Wednesday, October 10, 2012

மதவெறி விஷத்தைக் கக்கும் அரசியலுக்கு நிரந்தரமாய் முடிவு கட்டுவோம் : மார்கண்டே கட்ஜு



 நம் நாட்டில் இன்றைய தினம் ஏராளமான இந்துக்களும் முஸ்லீம்களும் வகுப்புவாதம் என்னும் விஷக்கிருமியால் பீடிக்கப்பட்டிருந்த போதிலும், 1857க்கு முன்னர் அத்தகையதொரு நிலைமை நாட்டு மக்கள் மத்தியில் அநேகமாக இருந்ததில்லை என்பதே உண்மையாகும்.  இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே சிற்சில வேறுபாடுகள் இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் நிச்சயமாக இந்த அளவிற்கு வெறுப்புணர்வு இருந்தது கிடையாது. முஸ்லீம்கள் கொண்டாடும் ஈத் பெருவிழாக் கொண்டாட்டங்களில் இந்துக்கள் கலந்து கொள்வதும், அதேபோன்று இந்துக்களின் ஹோலி, தீபாவளித் திருவிழாக்களில் முஸ்லீம்கள் கலந்துகொள்வதும் வழக்கமாக இருந்து வந்தன. அவர்கள் சொந்த சகோதர, சகோதரிகளைப் போல ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து வாழ்ந்து வந்தார்கள்.
150 ஆண்டுகளுக்குப்பின்னால், இத் துணைக்கண்டத்தில், ஒருவர்க்கொருவர் இடையே சந்தேகம் மற்றும் வெறுப்பை உமிழக்கூடிய விதத்தில், எப்படி இது மாறிப்போனது? இன்றைய தினம், நாட்டில் உள்ள முஸ்லீம்கள்  இந்துக்களிடமிருந்து வாடகைக்கு வீடுகள் பெறுவதில் கூட சிரமம் ஏற்பட்டிருக்கிறது. நாட்டில் எங்காவது குண்டு வெடிப்பு நடைபெற்றால், காவல்துறையினர், அதற்குக் காரணமான உண்மையான கயவர்களைப் பிடித்திடாமல், (ஏனெனில் அவர்களுக்கு அறிவியல்பூர்வமான புலனாய்விற்குப் பயிற்சி அளிக்கப்படவில்லை), அரை டஜன் முஸ்லீம்களைக் கைது செய்வதன் மூலம் குற்றத்திற்குத் தீர்வுகண்டு விடுகிறார்கள். அவர்களில் பலர், நீதிமன்றத்தின் முன் அப்பாவிகள் என்று இறுதியில் விடுதலை செய்யப்பட்ட போதிலும், அதற்கு முன் பல ஆண்டுகள் அவர்கள் சிறைக் கொட்டடியில் செலவழிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதன் விளைவாக நாட்டில் உள்ள முஸ்லீம்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அந்நியமாதல் வளர்ந்து வருகிறது. பாகிஸ்தானிலோ, நிலைமைகள் இன்னும் மோசம். அங்குள்ள சிறுபான்மையினர்தீவிரவாதிகள் மற்றும் மதவெறியர்களின் தாக்குதலுக்கு ஆளாவோமோ என்ற அச்சத்துடனேயே எப்போதும் வாழ்ந்து வருகிறார்கள்.
திருப்புமுனை
இந்தியாவில் மதங்களுக்கு இடையிலான உறவுகள் வரலாற்றில் 1857ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாகும். 1857க்கு முன்னர் நாட்டில் மதத் துவேஷம் இருந்ததில்லை, மதக் கலவரங்கள் நடைபெற்றதில்லை. இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே சிற்சில கருத்துவேறுபாடுகள் இருந்தது என்பது உண்மை, ஆனால் அவை ஒரே தந்தைக்குப் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்து வரும் வேறுபாடுகள் போன்றதேயாகும். இந்துக்களும், முஸ்லீம்களும் அமைதியுடன் வாழ்ந்தார்கள்.  இடுக்கண் வந்த காலங்களில் உடுக்கை இழந்தவன் கைபோல ஒருவர்க்கொருவர் நட்புடன் உதவிக் கொண்டார்கள்.
இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த முஸ்லீம் மன்னர்கள், எண்ணற்ற கோவில்களை இடித்தார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்களின் வழித்தோன்றல்கள், நாட்டில் முஸ்லீம் ஆட்சியாளர்களாக மாறியவர்கள், அநேகமாக அனைவருமே மத நல்லிணக்கத்தைப் பேணி வளர்த்தார்கள். இதனை அவர்கள் தங்கள் சொந்த நலனின் அடிப்படையிலேயே செய்தார்கள். ஏனெனில், தங்களின் குடிமக்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்களாக இருந்தார்கள்.  இந்தக் கோவில்களை இடித்தால் அது அவர்கள் மத்தியில் ஆவேசத்தையும் கலக உணர்ச்சியையும் தூண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இதனை எந்த ஆட்சியாளரும் விரும்பமாட்டார்கள். எனவே, நம் நாட்டில் ஆட்சி புரிந்த அநேகமாக அனைத்து முஸ்லீம் ஆட்சியாளர்களுமே - மொகலாயர்கள், ஆவாத், முர்ஷிதாபாத், ஆற்காடு நவாப்புகள், திப்பு சுல்தான் அல்லது ஹைதராபாத் நிஜாம் போன்று அனைவருமே - மத நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடித்தார்கள்.
பிரித்தாளும் சூழ்ச்சி
1857இல், இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வெடித்ததுஇப்போரில் பிரிட்டிஷாருக்கு எதிராக இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து சமர் புரிந்தார்கள்.  இக்கலகத்தை அடக்கியபின் பிரிட்டிஷ ஆட்சியாளர்கள் இந்தியாவைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டுமானால் இவர்கள் மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். இவ்வாறு, இந்தியாவிற்கான அரசுச் செயலாளர், சர் சார்லஸ் வுட், வைஸ்ராய் எல்ஜின் பிரபுவுக்கு 1862இல்  எழுதிய கடிதத்தில், ‘‘நாம் இந்தியாவில் ஓர் இனத்தினரை, மற்றோர் இனத்திற்கு எதிராக மோத விடுவதன் மூலமே நம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். இதனை நாம் தொடர்ந்து மேற்கொண்டிட வேண்டும். நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், இருவரும் ஒன்றுபடாதிருப்பதற்கான அனைத்துக் காரியங்களையும் செய்திடுங்கள்,’’ என்று எழுதினான்.
1887 ஜனவரி 14 அன்று அரசுச் செயலாளராக இருந்த விஸ்கவுண்ட் கிராஸ் (Viscount Cross ) கவர்னர் ஜெனரல் டஃபரினுக்கு ஒரு கடிதம் எழுதினான்.   ‘‘இவ்வாறு மக்களை மத அடிப்படயில் பிரித்து வைத்திருப்பது நமக்குப் பெரிய அளவில் அனுகூலமாயிருக்கிறது. இந்தியக் கல்வி மற்றும் போதிக்கும் முறை தொடர்பான தங்களின் விசாரணைக் குழுவின் அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்,’’ என்று அதில் அவன் குறிப்பிட்டிருந்தான்.
இந்தியாவிற்கான அரசுச் செயலாளராக இருந்த ஜார்ஜ் ஹாமில்டன், கவர்னர் ஜெனரலுக்குக் கீழ்க்கண்டவாறு எழுதினான்: ‘‘இந்தியாவில் நம் ஆட்சிக்கு உண்மையான ஆபத்தாக நான் கருதுவது ... மேற்கத்திய சிந்தனைகளை இங்கே நாம் படிப்படியாக ஏற்றுக்கொண்டு விரிவாக்குவது என்பதாகும். ...எக்காரணம் கொண்டும் நாம் அளித்திடும் நுண்ணிய கல்வி அவர்களை நமக்கு எதிராகத் திருப்பிவிடக்கூடிய விதத்தில் அமைந்துவிடக்கூடாது. ... நாம் இந்தியாவில் கல்வி அறிவு பெற்றவர்களை இரு பிரிவாக (இந்துக்களாகவும் முஸ்லீம்களாகவும்) உடைக்க முடியுமானால் ... அவ்வாறு உடைத்து, அத்தகைய பிரிவினை மூலமாக, நாம் நம்முடைய நிலையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்,   நாம் வெளியிடும் பாடப்புத்தகங்கள் இரு இனத்தினருக்கம் இடையிலான வேறுபாடுகளை மேலும் அதிகரிக்கக்கூடிய விதத்தில் திட்டமிடப்பட்டு, வெளியிடப்பட வேண்டும்.’’
இவ்வாறு, 1857க்குப்பின்னர், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே வெறுப்பை உமிழ்ந்திடும் விதத்தில் ஒரு நச்சுக் கொள்கையை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் துவக்கினார்கள். இதனைப் பல வழிகளிலும் அவர்கள் செய்தார்கள்.
மதத் தலைவர்களுக்கு, மற்ற மதத்தினருக்கு எதிராகப் பேசுமாறு, லஞ்சம் தரப்பட்டது. ஆங்கில கலெக்டர், ரகசியமாக பண்டிட்ஜிகளை (கோவில் குருக்கள்) அழைத்து, பணம் கொடுத்து, முஸ்லீம்களுக்கு எதிராகப் பேச வைத்தான். அதேபோன்று, அவன் முஸ்லீம் மௌல்விகளுக்கும் பணம் கொடுத்து, இந்துக்களுக்கு எதிராகப் பேச வைத்தான்.
மதத் துவேஷத்தை வளர்த்திடும் வகையில் வரலாற்று நூல்கள் திரித்து எழுதப்பட்டன. நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, ஆரம்ப காலத்தில் படையெடுத்த முஸ்லீம் மன்னர்கள் ஏராளமான இந்துக் கோவில்களை இடித்தனர். ஆயினும்பாபரின் வழித்தோன்றலான அக்பர் போன்றவர்கள் கோவில்களை இடிக்கவில்லை, மாறாக, இந்துக் கோவில்களுக்கு மான்யங்கள் அளித்தனர். ராம் லீலா போன்றவற்றிற்கு ஏற்பாடுகள் செய்தார்கள்.  அதேபோன்று ஆவாத், முர்ஷிதாபாத், ஆற்காடு நவாப்புகள் போன்று ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகைகளிலும் கலந்து கொண்டார்கள். வரலாற்றின் இரண்டாம் பகுதி, அதாவது நம் நாட்டிற்கு படையெடுத்து வந்த முஸ்லீம்களின் வழித்தோன்றல்கள், அநேகமாக அனைவருமே, மதநல்லிணக்கத்தை உயர்த்திப் பிடித்த விஷயங்கள், முழுமையாக வரலாற்று நூல்களிலிருந்து கிழித்து எறியப்பட்டன.  நம்முடைய குழந்தைகள், கஜினி முகமது, சோம்நாத் கோவிலைக் கொள்ளையடித்தான் என்று மட்டுமே போதிக்கப்பட்டார்கள்.  திப்பு சுல்தான் போன்று மொகலாயர்கள் இந்துக் கோவில்களுக்கு மான்யங்கள் அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்பதோ, இந்துப் பண்டிகைகளை அவர்களும் கொண்டாடினார்கள் என்றோ சொல்லிக் கொடுக்கப்படவில்லை (பி.என். பாந்தே எழுதி, இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள, ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்திடும் வரலாறு என்பதைக் காண்க).
மதக்கலவரங்கள் திட்டமிட்டுத் தூண்டப்பட்டன. நாட்டில் நடைபெற்ற அனைத்து மதக் கலவரங்களுமே 1857க்குப் பின்தான் தொடங்கின. அதற்குமுன் ஒருபோதும் மதக்கலவரங்கள் நடைபெற்றதில்லை.   கலவரத்தைத் தூண்டுபவர்கள் (agent provocateurs) பல வழிகளில் மதத் துவேஷத்தை உருவாக்கினார்கள். மசூதிக்கு முன் அவர்கள் தொழும் சமயங்களில் இந்து சமய சாமிகளைப் பூஜித்துப் பதிவு செய்யப்பட்டுள்ள பாடல்களை ஒலிபரப்புதல் அல்லது இந்து விக்கிரகங்களை உடைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.
இத்தகைய நஞ்சு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நம்மிடையே விதைக்கப்பட்டது. இது கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வோராண்டும் விதைக்கப்பட்டு, பெரும் விருட்சமாக வளர்ந்து 1947இல் நாடு பிரிவினைக்காளாகும் வரை நடந்தது. இன்றும் நம்மத்தியில் மதத் துவேஷத்தைப் பரப்பும் நச்சுக்கிருமிகள் போன்ற பலரை நாம் பெற்றிருக்கிறோம்.
எங்கேனும் குண்டு வெடிப்புகள் நடைபெற்றால், நம்முடைய தொலைக்காட்சி அலைவரிசைகளில் பல, இந்திய முஜாஹிதீன்ஜைஸ்-இ-முகமது, அல்லது ஹர்கட்-உல், ஜிஹாத்-அல்-இஸ்லாமியா போன்ற அமைப்புகளிடமிருந்து மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி வந்ததாகக் கூறத் தொடங்கிவிடும். இக்காலத்தில்  தீங்கிழைக்க வேண்டும் என்று நினைக்கிற அயோக்கியன் எவனும்கூட மிகவும் எளிதாக ஒரு மின்னஞ்சலையோ அல்லது குறுஞ்செய்தியையோ அனுப்பிட முடியும். இவ்வாறு பெறப்படும் செய்தியை தொலைக்காட்சியில் காட்டுவதன் மூலமும், அடுத்தநாள் அதனைப் பத்திரிகைகளில் பிரசுரிப்பதன் மூலமும் இந்துக்கள் மத்தியில் முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள், குண்டு வீசுபவர்கள்  என்ற எண்ணத்தை உருவாக்குகின்றனர். (உண்மையில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களிலும் 99 விழுக்காட்டினர் அமைதியை நாடுபவர்கள், நல்லவர்களாவார்கள்.)  இவ்வாறு  மிக நுணுக்கமாக முஸ்லீம் மக்களுக்கு எதிராக விஷத்தினை இந்துக்கள் மத்தியில் பரப்புகின்றனர். 
பாபர் மசூதி - ராம ஜன்ம பூமி கிளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், ஊடகங்களில் ஒருசில (குறிப்பாக இந்தித் பத்திரிகைகள்) கர சேவகர்களாகவே மாறியிருந்தன.
பங்களூரில் கொந்தளிப்பு
சமீபத்தில், பங்களூரிலும் அதனைச் சுற்றியும்  வசித்து வந்த வடகிழக்கு மாநில மக்களுக்கு அஸ்ஸாமில் முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும், எனவே அவர்கள் பங்களூரை விட்டு உடனே காலி செய்ய வேண்டும் என்றம் இல்லையேல் அனைவரும் படுகொலை செய்யப்படுவீர்கள் என்றும் குறுச்செய்திகள் அனுப்பப்பட்டன.  இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இத்தகைய அழிம்பு (mischief) குறித்து பங்களூர் முஸ்லீம்களுக்குத் தெரிய வந்தபோதுவடகிழக்கு இந்தியர்களுக்காக அவர்கள் பெரிய அளவில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். யாரோ தீயவர்கள் இத்தகு செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும், முஸ்லம்கள் வடகிழக்கு இந்தியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அவர்கள் மத்தியில் கூறினார்கள்.
சில பிற்போக்குவாதிகளின் வெறுக்கத்தக்க இழிவான செயல்களே இவைகள் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.  வேற்றுமைக்குள் ஒற்றுமை காணும் பண்பு கொண்ட மாபெரும் நாடு இந்தியா. நாட்டில் ஒற்றுமைக்கும் வளமைக்கும் ஒரே வழி, சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களையும் சம அளவில் மதிப்புடன் நடத்துவதேயாகும்.  நம்நாட்டை ஆண்ட மாமன்னர் அக்பர் நமக்குக் காட்டிச் சென்றுள்ள வழி இதுவேயாகும்.  (இவரும், அசோகருடன் இணைந்து, உலகம் கண்டுள்ள மிகச்சிறந்த ஆட்சியாளர் என்பதே என் கருத்து) (ஹின்சா விரோதக் சங் (எதிர்) மிர்சாபூர் மொட்டி குரேஷ் ஜமாத் என்னும் வழக்கில் நான் அளித்துள்ள நீதிமன்றத் தீர்ப்பை, இணையத்தில் காண்க).
1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, மதவெறி உணர்ச்சிகள் கொழுந்து விட்டெரிந்தன. பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது சகாக்களிடம் இந்தியாவை ஓர் இந்து நாடு என்று பிரகடனம் செய்ய வேண்டும் என்று கடுமையான நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டது. ஏனெனில் பாகிஸ்தான் தன்னை ஓர் இஸ்லாமிய நாடு என்று அறிவித்து விட்டதாம். ஆயினும் நம் தலைவர்களின் பெருந்தன்மை காரணமாக, அவர்கள் அவ்வாறு அறிவிக்க வில்லை. ‘‘இந்தியா ஓர் இந்து நாடு அல்ல, மாறாக அது ஒரு மதச்சார்பின்மை நாடு’’ என்று கூறினார்கள். அதனால்தான், ஒப்பீட்டளவில் பார்க்கும் போது, நம் அண்டைநாட்டார்களைவிட நாம் அனைத்து விதங்களிலும் மிகச் சிறந்தவர்களாக இருக்கிறோம்.
 மதச்சார்பின்மை என்பதன் பொருள் ஒருவர் தன் மதத்தைப் பின்பற்றக்கூடாது என்பது அல்ல. மதச்சார்பின்மை என்பதன் பொருள் மதம் ஒருவரின் தனிப்பட்ட விவகாரம். இதற்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது. அரசுக்கு மதம் கிடையாது. என் கருத்தின்படிமதச்சார்பின்மை ஒன்றே நம் நாட்டை ஒற்றுமையுடன், வளமான இந்தியாவிற்கான பாதையில் முன்னோக்கிச் செல்ல, சிறந்த கொள்கையாகும். 
  (தமிழில்: ச. வீரமணி)
  

No comments: