Friday, December 7, 2018



கோ. வீரய்யன்: குறிப்பிடத்தக்க மற்றும் உத்வேகமூட்டும் தோழர்

-வெங்கடேஷ் ஆத்ரேயா

2018 நவம்பர் 18 அன்று தன்னுடைய 86ஆவது வயதில் காலமான தோழர் கோ. வீரய்யன் அவர்களது எழுபதாண்டு கால வாழ்க்கை என்பது அனைவராலும் பின்பற்றத்தக்க துணிவு மற்றும் புரட்சிகரமான உறுதியுடன் கூடியதாகும். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டமாக இருந்து, இன்றைய தினம் நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் என்று மூன்று மாவட்டங்களில் இருக்கக்கூடிய இலட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளாலும் மற்றும் தமிழ்நாடு முழுதும் உள்ள விவசாய சங்க மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத் தோழர்களாலும் தோழர் ஜீ.வீ. என்று அன்போடு அழைக்கப்பட்டவர், தமிழ்நாடு முழுதும் இருக்கின்ற, குறிப்பாக ஒன்றுபட்டத் தஞ்சை மாவட்டத்தில் இருக்கின்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் மேம்பாட்டுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்டவராவார். கம்யூனிஸ்ட் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட வர்க்க மற்றும் வெகுஜன இயக்கங்களில் பங்கேற்பதற்கு, தமிழ்நாடு முழுதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆண்கள் – பெண்களுக்கு உத்வேகத்தை அளித்தார்.
தோழர் கோ. வீரய்யன், தமிழ்நாட்டின் காவிரிப் பாசனப் பகுதியில் திருவாரூர் நகரத்தில் கோவிந்தசாமி – முத்துலெட்சுமி தம்பதியருக்கு 1932 நவம்பரில் பிறந்தார். ஜீ.வீ.-யின் தந்தை, மாதாந்திர ஊதியத்திற்கு செருகளத்தூர் கிராமத்தின் நிலப்பிரபுவின் எஸ்டேட்டில் வேலை செய்தார். மேலும் சித்தாடி கிராமத்தில் இருந்த எஸ்டேட்டின் நிலங்களுக்கும் பாதுகாவலராக இருந்தார். மேலும் சித்தாடியில் எஸ்டேட்டுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் குத்தகை வாரத்திற்காக விவசாயத்தையும் மேற்கொண்டிருந்தார்.
தோழர் ஜீ.வீ. தன் குழந்தைப்பருவத்திலிருந்தே கால்நடைகளை மேய்ப்பது, சிறுசிறு பண்ணை வேலைகளைச் செய்வது, வீட்டில் உள்ள சில்லரை வேலைகளைச் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். நான்கு ஆண்டுகளுக்கும் குறைவாகவே பள்ளிக் கல்வியை அவர் பெற்றிருந்தார். ஆயினும், தோழர் ஜீ.வீ. தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் இயக்கங்களின் மாபெரும் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். முறையான பள்ளிக் கல்வி என்பதே இல்லாத தோழர் ஜீ.வீ. தன் வாழ்வில் தொடர்ந்து பொருளாதார இழப்புகளைச் சந்தித்த போதிலும், தமிழ்நாட்டின் கிராமப்புற வர்க்க மற்றும் வெகுஜன இயக்கங்களுக்குத் தலைமை தாங்கிவந்தார். பல சமயங்களில் வெளிப்படையாகவும், பல சமயங்களில் தலைமறைவாக இருந்தும், சிறைக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட நிலப்பிரபுக்களின் கட்டளைகளுக்கு இணங்க காவல்துறையினரால்  தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட போதிலும், குறிவைத்துத் தாக்கப்பட்ட போதிலும் தன்னுடைய சாதுரியமான பேச்சாலும், வர்க்க எதிரிகளை கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியுடனும் கூட்டான அறிவுக்கூர்மையுடனும் எதிர்கொண்டு, உழைக்கும் மக்களின் லட்சியங்களுக்கு உன்னதமான முறையில் செயல்பட்டார். இத்தகைய அவருடைய வாழ்க்கை ஒவ்வொரு தோழருக்கும் ஓர் அற்புதமான வழிகாட்டியாகும்.
தோழர் ஜீ.வீ. ஓர் ஏழை விவசாயியாக, விவசாயத் தொழிலாளியாக தன்னுடைய பதின்பருவத்தில் வேலைசெய்துகொண்டிருந்த சமயத்தில், அவருடைய உறவினரான தோழர் குப்புசாமி என்பவர் மூலம் விவசாய இயக்கம் மற்றும் கட்சியுடன் இணைக்கப்பட்டார். எனினும் தோழர் ஜீ.வீ.-க்கு அவருடைய தந்தை சேவகம் செய்துவந்த எஸ்டேட்டின் நிலப்பிரபுவின் விசுவாசத்திலிருந்து விடுபடுவதற்கு பல ஆண்டுகள் பிடித்தன. இறுதியில் 1948இல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அப்போது கட்சி சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதான் தோழர் ஜீ.வீ.-யின் குணமாகும். அவர் கட்சியில் சேர்வதற்கு போதிய அவகாசம் எடுத்துக்கொண்ட அதே சமயத்தில், இறுதியில் கட்சியில் சேர்ந்தபின்,  எவ்விதமான ஊசலாட்டமுமின்றி முழுமையான அர்ப்பணிப்புடன் இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தோழர் ஜீ.வீ. ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தபோது அவருக்கு வயது 16 மட்டுமேயாகும். 1950கள் என்பது உக்கிரமான வர்க்கப்போராட்டம் நடந்துகொண்டிருந்த காலமாகும். அந்தக் காலகட்டத்தில்தான் தோழர் ஜீ.வீ. மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தார்.
விவசாய சங்கம், குத்தகை விவசாயிகளை அணிதிரட்டும் பணியை மேற்கொண்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்து வந்தவர்கள். இவர்கள், தொடர்ந்து பெரும் உயர்சாதி நிலப்பிரபுக்களால்  ஆதிக்கம் செலுத்தப்பட்ட அரசியல் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் காரணமாக அவர்கள் பாடுபட்டுவந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்படக்கூடும் என்று ஒருவிதமான பாதுகாப்பற்ற சூழலிலேயே வைக்கப்பட்டிருந்தார்கள். எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்திடும் விதத்தில் அவர்களின் அடிப்படைக் கோரிக்கைகளைச்சுற்றி அவர்கள் திரட்டப்பட்டார்கள்.
 கட்சியின் தலைமையின்கீழ், விவசாயத் தொழிலாளர்களும் (இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்), நியாயமான கூலி வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட ஜீவாதாரமான பிரச்சனைகளை முன்வைத்து மிகவும் சக்திமிக்க விதத்தில் ஸ்தாபனரீதியாகத் திரட்டப்பட்டார்கள். இத்துடன், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் சாதிஇந்து நிலப்பிரபுக்கள்ல் மிகவும் காட்டுமிராண்டித்தனமாகவும், கொடூரமாகவும் மேற்கொள்ளப்பட்ட சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடக்கூடிய விதத்தில் கட்சி, தலித்துகளைத் தயார்படுத்திக் கொண்டிருந்தது. கட்சி தடை செய்யப்பட்டிருந்த அந்தக் காலத்தில் (1948-51), தோழர் ஜீ.வீ. கட்சி மற்றும் வர்க்க ஸ்தாபனங்களைக் காவல்துறையினரின் ஒடுக்குமுறை மற்றும் நிலப்பிரபுக்களின் கூலிப்படையினரிடமிருந்து கட்டிக்காப்பதில் கேந்திரமான பங்களிப்பினை ஆற்றினார். 1950களின் இறுதிவாக்கில் நடைபெற்ற நிலச் சீர்திருத்தங்களுக்கான போராட்டம் நிலப்பிரபுக்களால் குத்தகை விவசாயிகள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்படும் பிரச்சனைக்கும் அப்பால் சென்று, நில உச்சவரம்பை அமல்படுத்து என்னும் நிலைக்குச் சென்றது. 1967 வரையிலும் காங்கிரஸ் கட்சியின் கீழ் மாநில அரசாங்கம் இருந்தபோதிலும், அதன்பின்னர் வந்த திமுக மற்றும் அதிமுக அரசாங்கங்களும் நில உச்சவரம்பு சட்டத்தின்கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அடையாளம் கண்டு உபரி நிலங்களை  நிலமற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றபோதிலும், அவற்றையெல்லாம் மீறி தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாய சங்கம் சார்பில் நடைபெற்ற வீரஞ்செறிந்த போராட்டங்கள் மூலமாக நிலமற்ற மற்றும் ஏழை விவசாயிகள், சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் உரிமையாளர்களாக மாறினார்கள்.
இந்த சாதனை எளிதானதொரு நடவடிக்கை கிடையாது. மாவட்டத்தில் கட்சியின் அறிவுக்கூர்மைமிக்க தலைமையானது நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், காவல்துறையினரின் கொடூரமான அடக்குமுறைகளைத் துணிவுடன் எதிர்த்தும், வெஞ்சிறைக் கொடுமைகளை பல தடவை ஏற்றபோதிலும் அனைத்தையும் மீறி,  வீரஞ்செறிந்த மற்றும் சமரசமற்ற போராட்டங்களை நடத்தியதன் மூலமாகவும் மற்றும் நிலப்பிரபுத்துவத்தை பலவீனப்படுத்திட தேவையான நடைமுறை உத்திகளை சாதுர்யமாகப் பிரயோகித்ததன் மூலமாகவும், உழைக்கும் மக்களின் ஒற்றுமையை அவர்களின் சாதிய உணர்வுகளிலிருந்து விடுவித்து அவர்களை ஒரே வர்க்கமாக-உழைக்கும் வர்க்கமாக-வலுப்படுத்தியதன் மூலமாகவும்தான் இது சாத்தியமானது. அதே சமயத்தில் கட்சி சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுவதிலும் சமரசம் எதுவும் செய்துகொள்ள வில்லை. இத்தகு போராட்டத்தை கட்சி மேற்கொண்ட சமயத்தில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில், கட்சி மற்றும் விவசாய சங்க முன்னணி ஊழியர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களின் அபரிமிதமான அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்த தோழர் ஜீ.வீ., மாவட்ட அளவிலிருந்து கிராமம் வரையிலும் அனைத்து மட்டங்களிலும் செயல்பட்டு, கட்சித் தலைமையை வடிவமைப்பதிலும், உருக்குபோன்று உருவாக்குவதிலும் மிக முக்கிய பங்களிப்பினைச் செய்திட்டார்.
இந்த 2018ஆம் ஆண்டு என்பது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ வெண்மணி கிராமத்தில் நிலப்பிரபுக்களின் குண்டர்களால் 1968 டிசம்பர் 25 அன்று 44 குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ஒரே குடிசைக்குள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்ட ஐம்பதாவது  ஆண்டு தினமாகும்.          
நம் கட்சித் தலைவர் மீனாட்சிசுந்தரம் அவர்கள் அன்றைய தமிழக முதல்வர் அண்ணாதுரைக்கு 1968 டிசம்பர் 10 அன்றே ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் கீழ வெண்மணி கிராமத்தில் நிலப்பிரபுக்கள், விவசாயத் தொழிலாளர்களின் வீடுகளை தீவைத்துக் கொளுத்திவிடுவோம் என்று அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்களிடமிருந்து விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாத்திட  அரசு உதவிட வேண்டும் என்றும் கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும் நிலப்பிரபுக்களின் மனிதாபிமானமற்ற வன்முறை வெறியாட்டங்களைத் தடுத்து நிறுத்திடக்கூடிய விதத்தில் எவ்வித நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை.
நிலப்பிரபுக்களின் காட்டுத்தர்பார் என்பது தனித்த ஒன்றோ அல்லது தற்செயலாக நடந்த விபத்தோ அல்ல. அவர்கள் கணக்கு என்னவென்றால், இத்தகைய வன்முறை வெறியாட்டத்தின் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின்கீழ் விவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின் ஊதியத்திற்காகவும், நிலத்திற்காகவும் நடத்தப்படும் வீரஞ்செறிந்த போராட்டங்களை ஒழித்துக்கட்டிவிடலாம் என்பதேயாகும். அந்த சமயத்தில் கட்சிக்கு மிகவும் சோதனையாக அந்த சம்பவம் அமைந்திருந்தது. தோழர் ஜீ.வீ. கட்சித் தலைமையில் மற்றவர்களுடன் சேர்ந்துநின்று கட்சி ஊழியர்களின் மனவுறுதியை உத்தரவாதப்படுத்துவதில் கேந்திரமான பாத்திரத்தை வகித்தார். வெண்மணி சம்பவத்திற்குப் பின் நடைபெற்ற போராட்டங்கள் முன்னிலும் பலமடங்கு வீராவேசத்துடன் நடைபெற்றன. அவற்றின் விளைவாக மாவட்டத்தில் அதன்பின்னர் நிலப்பிரபுத்துவத்தின் கண்ணிகள் ஒவ்வொன்றாக அடித்து நொறுக்கப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக கணிசமான வெற்றிகள் விளைந்தன.
தோழர் ஜீ.வீ. கட்சியால் முன்னெடுத்துச்செல்லப்பட்ட அடிப்படைப் போராட்டங்கள், தத்துவார்த்தப் போராட்டங்கள் மற்றும் அரசியல் போராட்டங்கள் அனைத்திலும் எவ்வித ஊசலாட்டமுமின்றி முன்னின்றார் என்பது மட்டுமல்ல, இயக்கத்தின் சூழ்நிலைக்குத்தக்கபடி சரியான உத்தியைக் கடைப்பிடிப்பதில் நிபுணருமாவார் என்பதை அவருடைய எழுபதாண்டு கால நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் காண முடியும். அவர் ஒரு மிகச்சிறந்த கட்சி அமைப்பாளருமாவார். உள்கட்சி ஸ்தாபனப் பிரச்சனைகள் மற்றும் அரசியல்/தத்துவார்த்த பிரச்சனைகள் பலவற்றை மிகவும் அறிவுக்கூர்மையுடன் கொள்கைவழிநின்று தீர்த்துவைப்பதில் வல்லவராவார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக 37 ஆண்டுகளும், மாநிலச் செயற்குழு உறுப்பினராக 27 ஆண்டுகளும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அங்கமான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக 17 ஆண்டுகளும், மத்திய கிசான் கவுன்சில் உறுப்பினராக 18 ஆண்டுகளும் – இவ்வாறு ஜீ.வீ. பல்வேறு பொறுப்புகளிலும் மிகவும் சிறப்பாகச் செயல்பட்ட தோழராவார்.
தோழர் ஜீ.வீ. ஜனநாயக இயக்கத்தின் கீழ் பணியாற்றும் முன்னணி ஊழியர்களுக்கு பல தலைமுறைகளுக்கு உத்வேகம் ஊட்டுபவராகத் திகழ்வார்.
செவ்வணக்கம் தோழர் ஜீ.வீ.!
(தமிழில்: ச.வீரமணி)  
   


No comments: