Tuesday, August 13, 2013

காங்கிரஸ் கட்சியின் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு நாட்டின் நலன் காவுகொடுக்கப்பட்டிருக்கிறது:மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு



புதுதில்லி, ஆக. 13-
காங்கிரஸ் கட்சியின் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு, நாட்டின் நலன் நாட்டு மக்களின் நலன் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் திங்களன்று தெலங்கானா மாநிலம் பிரிப்பது சம்பந்தமாக நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
‘‘தெலங்கானா பிரிவினை சம்பந்தமாக மிகவும் பொறுக்கவியலாத ஒருவிதமான மனவேதனையுடன் உரையாற்ற முன்வந்திருக்கிறேன். 1969ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தனித் தெலங்கானா கோரிக்கையின் காரணமாக தனிப்பட்டமுறையில் பாதிக்கப்பட்ட நபர்களில் நானும் ஒருவன். அப்போது நடைபெற்ற கலவரத்தின் காரணமாக இரண்டு ஆண்டு காலம்  என் படிப்பே அப்போது பாதிக்கப்பட்டது. 44 ஆண்டுகளுக்கு முன் என்ன நடைபெற்றதோ அதே விஷயங்கள் இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியானது, மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட அந்தக் காலத்திலிருந்தே, தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட வேண்டுமா, கூடாதா என்பது குறித்து அன்றிலிருந்து இன்றுவரை தட்டிக்கழிக்கும் வகையில் மழுப்பியே பேசி வந்திருக்கிறது. 1960களில் இது தொடர்பாக ஏற்பட்ட போராட்டத்தில் பங்கேற்றோர் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் காரணமாக 300 பேர்  கொல்லப்பட்டார்கள். அப்போது நான் மாணவனாக இருந்தேன். இறுதியில் அப்போது மாநிலம் பிரிக்கப்பட மாட்டாது என்று முடிவுக்கு வந்தார்கள்.  மாறாக, ஓர் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் பிற்பட்ட நிலையில் உள்ள பிராந்தியத்தில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்கள். இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் 371-டி என்னும் பிரிவையே உருவாக்கினார்கள்.
1969க்குபின் ஆந்திராவின் பிற பகுதிகளில் பெரிய அளவில் கிளர்ச்சிகள் வெடித்தன. இதிலும் பலர் பலியானார்கள்.
இவ்வாறு 40 ஆண்டுகளுக்கு முன்பு, 1973இல் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆயினும். கடந்த நாற்பதாண்டுகளில் அந்தப் பகுதியின் பிரச்சனைகள் எதுவுமே தீர்க்கப்படவில்லை. அதன் காரணமாகத்தான் இன்றைய தினம் தனித் தெலங்கானா பிரிக்கப்பட்டேயாக வேண்டும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
கடந்த நாற்பதாண்டுகளாக ஏன் எந்தவித வளர்ச்சித் திட்டங்களும் அமல்படுத்தப்படவில்லை? நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் இது தொடர்பாகப் பதில் சொல்லப் போவது யார்? கடந்த நாற்பதாண்டு காலமாக, மத்தியிலும், ஆந்திர மாநிலத்திலும் பெரும்பாலான காலத்தில் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. இதனை ஏன் அக்கட்சி செய்திடவில்லை? காங்கிரஸ் கட்சியால்  கொண்டுவரப்பட்ட திட்டத்தை காங்கிரஸ் கட்சியே ஏன் அமல்படுத்தவில்லை? அவ்வாறு அக்கட்சி செய்திருந்திருக்குமானால், இந்த அளவிற்கு நிலைமைகள் மோசமாக உருவாகி இருந்திருக்காது. தெலங்கானா பிராந்தியத்தின் நிலைமைகளை  நேர்மையாகக் காங்கிரஸ் கட்சி கவனித்திருந்திருக்குமேயானால், இன்றையதினம் இந்த அளவிற்கு நிலைமைகள் மோசமாக இருந்திருக்காது.
நான் ஆந்திரப்பிரதேசக் குடும்பத்தில் பிறந்தவன். ஆனால் நான் பிறந்தது அப்போதைய மதராஸ் (இப்போதைய சென்னை) மாநகரில். ஆனால், ஹைதராபாத்தில் குறிப்பிட்ட காலம் படித்தவன் என்பதால் தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவனாகவும் ஆகிறேன். எனவே, என்னால் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு மட்டும் உரியவனாக இருக்க முடியவில்லை. நான் ஓர் அரசியல் கட்சியைச் சார்ந்தவன். ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள கட்சிகளில் என்னுடைய கட்சி மட்டும்தான்  மாநிலத்தைப் பிரிப்பதில் உடன்பாடு இல்லைஎன்று வெளிப்படையாகக் கூறியுள்ள கட்சி என்று மிகவும் பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறேன். இந்தியாவில் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் அமைய வேண்டும் என்ற பிரம்மாண்டமான போராட்டத்தை நடத்திய அந்தக் கொள்கையின் அடிப்படையில் இதை நாங்கள் கூறுகிறோம்.
1947இல் நாம் சுதந்திரம் அடைந்தோம். அதன்பின்னர் பத்தாண்டுகள் கழித்து 1956இல் மாநிலங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவு, ‘‘பாரதம் எனப்படும் இந்தியா, மாநிலங்களின் ஒன்றியம்’’ என்கிறது. உடன் அந்த மாநிலங்கள் எவை? எந்த மாநிலங்கள் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்  என்ற கேள்விகள்  எழுகின்றன? இதனைச் சுற்றியே அப்போது விவாதங்கள் நடைபெற்றன.
அப்போது பிரதமராக இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேர, ‘’,‘பி’,‘சி’,‘டிஎன்ற வகையில் நிர்வாகத்தைத் திறமையுடன் நடத்துவதற்கு உகந்தவிதத்தில் மாநிலங்கள் பிரிக்கப்படும் என்று இதே நாடாளுமன்றத்தில் கூறினார்.
அப்போது அவருக்கு அவரது தந்தை மோதிலால் நேரு 1928இல் காங்கிரஸ் கட்சி ஸ்தாபனம் எப்படி அமைய வேண்டும் என்று விரும்பினார் என்பது நினைவுகூரப்பட்டது. அதாவது, மோதிலால் நேரு, காங்கிரஸ் கட்சி ஸ்தாபனம் மொழிவாரி அடிப்படையில் அமைந்திடும் என்று அப்போது கூறியிருந்தார். மேலும் அவர் இந்தியா சுதந்திரம் அடையும்போது இதுவே நவீன இந்தியக் குடியரசின் அடித்தளத்திற்கான அடிப்படையாக அமைந்திடும் என்றும் கூறியிருந்தார்.  இவ்வாறு மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பது சுதந்திரப் போராட்டத்தின் பிரிக்கமுடியாத ஒரு பகுதியாகவும் அமைந்திருந்தது.
சுதந்திரம் பெற்றபின் இப்பிரச்சனை மீண்டும் முன்னுக்கு வந்தது. இதற்கான முதல் முழக்கம் ஆந்திராவில்தான் முழங்கப்பட்டது. தெலுங்கு பேசும் மக்கள்தான் முதல் முழக்கத்தை முழங்கினார்கள். பொட்டி ஸ்ரீராமுலுவின் தியாகத்திற்குப்பின்,  (இதற்காக காலவரையற்ற உண்ணாவிரதம்இருந்து மரணத்தைத் தழுவினார்.) இப்பிரச்சனை தேசிய முக்கியத்துவத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சம்யுக்தா மகாராஷ்ட்ரா, ஐக்கிய கேரளம் ஆகிய இயக்கங்கள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து மொழிவாரி மாநிலங்கள் நாட்டின் அமைந்தன. எண்ணற்ற தியாகங்கள், மிகப்பெரிய அளவிலான இயக்கங்களை இதற்காக எங்கள் கட்சி மேற்கொண்டது.
மொழிவாரி மாநிலங்களாக இருப்பதைக் குலைத்துவிடாதீர்கள். அவ்வாறு செய்தீர்களானால், கடும் விளைவுகள் ஏற்படும். இதற்கு முடிவே காண முடியாது. எனவேதான் நாங்கள் காங்கிரஸ் கட்சியைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறோம்: ‘‘தயவுசெய்து பிரச்சனையைக் குளறுபடி செய்யாதீர்கள்.’’
முன்னாள் உள்துறை அமைச்சரும், இந்நாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் 2009 டிசம்பர் 9 அன்று அவையில் தனித் தெலங்கானா குறித்து அறிக்கையை முன்வைத்தார். அதனை அவர்கள் 2013இலிருந்து அமல்படுத்துவது என்று முடிவுசெய்திருந்தார்களானா, இதுவரை இது தொடர்பாக அவர்கள்மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இப்போது அரசுத்தரப்பில் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘பல விஷயங்கள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் இது தொடர்பாக அறிவித்தீர்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் இது தொடர்பாக அரசு எந்தக் குறிப்பையும் முன் வைக்கவில்லை. இப்போது மீண்டும் அறிவித்திருக்கிறீர்கள்.
ஆந்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி முழுமையாக துடைத்தெறியப் பட்டுவிட்டது. இவ்வாறு முழுமையாகத் துடைத்தெறியப்படுவதிலிருந்து தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக காங்கிரஸ் கட்சி மீண்டும் இவ்வாறு தெலங்கானா குறித்த முடிவைக் கையில் எடுத்துள்ளது. காங்கிரசின் இம்முடிவு நாடு முழுதும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
2009இல் அறிவித்தீர்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் இதுதொடர்வாக எதுவுமே செய்திடவில்லை.  ஆந்திராவில் ஆட்சி செய்யும் காங்கிரசார் குழப்பத்தின் உச்சியில் இருக்கிறார்கள். ஆந்திர மக்கள் முழுமையாகக் குழம்பிப் போயிருக்கிறார்கள். இதனை ஏன் நீங்கள் முன்பே செய்யவில்லை.
காங்கிரஸ் கட்சியின் அரசியல் சந்தர்ப்பவாதம் என்பது இதுதான். நிலைமைகளை மிகவும் குளறுபடியுடன் அது கையாண்டுகொண்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் இத்தகைய குளறுபடி காரணமாக நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் இரு ஆண்டுகள் படிப்பை இழந்தேன். இப்போது நம் குழந்தைகள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை இழந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் அந்த அளவிற்கு அங்கே கிளர்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எப்போது முடியும் என்றே தெரியவில்லை.
நான் அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இப்போதாவது இதுதொடர்பாக முறையாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசியுங்கள். இது தொடர்பாக அமைச்சரவை ஏதேனும் முடிவு செய்திருந்தால், அதனை அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முன் வையுங்கள். நாடாளுமன்றத்தின் முன் தாக்கல் செய்திடுங்கள். நாம் அதனை ஆழமாக விவாதிப்போம். இதனை எவ்வளவு விரைவாக செய்யமுடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்திடுங்கள்.
மாறாக மக்களின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள். அது நாட்டின் நலன்களுக்கு நல்லதல்ல. தெலங்கானாவைப் பிரிப்பதன்மூலம் சில இடங்கள் தமக்குக் கிடைக்கலாம் என்று காங்கிரஸ் கருதுமானால், நிச்சயமாக நீங்கள் பெறப்போவது எதுவுமில்லை, இருதலைக்கொள்ளி எறும்பாக நசுக்கப்படப்போகிறீர்கள். எனவே, நாட்டின் நலன் கருதியும் நாட்டு மக்களின் நலன் கருதியும் தயவுசெய்து மக்களின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்.
முறையாக அமர்ந்திடுங்கள், அனைவருடனும் கலந்தாலோசியுங்கள், அனைவரையும் அரவணைத்துக் கொண்டு முடிவெடுங்கள்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

(ச.வீரமணி)

No comments: