Thursday, March 22, 2012

புரட்சியாளர் பகத்சிங்

(பகத் சிங் பற்றி தோழர் சிவவர்மா எழுதிய கட்டுரை இங்கு தரப்படுகிறது. சிவவர்மா, பகத்சிங்கின் தோழர். அவ ருடன் இணைந்து வெள்ளை யருக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட் டவர். பகத்சிங் கைதான வழக் கில் குற்றவாளியாக இணைக்கப்பட்ட சிவவர்மா வயதில் இளையவர் என் பதற்காக ஆயுள் தண்டனை பெற்றவர். பகத்சிங் வரலாறு குறித்து ஒரு நூலும் எழுதியுள்ளார்.)

1980களில் ஒரு நாள், நான் கான்பூரி லிருந்து லக்னோவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். என் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சக பயணி ஒருவர், நான் அப் போதுதான் படித்து முடித்திருந்த ஒரு சிறிய புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். அது, பகத்சிங் எழுதிய ‘‘நான் ஏன்

நாத்திகன்?’’ ஆகும். ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ‘‘இந்த அளவிற்கு ஆழமான விஷயங்களை எழுதக்கூடிய அள விற்கு, உண்மையில் அவன் திறமை படைத் தவனா?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் தத்துவத்துறை விரிவுரையாள ராகப் பணியாற்றுகிறாராம். ஒரு புரட்சியாளன் பற்றி அவர் வைத்திருந்த மதிப்பீடே அலாதி யானது. உயரமாக, உறுதிமிக்கவனாக இருப் பான், அவன் மண்டையில் ஒன்றும் இருக் காது, நிறைய வெடிகுண்டுகளும், ரிவால்வர் களும் வைத்திருப்பான், தன்னல மறுப்பும் தைரியமும் கொண்டிருந்தாலும் மனிதர் களைக் கொல்வதில் இன்பம் காணும் பேர் வழி, ரத்த தாகம் எடுத்த அதிதீவிரவாதி. ஆயினும் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த இளைஞர்கள் அவ்வளவு அறிவு பெற் றிருக்க மாட்டார்கள். இதேபோன்று பலர் புரட் சியாளர்கள் குறித்துச் சொல்லும் கதை களையே இவரும் இதுவரை கேட்டிருந் திருக்கிறார். இத்தகைய மனிதர்கள் குறித்து இரக்கப்படுவதைத் தவிர நாம் வேறென்ன செய்ய முடியும்?

ஆனாலும் நம் வீரத்தியாகிகள் குறித்து வேண்டும் என்றே சீர்குலைவுப் பிரச்சாரம் மேற்கொள்வோர் குறித்து நாம் என்ன நிலை எடுப்பது? ஒரு சமயம், 1950களில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பள்ளிகளில் எட்டாம் வகுப்புக்கான வரலாற்றுப் பாடப் புத்தகம் ஒன்றைப் புரட்டிப் பார்த்தேன். அதில் ஆசாத் குறித்து ஓர் ஐந்தாறு பத்திகள் குறிப்பிடப்பட் டிருந்தன. ‘‘சந்திரசேகர் ஆசாத்’ என்னும் உள் தலைப்பில், ஆசாத் ரத்தம் சிந்துவதிலும், கொள்ளையடிப்பதிலும் நம்பிக்கை கொண் டவன் என்றும், ஆனால் அதிர்ஷ்டவசமாக நாடு அவனது போராட்டப் பாதையை ஏற்றுக் கொள்ளாமல் காந்திஜியின் பாதையைத் தேர்ந்தெடுத்தது என்றும் அதை எழுதிய நபர் குறிப்பிட்டிருந்தார். ஏ.எல். ஸ்ரீவஸ்தவா என்கிற அந்த நபர், புரட்சியாளர்கள் குறித்து இவ்வளவு இழிவாக எழுதியிருந்ததை என் னால் நம்புவதற்கே மிகவும் கடினமாக இருந் தது. இந்த நபர் அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் தயவால், புகழ் பெற்ற வரலாற்றாசிரியராகக் கருதப்பட்டவர். ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்று விட்டாலும், அவர்கள் உருவாக்கிய அடிமை கள் அடிமைப்புத்தியுடன் இன்னும் இருந்து வருகிறார்கள் என்பதும், வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசிய அடிமைப்புத்தி இன்றும் அவர்களை விட்டு நீங்கிடவில்லை என் பதும் இதிலிருந்து தெளிவாகிறது. அதனால் தான் இப்பேர்வழி, புரட்சியாளர்களை ரத்த தாகம் எடுத்த பேய்கள் என்றும், இவர் களுக்கு வாழ்க்கையில் எவ்விதமான கொள் கையும் லட்சியமும் குறிக்கோளும் கிடை யாது என்றும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறார்கள்.

இதேபோன்ற கருத்துக்கள் பரப்பப்படு வதற்கு நம்முடைய பழைய புரட்சியாளர்கள் சிலரும் காரணமாவார்கள். நம் மக்களில் பெரும்பாலோர், குறிப்பாக நம் இளைஞர் களில் சிலர், நம் வீரத் தியாகிகளின் வீரத் தையும், அவர்கள் நாட்டிற்காகப் புரிந்திட்ட வீரசாகசங்களையும் கேட்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் கைதட்டல் பெற வேண்டும் என்பதற்காக, நம் பழைய புரட்சியாளர்கள் குறித்து மிகைப் படுத்தி - பல சமயங்களில் மிகவும் அபத்த மான அளவிற்கு - கதைகளை அளக்கத் தொடங்கினார்கள். உண்மையில் நடந்த நிகழ்வுகளுக்கும் இவர்கள் விட்ட சரடு களுக்கும் சம்பந்தமே இருக்காது. எனவே, ஒட்டுமொத்த விளைவு என்பது, அநேகமாக அதே போன்றதுதான்.

பகத்சிங் உண்மையில் எப்படிப்பட்ட நபர் என்பதை சாமானிய மக்கள் அறிய மாட்டார் கள். அவர்களைப் பொறுத்தவரை, பகத்சிங், நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியவர் என்றும், லாலாஜியைக் கொன்றதற்காக, சாண்டர்ஸ் என்கிற வெள்ளை அதிகாரியைப் பழிக்குப்பழி வாங்கிய வீரர் என்றும்தான் அறி வார்கள். அதே பகத்சிங், பல்வேறு திறமைகள் பெற்றிருந்த ஒரு மாபெரும் அறிவுஜீவி என்பது பலருக்குத் தெரியாது. அதன் காரண மாகத்தான் புரட்சி இயக்கத்தின் தத்துவார்த் தப் பகுதியை - அதிலும் குறிப்பாக பகத்சிங் நிலையினைச் சீர்குலைப்பது என்பது பல ருக்கு எளிதாக இருக்கிறது. தங்களுக்கேற்ற வகையில் புரட்சி இயக்கத்திற்கு உருவம் கொடுப்பதற்கு இறங்கியிருக்கிறார்கள். எனவே அத்தகைய சீர்குலைவு நடவடிக் கைகளை எதிர்த்துப் போராடுவதென்பது இன்று நம்முன் உள்ள முக்கிய கடமைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.

நம் அனைவரையும் விட பகத்சிங் ஒரு மாபெரும் அறிவுஜீவியாவார். தூக்குக் கயிற் றில் ஏற்றுபவன் அவர் வாழும் உரிமையைப் பறித்தெடுக்க வந்த சமயத்தில் வாழ்வின் 24ஆவது வசந்தத்தை அனுபவிக்கக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. ஆயினும், வாழ்வின் அந்தக் குறுகிய காலத்திற்குள் ளேயே, அரசியல், கடவுள், மதம், மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, காதல், அழகு, தற்கொலை, நடப்பு நிகழ்வுகள் மற்றும் பல்வேறு ஆய்வுப் பொருள்களிலும் அவர் எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்து விட்டார். அவர் புரட்சி இயக்கத்தின் வர லாற்றை, அதனுடைய தத்துவார்த்தப் போராட்டம் மற்றும் வளர்ச்சிப் போக்குகள் ஆகியவற்றை ஆழமாக ஆய்வு செய்து, அவற் றிலிருந்து சரியான முடிவுகளுக்கு வந்திருந் தார். பகத்சிங்கை முறையாகப் புரிந்து கொண்டு, சரியாகப் பாராட்ட வேண்டுமா னால், அவர் வாழ்ந்த பின்னணியையும் நாம் சற்றே ஆழ்ந்து பரிசீலித்துப் பார்க்க வேண் டியது அவசியம். இதற்கு நாம், புரட்சி இயக் கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி வரலாறு குறித்து குறைந்தபட்சமாவது தெரிந்து கொள் வது அவசியம்.

புரட்சி இயக்கத்தை, புரட்சியாளர்களை எவ்வாறு விளிப்பது? பலவிதமான கட்டுரை யாளர்கள் பல பெயர்களில் குறிப்பிட்டிருக்கி றார்கள். பயங்கரவாதிகள், புரட்சிகரப் பயங் கரவாதிகள், பயங்கரவாதப் புரட்சியாளர்கள், தேசியப் புரட்சியாளர்கள், அராஜகவாதிகள் - இப்படி எண்ணற்ற பெயர்களில் விளித்திருக் கிறார்கள். இவை எதுவுமே பொருத்தமான சொற்றொடராக நான் கருதவில்லை. புரட்சி யாளர்கள் மிகவும் பரவலாக ‘பயங்கரவாதி கள்’ என்றே விளிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது வேண்டும் என்றே கறை பூச வேண்டும் என்று நினைத்தவர்கள் மட்டு மல்ல, அவர்கள் மீது உளமார மதிப்பும் மரி யாதையும் வைத்திருந்தவர்கள் கூட அவ் வாறு விளித்தார்கள்.

ஓர் இயக்கம் என்பது, தான் ஏற்றுக் கொண்டிருக்கிற அடிப்படைக் கொள்கை மற்றும் போராட்டங்களின் அடிப்படை யிலேயே அழைக்கப்பட வேண்டும். மாறாக, ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அது மேற்கொண்ட நடவடிக் கைகளின் அடிப்படையில் அழைக்கப்படக் கூடாது. சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற் போல் நடவடிக்கைகளும் மாறுபடும். ஆனால் அடிப்படைக் கொள்கை மாறாது. மேலும், பயங்கரவாதம் என்பது புரட்சியா ளர்களின் இலக்காக எப்போதும் இருந்தது கிடையாது. பயங்கரவாதத்தின் மூலமாக மட்டுமே சுதந்திரத்தை அடைந்துவிட முடி யும் என்று அவர்கள் எப்போதும் நம்பியது மில்லை. ஓர் இடைக்கால ஏற்பாடாகத்தான் எதிர்-பயங்கரவாத நடவடிக்கையை அவர் கள் கையில் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

டாக்டர் ஜி. அதிகாரி மற்றும் சிலர் அவர் களை ‘தேசிய புரட்சியாளர்கள்’ என்று விளிக்கிறார்கள். இந்தச் சொற்றொடரும் தவறான பொருளைத் தருவதாகவே கருது கிறேன். இந்தியப் புரட்சியாளர்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் தேசியவாதிகளாக மட்டுமே இருந்தார்கள். அவர்களுக்கும் சர்வதேசியத்திற்கும் சம்பந்தமே இல்லை என்ற கருத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களுக்கு இத்தகைய சொற்றொடர் ஓர் எளிய ஆயுத மாகக் கிடைத்து விடக்கூடிய அபாயம் இருக் கிறது. அராஜகவாதிகளைப் பொறுத்தவரை, அவர்கள் எந்தவிதமான அரசமைப்பையும் ஏற்கவில்லை. புரட்சியாளர்கள், இவர்களின் பார்வையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருபதுகளில், புரட்சியாளர்கள் ‘வெடிகுண் டின் தத்துவம்’ என்று அழைக்கப்பட்ட அவர் களுடைய அறிக்கையின் மூலமாக, தொழிலா ளர் வர்க்க சர்வாதிகாரத்துக்காக நிற்கிறோம் என்று பிரகடனம் செய்தார்கள். மேலே குறிப் பிட்ட அனைத்துக் காரணங்களினாலும், இன்னும் சரியான சொற்றொடர் கிடைக்காதத னாலும், நாம் அவர்களை மிக எளிய வார்த் தைகளில் ‘புரட்சியாளர்கள்’ அல்லது ‘இந் தியப் புரட்சியாளர்கள்’ என்றே அழைத்திட லாம்.

No comments: