Friday, March 12, 2010

ஏப்ரல் 8 - சிறை நிரப்பும் போர்

புதுதில்லி, மார்ச் 12-
ஏப்ரல் 8 அன்று மாவட்டத் தலைநகர்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றும் இதில் 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.
புதுதில்லி வரலாற்றிலேயே இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு லட்சக்கணககானோர் பங்கேற்ற செம்படைப் பேரணி, தலைநகரைக் குலுக்கியது. விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரியும், முன்பேர வர்த்தக முறையை ரத்து செய்யக்கோரியும், நில உரிமை மற்றும் வேலைவாய்ப்புகளுக்காகவும், பொது விநியோக முறையை அனைவருக்கும் விரிவுபடுத்திடக் கோரியும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் உதவியுடன் அராஜகவாதிகள் நடத்திடும் வன்முறைக்கு முற்றுப்புள்ளிவைக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சார்பில் தலைநகர் புதுதில்லியில் மாபெரும் செம்படைப் பேரணி நடைபெற்றது. லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்பேரணி தில்லி, ராம்லீலா மைதானத்திலிருந்து வெள்ளியன்று காலை புறப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் எஸ். ராமச்சந்திரன் பிள்ளை, கே. வரதராசன், எம்.கே. பாந்தே, பிமன் போஸ், பிருந்தா காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏ.பி. பரதன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் தேவபிரதா பிஸ்வாஸ், முன்னே வர, தில்லி, பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், அர்யானா, உத்தரப்பிரதேசம் முதலான மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான செம்படைத் தொண்டர்கள் பேரணியில் முழக்கமிட்டவாறு பின்தொடர்ந்தனர். பேரணி தில்லியின் முக்கிய வீதிகள் வழியே நாடாளுமன்ற வீதியை சென்றடைந்தது.
பின்னர் அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், பிமன் போஸ், ஏ. பி. பரதன், தேவபிரதா பிஸ்வாஸ், சந்திரசூடன் (புரட்சி சோசலிஸ்ட் கட்சி), சீத்தாராம் யெச்சூரி, குருதாஸ் தாஸ் குப்தா முதலானோர் உரையாற்றினார்கள்.
நாடாளுமன்றத்திலும் போர்க்குரல்
அதே சமயத்தில், நாடாளுமன்றத்திலும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் போர்க்குரல் எழுப்பினார்கள். மாநிலங்களவையில், அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, விலைவாசியைக் கட்டுப்படுத்திட ஐந்து கோரிக்கைகளை அரசின் முன் வைத்து உரையாற்றினார். சீத்தாராம் பேசுகையில், இந்தியா ஒரு பக்கத்தில் ஒளிரும் அதே சமயத்தில் மறு பக்கத்திலோ நாட்டிலுள்ள மக்களில் 80 விழுக்காட்டினர் ஒரு நாளைக்கு 20 ரூபாய் வருமானம் கூட இல்லாமல் அவதிப்படுகின்றனர் என்றார். சாமானிய மக்கள் படும் கடும் துன்பத்தைப் போக்கிட ஐந்து முக்கிய கோரிக்கைகளை அரசின் முன் வைக்கிறோம்.
முதலாவதாக, கிடங்குகளில் வைக்கப்பட்டிருக்கும் 476 லட்சம் டன் உணவு தான்யங்களை உடனடியாக விடுவித்திட வேண்டும், இரண்டாவதாக உணவுப் பொருள்கள் தொடர்பான முன்பேர வர்த்தகத்தை ரத்து செய்திட வேண்டும், மூன்றாவதாக பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்கவரியை ரத்து செய்திட வேண்டும், நான்காவதாக பொது விநியோக முறையை அனைவருக்குமானதாக மாற்றிட வேண்டும், ஐந்தாவதாக கள்ளச்சந்தைப் பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று சீத்தாராம் செய்சூரி கூறினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா பேசுகையில் அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொண்ட விலைவாசியைக் கட்டுப்படுத்தாவிட்டால் இடதுசாரிக் கட்சிகள் போராட்டங்களைத் தீவிரப்படுத்திடும் என்று எச்சரித்தார்.
பின்னர் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்திடும் இடத்திற்கு முழக்கமிட்டுக்கொண்டே பேரணியாக வந்தனர்.
சிறைநிரப்பும் போர்
பேரணி/ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் வரும் ஏப்ரல் 8 அன்று, அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவதென்று அறைகூவல் விடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் நாடு முழுதும் 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் பேரணி/ஆர்ப்பாட்டத்தில் பலத்த முழக்கத்திற்கிடையே அறிவிக்கப்பட்டது.
(ந.நி.)

No comments: