Friday, March 9, 2018

திரிபுரா தேர்தல் முடிவு



 தலையங்கம்
திரிபுரா சட்டமன்றத் தேர்தல், ஓர் எதிர்பாராத தீர்ப்பினை அளித்திருக்கிறது. பாஜக-ஐபிஎப்டி கூட்டணி வாக்குப்பதிவில் 50.5 சதவீத (பாஜக - 43 சதவீதம், ஐபிஎப்டி 7.5 சதவீதம்) வாக்குகளைப் பெற்று மொத்தம் உள்ள இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த, 1993இலிருந்து தொடர்ந்து ஐந்து தேர்தல்களிலும் அபரிமிதமான வெற்றியைப் பெற்ற இடது முன்னணி, இப்போது 45 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிற போதிலும்,  சட்டமன்ற இடங்களைப் பொறுத்தவரை வெறும் 16 இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறது.
நாடகக் காட்சி போல எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது?  மாநிலத்தில்  இயங்கிவந்த அரசியல் கட்சிகளில் மிகப்பெரிய அளவில் இடப்பெயர்வு ஏற்பட்டிருப்பது ஒரு முக்கிய காரணமாகும். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி  பாரம்பர்யமாக மிகப்பெரிய இரண்டாவது கட்சியாக இதுவரை இருந்து வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சியாக அதுதான் இருந்து வந்தது. 1988இல் நடைபெற்ற தேர்தல்களின் போது அந்தவிதத்திலேயே அக்கட்சி கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன், வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டு, தேர்தலின்போது மோசடி  நடவடிக்கைகளில் இறங்கி, நிருபன் சக்ரவர்த்தி தலைமையிலிருந்த இடது முன்னணி அரசாங்கத்தை அகற்றியது. அப்போதிருந்த காங்கிரஸ் – டியுஜேஎஸ் கூட்டணி அரசாங்கம், அரைப்பாசிச அடக்குமுறைக்கு பேர்போன ஓர்  அரசாங்கமாக செயல்பட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களில் 350 பேரை கொன்று குவித்தது.
இப்போது மாநிலத்தில் பிரதானமாக இருந்த இந்தக் காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக பாஜகவிற்குத் தாவி இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மேல் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை  உள்ள அனைத்துப் பேர்வழிகளையும் பாஜக தன் வசம் இழுத்துக்கொண்டுசென்றுவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் இருந்த பத்து சட்டமன்ற உறுப்பினர்களில் ஏழு பேர், முதலில் திரிணாமுல் காங்கிரசுக்குச் சென்றார்கள். பின்னர் அங்கிருந்து வெகுவிரைவிலேயே  பாஜகவிற்குத் தாவி விட்டார்கள்.
இதன் காரணமாக, 2013 சட்டமன்றத் தேர்தலின்போது, 36.54 சதவீத அளவிற்கு வாக்குகளைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தடவை நடைபெற்ற தேர்தலில் வெறும் 1.8 சதவீத வாக்குகள்தான் கிடைத்திருக்கிறது. காங்கிரசுடன் கைகோர்த்திருந்த ஐஎன்பிடி (INPT-Indigenous National Partty of Tripura) கட்சி பெற்றிருந்த வாக்கு சதவீதம் 8.1 சதவீதத்திலிருந்து, 0.7 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.
பாஜக நிறுத்தியிருந்த வேட்பாளர்களில் பலர், வெறிபிடித்த கம்யூனிஸ்ட் எதிர்ப்புக் கண்ணோட்டம் கொண்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர்களேயாவர். இதன் விளைவாக, பாஜக-வானது தன்னுடைய வெறிபிடித்த கம்யூனிஸ்ட் எதிர்ப்புடன் காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்த கம்யூனிஸ்ட் எதிர்ப்பு வாக்குகளையும் ஒருமுகப்படுத்த முடிந்துள்ளது. அதேபோன்று,  பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த பழங்குடியினர் கட்சியான  ஐபிஎப்டி, காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த ஐஎன்பிடி என்கிற பழங்குடியினர் கட்சியை ஒன்றுமில்லாததாக மாற்றி அதனுடைய தளத்தையும் கையகப்படுத்த முடிந்திருக்கிறது. பாஜக கூட்டணி 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் வாங்குவதற்கு இவை மட்டுமே காரணம் அல்ல. வேறு பல காரணிகளும் உண்டு.   
மாநிலத்தில் தேர்தலுக்கு முன், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, பாஜக கூட்டணி, பணத்தை வாரி இறைத்தது. தேர்தலுக்கு வெகு காலத்திற்கு முன்பே, இதர முதலாளித்துவக் கட்சிகளிலிருந்த வேட்பாளர்களை விலைக்கு வாங்கிட மிகப்பெரிய அளவில் பணம் புகுந்து விளையாடியது. தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சாமானிய ஊழியர்களுக்கு மொபைல் போன்களும், மோட்டார் சைக்கிள்களும் விநியோகிக்கப்பட்டதுடன் அவர்களின் பலவிதமான  இழிவான  தரம் தாழ்ந்த ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன. ஒட்டுமொத்த முதலாளித்துவ ஊடகங்களும் பாஜகவின் அடிமையாகி, இடது முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்மறைப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருந்தன.  
பாஜக, மாற்றம் என்னும் கோஷத்தை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இது இளைய தலைமுறையினர் மத்தியில், குறிப்பாக நகர்ப்புறம் மற்றும் பழங்குடி இளைஞர்களிடையே, ஓர் ஈர்ப்பினை ஏற்படுத்தியிருப்பது போலவே தோன்றுகிறது.  இடது முன்னணி அரசாங்கம் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை செய்திருந்தபோதிலும், படித்த இளைஞர்களுக்கு வேலைகளை உருவாக்குவது என்பது அதற்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது. தொடர்ந்து ஆட்சியிலிருந்து வந்த இடது முன்னணி அரசாங்கங்கள், மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்குக் கல்வி வசதிகளை மிக விரிவான அளவில் கொண்டு சென்றிருந்ததன் மூலமாக, கல்வி கற்ற இளைஞர்களின் எண்ணிக்கை, குறிப்பாக பழங்குடியின இளைஞர்களின் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்துக் கொண்டிருந்தது.  திரிபுரா என்பது கிட்டத்தட்ட வங்கதேசத்தால் மூன்று பக்கங்களும் சூழப்பட்ட ஒரு நிலப்பகுதியாகும். இம்மாநிலம் பூகோளரீதியாக மிகவும் ஒதுங்கிய நிலையில் இருப்பதாலும், போதுமான  அளவிற்குத் தகவல் தொடர்புகள் இல்லாததாலும்,  மாநிலத்திற்குள் முதலீடுகளையும், தொழில்பிரிவுகளையும்  ஈர்ப்பதென்பது மிகவும் சிரமமாக இருந்தன. அரசாங்க வேலைகள் மட்டும்தான் பிரதான வேலைவாய்ப்பாக இருந்தன. இதனையும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு மேல் செய்ய முடியவில்லை.
மாநிலத்தில் வெகுகாலம் இருந்த பயங்கரவாதிகளின்  கலக நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி ஏற்படுத்தி, ஓர் அமைதியான மற்றும் ஸ்திரமான மாநிலத்தை இடது முன்னணி அரசாங்கம் உத்தரவாதப்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து எழுத்தறிவு மற்றும் பல்வேறு சமூக நலக் குறியீடுகளிலும் அபரிமிதமான முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது. ஆயினும், மத்தியில் மோடி அரசாங்கம் அமைந்தபிறகு, கடந்த மூன்றாண்டுகளில், மாநில  அரசு மேற்கொண்டுவந்த நலம்சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திற்கும் தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டன. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி, கடுமையாக வெட்டிக் குறைக்கப்பட்டது. இதன்காரணமாக நாட்டிலேயே இம்மாநிலத்தில் மிகச் சிறப்பாக நிறைவேற்றுப்பட்டு வந்த இத்திட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளானது. அதேபோன்று, பொது விநியோக முறைக்கு ஒதுக்கப்பட்டு வந்த உணவு தான்யங்களும் கடந்த மூன்றாண்டுகளில் மிகப் பெரிய அளவிற்கு வெட்டப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணி அரசாங்கமும் கடந்த நாற்பது ஆண்டுகளாக பிளவுவாத மற்றும் பிரிவினைவாதத் தாக்குதல்கள் நடைபெற்று வந்த  மாநிலத்தில் பழங்குடியினர் – பழங்குடியினரல்லாதார் ஒற்றுமையை உருவாக்குவதில் வரலாற்றுச்சிறப்புமிக்க பங்களிப்பினைச் செய்திருந்தது. வட கிழக்க மாநிலங்களில் பல்வேறு இனக்குழுக்களிடையே ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதிலும், நல்லிணக்கத்தைப் பேணுவதிலும் நல்லதொரு அரசாங்கமாக திரிபுரா மாநில அரசு திகழ்ந்தது. இருப்பினும் கூட, பாஜக – ஐபிஎப்டி கூட்டணியால், பழங்குடியின மக்கள் மத்தியில் கணிசமான அளவிற்கு ஆதரவினை வென்றெடுக்க முடிந்திருக்கிறது.
பழங்குடியின மக்களில் ஒருசில பிரிவினர் நம்மைவிட்டு விலகிச்சென்றிருப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை,  கட்சி வெகு எச்சரிக்கையாக ஆய்வு செய்திட வேண்டியிருக்கிறது.  இடது முன்னணி அரசாங்கம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துக்களின் செயல்பாடுகளில் மக்களுடனான தொடர்பு பலவீனமடைந்ததா என்பதை விமர்சனரீதியாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இத்தகையதொரு விமர்சனரீதியான ஆய்வு கட்சி ஸ்தாபனம் மற்றும் வெகுஜன அமைப்புகளின் வேலைகளுக்கும் தேவைப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக்குழு, மக்களின் கோரிக்கைகளுக்காக மக்களுடன் ஒன்றுபட்டு நின்று போராடியதில், பெருமிதம் கொள்ளக்கூடிய அளவிற்குப் பதிவினை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, கட்சி, இத்தகைய ஆழமான பின்னடைவுகள் ஏற்பட்டதற்கான காரணங்களைக் கண்டறிந்திடவும், இவற்றைச் சரிசெய்திடத் தேவையான அரசியல் மற்றும் ஸ்தாபன நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஏதேனும் எதிர்மறைப் போக்குகள் அல்லது பலவீனங்கள் இருப்பின் அவற்றைக் களைந்திடவும் வேண்டும்.
மார்ச் 3 அன்று தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, உடனேயே, மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க அலுவலகங்கள் மிகவும் விரிவான அளவில் தாக்குதல்களுக்கு உள்ளானதைப் பார்த்து வருகிறோம். கட்சித் தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் வீடுகள் தாக்குதல்களுக்கு ஆளாகிவருகின்றன. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருக்கிறார்கள். பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல்கள் கட்சியையும் இடது முன்னணியையும் அடக்குமுறை மூலம் நசுக்கிட முனைந்துள்ளன. லெனின் சிலை தகர்க்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இத்தாக்குதல்களை எதிர்த்துநின்பதில் கட்சியும், வெகுஜன அமைப்புகளும் தாக்குப்பிடித்திருக்கின்றன.  புதிய அரசியல் சூழ்நிலையில் செயலாற்றிடத் தங்களைத் தகவமைத்துக்கொண்டுவருகின்றனர். அவர்கள் நாடு முழுதும் உள்ள அனைத்து இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகளின் ஆதரவினையும் ஒருமைப்பாட்டையும் பெற்றிருக்கிறார்கள். 
திரிபுரா தேர்தல் தோல்வி என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் மற்றும்  நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகளுக்கும் மிகப்பெரியதொரு பின்னடைவாகும். இடது முன்னணி பாஜகவைத் தன்னுடைய பிரதான எதிரியாக நிறுத்தி போராடியது இதுவே முதல்தடவை.  பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டத்தின் தாக்குதலை எதிர்கொள்வதற்கேற்ற விதத்தில் கட்சி தன்னுடைய அரசியல், தத்துவார்த்த மற்றும் ஸ்தாபன வேலைகளை விமர்சனரீதியாக மதிப்பீடு செய்வதற்கு தேர்தல் தோல்வி நம்மை இட்டுச்சென்றிருக்கிறது. விரைவில்  நடைபெறவிருக்கும் கட்சியின் அகில இந்திய மாநாடு, எதிர்வரும் காலங்களில் போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கு நம்மைத் தயார் படுத்திடும். 
(மார்ச் 5, 2018)
(தமிழில்: ச.வீரமணி)


No comments: