ்வித அக்கறையுமின்றி நடந்திருக்கும். பொதுவாகச் சொல்வதென்றால் நடந்திருக்காது.
இத்தகைய நிலைமைகள் ஏன் ஏற்பட்டிருக்கின்றன என்று ஆழமான முறையில் விவாதங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, இப்பிரச்சனை குறித்து ஆய்வு செய்பவர்களுக்கும், இதில் சம்பந்தப்பட்டிருக்கிற நிர்வாகத்தினருக்கும் இடையே இவற்றை எப்படிச் சரிசெய்ய முடியும் என்று ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும். இப்போது வரைக்கும் இப்பிரச்சனை, ஒரு சட்டம் – ஒழுங்கு பிரச்சனையாகத்தான் மாறியிருக்கிறது. ஆனால் அங்குள்ள நிலைமைகளுக்கு இது அடிப்படைக் காரணம் அல்ல. அப்பகுதியில் வாழும் சமூகத்தினரைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு, பயங்கரவாத நடவடிக்கைகளுக்குக் கடிவாளமிடுவதன் மூலம் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும். இப்பகுதிகளில் வாழும் சமூகத்தினருக்கு, அங்குள்ள பயங்கரவாதிகளின் பிடிகளிலிருந்து வெளிக்கொணர்வதற்கு மிகவும் அத்தியாவசியமாக விளங்கும் மனித உரிமைகளையும், சமூக நீதியையும் அளிப்பதற்காக அர்ப்பணிப்புடன் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்களையும்கூட, ஆட்சியாளர்கள் இப்போது ‘அர்பன் நக்சல்கள்’ என்று முத்திரை குத்தத் தொடங்கிவிட்டார்கள்.    
(நன்றி: பிரண்ட்லைன், டிசம்பர் 21, 2018)
(தமிழில்: ச.வீரமணி)            

No comments: